Your browser does not support the audio element.
audio
1848 ஒருநல்சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள் *
வருநல்தொல்கதி ஆகியமைந்தனை *
நெருநல்கண்டதுநீர்மலை, இன்றுபோய் *
கருநெல்சூழ் கண்ணமங்கையுள்காண்டுமே. (2)
1849 பொன்னைமாமணியை அணியார்ந்ததோர்
மின்னை * வேங்கடத்துஉச்சியில் கண்டுபோய் *
என்னையாளுடைஈசனை எம்பிரான்
தன்னை * யாம்சென்றுகாண்டும் தண்காவிலே.
1850 வேலையாலிலைப் பள்ளிவிரும்பிய *
பாலையாரமுதத்தினைப் பைந்துழாய் *
மாலைஆலியில் கண்டுமகிழ்ந்துபோய் *
ஞாலமுன்னியைக்காண்டும் நாங்கூரிலே.
1851 துளக்கமில்சுடரை * அவுணனுடல்
பிளக்கும்மைந்தனைப் பேரில்வணங்கிப்போய் *
அளப்பிலாரமுதை அமரர்க்குஅருள்
விளக்கினை * சென்று வெள்ளறைக்காண்டுமே.
1852 சுடலையில் சுடுநீறனமர்ந்தது * ஓர்
நடலைதீர்த்தவனை நறையூர்க்கண்டு * என்
உடலையுள்புகுந்துஉள்ளமுருக்கியுண் *
விடலையைச்சென்றுகாண்டும் மெய்யத்துள்ளே.
1853 வானை ஆரமுதம்தந்தவள்ளலை *
தேனைநீள்வயல் சேறையில்கண்டுபோய் *
ஆனைவாட்டியருளும் அமரர்தம்
கோனை * யாம்குடந்தைச்சென்றுகாண்டுமே.
1854 கூந்தலார்மகிழ் கோவலனாய் * வெண்ணெய்
மாந்தழுந்தையில் கண்டுமகிழ்ந்துபோய் *
பாந்தள்பாழியில் பள்ளிவிரும்பிய *
வேந்தனைச்சென்றுகாண்டும் வெஃகாவுளே.
1855 பத்தராவியைப் பால்மதியை * அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத்தொழுதுபோய் *
முத்தினைமணியை மணிமாணிக்க
வித்தினை * சென்று விண்ணகர்க்காண்டுமே. (2)
1856 கம்பமாகளிறு அஞ்சிக்கலங்க * ஓர்
கொம்புகொண்ட குரைகழல்கூத்தனை *
கொம்புலாம்பொழில் கோட்டியூர்க்கண்டுபோய் *
நம்பனைச்சென்றுகாண்டும் நாவாயுளே.
1857 பெற்ற மாளியைப் பேரில்மணாளனை *
கற்றநூல் கலிகன்றிஉரைசெய்த *
சொற்திறமிவை சொல்லியதொண்டர்கட்கு *
அற்றமில்லை அண்டம்அவர்க்குஆட்சியே. (2)