Chapter 2

Thirunāngur Thiruvanpurushothamam - (கம்ப மா)

திருநாங்கூர் வண்புருடோத்தமம்
Thirunāngur Thiruvanpurushothamam - (கம்ப மா)
This shrine is known as Purushothaman Sannidhi. Here, Purushothaman, who bestows the four great benefits, resides. Therefore, this Divya Desam is called Vanpurushothamam. Near the temple, there is a sacred pond called Thirupaarkadal. The utsava deity, Kadaladaitha Perumal, resides here. This is also one of the Thirunangur Divya Desams.
இந்த சன்னதியைப் புருஷோத்தமன் சன்னதி என்று கூறுவர். இங்கே நாற்பெரும் பயன்களையும் வாரிவழங்குகிறவனாய் புருஷோத்தமன் எழுந்தருளியிருக்கிறான். அதனால் இந்தத் திவ்வியதேசம் வண்புருடோத்தமம் ஆயிற்று. கோயிலுக்கு அருகில் திருப்பாற்கடல் என்று தீர்த்தம் அமைந்துள்ளது. கடலடைத்த பெருமாள் உத்ஸவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார். இதுவும் திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் ஒன்று.
Verses: 1258 to 1267
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and be happy with the Gods
  • PT 4.2.1
    1258 ## கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் * கதிர் முடி அவை பத்தும்
    அம்பினால் அறுத்து * அரசு அவன் தம்பிக்கு * அளித்தவன் உறை கோயில் **
    செம் பலா நிரை செண்பகம் மாதவி * சூதகம் வாழைகள் சூழ் *
    வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே 1
  • PT 4.2.2
    1259 பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி * அக் காளியன் பணவு அரங்கில் *
    ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த * உம்பர் கோன் உறை கோயில் **
    நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் * ஐவேள்வியோடு ஆறு அங்கம் *
    வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே 2
  • PT 4.2.3
    1260 அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று * அமைத்த சோறு அது எல்லாம்
    உண்டு * கோ நிரை மேய்த்து அவை காத்தவன் * உகந்து இனிது உறை கோயில் **
    கொண்டல் ஆர் முழவில் குளிர் வார் பொழில் * குல மயில் நடம் ஆட *
    வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் * வண்புருடோத்தமமே 3
  • PT 4.2.4
    1261 பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து * அதன் பாகனைச் சாடிப் புக்கு *
    ஒருங்க மல்லரைக் கொன்று * பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில் **
    கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு * கழனியில் மலி வாவி *
    மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே 4
  • PT 4.2.5
    1262 சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து * ஈசன் தன் படையொடும் கிளையோடும்
    ஓட * வாணனை ஆயிரம் தோள்களும் * துணித்தவன் உறை கோயில் **
    ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப் * பகலவன் ஒளி மறைக்கும் *
    மாட மாளிகை சூழ் தரு நாங்கூர் * வண்புருடோத்தமமே 5
  • PT 4.2.6
    1263 அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று * அயன் அலர் கொடு தொழுது ஏத்த *
    கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய * கண்ணன் வந்து உறை கோயில் **
    கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட * மா பதுமங்கள் *
    மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர் * வண்புருடோத்தமமே 6
  • PT 4.2.7
    1264 உளைய ஒண் திறல் பொன்பெயரோன் * தனது உரம் பிளந்து உதிரத்தை
    அளையும் * வெம் சினத்து அரி பரி கீறிய * அப்பன் வந்து உறை கோயில் **
    இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு * எழில் கொள் பந்து அடிப்போர் * கை
    வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே 7
  • PT 4.2.8
    1265 வாளை ஆர் தடங் கண் உமை பங்கன் * வன் சாபம் மற்று அது நீங்க *
    மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த * எம் முகில் வண்ணன் உறை கோயில் **
    பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் * வண் பழம் விழ வெருவிப் போய் *
    வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் * வண்புருடோத்தமமே 8
  • PT 4.2.9
    1266 இந்து வார் சடை ஈசனைப் பயந்த * நான் முகனை தன் எழில் ஆரும் *
    உந்தி மா மலர் மீமிசைப் படைத்தவன் * உகந்து இனிது உறை கோயில் **
    குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து * தன் குருளையைத் தழுவிப் போய் *
    மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர் * வண்புருடோத்தமமே 9
  • PT 4.2.10
    1267 ## மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் * வண்புருடோத்தமத்துள் *
    அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் * ஆலி மன் அருள் மாரி **
    பண்ணுளார் தரப் பாடிய பாடல் * இப் பத்தும் வல்லார் * உலகில்
    எண் இலாத பேர் இன்பம் உற்று * இமையவரோடும் கூடுவரே 10