Chapter 8

Thiruvenkatam 1 - (கொங்கு அலர்ந்த)

திருவேங்கடம் - 1
Thiruvenkatam 1 - (கொங்கு அலர்ந்த)
Thiruvengadam: Tirumalai-Tirupati Hill. The desire to visit and the act of going to Tirumalai itself is a blessing. Going there and worshipping Srinivasa is a great fortune. Here, Srinivasa grants all the boons requested by His devotees. He is the Lord worshipped by both the southern and northern lands. One must wait for many hours just to catch a glimpse of Him and offer salutations. The āzhvār extols the greatness of this hill.
திருவேங்கடம்: திருமலை-திருப்பதி மலை. திருமலைக்குச் செல்ல நினைப்பதும். செல்வதும் பாக்கியம். அங்கு சென்று ஸ்ரீநிவாஸானை ஸேவிப்பது பெரும் பாக்கியம். இங்கு ஸ்ரீநிவாஸன், அடியார்கள் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்து உதவுகிறார். தென்னாடும் வடநாடும் தொழநிற்கும் பெருமான் இவர். இவரைக் கண்டு அஞ்சலி செய்வதற்கே பலமணி நேரம் காத்திருக்கவேண்டும். ஆழ்வார் இம்மலையின் சிறப்பை ஈண்டுக் கூறுகிறார்.
Verses: 1018 to 1027
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Recital benefits: Will rule the world surrounded by sounding oceans under a white umbrella and become Gods
  • PT 1.8.1
    1018 ## கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த * கோவலன் எம் பிரான் *
    சங்கு தங்கு தடங் கடல் * துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் **
    பொங்கு புள்ளினை வாய் பிளந்த * புராணர் தம் இடம் * பொங்கு நீர்ச்
    செங் கயல் திளைக்கும் சுனைத் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 1
  • PT 1.8.2
    1019 ## பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் * இரங்க வன் பேய் முலை *
    பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை * பிரான் அவன் பெருகும் இடம் **
    வெள்ளியான் கரியான் * மணி நிற வண்ணன் என்று எண்ணி * நாள்தொறும்
    தெள்ளியார் வணங்கும் மலைத் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 2
  • PT 1.8.3
    1020 நின்ற மா மருது இற்று வீழ * நடந்த நின்மலன் நேமியான் *
    என்றும் வானவர் கைதொழும் * இணைத்தாமரை அடி எம் பிரான் **
    கன்றி மாரி பொழிந்திடக் * கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான் *
    சென்று குன்றம் எடுத்தவன் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 3
  • PT 1.8.4
    1021 பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய் திட்டு * வென்ற பரஞ்சுடர் *
    கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் * குரவை பிணைந்த எம் கோவலன் **
    ஏத்துவார் தம் மனத்து உள்ளான் * இடவெந்தை மேவிய எம் பிரான் *
    தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 4
  • PT 1.8.5
    1022 வண் கையான் அவுணர்க்கு நாயகன் * வேள்வியில் சென்று மாணியாய் *
    மண் கையால் இரந்தான் * மராமரம் ஏழும் எய்த வலத்தினான் **
    எண் கையான் இமயத்து உள்ளான் * இருஞ்சோலை மேவிய எம் பிரான் *
    திண் கை மா துயர் தீர்த்தவன் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 5
  • PT 1.8.6
    1023 எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கிப் * பொன் வயிற்றில் பெய்து *
    பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் * பால் மதிக்கு இடர் தீர்த்தவன் **
    ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் * ஒள் எயிற்றொடு *
    திண் திறல் அரியாயவன் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 6
  • PT 1.8.7
    1024 பாரும் நீர் எரி காற்றினோடு * ஆகாசமும் இவை ஆயினான் *
    பேரும் ஆயிரம் பேச நின்ற * பிறப்பிலி பெருகும் இடம் **
    காரும் வார் பனி நீள் விசும்பிடைச் * சோரும் மா முகில் தோய்தர *
    சேரும் வார் பொழில் சூழ் எழில் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 7
  • PT 1.8.8
    1025 அம்பரம் அனல் கால் நிலம் * சலம் ஆகி நின்ற அமரர் கோன் *
    வம்பு உலாம் மலர்மேல் * மலி மட மங்கை தன் கொழுநன் அவன் **
    கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர் * நீள் இதணம்தொறும்
    செம் புனம் அவை காவல் கொள் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 8
  • PT 1.8.9
    1026 ## பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும் * சொல்லி நின்று பின்னரும் *
    பேசுவார் தமை உய்ய வாங்கிப் * பிறப்பு அறுக்கும் பிரான் இடம் **
    வாச மா மலர் நாறு வார் பொழில் * சூழ் தரும் உலகுக்கு எல்லாம் *
    தேசமாய்த் திகழும் மலைத் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 9
  • PT 1.8.10
    1027 ## செங் கயல் திளைக்கும் சுனைத் * திருவேங்கடத்து உறை செல்வனை *
    மங்கையர் தலைவன் கலிகன்றி * வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள் **
    சங்கை இன்றித் தரித்து உரைக்க வல்லார்கள் * தஞ்சமதாகவே *
    வங்க மா கடல் வையம் காவலர் ஆகி * வான் உலகு ஆள்வரே 10