Your browser does not support the audio element.
audio
1942 திருத்தாய்செம்போத்தே! *
திருமாமகள்தன் கணவன் *
மருத்தார்தொல்புகழ் மாதவனைவர *
திருத்தாய்செம்போத்தே! (2)
1943 கரையாய் காக்கைப்பிள்ளாய்! *
கருமாமுகில்போல் நிறத்தன் *
உரையார்தொல்புகழுத்தமனைவர *
கரையாய் காக்கைப்பிள்ளாய்!
1944 கூவாய் பூங்குயிலே! *
குளிர்மாரி தடுத்துகந்த *
மாவாய்கீண்ட மணிவண்ணனைவர *
கூவாய் பூங்குயிலே!
1945 கொட்டாய் பல்லிக்குட்டி! *
குடமாடி உலகளந்த *
மட்டார் பூங்குழல் மாதவனைவர *
கொட்டாய் பல்லிக்குட்டி!
1946 சொல்லாய் பைங்கிளியே! *
சுடராழி வலனுயர்த்த *
மல்லார்தோள் வடவேங்கடவனைவர *
சொல்லாய் பைங்கிளியே! (2)
1947 கோழிகூவென்னுமால் *
தோழி! நான்என்செய்கேன்? *
ஆழிவண்ணர் வரும்பொழுதாயிற்று *
கோழி கூவென்னுமால்.
1948 காமற்கு என்கடவேன்? *
கருமாமுகில்வண்ணற்கல்லால் *
பூமேலைங்கணை கோத்துப்புகுந்தெய்ய *
காமற்கு என்கடவேன்?
1949 இங்கே போதுங்கொலோ? *
இனவேல் நெடுங்கண்களிப்ப *
கொங்கார்சோலைக்குடந்தைக்கிடந்தமால் *
இங்கே போதுங்கொலோ?
1950 இன்னாரென்றறியேன் *
அன்னே! ஆழியொடும் *
பொன்னார்சார்ங்கமுடையஅடிகளை *
இன்னாரென்றறியேன்.
1951 தொண்டீர்! பாடுமினோ *
சுரும்பார்ப்பொழில்மங்கையர்கோன் *
ஒண்தார்வேல்கலியனொலிமாலைகள் *
தொண்டீர்! பாடுமினோ (2)