Chapter 10

Hanuman sees Mother Sita - (நெறிந்த கருங்குழல்)

அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்
Hanuman sees Mother Sita - (நெறிந்த கருங்குழல்)
As Rama's messenger, Hanuman went to Lanka and found Sita Devi in Ashoka Vatika. He conveyed his identity as Rama's messenger by recounting several tokens and then delighted her by giving her the ring sent by Rama. The āzhvār rejoices in narrating these noble deeds. Reciting this hymn is a mark of one's devotion to Rama.
இராம தூதனாக இலங்கைக்குச் சென்ற (அநுமன்) திருவடி அசோகவனத்தில் சீதா பிராட்டியைக் காண்கிறார். பல அடையாளங்களைச் சொல்லித் தான் இராமதூதன் என்பதை உணர வைக்கிறார். இராமன் கொடுத்தனுப்பிய மோதிரத்தைக் கொடுத்து மகிழ்விக்கிறார். இவ்வரிய செயல்களைக் கூறி மகிழ்கிறார் ஆழ்வார். ஒருவன் இராமபக்தன் என்பதற்கு இத்திருமொழியைக் கூறுவதும் ஓரடையாளம்.
Verses: 318 to 327
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
  • PAT 3.10.1
    318 ## நெறிந்த கருங்குழல் மடவாய் * நின் அடியேன் விண்ணப்பம் *
    செறிந்த மணி முடிச் சனகன் * சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது
    அறிந்து ** அரசு களைகட்ட * அருந்தவத்தோன் இடை விலங்க *
    செறிந்த சிலைகொடு தவத்தைச் * சிதைத்ததும் ஓர் அடையாளம் (1)
  • PAT 3.10.2
    319 அல்லியம்பூ மலர்க்கோதாய் * அடிபணிந்தேன் விண்ணப்பம் *
    சொல்லுகேன் கேட்டருளாய் * துணைமலர்க் கண் மடமானே ! **
    எல்லியம் போது இனிதிருத்தல் * இருந்தது ஓர் இட வகையில் *
    மல்லிகை மா மாலைகொண்டு * அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் (2)
  • PAT 3.10.3
    320 கலக்கிய மா மனத்தனளாய்க் * கைகேசி வரம் வேண்ட *
    மலக்கிய மா மனத்தனனாய் * மன்னவனும் மறாது ஒழிய **
    குலக்குமரா காடு உறையப் போ என்று * விடை கொடுப்ப *
    இலக்குமணன் தன்னொடும் * அங்கு ஏகியது ஓர் அடையாளம் (3)
  • PAT 3.10.4
    321 வார் அணிந்த முலை மடவாய் * வைதேவீ விண்ணப்பம் *
    தேர் அணிந்த அயோத்தியர்கோன் * பெருந்தேவீ ! கேட்டருளாய் **
    கூர் அணிந்த வேல் வலவன் * குகனோடும் கங்கைதன்னில் *
    சீர் அணிந்த தோழமை * கொண்டதும் ஓர் அடையாளம் (4)
  • PAT 3.10.5
    322 மான் அமரும் மென்நோக்கி * வைதேவீ ! விண்ணப்பம் *
    கான் அமரும் கல் அதர் போய்க் * காடு உறைந்த காலத்து **
    தேன் அமரும் பொழில் சாரல் * சித்திரகூடத்து இருப்ப *
    பால்மொழியாய் பரதநம்பி * பணிந்ததும் ஓர் அடையாளம் (5)
  • PAT 3.10.6
    323 சித்திரகூடத்து இருப்பச் * சிறுகாக்கை முலை தீண்ட *
    அத்திரமே கொண்டு எறிய * அனைத்து உலகும் திரிந்து ஓடி **
    வித்தகனே இராமாவோ * நின் அபயம் என்று அழைப்ப *
    அத்திரமே அதன்கண்ணை * அறுத்ததும் ஓர் அடையாளம் (6)
  • PAT 3.10.7
    324 மின் ஒத்த நுண் இடையாய் * மெய் அடியேன் விண்ணப்பம் *
    பொன் ஒத்த மான் ஒன்று * புகுந்து இனிது விளையாட **
    நின் அன்பின் வழிநின்று * சிலை பிடித்து எம்பிரான் ஏக *
    பின்னே அங்கு இலக்குமணன் * பிரிந்ததும் ஓர் அடையாளம் (7)
  • PAT 3.10.8
    325 மைத் தகு மா மலர்க்குழலாய் * வைதேவீ விண்ணப்பம் *
    ஒத்த புகழ் வானரக்கோன் * உடன் இருந்து நினைத் தேட **
    அத்தகு சீர் அயோத்தியர்கோன் * அடையாளம் இவை மொழிந்தான் *
    இத் தகையால் அடையாளம் * ஈது அவன் கை மோதிரமே (8)
  • PAT 3.10.9
    326 ## திக்கு நிறை புகழாளன் * தீ வேள்விச் சென்ற நாள் *
    மிக்க பெரும் சபை நடுவே * வில் இறுத்தான் மோதிரம் கண்டு **
    ஒக்குமால் அடையாளம் * அனுமான் என்று * உச்சிமேல்
    வைத்துக்கொண்டு உகந்தனளால் * மலர்க்குழலாள் சீதையுமே (9)
  • PAT 3.10.10
    327 ## வார் ஆரும் முலை மடவாள் * வைதேவி தனைக் கண்டு *
    சீர் ஆரும் திறல் அனுமன் * தெரிந்து உரைத்த அடையாளம் **
    பார் ஆரும் புகழ்ப் புதுவைப் * பட்டர்பிரான் பாடல் வல்லார் *
    ஏர் ஆரும் வைகுந்தத்து * இமையவரோடு இருப்பாரே (10)