Your browser does not support the audio element.
audio
730 வன்தாளினிணைவணங்கிவளநகரம்
தொழுதேத்த மன்னனாவான்
நின்றாயை * அரியணைமேலிருந்தாயை
நெடுங்கானம்படரப்போகு
என்றாள் * எம்மிராமாவோ!
உனைப்பயந்தகைகேசிதஞ்சொற்கேட்டு *
நன்றாகநானிலத்தையாள்வித்தேன்
நன்மகனே! உன்னைநானே. (2)
731 வெவ்வாயேன்வெவ்வுரைகேட்டு இருநிலத்தை
வேண்டாதேவிரைந்து * வென்றி
மைவாயகளிறொழிந்துதேரொழிந்து
மாவொழிந்து வனமேமேவி *
நெய்வாயவேல்நெடுங்கண்நேரிழையும்
இளங்கோவும்பின்புபோக *
எவ்வாறுநடந்தனை? எம்மிரமாவோ!
எம்பெருமான்! என்செய்கேனே?
732 கொல்லணைவேல்வரிநெடுங்கண் கோசலைதன்
குலமதலாய்! * குனிவில்லேந்தும்
மல்லணைந்தவரைத்தோளா! வல்வினையேன்
மனமுருக்கும்வகையேகற்றாய் *
மெல்லணைமேல்முன்துயின்றாய்
இன்றினிப்போய்வியன்கானமரத்தின்நீழல் *
கல்லணைமேல்கண்டுயிலக்கற்றனையோ?
காகுத்தா! கரியகோவே!
733 வாபோகுவா இன்னம்வந்து
ஒருகால்கண்டுபோ மலராள்கூந்தல் *
வேய்போலுமெழில்தோளிதன்பொருட்டா
விடையோன்றன்வில்லைச்செற்றாய்! *
மாபோகுநெடுங்கானம் வல்வினையேன்
மனமுருக்கும்மகனே! * இன்று
நீபோகஎன்னெஞ்சம் இருபிளவாய்ப்
போகாதேநிற்குமாறே!
734 பொருந்தார்கைவேல்நுதிபோல்
பரல்பாய மெல்லடிக்கள்குருதிசோர *
விரும்பாதகான்விரும்பிவெயிலுறைப்ப
வெம்பசிநோய்கூர * இன்று
பெரும்பாவியேன்மகனே! போகின்றாய்
கேகயர்கோன்மகளாய்ப்பெற்ற *
அரும்பாவிசொற்கேட்டஅருவினையேன்
என்செய்கேன்? அந்தோ! யானே.
735 அம்மாவென்றுகந்தழைக்கும் ஆர்வச்சொல்
கேளாதே * அணிசேர்மார்வம்
என்மார்வத்திடையழுந்தத் தழுவாதே
முழுசாதேமோவா துச்சி *
கைம்மாவின்நடையன்னமென்னடையும்
கமலம்போல்முகமும்காணாது *
எம்மானையென்மகனையிழந்திட்ட
இழிதகையேனிருக்கின்றேனே.
736 பூமருவுநறுங்குஞ்சிபுஞ்சடையாய்ப்புனைந்து
பூந்துகில்சேரல்குல் *
காமரெழில்விழலுடுத்துக் கலனணியாது
அங்கங்களழகுமாறி *
ஏமருதோளென்புதல்வன் யானின்று
செலத்தக்கவனந்தான்சேர்தல் *
தூமறையீர்! இதுதகவோ? சுமந்திரனே!
விசிட்டனே! சொல்லீர்நீரே.
737 பொன்பெற்றாரெழில்வேதப்புதல்வனையும்
தம்பியையும்பூவைபோலும் *
மின்பற்றாநுண்மருங்குல்மெல்லியலென்
மருகிகையும் வனத்தில்போக்கி *
நின்பற்றாநின்மகன்மேல்பழிவிளைத்திட்டு
என்னையும்நீள்வானில்போக்க *
என்பெற்றாய்? கைகேசீ! இருநிலத்தில்
இனிதாகவிருக்கின்றாயே.
738 முன்னொருநாள்மழுவாளிசிலைவாங்கி
அவன்தவத்தைமுற்றும்செற்றாய் *
உன்னையுமுன்னருமையையுமுன்மோயின்
வருத்தமும் ஒன்றாகக்கொள்ளாது *
என்னையும்என்மெய்யுரையும்மெய்யாகக்
கொண்டு வனம்புக்கஎந்தாய்! *
நின்னையேமகனாகப்பெறப்பெறுவேன்
ஏழ்பிறப்பும்நெடுந்தோள்வேந்தே!
739 தேன்நகுமாமலர்க்கூந்தல்கௌசலையும்
சுமித்திரையும்சிந்தைநோவ *
கூனுருவில்கொடுந்தொழுத்தைசொற்கேட்ட
கொடியவள்தன்சொற்கொண்டு * இன்று
கானகமேமிகவிரும்பி நீதுறந்த
வளநகரைத்துறந்து * நானும்
வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்
மனுகுலத்தார் தங்கள்கோவே!
740 ஏரார்ந்தகருநெடுமால்இராமனாய்
வனம்புக்கஅதனுக்காற்றா *
தாரார்ந்ததடவரைத்தோள்தயரதன்தான்
புலம்பிய அப்புலம்பல்தன்னை *
கூரார்ந்தவேல்வலவன்கோழியர்கோன்
குடைக்குலசேகரஞ்சொற்செய்த *
சீரார்ந்ததமிழ்மாலையிவைவல்லார்
தீநெறிக்கண்செல்லார்தாமே. (2)