Chapter 7

Thiruvāli 3 - (கள்வன்கொல் யான்)

திருவாலி 3
Thiruvāli 3 - (கள்வன்கொல் யான்)
The āzhvār, assuming the role of a Nayaki, previously sent messages to the Lord through a bee and a stork. It is said that Vayalali Emperuman came that night and took Parakala Nayaki away. This verse is structured like the lament of a mother who wakes up to find her daughter (Parakala Nayaki), who had slept beside her, missing. The mother is distraught and laments, realizing that the union has already taken place.
ஆழ்வார், நாயகி நிலையை அடைந்து முன்பு வண்டு, குருகு ஆகியவற்றை வயலாகி மணவாளனுக்குத் தூது விட்டார். வயலாளி எம்பெருமான் அன்றிரவில் வந்து பரகாலநாயகியை அழைத்துச் சென்றுவிட்டதாக ஈண்டுக் கூறப்படுகிறது. தன்னோடு படுத்துறங்கிய தன் பெண்ணை (பரகாலநாயகியை)க் காணாமல் தாய் திகைத்துப் புலம்புவதுபோல் இப்பாசுரம் அமைந்துள்ளது. உடன்போக்கு நிகழ்ந்துவிட்டதே என்று தாய் இரங்குகிறாள்.
Verses: 1208 to 1217
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will go to Vaikuṇṭam and be with the Gods
  • PT 3.7.1
    1208 ## கள்வன்கொல்? யான் அறியேன் * கரியான் ஒரு காளை வந்து *
    வள்ளி மருங்குல் * என் தன் மட மானினைப் போத என்று **
    வெள்ளி வளைக் கை * பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று *
    அள்ளல் அம் பூங் கழனி * அணி ஆலி புகுவர்கொலோ? 1
  • PT 3.7.2
    1209 பண்டு இவன் ஆயன் நங்காய் * படிறன் புகுந்து * என் மகள் தன்
    தொண்டை அம் செங் கனி வாய் * நுகர்ந்தானை உகந்து ** அவன்பின்
    கெண்டை ஒண் கண் மிளிரக் * கிளிபோல் மிழற்றி நடந்து *
    வண்டு அமர் கானல் மல்கும் * வயல் ஆலி புகுவர்கொலோ? 2
  • PT 3.7.3
    1210 அஞ்சுவன் வெம் சொல் நங்காய் * அரக்கர் குலப் பாவை தன்னை *
    வெம் சின மூக்கு அரிந்த * விறலோன் திறம் கேட்கில் மெய்யே **
    பஞ்சிய மெல் அடி * எம் பணைத் தோளி பரக்கழிந்து *
    வஞ்சி அம் தண் பணை சூழ் * வயல் ஆலி புகுவர்கொலோ? 3
  • PT 3.7.4
    1211 ஏது அவன் தொல் பிறப்பு? * இளையவன் வளை ஊதி * மன்னர்
    தூதுவன் ஆயவன் ஊர் * சொல்வீர்கள் சொலீர் அறியேன் **
    மாதவன் தன் துணையா நடந்தாள் * தடம் சூழ் புறவில் *
    போது வண்டு ஆடு செம்மல் * புனல் ஆலி புகுவர்கொலோ? 4
  • PT 3.7.5
    1212 தாய் எனை என்று இரங்காள் * தடந் தோளி தனக்கு அமைந்த *
    மாயனை மாதவனை * மதித்து என்னை அகன்ற இவள் **
    வேய் அன தோள் விசிறிப் * பெடை அன்னம் என நடந்து *
    போயின பூங் கொடியாள் * புனல் ஆலி புகுவர்கொலோ? 5
  • PT 3.7.6
    1213 என் துணை என்று எடுத்தேற்கு * இறையேனும் இரங்கிற்றிலள் *
    தன் துணை ஆய என் தன் * தனிமைக்கும் இரங்கிற்றிலள் **
    வன் துணை வானவர்க்கு ஆய் * வரம் செற்று அரங்கத்து உறையும் *
    இன் துணைவனொடும் போய் * எழில் ஆலி புகுவர்கொலோ? 6
  • PT 3.7.7
    1214 அன்னையும் அத்தனும் என்று * அடியோமுக்கு இரங்கிற்றிலள் *
    பின்னை தன் காதலன் தன் * பெருந் தோள் நலம் பேணினளால் **
    மின்னையும் வஞ்சியையும் * வென்று இலங்கும் இடையாள் நடந்து *
    புன்னையும் அன்னமும் சூழ் * புனல் ஆலி புகுவர்கொலோ? 7
  • PT 3.7.8
    1215 முற்றிலும் பைங் கிளியும் * பந்தும் ஊசலும் பேசுகின்ற *
    சிற்றில் மென் பூவையும் * விட்டு அகன்ற செழுங் கோதை தன்னைப் **
    பெற்றிலேன் முற்று இழையை * பிறப்பிலி பின்னே நடந்து *
    மற்று எல்லாம் கைதொழப் போய் * வயல் ஆலி புகுவர்கொலோ? 8
  • PT 3.7.9
    1216 காவி அம் கண்ணி எண்ணில் * கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் *
    பாவியேன் பெற்றமையால் * பணைத் தோளி பரக்கழிந்து **
    தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் * நெடுமாலொடும் போய் *
    வாவி அம் தண் பணை சூழ் * வயல் ஆலி புகுவர்கொலோ? 9
  • PT 3.7.10
    1217 ## தாய் மனம் நின்று இரங்கத் * தனியே நெடுமால் துணையா *
    போயின பூங் கொடியாள் * புனல் ஆலி புகுவர் என்று **
    காய் சின வேல் கலியன் * ஒலிசெய் தமிழ் மாலை பத்தும் *
    மேவிய நெஞ்சு உடையார் * தஞ்சம் ஆவது விண் உலகே 10