Your browser does not support the audio element.
audio
1308 கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்! *
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர் *
திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா! * அடியேனிடரைக்களையாயே. (2)
1309 கொந்தார்துளவமலர்கொன்டு அணிவானே! *
நந்தாதபெரும்புகழ் வேதியர்நாங்கூர் *
செந்தாமரைநீர்த் திருவெள்ளக்குளத்துள்
எந்தாய்! * அடியேனிடரைக்களையாயே.
1310 குன்றால்குளிர்மாரி தடுத்துஉகந்தானே! *
நன்றாயபெரும்புகழ் வேதியர்நாங்கூர் *
சென்றார்வணங்கும் திருவெள்ளக்குளத்துள்
நின்றாய்! * நெடியாய்! அடியேனிடர்நீக்கே.
1311 கானார்கரிகொம்பது ஒசித்தகளிறே! *
நானாவகைநல்லவர் மன்னியநாங்கூர் *
தேனார்பொழில்சூழ் திருவெள்ளக்குளத்து
ளானாய் * அடியேனுக்கு அருள்புரியாயே.
1312 வேடார்திருவேங்கடம் மேயவிளக்கே! *
நாடார்புகழ்வேதியர் மன்னியநாங்கூர் *
சேடார்பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய்! *
பாடாவருவேன் வினையாயினபாற்றே. (2)
1313 கல்லால்கடலை அணைகட்டி உகந்தாய்! *
நல்லார்பலர் வேதியர்மன்னியநாங்கூர்ச் *
செல்வா! * திருவெள்ளக்குளத்துஉறைவானே! *
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே.
1314 கோலால்நிரைமேய்த்த எங்கோவலர்கோவே! *
நாலாகியவேதியர் மன்னியநாங்கூர் *
சேலார்வயல்சூழ் திருவெள்ளக்குளத்துள்
மாலே! * எனவல்வினை தீர்த்தருளாயே.
1315 வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய்! *
நாராயணனே! நல்லவேதியர்நாங்கூர் *
சீரார்பொழில்சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராவமுதே! * அடியேற்கு அருளாயே.
1316 பூவார் திருமாமகள் புல்லியமார்பா! *
நாவார்புகழ் வேதியர்மன்னியநாங்கூர் *
தேவா! திருவெள்ளக்குளத்துஉறைவானே! *
ஆவா! அடியான் இவனென்றுஅருளாயே.
1317 நல்லன்புடை வேதியர்மன்னியநாங்கூர் *
செல்வன் திருவெள்ளக்குளத்துஉறைவானை *
கல்லின்மலிதோள் கலியன்சொன்னமாலை *
வல்லரெனவல்லவர் வானவர்தாமே. (2)