Your browser does not support the audio element.
audio
402 மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை *
ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர் *
தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும் *
போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. (2)
403 பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும் *
இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்தவுறைப்பனூர் *
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார் *
சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே.
404 மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார் *
உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர் *
திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை *
பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே.
405 கூன்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு *
ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய *
கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர் *
தேன்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே.
406 பெருவரங்களவைபற்றிப் பிழக்குடையஇராவணனை *
உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர் *
குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ் *
திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே.
407 கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே *
ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர் *
தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து *
யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே.
408 கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய *
பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர் *
தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு *
தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே.
409 வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய் *
எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர் *
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி *
மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே.
410 குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல் *
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர் *
குன்றூடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி *
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே.
411 பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை *
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் *
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு *
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2)