Your browser does not support the audio element.
audio
514 நாமமாயிர மேத்தநின்ற நாராயணா! நரனே! * உன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே *
காமன்போதரு காலமென்றுபங்குனிநாள்கடை பாரித்தோம் *
தீமைசெய்யும்சிரீதரா! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. (2)
515 இன்றுமுற்றும்முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை *
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் *
அன்றுபாலகனாகி ஆலிலைமேல்துயின்றஎம்மாதியாய்! *
என்றுமுன்றனக்கெங்கள்மேல் இரக்கம்மெழாததெம்பாவமே.
516 குண்டுநீருறைகோளரீ! மதயானைகோள்விடுத்தாய்! * உன்னைக்
கண்டுமாலுறுவோங்களைக் கடைக்கண்களாலிட்டுவாதியேல் *
வண்டல்நுண்மணல்தெள்ளி யாம்வளைக்கைகளால்சிரமப்பட்டோம் *
தெண்டிரைக்கடற்பள்ளியாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.
517 பெய்யுமாமுகில்போல்வண்ணா! உன்றன்பேச்சும்செய்கையும் * எங்களை
மையலேற்றிமயக்க உன்முகம் மாயமந்திரந்தான்கொலோ? *
நொய்யர்பிள்ளைகளென்பதற்கு உன்னை நோவநாங்களுரைக்கிலோம் *
செய்யதாமரைக் கண்ணினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.
518 வெள்ளைநுண்மணல்கொண்டு சிற்றில்விசித்திரப்பட * வீதிவாய்த்
தெள்ளிநாங்களிழைத்தகோலம் அழித்தியாகிலும் உன்தன்மேல் *
உள்ளமோடியுருகலல்லால் உரோடமொன்றுமிலோங்கண்டாய் *
கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தனகண்களல்லவே.
519 முற்றிலாதபிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை * நாள்தொறும்
சிற்றில்மேலிட்டுக்கொண்டு நீசிறிதுண்டுதிண்ணென நாமது
கற்றிலோம் * கடலையடைத்தரக்கர்குலங்களை முற்றவும் *
செற்று இலங்கையைப்பூசலாக்கியசேவகா! எம்மைவாதியேல்.
520 பேதம்நன்கறிவார்களோடு இவைபேசினால்பெரிதிஞ்சுவை *
யாதுமொன்றறியாதபிள்ளைகளோமை நீநலிந்தென்பயன்? *
ஓதமாகடல்வண்ணா! உன்மணவாட்டிமாரொடுசூழறும் *
சேதுபந்தம்திருத்தினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.
521 வட்டவாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும்மண லுங்கொண்டு *
இட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்? *
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரம்கையிலேந்தினாய்! *
கட்டியும்கைத்தால் இன்னாமையறிதியேகடல்வண்ணனே.
522 முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து *
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா *
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய் * எம்மைப்
பற்றிமெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப்பக்கம்நின்றவரெஞ்சொல்லார்?
523 சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் சிற்றில்நீசிதை யேல். என்று *
வீதிவாய்விளை யாடுமாயர் சிறுமியர்மழ லைச்சொல்லை *
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி புத்தூர்மன்விட்டு சித்தன்றன் *
கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை வின்றிவைகுந்தம் சேர்வரே. (2)