Your browser does not support the audio element.
audio
75 மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல் *
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி *
பேணிப்பவளவாய் முத்திலங்க * பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி கருங்குழல் குட்டனே! சப்பாணி. (2)
76 பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி *
தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட *
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம் *
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி மாயவனே! கொட்டாய்சப்பாணி.
77 பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன *
என்மணிவண்ணன். இலங்குபொற்றோட்டின்மேல் *
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன் *
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி ஆழியங்கையனே! சப்பாணி.
78 தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட *
வானிலாஅம்புலீ! சந்திரா! வாவென்று *
நீநிலாநின்புகழா நின்றஆயர்தம் *
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி குடந்தைக்கிடந்தானே! சப்பாணி.
79 புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து *
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே *
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண் *
பட்டிக்கன்றே! கொட்டாய்சப்பாணி பற்பநாபா! கொட்டாய்சப்பாணி.
80 தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது *
போருய்த்துவந்து புகுந்தவர்மண்ணாள *
பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு * அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி தேவகிசிங்கமே! சப்பாணி.
81 பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை *
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத *
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க *
சரந்தொட்டகைகளால்சப்பாணி சார்ங்கவிற்கையனே! சப்பாணி.
82 குரக்கினத்தாலே குரைகடல்தன்னை *
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை *
அரக்கர்அவிய அடுகணையாலே *
நெருக்கியகைகளால்சப்பாணி நேமியங்கையனே! சப்பாணி.
83 அளந்திட்டதூணை அவன்தட்ட * ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் *
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம் *
பிளந்திட்டகைகளால்சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி.
84 அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை *
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி *
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக *
கடைந்திட்டகைகளால்சப்பாணி கார்முகில்வண்ணனே! சப்பாணி.
85 ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை *
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன் *
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும் *
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2)