Your browser does not support the audio element.
audio
1348 அறிவதரியான் அனைத்துலகுமுடையான் என்னையாளுடையான் *
குறியமாணியுருவாய கூத்தன்மன்னியமருமிடம் *
நறியமலர்மேல்சுரும்பார்க்க எழிலார்மஞ்ஞைநடமாட *
பொறிகொள்சிறைவண்டு இசைபாடும் புள்ளம்பூதங்குடிதானே. (2)
1349 கள்ளக்குறளாய்மாவலியைவஞ்சித்து உலகம்கைப்படுத்து *
பொள்ளைக்கரத்தபோதகத்தின் துன்பம்தவிர்த்த புனிதனிடம் *
பள்ளச்செறுவில்கயலுகளப் பழனக்கழனியதனுள்போய் *
புள்ளுப்பிள்ளைக்கிரைதேடும் புள்ளம்பூதங்குடிதானே.
1350 மேவாஅரக்கர்தென்னிலங்கை வேந்தன்வீயச்சரம்துரந்து *
மாவாய்பிளந்துமல்லடர்த்து மருதம்சாய்த்தமாலதிடம் *
காவார்தெங்கின்பழம்வீழக் கயல்கள்பாயக்குருகிரியும் *
பூவார்கழனிஎழிலாரும் புள்ளம்பூதங்குடிதானே.
1351 வெற்பால்மாரிபழுதாக்கி விறல்வாளரக்கர்தலைவன்தன் *
வற்பார்திரள்தோள்ஐந்நான்கும் துணித்தவல்வில் இராமனிடம் *
கற்பார்புரிசைசெய்குன்றம் கவினார்கூடம்மாளிகைகள் *
பொற்பார்மாடம்எழிலாரும் புள்ளம்பூதங்குடிதானே.
1352 மையார்தடங்கண்கருங்கூந்தல் ஆய்ச்சிமறையவைத்த தயிர் *
நெய்யார்பாலோடுஅமுதுசெய்த நேமியங்கைமாயனிடம் *
செய்யார்ஆரல்இரைகருதிச் செங்கால்நாரை சென்றணையும் *
பொய்யாநாவில்மறையாளர் புள்ளம்பூதங்குடிதானே.
1353 மின்னினன்னநுண்மருங்குல் வேயேய்தடந்தோள் மெல்லியற்கா *
மன்னுசினத்தமழவிடைகள் ஏழ்அன்றடர்த்தமாலதிடம் *
மன்னுமுதுநீரரவிந்த மலர்மேல் வரிவண்டிசைபாட *
புன்னைபொன்னேய்தாதுதிர்க்கும் புள்ளம்பூதங்குடிதானே.
1354 குடையாவிலங்கல் கொண்டேந்திமாரிபழுதாநிரைகாத்து *
சடையானோடஅடல்வாணன் தடந்தோள்துணித்த தலைவனிடம் *
குடியாவண்டுகள்ளுண்ணக் கோலநீலம்மட்டுகுக்கும் *
புடையார்கழனிஎழிலாரும் புள்ளம்பூதங்குடிதானே.
1355 கறையார்நெடுவேல்மறமன்னர்வீய விசயன்தேர்கடவி *
இறையான்கையில்நிறையாத முண்டம்நிறைத்தஎந்தையிடம் *
மறையால்மூத்தீயவைவளர்க்கும் மன்னுபுகழால்வண்மையால் *
பொறையால்மிக்க அந்தணர்வாழ் புள்ளம்பூதங்குடிதானே.
1356 துன்னிமண்ணும்விண்ணாடும்தோன்றாது இருளாய்மூடியநாள் *
அன்னமாகிஅருமறைகள் அருளிச்செய்த அமலனிடம் *
மின்னுசோதிநவமணியும் வேயின்முத்தும்சாமரையும் *
பொன்னும்பொன்னிகொணர்ந்தலைக்கும் புள்ளம்பூதங்குடிதானே.
1357 கற்றாமறித்துகாளியன்தன் சென்னிநடுங்கநடம்பயின்ற *
பொற்றாமரையாள்தன்கேள்வன் புள்ளம்பூதங்குடிதன்மேல் *
கற்றார்பரவும் மங்கையர்கோன் காரார்புயற்கைக்கலிகன்றி *
சொல்தான்ஈரைந்திவைபாடச் சோரநில்லா துயர்தாமே (2)