Your browser does not support the audio element.
audio
3002 கிளரொளியிளமை கெடுவதன்முன்னம் *
வளரொளிமாயோன் மருவியகோயில் *
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை *
தளர்விலராகில் சார்வதுசதிரே. (2)
3003 சதிரிளமடவார் தாழ்ச்சியைமதியாது *
அதிர்குரல்சங்கத்து அழகர்தம்கோயில் *
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை *
பதியதுயேத்தி எழுவதுபயனே.
3004 பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே *
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில் *
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை *
அயன்மலையடைவததுகருமமே.
3005 கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே *
பெருமலையெடுத்தான் பீடுறைகோயில் *
வருமழைதவழும் மாலிருஞ்சோலை *
திருமலையதுவே அடைவதுதிறமே.
3006 திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது *
அறமுயலாழிப் படையவன்கோயில் *
மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை *
புறமலைசாரப் போவதுகிறியே.
3007 கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே *
உறியமர்வெண்ணெய் உண்டவன்கோயில் *
மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை *
நெறிபடவதுவே நினைவதுநலமே.
3008 நலமெனநினைமின் நரகழுந்தாதே *
நிலமுனமிடந்தான் நீடுறைகோயில் *
மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை *
வலமுறையெய்தி மருவுதல்வலமே.
3009 வலஞ்செய்துவைகல் வலங்கழியாதே *
வலஞ்செய்யும் ஆயமாயவன்கோயில் *
வலஞ்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை *
வலஞ்செய்துநாளும் மருவுதல்வழக்கே.
3010 வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது *
அழக்கொடியட்டான் அமர்பெருங்கோயில் *
மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை *
தொழுக்கருதுவதே துணிவதுசூதே.
3011 சூதென்றுகளவும் சூதும்செய்யாதே *
வேதமுன்விரித்தான் விரும்பியகோயில் *
மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை *
போதவிழ்மலையே புகுவதுபொருளே.
3012 பொருளின்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல் *
மருளில்வண்குருகூர் வண்சடகோபன் *
தெருள்கொள்ளச்சொன்ன ஓராயிரத்துள்இப்பத்து *
அருளுடையவன்தாள் அணைவிக்கும்முடித்தே. (2)