Chapter 7

Thirunaraiyur 4 - (ஆளும் பணியும்)

திருநறையூர் 4
Thirunaraiyur 4 - (ஆளும் பணியும்)
In these verses, the āzhvār sings the glories of the Lord Nambi, who resides in the temple at Thirunaraiyur.
திருநறையூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நம்பியின் பெருமைகளை இங்கே ஆழ்வார் பாடியுள்ளார்.
Verses: 1508 to 1517
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: செந்திருத்தி
Recital benefits: Will not get affected by the results of karma and will rule the world of Gods
  • PT 6.7.1
    1508 ## ஆளும் பணியும் அடியேனைக்
    கொண்டான் * விண்ட நிசாசரரை *
    தோளும் தலையும் துணிவு எய்தச் *
    சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான் **
    வேளும் சேயும் அனையாரும் *
    வேல் கணாரும் பயில் வீதி *
    நாளும் விழவின் ஒலி ஓவா *
    நறையூர் நின்ற நம்பியே 1
  • PT 6.7.2
    1509 முனி ஆய் வந்து மூவெழுகால் *
    முடி சேர் மன்னர் உடல் துணிய *
    தனி வாய் மழுவின் படை ஆண்ட *
    தார் ஆர் தோளான் வார் புறவில் **
    பனி சேர் முல்லை பல் அரும்பப் *
    பானல் ஒருபால் கண் காட்ட *
    நனி சேர் கமலம் முகங் காட்டும் *
    நறையூர் நின்ற நம்பியே 2
  • PT 6.7.3
    1510 தெள் ஆர் கடல்வாய் விட வாய *
    சின வாள் அரவில் துயில் அமர்ந்து *
    துள்ளா வரு மான் விழ வாளி
    துரந்தான் * இரந்தான் மாவலி மண் **
    புள் ஆர் புறவில் பூங் காவி *
    புலங்கொள் மாதர் கண் காட்ட *
    நள் ஆர் கமலம் முகம் காட்டும் *
    நறையூர் நின்ற நம்பியே 3
  • PT 6.7.4
    1511 ஒளியா வெண்ணெய் உண்டான் என்று *
    உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் *
    விளியா ஆர்க்க ஆப்புண்டு *
    விம்மி அழுதான் மென் மலர்மேல் **
    களியா வண்டு கள் உண்ண *
    காமர் தென்றல் அலர் தூற்ற *
    நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் *
    நறையூர் நின்ற நம்பியே 4
  • PT 6.7.5
    1512 வில் ஆர் விழவில் வட மதுரை *
    விரும்பி விரும்பா மல் அடர்த்து *
    கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்
    காய்ந்தான் * பாய்ந்தான் காளியன்மேல் **
    சொல் ஆர் சுருதி முறை ஓதிச் *
    சோமுச் செய்யும் தொழிலினோர் *
    நல்லார் மறையோர் பலர் வாழும் *
    நறையூர் நின்ற நம்பியே 5
  • PT 6.7.6
    1513 வள்ளி கொழுநன் முதலாய *
    மக்களோடு முக்கணான்
    வெள்கி ஓட * விறல் வாணன் *
    வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான் **
    பள்ளி கமலத்திடைப் பட்ட *
    பகு வாய் அலவன் முகம் நோக்கி *
    நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த *
    நறையூர் நின்ற நம்பியே 6
  • PT 6.7.7
    1514 மிடையா வந்த வேல் மன்னர்
    வீய * விசயன் தேர் கடவி *
    குடையா வரை ஒன்று எடுத்து * ஆயர்
    கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
    படையான் ** வேதம் நான்கு ஐந்து
    வேள்வி * அங்கம் ஆறு இசை ஏழ் *
    நடையா வல்ல அந்தணர் வாழ் *
    நறையூர் நின்ற நம்பியே 7
  • PT 6.7.8
    1515 பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி *
    கூந்தல் முடிக்க பாரதத்து *
    கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர்
    கலங்கச் * சங்கம் வாய் வைத்தான் **
    செந்தாமரைமேல் அயனோடு *
    சிவனும் அனைய பெருமையோர் *
    நந்தா வண் கை மறையோர் வாழ் *
    நறையூர் நின்ற நம்பியே 8
  • PT 6.7.9
    1516 ஆறும் பிறையும் அரவமும் *
    அடம்பும் சடைமேல் அணிந்து * உடலம்
    நீறும் பூசி ஏறு ஊரும் *
    இறையோன் சென்று குறை இரப்ப **
    மாறு ஒன்று இல்லா வாச நீர் *
    வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான் *
    நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய *
    நறையூர் நின்ற நம்பியே 9
  • PT 6.7.10
    1517 ## நன்மை உடைய மறையோர் வாழ் *
    நறையூர் நின்ற நம்பியை *
    கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் *
    கலியன் ஒலிசெய் தமிழ் மாலை **
    பன்னி உலகில் பாடுவார் *
    பாடு சாரா பழ வினைகள் *
    மன்னி உலகம் ஆண்டு போய் *
    வானோர் வணங்க வாழ்வாரே 10