Your browser does not support the audio element.
audio
556 வாரணமாயிரம் சூழவலம்செய்து *
நாரணநம்பி நடக்கின்றானென்றெதிர் *
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும் *
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (2)
557 நாளைவதுவை மணமென்றுநாளிட்டு *
பாளைகமுகு பரிசுடைப்பந்தற்கீழ் *
கோளரிமாதவன் கோவிந்தனென்பான் ஓர் *
காளைபுகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
558 இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம் *
வந்திருந்தென்னை மகட்பேசிமந்திரித்து *
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை *
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
559 நால்திசைத்தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி *
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி *
பூப்புனைகண்ணிப் புனிதனோடென்றன்னை *
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
560 கதிரொளிதீபம் கலசமுடனேந்தி *
சதிரிளமங்கையர்தாம் வந்தெதிர்கொள்ள *
மதுரையார்மன்ன னடிநிலைதொட்டு * எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
561 மத்தளங்கொட்ட வரிசங்கம்நின்றூத *
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து * என்னைக்
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
562 வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால் *
பாசிலைநாணல்படுத்துப் பரிதிவைத்து *
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றி *
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
563 இம்மைக்குமேழேழ்பிறவிக்கும் பற்றாவான் *
நம்மையுடையவன் நாராயணன்நம்பி *
செம்மையுடையதிருக்கையால் தாள்பற்றி *
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
564 வரிசிலைவாள்முகத்து என்னைமார்தாம்வந்திட்டு *
எரிமுகம்பாரித்து என்னைமுன்னேநிறுத்தி *
அரிமுகனச்சுதன் கைம்மேலென்கைவைத்து *
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
565 குங்குமமப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து *
மங்கலவீதி வலம்செய்துமணநீர் *
அங்கவனோடும் உடன்சென்றங்கானைமேல் *
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
566 ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை *
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன்கோதைசொல் *
தூயதமிழ்மாலை ஈரைந்தும்வல்லவர் *
வாயுநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2)