Chapter 3

Thiruvinnagar 3 - (துறப்பேன் அல்லேன்)

திருவிண்ணகர் 3
Thiruvinnagar 3 - (துறப்பேன் அல்லேன்)
The āzhvār prays to the Lord of Thiruvinnagar, requesting that He grant him the life of serving in Paramapadam (the eternal abode), where he can engage in divine service.
பரமபதத்திற்கு வந்து, திருத்தொண்டு செய்யும் வாழ்வைத் தமக்கு அளிக்குமாறு திருவிண்ணகர்ப் பெருமாளை ஈண்டு ஆழ்வார் வேண்டுகிறார்.
Verses: 1468 to 1477
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Getting freed from all hurdles
  • PT 6.3.1
    1468 ## துறப்பேன் அல்லேன் * இன்பம் துறவாது * நின் உருவம்
    மறப்பேன் அல்லேன் * என்றும் மறவாது ** யான் உலகில்
    பிறப்பேன் ஆக எண்ணேன் * பிறவாமை பெற்றது * நின்
    திறத்தேன் ஆதன்மையால் * திருவிண்ணகரானே 1
  • PT 6.3.2
    1469 துறந்தேன் ஆர்வச் செற்றச் * சுற்றம் துறந்தமையால் *
    சிறந்தேன் நின் அடிக்கே * அடிமை திருமாலே **
    அறம் தான் ஆய்த் திரிவாய் * உன்னை என் மனத்து அகத்தே *
    திறம்பாமல் கொண்டேன் * திருவிண்ணகரானே 2
  • PT 6.3.3
    1470 மான் ஏய் நோக்கு நல்லார் * மதிபோல் முகத்து உலவும் *
    ஊன் ஏய் கண் வாளிக்கு * உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன் **
    கோனே குறுங்குடியுள் குழகா * திருநறையூர்த்
    தேனே * வரு புனல் சூழ் * திருவிண்ணகரானே 3
  • PT 6.3.4
    1471 சாந்து ஏந்து மென் முலையார் * தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
    ஆழ்ந்தேன் * அரு நரகத்து அழுந்தும் * பயன் படைத்தேன் **
    போந்தேன் புண்ணியனே * உன்னை எய்தி என் தீவினைகள்
    தீர்ந்தேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகரானே 4
  • PT 6.3.5
    1472 மற்று ஓர் தெய்வம் எண்ணேன் * உன்னை என் மனத்து வைத்துப்
    பெற்றேன் * பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் **
    வற்றா நீள் கடல் சூழ் * இலங்கை இராவணனைச் *
    செற்றாய் கொற்றவனே * திருவிண்ணகரானே 5
  • PT 6.3.6
    1473 மை ஒண் கருங் கடலும் * நிலனும் மணி வரையும் *
    செய்ய சுடர் இரண்டும் * இவை ஆய நின்னை ** நெஞ்சில்
    உய்யும் வகை உணர்ந்தேன் * உண்மையால் இனி * யாதும் மற்று ஓர்
    தெய்வம் பிறிது அறியேன் * திருவிண்ணகரானே 6
  • PT 6.3.7
    1474 வேறே கூறுவது உண்டு * அடியேன் விரித்து உரைக்கும்
    ஆறே * நீ பணியாது அடை * நின் திருமனத்து **
    கூறேன் நெஞ்சு தன்னால் * குணம் கொண்டு * மற்று ஓர் தெய்வம்
    தேறேன் உன்னை அல்லால் * திருவிண்ணகரானே 7
  • PT 6.3.8
    1475 முளிந்தீந்த வெம் கடத்து * மூரிப் பெருங் களிற்றால் *
    விளிந்தீந்த மா மரம்போல் * வீழ்ந்தாரை நினையாதே **
    அளிந்து ஓர்ந்த சிந்தை * நின்பால் அடியேற்கு * வான் உலகம்
    தெளிந்தே என்று எய்துவது? * திருவிண்ணகரானே 8
  • PT 6.3.9
    1476 சொல்லாய் திரு மார்வா * உனக்கு ஆகித் தொண்டு பட்ட
    நல்லேனை * வினைகள் நலியாமை நம்பு ** நம்பீ
    மல்லா குடம் ஆடீ * மதுசூதனே * உலகில்
    செல்லா நல் இசையாய் * திருவிண்ணகரானே 9
  • PT 6.3.10
    1477 ## தார் ஆர் மலர்க் கமலத் * தடம் சூழ்ந்த தண் புறவில் *
    சீர் ஆர் நெடு மறுகின் * திருவிண்ணகரானை **
    கார் ஆர் புயல் தடக் கைக் * கலியன் ஒலி மாலை *
    ஆர் ஆர் இவை வல்லார் * அவர்க்கு அல்லல் நில்லாவே 10