Chapter 3

Praising Thirumālirunjolai - (உருப்பிணி நங்கைதன்னை)

திருமாலிருஞ்சோலை-2
Praising Thirumālirunjolai - (உருப்பிணி நங்கைதன்னை)
On Thirumaliruncholai Malai resides the lord, Azhagar. He is both Rama and Krishna. The mountain where the beautiful one resides is filled with beauty, coolness, and prosperity. It is the mountain where the Kurathi women sing the Kurinji songs, pleasing Govinda. The mountain is ruled by the lord who reclines on the thousand-hooded Adisesha. It is the mountain where Azhagar, the essence of Vedanta, eternally resides.
திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் அழகர். இவனே இராமன்; இவனே கண்ணன். அழகன் அமரும் மலை! அழகும் குளிர்ச்சியும் வெற்றியுமுடைய மலை. குறத்தியர் குறிஞ்சிப் பண்பாடிக் கோவிந்தனை மகிழ்விக்கும் மலை! அணி பணமாயிரங்களார்ந்த திருவனந்தன்மேல் படுத்திருக்கும் பெருமாள் ஆளும் மலை. வேதாந்த விழுப்பொருளாகிற அழகர் நிலைத்து வாழும் மலை.
Verses: 349 to 359
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Learn the greatness of the Lord
  • PAT 4.3.1
    349 ## உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் * தொடர்ந்து ஓடிச் சென்ற *
    உருப்பனை ஓட்டிக் கொண்டிட்டு * உறைத்திட்ட உறைப்பன் மலை **
    பொருப்பிடைக் கொன்றை நின்று * முறி ஆழியும் காசும் கொண்டு *
    விருப்பொடு பொன் வழங்கும் * வியன் மாலிருஞ் சோலையதே (1)
  • PAT 4.3.2
    350 கஞ்சனும் காளியனும் * களிறும் மருதும் எருதும் *
    வஞ்சனையில் மடிய * வளர்ந்த மணிவண்ணன் மலை **
    நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி * நளிர் மா மதியைச் *
    செஞ்சுடர் நா வளைக்கும் * திருமாலிருஞ் சோலையதே (2)
  • PAT 4.3.3
    351 மன்னு நரகன்தன்னைச் * சூழ் போகி வளைத்து எறிந்து *
    கன்னி மகளிர்தம்மைக் * கவர்ந்த கடல்வண்ணன் மலை **
    புன்னை செருந்தியொடு * புன வேங்கையும் கோங்கும் நின்று *
    பொன்அரி மாலைகள் சூழ் * பொழில் மாலிருஞ் சோலையதே (3)
  • PAT 4.3.4
    352 மாவலி தன்னுடைய * மகன் வாணன் மகள் இருந்த *
    காவலைக் கட்டழித்த * தனிக் காளை கருதும் மலை **
    கோவலர் கோவிந்தனைக் * குற மாதர்கள் பண் குறிஞ்சிப் *
    பா ஒலி பாடி நடம் பயில் * மாலிருஞ் சோலையதே (4)
  • PAT 4.3.5
    353 பல பல நாழம் சொல்லிப் * பழித்த சிசுபாலன் தன்னை *
    அலைவலைமை தவிர்த்த * அழகன் அலங்காரன் மலை **
    குல மலை கோல மலை * குளிர் மா மலை கொற்ற மலை *
    நில மலை நீண்ட மலை * திருமாலிருஞ் சோலையதே (5)
  • PAT 4.3.6
    354 பாண்டவர் தம்முடைய * பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் *
    ஆண்டு அங்கு நூற்றுவர்தம் * பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை **
    பாண் தகு வண்டினங்கள் * பண்கள் பாடி மதுப் பருக *
    தோண்டல் உடைய மலை * தொல்லை மாலிருஞ் சோலையதே (6)
  • PAT 4.3.7
    355 கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து * அரக்கர் தங்கள்
    இனம் கழு ஏற்றுவித்த * ஏழில் தோள் எம் இராமன் மலை **
    கனம் கொழி தெள் அருவி * வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் *
    இனம் குழு ஆடும் மலை * எழில் மாலிருஞ் சோலையதே (7)
  • PAT 4.3.8
    356 எரி சிதறும் சரத்தால் * இலங்கையினைத் * தன்னுடைய
    வரி சிலை வாயில் பெய்து * வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த **
    அரையன் அமரும் மலை * அமரரோடு கோனும் சென்று *
    திரிசுடர் சூழும் மலை * திரு மாலிருஞ் சோலையதே (8)
  • PAT 4.3.9
    357 கோட்டுமண் கொண்டு * இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து *
    மீட்டும் அது உண்டு உமிழ்ந்து * விளையாடும் விமலன் மலை **
    ஈட்டிய பல் பொருள்கள் * எம்பிரானுக்கு அடியுறை என்று *
    ஓட்டரும் தண் சிலம்பாறு உடை * மாலிருஞ் சோலையதே (9)
  • PAT 4.3.10
    358 ## ஆயிரம் தோள் பரப்பி * முடி ஆயிரம் மின் இலக *
    ஆயிரம் பைந்தலைய * அனந்த சயனன் ஆளும் மலை **
    ஆயிரம் ஆறுகளும் * சுனைகள் பல ஆயிரமும் *
    ஆயிரம் பூம் பொழிலும் உடை * மாலிருஞ் சோலையதே (10)
  • PAT 4.3.11
    359 ## மாலிருஞ்சோலை என்னும் * மலையை உடைய மலையை *
    நாலிரு மூர்த்திதன்னை * நால் வேதக் கடல் அமுதை **
    மேல் இருங் கற்பகத்தை * வேதாந்த விழுப் பொருளின் *
    மேல் இருந்த விளக்கை * விட்டுசித்தன் விரித்தனனே (11)