Your browser does not support the audio element.
audio
108 வட்டுநடுவே வளர்கின்ற * மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல் *
சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க * என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2)
109 கிங்கிணிகட்டிக் கிறிகட்டி * கையினில்
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி *
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து *
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
110 கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம் *
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான் *
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய *
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்.
111 நாந்தகமேந்திய நம்பிசரணென்று *
தாழ்ந்த தனஞ்சயற்காகி * தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர் *
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
112 வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி *
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ் *
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப * பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான் வாமனன்என்னைப்புறம்புல்குவான்.
113 சத்திரமேந்தித் தனியொருமாணியாய் *
உத்தரவேதியில் நின்றஒருவனை *
கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட *
பத்திராகாரன்புறம்புல்குவான் பாரளந்தான்என்புறம்புல்குவான்.
114 பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி *
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும் *
மெத்தத்திருவயிறார விழுங்கிய *
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆழியான்என்னைப்புறம்புல்குவான்.
115 மூத்தவைகாண முதுமணற்குன்றேறி *
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி *
வாய்த்தமறையோர் வணங்க * இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
116 கற்பகக்காவு கருதியகாதலிக்கு *
இப்பொழுதுஈவநென்று இந்திரன்காவினில் *
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள் *
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
117 ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய *
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து *
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர் *
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2)