Your browser does not support the audio element.
audio
1878 சந்தமலர்க்குழல்தாழத் தானுகந்தோடித்தனியே
வந்து * என்முலைத்தடந்தன்னைவாங்கி நின்வாயில்மடுத்து *
நந்தன்பெறப்பெற்றநம்பீ! நானுகந்துண்ணும்அமுதே! *
எந்தைபெருமனே! உண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே. (2)
1879 வங்கமறிகடல்வண்ணா! மாமுகிலேயொக்கும்நம்பீ! *
செங்கண்நெடியதிருவே! செங்கமலம்புரைவாயா! *
கொங்கைசுரந்திடஉன்னைக் கூவியும்காணாதிருந்தேன் *
எங்கிருந்துஆயர்களோடும் என்விளையாடுகின்றாயே?
1880 திருவிற்பொலிந்தஎழிலார் ஆயர்தம்பிள்ளைகளோடு *
தெருவில்திளைக்கின்றநம்பீ! செய்கின்றதீமைகள் கண்டிட்டு *
உருகிஎன்கொங்கையின்தீம்பால் ஓட்டந்துபாய்ந்திடுகின்ற *
மருவிக்குடங்காலிருந்து வாய்முலையுண்ணநீவாராய்.
1881 மக்கள்பெறுதவம்போலும் வையத்துவாழும்மடவார் *
மக்கள்பிறர்கண்ணுக்கொக்கும் முதல்வா! மதக்களிறன்னாய்! *
செக்கரிளம்பிறைதன்னைவாங்கி நின்கையில்தருவன் *
ஒக்கலைமேலிருந்துஅம்மமுகந்து இனிதுண்ணநீவாராய்.
1882 மைத்தகருங்குஞ்சிமைந்தா! மாமருதூடுநடந்தாய்! *
வித்தகனே! விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா! *
இத்தனைபோதன்றிஎன்தன் கொங்கைசுரந்திருக்ககில்லா *
உத்தமனே! அம்மமுண்ணாய் உலகளந்தாய்! அம்முண்ணாய்.
1883 பிள்ளைகள்செய்வனசெய்யாய் பேசின்பெரிதும்வலியை *
கள்ளம்மனத்திலுடையை காணவேதீமைகள்செய்தி *
உள்ளமுருகிஎன்கொங்கை ஓட்டந்துபாய்ந்திடுகின்ற *
பள்ளிக்குறிப்புச்செய்யாதே பாலமுதுண்ணநீவாராய்.
1884 தன்மகனாகவன்பேய்ச்சி தான்முலையுண்ணக்கொடுக்க *
வன்மகனாய்அவளாவிவாங்கி முலையுண்டநம்பீ! *
நன்மகளாய்மகளோடு நானிலமங்கைமணாளா! *
என்மகனே! அம்மமுண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே.
1885 உந்தம்அடிகள்முனிவர் உன்னைநான்என்கையில்கோலால் *
நொந்திடமோதவுங்கில்லேன் நுங்கள்தம்ஆநிரை யெல்லாம் *
வந்துபுகுதரும்போது வானிடைத்தெய்வங்கள்காண *
அந்தியம்போதுஅங்குநில்லேல் ஆழியங்கையனே! வாராய்.
1886 பெற்றத்தலைவன்எங்கோமான் பேரருளாளன்மதலாய்! *
சுற்றக்குழாத்திளங்கோவே! தோன்றியதொல்புகழாளா! *
கற்றினந்தோறும்மறித்துக் கானம்திரிந்தகளிறே! *
எற்றுக்கென்அம்மமுண்ணாதே எம்பெருமான்! இருந்தாயே?
1887 இம்மைஇடர்கெடவேண்டி ஏந்தெழில்தோள்கலிகன்றி *
செம்மைப்பனுவல்நூல்கொண்டு செங்கணெடியவன்தன்னை *
அம்மமுண்ணென்றுரைக்கின்ற பாடலிவைஐந்துமைந்தும் *
மெய்ம்மைமனத்துவைத்தேத்த விண்ணவராகலுமாமே. (2)