Your browser does not support the audio element.
audio
637 பட்டிமேய்ந்தோர்காரேறு பலதேவற்கோர்கீழ்க்கன்றாய் *
இட்டீறிட்டுவிளையாடி இங்கேபோதக்கண்டீரே? *
இட்டமானபசுக்களை இனிதுமறித்துநீரூட்டி *
விட்டுக்கொண்டுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. (2)
638 அனுங்கவென்னைப்பிரிவுசெய்து ஆயர்பாடிகவர்ந்துண்ணும் *
குணுங்குநாறிக்குட்டேற்றைக் கோவர்த்தனனைக்கண்டீரே? *
கணங்களோடுமின்மேகம் கலந்தாற்போல * வனமாலை
மினுங்கநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே.
639 மாலாய்ப்பிறந்தநம்பியை மாலேசெய்யும்மணாளனை *
ஏலாப்பொய்களுரைப்பானை இங்கேபோதக்கண்டீரே? *
மேலால்பரந்தவெயில்காப்பான் வினதைசிறுவன்சிறகென்னும் *
மேலாப்பின்கீழ்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே.
640 கார்த்தண்கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறுபடுத்தி * என்னை
ஈர்த்துக்கொண்டுவிளையாடும் ஈசன்றன்னைக்கண்டீரே? *
போர்த்தமுத்தின்குப்பாயப் புகர்மால்யானைக்கன்றேபோல் *
வேர்த்துநின்று விளையாட விருந்தாவனத்தேகண்டோமே.
641 மாதவன்என்மணியினை வலையில்பிழைத்தபன்றிபோல் *
ஏதுமொன்றும்கொளத்தாரா ஈசன்றன்னைக்கண்டீரே? *
பீதகவாடையுடைதாழப் பெருங்கார்மேகக்கன்றேபோல் *
வீதியாரவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2)
642 தருமமறியாக்குறும்பனைத் தங்கைச்சார்ங்கமதுவேபோல் *
புருவவட்டமழகிய பொருத்தமிலியைக்கண்டீரே? *
உருவுகரிதாய்முகம்செய்தாய் உதயப்பருப்பதத்தின்மேல் *
விரியும்கதிரேபோல்வானை விருந்தாவனத்தேகண்டோமே.
643 பொருத்தமுடையநம்பியைப் புறம்போலுள்ளும்கரியானை *
கருத்தைப்பிழைத்துநின்ற அக்கருமாமுகிலைக்கண்டீரே? *
அருத்தித்தாராகணங்களால் ஆரப்பெருகுவானம்போல் *
விருத்தம்பெரிதாய்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே.
644 வெளியசங்கொன்றுடையானைப் பீதகவாடையுடையானை *
அளிநன்குடையதிருமாலை ஆழியானைக்கண்டீரே? *
களிவண்டெங்கும்கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள்தடந்தோள்மேல் *
மிளிரநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே.
645 நாட்டைப்படையென்று அயன்முதலாத்தந்த நளிர்மாமலருந்தி *
வீட்டைப்பண்ணிவிளையாடும் விமலன்றன்னைக்கண்டீரே? *
காட்டைநாடித்தேனுகனும் களிறும்புள்ளுமுடன்மடிய *
வேட்டையாடிவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2)
646 பருந்தாட்களிற்றுக்கருள்செய்த பரமன்றன்னை * பாரின்மேல்
விருந்தாவனத்தேகண்டமை விட்டுசித்தன்கோதைசொல் *
மருந்தாமென்றுதம்மனத்தே வைத்துக்கொண்டுவாழ்வார்கள் *
பெருந்தாளுடையபிரானடிக்கீழ் பிரியாதென்றுமிருப்பாரே. (2)