Your browser does not support the audio element.
audio
172 வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி *
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்தில்பூண்டு *
பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு *
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. (2)
173 கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும் *
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன் *
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க * நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா.
174 கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான் *
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான் *
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி *
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.
175 ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவான் *
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல் *
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு *
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா.
176 சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல் *
ஊரொன்றுவேண்டிப் பெறாதஉரோடத்தால் *
பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத் *
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
177 ஆலத்திலையான் அரவினணைமேலான் *
நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான் *
பாலப்பிராயத்தே பார்த்தற்குஅருள்செய்த *
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தாற்குஓர்கோல்கொண்டுவா.
178 பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில் *
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட * அக்
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை *
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா.
179 மின்னிடைச் சீதைபொருட்டா * இலங்கையர்
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ *
தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட *
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா.
180 தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து *
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு *
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற *
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணற்குஓர்கோல்கொண்டுவா.
181 அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று *
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன் *
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர் *
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே.