Chapter 4

Yashoda calls Kannan to come and take a bath - (வெண்ணெய் அளைந்த)

நீராட்டம்
Yashoda calls Kannan to come and take a bath - (வெண்ணெய் அளைந்த)
Yashoda thought of giving a bath to the beautiful Krishna. She collected water for the holy bath (neerattam). She added fragrant substances like cloves and cardamom to it. But Krishna did not come. He ran away. Just like showing grass to lure a cow, the mother spoke sweet words. She ran behind him. He also ran. With love, she called out, "Narayana, don't run, come here."
அழகன் கண்ணனை நீராட்ட எண்ணினாள் யசோதை. திருமஞ்சனத்திற்காக (நீராட்ட) தண்ணீர் கொண்டு சேர்த்தாள். இலவங்கம், ஏலக்காய் முதலிய வாசனைப் பொருள்களை அதில் சேர்த்தாள். ஆனால் கண்ணன் வரவில்லை. ஓடுகிறான். புல்லைக் காட்டிப் பசுவை இழுப்பதுபோல், தாய் நல்ல வார்த்தைகளைக் கூறுகிறாள். பின்னால் ஓடுகிறாள். அவனும் ஓடுகிறான். "நாரணா ஓடாதே வாராய்" என்று அன்போடு அழைக்கிறாள்.
Verses: 152 to 161
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Getting rid of all your bad karma
  • PAT 2.4.1
    152 ## வெண்ணெய் அளைந்த குணுங்கும் * விளையாடு புழுதியும் கொண்டு *
    திண்ணென இவ் இரா உன்னைத் * தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் **
    எண்ணெய் புளிப்பழம் கொண்டு * இங்கு எத்தனை போதும் இருந்தேன் *
    நண்ணல் அரிய பிரானே * நாரணா நீராட வாராய் (1)
  • PAT 2.4.2
    153 கன்றுகள் ஓடச் செவியில் * கட்டெறும்பு பிடித்து இட்டால் *
    தென்றிக் கெடும் ஆகில் * வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் **
    நின்ற மராமரம் சாய்த்தாய் * நீ பிறந்த திருவோணம் *
    இன்று நீ நீராட வேண்டும் * எம்பிரான் ஓடாதே வாராய் (2)
  • PAT 2.4.3
    154 பேய்ச்சி முலை உண்ணக் கண்டு * பின்னையும் நில்லாது என்நெஞ்சம் *
    ஆய்ச்சியர் எல்லாரும் கூடி * அழைக்கவும் நான் முலை தந்தேன் **
    காய்ச்சின நீரொடு நெல்லி * கடாரத்தில் பூரித்து வைத்தேன் *
    வாய்த்த புகழ் மணிவண்ணா * மஞ்சனம் ஆட நீ வாராய் (3)
  • PAT 2.4.4
    155 கஞ்சன் புணர்ப்பினில் வந்த * கடிய சகடம் உதைத்து *
    வஞ்சகப் பேய்மகள் துஞ்ச * வாய் முலை வைத்த பிரானே **
    மஞ்சளும் செங்கழுநீரின் * வாசிகையும் நறுஞ்சாந்தும் *
    அஞ்சனமும் கொண்டு வைத்தேன் * அழகனே நீராட வாராய் (4)
  • PAT 2.4.5
    156 அப்பம் கலந்த சிற்றுண்டி * அக்காரம் பாலில் கலந்து *
    சொப்பட நான் சுட்டு வைத்தேன் * தின்னல் உறுதியேல் நம்பி **
    செப்பு இள மென்முலையார்கள் * சிறுபுறம் பேசிச் சிரிப்பர் *
    சொப்பட நீராட வேண்டும் * சோத்தம் பிரான் இங்கே வாராய் (5)
  • PAT 2.4.6
    157 எண்ணெய்க் குடத்தை உருட்டி * இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி *
    கண்ணைப் புரட்டி விழித்துக் * கழகண்டு செய்யும் பிரானே **
    உண்ணக் கனிகள் தருவன் * ஒலிகடல் ஓதநீர் போலே *
    வண்ணம் அழகிய நம்பீ * மஞ்சனம் ஆட நீ வாராய் (6)
  • PAT 2.4.7
    158 கறந்த நற்பாலும் தயிரும் * கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய் *
    பிறந்ததுவே முதலாகப் * பெற்றறியேன் எம்பிரானே **
    சிறந்த நற்றாய் அலர் தூற்றும் * என்பதனால் பிறர் முன்னே *
    மறந்தும் உரையாட மாட்டேன் * மஞ்சனம் ஆட நீ வாராய் (7)
  • PAT 2.4.8
    159 கன்றினை வால் ஓலை கட்டி * கனிகள் உதிர எறிந்து *
    பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் * பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் **
    நின்திறத்தேன் அல்லேன் நம்பீ * நீ பிறந்த திரு நன்னாள் *
    நன்று நீ நீராட வேண்டும் * நாரணா ஓடாதே வாராய் (8)
  • PAT 2.4.9
    160 பூணித் தொழுவினில் புக்குப் * புழுதி அளைந்த பொன் மேனி *
    காணப் பெரிதும் உகப்பன் * ஆகிலும் கண்டார் பழிப்பர் **
    நாண் எத்தனையும் இலாதாய் * நப்பின்னை காணில் சிரிக்கும் *
    மாணிக்கமே என் மணியே * மஞ்சனம் ஆட நீ வாராய் (9)
  • PAT 2.4.10
    161 ## கார் மலி மேனி நிறத்துக் * கண்ணபிரானை உகந்து *
    வார் மலி கொங்கை யசோதை * மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப் **
    பார் மலி தொல் புதுவைக் கோன் * பட்டர்பிரான் சொன்ன பாடல் *
    சீர் மலி செந்தமிழ் வல்லார் * தீவினை யாதும் இலரே (10)