Chapter 9

Thiruchirupuliyur - (கள்ளம் மனம்)

திருச்சிறுபுலியூர்
Thiruchirupuliyur - (கள்ளம் மனம்)
The presiding deity of Thiruchirupuliyur is Arulmakadal, and the Thayar is Thirumamagal Nachiyar. The āzhvār advises us to worship Lord Arulmakadal for our salvation.
திருச்சிறுபுலியூர்ப் பெருமானின் திருப்பெயர் அருள்மாகடல் தாயார் திருமாமகள் நாச்சியார். அருள்மாகடல் நாயகனைத் தொழுது உய்யுமாறு நமக்கு ஆழ்வார் ஈண்டு அறிவுரை கூறியுள்ளனர்.
Verses: 1628 to 1637
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will not get affected by the results of karma
  • PT 7.9.1
    1628 ## கள்ளம் மனம் விள்ளும் வகை * கருதிக் கழல் தொழுவீர் *
    வெள்ளம் முது பரவைத் * திரை விரிய ** கரை எங்கும்
    தெள்ளும் மணி திகழும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
    உள்ளும் * எனது உள்ளத்துள்ளும் * உறைவாரை உள்ளீரே 1
  • PT 7.9.2
    1629 தெருவில் திரி சிறு நோன்பியர் * செஞ் சோற்றொடு கஞ்சி
    மருவி * பிரிந்தவர் வாய்மொழி * மதியாது வந்து அடைவீர் **
    திருவில் பொலி மறையோர் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
    உருவக் குறள் அடிகள் அடி * உணர்மின் உணர்வீரே 2
  • PT 7.9.3
    1630 பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர் * பணியும் சிறு தொண்டீர் *
    அறையும் புனல் ஒருபால் வயல் * ஒருபால் பொழில் ஒருபால் **
    சிறை வண்டு இனம் அறையும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
    உறையும் * இறை அடி அல்லது * ஒன்று இறையும் அறியேனே 3
  • PT 7.9.4
    1631 வான் ஆர் மதி பொதியும் சடை * மழுவாளியொடு ஒருபால் *
    தான் ஆகிய தலைவன் அவன் * அமரர்க்கு அதிபதி ஆம் **
    தேன் ஆர் பொழில் தழுவும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
    ஆன் ஆயனது * அடி அல்லது * ஒன்று அறியேன் அடியேனே 4
  • PT 7.9.5
    1632 நந்தா நெடு நரகத்திடை * நணுகா வகை * நாளும்
    எந்தாய் என * இமையோர் தொழுது ஏத்தும் இடம் ** எறி நீர்ச்
    செந்தாமரை மலரும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
    அம் தாமரை அடியாய் * உனது அடியேற்கு அருள்புரியே 5
  • PT 7.9.6
    1633 முழு நீலமும் மலர் ஆம்பலும் * அரவிந்தமும் விரவி *
    கழுநீரொடு மடவார் அவர் * கண் வாய் முகம் மலரும் **
    செழு நீர் வயல் தழுவும் * சிறுபுலியூர்ச் சலசயனம் *
    தொழு நீர்மை அது உடையார் * அடி தொழுவார் துயர் இலரே 6
  • PT 7.9.7
    1634 ## சேய் ஓங்கு * தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
    மாயா * எனக்கு உரையாய் இது * மறை நான்கின் உளாயோ? **
    தீ ஓம்புகை மறையோர் * சிறுபுலியூர்ச் சலசயனத்
    தாயோ? * உனது அடியார் மனத்தாயோ? * அறியேனே 7
  • PT 7.9.8
    1635 மை ஆர் வரி நீலம் * மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு *
    உய்வான் உன கழலே * தொழுது எழுவேன் ** கிளி மடவார்
    செவ்வாய் மொழி பயிலும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
    ஐ வாய் அரவு அணைமேல் * உறை அமலா அருளாயே 8
  • PT 7.9.9
    1636 ## கரு மா முகில் உருவா * கனல் உருவா புனல் உருவா *
    பெரு மால் வரை உருவா * பிற உருவா நினது உருவா **
    திரு மா மகள் மருவும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
    அரு மா கடல் அமுதே * உனது அடியே சரண் ஆமே 9
  • PT 7.9.10
    1637 ## சீர் ஆர் நெடு மறுகில் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
    ஏர் ஆர் முகில் வண்ணன் தனை * இமையோர் பெருமானை **
    கார் ஆர் வயல் மங்கைக்கு இறை * கலியன் ஒலி மாலை *
    பாரார் இவை பரவித் தொழப் * பாவம் பயிலாவே 10