Your browser does not support the audio element.
audio
1038 கண்ணார்கடல்சூழ் இலங்கைக்குஇறைவன்தன் *
திண்ணாகம்பிளக்கச் சரம்செலஉய்த்தாய்! *
விண்ணோர்தொழும் வேங்கடமாமலைமேய *
அண்ணா! அடியேனிடரைக் களையாயே. (2)
1039 இலங்கைப்பதிக்கு அன்றுஇறையாய * அரக்கர்
குலம்கெட்டுஅவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்! *
விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய *
அலங்கல்துளபமுடியாய்! அருளாயே.
1040 நீரார்கடலும் நிலனும்முழுதுண்டு *
ஏராலமிளந்தளிர்மேல் துயில்எந்தாய்! *
சீரார்திருவேங்கடமாமலைமேய *
ஆராவமுதே! அடியேற்கு அருளாயே.
1041 உண்டாஉறிமேல் நறுநெய்அமுதாக *
கொண்டாய்குறளாய் நிலம்ஈரடியாலே *
விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய *
அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே.
1042 தூணாய்அதனூடு அரியாய்வந்துதோன்றி *
பேணாஅவுணனுடலம் பிளந்திட்டாய்! *
சேணார்திருவேங்கட மாமலைமேய *
கோணாகணையாய்! குறிக்கொள்எனைநீயே.
1043 மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி *
தன்னாக்கித் தன்னின்னருள்செய்யும்தலைவன் *
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய *
என்னானைஎன்னப்பன் என்நெஞ்சிலுளானே.
1044 மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த *
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா *
தேனே! திருவேங்கடமாமலைமேய *
கோனே! என்மனம் குடிகொண்டிருந்தாயே.
1045 சேயன்அணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன் * மணிவாளொளி வெண்தரளங்கள் *
வேய்விண்டுஉதிர் வேங்கடமாமலைமேய *
ஆயனடியல்லது மற்றறியேனே.
1046 வந்தாய்என்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்! *
நந்தாதகொழுஞ்சுடரே எங்கள்நம்பீ! *
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய்! * இனியான்உன்னை என்றும்விடேனே.
1047 வில்லார்மலி வேங்கடமாமலைமேய *
மல்லார்திரள்தோள் மணிவண்ணனம்மானை *
கல்லார்திரள்தோள் கலியன்சொன்னமாலை *
வல்லாரவர் வானவராகுவர்தாமே. (2)