Your browser does not support the audio element.
audio
719 மன்னுபுகழ்க்கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே! *
தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்துவித்தாய்! * செம்பொன்சேர்
கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே! *
என்னுடையஇன்னமுதே! இராகவனே! தாலேலோ. (2)
720 புண்டரிகமலரதன்மேல் புவனியெல்லாம்படைத்தவனே! *
திண்டிறலாள்தாடகைதன் உரமுருவச்சிலைவளைத்தாய்! *
கண்டவர்தம்மனம்வழங்கும் கணபுரத்தென்கருமணியே! *
எண்டிசையுமாளுடையாய்! இராகவனே! தாலேலோ.
721 கொங்குமலிகருங்குழலாள் கோசலைதன்குலமதலாய்! *
தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகாதாசரதீ! *
கங்கையிலும்தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே! *
எங்கள்குலதின்னமுதே! இராகவனே! தாலேலோ.
722 தாமரைமேலயனவனைப் படைத்தவனே! * தயரதன்தன்
மாமதலாய்! மைதிலிதன்மணவாளா! * வண்டினங்கள்
காமரங்களிசைபாடும் கணபுரத்தென்கருமணியே! *
ஏமருவும்சிலைவலவா! இராகவனே! தாலேலோ.
723 பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ *
724 சுற்றமெல்லாம்பின்தொடரத்தொல்கானமடைந்தவனே! *
அற்றவர்கட்கருமருந்தே! அயோத்திநகர்க்கதிபதியே! *
கற்றவர்கள்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே! *
சிற்றவைதன்சொல்கொண்ட சீராமா! தாலேலோ.
725 ஆலினிலைப்பாலகனாய் அன்றுலகமுண்டவனே! *
வாலியைக்கொன்று அரசுஇளையவானரத்துக்களித்தவனே! *
காலின்மணிகரையலைக்கும் கணபுரத்தென்கருமணியே! *
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.
726 மலையதனாலணைகட்டி மதிளிலங்கையழித்தவனே! *
அலைகடலைக்கடைந்து அமரர்க்கமுதருளிச்செய்தவனே! *
கலைவலவர்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே! *
சிலைவலவா! சேவகனே! சீராம! தாலேலோ. (2)
727 தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன்குலமதலாய்! *
வளையவொருசிலையதனால் மதிளிலங்கையழித்தவனே! *
களைகழுநீர்மருங்கலரும் கணபுரத்தென்கருமணியே! *
இளையவர்கட்கருளுடையாய்! இராகவனே! தாலேலோ.
728 தேவரையுமசுரரையும் திசைகளையும்படைத்தவனே! *
யாவரும்வந்தடிவணங்க அரங்கநகர்த்துயின்றவனே! *
காவிரிநல்நதிபாயும் கணபுரத்தென்கருமணியே! *
ஏவரிவெஞ்சிலைவலவா! இராகவனே! தாலேலோ. (2)
729 கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்காகுத்தன்! *
தன்னடிமேல் * தாலேலோஎன்றுரைத்த தமிழ்மாலை *
கொல்நவிலும்வேல்வலவன் குடைக்குலசேகரஞ்சொன்ன *
பன்னியநூல்பத்தும்வல்லார் பாங்காயபத்தர்களே (2)