Chapter 5
Lifting Govardhana mountain - (அட்டுக் குவி)
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை
One day in the divine Ayarpadi, there was a festival for Indra! Krishna took all the food prepared for him and placed it before Govardhana Hill. He himself became the hill and accepted the offerings. Indra, angered, summoned dark clouds and caused a heavy downpour for seven days. Krishna's love for the cowherds and cattle was immense! He held up Govardhana Hill like an umbrella to protect the cattle. The āzhvār delights in narrating this divine act.
ஒரு நாள் திரு ஆய்பாடியில் இந்திர பூஜை! அவனுக்காகச் செய்து வைத்த உணவுகளை எல்லாம் கோவர்த்தனமலைக்கு இடச்செய்தான் கண்ணன். தானே அம்மலையாக இருந்து அமுது செய்தான். இந்திரனுக்கு கோபம். கருமுகில்களை அழைத்து ஏழு நாள் பெரு மழை பெய்வித்தான். கண்ணனுக்கு ஆயர்கள் மீதும், ஆனிரைகள்மீதும் எவ்வளவு அன்பு! கோவர்த்தனமலையையே குடையாகப் பிடித்து ஆநிரைக் காத்தான். அவ்வரலாற்றை ஆழ்வார் கூறி மகிழ்கிறார்.
Verses: 264 to 274
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
- PAT 3.5.1
264 ## அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் * தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்
பொட்டத் துற்றி * மாரிப் பகை புணர்த்த * பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை **
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை * வலைவாய்ப் பற்றிக் கொண்டு * குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (1) - PAT 3.5.2
265 வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன் * வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட *
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப * மதுசூதன் எடுத்து மறித்த மலை **
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி * இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும் *
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (2) - PAT 3.5.3
266 அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும் * ஆனாயரும் ஆநிரையும் அலறி *
எம்மைச் சரண் என்றுகொள் என்று இரப்ப * இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை **
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் * புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று *
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (3) - PAT 3.5.4
267 கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக் * கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல் *
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு * அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை **
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் * கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி * எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (4) - PAT 3.5.5
268 வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் * அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல் *
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை * இடவன் எழ வாங்கி எடுத்த மலை **
கானக் களி யானை தன் கொம்பு இழந்து * கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்து *
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (5) - PAT 3.5.6
269 செப்பாடு உடைய திருமால் அவன் தன் * செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும் *
கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள் * காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை **
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி * இலங்கு மணி முத்துவடம் பிறழ *
குப்பாயம் என நின்று காட்சிதரும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (6) - PAT 3.5.7
270 படங்கள் பலவும் உடைப் பாம்பு அரையன் * படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் *
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் * தாமோதரன் தாங்கு தடவரைதான் **
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த * அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை *
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (7) - PAT 3.5.8
271 சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச் * சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு *
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் * நாராயணன் முன் முகம் காத்த மலை **
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர் * இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய *
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (8) - PAT 3.5.9
272 வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன் * வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை *
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னில் * தாமோதரன் தாங்கு தடவரை தான் **
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் * முதுகில் பெய்து தம் உடைக் குட்டன்களை *
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (9) - PAT 3.5.10
273 கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள் * கோலமும் அழிந்தில வாடிற்று இல *
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல * மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் **
முடி ஏறிய மா முகில் பல் கணங்கள் * முன் நெற்றி நரைத்தன போல * எங்கும்
குடி ஏறி இருந்து மழை பொழியும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (10) - PAT 3.5.11
274 ## அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு * அரவப் பகை ஊர்தி அவனுடைய *
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் * கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல் **
திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் * பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் *
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார் * பரமான வைகுந்தம் நண்ணுவரே (11)