Your browser does not support the audio element.
audio
213 ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை *
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு *
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு *
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2)
214 குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ *
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த *
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு *
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும்.
215 தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி *
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து *
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு *
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும்.
216 தேனுகனாவி செகுத்து * பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால் *
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து *
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்.
217 ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு *
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு *
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது * அங்
காப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும்.
218 தள்ளித்தளர்நடையிட்டு இளம்பிள்ளையாய் *
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி *
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர் *
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும்.
219 மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று *
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை *
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே *
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும்.
220 தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய் *
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண் *
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய் *
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்.
221 வானத்தெழுந்த மழைமுகில்போல் * எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி *
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை *
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்.
222 அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு *
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட *
அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல் *
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2)