Your browser does not support the audio element.
audio
44 மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி *
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் *
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான் *
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ. (2)
45 உடையார்கனமணியோடு ஒண்மாதுளம்பூ *
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு *
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான் *
உடையாய்! அழேல்அழேல்தாலேலோ உலகமளந்தானே! தாலேலோ.
46 என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு *
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு *
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி *
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ தாமரைக்கண்ணனே! தாலேலோ.
47 சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் *
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும் *
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார் *
செங்கண்கருமுகிலே! தாலேலோ தேவகிசிங்கமே! தாலேலோ.
48 எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று *
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு *
வழுவில்கொடையான் வயிச்சிராவணன் *
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ தூமணிவண்ணனே! தாலேலோ.
49 ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும் *
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும் *
மாதக்கவென்று வருணன்விடுதந்தான் *
சோதிச்சுடர்முடியாய்! தாலேலோ சுந்தரத்தோளனே! தாலேலோ.
50 கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும் *
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும் *
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள் *
கோனே! அழேல்அழேல்தாலேலோ குடந்தைக்கிடந்தானே! தாலேலோ.
51 கச்சொடுபொற்சுரிகை காம்பு கனகவளை *
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ *
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள் *
நச்சுமுலையுண்டாய்! தாலேலோ நாராயணா! அழேல்தாலேலோ.
52 மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும் *
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும் *
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள் *
ஐயா! அழேல்அழேல்தாலேலோ அரங்கத்தணையானே! தாலேலோ.
53 வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட *
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய *
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல் *
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2)