Your browser does not support the audio element.
audio
1048 வானவர்தங்கள்சிந்தைபோலே என் நெஞ்சமே! இனிதுவந்து * மாதவ
மானவர்தங்கள்சிந்தை அமர்ந்துறைகின்றஎந்தை *
கானவரிடுகாரகிற்புகை ஓங்குவேங்கடம்மேவி * மாண்குற
ளான அந்தணற்குஇன்றுஅடிமைத்தொழில்பூண்டாயே. (2)
1049 உறவுசுற்றமென்றொன்றிலா ஒருவன்உகந்தவர்தம்மை * மண்மிசைப்
பிறவியேகெடுப்பான் அதுகண்டு என்நெஞ்சமென்பாய்! *
குறவர்மாதர்களோடுவண்டுகுறிஞ்சிமருளிசைபாடும் வேங்கடத்து *
அறவனாயகற்கு இன்றுஅடிமைத்தொழில்பூண்டாயே.
1050 இண்டையாயினகொண்டு தொண்டர்களேத்துவாருறவோடும் * வானிடைக்
கொண்டுபோயிடவும் அதுகண்டுஎன்நெஞ்சமென்பாய்! *
வண்டுவாழ்வடவேங்கடமலை கோயில்கொண்டதனோடும் * மீமிசை
அண்டமாண்டிருப்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.
1051 பாவியாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டுதொண்டு செய்தாரை * மண்மிசை
மேவிஆட்கொண்டுபோய் விசும்பேறவைக்கும்எந்தை *
கோவிநாயகன்கொண்டலுந்துயர் வேங்கடமலையாண்டு * வானவர்
ஆவியாயிருப்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.
1052 பொங்குபோதியும்பிண்டியும்முடைப் புத்தர்நோன்பியர் பள்ளியுள்ளுறை *
தங்கள்தேவரும்தாங்களுமேயாக என்நெஞ்சமென்பாய்! *
எங்கும்வானவர்தானவர் நிறைந்தேத்தும்வேங்கடம்மேவி நின்றருள் *
அங்கணாயகற்கு இன்று அடிமைத்தொழில்பூண்டாயே.
1053 துவரியாடையர்மட்டையர் சமண்தொண்டர்கள் மண்டியுண்டுபின்னரும் *
தமரும் தாங்களுமேதடிக்க என்நெஞ்சமென்பாய்! *
கவரிமாக்கணம்சேரும்வேங்கடம்கோயில்கொண்ட கண்ணார்விசும்பிடை *
அமரநாயகற்கு இன்று அடிமைத்தொழில்பூண்டாயே.
1054 தருக்கினால்சமண்செய்து சோறுதண்தயிரினால்திரளை * மிடற்றிடை
நெருக்குவார்அலக்கணதுகண்டு என்நெஞ்சமென்பாய்! *
மருட்கள்வண்டுகள்பாடும் வேங்கடம்கோயில் கொண்டதனோடும் * வானிடை
அருக்கன்மேவிநிற்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.
1055 சேயன்அணியன்சிறியன்பெரியனென்பது சிலர்பேசக்கேட்டிருந்தே *
என்நெஞ்சமென்பாய்! * எனக்குஒன்றுசொல்லாதே *
வேய்கள்நின்றுவெண்முத்தமேசொரி வேங்கடமலை கோயில்மேவிய *
ஆயர்நாயகற்குஇன்று அடிமைத்தொழில்பூண்டாயே.
1056 கூடியாடியுரைத்ததேஉரைத்தாய் என்நெஞ்சமென்பாய்! துணிந்துகேள் *
பாடியாடிப்பலரும் பணிந்தேத்திக் காண்கிலர் *
ஆடுதாமரையோனும்ஈசனும் அமரர்கோனும் நின்றேத்தும் * வேங்கடத்து
ஆடுகூத்தனுக்குஇன்று அடிமைத்தொழில்பூண்டாயே.
1057 மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கடமலை கோயில்மேவிய *
அன்னமாய்நிகழ்ந்த அமரர்பெருமானை *
கன்னிமாமதிள்மங்கையர்கலிகன்றி இந்தமிழாலுரைத்த * இம்
மன்னுபாடல்வல்லார்க்கு இடமாகும்வானுலகே. (2)