Chapter 10
Thirukkannamangai - (பெரும் புற)
The presiding deity of Thirukannamangai is known by the divine names Bhaktavatsala Perumal and Patharaviperumal. The Thayar is Abhishekamalli. The āzhvār, having surrendered his heart to the Lord of Thirukannamangai, sings these verses in deep devotion.
திருக்கண்ணமங்கைத் திருமாலுக்குப் பக்தவத்சலப் பிரான், பத்தராவிப் பெருமாள் என்னும் திருநாமங்கள் உள்ளன. தாயார் அபிஷேகவல்லி திருக்கண்ணமங்கைப் பெருமானிடம் ஆழ்வார் தம் மனத்தைப் பறிகொடுத்து ஈண்டுப் பாடியுள்ளார்.
Verses: 1638 to 1647
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and become a God
- PT 7.10.1
1638 ## பெரும் புறக் கடலை அடல் ஏற்றினைப் *
பெண்ணை ஆணை * எண் இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையைப் *
பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை **
அரும்பினை அலரை அடியேன் மனத்து
ஆசையை * அமுதம் பொதி இன் சுவை *
கரும்பினை கனியை சென்று நாடிக் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 1 - PT 7.10.2
1639 மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும் *
மெய்யைப் பொய்யினை கையில் ஓர் சங்கு உடை *
மைந் நிறக் கடலைக் கடல் வண்ணனை
மாலை * ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை **
நென்னலைப் பகலை இற்றை நாளினை *
நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை *
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 2 - PT 7.10.3
1640 எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை *
வாச வார் குழலாள் மலை மங்கை தன்
பங்கனை * பங்கில் வைத்து உகந்தான் * தன்னைப்
பான்மையைப் பனி மா மதியம் தவழ் **
மங்குலைச் சுடரை வட மா மலை
உச்சியை * நச்சி நாம் வணங்கப்படும்
கங்குலை * பகலை சென்று நாடிக் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 3 - PT 7.10.4
1641 பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையைத் *
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை *
மாயனை மதிள் கோவல் இடைகழி
மைந்தனை * அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை ** இலங்கும் சுடர்ச் சோதியை *
எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை *
காசினை மணியைச் சென்று நாடிக் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 4 - PT 7.10.5
1642 ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை *
இம்மையை மறுமைக்கு மருந்தினை *
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்
ஐயனை * கையில் ஆழி ஒன்று ஏந்திய
கூற்றினை ** குரு மா மணிக் குன்றினை *
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை *
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 5 - PT 7.10.6
1643 துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் *
சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை * திருமங்கை மணாளனைத் *
தேவனைத் திகழும் பவளத்து ஒளி
ஒப்பனை ** உலகு ஏழினை ஊழியை *
ஆழி ஏந்திய கையனை அந்தணர்
கற்பினை * கழுநீர் மலரும் வயல் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 6 - PT 7.10.7
1644 திருத்தனை திசை நான்முகன் தந்தையைத் *
தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை * விளங்கும் சுடர்ச் சோதியை *
விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை ** அரியைப் பரி கீறிய
அப்பனை * அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற
கருத்தனை * களி வண்டு அறையும் பொழில் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 7 - PT 7.10.8
1645 வெம் சினக் களிற்றை விளங்காய் வீழக் *
கன்று வீசிய ஈசனை * பேய் மகள்
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத் *
தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை ** அமுதத்தினை நாதனை *
நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை *
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 8 - PT 7.10.9
1646 பண்ணினைப் பண்ணில் நின்றது ஓர் பான்மையைப் *
பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற
விண்ணினை * விளங்கும் சுடர்ச் சோதியை *
வேள்வியை விளக்கின் ஒளி தன்னை **
மண்ணினை மலையை அலை நீரினை *
மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினை * கண்கள் ஆரளவும் நின்று *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 9 - PT 7.10.10
1647 ## கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று *
காதலால் கலிகன்றி உரைசெய்த *
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை *
வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ் **
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர் *
மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய
கண்ண * நின் தனக்கும் குறிப்பு ஆகில்
கற்கலாம் * கவியின் பொருள் தானே 10