Chapter 9

Dasharatha suffers when Rama goes to forest - (வன் தாளின்)

தசரதன் புலம்பல்
Dasharatha suffers when Rama goes to forest - (வன் தாளின்)
Rama went into exile in the forest. Dasaratha, separated from Rama, grieved deeply and lamented. The āzhvār captures and sings of Dasaratha's lamentation in his verses.
இராமன் வனவாசம் செய்யச் சென்றான். தசரதன் இராமனைப் பிரிந்து வருந்தினான்; மனமிரங்கிப் புலம்பினான். அவன் புலம்பியவாற்றை ஆழ்வார் ஈண்டுப்பாடுகிறார்.
Verses: 730 to 740
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will avoid bad paths in life
  • PMT 9.1
    730 ## வன் தாளின் இணை வணங்கி வளநகரம் தொழுது ஏத்த * மன்னன் ஆவான்
    நின்றாயை * அரியணை மேல் இருந்தாயை * நெடுங் கானம் படரப் போகு
    என்றாள் ** எம் இராமாவோ * உனைப் பயந்த கைகேசி தன் சொல் கேட்டு *
    நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் * நன்மகனே உன்னை நானே (1)
  • PMT 9.2
    731 வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு * இரு நிலத்தை வேண்டாதே, விரைந்து * வென்றி
    மைவாய களிறொழிந்து தேரொழிந்து * மாவொழிந்து வனமே மேவி **
    நெய்வாய வேல் நெடுங்கண் * நேரிழையும் இளங்கோவும் பின்பு போக *
    எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ * எம்பெருமான் என் செய்கேனே (2)
  • PMT 9.3
    732 கொல் அணை வேல் வரி நெடுங் கண் * கௌசலை தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் *
    மல் அணைந்த வரைத் தோளா * வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் **
    மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் * வியன் கான மரத்தின் நீழல் *
    கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ? * காகுத்தா கரிய கோவே (3)
  • PMT 9.4
    733 வா போகு வா இன்னம் வந்து * ஒரு கால் கண்டு போ மலராள் கூந்தல் *
    வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா * விடையோன் தன் வில்லைச் செற்றாய் **
    மா போகு நெடுங் கானம் * வல்வினையேன் மனம் உருக்கும் மகனே * இன்று
    நீ போக என் நெஞ்சம் * இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே (4)
  • PMT 9.5
    734 பொருந்தார் கை வேல் நுதிபோல் பரல் பாய * மெல்லடிக்கள் குருதி சோர *
    விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப * வெம் பசிநோய் கூர ** இன்று
    பெரும் பாவியேன் மகனே போகின்றாய் * கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற *
    அரும் பாவி சொல் கேட்ட * அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே (5)
  • PMT 9.6
    735 அம்மா என்று உகந்து அழைக்கும் * ஆர்வச்சொல் கேளாதே அணி சேர் மார்வம் *
    என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே * முழுசாதே மோவாது உச்சி **
    கைம்மாவின் நடை அன்ன மென்னடையும் * கமலம் போல் முகமும் காணாது *
    எம்மானை என் மகனை இழந்திட்ட * இழி தகையேன் இருக்கின்றேனே (6)
  • PMT 9.7
    736 பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து * பூந் துகில் சேர் அல்குல் *
    காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது * அங்கங்கள் அழகு மாறி **
    ஏமரு தோள் என் புதல்வன் * யான் இன்று செலத்தக்க வனம் தான் சேர்தல் *
    தூ மறையீர் இது தகவோ? * சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே (7)
  • PMT 9.8
    737 பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் * தம்பியையும் பூவை போலும் *
    மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என் * மருகியையும் வனத்தில் போக்கி **
    நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு * என்னையும் நீள் வானில் போக்க *
    என் பெற்றாய்? கைகேசீ * இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே (8)
  • PMT 9.9
    738 முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி * அவன் தவத்தை முற்றும் செற்றாய் *
    உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் * ஒன்றாகக் கொள்ளாது **
    என்னையும் என் மெய் உரையும் மெய்யாகக் கொண்டு * வனம் புக்க எந்தாய் *
    நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் * ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! (9)
  • PMT 9.10
    739 தேன் நகு மா மலர்க் கூந்தல் * கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ *
    கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொல் கேட்ட * கொடியவள்தன் சொற்கொண்டு ** இன்று
    கானகமே மிக விரும்பி * நீ துறந்த வள நகரைத் துறந்து * நானும்
    வானகமே மிக விரும்பிப் போகின்றேன் * மனு குலத்தார் தங்கள் கோவே (10)
  • PMT 9.11
    740 ## ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் * வனம் புக்க அதனுக்கு ஆற்றா *
    தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய * அப்புலம்பல் தன்னை **
    கூர் ஆர்ந்த வேல் வலவன் * கோழியர் கோன் குடைக் குல சேகரன் சொல் செய்த *
    சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் * தீ நெறிக்கண் செல்லார் தாமே (11)