Your browser does not support the audio element.
audio
152 வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு *
திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன் *
எண்ணெய்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன் *
நண்ணலரியபிரானே! நாரணா! நீராடவாராய் (2)
153 கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால் *
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன் *
நின்றமராமரம்சாய்த்தாய்! நீபிறந்ததிருவோணம் *
இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான்! ஓடாதேவாராய்
154 பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம் *
ஆய்ச்சியரெல்லாரும்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன் *
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன் *
வாய்த்தபுகழ்மணிவண்ணா! மஞ்சனமாடநீவாராய்
155 கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து *
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே! *
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும் நாறுசாந்தும் *
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே! நீராடவாராய்
156 அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து *
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ! *
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர் *
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான்! இங்கேவாராய்
157 எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி *
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே! *
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே *
வண்ணம்அழகியநம்பீ! மஞ்சனமாடநீவாராய்
158 கறந்தநற்பாலும் தயிரும் கடைந்துஉறிமேல்வைத்த வெண்ணெய் *
பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே! *
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே *
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய்.
159 கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து *
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும் *
நின்திறத்தேனல்லேன்நம்பீ! நீபிறந்ததிருநல்நாள் *
நன்றுநீநீராடவேண்டும் நாரணா! ஓடாதேவாராய்.
160 பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி *
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர் *
நாணெத்தனையுமிலாதாய்! நப்பின்னைகாணில்சிரிக்கும் *
மாணிக்கமே! என்மணியே! மஞ்சனமாடநீவாராய்.
161 கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து *
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை *
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்ன பாடல் *
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. (2)