1. வேதார்த்தமறுதியிடுவது ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களாலே.
2. ஸ்ம்ருதியாலே பூர்வபாகத்திலர்த்தமறுதியிடக்கடவது; மற்றையிரண்டாலும் உத்தர பாகத்திலர்த்தமறுதியிடக்கடவது.
3. இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரபலம்.
4. அத்தாலேயது முற்பட்டது.
5. இதிஹாஸ ச்ரேஷ்ட்டமான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருத்தவளேற்றஞ் சொல்லுகிறது. மஹாபாரதத்தால் தூது போனவனேற்றஞ் சொல்லுகிறது.
6. இவையிரண்டாலும் புருஷகார வைபவமும் உபாய வைபவமும் சொல்லிற்றாய்த்து.
7. புருஷகாரமாம்போது க்ருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்.
8. பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக; நடுவிற் பிரிந்தது பாரதந்தர்யத்தை வெளியிடுகைக்காக; அநந்தரம் பிரிந்தது அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.
9. ஸம்ச்லேஷ விச்லேஷங்களிரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும்.
10. ஸம்ச்லேஷ தசையிலீச்வரனைத் திருத்தும்; விச்லேஷ தசையில் சேதநனைத் திருத்தும்.
11. இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே.
12. உபதேசத்தாலேயிருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும்.
13. உபதேசத்தாலே மீளாதபோது சேதநனையருளாலே திருத்தும்; ஈச்வரனையழகாலே திருத்தும்.
14. அறியாத வர்த்தங்களை யடையவறிவித்து ஆசார்யக்ருத்யத்தையும் புருஷகார க்ருத்யத்தையும் உபாய க்ருத்யத்தையும் தானேயேறிட்டுக் கொள்ளுகையாலே மஹாபாரதத்திலுபாய வைபவமும் சொல்லிற்றாய்த்து.
15. புருஷகாரத்துக்குமுபாயத்துக்கும் வைபவமாவது தோஷத்தையும் குணாஹாநியையும் பார்த்து உபேக்ஷியாதவளவன்றிக்கே அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சையாக்குகை.
16. இரண்டுமிடண்டுங் குலையவேணுமென்றிருக்கில் இரண்டுக்கு மிரண்டும் உண்டாயிற்றதாம்.
17. இரண்டுங் குலைந்ததென்றிருக்கில் இத்தலைக்கிரண்டும் உண்டாயிற்றதாம்.
18. ராக்ஷஸிகள் தோஷம் ப்ரஸித்தம்.
19. ஜிதேந்த்ரியரில் தலைவனாய், ஆஸ்திகாக்ரேஸரனாய், கேசவஸ்யாத்மா என்று க்ருஷ்ணனுக்கு தாரகனாயிருக்கிற அர்ஜுனனுக்கு தோஷமேதென்னில், பந்துக்கள் பக்கல் ஸ்நேஹமும் காருண்யமும் வதபீதியும்.
20. த்ரௌபதீ பரிபவங் கண்டிருந்தது க்ருஷ்ணாபிப்ராயத்தாலே ப்ராதாந தோஷம்.
21. பாண்டவர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்தது த்ரௌபதியுடைய மங்கள ஸூத்ரத்துக்காக.
22. அர்ஜுநனுக்கு தூத்யஸாரத்த்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்தயுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக.