Your browser does not support the audio element.
audio
2022 மாற்றமுள ஆகிலும்சொல்லுவன் * மக்கள்
தோற்றக்குழி தோற்றுவிப்பாய்கொல்? என்றுஇன்னம் *
ஆற்றங்கரைவாழ்மரம்போல் அஞ்சுகின்றேன் *
நாற்றச்சுவை ஊறுஒலியாகியநம்பீ! (2)
2023 சீற்றமுள ஆகிலும்செப்புவன் * மக்கள்
தோற்றக்குழி தோற்றுவிப்பாய்கொலென்றஞ்சி *
காற்றத்திடைப்பட்ட கலவர்மனம்போல் *
ஆற்றத்துளங்காநிற்பன் ஆழிவலவா!
2024 தூங்கார்பிறவிக்கள் இன்னம்புகப்பெய்து *
வாங்காயென்றுசிந்தித்து நான்அதற்குஅஞ்சி *
பாம்போடுஒருகூரையிலே பயின்றாற்போல் *
தாங்காதுஉள்ளம்தள்ளும் என்தாமரைக்கண்ணா!
2025 உருவார்பிறவிக்கள் இன்னம்புகப்பெய்து *
திரிவாயென்றுசிந்தித்தி என்றதற்கஞ்சி *
இருபாடெரிகொள்ளியினுள் எறும்பேபோல் *
உருகாநிற்கும் என்னுள்ளம்ஊழிமுதல்வா!
2026 கொள்ளக்குறையாத இடும்பைக்குழியில் *
தள்ளிப்புகப்பெய்திகொல்? என்றுஅதற்குஅஞ்சி *
வெள்ளத்திடைப்பட்ட நரியினம்போலே *
உள்ளம்துளங்காநிற்பன் ஊழிமுதல்வா!
2027 படைநின்ற பைந்தாமரையோடு * அணிநீலம்
மடைநின்றலரும் வயலாலிமணாளா! *
இடையனெறிந்தமரமே ஒத்திராமே *
அடையஅருளாய் எனக்குஉன்தனருளே.
2028 வேம்பின்புழு வேம்பின்றியுண்ணாது * அடியேன்
நான்பின்னும் உன்சேவடியன்றிநயவேன் *
தேம்பலிளந்திங்கள் சிறைவிடுத்து * ஐவாய்ப்
பாம்பினணைப் பள்ளிகொண்டாய்பரஞ்சோதீ! (2)
2029 அணியார்பொழில்சூழ் அரங்கநகரப்பா *
துணியேன்இனி நின்னருளல்லதுஎனக்கு *
மணியே! மணிமாணிக்கமே! மதுசூதா! *
பணியாய்எனக்குஉய்யும்வகை * பரஞ்சோதீ! (2)
2030 நந்தாநரகத் தழுந்தாவகை * நாளும்
எந்தாய்! தொண்டரானவர்க்கு இன்னருள்செய்வாய்! *
சந்தோகா! தலைவனே! தாமரைக்கண்ணா! *
அந்தோ! அடியேற்கு அருளாய்உன்னருளே. (2)
2031 குன்றமெடுத்து ஆநிரைகாத்தவன்தன்னை *
மன்றில்புகழ் மங்கைமன்கலிகன்றிசொல் *
ஒன்றுநின்றஒன்பதும் வல்லவர்தம்மேல் *
என்றும்வினையாயின சாரகில்லாவே. (2)