Chapter 2

Thillai Thiruchitrakudam 1 - (ஊன் வாட)

தில்லைத் திருச்சித்திரகூடம்-1
Thillai Thiruchitrakudam 1 - (ஊன் வாட)

Inside the Chidambaram Nataraja Temple, also known as Thillai Nagar, there is a shrine for Govindaraja Perumal. Sri Vaishnavas refer to Chidambaram as Chitrakootam. In this temple, Govindaraja Perumal resides. The āzhvār advises, "Why undergo so much hardship by drying your body, eating fruits and leaves, and performing penance in water, forests, and

+ Read more

தில்லைநகர் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குள்ளே இக்கோயிலும் உள்ளது. ஸ்ரீவைஷ்ணவர்கள் சிதம்பரத்தைச் சித்திரகூடம் என்றே சொல்லுவார்கள். இக் கோயிலில் கோவிந்தராஜர் எழுந்தருளியிருக்கிறார். உடம்பை உலர்த்திக் காய்கனி இலைகளை உண்டு, தண்ணீரிலும், காடுகளிலும், மலைகளிலும் தவம் செய்து

+ Read more
Verses: 1158 to 1167
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always with the Lord
  • PT 3.2.1
    1158 ## ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு *
    உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து *
    தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா *
    தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர் **
    கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே *
    கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய் *
    தேன் ஆட மாடக் கொடி ஆடு * தில்லைத்
    திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 1 **
  • PT 3.2.2
    1159 காயோடு நீடு கனி உண்டு * வீசு
    கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் * ஐந்து
    தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா *
    திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் **
    வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் *
    மறையாளர் நாளும் முறையால் வளர்த்த *
    தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு * தில்லைத்
    திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 2 **
  • PT 3.2.3
    1160 வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய் *
    விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த *
    வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் *
    அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் **
    பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து *
    படை மன்னவன் பல்லவர்க் கோன் பணிந்த *
    செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த * தில்லைத்
    திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 3 **
  • PT 3.2.4
    1161 அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய் *
    அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த *
    பெருமான் திருநாமம் பிதற்றி * நும் தம்
    பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் **
    கரு மா கடலுள் கிடந்தான் உவந்து *
    கவை நா அரவின் அணைப் பள்ளியின்மேல் *
    திருமால் திருமங்கையொடு ஆடு * தில்லைத்
    திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 4 **
  • PT 3.2.5
    1162 கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் *
    குல மன்னர் அங்கம் மழுவில் துணிய *
    தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் *
    தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர் **
    பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் *
    புகழ் மங்கை எங்கும் திகழ * புகழ் சேர்
    சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த * தில்லைத்
    திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 5 **
  • PT 3.2.6
    1163 நெய் வாய் அழல் அம்பு துரந்து * முந்நீர்
    துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து * இலங்கு
    மை ஆர் மணிவண்ணனை எண்ணி * நும் தம்
    மனத்தே இருத்தும்படி வாழவல்லீர் **
    அவ் வாய் இள மங்கையர் பேசவும் * தான்
    அரு மா மறை அந்தணர் சிந்தை புக *
    செவ் வாய்க் கிளி நான்மறை பாடு * தில்லைத்
    திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 6 **
  • PT 3.2.7
    1164 மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து *
    மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த *
    தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு *
    திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் **
    கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் *
    கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் *
    தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய * தில்லைத்
    திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 7 **
  • PT 3.2.8
    1165 மா வாயின் அங்கம் மதியாது கீறி *
    மழை மா முது குன்று எடுத்து * ஆயர் தங்கள்
    கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் *
    குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர் **
    மூவாயிரம் நான்மறையாளர் * நாளும்
    முறையால் வணங்க அணங்கு ஆய சோதி *
    தேவாதிதேவன் திகழ்கின்ற * தில்லைத்
    திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 8 **
  • PT 3.2.9
    1166 செரு நீல வேல் கண் மடவார்திறத்துச் *
    சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் *
    அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் *
    அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் **
    பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து * எங்கும்
    வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள *
    திரு நீலம் நின்று திகழ்கின்ற * தில்லைத்
    திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 9 **
  • PT 3.2.10
    1167 ## சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய * தில்லைத்
    திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு *
    ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப *
    அலை நீர் உலகுக்கு அருளே புரியும் **
    கார் ஆர் புயல் கைக் கலிகன்றி * குன்றா ஒலி மாலை
    ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் *
    பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப் *
    பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே 10 **