Your browser does not support the audio element.
audio
1258 கம்பமாகடலடைத்துஇலங்கைக்குமன் கதிர்முடியவை பத்தும்
அம்பினாலறுத்து * அரசவன் தம்பிக்கு அளித்தவனுறை கோயில் *
செம்பலாநிரைசண்பகம்மாதவி சூதகம்வாழைகள்சூழ் *
வம்புலாம்கமுகோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே. (2)
1259 பல்லவம்திகழ்பூங்கடம்பேறிய அக்காளியன்பணவரங்கில் *
ஒல்லைவந்திறப்பாய்ந்துஅருநடஞ்செய்த உம்பர்கோனுறைகோயில் *
நல்லவெந்தழல்மூன்றுநால்வேதம் ஐவேள்வியோடுஆறங்கம் *
வல்லஅந்தணர்மல்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
1260 அண்டரானவர்வானவர்கோனுக்கென்று அமைத்த சோறதுவெல்லாம்
உண்டு * கோநிரைமேய்த்துஅவைகாத்தவன் உகந்தினிதுறைகோயில் *
கொண்டலார்முழவிற்குளிர்வார்பொழில் குலமயில் நடமாட *
வண்டுதானிசைபாடிடுநாங்கூர் வண்புருடோத்தமமே.
1261 பருங்கையானையின்கொம்பினைப்பறித்துஅதன்பாகனைச் சாடிப்புக்கு *
ஒருங்கமல்லரைக்கொன்று பின்கஞ்சனையுதைத்தவனுறை கோயில் *
கரும்பினூடு உயர்சாலிகள்விளைதரு கழனியில்மலிவாவி *
மருங்கெலாம்பொழிலோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
1262 சாடுபோய்விழத்தாள்நிமிர்த்து ஈசன்தன்படையோடும் கிளையோடும்
ஓட * வாணனைஆயிரந்தோள்களும் துணித்தவனுறை கோயில் *
ஆடுவான்கொடிஅகல்விசும்பணவிப்போய்ப் பகலவனொளி மறைக்கும் *
மாடமாளிகைசூழ்தருநாங்கூர் வண்புருடோத்தமமே.
1263 அங்கையால்அடிமூன்றுநீரேற்று அயன்அலர்கொடு தொழுதேத்த *
கங்கைபோதரக்கால்நிமிர்த்தருளிய கண்ணன்வந்துறைகோயில் *
கொங்கைகோங்கவைகாட்டவாய்குமுதங்கள்காட்ட, மாபதுமங்கள் *
மங்கைமார்முகம்காட்டிடுநாங்கூர் வண்புருடோத்தமமே.
1264 உளையஒண்திறல்பொன்பெயரோன்தனது உரம்பிளந்து உதிரத்தை
அளையும் * வெஞ்சினத்துஅரி பரிகீறிய அப்பன்வந்துறை கோயில் *
இளையமங்கையர்இணையடிச்சிலம்பினோடு எழில்கொள் பந்தடிப்போர் * கை
வளையினின் றொலிமல்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
1265 வாளையார்தடங்கண்உமைபங்கன் வன்சாபமற்றதுநீங்க *
மூளையார்சிரத்துஐயமுன்னளித்த எம்முகில்வண்ணனுறைகோயில் *
பாளைவான்கமுகூடுயர்தெங்கின் வன்பழம்விழவெருவிப்போய் *
வாளைபாய்தடம்சூழ்தருநாங்கூர் வண்புருடோத்தமமே.
1266 இந்துவார்சடையீசனைப்பயந்த நான்முகனை, தன்னெழிலாரும் *
உந்திமாமலர்மீமிசைப்படைத்தவன் உகந்துஇனிதுறைகோயில் *
குந்திவாழையின்கொழுங்கனிநுகர்ந்து தன்குருளையைத் தழுவிப்போய் *
மந்திமாம்பணைமேல்வைகுநாங்கூர் வண்புருடோத்தமமே.
1267 மண்ணுளார்புகழ்வேதியர்நாங்கூர் வண்புருடோத்தமத்துள் *
அண்ணல்சேவடிக்கீழடைந்துஉய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி *
பண்ணுளார்தரப்பாடியபாடல் இப்பத்தும்வல்லார் * உலகில்
எண்ணிலாதபேரின்பமுற்றுஇமையவரோடும்கூடுவரே. (2)