Chapter 5

Advising the people to worship God before the time of their death - (ஆசைவாய்ச் சென்ற)

பத்தராய் இறப்பார் பெறும் பேறு
Advising the people to worship God before the time of their death - (ஆசைவாய்ச் சென்ற)

Everyone should recite the divine names of the Lord. Those who chant the Lord's names daily will reap great benefits. Their glory is boundless. "Do not wait for a particular time to recite the Lord's name. Can you call upon Him at the moment of death? Can you utter His divine name then? Say it now. Build a temple in your heart, establish the Lord there, and offer flowers of devotion with eagerness," says the āzhvār.

ஒவ்வொருவரும் பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். நாள்தோறும் பகவத் நாமங்களைச் சொல்லுகிறவர்கள் பெரும் பயனடைவார்கள். அவர்கள் பெருமை அளவு கடந்தது. "பகவந் நாமத்தைச் சொல்ல ஒரு காலத்தை எதிர்பார்க்க வேண்டா. உயிர் போகும் நேரத்தில் அவனை அழைக்கமுடியுமா? அவன் திருநாமத்தைச் சொல்லமுடியுமா? இப்போதே சொல்லுங்கள். இதயமாகிற கோயிலைக் கட்டி, அங்குப் பகவானை நிலைநிறுத்தி ஆர்வமாகிற மலரை இட்டு வணங்குங்கள்" என்கிறார் ஆழ்வார்.

Verses: 371 to 380
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will become devotees, who only think of the Lord
  • PAT 4.5.1
    371 ## ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் ஆகி * அன்னை அத்தன் என் புத்திரர் பூமி *
    வாச வார் குழலாள் என்று மயங்கி * மாளும் எல்லைக்கண் வாய் திறவாதே **
    கேசவா புருடோத்தமா என்றும் * கேழல் ஆகிய கேடிலீ என்றும் *
    பேசுவார் அவர் எய்தும் பெருமை * பேசுவான் புகில் நம் பரம் அன்றே (1)
  • PAT 4.5.2
    372 சீயினால் செறிந்து ஏறிய புண்மேல் * செற்றல் ஏறிக் குழம்பு இருந்து * எங்கும்
    ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி * எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம் **
    வாயினால் நமோ நாரணா என்று * மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி *
    போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் * பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே (2)
  • PAT 4.5.3
    373 சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் * சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து *
    ஆர் வினவிலும் வாய் திறவாதே * அந்த காலம் அடைவதன் முன்னம் **
    மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து * மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி *
    ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு * அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (3)
  • PAT 4.5.4
    374 மேல் எழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து * மேல் மிடற்றினை உள் எழ வாங்கி *
    காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் * கண் உறக்கமது ஆவதன் முன்னம் **
    மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை * மூன்று மாத்திரை உள் எழ வாங்கி *
    வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் * விண்ணகத்தினில் மேவலும் ஆமே (4)
  • PAT 4.5.5
    375 மடி வழி வந்து நீர் புலன்சோர * வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே *
    கடைவழி வாரக் கண்டம் அடைப்பக் * கண் உறக்கமது ஆவதன் முன்னம் **
    தொடை வழி உம்மை நாய்கள் கவரா * சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் *
    இடைவழியில் நீர் கூறையும் இழவீர் * இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே (5)
  • PAT 4.5.6
    376 அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி * ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை *
    சங்கம் விட்டு அவர் கையை மறித்துப் * பையவே தலை சாய்ப்பதன் முன்னம் **
    வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை * மதுசூதனை மார்பில்
    தங்க விட்டுவைத்து * ஆவது ஓர் கருமம் சாதிப்பார்க்கு * என்றும் சாதிக்கலாமே (6)
  • PAT 4.5.7
    377 தென்னவன் தமர் செப்பம் இலாதார் * சே அதக்குவார் போலப் புகுந்து *
    பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றிப் * பின் முன் ஆக இழுப்பதன் முன்னம் **
    இன்னவன் இனையான் என்று சொல்லி * எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி *
    மன்னவன் மதுசூதனன் என்பார் * வானகத்து மன்றாடிகள் தாமே (7)
  • PAT 4.5.8
    378 கூடிக் கூடி உற்றார்கள் இருந்து * குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து *
    பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு * நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே **
    கோடி மூடி எடுப்பதன் முன்னம் * கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு *
    கூடி ஆடிய உள்ளத்தர் ஆனால் * குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே (8)
  • PAT 4.5.9
    379 வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப * வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்ற *
    தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் * தாரமும் ஒரு பக்கம் அலற்ற **
    தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் * செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றம்
    ஆய் * ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு * அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (9)
  • PAT 4.5.10
    380 ## செத்துப் போவதோர் போது நினைந்து * செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் *
    பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப் * பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன் **
    சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் * செய்த மாலை இவை பத்தும் வல்லார் *
    சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் * சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே (10)