Your browser does not support the audio element.
audio
54 தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய் *
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் *
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ!
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2)
55 என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான் *
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான் *
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல் *
மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.
56 சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும் *
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய் *
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற *
கைத்தலம்நோவாமே அம்புலீ! கடிதோடிவா.
57 சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து *
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண் *
தக்கதறிதியேல் சந்திரா! சலம்செய்யாதே *
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்.
58 அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா *
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான் *
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல் *
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ!
59 தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன் *
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான் *
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில் *
விண்தனில்மன்னிய மாமதீ! விரைந்தோடிவா.
60 பாலகனென்று பரிபவம்செய்யேல் * பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன் *
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல் *
மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.
61 சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய் *
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள் *
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண் *
நிறைமதீ! நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்.
62 தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய *
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான் *
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண் *
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.
63 மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு * இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் * ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை *
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2)