Your browser does not support the audio element.
audio
286 ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய் *
செய்யநூலின்சிற்றாடை செப்பனுடுக்கவும்வல்லளல்லள் *
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள் *
பையரவணைப்பள்ளியானொடு கைவைத்துஇவள்வருமே. (2)
287 வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில *
சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி *
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி *
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.
288 பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில் *
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறாள் *
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை *
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே.
289 ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி *
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்? *
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி *
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே.
290 நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கல்
சூடி * நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள் *
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடிவளை *
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே.
291 பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும் *
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள் *
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும் *
வட்டவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.
292 பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள் *
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய் *
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள் *
வாசவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.
293 காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும் *
கூறையுடுக்கும்அயர்க்கும் தன்கொவ்வைச்செவ்வாய்திருத்தும் *
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும் *
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.
294 கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து * இவளை
வைத்துவைத்துக்கொண்டு என்னவாணிபம்? நம்மை வடுப்படுத்தும் *
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள *
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே.
295 பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே *
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள் *
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன் *
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே.
296 ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு * இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை *
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன *
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2)