Chapter 13
The love sickness of a girl - (கண்ணன் என்னும்)
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்
"Mothers! Stop giving me advice and instead, bring Krishna's yellow garment and wave it over me. Bring the sacred Tulasi that He wore and adorn my hair with it. Bring His forest garland and place it on me. Take the soil from the places where He walked and apply it on me. If you follow any of these methods, you can save me," says Andal.
தாய்மார்களே! எனக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு, கண்ணன் அணிந்த பீதாம்பரத்தைக் கொண்டு வந்து என்மீது வீசுங்கள். அவனணிந்த திருத்துழாயைக் கொண்டு வந்து என் கூந்தலில் செருகுங்கள். அவனுடைய வனமாலையைக் கொண்டு வந்து என்மீது போட்டுப் புரட்டுங்கள். அவன் நடந்து சென்ற இடங்களிலுள்ள மண்ணைக் கொண்டு வந்து என்மீது பூசுங்கள். இம்முறைகளுள் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் நீங்கள் என்னைக் காப்பாற்றலாம் என்று ஆண்டாள் கூறுகிறாள்.
Verses: 627 to 636
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not suffer the ocean of sorrow
- NAT 13.1
627 ## கண்ணன் என்னும் கருந்தெய்வம் * காட்சிப் பழகிக் கிடப்பேனை *
புண்ணில் புளிப் பெய்தால் போலப் * புறம் நின்று அழகு பேசாதே **
பெண்ணின் வருத்தம் அறியாத * பெருமான் அரையில் பீதக *
வண்ண ஆடை கொண்டு * என்னை வாட்டம் தணிய வீசீரே (1) - NAT 13.2
628 பால் ஆலிலையில் துயில் கொண்ட * பரமன் வலைப்பட்டு இருந்தேனை *
வேலால் துன்னம் பெய்தால் போல் * வேண்டிற்று எல்லாம் பேசாதே **
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் * குடந்தைக் கிடந்த குடம் ஆடி *
நீலார் தண்ணந் துழாய் கொண்டு * என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே (2) - NAT 13.3
629 கஞ்சைக் காய்ந்த கருவில்லி * கடைக்கண் என்னும் சிறைக்கோலால் *
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு * நிலையும் தளர்ந்து நைவேனை **
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் * அவன் மார்வு அணிந்த வனமாலை *
வஞ்சியாதே தருமாகில் * மார்வில் கொணர்ந்து புரட்டீரே (3) - NAT 13.4
630 ஆரே உலகத்து ஆற்றுவார்? * ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் *
காரேறு உழக்க உழக்குண்டு * தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை **
ஆராவமுதம் அனையான் தன் * அமுத வாயில் ஊறிய *
நீர்தான் கொணர்ந்து புலராமே * பருக்கி இளைப்பை நீக்கீரே (4) - NAT 13.5
631 அழிலும் தொழிலும் உருக் காட்டான் * அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் *
தழுவி முழுசிப் புகுந்து என்னைச் * சுற்றிச் சுழன்று போகானால் **
தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே * நெடுமால் ஊதி வருகின்ற *
குழலின் தொளைவாய் நீர் கொண்டு * குளிர முகத்துத் தடவீரே (5) - NAT 13.6
632 நடை ஒன்று இல்லா உலகத்து * நந்தகோபன் மகன் என்னும் *
கொடிய கடிய திருமாலால் * குளப்புக்கூறு கொளப்பட்டு **
புடையும் பெயரகில்லேன் நான் * போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில் *
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் * போகா உயிர் என் உடம்பையே (6) - NAT 13.7
633 வெற்றிக் கருளக் கொடியான்தன் * மீமீது ஆடா உலகத்து *
வெற்ற வெறிதே பெற்ற தாய் * வேம்பே ஆக வளர்த்தாளே **
குற்றம் அற்ற முலைதன்னைக் * குமரன் கோலப் பணைத்தோளோடு *
அற்ற குற்றம் அவை தீர * அணைய அமுக்கிக் கட்டீரே (7) - NAT 13.8
634 உள்ளே உருகி நைவேனை * உளளோ இலளோ என்னாத *
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் * கோவர்த்தனனைக் கண்டக்கால் **
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத * கொங்கை தன்னைக் கிழங்கோடும் *
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து * என் அழலைத் தீர்வேனே (8) - NAT 13.9
635 கொம்மை முலைகள் இடர் தீரக் * கோவிந்தற்கு ஓர் குற்றேவல் *
இம்மைப் பிறவி செய்யாதே * இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்? **
செம்மை உடைய திருமார்வில் * சேர்த்தானேனும் ஒரு ஞான்று *
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி * விடைதான் தருமேல் மிக நன்றே (9) - NAT 13.10
636 ## அல்லல் விளைத்த பெருமானை * ஆயர்பாடிக்கு அணி விளக்கை *
வில்லி புதுவை நகர் நம்பி * விட்டுசித்தன் வியன் கோதை **
வில்லைத் தொலைத்த புருவத்தாள் * வேட்கை உற்று மிக விரும்பும் *
சொல்லைத் துதிக்க வல்லார்கள் * துன்பக் கடலுள் துவளாரே (10)