Your browser does not support the audio element.
audio
118 மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி *
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய் *
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த *
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான். (2)
119 மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும் *
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய * பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற * செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
120 காயும்நீர்புக்குக் கடம்பேறி * காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி *
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற *
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
121 இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர் *
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி * அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட *
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
122 சேப்பூண்ட சாடுசிதறி * திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைத்தாம்பால் *
சோப்பூண்டு துள்ளித்துடிக்கத்துடிக்க * அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
123 செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு *
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த *
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய *
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
124 தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ? *
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம் *
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி *
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
125 கொங்கை வன்கூனிசொற்கொண்டு * குவலயத்
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும் *
எங்கும்பரதற்கருளி வன்கானடை *
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
126 பதகமுதலைவாய்ப் பட்டகளிறு *
கதறிக்கைகூப்பி என்கண்ணா! கண்ணா! என்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த *
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
127 வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த *
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த *
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் * வைகுந்தம் மன்னியிருப்பரே. (2)