Chapter 2

Beauty of Kannan from feet to head - (சீதக்கடலுள்)

கண்ணனது திருமேனியழகு
Beauty of Kannan from feet to head - (சீதக்கடலுள்)
Yashoda thinks it is a great blessing to have Kannan as her son! She calls over all the women residing in aayarpaadi (her village) to show and praise Kannan’s beauty. Yashoda’s aim is to share her joyful experience with others in this world so that they would experience the same as well. These divine paasurams describe and praise starting from His divine feet (Thiruvadi) to His divine head (Thirumudi).
கண்ணனை மகனாகப் பெற்ற பாக்கியத்தைப் பெறாப் பெரும் பேறாக நினைக்கிறாள் யசோதை! ஆயர்பாடியிலுள்ள பெண்களை அழைத்துக் கண்ணனின் திருமேனி அழகைக் காட்டுகிறாள். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்பதே யசோதையின் நோக்கமாகும். திருவடிமுதல் திருமுடி வரை இத்திருமொழியில் புகழப்படுகிறது!
Verses: 23 to 43
Grammar: Veṇṭaḷaiyāl Vanta Kaliththāḻisai / வெண்டளையால் வந்த கலித்தாழிசை
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
  • PAT 1.2.1
    23 ## சீதக்கடலுள் * அமுது அன்ன தேவகி *
    கோதைக் குழலாள் * அசோதைக்குப் போத்தந்த **
    பேதைக் குழவி * பிடித்துச் சுவைத்து உண்ணும் *
    பாதக் கமலங்கள் காணீரே * பவள வாயீர் வந்து காணீரே (2)
  • PAT 1.2.2
    24 முத்தும் மணியும் * வயிரமும் நன்பொன்னும் *
    தத்திப் பதித்துத் * தலைப்பெய்தால் போல் ** எங்கும்
    பத்து விரலும் * மணிவண்ணன் பாதங்கள் *
    ஒத்திட்டு இருந்தவா காணீரே * ஒண்ணுதலீர் வந்து காணீரே (2)
  • PAT 1.2.3
    25 பணைத்தோள் இள ஆய்ச்சி * பால் பாய்ந்த கொங்கை *
    அணைத்து ஆர உண்டு * கிடந்த இப் பிள்ளை **
    இணைக்காலில் * வெள்ளித் தளை நின்று இலங்கும் *
    கணைக்கால் இருந்தவா காணீரே * காரிகையீர் வந்து காணீரே (3)
  • PAT 1.2.4
    26 உழந்தாள் நறுநெய் * ஒரோர் தடா உண்ண *
    இழந்தாள் எரிவினால் * ஈர்த்து எழில் மத்தின் **
    பழந்தாம்பால் ஓச்ச * பயத்தால் தவழ்ந்தான் *
    முழந்தாள் இருந்தவா காணீரே * முகிழ்முலையீர் வந்து காணீரே (4)
  • PAT 1.2.5
    27 பிறங்கிய பேய்ச்சி * முலை சுவைத்து உண்டிட்டு *
    உறங்குவான் போலே * கிடந்த இப்பிள்ளை **
    மறம் கொள் இரணியன் * மார்வை முன் கீண்டான் *
    குறங்குகளை வந்து காணீரே * குவிமுலையீர் வந்து காணீரே (5)
  • PAT 1.2.6
    28 மத்தக் களிற்று * வசுதேவர் தம்முடை *
    சித்தம் பிரியாத * தேவகிதன் வயிற்றில் **
    அத்தத்தின் பத்தாம் நாள் * தோன்றிய அச்சுதன் *
    முத்தம் இருந்தவா காணீரே * முகிழ்நகையீர் வந்து காணீரே (6)
  • PAT 1.2.7
    29 இருங்கை மதகளிறு * ஈர்க்கின்றவனை *
    பருங்கிப் பறித்துக் * கொண்டு ஓடும் பரமன்தன் **
    நெருங்கு பவளமும் * நேர்நாணும் முத்தும் *
    மருங்கும் இருந்தவா காணீரே * வாணுதலீர் வந்து காணீரே (7)
  • PAT 1.2.8
    30 வந்த மதலைக் * குழாத்தை வலிசெய்து *
    தந்தக் களிறு போல் * தானே விளையாடும் **
    நந்தன் மதலைக்கு * நன்றும் அழகிய *
    உந்தி இருந்தவா காணீரே * ஒளியிழையீர் வந்து காணீரே (8)
  • PAT 1.2.9
    31 அதிருங் கடல்நிற வண்ணனை * ஆய்ச்சி
    மதுரமுலை ஊட்டி * வஞ்சித்து வைத்துப் **
    பதறப் படாமே * பழந் தாம்பால் ஆர்த்த *
    உதரம் இருந்தவா காணீரே * ஒளிவளையீர் வந்து காணீரே (9)
  • PAT 1.2.10
    32 பெரு மா உரலில் * பிணிப்புண்டு இருந்து * அங்கு
    இரு மா மருதம் * இறுத்த இப் பிள்ளை **
    குரு மா மணிப்பூண் * குலாவித் திகழும் *
    திருமார்பு இருந்தவா காணீரே * சேயிழையீர் வந்து காணீரே (10)
  • PAT 1.2.11
    33 நாள்கள் ஓர் நாலைந்து * திங்கள் அளவிலே *
    தாளை நிமிர்த்துச் * சகடத்தைச் சாடிப்போய் **
    வாள் கொள் வளை எயிற்று * ஆருயிர் வவ்வினான் *
    தோள்கள் இருந்தவா காணீரே * சுரிகுழலீர் வந்து காணீரே (11)
  • PAT 1.2.12
    34 மைத் தடங்கண்ணி * யசோதை வளர்க்கின்ற *
    செய்த்தலை நீல நிறத்துச் * சிறுப்பிள்ளை **
    நெய்த்தலை நேமியும் * சங்கும் நிலாவிய *
    கைத்தலங்கள் வந்து காணீரே * கனங்குழையீர் வந்து காணீரே (12)
  • PAT 1.2.13
    35 வண்டு அமர் பூங்குழல் * ஆய்ச்சி மகனாகக்
    கொண்டு * வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு **
    அண்டமும் நாடும் * அடங்க விழுங்கிய *
    கண்டம் இருந்தவா காணீரே * காரிகையீர் வந்து காணீரே (13)
  • PAT 1.2.14
    36 எம் தொண்டை வாய்ச் சிங்கம் * வா என்று எடுத்துக்கொண்டு *
    அந் தொண்டை வாய் * அமுது ஆதரித்து ** ஆய்ச்சியர்
    தம் தொண்டை வாயால் * தருக்கிப் பருகும் * இச்
    செந் தொண்டை வாய் வந்து காணீரே * சேயிழையீர் வந்து காணீரே (14)
  • PAT 1.2.15
    37 நோக்கி யசோதை * நுணுக்கிய மஞ்சளால் *
    நாக்கு வழித்து * நீராட்டும் இந் நம்பிக்கு **
    வாக்கும் நயனமும் * வாயும் முறுவலும் *
    மூக்கும் இருந்தவா காணீரே * மொய்குழலீர் வந்து காணீரே (15)
  • PAT 1.2.16
    38 விண் கொள் அமரர்கள் * வேதனை தீர * முன்
    மண் கொள் வசுதேவர் * தம் மகனாய் வந்து **
    திண் கொள் அசுரரைத் * தேய வளர்கின்றான் *
    கண்கள் இருந்தவா காணீரே * கனவளையீர் வந்து காணீரே (16)
  • PAT 1.2.17
    39 பருவம் நிரம்பாமே * பாரெல்லாம் உய்யத் *
    திருவின் வடிவு ஒக்கும் * தேவகி பெற்ற **
    உருவு கரிய * ஒளி மணிவண்ணன் *
    புருவம் இருந்தவா காணீரே * பூண்முலையீர் வந்து காணீரே (17)
  • PAT 1.2.18
    40 மண்ணும் மலையும் * கடலும் உலகு ஏழும் *
    உண்ணுந் திறத்து * மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு **
    வண்ணம் எழில்கொள் * மகரக்குழை இவை *
    திண்ணம் இருந்தவா காணீரே * சேயிழையீர் வந்து காணீரே (18)
  • PAT 1.2.19
    41 முற்றிலும் தூதையும் * முன்கைமேல் பூவையும் *
    சிற்றில் இழைத்துத் * திரி தருவோர்களைப் **
    பற்றிப் பறித்துக்கொண்டு * ஓடும் பரமன்தன் *
    நெற்றி இருந்தவா காணீரே * நேரிழையீர் வந்து காணீரே (19)
  • PAT 1.2.20
    42 அழகிய பைம்பொன்னின் * கோல் அங்கைக் கொண்டு *
    கழல்கள் சதங்கை * கலந்து எங்கும் ஆர்ப்ப **
    மழ கன்றினங்கள் * மறித்துத் திரிவான் *
    குழல்கள் இருந்தவா காணீரே * குவிமுலையீர் வந்து காணீரே (20)
  • PAT 1.2.21
    43 ## சுருப்பார் குழலி * யசோதை முன் சொன்ன *
    திருப் பாதகேசத்தைத் * தென்புதுவைப் பட்டன் **
    விருப்பால் உரைத்த * இருபதோடு ஒன்றும் *
    உரைப்பார் போய் * வைகுந்தத்து ஒன்றுவர் தாமே. (21)