Your browser does not support the audio element.
audio
23 சீதக்கடலுள் அமுதன்ன தேவகி *
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த *
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும் *
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்துகாணீரே. (2)
24 முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும் *
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் * எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள் *
ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்துகாணீரே.
25 பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை *
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை *
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் *
கணைக்கால் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.
26 உழந்தாள்நறுநெய் ஓரோதடாவுண்ண *
இழந்தாளெரிவினால் * ஈர்த்துஎழில்மத்தின் *
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான் *
முழந்தாள்இருந்தவாகாணீரே முகிழ்முலையீர்!வந்து காணீரே.
27 பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு *
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை *
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான் *
குறங்குகளைவந்து காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.
28 மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை *
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில் *
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன் *
முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர்! வந்துகாணீரே.
29 இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை *
பருங்கிப் பறித்துக் கொண்டோடும் பரமன்தன் *
நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும் *
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்துகாணீரே.
30 வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து *
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும் *
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய *
உந்திஇருந்தவாகாணீரே ஒளியிழையீர்! வந்துகாணீரே.
31 அதிரும்கடல்நிறவண்ணனை * ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து *
பதறப்படாமே பழந்தாம்பாலார்த்த *
உதரம்இருந்தவாகாணீரே ஒளிவளையீர்! வந்துகாணீரே.
32 பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து * அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை *
குருமாமணிப்பூண் குலாவித்திகழும் *
திருமார்புஇருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
33 நாள்களோர்நாலைந்து திங்களளவிலே *
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய் *
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான் *
தோள்கள்இருந்தவாகாணீரே சுரிகுழலீர்! வந்துகாணீரே.
34 மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற *
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை *
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய *
கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர்! வந்துகாணீரே.
35 வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு * வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு *
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய *
கண்டம்இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.
36 எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு *
அந்தொண்டைவாயமுதாதரித்து * ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் * இச்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
37 நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால் *
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு *
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும் *
மூக்கும்இருந்தவாகாணீரே மொய்குழலீர்! வந்துகாணீரே.
38 விண்கொளமரர்கள் வேதனைதீர * முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய் வந்து *
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான் *
கண்கள்இருந்தவாகாணீரே கனவளையீர்! வந்துகாணீரே.
39 பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய *
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற *
உருவுகரிய ஒளிமணிவண்ணன் *
புருவம்இருந்தவாகாணீரே பூண்முலையீர்! வந்துகாணீரே.
40 மண்ணும்மலையும் கடலும்உலகேழும் *
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு *
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை *
திண்ணம்இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
41 முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும் *
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை *
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன் *
நெற்றிஇருந்தவாகாணீரே நேரிழையீர்! வந்துகாணீரே.
42 அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு *
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப *
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான் *
குழல்கள்இருந்தவாகாணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.
43 சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன *
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன் *
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் * வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2)