Your browser does not support the audio element.
audio
1628 கள்ளம்மனம்விள்ளும்வகை கருதிக்கழல்தொழுவீர் *
வெள்ளம்முதுபரவைத் திரைவிரிய * கரையெங்கும்
தெள்ளும்மணிதிகழும் சிறுபுலியூர்ச்சலசயனத்
துள்ளும் * எனதுள்ளத்துள்ளும் உறைவாரையுள்ளீரே. (2)
1629 தெருவில்திரிசிறுநோன்பியர் செஞ்சோற்றொடுகஞ்சி
மருவி * பிரிந்தவர்வாய்மொழி மதியாதுவந்தடைவீர் *
திருவிற்பொலிமறையோர் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
உருவக்குறளடிகள் அடியுணர்மின்உணர்வீரே.
1630 பறையும்வினைதொழுதுஉய்ம்மினீர் பணியும்சிறுதொண்டீர் *
அறையும்புனல்ஒருபால் வயல்ஒருபால் பொழில்ஒருபால் *
சிறைவண்டினமறையும் சிறுபுலியூர்ச்சலசயனத்து
உறையும் * இறையடியல்லது ஒன்றுஇறையும்அறியேனே.
1631 வானார்மதிபொதியும்சடை மழுவாளியொடுஒருபால் *
தானாகியதலைவனவன் அமரர்க்கதிபதியாம் *
தேனார்பொழில்தழுவும் சிறுபுலியூர்ச்சலசயனத்து
ஆனாயனது * அடியல்லது ஒன்றுஅறியேன்அடியேனே.
1632 நந்தாநெடுநரகத்திடை நணுகாவகை * நாளும்
எந்தாய்! என இமையோர்தொழுதேத்தும்இடம் * எறிநீர்ச்
செந்தாமரைமலரும் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
அந்தாமரையடியாய்! உன தடியேற்குஅருள்புரியே.
1633 முழுநீலமும்மலராம்பலும் அரவிந்தமும்விரவி *
கழுநீரொடுமடவாரவர் கண்வாய்முகம்மலரும் *
செழுநீர்வயல்தழுவும் சிறுபுலியூர்ச்சலசயனம் *
தொழுநீர்மையதுடையார் அடிதொழுவார்துயரிலரே.
1634 சேயோங்குதண் திருமாலிருஞ்சோலைமலைஉறையும்
மாயா! * எனக்குரையாய்இது மறைநான்கினுளாயோ? *
தீயோம்புகைமறையோர் சிறுபுலியூர்ச்சலசயனத்
தாயோ? * உனதடியார்மனத்தாயோ? அறியேனே. (2)
1635 மையார்வரிநீலம் மலர்க்கண்ணார்மனம்விட்டிட்டு *
உய்வானுனகழலே தொழுதுஎழுவேன் * கிளிமடவார்
செவ்வாய்மொழிபயிலும் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
ஐவாயரவணைமேல் உறையமலா! அருளாயே.
1636 கருமாமுகிலுருவா! கனலுருவா! புனலுருவா! *
பெருமால்வரையுருவா! பிறவுருவா! நினதுருவா! *
திருமாமகள்மருவும் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
அருமாகடலமுதே! உனதுஅடியேசரணாமே. (2)
1637 சீரார்நெடுமறுகில் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
ஏரார்முகில்வண்ணன்தனை இமையோர்பெருமானை *
காரார்வயல்மங்கைக்கிறை கலியனொலிமாலை *
பாரார்இவைபரவித்தொழப் பாவம்பயிலாவே. (2)