ஸ்ரீவைஷ்ணவம் · தென்கலை நோக்கு

வேதம் தமிழ் செய்த மாறன் — பாகம் 1

ஸ்ரீ:

01

பதிப்பாசிரியர் முன்னுரை

ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ. அ.கிருஷ்ணமாசார்யர்

	 திருவரங்கம்,
21.4.2016.

வேதாந்தத்தின் விழுப்பொருளைத் தமிழ்மொழியில் விளக்குவது நம்மாழ்வார் அருளிச்செய்த ‘‘திருவாய்மொழி’’. சாரீரகமீமாம்ஸா பாஷ்யத்தின் நான்கு அத்யாயங்களுக்கு இணையான பொருள், திருவாய்மொழிப் பாசுரங்களில் அமைந்துள்ளது என்பது நம் பூர்வர்களின் அறுதியிட்ட முடிவாகும். இதனையே ‘ஐககண்ட்யம்’ என்று ஸம்ஸ்க்ரு தத்தில் குறிப்பிடுவர்.

நம்பிள்ளை தமது ‘ஈட்டுப் பேருரையில்’ பலவிடங்களில் திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு இணையான வேதச் சொற்றொடர்களையும், ப்ரஹ்மஸூத்ரங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் தம்முடைய ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி’ மற்றும் ‘அதிகரண ஸாராவளி’ போன்ற நூல்களில் திருவாய்மொழிக்கும் ஸ்ரீபாஷ்யத்திற்கும் இடையே அமைந்துள்ள கருத்தொற்றுமை யைப் பரக்கப் பேசியுள்ளார். அழகியமணவாளப் பெருமாள் நாயனார், ஸ்ரீபாஷ்யகாரர் ப்ரஹ்மஸூத்ரங்களுக்கு உரிய விளக்கங்களை அளித்திடும் போது திருவாய்மொழிப் பாசுரங்களைக் கைவிளக்காகக் கொண்டு பொருள் அருளிச்செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ‘த்ராவிட ஆம்நாயம்’ (திராவிட வேதம்) என்ற உயர்வினைப் பெற்றது திருவாய்மொழி.

‘‘வேதம் தமிழ் செய்த மாறன்’’ என்று ஸ்ரீமந்நாத முனிகள் நம்மாழ்வாரைக் கொண்டாடுகிறார். ‘‘வேதம் தமிழ் செய்த மாறன்’’ என்ற இந்த நூலில், வேதங்கள், வேதாந்தங் கள், உபநிஷத்துக்கள், ஆரண்யகங்கள், கல்பஸூத்ரங்கள், பூர்வ மீமாம்ஸா சாஸ்த்ரம், உத்தர மீமாம்ஸா சாஸ்த்ரம், தர்சனங்கள், இதிஹாஸ புராணங்கள், பகவத் கீதை, ஆகமங்கள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கக் குறிப்புகளுடன் (பகுதி ஒன்றில்); நம்பிள்ளை ஈட்டுப் பேருரையின் உதவி கொண்டு எந்தெந்த இடத்தி லெல்லாம் ஆழ்வார் வேதாந்தத்தின் விழுமியபொருளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும், காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருந்த வாதூலகுலத்திலுதித்த ஸ்ரீவேங்கட தேசிகர் சிஷ்யரான அழகியமணவாளச்சீயர் அருளிச் செய்த ‘ஸ்ரீபாஷ்ய த்ரவிடாகமாத்யதசகத்வந்த்வ ஐககண்ட்யம்’ மற்றும் ஸ்ரீநிகமாந்த தேசிகனின் ‘அதிகரண ஸாராவளி’(பகுதி இரண்டில்) ஆகியவற்றின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஸம்ப்ரதாய க்ரந்தங்களுக்கும், தத்வார்த்தங்களுக்கும் ‘வேர்முதலாய் வித்தாய்’ அமைந்துள்ளது வேதங்களே. அந்த வேதங்களால் வெளியிடப்படும் தத்வ, ஹித, புருஷார்த்தங்கள் வேதவ்யாஸரால் தொகுக்கப்பட்டன. அந்தத் தொகுப்பே ப்ரஹ்மஸூத்ரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. ‘மயர்வற மதிநலம் அருளப்பெற்ற’ ஆழ்வாருக்கு, மற்றையோருக்கு அமைந்திராத தனிப்பட்ட பெருமை உண்டு. வேதங்களைத் தொகுத்தவரான பாதராயணர் (வேதவ்யாஸர்) கற்பித்த வேதாந்தங்கங்களை ஆராய்ந்து, அவர் விரிவாகக் கூறியவற்றைத் தாம் சுருக்கமாகவும், அவர் சுருக்கமாகச் சொன்னதை தாம் விரிவாகக் கூறுவதே இந்தப் பெருமை.

இந்தக் கருத்தை மந்த மதி படைத்த நம் போல்வார் அறிந்து கொள்ளும் வண்ணம் நம்பிள்ளை தம்முடைய உரையில் நூற்றுக்கணக்கான உபநிஷத் சொற்றொடர் களையும், வேதாந்தஸூத்ரங்களையும், ஆழ்வார் பாசுரங் களுடனான கருத்தொற்றுமையைக் (ஐககண்ட்யத்தைக்) காட்டியுள்ளார். ஈட்டிற்கு பல்வேறு சிறப்புகள் அமைந்துள்ள போதிலும் அவற்றில் தலையாயது ப்ரஹ்மஸூத்ரங் களுடனான கருத்தொற்றுமையாகும். ஈட்டிற்கு மேலும் சிறப்பு சேர்ப்பது அடையவளைந்தான் அரும்பதமாகும். அடைய வளைந்தான் அரும்பதத்தில் ஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் கருத்துக்களுடனானத் தொடர்பு ஆங்காங்கே விரிவாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஸ்ரீபாஷ்யம் மற்றும் திருவாய்மொழி ஆகிய இரண்டை யும் அறியக்கற்று வல்லாரே உபய வேதாந்திகள் எனப்படுவர். மற்றைய ஸித்தாந்தங்களுக்கு இல்லாத சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்திற்கு உண்டு. எந்த வேதாந்தக் கருத்துக்களை ஸ்ரீவைஷ்ணவர்கள் விவரித்தாலும், அவர்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல், ஸ்ரீபாஷ்யம், பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங் களிலிருந்து மேற்கோள் காட்டியே தாங்கள் சொல்ல வந்த கருத்துக்களை நிலை நாட்டிடுவர். பெரும்பாலான ஸ்ரீபாஷ்ய விளக்கவுரைகளிலும், உபந்யாஸங்களிலும், வாக்யார்த்த ஸதஸ்ஸுக்களிலும் ஆழ்வார் பாசுரங்களுடனான கருத் தொற்றுமை சுட்டிக் காட்டப்படுவதில்லை. திருவாய்மொழி காலக்ஷேபம் அல்லது உபந்யாஸம் செய்பவர்களும் ஒரு சிலரைத்தவிர ஸ்ரீபாஷ்யத்திலிருந்தோ அல்லது உபநிஷத் துக்களிலிருந்தோ உரிய மேற்கோள்களை, ஈடு காட்டிய வழியில் கூற முற்படுவதில்லை.

ஆசார்யஹ்ருதயத்தில்: ‘‘பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர்’’ (ஸூத்ரம் -65) என்று குறிப்பிட்டுள்ளார். இப்படித் திருவாய்மொழியின் துணை கொண்டு சாஸ்த்திரங்களின் பொருள்களை அறுதியிட்டவர் யார் என்னும் வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார் இந்த ஸூத்திரத்தால் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது பாஷ்யகாரர் - இராமானுசர் ப்ரஹ்மஸூத்திரங்களுக்கு ஸ்ரீபாஷ்யம் செய்தருளும்போது, ஸூத்ர வாக்யங்கள்- ஸூத்ரவாக்யங்களில் தெளிவுபெற இயலாத பொருள் விளக்கங்களை, இது கொண்டு- இத்திருவாய்மொழியின் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு, ஒருங்கவிடுவர்- அறுதியிட்டு ஒருங்க விட்டருளுவர் என்கை.

ஸ்ரீ.உ.வே. அண்ணங்கராசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ.உ.வே. காரப்பங்காடு வேங்கடாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ.உ.வே. வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ.உ.வே. புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமி, கோயில் வித்வான் ஸ்ரீ.உ.வே. நரஸிம்ஹாசார்யர் ஸ்வாமி. ஸ்ரீ.உ.வே. சதாபிஷேகம் கோவிந்த நரஸிம்ஹாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ.உ.வே. திருமலை நல்லான் ராமக்ருஷ்ணய்யங்கார் ஸ்வாமி போன்றோர் தாம் எழுதியருளிய நூல்கள் மற்றும் உபந்யாஸங்களின் ஊடே, ஸ்ரீபாஷ்யத்திற்கும் திருவாய்மொழிக்கும் இடையே அமைந் துள்ள ஐககண்ட்யத்தை கூறிவந்த போதிலும், அவற்றை ஒரு முழுமையான நூல் வடிவில் வெளியீடு செய்யவில்லை. அதை ஈடுசெய்வதற்கு ‘‘வேதம் தமிழ் செய்த மாறன்’’ என்னும் தலைப்பிடப்பட்ட இந்தப் பகுதி ஆழ்வார்களின் அருளிச் செயலில் ஈடுபட்டோருக்கு ஓரளவு உதவும் என்ற எண்ணத்தில் பல குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

பிழைதிருத்தம் செய்து உபகரித்தருளிய ஸ்ரீ.உ.வே. வேங்கடேசன் ஸ்வாமிக்கும், கைங்கர்ய ஸ்ரீமான். கோவிந்த ராஜன் அவர்களுக்கும், அணிந்துரை வழங்கி அருளிய மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே. இரா. அரங்கராஜன் ஸ்வாமிக்கும் அடியேனுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபல மகப்பேறு மருத்துவர். ராமானுஜதாஸி கைங்கர்ய ஸ்ரீமதி. ஸ்வதந்த்ரா கோவிந்தராஜன் மற்றும் அவருடைய கணவர். கைங்கர்ய ஸ்ரீமான் ஸ்ரீகோவிந்த ராஜன் ஆகிய இருவரும் பல குறிப்புகளை சேகரித்துத் தந்து உதவினர்.

கணிப்பொறியில் தட்டச்சு செய்தவர்கள் மேலகோட்டை ஸம்ஸ்க்ருத ஆராய்ச்சி கழகத்தின் இளநிலை ஆய்வாளர் ஸ்ரீ.உ.வே. ஸ்ரீநிவாஸன், திருமதி. திலகம் அழகேசன், திருமதி. சித்ரா குமார், செல்வி. வித்யா, திருமதி. ராதா ஆகியோர்.

இந்த நூல்களை நல்ல முறையில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அச்சிட்டுத் தந்தவர் சென்னை R.N.R. Printers உரிமையாளர் ஸ்ரீ.உ.வே. ராஜன் மற்றும் ஸ்ரீரங்கநாச்சியார் அச்சுக்கூடம் திரு. கார்த்திக் ஆகியோர். அலுவலக நிர்வாக மேற்பார்வையாளர்கள் K.வாசுதேவன், ஸ்ரீமதி. வித்யா வாசுதேவன் மற்றும் மேலக்கோட்டை திருநாராயணபுரம் திருமதி. ராதிகா குமார் ஆகியோர்.

இவ்வாறு பல்வகையிலும் இந்தப் பதிப்புகள் வெளிவர உதவி செய்தவர்களுக்கு அடியேனுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலைப் பதிப்பிப்பதற்கு பெரியதொரு தொகையை நிதியுதவியாக அளித்தவர்கள் சேலம் A.N.S. Jewellers உரிமையாளர்கள் கைங்கர்ய ஸ்ரீமான்கள். A.S. ராஜேந்திரன், A.S.ஸ்ரீராம் ஆகியோர். புருஷகாரம் புரிந்தவர் கோமடம் ஸ்ரீ.உ.வே. சடகோபாசார்யர் ஸ்வாமி. இவர்கள் திறத்து அடியேனுடைய க்ருதஜ்ஞதையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

02

சடகோபர் தம் பெருமை

ஸ்ரீமந்நாராயணனுடைய திருத்தோள்கள், தீயோர் களை வதம் செய்வதிலும், தன்னை அண்டியோர்களைக் காப்பாற்றுவதிலும் எத்தனையோ வெற்றிகள் அடைந்திருக் கின்றன. பாற்கடல் சுழன்று நுரை சிந்திக் கதறும்படி மந்தர மலையை மத்தாக நட்டுக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கிய வெற்றி, தம்மையே வணங்கும்படி உலகங்களையெல்லாம் துன்புறுத்திய அசுர சக்ரவர்த்தியான இரணியனையும், ராட்சஸ சக்ரவர்த்தியான ராவணனையும் வதஞ் செய்த வெற்றி, கிருஷ்ணாவதாரம் முதலானவற்றில் தீமையை அழித்து நன்மையைப் பாதுகாத்த வெற்றி. ஆனால், இப்படிப்பட்ட வெற்றிகளினாலெல்லாம் அடையாத பூரிப்பை அந்த அழகிய திருத்தோள்கள் ஒரே ஒரு நிகழ்ச்சியின்போது அடைந்து விட்டனவாம். ‘அது எப்படிப்பட்ட மகத்தான நிகழ்ச்சியோ?’ என்று வியப்புறு கிறீர்களல்லவா? இந்த இரகசியத்தைச் சுமார் ஏழுநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த புலவர் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்:

அருமறை துணிந்த பொருள்முடிவை, இன்சொல்
அமுதொழுகு கின்ற தமிழினில் விளம்பி
யருளிய சடகோபர் சொற்பெற்(று) உயர்ந்தன; அரவணை விரும்பி அறிதுயில் அமர்ந்த அணிதிரு அரங்கர், மணிதிகழ் முகுந்தர், அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே!

(அருமறை - அறிந்து கொள்வதற்கு அரிய வடமொழி வேதங்கள், உபநிஷதங்கள். பொருள் - உண்மைப் பொருள். சடகோபர் - நம்மாழ்வார். அரவணை - ஆதிசேஷ சயனம். அறிதுயில் - எல்லாவற்றையும் அறிந்து கொண்டே உறங்குவதுபோலிருக்கும் யோக நித்திரை. மணிதிகழ் - நீல மணிபோல விளங்குகிற. கொற்றப் புயங்கள் - வெற்றியை யுடைய திருத்தோள்கள்.)

ஆழ்வாரின் பாடல்களைக் கேட்டுத்தான் அப்படிப் பூரித்துப்போய் விட்டானாம் இறைவன். ஏன்? வேத வேதாந்தங்களெல்லாம் துணிவோடு தத்துவப் பொருளின் முடிவைச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இமயமலையின் உயர்ந்த சிகரத்தை அடைவதைக் காட்டிலும் அருமையானது உண்மைப் பொருளின் சிகரத்தை எட்டுவது! அவ்வளவு செங்குத்தான - பனிமூடிய - பாதை, ஞானமார்க்கம். நம்மாழ்வாரோ அதே சிகரத்திற்கு ஒரு குறுக்குவழி கண்டு பிடித்து விட்டாராம். இந்தக் குறுக்குப் பாதை ராஜபாதை யாகவும் இருக்கிறதாம். பாடிக்கொண்டே போகலாமாம்: இல்லை; இந்தப் பாதை வழியாகத் ‘தமிழ் வேதம்’ என்ற ஆழ்வார் பாடல்களே ஒரு திவ்ய விமானமாக நம்மை எளிதாய் எடுத்துச் செல்லுமாம்.

எவ்வளவோ உயர்ந்த, - அறிவினால் தெரிந்து கொள் வதற்கும் அருமையான - தத்துவார்த்தங்களையெல்லாம் நம்மாழ்வார் தம்முடைய மதுரமான தமிழ்க் கவிதையில் அறிவுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஒருங்கே அமுதமாகும்படி விளக்கியிருக்கிறாராம். அந்தப் ‘பொருள் முடிவை’ ‘அமுதொழுகுகின்ற தமிழினில் விளம்பி’னார் என்று சொல்வது எவ்வளவு இனிமைபயப்பதாய் இருக்கிறது! சிலருக்கே புரிந்து கொள்வதற்கு தகுதிபடைத்ததாய் இருந்த வேதாந்தத்தை ஆழ்வார் சுவைக்களஞ்சியமான கலையாக்கிப் பலருக்கும் எடுத்துப் பரிமாறி விட்டாராம். ‘பகவானுடைய திருத்தோள்கள் ஏதோ ஒரு புதிய வெற்றி அடைந்தது போல் பூரித்துப் புளகாங்கிதமானதற்கு இதுதான் காரணம்!’ என்று பாடுகிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.

வட இந்தியா வேதாந்தத்தின் பிறப்பிடம்; தென் இந்தியாவோ அதைக் கலையாக்கியும் உரை கண்டும் உபகரித்த வளர்ப்புப் பண்ணை. வேதாந்தத்தைக் கலை களாக்கியவர்கள் நம்மாழ்வார் முதலான ஆழ்வார்கள். வேதாந்த நூல்களுக்கு உரை கண்டவர் சங்கரர், ராமாநுஜர், மத்வாசார்யர் முதலியோர். உபநிஷதங்களே வேதாந்த ஞானத்தின் ஊற்றுக் கண்களாகும். வேதாந்த நூல்கள் பலவாயினும் உபநிஷதங்களையே ‘வேதாந்தம்’ அல்லது ‘வேதத்தின் முடிவு’ என்று குறிப்பிடுகிறோம். சிதறிக் கிடக்கும் உபநிஷத வாக்கியங்களை ஒருவாறு கோத்துக் கட்டும் நூல் தான் வேதாந்த ஸூத்ரம். உபநிஷதம், வேதாந்த ஸூத்ரம் என்பவற்றோடு பகவத்கீதையையும் சேர்த்து, ‘இவை ஸநாதந மதத்தின் மூன்று முக்கியமான வேதாந்த நூல்கள் (ப்ரஸ்தானத்ரயம்)’ என்று கூறுவதுண்டு. உபநிஷதங்களுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுவது பகவத்கீதை. ஆழ்வார் களுடைய பாடல்களில் உபநிஷதக் குறிப்புக்களையும் ஆங்காங்கே காண்கிறோம்; இவற்றைக் காட்டிலும் அதிக அளவில் பகவத்கீதையின் கொள்கைகள் அமைந்துள்ளன.

ஆனால் இக்கொள்கைகளும் கருத்துக்களும் ஆழ்வார் களுடைய சொந்த அனுபவங்களாகித் தமிழிலே மாறி உருவெடுத்து எல்லாருக்கும் உரியனவாகின்றன. இவர் களுடைய பாடல்களிலே நாம் உண்மையாகக் காண்பது உபநிஷதமுமல்ல, பகவத்கீதையுமல்ல; அவற்றின் ஸாராம் சத்தை வாழ்க்கையிலே பிரதிபலிக்கச் செய்து கொண்ட இவர்களுடைய இதயம்தான். வேத-வேதாங்க-வேதாந்தங் களின் ஸாரமான ஸநாதன தர்மத்தை உணர்ந்து ஒழுகிய பெரியவர்களுடைய மனஎழுச்சி, அனுபவம், ஆனந்தம், ஆத்ம நிலை முதலியவற்றின் திரண்ட கருத்துக்களே திவ்யப் பிரபந்தம். எனவே, ஆழ்வார்கள் அருளிச் செய்த இத்தமிழ் வேதத்தைக் கரும்புசாற்றுடன் கலந்த ஓர் திராவிட வேதமாக நாம் கொள்ள வேண்டும்.

இசையோடு பாடுகிறவர்கள் இப்பாடல்களை எவ்வித இடர்ப்பாடுமின்றி, ஆனந்தமாய் அனுபவிப்பார்கள். ‘இப்படி பகவத் ஸ்வரூப - ரூப - குண - விபூதிகளை (ஐச்வர்யங் களை) அனுபவித்து அது உள்ளடங்காது வழிந்து புறப்பட்ட சொல்லாயிற்று இப்பிரபந்தம்’ என்று ஈட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. சூரியோதயத்தில் பறவைகள் பெரும் உவகையோடு பாடிக் கொண்டே சூரியனை வரவேற்கின்றன.

ஆழ்வார்களும் ஞானசூரியனாகிய இறைவனைத் தங்கள் இதயத்திலே குதூகலமாக வரவேற்றுப் பாடுகிறார்கள். ‘கடவுள் ஒருவன் உண்டு; அவனே இந்த உலகம் முதலிய யாவையும் படைத்து இவைகளையெல்லாம் பேணி வளர்ப்பவன்; அவன் அன்புருவாகிய அழகன்’ என்றெல்லாம் எண்ணி யெண்ணி அந்த இறைவனுடைய குணங்களையும், எல்லையில்லாச் செல்வச் சிறப்பையும் அனுபவித்துப் பேரின்பத்தையடையும்போது, அந்த அனுபவம் தடுக்க முடியாத மகிழ்ச்சி வெள்ளத்தோடும் கற்பனா சக்தியோடும் வெளிப்பட்டுப் பாடலாகிறது என்பது மேலே குறிப்பிட்ட வியாக்கியானத்தின் கருத்து. இப்படிப்பட்ட பாடல்கள், இசை என்னும் வலிமைமிக்க சக்தியோடு சேரும் போது, உணர்ச்சிக் குள்ளும் உயிருக்குள்ளுமே நுழைவது போலத் தோன்றி நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்த்தி விடுகிறது; இதயத்தில் அன்பைத் துளிரச் செய்கிறது. இந்தப் பாடல்களைக் ‘காதலாகிக் கசிந்து’ பாடுவோர் தாங்களும் இறைவனை நெருங்கியிருப்பதாக உணர்கிறார்கள்.

உபநிஷதங்களில் ‘ப்ரஹ்மம்’ என்றும், ‘ஆத்மா’ என்றும் குறிப்பிடப்படும் பரம்பொருள், பகவத் கீதையில் அப்படிச் சொல்லப்படுவதோடு ‘பகவான்’ என்றும், ‘விஷ்ணு’ என்றும், ‘கிருஷ்ணன்’ என்றும் அழைக்கப் படுகிறது. பகவத்கீதையைப் பின்பற்றி, ஆழ்வார்களும் பரம்பொருளை விஷ்ணுவாகவும், அவருடைய அவதார மூர்த்திகளாகவும் வழிபடுகிறார்கள். உபநிஷதங்களையும், கீதையையும் வழிகாட்டியாகக் கொண்டு ஆழ்வார்கள் பரமபக்தர்களாக வாழ்ந்து வந்தார்கள்; அந்த வாழ்க்கையே அவர்களுடைய கவிதையாகப் பரிணமித்திருக்கிறது.

மிக்க இறைநிலையும், மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும், தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும், வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத் தியல்.
(பட்டர் அருளிச் செய்த திருவாய்மொழித் தனியன்)

(இறை - கடவுள். தொக்கியலும் - திரண்டு வருகிற. ஊழ்வினை - பழவினை. வாழ்வினை - வாழும் முறை. குருகையர்கோன் - நம்மாழ்வார்.)

என்று பூர்வாசார்யர்களில் ஒருவரான ஸ்ரீபராசர பட்டர் அருளிச்செய்துள்ளார். தெய்வத்தின் நிலையையும், ஜீவாத்மா வின் நிலையையும், ஸ்ரீமந்நாராயணனை சரணமாக அடையும் பக்தி நெறியையும், தடையாகத் திரண்டு வரும் பழவினை களையும், அந்த விரோதியை வென்று பகவானு டைய அருள் - நிழலிலே அவன் உகந்தபடி கைங்கர்யம் செய்துகொண்டு, அடியாரோடு கூடிவாழும் வாழ்க்கை முறையையும் கண்ணாடியில் காட்டுவதுபோல் பிரதிபலித்துக் காட்டும் ஆழ்வார் பாடல்களை ‘யாழின் இசைவேதம்’ - அதாவது, யாழின் இசையிலே அமையத்தக்க வேதம்’ - என்று கருதினார்கள்.

தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாட்டொன்றுக்கு வியாக்கியானம் செய்யும்போது, ‘‘விக்ரஹமில்லை குண மில்லை, விபூதியில்லை! - என்கிற சூனியவாதிகள் சஞ்சரிக்கிற ஸம்ஸாரத்திலே இப்படி விக்ரஹத்தை ஆதரித்த இவர்களை உத்தேச்யராகப் பெற்றோமே!’’ - என்று ஜீயர் (நஞ்சீயர்) அருளிச் செய்தார்’ - என்பது பெரியவாச்சான் பிள்ளை வாக்கு. இத்தகைய கொள்கையை உடையவர்கள் அழகுக் கலையை மதமாக்கிக் கொண்டார்கள் என்று நாம் கருத இடமுண்டல்லவா?

03

வேதமும், திருவாய்மொழியும்

1. வேதம் என்றால் எப்பொழுதும் ஒரே மாதிரியாய் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு உச்சரிக்கப்படும் ஒலிக்கற்றைகளின் கூட்டமாகும். இவ்வேதமானது படைப் பின் ஆரம்பத்தில் ஸ்ரீமந்நாராயணனால் நான்முகக் கடவுளுக்கு உபதேசிக்கப்பட்டு, அவரால் தமது சீடர்களுக்கு உபதேசிக்கப்பட்டு, சீடர்களுக்குச் சீடர்களான நமக்குக் கிடைத்திருக்கின்றது என்பர் கற்றறிந்த பெரியோர். ஆதியில் வேதம் நூறு ஆயிரம் சாகை(கிளை)களுடன் கூடிய ஒரே மரம் போலே இருந்தது என்றும், துவாபரயுக முடிவில் வியாசரால் ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரிக்கப் பட்டது என்றும் குறிப்பிடுவர் பெரியோர்.

வேதம் கர்ம பாகம் என்றும் ப்ரஹ்ம பாகம் என்றும் இரண்டு வகையாயிருக்கும். கர்ம பாகமாவது ஆராதிக்கப்படு பவனான ஸர்வேச்வரனுக்கு ஆராதனமாகச் செய்யும் யாகம் முதலிய கர்மாக்களையும், அவற்றை மேற்கொள்ள வேண்டிய முறைகளையும் குறிப்பிடுவதாகும். இதற்கு வழி நூல்களாகத் திகழ்வன மநுஸ்ம்ருதி முதலான தர்ம சாஸ்திரங்களாகும். ப்ரஹ்மபாகமாவது ஆராதிக்கப்படுபவனான ஸர்வேச் வரனுடைய இயல்பு, வடிவம், குணம், செயல்கள், செல்வங் கள் ஆகியவற்றையும், அவனை அடைவதற்குரிய உபாயத் தையும், அதனுடைய பயனையும் நேராகத் தெரிவிப்ப தாகும். இதற்கு வழிநூல்கள் ஸ்ரீராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிஹாசங்களும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலான புராணங்களுமாகும். புராணங்களில் திருவாய்மொழியின் பெருமையும், நம்மாழ்வாரின் பெருமையும் பல இடங்களில் பேசப்பட்டுள்ளன.

அழிவற்ற வேத சாகைகளும், திராவிடவேதத் தொகுதியும், ஒவ்வொரு கலியுகத்திலும் ஆத்ம ஞானமுள்ள பெரியோர்களால் வெளிப்படுத்தப்படுகின்றன என்றும், வ்யாஸ முனிவர் எப்படி துவாபரயுக முடிவில் மிகப் பெரியதாய் ஒன்றாய் இருந்த வேதங்களை ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரிக்கப் போகிறாரோ, அப்படியே, என்றுமுளதான தமிழ்ப்பாசுரங்களை, சடகோப முனிவர் வெளியே கொண்டு வரப்போகிறார் என்றும், வடமொழி வேதங்கள் போலவே திராவிட வேதங்கள் என்றுமுளதான தன்மையைக் கொண்டது என்றும் மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

பழையதான வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே எம்பெருமான் மனிதனாய் வந்து அவதாரங்கள் செய்தாற் போலே வேதமும் தமிழாய் வந்து ஆழ்வார்கள் மூலமாக வெளி வந்ததை ‘முந்தையாயிரம்’ என்பார் நம்பிள்ளை. (திருவாய் மொழி 6-5-11 ஈடுமுப்பதாறாயிரப்படி).

ஈடு 6-5-11: (முந்தையாயிரம்) ‘‘பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே, ஸர்வேச்வரன் இதர ஸஜாதீயனாய் அவதரித்தாற்போலே, வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்தபடி’’.

‘தோற்றங்கள் ஆயிரம்’ என்கிறபடியே பகவதவதாரம் போலே ஆவிர்ப்பவித்தன (தோன்றின) மந்த்ரங்களை ருஷிகள் காணுமாபோலே என்பார் நம்பிள்ளை (6-8-11. ஈடுமுப்பத்தாறாயிரப்படி). ‘பகவதாவிர்ப்பாவம்’ போலே ‘வேதாவிர்ப்பாவமான ஆயிரம்’ என்பார் வாதிகேசரி அழகிய மணவாளச்சீயர் (6-8-11. பன்னீராயிரப்படி).

ஈடு 6-8-11: ‘மந: பூர்வோவாகுத்தர:’ என்கிற அடைவால் சொன்னவையல்ல. இவர் கலங்கிச்சொல்லச் செய்தேயும், பகவதவதாரம்போலே ஆவிர்ப்பவித்தன. தோற்றம் - ஆவிர்ப்பாவம். மந்த்ரங்களை ருஷிகள் காணுமாபோலே.

மேலும் ‘தெளிவுற்ற ஆயிரம்’ என்பதனால் வேதார்த்த மானது ஆழ்வார் திருவாய்மொழியினாலே எல்லோரும் சொல்லுவதற்குத் தகுதியாய், எல்லா ஐயப்பாடுகளையும் தீர்த்து தெளிவடைந்தது என்பார் நம்பிள்ளை (7-5-11 ஈடுமுப்பத் தாறாயிரப்படி).

ஈடு. 7-5-11: (தெளிவுற்றவாயிரம்) ‘‘ஸஹ்யத்திலே (மலையிலே) கலங்கின நீரானது ஓரோப்ரதேசங்களிலே வந்து தெளிந்து உபயோக யோக்யமாமாப்போலே, அதிக்ருதாதிகாரமாய்க் கூளமும் பலாப்பிசினும் போலே ஒன்றே நிஷ்கர்ஷித்துப் பிரிக்க வொண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தமானது ஸர்வாதிகாரமாய் ஸர்வஸம்சயங்களுந் தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே’’.

‘சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரம்’ என்கிறபடியே ‘வேதம் போலே தான் தோன்றியன்றிக்கேயிருக்கை, பரத்துவம் (மேன்மைத் தன்மை) போலே வேதம். ஸ்ரீமந்நாராயணன் அர்ச்சாவதாரம் எடுத்தாற்போலே வேதமும் திருவாய்மொழியாக அவதரித்தது என்பார் நம்பிள்ளை (8-10-11. ஈடு).

ஈடு. 8-10-11: (சடகோபன் சொல்லப்பட்டவாயிரம்) ‘‘வேதம்போலே தான் தோன்றியன்றிக்கேயிருக்கை. பரத்வம் போலே வேதம்; அவதாரம்போலே திருவாய்மொழி.

‘அடியார்ந்த ஆயிரம்’ என்கிறபடியே ‘ருக்வேதம் போலவும், பாதங்களால் பூர்ணமான ஆயிரம்’ என்பார் நம்பிள்ளை (3-7-11.ஈடு).

ஈடு 3-7-11: (அடியார்ந்த ஆயிரத்துள்) ருக் வேதம் போலவும், ‘பாத3ப3த்3தோ4(அ)க்ஷரஸம:’ என்கிற ஸ்ரீராமாய ணம் போலவும், பாத3ங்கள் பூர்ணமான ஆயிரம்.*

04

ஆசார்யர்கள் போற்றிய திருவாய்மொழி

இவ்வாறு ஆழ்வார் தமது திருவாக்காலே திருவாய் மொழியின் பெருமையை அருளியபடியே ஆசார்யர்களும் ஆழ்வார் திருவுள்ளத்தைப் பின்பற்றி விரிவாகச் சொன்ன இடங்கள் பல காணப்படுகின்றன.

1. நம்மாழ்வாரை ஆசார்யராகப் பெற்ற மதுரகவியார் தாம் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற பிரபந்தத்தில்,

‘‘அருள் கொண்டாடும் அடியவரின்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்’’ - 8

என்று குறிப்பிடுகிறார். அதாவது எம்பெருமானுடைய எல்லையற்ற கருணையைக் கொண்டாடுகின்ற பக்தர்களின் உள்ளம் மகிழும்படி, அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களைத் தமிழ் மொழியில் திருவாய்மொழியாகப் பாடினார் ஆழ்வார் என்றபடி. ‘நல்லோர்க்கு வேதமே அழியாச் செல்வமாகும்’ ‘‘ஸா ஹி ஸ்ரீரம்ருதா ஸதாம்’’ - யஜுர் அஷ்ட.3-7 என்றும், ‘எல்லா நற்சுவைகளையும், நறுமணங்களையும் உடையவன்’ ‘‘ஸர்வ கந்த: ஸர்வரஸ:’’ - சாந்.3-14-2 என்றும், ‘ஆனந்த ஸ்வரூபனன்றோ அந்தப் பரம்பொருள்’ ‘‘ரஸோ வை ஸ:’’ - தை.ஆந.-7 என்றும் நித்யமான ஸத்வ குணமுடையவர்க்கு அல்லது தோற்றாத வேத ரஹஸ்யமான உபநிடதத்தின் பொருளைத் திருவாய் மொழியாக ஆழ்வார் அருளினார் என்றும் உரைப்பார் பெரியவாச்சான் பிள்ளை.

2. அடுத்து, நம்மாழ்வாரின் அருள்பெற்ற நாதமுனிகள் திருவாய்மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,

‘‘ப4க்தாம்ருதம் விஶ்வஜநாநுமோத3நம்
ஸர்வார்த்த2த3ம் ஸ்ரீஶட2கோப வாங்மயம்I
ஸஹஸ்ரஶாகோ2பநிஷத்ஸமாக3மம்
நமாம்யஹம் த்3ராவிட3 வேத3ஸாக3ரம்II’’
(நாதமுனிகள் அருளிச் செய்த திருவாய்மொழித் தனியன்)

என்கிற தனியன் மூலம், தொண்டர்க்கு அமுதமாய் இருப்பதும், எல்லா மக்களையும் ஆனந்திக்கச் செய்வதும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய எல்லா உறுதிப் பொருள்களையும் கொடுக்கவல்லதும், ஆயிரக்கணக்கான கிளைகளையுடைய உபநிடதங்களின் திரட்சியாயிருப் பதுமான நம்மாழ்வாருடைய தமிழ்வேதக்கடலைத் தான் வணங்குவதாகக் கூறுகிறார். அதாவது, ‘ஸாம வேதமாய்’ ‘சாந்தோக்யோபநிஷத்தாய்’ அதன் சாரமான உத்கீதமாய், அத்தையாயிற்று இப்படி பாடியருளினார் என்றும், இது ‘ஸர்வ வேதஸாகரஸாரமான உபநிஷத்தினுடைய திரட்சியா யிருக்கும்’ என்றும் குறிப்பிடுவர் பிள்ளைலோகம்சீயர். (பகவத்விஷயம் தனியன் உரை).

3. நாதமுனிகளின் குமாரரான ஈச்வர முனிகள் மற்றொரு தனியனில் நம்மாழ்வாரை,

‘‘திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினிய வண்பொருநலென்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து’’ (திருவாய்மொழித்தனியன்)

என்று போற்றுகிறார். அதாவது ‘வைகுண்ட புவன லோகம்’ என்கிறபடியே வைகுண்ட நாட்டை வேதமும், அமுதவெள்ளமான விரஜையாற்றாலே சூழப்பட்ட வைகுண்ட நகரத்தையும் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருவடிகளின் உயர்வை உபநிஷத்தும் ஓதினாப்போலே, அந்த அருமறையின் தாத்பர்யமான அர்ச்சாவதாரமான ஆதிப்பிரான் என்னும் எம்பெருமானின் திருநாட்டையும் அவன் இருக்கிற ஆழ்வார்திருநகரியாகிய ஊரையும் அதற்கு வடக்கே உள்ள வண்பொருநல் ஆற்றையும் அங்கே உள்ள எம்பெருமான் திருவடிகளையும் குறிப்பிட்டு திருவாய்மொழியை அருளினார் ஆழ்வார் என்பார் சீயர் இதனுரையில். (பகவத் விஷயம் தனியன் உரை)

4. ‘‘வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ் மறைகளாயிரமும் - ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்’’

என்னும் திருவாய்மொழிக்கான தனியனில் பட்டர், திருவாய்மொழியை வளர்த்த இதத்தாய் (வளர்ப்புத் தாய்) இராமானுசர் என்கிறார். அதாவது ஆழ்வார் அவதரித்து வீடு பேற்றுக்கு எழுந்தருளின பின்பு புறச்சமயத்தினரால் செஞ்சொல்லான திருவாய்மொழி தாழ்த்தப்பட்டு வருவதை இராமானுசர் கண்டு ஸ்ரீபாஷ்ய நூலாலே அதனை போக்கி, அந்த ஸ்ரீபாஷ்யத்தை திருவாய்மொழிக்கு காவலான அரணாக்கினார் என்றும் திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்னும் ஆசார்யர் மூலமாக திருவாய்மொழிப் பொருளை வளர்த்து வந்தார் என்றும் பணிப்பர் பிள்ளைலோகம் சீயர்.

5. திருவரங்கத்தமுதனார் தாம் அருளிய இராமானுச நூற்றந்தாதியில் ‘மாறன் பணித்த மறை’ என்றும் ‘தென் குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ்’ (இராமானுச நூற்றந்தாதி -29) என்றும் ‘பண்தரு மாறன் பசுந்தமிழ்’ (இராமானுச நூற்றந்தாதி -64) என்றும் ‘எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன்’ (இராமானுச நூற்றந்தாதி -18) என்றும் ‘உறுபெருஞ் செல்வமும் ... செந்தமிழ் ஆரணமே’ (இராமானுச நூற்றந்தாதி -19) என்றும் பலபடியாகத் திருவாய்மொழியை மறையாகப் பேசுவது அறியற்பாலதாகும்.

6. வேதாந்த தேசிகர் என்னும் ஆசார்யர் தாம் அருளிய ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியின்’ முதல் ச்லோகம் மூலமாக நம்மாழ்வாருடைய திருவாய்மொழியானது உபநிஷத்துவாங்மயமான நூல்களின் ஸாரமானது என்று கூறுவர்.

ஸார: ஸாரஸ்வதாநாம் ஶட2ரிபுப2ணிதி: ஶாந்தி ஶுத்3தா4ந்த ஸீமா
மாயாமாயாமிநீபி4: ஸ்வகு3ணவிததிபி4ர்ப3ந்த4யந்தீம் த4யந்தீ|
பாரம் பாரம்பரீதோ ப4வஜலதி4ப4வந்மஜ்ஜநாநாம் ஜநாநாம்
ப்ரத்யக் ப்ரத்யக்ஷயேந்ந: ப்ரதிநியதரமாஸந்நிதா4நம் நிதா4நம்||

உரை: (ஶட2ரிபுப2ணிதி: ஸாரஸ்வதாநாம் ஸார:) நம்மாழ்வாருடைய ஸ்ரீஸூக்தியானது ஸகல வாக்குக் களுள்ளும் ஸாரமானது. ஸாரக்ராஹிகளாகவுள்ளவர்கள் திருவாய்மொழியையே பரிக்ரஹிக்கவேணுமென்றவாறு (வேதத்தின் ஸாரத்தை அறிந்து கொள்ள ஆசைப்படுபவர் களுக்குப் புகலிடமாய் அமைந்துள்ளது திருவாய்மொழியே). (ஶாந்தி ஶுத்3தா4ந்த ஸீமா ) சாந்தி ரஸத்திற்கு அந்த: புரஸ்தானம் நம்மாழ்வாருடைய ஸ்ரீஸூக்தியென்றபடி பக்திரஸமே சாந்திரஸமெனப்படும். திருவாய்மொழியில் நவரஸங்களும் நிரம்பியிருந்தாலும் பக்திரஸமே பிரதான மென்க. அந்த ரஸம் திருவாய்மொழியில்தான் ஒப்புயர்வற்று விளங்குகின்றதென்றும் வேறு நூல்களில் இங்ஙனே தலை காட்டமாட்டாதென்றும் விளக்குவதற்காக, ‘‘சுத்தாந்த ஸீமா’’ எனப்பட்டது.

திருவாய்மொழி இன்னமும் எப்படிப்பட்டதென்றால், (ஆயாமிநீபி4: ஸ்வகு3ணவித3தீபி4: ப3ந்த4யந்தீம் மாயாம் த4யந்தீ) பரவிச் செல்லுகின்ற ரஜஸ்தமோகுண விஸ்தாரங் களினால் எல்லாரையுங் கட்டுப்படுத்துகின்ற ப்ரக்ருதியைப் பானம் பண்ண வல்லது (அதாவது) போக்கடிக்கக்கூடியது. திருவாய்மொழியை ஓதுமவர்கள் சுத்தஸாத்விகர்களாய் ரஜஸ்தமோகுண தூரஸ்தர்களாய் அப்ராக்ருதப்ராயர்களாய் விளங்குவர்களென்றபடி.

திருவாய்மொழி இன்னமும் எப்படிப்பட்டதென்னில், (பாரம்ப3ரீத: ப4வஜலதி4ப4வந் மஜ்ஜநாநாம் பாரம்.) இடைவீடின்றி அநாதிகாலமாக ஸம்ஸாரக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற ஜனங்களுக்குக் கரையாகவுள்ளது. திருவாய்மொழியை ஓதாதவர்கள் பிறவிக் கடலில் நின்று ஒருநாளுங் கரையேறாதே கிடந்து துவள்வர்களென்றபடி, ஆக இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருவாய்மொழியானது, (ப்ரத்யக் ப்ரதிநியதரமா ஸந்நிதாநம் நிதாநம் ந: ப்ரத்யக்ஷயேத்.) ஆழ்வாருடைய ஸம்ப்ரதாயத்திலே நிஷ்டரான நமக்கு ஸ்வயம்ப்ரகாசனாய்ப் பிராட்டியோடு பிரிவில்லாதவனான எம்பெருமானாகிற நிதியை ஸாக்ஷாத் கரிப்பிக்கக்கடவது. *வைத்தமாநிதியாம் மதுசூதனன் திருவாய்மொழியில் எழுத்துத்தோறும் பொதிந்து கிடக்கின்றா னென்பதும், திருவாய்மொழி ஓதாதவர்களுக்கு இந்த மஹாநிதி துர்லபமென்பதும் இதனால் ஸூசிதம்.

இதிஹாஸ புராணங்கள் போலே வேதத்தின் பொருளைத் தெரிவிப்பது மட்டுமன்றி, உபநிஷத்துக்களின் பொருளை உள்ளபடி உணர்த்தும் உத்தரமீமாம்ஸை யென்கிற ப்ரஹ்மஸூத்ரம் தெளிவித்த முறையிலே திருவாய் மொழியும் முதலில் உறுதிபட நிலைநாட்டிக் கூறுகிறது. வியாஸ பகவான் நிர்ணயித்த பரம்பொருளைமேலே அனுபவிக்கப் போகிறோ மென்கிறார் போலும்.

முதற்திருவாய்மொழி பத்துப்பாட்டுக்களும், 2-ஆம் திருவாய்மொழி பத்துப் பாட்டுக்களும் மேலேயிருப்பதில் முதற்பாட்டு ஒன்றும் ஆக 21 பாட்டுக்கள் சாரீரகார்த்தச் சுருக்கமாகும். ‘‘விசேதம்’’ என்றது 16 பாதங்களான பிரிவிலுள்ள அடைவிலே தெரிவிப்பதாகும்.

இதில் முதல் இருபத்தொரு பாட்டுக்கள் சாரீரக சாஸ்த்ரத்தின் பொருளைப் பணிப்பதென்பதை விவரிக் கிறோம். இதனை ஸாரத்திலே ஸ்ரீதேசிகன் அருளும்போது ‘த்விகாப்யாம் த்வ்யஷ்டாங்க்ரி: துரதிகமநீதிஸ்த்தபுடிதா’ என்று பதினாறு பாதங்களையுடைய உத்தரமீமாம்ஸை என்றதாலே இங்கே இருபத்தொரு பாசுரங்கள் பதினாறு பாதங்களின் பொருளை அடைவாகக் கூறுவது கருதப் பட்டதாகும். அது பின்வருமாறு: ‘ப்ரஹ்மஸூத்ரம், த்விகாப்யாம்’ என்று இரண்டு பாகமாகப் பிரிக்கப் படுவதுபோல் இங்கும் முதல் பாதத்தின் பொருள் முதற் திருவாய்மொழியிலும் மேல்பாகத்தின் பொருள் மேலுள்ள திலும் அறிவிக்கப்பெறும். அங்குப் பதினாலு பாதங்களின் பொருளை அதிகரண ஸாராவளியிலே -

ஸ்ரஷ்டா தே3ஹீ ஸ்வநிஷ்டோ2 நிரவதி4மஹிமா(அ)பாஸ்தபா3த4: ஶ்ரிதாப்த:
கா2த்மாதே3ரிந்த்3ரியாதே3: உசித ஜநநக்ருத் ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீI
நிர்தோ3ஷத்வாதி3 ரம்யோ ப3ஹுப4ஜநபத3ம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்3ய:
பாபச்சி2த்3 ப்3ரஹ்மநாடீ3 க3திக்ருத்3அதிவஹந் ஸாம்யத3: சாத்ர வேத்3ய: II

என்று அருளிச்செய்தவாறு இங்கும் கொள்ள வேண்டும். முதற் பாசுரம் ‘ப்ரஹ்மஜிஜ்ஞாஸா’ என்று முதல் ஸூத்ரத்திலுள்ள ‘ப்ரஹ்ம’ என்ற சொல்லின் பொருளை அறிவிக்கிறது. இரண்டாவது பாட்டிலே ‘ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்ரஹ்ம’ என்ற சேதந அசேதநங்களிலும் வேறுபாடு விளக்கப்படுகிறது.

இதைக் காரணமாகக் கொண்டதால் சேதன அசேதநங் களுக்கு அமைந்துள்ள குற்றம் ப்ரஹ்மத்திற்குச் சேருமோ என்று நினையாமைக்காக அதனுடைய ஸ்வரூபத்தை சோதித்துச் சொல்லுவதால் அவன் ஸர்வத்திற்கும் ஸ்ருஷ்டி காரணமென்ற முதற்பாதத்தின் பொருள் பெறப்படும். 3, 4 பாட்டுக்கள் சேதன அசேதநங்களெல்லாம் அவனுக்கு தேஹம், அவன் ஆத்மா என்று தெரிவிப்பதால் ‘தேஹீ’ என்ற இரண்டாம் பாதப்பொருள் சொன்னதாம்.

‘இறையவர் அவரவர் விதிவழியடைய நின்றனரே’ (திருவாய்மொழி 1-1-5) என்றும், ‘என்று மொரு இயல்வொடு நின்ற எம்திடரே’ (திருவாய்மொழி 1-1-6) என்றும் வேறொரு வருக்கு அதீனனாகாமல் ஸ்வநிஷ்டனாயிருப்பது தெரிவிக்கப் பட்டது. ‘படர் பொருள் முழுவதுமாய்’ (திருவாய் மொழி 1-1-7) என்றதால் ‘நிரவதி மஹிமா’ (மிகுந்த பெருமையுடையவன்) என்றதாம்.

‘சுடர்மிகு சுருதியுள்’ (திருவாய்மொழி 1-1-7) என்றதாலே வேறொன்றால் பாதிக்க முடியாதென்ற தாம். ‘வரன் முதலாய் - அரன் அயனென உலகழித்தமைத்துளனே’ (திருவாய்மொழி 1-1-8) என்று காரணமாய்த் தோன்றின எல்லாவற்றிற்கும் மேலாயிருப்பதால் அவற்றைக் கொண்டு இதை பாதிக்கவொண்ணாதென்றது. ‘உளனெனில் உளன்’ (திருவாய்மொழி 1-1-9) என்ற பாசுரம் சூன்யவாதம் வரையிலான பிற மதங்களைப் போக்கி வேதச் சொற்றொடர் களை பொருத்தமுடையதாய் ஏற்படுத்தும்.

இதனால் ஆச்ரிதர்களுக்கு ஆப்தன், அநாச்ரிதராய் மதாந்தரத்தால் மோஹித்தவருக்கு அல்லாதவன்போலாகிறா னென்றது. ‘நீர்தொறும் பரந்துளன் பரந்தவண்ட மிதென நில விசும்பு’ (திருவாய்மொழி 1-1-10) என்று பஞ்சபூதாதி களிலுள்ளவனென்று 7ஆம் பாதத்தின் பொருளும், ‘கரந்தசிலிடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும்’ (திருவாய்மொழி 1-1-10) என்று இந்திரியங்கள் போன்ற அணுக்கள் வ்யஷ்டி சரீரத்திலுள்ள ஜீவாத்மாக்கள் எல்லாவற் றிலுமிருப்பதைச் சொன்னதால் 8ஆம் பாதப் பொருளும் தேறும்.

‘மின்னின் நிலையில மன்னுயிராக்கைகள்’ (திருவாய் மொழி 1-2-2) என்று ஒவ்வோர் ஆத்மாவும் அஸ்த்திரங்களான பல சரீரம் பெறுகிறதென்ற மூன்றாம் அத்யாய முதற்பாதப் பொருளைச் சொல்லி, ஈச்வரன் ஸம்ஸாரம் நடத்துவதைக் குறித்தாம்.

‘எல்லையிலந்நலம்’ (திருவாய்மொழி 1-2-4), ‘மன்னுறில்’ (திருவாய்மொழி 1-2-5) என்று அவனுடைய கல்யாண குணமும் நிர்தோஷத்வமும் சொல்லப்பட்டன. ‘அவன் முற்றிலடங்கே’ (திருவாய்மொழி 1-2-6), ‘அடங்குக உள்ளே’ (திருவாய்மொழி 1-2-7) என்று அவன் விஷயமான பஜனங்களைக் குறித்து ‘உள்ளமுரைசெயல்’ (திருவாய் மொழி 1-2-8) என்று மனோவாக்கு ஆகிய கார்யங்கள் பக்திக்கு அங்கமென்ற 12ஆம் பாதப்பொருள் பணித்ததாம்.

‘ஒடுங்கலுமெல்லாம் விடும்’ (திருவாய்மொழி 1-2-9) என்று புண்ய பாபங்களெல்லாம் விடப்பண்ணுகிற வனென்றது நான்காம் அத்யாயத்தின் முதற்பாதப் பொருளான ‘உத்தரபூர்வ பாப அச்லேஷ விநாசமாம்’. ‘ஆக்கைவிடும் பொழுதெண்ணே’ (திருவாய்மொழி 1-2-9) என்று உத்க்ராந்தி பாதார்த்தத்தைக் காட்டும். ‘அந்நலத்து’ (திருவாய்மொழி 1-2-10) என்று வைகுண்டத்திற்குச் சேர்ப்பது குறித்ததால் அர்ச்சிராதி மார்க்கம் ஸித்திக்கும். இதன் விரிவு திருவாய்மொழி முடிவிலாம் ‘நாரணன் திண்கழல் சேரே’ (திருவாய்மொழி 1-2-10) என்று கடைசி பாதத்திற் சொன்ன ப்ரஹ்ம ப்ராப்தியை விரித்தது.

மேல் ‘பத்துடையடியவர்க்’கென்ற (திருவாய்மொழி 1-3-1) பாசுரம் ப்ரக்ருதி மண்டலத்திலே அவிவேகி பக்த ருக்கும் பராதீனனான பிரான் பரமபதத்தில் அவைஷ்ண வரால் அடைய அரியவனாய் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிகவும் பவ்யனாகையாலும், இவர்களும் அவனுக்கு அடியவர்களா யிருப்பதை விடவிரும்ப மாட்டார்களா கையாலும் வைகுந்தம் புகுந்தவர் மீண்டும் திரும்புவதில்லை யென்றவாறு அபுநராவ்ருத்தி யென்றகடைசி ஸூத்ரத்தின் பொருளைக் குறிப்பதாம்.

ஆக வேதார்த்தம் போலே வேதாந்த வியாக்யானமான ப்ரஹ்மஸூத்ரத்தின் பொருளும் இதில் முதன்முதல் அடங்கியுளதென்று இதற்கு மிக்க சிறப்புச் சொன்னதாம்.

7. திருக்குருகைப்பிரான் பிள்ளானின் திருவுள்ளக் கருத்து:

ஆறாயிரப்படியிலே முதல் முப்பது பாட்டான மூன்று திருவாய்மொழிகளோடு, பத்தாம் பத்தில் மூன்று திருவாய் மொழிகளுக்கு மேலான ‘சார்வே தவநெறிக்கு’ என்று தொடக்கமான ஏழு திருவாய்மொழிக்கும் ஒரு தொடர்பு அருளிச்செய்கிறார். அதனால் முதல் மூன்றும் மேல் ஏழுமான பதிகங்களோடு முடிய வேண்டிய திருவாய்மொழி தூது விடுவது போன்ற பல விஷயங்களாலே வளர்ந்து விட்ட தென்றறிவித்ததாகும். அந்த மேல்பாகத்தில் நாலாவது அத்யாயத்தின் பொருள் விரிவு செய்யப்படுவதால் ‘‘ஸாக்ரா’’ என்றவிடத்தில் ‘அக்ர’ பதத்தாலே அந்த ஏழு திருவாய் மொழிகளைக் கொள்ளலாகுமென்பர். சிலர் அக்ரபதத்தால் 20 பாட்டுக்குக் குறைவான சிறியபாகத்தைக் கொள்வது தான் ஸ்வரஸம். இந்த இருபதுபோல் அந்த எழுபதும் வரிசையாக சாரீரகார்த்தத்தைச் சொல்லவுமில்லை என்பது அவர்தம் கூற்றாகும்.

ஸகலம் - கீழோடு சேர்த்து மொத்தமான ஆயிரம் பாசுரங்கள் நன்கு இசையோடும் கூடியதால் ‘‘ஸஹஸ்ர சாகோபநிஷத்ஸமாகமம்’’ என்றபடி ஸாமசாகைகளின் ஸஹஸ்ரத்தைப் பின்பற்றியதால் இதில் ஸாமவேதமும் அடங்கிற்று.

ஸ்ரீராமாயணம் 24 ஆயிரம் ச்லோகங்கள் கொண்டதால் காயத்ரியின் விரிவு என்பர். 26 என்ற எண்ணிக்கையை எடுத்தால் எம்பெருமானென்பர். மேலும் ஆங்காங்குள்ள விஷயங்களின் ஒற்றுமையும் விவேகிகள் தோன்றியவாறு ஆராய்ந்து கொள்ளலாம். ப்ரச்நோபநிஷத்து ஒரு மாத்ரையான ப்ரணவ ப்ரஹ்மோபாஸனத்தால் ரிக்வேத மூலமான இம்மைப்பலன் இரு மாத்ரைகளால் மறுமைப் பலன் யஜுர் வேதத்தால். மூன்று மாத்ரைகளால் ஸாமவேதத்தால் மோக்ஷபலனென்கிறது. அப்படி எல்லாப் பலனையும் இங்கே பெறலாம்.

‘‘யஜுரபி’’ யஜுர் வேதமும் 101- சாகை களாயிருப்பதால் இங்கே ஓர் ‘‘அபிதேய’’த்தோடே சேர்த்து நூறுதிருவாய்மொழியை நூற்றியொன்றாகக் கொண்டால் ஒத்திருக்கும். ‘‘அபிதேய’’ மென்றால் என்னவெனில் - இந்த ப்ரபந்தத்தின் பொருள் என்பர். சொல்லைக் கொள்ளுமிடத் தில் பொருளைக் கொள்வது சேராது. ஆகையால் மிகுந்ததாய்ச் சொல்ல வேண்டியது ஒன்று அத்தோடு சேர்ந்தது என்க. அதன் கருத்தாவது - நூறு என்பதற்கு நூறு திருவாய்மொழியென்ற பொருளைவிட நூறு திருவாய்மொழியிலும் உள்ள கடைப் பாட்டு நூறென்று பொருள் கொள்ளலாம்.

முக்கியமான மூன்று த்ரயீ. மேலே அதர்வவேதத்தை யருள்கிறார். அது த்ரயீ என்பதில் அடங்கியிருப்பதால் தனியாகக் கூற வேண்டா என்பர் சிலர். ஜயந்தபட்டர் என்ற பழைய தார்க்கிகர் அதர்வ வேதத்தையும், ரிக் வேதத்தோடு சேர்ப்பர். ரிக் என்ற மந்த்ரங்கள் நிறைந்திருப்பது இரண்டுக்கும் ஸமானமாதலின், உண்மையில் வேதம் நான்கே. அதர்வ வேதத்திற்கு சாகைகள் ஒன்பதானபடியால் முதல் மூன்று திருவாய்மொழிகளில் ரிக்வேதமும் அத்தோடு சிலர் சேர்க்கும்படி ரிக் நிறைந்த அதர்வ வேதமும் சொல்லப் பட்டனவாம். இதே ‘‘பாத்யதர்வாரஸைச்ச’’ என்றதாம். சிலர் ஒன்பது ரஸங்கள் அதர்வத்தில் இருப்பதாலென்பர். சொற்களைக் கொண்டே நிர்வாஹம் செய்தால் ஒரே ரீதியாகும். ஆக ஒன்பது சாகையென்க.

இதில் நூறுகள் பத்து உள. அவற்றால் அறிவிக்கும் பத்து குணங்கள் யாவையெனில்:

திருமால்தான் எல்லோருக்கும் (1) ஸேவ்யனாயிருப்ப தாலும், (2) போக்யனாயிருப்பதாலும், (3) திவ்ய மங்கள விக்ரஹமுடையவனாகையாலும், (4) எல்லா போக்யங் களுக்கும் மேம்பட்டிருப்பதாலும், (5) எல்லா புருஷார்த் தங்களையும் அவற்றின் காரணங்களையும் அளிப்பதாலும், (6) ப்ரபத்தி செய்தவர்களுக்கு வசப்பட்டவனாகையாலும், (7) தன்னை ஆச்ரயித்தார்க்கு துன்பங்களைப் போக்குவ தாலும், (8) பக்தர்கள் இஷ்டத்திகிணங்கி நடந்து கொள்கிறான் ஆகையாலும், (9) அவ்யாஜஸுஹ்ருத்தாயிருப்பதாலும் (அவ்யாஜ க்ருபை - காரணமே வேண்டாத கருணை - நிர்ஹேதுகம்), (10) நல்வழி நடப்பதற்குத் துணை யாயிருப்ப தாலும் தன்னைப் பெறத் தானே உபாயமாகிறான் என்றதாயிற்று. பத்து குணங்கள் யாவை, அவற்றால் எப்படி பரமார்த்த ஸித்தி யென்பது இப்போது தெளிவாயிற்று. இப்படியே திருவாய்மொழி குணங்களாலே பத்தின் குணங்களும், பத்துப்பத்துப் பாசுரங்களின் குணங்களாலே திருவாய்மொழி குணங்களும் ஸித்திக்குமென்று தெளிக.

கீழ்க்கூறியதினின்று இப்பிரபந்தத்தில் நூறுகள் பத்தும், பத்து பாசுரங்களான திருவாய்மொழிகள் நூறும் ஒவ்வொரு திருவாய்மொழியின் முடிவிலுள்ள பாசுரம் அந்தந்தத் திருவாய்மொழியில் தெளிவிக்கப்பட்ட குணக் குறிப்புக்கானதென்றும் தெளியலாயிற்று. பாசுரங்கள் குணத்தையே குறிக்கின்றன வென்னலாமோ. ஜ்ஞான சக்த்யாதி குணங்களைப் போலவும், ஸௌந்தர்யாதிகளைப் போலவும், அவனுடைய வியாபாரங்களையும், அவனுக்கு சேஷமான விபூதிகளையும் கூறலாமே. அதுபோல் ஒவ்வொன்றும் பல குணங்களையும் கூறலாமே. ஆயிரம் குணங்களென்னலாமோ. மேலும் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறும் பாசுரங்கள் உளவே. ஆயிரம்தேறு மென்றுதான் கூறலாமோ என்ன அருளிச்செய்கிறார்.

முனிச்ரேஷ்டரான நம்மாழ்வார் எம்பெருமானுடைய குணக்குவியலைக் கருவிற்கொண்ட ஆயிரம் பாட்டை அருளியுள்ளார். பாட்டுக்களில் ஒவ்வொன்றுமே ப்ரஸித்தங் களான பகவத் குணங்களைக் கூறுவது கண்கூடு. அதில் ஒவ்வொரு திருவாய்மொழி யென்ற தசகத்தின் குணங்கள் அஸங்கீர்ணமாக (கலங்காத நிலையில்) வெவ்வேறாக உள.

ஸ்வேச்சையாயிழிந்து செய்த தேரோட்டித் தொழி லாலே மெய்ப்பிக்கப் பெற்ற ஸௌசீல்யாதி குணங்களை யுடைய ச்ரிய:பதியினால் அருளப் பெற்ற கீதையின் ஹிதோபதேச முடிவான சரமச்லோகத்திலே தேறி அந்தப் புராசாரம் - அதாவது அநந்ய சேஷத்வ ஜ்ஞான பலனான அநந்யோபாயத்வ ஜ்ஞானத்தினாலான ப்ரபத்திக்கான நடவடிக்கை.

அதனால் பரிசுத்தர்களானவர்களாலே இந்த (ரத்னா வளி) குற்றமற்ற பகவத் குணங்களைக் கோத்து முடிச்சிட்டுத் தொடர்ச்சியாக்கிய (மாலை) கண்ணபிரான் க்ருஷ்ணையே வடிவாகி ப்ரபன்ன ஜநஸந்தான கூடஸ்த்தராய், ஸ்ரீபாகவதாதி ப்ரஸித்த தாம்ரபர்ணீ தீரத்தில் தோன்றிய சடகோபமுனியால் காணப்படும் ஸர்வீய - ஸர்வர்ணங்களுக்கும் பொதுவான, ஸர்வ வடமறைகளுக்கும் மற்ற தமிழ் வேதங்களுக்கும் ப்ரதியாகத்தான் ஒன்றே போதுமான வேதசாகையான திருவாய்மொழியின் பாட்டுக்களின் கருத்தில் திகழ்ந்த ரத்னங்களின் மாலையாமிது. (த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் ஸ்ரீநிகமாந்த தேசிகன் அருளிச் செய்துள்ள ச்லோகங்களின் தொகுப்பாம் இது).

மேலும் இந்நூலின் தொடக்க ச்லோகத்தில் திருவாய் மொழியோடு வேதத்தை ஒப்புமை காட்டியுள்ளார். அதாவது திருவாய்மொழியின் முதல் 21 பாசுரங்கள் ப்ரஹ்மஸூத்ரங் களின் பொருளை முறையே விவரிக்கின்றன. இப்பாசுரங்கள் 21 சாகைகளாகப் படிக்கப்படுகிற ருக்குக்களுடைய வகைகளை வெளிப்படுத்துகின்றன. இதிலுள்ள 1000 பாட்டுகள் கீதத்தோடு கூடின ஸாம வேதத்தின் முழுமையான 1000 சாகைகளையும் பின் செல்லுகின்றன என்பர். திருவாய்மொழியில் அர்த்தத்தோடு கூடிய பத்து பத்துக்களா லான 100 திருவாய்மொழிகளால் 101 சாகைகளாகக் கொண்ட யஜுர் வேதமும் காணப்படுகிறது. சாந்தி ரஸத்தை முக்கியமாகக் கொண்ட இப்பிரபந்தத்தில் அதுக்குத் தேவையான மற்ற எட்டு ரஸங்களும் தென்படுவதால் ஒன்பது சாகைகளைக் கொண்ட அதர்வண வேதமும் தோன்றுகிறது. எனவே திருவாய்மொழியானது எல்லா வேதமாம் தன்மையும் ஒரு சேரத் தன்னிடம் கொண்டதாகும். (தாத்பர்ய ரத்னாவளி)

மேலும் வேதாந்த தேசிகர் முற்கூறியபடியே அதிகார ஸங்க்ரஹம் என்னும் பிரபந்தத்தில் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளியவோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்ற தொடர்மூலம் திவ்யப்பிரபந்தங்கள் முக்கியமாகத் தமிழ் வேதமாகிய திருவாய்மொழியைத் தெளிய ஓதி, வேதத்தின் உட் பொருளைத் தெளிவாக அறிய முடியும் என்று கூறுவர். (அதிகார ஸங்க்ரஹம் - பாசுரம் 1).

8. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தாம் அருளிய ‘ஆசார்யஹ்ருதயம்’ என்னும் நூலில் திருவாய் மொழிக்கும் வேதத்துக்கும் உள்ள ஒப்புமையையும், திருவாய்மொழி வேதாந்தமான உபநிஷத்தின் ஸாரம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

‘ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவ் வையும்’ (திருவாய்மொழி 3-1-6) என்று நம்மாழ்வார் அருளியபடியே வேதமானது அத்யயனம் செய்பவர்களின் வேறுபாட்டாலும், உலகங்களின் வேறுபாட்டாலும் பல வகைப்பட்டிருக்கிறது. பலவகைப்பட்ட வேதத்தில் வடமொழி, தென்மொழி என்ற பிரிவுகள் உள. வடமொழி வேதமானது ருக், யஜுர், ஸாமம், அதர்வணம் என நான்கு பிரிவுகளையுடையது. இவை ‘ஸம்ஸ்க்ருதம், திராவிடம் என்கிற பிரிவு, ருகாதி பேதம் போலே’ என்பார் நாயனார். (ஆசார்யஹ்ருதயம் நூற்பா - 40)

அகத்திய முனிவரால் பரப்பப்பட்ட தென்மொழியும், வடமொழிபோலே அநாதியானது. ‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ (திருநெடுந்தாண்டகம் - 4) என்று திருமங்கையாழ்வார் தமிழ் ஓசையை வடமொழியோடு ஒரு சேரப் பேசுவதாலும், வடமொழிக்கு முன்பாக ‘செந்திறத்த தமிழ்’ என்று சொல்லியிருப்பதனாலும் தமிழ்மொழி அநாதியாகும் என்று மாமுனிகள் உரைப்பர்’. (நூற்பா - 40). இதனால் அநாதியாக உள்ள தன்மை வடமொழிக்கும் தென்மொழிக்கும் பொதுவாக உள்ளது.

நம்மாழ்வார் வடமொழி வேதத்தை ‘மறை’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். மறைக்கு வடமொழி என்று அடை கொடுத்ததால் தென்மொழி மறையும் உண்டு என்பது தெளிவாயிற்று. இது பற்றியே ‘வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே’ என்றார் நாயனார். (நூற்பா - 42).

தமிழ் மறை அல்லது திராவிட வேதம் என்பது நம்மாழ்வார் அருளிய நான்கு பிரபந்தங்களாகும். இந்த நான்கு பிரபந்தங்களான தமிழ் மறைக்கு அங்கங்களாக அமைந்தவை திருமங்கையாழ்வார் அருளிய ஆறு பிரபந்தங்களாகும். வேதத்துக்கு அங்கங்களும், உபாங்கங்களும் இருப்பது போல இத்தமிழ் மறைக்கும் அங்கங்களும் உபாங்கங்களும் உள்ளன. தமிழ் மறையினுடைய ‘வேதமாம்’ தன்மையையும் திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்களுடைய ‘அங்கமாம்’ தன்மையையும் மற்றையாழ்வார்களுடைய நூல்களின் உபாங்கங்களான தன்மையையும் நினைத்து, ‘வேத சதுஷ்டய அங்க உபாங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இருந்தமிழ் நூற்புலவன் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன்மாலைகளும்’ என்று அருளிச் செய்தார் நாயனார். (நூற்பா - 43). வேத சதுஷ்டயமானது ருக், யஜுர், ஸாமம், அதர்வண வேதங்களாகும். நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையான நான்கு பிரபந்தங்களை,

‘‘இயற்பா மூன்றும் வேதத்ரயம் போலே,
பண்ணார் பாடல் பண்புரை இசை கொள்
வேதம் போலே’’

என்று அருளிச் செய்துள்ளார் நாயனார். (நூற்பா - 50) அதாவது இயற்பாவான திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி ஆகிய மூன்றும் முறையே ருக், யஜுர், அதர்வண வேதங்களின் ஸ்தானமாகும். ‘பண்ணார் பாடல்’ என்பது பண்ணோடே சேர்ந்துள்ள இசையையுடைய திருவாய்மொழியாகும். இத்திருவாய்மொழியானது ‘பண்புரை வேதம்’ என்றும் ‘இசைகொள் வேதம்’ என்றும் சொல்லுகிறபடியே பண்ணையும் இசையையும் உடைய ஸாமவேதம் போலே இருக்கும் என்பார் மாமுனிகள். (நூற்பா- 50இன் உரை).

மேலும், ஸாமவேதமானது பலவகைப்பட்டிருக்கை யாலே, திருவாய்மொழி ஸாமவேதத்தில் உபநிடதபாகமான சாந்தோக்யத்தை ஒக்கும் என்பதை, ‘சாந்தோகனென்று ..... தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹா கோஷ நல்வேத ஒலி போலே மஹாத்யயனம் என்னப்பாடுகை யாலே இத்தைச் சாந்தோக்ய ஸமம் என்பர்கள்’ என்று அருளினார் நாயனார். (நூற்பா -52). அதாவது எல்லா வேதங்களைக் காட்டிலும் ஸாமவேதத்தின் ஒலியானது பெரிதாக ஆயிற்று; அந்த ஸாமவேத ஒலியாலே பிரம்மாண்டமாகிய மண்டபமானது மிகவும் எதிர் ஒலி செய்தது என்கிற பிரமாணத்தாலும் ‘பாடு நல்வேத ஒலி’ என்று ஆழ்வார் தாமே அருளிச்செய்கையாலும் திருவாய்மொழி சாந்தோக ஸாமத்தின் உபநிடத பாகமாக சாந்தோக்யத்துக்கு ஒப்பாகும் என்றபடி. (நூற்பா - 50).

இது பற்றியே இத்திருவாய்மொழியின் துணை கொண்டு ப்ரஹ்ம ஸூத்ரங்களின் பொருளை அறுதியிட்டார் இராமானுசர் என்பதை ‘பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவர்’ என்பார் நாயனார் (நூற்பா 65).

மேலும் ‘பாரத கீதைகளின் வேத உபநிஷத்வம் போலே இதுவும் வ்யாக்யை ஆனாலும் வேத ரகசியமாம்’ என்பார் நாயனார் (நூற்பா 68). அதாவது வேதத்திற்கு வழி நூலாய் அதன் பொருளை விரித்துப் பேசுகின்ற மகாபாரதமும், அதன் சாரமாக பகவத் கீதையும் முறையே வேதமும் உபநிடதமும் அமைந்துள்ளனபோல, இத்திருவாய் மொழியும் வேதத்தின் விரிவுரையான வழி நூலானாலும் வேத ரகசியமான உபநிடதம் என்றபடி. (நூற்பா - 68இன் உரை).

9. ஸ்ரீமணவாளமாமுனிகள், ‘உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு உயர் வேத நேர் கொண்டு உரைத்து .....’ என்கிற திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரம் மூலமாக உயர்த்தியையுடைய பரம்பொருளின் தன்மைகள் முழுவதையும் ஆழ்வார் மனதில் கண்டு உயர்ந்த பிரமாண மாகிய வேதத்தின் சாயையிலே திருவாய்மொழியை அருளிச் செய்தார் என்று குறிப்பிட்டு இருப்பதைக் காணலாம். (திருவாய்மொழி நூற்றந்தாதி. 1).

05

உபநிஷத்துக்களின் சாரமே திருவாய்மொழி

பொதுவாக ‘உபநிஷத்து’ என்பதற்கு ரகசியம் என்று பொருள். ‘கர்மே ரகஸ்யுபநிஷத்’ என்று அமரகோசம் (3-3-93) கூறுகிறது. உபநிடதங்கள் வேதங்களின் சாரமாகும். அதனால் அவை கற்றுக் கொள்பவர்களின் தகுதியைப் பார்த்து உபதேசிக்கப்பட்டன. உபநிடதங்களில் உள்ளதை மற்றவர்கள் அறியக்கூடாது என்பது மட்டு மல்லாமல், அதை அறிவதற்குரிய தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் உபநிஷதங்களை மறைத்துப் பாதுகாத்து வந்தனர். எனவே உபநிடதம் என்பது ரகசியம் அல்லது மெய்யறிவை ரகசியமாகத் தெரிவிப்பதாகும்.

‘உபநிஷத்’ என்ற சொல் ‘உப’ ‘நிஷத்’ என்று இரண்டு சொல்லாகி, ‘உப’ என்பதனால் ‘அருகில்’ என்றும் ‘நிஷத்’ என்பதனால் ‘உட்கார்ந்து’ என்றும் பொருளாய் ‘உபநிஷத்’ என்பதற்கு ஆசார்யன் அருகில் உட்கார்ந்து சீடனால் ஞானத்தைப் பெறுவதாகும்.

‘உப-ஸமீபே, நிஷத்ய - உபவிக்ய, ‘சிஷ்யேண ஆசார்யாத் க்ருஹ்யமானத்வாத் உபநிஷதிதி’ உபநிடதங் களிலுள்ள உண்மைப் பொருள்கள் ஒருவனுடைய புலன்களால் எளிதில் அறிய முடியாது என்றும், யோகப் பயிற்சியினால் உணர முடியும் என்றும் கடோபநிஷத்தும் (1-3-12), ச்வேதாச்வதர உபநிஷத்தும் (1-3) கூறுகின்றன. உபநிஷத் என்பது வேதங்களின் கடைசி பகுதியான வேதாந்தம் என்று முண்டகோபநிஷத் (3-2-3) கூறுகிறது. வேதாந்தமே பரம ரகசியம் என்று ச்வேதாச்வதர உபநிஷத் (5-22) கூறுகிறது. ஸ்ரீபாஷ்யத்துக்கு வியாக்யானம் இட்டருளிய சுதர்சனஸூரி என்னும் ஆசார்யர் ‘உபநிஷத்’ என்பதற்கு ‘ப்ரஹ்மணி உபநிஷண்ணேத் உபநிஷத்’ என்று பொருள் வழங்குகிறார். அதாவது ப்ரஹ்மத்தின் அருகில் இருப்பது; ப்ரஹ்மாநுபவம் - ப்ரஹ்மாநுபவமாவது எம்பெருமானின் பெருமை, வடிவம், குணங்கள், செயல்கள் ஆகியனவற்றை அனுபவிப்பதாகும். ‘அத்வாரக பகவத்ப்ரதி பாதகத்வம் உபநிஷணத்வம்’.

இங்ஙனே எம்பெருமானுடைய மென்மை, ஆற்றல், அடியார்களிடம் அவன் கொள்ளும் அன்பு, அருள், அழகு முதலான குணங்கள் உபநிஷத்துக்களில் நிதி சேமித்து வைப்பது போல் ரகசியமாக இருப்பதை, ‘ந்யதா4யிஷத யே கு3ணா நிதி4நிதா4யமாரண்ய கேஷு’ என்று பட்டர் ஸ்ரீரங்க ராஜஸ்தவ உத்தர சதகத்தில் (36) அருளியது நினைத்தற் பாலதாகும். இதில் ஆரண்யகம் என்று உபநிஷத்துக்களைச் சொல்லுகிறது; ஆரண்யகத்தில் ஓதப்பட்டவை என்று காரணப் பெயர்.

இன்னோரென்ன காரணங்களாலே திருவாய்மொழி - வேதத்திற்கு நிகரானதாக பூர்வாசார்யர்களால் அறுதியிடப் பட்டுள்ளது.எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனனால் ‘மயர்வற மதிநலம் அருளப்பெற்ற’ நம்மாழ்வாரே, ‘வேதம் தமிழ் செய்த மாறனா’வார். இந்த உண்மையை, அவருடைய சீடராக வாழ்ந்த மதுரகவியாழ்வாரின் ‘அருளினான் அவ்வருமறையின் பொருள்’ (கண்ணிநுண்சிறுதாம்பு- 8) என்னும் சொற்றொடரின் வாயிலாக அறிகிறோம். மேலும், வழக்கொழிந்து போயிருந்த, நாலாயிர திவ்யப்பிரபந்த பாசுரங்களை, நம்மாழ்வாரிடமிருந்து, தம்முடைய யோக சக்தியால் நமக்குப் பெற்றுத் தந்தவர் ஸ்ரீமந்நாதமுனிகள். அவரும், ‘‘வேதம் தமிழ் செய்த மாறன், சடகோபன்’’ (கண்ணிநுண்சிறுதாம்பு- தனியன்) என்று கொண்டாடு கிறார். இவர்களைத் தவிர, நம்மாழ்வார் காலத்திற்குப் பிற்பட்டவர் களான, திருவரங்கத்தமுதனார், ஸ்ரீமணவாள மாமுனிகள் மற்றும் அப்பிள்ளை ஆகியோர் ‘‘மாறன் வேதத்தைத் தமிழ் செய்ததை’’ கொண்டாடியுள்ளனர்.

‘எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை’ (இராமாநுச நூற்றந்தாதி- 18), என்று அமுதனாரும், ‘சீராரும் வேதந் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன்’ (உபதேச ரத்னமாலை-14) என்று மாமுநிகளும், ‘‘வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தோன் வாழியே’’ என்று வாழி திருநாமத்தில் அப்பிள்ளையும் போற்றிப் பாடியிருப்பது, இங்கே கருத்தில் கொள்ளத் தக்கவை. இந்த சான்றா தாரங்களை அடியொற்றியே, இந்த நூல் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்னும் தலைப்பைப் பெறுகிறது.

‘‘வேதம் தமிழ் செய்த மாறன்’’ -உச்சரித்துப் பார்க்கையிலேயே, நாவிலும், நெஞ்சிலும் இனிமையை விளைவிக்கும் சொற்றொடர்! மிகப்பெரிய மூன்று பொருள்களைத் தன்னுள் கொண்டுள்ள ஓர் சீர்மிகு தலைப்பு.

வாழ்வதற்கு-இவ்வுலகிலும், அவ்வுலகிலும்- கற்றுத்தரும் வேதம், தேனிலும் இனிய தமிழ், மற்றும் பரம்பொருளை நமக்குக் காட்டித்தந்த, ‘மாறன்’ என்ற பெயர்கொண்ட, நம்மாழ்வார். இப்படியாக தெளிவுபடுத்தும் ஒர் பாதை, ஓர் மொழி மற்றும் ஓர் ஆழ்வார் என மூன்று விஷயங்களை அறிவிக்கப்போகும் ஒர் தலைப்பு! முக்கனி களான மா, பலா, வாழை ஆகியவை நாவிற்கு ஊட்டும் சுவையைப்போல, இந்த தலைப்பின் கீழ் இனி விவரிக்கப் படவுள்ள பொருள், கற்போரின் மனதிற்கும், அறிவிற்கும் சிறந்ததோர் அநுபவத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

முக்கனிகளில், திருத்தி எடுத்துச் சுவைப்பதற்கு சற்றே கடினமானது பலா. வேதம் இந்த பலாப்பழத்தைப் போன்றது. வேதத்தை அறிவதும், கற்பதும், நினைவில் கொள்வதும், மீண்டும் ஒப்புவிப்பதும் கடினமானது; ஆனால், அதில் காட்டித்தரப்பட்டிருக்கும் பொருட்செறிவு, பலாச்சுளை போல, சுவையே வடிவானது.!

இனி இந்த வேதங்களைக் குறித்து ஓர் எளிய அறிமுகத்தைக் காணலாம்:-

06

வேதங்களும் அவற்றின் தொகுப்புகளும்

அ. ‘வேதம்’ என்றால் என்ன?

‘வேதம்’ என்னும் சொல்லிற்கு, ‘வேர்’ ஆக இருப்பது, ‘வித்’ என்னும் சொல். ‘வித்’ என்றால், அறிதல், கற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றைக் குறிக்கும். எது கற்றுத் தருகிறதோ, அதுவே வேதம். ‘‘வேத்யதி இதி வேத:’’ என்னும் சொற்றொடர் இதையே சுட்டிக்காட்டுகிறது. வேதம், எதைக் கற்றுத்தருகிறது? என்றால், எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது. இவ்வுலகில் விரும்பியவற்றைப் பெற்று வாழவும், இவ்வுலக விருப்பங்களைத் துறந்து, முக்தியடையும் நிலைக்கு கொண்டு செல்வது வரை எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது. வேதம் கற்றுத் தருவது, இரண்டு விஷயங்களாக இருப்பதால், அதன் பகுதிகளும் இரண்டாக உள்ளன. முதல் பாகம், ‘கர்ம காண்டம்’ என்பது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றையும், இரண்டாம் பாகமான, ‘ஞானகாண்டம்’ வீடுபேறு அடையும் வழியையும் கற்றுத்தருகின்றன. இவை, முறையே, ‘பூர்வ மீமாம்ஸை’, ‘உத்தர மீமாம்ஸை’ என்றும் அழைக்கப்படுகின்றன. வடமொழியில், ‘மீமாம்ஸம்’ என்றால், ‘ஆராய்தல்’ என்று பொருள்படும் (விசாரித்து அறிதல் என்று பொருள்படும். ஆராய்தல் என்பது பர்யாயச்சொல்.).

ஆ. வேதத்தை இயற்றியது யார்?

  வேதத்தை இயற்றிய ஆசிரியர் இன்னார் என்று குறிப்பிட்டு சொல்வதற்கு இயலாது. வேதம் உண்மையில், ‘‘அபௌருஷேயம்’’ எனப்படுகிறது. அதாவது, ஓர் புருஷனால் சொல்லப்பட்டது அல்ல. ஓர் புருஷனால் உண்டு பண்ணப்படாததால், இதில் மூன்றுவிதமான குற்றங்கள் காணப்படுவதில்லை.

அவை, ப்ரமம், ப்ரமாதம் மற்றும் விப்ரலிப்ஸை எனப்படுபவை. ஒன்றை மற்றொன்றாக அறிவது ‘ப்ரமம்’. சொல்ல வந்ததை எண்ணப்பிசகாலோ (சொல்லவந்தக் கருத்தை கூறாமல் வேறொரு கருத்தை வெளிப்படுத்துதல்), வார்த்தைப்பிசகாலோ (சரியான சொற்களைப் பயன் படுத்தாது வேறொரு சொல்லை பயன்படுத்துதல்) மாற்றிச் சொல்வது ‘ப்ரமாதம்’. ஒருவரை வஞ்சிக்க வேண்டும் என்கிற எண்ணத் துடன் தவறான பொருளைச் சொல்வது ‘விப்ர லிப்ஸை’. ஓர் மானுடனால் சொல்லப்பட்ட கருத்துக் களில், இந்த மூன்று குற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. ஆனால், வேதம் ஓர் மானுடனால் உண்டுபண்ணப் படாததால், இந்தக் குற்றங்கள் வேதத்திற்கு இல்லை. எனவே, வேதம் எந்தப் பொருளையும் விளக்கும், ஓர் மிகச்சிறந்த சான்றாதாரமாக (ப்ரமாணமாக) அமைகிறது.

‘யாருமே இயற்றவில்லையென்றால்’ இந்த வேதங்கள் வந்ததுதான் எவ்வாறு? எனில், இதை, அந்த ‘பரமபுருஷனே வெளியிட்டான்’ எனப்படுகிறது. ஆனால், உண்மையில், வேதம் ஈச்வரனாகிய பரமபுருஷனாலும் செய்யப்பட்ட தன்று. ‘‘யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம். யோவை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை’’ ‘ச்வேதாச்வதரம்’- ‘எவனொருவன் சதுர்முகப்ரஹ்மனை முன் படைத்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறானோ’ என்னும் ப்ரமாணத்தால், ஆரம்பத்தில் முன்பே இருந்த வேதத்தை நினைவு கூர்ந்து, அதை நான்முக ப்ரஹ்மனுக்கு ஈச்வரன் உபதேசித்தான்’ என்று அறியப்படுவதால், ஸர்வேச்வரனும் வேதத்தை உண்டுபண்ண வில்லை. வேதம் நித்யமானது; அபௌருஷேயமானது. இதனால் அதற்கு காரண தோஷமும், தவறான அறிவைக் கற்பிப்பது என்னும் தோஷமும் இல்லை.

‘அநாதியான இந்த வேதத்தை, இன்று ஓதப்படும் நிலையில் நம்மிடம் கொண்டு சேர்த்தவர்கள் யார்?’ என்னும் கேள்வி எழுகிறது. இவ்வாறு, இன்று வரையிலும் வேதம் ஒலிக்கும்படிச் செய்தவர்கள், ரிஷிகள் என்று அறியப் படுகிறது. இந்த ரிஷிகள், புலன் உணர்வுகளை வென்று, மிக ஆழ்ந்த த்யானத்தில் ஈடுபட்டு, மெய்மறந்த நிலையில் இருக்கையில், அவர்களுக்கு இந்த வேதங்கள் வெளிப் படுத்தப்பட்டன.

அவர்கள், அவற்றை, ‘ஒலிக்கூட்டங்களாக’-’சப்த ராசிகளாக’ அறிந்தார்கள். எந்த முயற்சியையும் மேற் கொள்ளாத நிலையிலும், அவர்கள் ஓர் பேரின்ப நிலைக்கு உயர்த்தப் பட்டார்கள். அண்டத்தின் தொடர்பான ரகசியங்களும், புதிர்களும் அவற்றிற்கான விடைகளும் அவர்களுக்கு எதிரில் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் காணக் கிடைத்தன. இப்படி வேதத்தை அறிந்த ரிஷிகள், அவற்றை, தம் மாணாக்கர் களுக்கு, ஒலி மாறுபாடு கொள்ளாமல், பொருள் மாறாமல் போதித்தார்கள். இந்த மாணாக்கர்கள் ஆசிரியர்களாகி, தம் மாணாக்கர்களுக்கு- இவ்வாறு ஆசிரியர்-மாணாக்கர் வழியாக- வேதங்கள் நம்மை வந்தடைந்துள்ளன.

இ. வேதம் தோன்றிய காலம்

வேதம் தோன்றிய காலத்தை உறுதிபடக் கூற இயலாது. நமது வேதங்களை ஆராய்ச்சி செய்த ஜெர்மனியரான மேக்ஸ் முல்லர், நம் வேதங்கள் தோன்றிய காலத்தைக் கண்டுபிடிக்க முயன்று, இறுதியில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரமுடியாமல், வேதங்கள் தோன்றிய காலத்தைத் திட்டவட்டமாக யாராலும் கூற இயலாது என்று முடிவு கட்டிச் சொல்லி விட்டார்.

ஈ. நான்கு வேதங்கள்

எண்ணற்ற கிளைகளையும், உபகிளைகளையும் கொண்ட வேதத்தைக் கற்பதற்கு, சற்றே எளிதாக்கும் கருணை உள்ளத்தோடு, வேதவியாச பகவான், வேதத்தை நான்காக, துவாபரயுகத்தின் முடிவில் பிரித்து அருளினார். அவை, ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண வேதங்களாகும். வேதவியாசர், விரிந்து பரந்த வேதத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்த பின்பு, அவற்றைத் தம் சிஷ்யர்களுக்கு வழங்கினார். அவை ஆசார்ய-சிஷ்ய பரமபரையாக இன்றுவரை வழக்கிலிருந்து வருகின்றன. வேதவியாசர் ரிக் வேதத்தை ‘பைலர்’ என்னும் சிஷ்யருக்கும், யஜுர் வேதத்தை ‘வைசம்பாயன’ருக்கும், சாம வேதத்தை ‘ஜைமிநி’க்கும், அதர்வண வேதத்தை ‘சுமந்து’ விற்கும் வழங்கினார்.

உ. வேதத்தின் சாகைகள்

இப்படி, ‘வாய்வழி’யாக, ரிஷிகள் வேதங்களை போதித்தது, ‘சாகைகள்’ அல்லது ‘பாடங்கள்’ என்று வழங்கப் படுகின்றன. ஒவ்வொரு ஆசிரியரும் அல்லது ஆசிரியர் குழுவும், தம்முடைய சாகைகளைக் கற்றுத்தருவதன் மூலம் புகழைப்பெற்றார்கள். அவற்றை, முறையே தம் மாணவர் களுக்குக் கற்றுத்தந்தார்கள். இந்த பல்வேறு சாகைகளுக்குள், ஒலியில் வேறுபாடு இருந்தாலும், பொருளில் மிகப்பெரிய வேறுபாடு ஏதும் கிடையாது. இந்த சாகைகளின் எண்ணிக்கை யிலும் வேறுபாடு காணப்படுகிறது. முக்திகோபநிஷத்தின் கருத்துப்படி, வேதத்தில் 1180 சாகைகள் இருந்தன. அவற்றில் மிகச் சிலவே தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. பதஞ்சலி முனிவரின் கூற்றுப்படி, ரிக் வேதத்திற்கு 21 சாகைகளும், யஜுர் வேதத்திற்கு 101 சாகைகளும், சாம வேதத்திற்கு 1000 சாகைகளும், அதர்வண வேதத்திற்கு 9 சாகைகளும் வழங்கி வந்தன.

சடகோபன் அருளிச்செய்த ‘திருவாய்மொழி’ திவ்யப்பிரபந்தம் சாம வேதத்தின் சாரம் எனப்படுகிறது. இதை, நமக்குக் காட்டித்தரும் சொற்றொடர்கள்:- ‘‘சந்தங்கள் ஆயிரம்’’, ‘‘ஆன்ற தமிழ்மறைகளாயிரமும்’’ (பராசர பட்டர்). ‘‘அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்’ (மதுரகவியாழ்வார்).

சௌனகர் என்ற ரிஷியின் எண்ணப்படி, ரிக் வேதத்திற்கு 5, சாகைகளும், யஜுர் வேதத்திற்கு 42 லிருந்து 44 சாகைகளும், சாம வேதத்திற்கு 12 சாகைகளும், அதர்வண வேதத்திற்கு 9 சாகைகளும் உள்ளன.

ஊ. வேதங்களைக் கற்கும் முறை

வேதங்களால் ஏற்படக்கூடிய பயனைப் பெறுவதற்கு, அதில் உள்ள மந்திரங்கள் சரியான ஒலியோடும், அளவோடும் உச்சரிக்கப்படவேண்டும். இல்லையேல், விரும்பும் பயன் கிடைக்காததோடு, எதிர் விளைவுகளும் ஏற்படக்கூடும். இதற்காக பல வழிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவை, பத பதம், க்ரம பதம், கன பதம், ஜட பதம் போன்றவைகள். இந்த க்ரமத்தைப் பின்பற்றுவதன் வாயிலாக, இன்றும் வேத மந்திரங்களின் உச்சரிப்பு மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எ. வேதத்தின் வடிவம்

  வேதத்தின் வடிவம் ‘ச்ருதி’ என்று அழைக்கப் படுகிறது. வேதங்களில் ஸம்ஹிதை, ப்ராஹ்மணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிஷத்துக்கள் ஆகியவை காணப் படுகின்றன.

அ. முதல் பாகமான ஸம்ஹிதை என்பதே மிகவும் பழமை யானது. இது மந்த்ரங்கள், ஸூக்தங்கள் ஆகியவற்றைக் கொண்டது.

ஆ. இரண்டாவது ப்ராஹ்மணங்களின் பகுதி. இது சடங்குகளை மேற்கொள்ளும் முறையைக் கற்றுத் தருகிறது.

இ. மூன்றாவது, ஆரண்யகம். இவை ப்ராஹ்மணங்களை ஒத்தவை. காடுகளில் இயற்றப்பட்டவை-ஓதப்படுபவை.

ஈ. நான்காவதும் இறுதியானதுமான உபநிஷத் பகுதி தத்வபரமானது. இது ப்ரஹ்ம காண்டம் என்று அழைக்கப் படுகிறது.

இவற்றுள் ஸம்ஹிதைகளும், ப்ராஹ்மணங்களும், வேதச்சடங்குகளைக் கற்பிக்கும் கர்ம காண்டத்துடன் தொடர்பு கொண்டவை. ஆரண்யகங்களும் உபநிஷத்துக் களும் முறையே உபாசனையையும் ஞானத்தையும் போதிக் கின்றன. ப்ரஹ்மகாண்டத்தின் பொருளை உரைக்கின்றன. இவை இரண்டும் தேவையான ஞானத்தை வழங்கி, முக்திக்கு வழிகாட்டுகின்றன.

  வேதத்தின் நான்கு பகுதிகள், ஓர் அழகான உவமை யால் வர்ணிக்கப்படுகின்றன. ஸம்ஹிதை மரத்திற்கு ஒப்பிடப் படுகிறது. ப்ராஹ்மணங்கள் மலர்களுக்கும், ஆரண்யகங்கள் கனியாத பழங்களுக்கும், உபநிஷத்துக்கள் கனிந்த பழங் களுக்கும் ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றன. ஓர் மரத்தில் கனிந்த பழங்களைக் காட்டிலும், இலைகளும், மலர்களும் அதிக எண்ணிக்கையில் காணப்படுவது போல, கர்ம காண்டமும், உபாஸனா காண்டமும், ஞானகாண்டத்தை விட அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

வேதங்களின் நான்கு பகுதிகள், மனித வாழ்க்கையில் காணப்படும் நான்கு ஆச்ரமங்களுடன் ஒத்திருப்பது காட்டப்படுகிறது. முதல் பகுதியான ஸம்ஹிதை, ப்ரஹ்மச் சரிய ஆச்ரமத்தை ஒத்தது. ஏனெனில், இவர்களே கட்டுப்பாட்டுடன் கூடிய தூய வாழ்வை மேற்கொண்டு, மந்திரங்களை உச்சரிப்பவர்கள். இரண்டாவது ஆச்ரமமான க்ருஹஸ்தர்கள், ப்ராஹ்மணா பகுதியில் ஆணையிடப்பட்ட கட்டளைகளுக்கு ஏற்ப வேள்விகளை, ஆற்ற வேண்டிய வர்கள். மூன்றாவது ஆச்ரமமான வானப்ரஸ்தத்தைச் சேர்ந்தவர்கள், ஆரண்யகங்களில் காணப்படும் உண்மை குறித்து சிந்திக்க, காடுகளுக்குச் சென்று, ஏகாந்தமாக, மோக்ஷத்தைக் குறித்து சிந்திப்பவர்கள். நிறைவாக: நான்காவது ஆச்ரமத்தைச் சேர்ந்த ஸந்நியாசிகள், உபநிஷத்தில் காணப்படும் மிக உயர்ந்த உண்மையை அடைய, முக்தியை வேண்டுபவர்கள்.

ஏ. இனி ஒவ்வொரு வேதத்தினுடைய வடிவத்தையும், தனித்தனியாகக் காணலாம்:

ரிக் வேதம்

‘ரிக்’ என்னும் சொல், ‘ரி’ என்பதை வேராகக் கொண்டது. இதன் பொருள், ‘புகழ்வதற்காக’ என்பதாகும். ரிக்வேத மந்திரங்களை உச்சரிக்கும் குருவானவர் ‘ரித்விக்’ என்று அழைக்கப்படுகிறார்.

  ரிக் வேதமே மிகவும் பழமை வாய்ந்தது. ரிக் வேதத்தில் பல்வேறு தேவதைகளை வழிபடும் மந்திரங்கள் உள்ளன. இவை, ‘‘ஸூக்தங்கள்’’ எனப்படுகின்றன. ரிக் வேதத்தில் உள்ள ஸூக்தங்களின் எண்ணிக்கை 1028 ஆகும்.

இந்த 1028 ஸூக்தங்கள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை மேலும் 85 அநுவாகங்களாக அல்லது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 10 மண்டலங்களில், 2-லிருந்து, 7 வரையிலான ஆறு மண்டலங்கள், இவற்றைக் அறிந்த ரிஷிகள் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல் களுக்கு (பரம்பரையினருக்கு) ஏற்றவாறு தொகுக்கப் பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக, 3-வது மண்டலத்தில் உள்ள ஸூக்தங்கள் விச்வாமித்ரருக்கும் அவருடைய வழித்தோன்றல்களுக்கும் வெளிப்பட்டவை (காட்சி கொடுத்தவை).

இந்த மண்டலங்களிலுள்ள ஸூக்தங்கள், எந்த எந்த தேவதையின் வழிபாட்டிற்காக உள்ளதோ, அதற்கேற்ப தொகுக்கப்பட்டுள்ளன. இதில் முதலில் வருவது அக்நி தேவதைக்கான ஸூக்தம்; பின்பு, இந்திரனுக்கானது. இதைத் தொடர்ந்து மற்ற தேவதைகளுக்கானவை. இந்த ஸூக்தங் களின் ஒழுங்கமைவு, ஓர் குறிப்பிட்ட வகையில் உள்ளது. இவை எல்லாமே, ஒரு ஸூக்தத்திலுள்ள ரிக்குகளின் கணக்கு. ‘இறங்கு முகமாக’ இருக்கும்படி அமைந்துள்ளன. உதாரணமாக முதல் அக்நிக்கான ஸூக்தத்தில் 16 ரிக்குகள் உள்ளன. இறுதியான அக்நிக்கான ஸூக்தத்தில் ஆறு ரிக்குகள் மட்டுமே உள்ளன.

இதைத்தவிர, இன்னுமொரு பாகுபாடும் உண்டு. இதன்படி, இவை (ஸூக்தங்கள்) எட்டு அஷ்டகங்கள் (எட்டுத் தொகை) அல்லது காண்டப் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவை மேலும் பல அத்யாயங்களாக பிரிக்கப் படுகின்றன. அவை மேலும் 2006 வர்கங்களாக அல்லது வகுப்புகளாக பிரிக்கப்பட்டு, அவற்றில் 10,417 ரிக்குகள் அல்லது அடிகள் மற்றும் 1,53,826 பதங்கள் அல்லது சொற்கள் உள்ளபடி பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த ரிக் வேதத்தில், 10-வது மண்டலத்தில் உள்ள ஸூக்தங்களில், மிக உயர்ந்த பரப்ரஹ்மத்தைக் குறித்த குறிப்புகள் காணப்படுகின்ற போதிலும், இந்த வேதத்தில் பொதுவாக, இயற்கையின் வலிமைகளைத், தம் கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருக்கும் தேவதைகளின் வழிபாடு, அதிகமாகக் காணப்படுகிறது. இந்த வேதத்தில் உள்ள ரிக்குகளின் வாயிலாக, ரிஷிகள் அந்த குறிப்பிட்ட தேவதைகளின் பலத்தால், திறமையால், தமக்கும் தம் சமூகத்திற்கும், நன்மையும் வலிமையும் கிடைக்கும்படிச் செய்து கொண்டார்கள். இருளுக்கும் ஒளிக்கும், குளிருக்கும் வெப்பத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில், தங்களைக் காப்பாற்ற, இந்த தேவதைகளை வழிபட்டார்கள். இதற்குக் கைமாறு காட்டும் வகையில், அந்தந்த தேவதை களின் புகழ் பாடி தமது நன்றியினை செலுத்தினார்கள்.

இவ்வாறு வழிபடப்படும் தேவதைகளுக்குள் முக்கிய மானவர்கள், அக்நி, இந்திரன் மற்றும் சூரியன் ஆகியோர். இவர்களுக்குள்ளும் மற்ற எல்லோரைக்காட்டிலும் அதிகமான துதிப்பாடல்களைப் பெற்றவன் அக்நியாவான். இவன், வீடுகளில் உபயோகப்படும் நெருப்பாக மதிக்கப்படும் போதிலும், இவன் முக்கியமாக வேள்வியில் உள்ள தீயாக வணங்கப்படுகிறான். வெப்பத்தைத் தருபவன் என்பதால், சூரியனுடன், அக்நியானவன் சமமாக மதிப்பைப் பெற்ற போதிலும், சூரியன் ‘வானிலுள்ள தீ’ என்னும் வகையில், அதிக மதிப்பைப் பெறுகிறான். மழை மற்றும் பனி ஆகிய வற்றைக் கொண்ட வானின் பருவநிலையைக் கட்டுப் படுத்தும் தேவதையாக இந்திரன் வணங்கப்படுகிறான்.

இந்த தேவதைகளுக்குள் மிகவும் புராதனமானவராக இருப்பவர், ‘‘த்யாவா ப்ருத்வீ’’ எனப்படும், ஸ்வர்க்க லோகத்தின் தந்தை. வானுலகின் அரசர். மற்றவர்கள் எல்லையற்ற பரப்பின் தேவதையான அதிதி, நீர் நிலைகள் மற்றும் மழையை மேற்பார்வை பார்க்கும் வருணன், ‘‘உஷஸ்’’ எனப்படும் விடியற்காலை தேவதை. இவள் ஆகாசத்தின் மகள். இரண்டு அச்வினி தேவர்கள். இவர்கள் சூரியனின் இரட்டைப் புதல்வர்கள். எல்லாவற்றின் தாயாகப் போற்றப்படும் பரந்து விரிந்திருக்கும் ‘ப்ருத்வி’ என்னும் தேவதை. மருத்துகள் அல்லது ‘‘புயல்’ தேவதைகள், காற்றின் உருவகப்படுத்தல். வ்ருத்ரனின் பகைவர்கள், வறட்சி மற்றும் விரோதமான பருவநிலைக்குக் காரணமான தேவதைகள். இவர்கள் இந்திரனுடன் எல்லா வகையிலும் கருத்து வேறுபாடு கொண்டவர்கள். ருத்ரன் என்னும் பெரு ஓசையிடும், கோபம் கொண்ட கடவுள். இவர் புயலையும் சூறைக்காற்றையும் ஆள்பவர். யமன், மரணத்தை மேற்பார்வை பார்ப்பவர். புறப்பட்டுச் சென்ற ஆத்மாக்கள் கணக்கு வழக்குகளைப் பார்த்து, நீதி வழங்குபவர். இறுதியாக ‘சோமன்’ இவர் சோமரசத்தின் உருவகமாக வழிபடப்படுபவர்.

இந்த, ‘சோமன்’ (சந்திரன்) அதிகமான (115) ஸூக்தங்களைப் பெற்றிருக்கிறார். ஒரே ஸூக்தத்தில் பல தேவதைகளைப் பற்றிய துதிகள் வருவதும் உண்டு. அப்படிப்பட்ட ஸூக்தங்கள் 108. விச்வதேவர் என்ற ஒரு தேவர் குழுவைத் தேவதையாகக் கொண்ட ஸூக்தங்கள் 68. அச்வினிக்கு 51 ஸூக்தங்கள்; மருத்துக்களுக்கு 32, மித்ரா வருணர்களுக்கு 20, உஷஸ்க்கு 19, இந்திராக்நிகளுக்கு 13, ஸவிதாவுக்கு 11, ஆப்ரீ (அக்நி) ஸூக்தங்கள் 10, ரிபுக்களுக்கு 10, இந்திராவருணர்களுக்கு 9, வருணனுக்கு 8, பூஷாவுக்கு 8, வைச்வாநரனுக்கு 8, த்யாவாப்ருதிவிக்கு (ஆகாயம்/பூமி) 7, சூரியனுக்கு 6, வாயுவுக்கு 5, ஆதித்யர்களுக்கு 5, ப்ரஹஸ்பதிக்கு 5, ஜலத்துக்கு 4, ப்ரஹஸ்பதிக்கு 4, இந்திரா வாயுக்களுக்கு 4, விஷ்ணுவுக்கு 3, ருத்ரனுக்கு 3, இந்திரா விஷ்ணுக்களுக்கு 3, ததிக்ரானுக்கு 3, பர்ஜன்யனுக்கு (இடி)3, சரஸ்வதிக்கு 3, இந்திர வைகுண்டனுக்கு 3, கிராவாணங்களுக்கு 3, குதிரை, அக்நிசோமன், தானம், கபிஞ்சலா, (பறவைகள்) வசிஷ்டர், பாவ வ்ருத்தம் (சிருஷ்டி) ராஜா, மன்யு, விச்வகர்மா, ரக்ஷோகாக்நி- இவர்களுக்குத் தலா 2 வீதம் ஸூக்தங்கள் 20.

ச்வநயோ பாவயவ்யன் (ப்ருகு வம்சத்தைச் சேர்ந்த ஒரு ரிஷி), விஷக்கிருமிகள், அபாம்நபாதன் (அக்நி), க்ஷேத்ரபதி, நெய், ப்ருதிவீ (பூமி), போர்க்கருவிகள், வாஸ்து, தவளைகள், ஹவிர் தானங்கள் (வண்டிகள்) பித்ருக்கள், சூதாட்டம், மித்ரன், எமன், இரவு, மனம், ஓஷதிகள், புருஷன், கேசிநி, வேநந், பசுக்கள், மாயா பேதம், தார்க்ஷ்யன், தக்ஷிணை, சரமை (இந்திரனின் வேட்டை நாய்), ப்ரஜாபதி, வாக் (ஆத்மா), ஸபத்நிவாதநம் (சக்களத்தியை அழிப்பது), அரண்யானி (வன தேவதை), சிரத்தை, ஜீவாத்மா, சசி, கர்பரக்ஷணம், நதிகள், யக்ஷ்மநாசனம் (எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் ஸூக்தம்), துர்ஸ்வப்நங்கள் (தீய கனவுகள்), சபத்ந நாசனம் (எதிரியை அழிப்பதற்காகப் ப்ரார்த்தனை), ஞானம் இந்திரகுதிரைகள்- இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸூக்தம் வீதம் 39 ஸூக்தங்கள்.

ரிக் வேதத்திலுள்ள ஒவ்வொரு ஸூக்தமும் அதை முதலில் கண்ட ரிஷியின் பெயரோடு இணைக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, வசிஷ்டர், விச்வாமித்ரர், பரத்வாஜர் மற்றும் பலர். இவர்கள், இந்த ஸூக்தங்களில் தம் பெயரை இணைத்துள்ளனர். இவை பரம்பரை பரம்பரையாக ஓதப்பட்டு வந்தன. கிருஷ்ணத்வைபாயனர் எனப்படும் வேத வியாசர், இவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்திய பின்பும் இந்த முறை தப்பவில்லை. இந்த வேத மந்திரங்கள் எல்லாம் எப்பொழுது, முதன் முதலில் எழுத்து வடிவம் பெற்றன என்பது அறியப்படவில்லை.

ரிக் வேதத்தின் சிறப்பு:

ரிக்வேதமே, நமது ஸநாதந மதத்தின் முதல் நூலாக இருப்பதால், மற்ற வேதபாகங்கள் எல்லாம், அதனுடைய விளக்கமே என்பது தெளிவாகிறது. நமது ஸநாதந மதத்தின் முதல் நூல் என்ற வகையில், ப்ரமாணங்கள் விஷயத்தில் (சான்றாதாரங்கள் விஷயத்தில்) முதல் இடம் ரிக்வேதத் திற்குத்தான். மற்ற மூன்று வேதங்களும் ப்ரமாண விஷயத்தில் ரிக் வேதத்தை சார்ந்து நின்றே ப்ரமாணங்கள் ஆகின்றன. அதாவது ரிக் வேதத்தின் கருத்தை, மற்ற மூன்று வேதங்களும் விளக்கிச் சொல்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

நமது மதத்தில் உள்ள எந்த கொள்கைக்கும், எந்த நடைமுறைக்கும் ரிக் வேதத்தில் ஆதாரம் இருந்தால்தான், அந்தக் கொள்கையும், நடைமுறையும் வைதிக அடிப்படை கொண்டதாகக் கருதப்படும். ஆதாரம் இல்லையென்றால், அது அவைதிகமென்றும், மூடநம்பிக்கை என்றும் தள்ளப்படும். வேதம் ‘அபௌருஷேயம்’ என்பதாலும், நித்யமானது என்பதாலும், நமது மதத்தில் வேத பிரமாணமற்ற எந்த ஒரு நடைமுறையும் தவறாகி விடுகின்றது. எவ்வளவு விரிவாக எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையோரால் பின்பற்றப் பட்டிருந்தாலும், வேத ப்ரமாணம் இல்லாத கொள்கை விலை செல்லாது. அது ‘அவைதிகம்’ என்று புறக்கணிக்கப்படும்.

ரிக் வேதத்தின் சிறப்பை அறியவேண்டுமானால், பொதுவாக எல்லா வேதங்களின் பொருளை அறிய, நாம் வேதாந்தங்களின் உதவியை நாடவேண்டும். வேதாந்தங்கள் ஆறு. அவை சிக்ஷா, வ்யாகரணம், கல்பம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம் என்பவை. இவற்றில், ‘சிக்ஷா’ என்பது வேதத்தின் ஒலிக்குறிப்புகள் பற்றிய விபரம். வேதத்தைச் சரியாக உச்சரிக்க இது கற்றுத்தருகிறது. ‘வ்யாகரணம்’ என்பது இலக்கணம். சொற்களின் வகைகள், அவைகளை பகுதி -விகுதிகளாகப் பிரிப்பது போன்ற இலக்கண விஷயங்களை அறிய வ்யாகரணம் உதவுகிறது. ‘கல்பம்’ என்பது வேதத்தில் சொன்ன கர்மாக்களை அநுஷ்டிக்கும் விதத்தைத் தெளிவாக விளக்குகிறது. ‘சந்தஸ்’ என்பது செய்யுள் இலக்கணம். வேத மந்திரங்களில் அமைந்துள்ள செய்யுள் வடிவத்தைப் பற்றிய இலக்கணம் இது.

‘நிருக்தம்’ என்பது நிகண்டு என்று சொல்லப்படும். வேதத்தில் உள்ள சொற்களின் பொருளை அறியக் கற்றுத் தருகிறது. சொல்லின் உருவத்தைப் பல வகையாகப் பிரித்து, ஒரே சொல்லுக்குப் பல பொருளை ஏற்படுத்தும் வழியை ‘நிருக்த சாஸ்த்ரம்’ நமக்குக் காட்டுகிறது. வேதத்தின் பொருளை அறிவதில் நிருக்தத்தின் பங்கு மிகப் பெரியதாகும்.

இந்த ஆறு வேதாங்கங்களில், வேதத்தின் கடவுட் கொள்கையை நிர்ணயம் செய்யப் பெரிதும் உதவுவது நிருக்த சாஸ்த்ரமேயாகும். நிருக்தத்தில் தான் வேதத்தில் சொல்லப் பட்ட தேவதைகள் பற்றிய விளக்கம், விரிவாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

முதலில் நிருக்த சாஸ்த்ரத்தைப் பற்றி அறியலாம். நிருக்தம் என்பது வேதச்சொற்களின் பொருளை அறிய ஏற்பட்ட நூல். முற்காலத்தில் ஏராளமான நிருக்த நூல்கள் இருந்திருக்கின்றன. ஆனால், தற்போது நடைமுறையில் இருப்பது யாஸ்கரின் நிருக்த நூல் மட்டுமே. மற்றவை யெல்லாம் எப்படியோ மறைந்து விட்டன. யாஸ்கர் யார்? அவர் எக்காலத்தைச் சேர்ந்தவர் என்ற கேள்விகளுக் கெல்லாம் தெளிவாக விடையளிக்கும் அளவிற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. ஸாயனர் உள்ளிட்ட பலர் தங்கள் நூல்களில் யாஸ்கரின் நிருக்தத்தை மேற்கோள் காட்டுவதால், யாஸ்கரின் நிருக்தத்தைப் பற்றி அறிய முடிகிறது.

நிருக்தத்தின் அமைப்பு:- வேதச் சொற்களின் தொகுப்பான நிகண்டும், அவற்றுக்கு விளக்கமான நிருக்தமும் சேர்ந்தே ‘நிருக்தம்’ என்ற ஒரே பெயரில் அழைக் கப்படுகிறது. பெரும்பாலும், நிகண்டு நூலில் காணப்படும் சொற்களுக்கே யாஸ்கர் விளக்கம் எழுதியுள்ளார். சொற்களுக்கு விளக்கம் கூறும்போது, பெரும்பாலும் ரிக் வேத மந்திரங்களையே மேற்கோளாகக் காட்டுகிறார். மற்ற வேத பாகங்களிலிருந்தும் ஒரு சில மேற்கோள்களை எடுத் திருக்கிறார். தொகுக்கப்பட்ட க்ரமத்தின் அடிப்படையில், ரிக் வேதம் மிகப் பழமையானதாக இருப்பதாலும், மற்ற வேத பாகங்கள் எல்லாம் அதையே சார்ந்திருப்பதாலும், தன்னு டைய நிர்வசனத்திற்கு (பொருளை விளக்கிச்சொல்வதற்கு) ரிக் வேத மந்திரங்களையே மேற் கோளாகப் பயன்படுத்தி யிருக்கின்றார் யாஸ்கர்.

ரிக் வேதமே நமது ஸநாதந மதத்தின் முதல் நூல் என்ற வகையில், பிரமாண விஷயத்தில் முதல் இடம் ரிக் வேதத்துக்குத்தான். மற்ற மூன்று வேதங்களும் பிரமாண விஷயத்தில் ரிக் வேதத்தைச் சார்ந்து நின்றே பிரமாணங்கள் ஆகின்றன. அதாவது, ரிக் வேதத்தின் கருத்தை மற்ற மூன்று வேதங்களும் விளக்கிச் சொல்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

ரிக் வேதமே நமது ஸநாதந மதத்தின் முதல் நூலாக இருப்பதால் மற்ற வேதபாகங்கள் எல்லாம் அதனுடைய விளக்கமே.

ஒரு குறிப்பிட்ட ஸூக்தத்தின் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேவதையின் பெயரை வைத்தே, அந்த ஸூக்தம், அந்த தேவதையைப் பற்றியது என்பதை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

ரிக் வேத ஸூக்தங்களில் சில மந்திரங்கள் இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை வர்ணிக்கின்றன. நீர், நிலம், காற்று, ஆகாயம், பூமி என்ற பஞ்ச பூதங்களின் செயல் பாடுகளும் வர்ணிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், இயற்கையின் தோற்றங்கள், பஞ்சபூதங்கள், இவற்றோடு தொடர்புடைய தெய்வீக சக்திகளும் போற்றப்படுகின்றன. மேலும், பஞ்ச பூதமயமான இந்த ப்ரபஞ்சத்திற்கு அப்பால் இருந்துகொண்டு, தனது ஒரு அம்சத்தால், இந்த ப்ரபஞ்ச வஸ்துக்களுக்குள் அந்தர்யாமியாக இருந்து கொண்டு, அவற்றை இயக்கிக்கொண்டிருக்கும் பரமாத்மாவைப் பற்றியும் ரிக் வேதம் பேசுகிறது.

‘‘திடவிசும்பெரிவளி நீர்நிலம்இவைமிசை*
படர்பொருள்முழுவதுமாய் அவையவைதொறும்*
உடல்மிசைஉயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்*
சுடர்மிகுசுருதியுள் இவையுண்ட சுரனே’’
(திருவாய்மொழி 1-1-7)

‘‘பூநிலாயஐந்துமாய்ப் புனற்கண்நின்றநான்குமாய்*
தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய்*
மீநிலாயதொன்றுமாகி வேறுவேறுதன்மையாய்*
நீநிலாயவண்ணம்நின்னை யார்நினைக்கவல்லரே? (திருச்சந்த விருத்தம்-1)

மேலும் பஞ்சபூதமான இந்த ப்ராக்ருத உலகில் நிகழும் இயற்கை நிகழ்வுகளுக்குக் காரணமான தெய்வீக சக்திகள் எல்லாம், இந்த ப்ராக்ருத உலகைத் தாண்டி அப்ராக்ருத உலகில் இருந்து வரும் பரமனுடைய அளவற்ற சக்தியின் சிறு பகுதியே என்பதையும், வேத ரிஷிகள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ரிக் வேத மந்திரங்களி லிருந்து அறியமுடிகிறது.

‘அந்த பரமன், வேதத்தில் சொல்லப்படுகின்ற தேவதைகளுக்குள் ஒருவனா? அல்லது அவர்களைவிட வேறானவனா?’ என்பதை ஆராய்ந்தால், மற்ற தேவதைகளை விடத் தனித்தன்மை வாய்ந்தவனாகவும், மற்றவர்களைவிட வேறானவனாகவும் இருப்பதுடன், அவர்களுக்குள் ஒருவனாக வும் இருக்கிறான் பரமன், என்பதை வேத மந்திரங்களால் தெளிவுபெற முடிகிறது.

ரிக் வேதத்தின் பக்கங்களைப் புரட்டினால் நம் கண் முன்னே பால்வெளி மண்டலத்தை (Milkyway galaxy) நேரடியாகக் காண்பது போல், பேரொளி மிக்க ஓர் உலகை நாம் நமது மனக்கண்ணில் காணமுடியும். காரணம், அதில் சொல்லப்பட்ட தேவதைகள் அனைவருமே பேரொளி மிக்கவர்கள். ஒளியில்லாத தேவனே இல்லை. ‘‘தேவ’’ என்ற சொல்லே ‘ஒளியுள்ளவன்’ என்ற பொருள் கொண்டது. ‘தேவ-தீபநாத்’ (யாஸ்க நிருக்தம்) ‘விளங்கும்படிச் செய்வது’ என்று பொருள். ஒளியுடன் இவர்கள் இருப்பதாலேயே, இவர்களின் செயல்பாடுகளும், விளங்குகிறது. ஒளியே இல்லாத ஒரு உலகில், நாம் இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். ஏதாவது விளக்கம் பெறுமா?

ஒரு பொருளைக் காண ஒளி தேவைப்படுகிறது. அப்பொருளைப் பார்க்க முடிந்தபின் தான், அப்பொருளைப் பற்றிய விபரத்தை நாம் கூறுகிறோம். ஆகவே அறிவு வேலை செய்ய புறஒளி அவசியமாகிறது. புறஒளியே அகவொளி விரிவதற்கும் காரணமாகிறது. ஒளியில்லை என்றால் சிருஷ்டி ஏது? வேதம் ஏது? வ்யாக்யானம் ஏது? சிருஷ்டி தொடக்கத்தில், ஒளிதான் முதலில் தோன்றியது என்று வேதமே கூறுகிறது.

‘‘கீ3ர்ணம் பு4வநம் தமஸா பகூ3ள்ஹ மாவி: ஸ்வரப4வஜ்ஜாதே அத்3நௌI தஸ்ய தே3வா: ப்ருதிவீ த்3யௌருதாபோ(அ)ரணயந்நோஷதீ4:ஸக்யே அஸ்ய II’’ (ருக்.10-88-2)

 இருளால் விழுங்கப்பட்ட உலகம் மறைந்திருந்தது. அக்நி பிறந்ததும், ஒளி தோன்றியது. தேவர்கள், சோதி, புவி, ஜலம், ஓஷதி இவையெல்லாம் அவனது நட்பில் மகிழ்வெய்தினர் என்பது இந்த மந்திரத்தின் பொருள். ஆகவே, ஒளியின் முக்யத்வம் ரிக் வேதத்தில் பல இடங்களில் விரிவாகப் பேசப்படுகிறது.

இந்திரன், அக்நி ஆகியோர் வலிமை மிக்க தேவர்களாகக் கொண்டாடப்பட்ட போதிலும், இவர்களைப் படைத்தவன் வேறு ஒருவன் என்பதை, ருக்வேத மந்திரம் காட்டித்தருகிறது.

அதிகப்படியான ஸூக்தங்களைக் கொண்ட இந்திரன் ஸர்வ சக்திமானாக வேதத்திலே போற்றப்பட்டாலும், பரம் பொருளுக்குரிய லக்ஷணங்கள் அவன் விஷயத்தில் கூறப்பட வில்லை என்பது தெளிவு. இந்திரன் படைக்கப்பட்டவனாக, பிறந்தவனாகவே வேதத்தில் குறிப்பிடப்படுகிறான். அதனால் இவனை படைத்த, பிறப்பித்த சக்தி வேறொன்று இருக்கிறது என்பது புலப்படுகிறது. கீழ்வரும் ருக்வேத மந்திரம், இதனை உறுதிப்படுத்துகிறது:

‘‘ததிதாஸ புவனேஷு ஜ்யேஷ்டம் யதோ ஜஞ்ஞ உக்ரஸ்த்வேஷந்ரும்ண:I ஸத்யோ ஜஞ்ஞாநோ நிரிணாதி சத்ரூந் அநுயம் விச்வே மதந்த்யூமா:II’’ (ருக்.10-120-1).

இதன் பொருள்:- ‘‘அதுவே எல்லா உலகங்களுக்கும் முதன்மையாக ஆதியில் இருந்தது. அதிலிருந்து ஒளியை வலிமையாக உடைய உக்ரன் (இந்திரன்) தோன்றினான். அவன் பிறந்தபோதே எதிரிகளை மாய்த்தான். அவனைக் கண்டு எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியடைந்தன. இதனால் இந்திரனைப் படைத்தது வேறொரு சக்தி என்பது தெளிவாகிறது. புகழ் பெற்ற காயத்ரி மந்திரம் ரிக் வேதத்தில்தான் உள்ளது.

யஜுர்வேதம்

  யஜுர் என்னும் சொல், ‘யஜுஸ்’ என்பதிலிருந்து கிடைக்கிறது. யஜுஸ் என்றால், மரியாதைக்குரியது, பூஜைக்குரியது. அல்லது ‘வேள்வி என்று பொருள்படும். இந்த வேதத்திலுள்ள மந்திரங்கள் கூட யஜுஸ் என்று அழைக்கப் படுகின்றன.

யஜுர் வேதமானது, ரிக் வேதத்திலிருந்து எடுக்கப் பட்ட ஸூக்தங்களை முழுமையாகத் தன்னுள் கொண்டது. ஆனால், இதில் சில உரைநடைப் பகுதிகளும் உண்டு. யஜுர் வேதத்தில் உள்ள மந்திரங்கள், மூலமான ரிக் வேதத்தில் காணப்படும் ஸூக்தங்களைக் காட்டிலும் மாறுபட்டுள்ளன.

யஜுர் வேதத்தை சமய குருவின் ஓர் அலுவலகப் புத்தகம் (Manual) என்று அழைக்கலாம். வேள்விகள் எவ்வாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்பது இதில் விரிவாகக் காணப்படுகிறது. இது பல சாகைகளை உள்ளடக்கியது. இதில் இரண்டு ஸம்ஹிதைகள் உள்ளன. அவை தைத்தரீய ஸம்ஹிதை, மற்றும் வாஜஸநேய ஸம்ஹிதை. இவை பொதுவாக முறையே, கிருஷ்ண யஜுர் வேதம் மற்றும் சுக்ல யஜுர் வேதம் என்றழைக்கப் படுகின்றன. இவற்றுள் முதலாவதாக கிருஷ்ணயஜுர் வேதம் மிகவும் புராதனமானது.

இதில் உள்ள இரண்டு ஸம்ஹிதைகளின் பொருள் களிலும் வேறுபாடு ஏதுமில்லை. ஆனால், அவற்றின் ஒழுங்கமைவு மாறுபட்டுள்ளது சுக்ல யஜுர் வேதத்தின் அமைப்பு அதிகமாக ஒழுங்குடனும், முறையுடனும் காணப்படுகிறது. கிருஷ்ண யஜுர் வேதத்தில் இல்லாத மந்திரங்கள் இதில் காணப்படுகின்றன.

தைத்ரீய ஸம்ஹிதை அல்லது கிருஷ்ண யஜுஸ் 7 காண்டங்கள் அல்லது நூல்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 82 ப்ரச்னங்கள் உள்ளன. 651 அநுவாகங்கள் அல்லது பகுதிகள் உள்ளன. ஓர் கட்டமைப்பு, 50 சொற்களை உள்ளடக்கியது ஓர் கண்டிகை. இதில் இவ்வாறான 2198 கண்டிகைகள் உள்ளன.

யஜுர் வேதமானது, இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது எவ்வாறு என்பது ஓர் கதை வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இந்த கதையை ஸ்ரீவிஷ்ணுபுராணமும், வாயுபுராணமும் கூறுகின்றன.

27 சாகைகளைக் கொண்ட யஜுர் வேதம், வைசம்பாய னரால், தாம் அறிந்த அனைத்தையும் தம்முடைய மாணாக்க ரான யாஜ்ஞவல்கியருக்கு போதிக்கப்பட்டது. பின்பு, வைசம்பாயனரின் ஆணைக்கு இணங்கி, யாஜ்ஞவல்கியர், தாம் கற்ற அனைத்தையும் ஒரு சமயத்தில் உமிழ்ந்தார். இது நெருப்புக் கோளங்களாக இருந்தன. இதைக் கண்ட வைசம்பாயனர் திடுக்கிட்டு மிகவும் கீழ்படிதலுள்ள தம்முடைய மற்ற மாணாக்கர்களை அழைத்து, யாஜ்ஞ வல்கியரால் வெளியிடப்பட்ட மந்திரங்களை க்ரஹிக்கச் சொன்னார். அவர்களும் தம் குருவின் சொல்லுக்குக் கீழ்படிந்து, தம்மை இரண்டு தைத்திரீய பறவைகளாக மாறி, யாஜ்ஞவல்கியர் வெளியிட்டதை க்ரஹித்துக் கொண்டார்கள். இதனாலேயே வேதத்தின் இந்த பகுதி தைத்திரீயம் மற்றும் கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர் பெற்றது.

இதன் பிறகு, தன் குருவான வைசம்பாயனரிடம் இல்லாத மந்திரங்களைத் தாம் பெற நினைத்த யாஜ்ஞவல்கியர், சூரியனைக் குறித்து கடுமையான தவத்தை மேற்கொண்டார். சூரியனும் இவர் தவத்தை மெச்சி, தான் குதிரை வடிவை எடுத்துக் கொண்டு வந்து (வாஜின்), இவர் வேண்டிய பாடங்களைத் தந்தான். வேதத்தின் இந்த பகுதியைக் கற்றவர் ‘‘வாஜின்கள்’’ என்றழைக்கப் படுகிறார்கள். இந்த ஸம்ஹிதை ‘வாஜஸநேயம்’ எனப்படுகிறது. இது சூரியனால் வெளிப்படுத் தப்பட்டதால், ஒளியைக் குறிக்கும் வண்ணம் ‘சுக்ல’ என்றும் வழங்கப்படுகிறது.

கிருஷ்ண யஜுர் வேதத்தில், மந்திரம் மற்றும் ப்ராஹ்மணப் பகுதிக்கு இடையிலான வேறுபாடு, மற்ற வேதங்களில் உள்ளது போல் தெளிவாக நிலை நிறுத்தப்பட வில்லை. மந்திரங்களும், ப்ராஹ்மணங்களுக்குரிய பொருளும் கலந்து காணப்படுகின்றன.

சுக்ல யஜுர் வேதத்தில், இது திருத்தியமைக்கப் பட்டுள்ளது. இது தற்போது நடைமுறையில் இயல் மற்றும் சடங்குகளுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட நேரத்தில் ஏற்பட்டதே என்று தோன்றுகிறது.

ஸாம வேதம்

  ஸாமவேதம், துதி (ஸ்தோத்ரம்)-மந்திரப்பகுதிகள் நிறைந்த நூலாகக் கருதப்படுகிறது. இது, மிக உயர்ந்த ஒன்றை அறிந்ததால் உள்ளத்தில் ஏற்படும் உவகையையும், பக்தி யையும் வெளிப்படுத்தும், இனிமை நிறைந்த புனிதமான துதிகள் நிறைந்ததாக உள்ளது.

‘‘ஸாமா’’ என்னும் சொல், ‘ஸாமன்’ என்பதிலிருந்து அடையப்பெற்றது. ‘ஸாமன்’ என்றால், பாவங்கள் அழிக்கப் பெற்றது என்று பொருள்படும். மனதிற்கு அமைதியையும், ஒருபடிப்பட்ட நிலையையும் தரும் ஒன்று, ‘சாமன்’ என்னும் சொல்லால் சுட்டிக் காட்டப்படுகிறது. சாமத்தைப் பாடுவது மனதிற்கு உறுதிப்பாட்டைத் தருவதாகவும், அலைபாயும் மனதை ஓரிடத்தில் நிறுத்தி, உள்ளத்தில் உவகையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ரிக் வேதத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் சிறந்த துதிகள் மற்றும் இசையுடன் சேர்ந்த ச்லோகங்கள் சாமவேதத்தில் அமைந்துள்ளன.

ஸாமம் இசைக்கப்படுகையில், உச்ச ஸ்தாயியில் தொடங்கி கீழ் ஸ்தாயியில் (ஏற்ற இறக்கத்துடன்) வந்து அடையும்படி இசைக்கப்படுகிறது. இந்த வேதத்தின் ஸம்ஹிதைப்பகுதி ஏழு ஸ்வரங்களால் இசை கூட்டப்பெற்று, தேவதையை மகிழ்விப்பதற்காக, ‘உத்காதா’ எனப்படும் குருவால் இசைக்கப்படுகிறது. இவை ‘சாமகானங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இது பொருத்தமுடைய அளவு மற்றும் செய்யுள் ஆகியவற்றிற்காக சிறப்பாக அறியப் படுகிறது. ஏழு ஸ்வரங்களை ஆதாரமாகக் கொண்ட இந்திய கர்நாடக இசை சாம வேதத்தை வேராகக் கொண்டது.

ஸாம வேதத்தைப் பாடும் குரு ‘உத்காதா’ என்று அழைக்கப்படுவது போலவே, ரிக் வேதத்தைப் பாடுபவர், ‘‘ஹோத்ரு’’ அல்லது, ‘பஹ்வ்ருசர்’ என்றும், யஜுர் வேதத்திலுள்ள ஸூக்தங்களைப் பாடுபவர்கள், ‘அத்வர்யு’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

சாம வேதத்திலுள்ள எல்லா செய்யுட்களுமே, ரிக் வேதத்தில் காணப்படுகின்றன. ரிக் வேதத்திலுள்ள செய்யுள்களின் நீளம் குறைக்கப்பட்டு, அவை இசை மற்றும் தாளத்தில் அமைக்கப்பெற்றுள்ளன. 1800 ரிக் வேத மந்திரங்கள் சாம வேதத்தில் மீண்டும் இடம் பெறுகின்றன. யஜுர் வேதத்தில் ஒன்றும் காணப்படுகிறது. சாம கானம் இசைக்கப்படுகையில், மந்திரங்களின் ஒலிக்குத் தகுந்த அழுத்தம் தரப்படவேண்டும். அப்பொழுது அவை அதைப் பாடுபவர்களுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற பயனைத் தரும். சாமகானம் பாடப்பட வேண்டிய முறைகள் ப்ருஹத், ரதந்தர், காயத்ரா, வைரூப் மற்றும் ரஜத் ஆகும்.

ஸாம வேதத்தில் துதிக்கப்படும் தேவதைகள், அக்நி, இந்திரன் மற்றும் சோமன் ஆகியோர். அக்நியானவன், இருளைப் போக்கி, அறிவை நல்கவும், செல்வம் மற்றும் வளத்தை வழங்கவும், எதிரிகளை அழிக்கவும் வணங்கப் படுகிறான்.

ஸாம வேதத்தில் மென்மையாகப் பேசவும், தூய்மை யையும், ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றவும், நற்காரியங்கள் செய்யவும், விடாமுயற்சியையும், தானத்தை யும், மந்திரங்களின் சிறப்பை விளக்கும் வழிமுறைகளும் காணப்படுகின்றன. புலனுறுப்புகளின் கட்டுப்பாடு, யோகம், கடுமையான உழைப்பு, நல்ல செயல்கள், உண்மை பேசுதல், நல்ல நட்பு, வழிபாடு, பெருமை மிக்க காரியங்கள் மற்றும் த்யானம் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸாம வேதத்தில் மிக அதிகமான சாகைகளுள்ளன. ஆயிரம் சாகைகள் இருந்தன. மதுரகவியாழ்வார், ‘அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்’ (கண்ணிநுண் சிறுத்தாம்பு - 8) என்றும், நாதமுனிகள், ‘‘ஸஹஸ்ரஶாகோ2ப நிஷத்ஸமாக3மம் நமாம்யஹம் த்3ராவிட3 வேத3 ஸாக3ரம்’’ என்றும் திருவாய்மொழிக்கான தனியனில், சாம வேத சாகை களுக்கு இணையாக போற்றியிருப்பது, இங்கே கருத்தில் கொள்ளத்தக்கது.

ஸாம வேதத்தில் 1875 துதிகள்-ச்லோக மந்திரங்கள் உள்ளன. இந்த வேதம், இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது. முதல்பாகம் ‘பூர்வசாகா’ என்றும், இரண்டாம் பாகம் உத்தரசாகா’ என்றும் வழங்கப்படுகிறது. பூர்வசாகாவில் 650 மந்திரங்கள் உள்ளன. இதில் உள்ள இன்னிசை பண்கள், தனித்தனி துதிகளாக உள்ளன. இந்தப் பகுதி மேலும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ‘அக்நேய’ (114 மந்திரங்கள்), ‘அசிந்த்ரா’ (352 மந்திரங்கள்), ‘பவ்மன்’ (119 மந்திரங்கள்) மற்றும் ‘அரண்யா’ (55 மந்திரங்கள்). இவைகளுக்கிடையில், ‘மஹாநாம்நாயர்சிக்’ என்பது உள்ளது. இதில் 10 மந்திரங்கள் உள்ளன. ஆக மொத்தம் 650 மந்திரங்கள்.

உத்ரசாகத்தில் 21 அத்யாயங்களும், 1225 மந்திரங் களும் உள்ளன. இங்கே இன்னிசைப் பண்கள். மூன்று செய்யுள்களைக் கொண்ட ஓர் அலகாக பயன்படுத்தப் பட்டுள்ளன.

ஆதியில் சாம வேதத்திற்கு ஆயிரம் சாகைகள் இருந்தன. ஆனால் தற்பொழுது 17 சாகைகளே நமக்குக் கிடைத்துள்ளன. அவை:-1) கௌதுமம், 2) ஜைமினீயம், 3)ஸாத்தியமுக்ரம், 4) நைகேயம். 5) கௌதமம், 6) சார்தூலம், 7) வார்ஷகண்யம், 8) ரௌருகிணம், 9) சாட்யாயினம், 10) கால பவினம், 11) பால்லவினம், 12) ராணாயணீயம், 13) தாண்டியம், 14) சாண்டில்யம், 15) கரத்விஷம், 16) மாஷசராக்யம், 17) காபேயம். இவற்றுள்ளும் நாம் கௌதுமம் மற்றும் ராணாயணீயத்தைக் குறித்தே அதிகமாக அறிகிறோம். இந்த இரண்டு சாகைகளிலும் மேலும் உட்பிரிவுகள் உண்டு.

பிற மொழிகளில் காணப்படும் ஸாமவேதத்தைப் பற்றிய குறிப்புகள்:

ஸாமவேதத்திற்கு, ஸாயனரால் செய்யப்பட்ட ‘சாமவேத பாஷ்யம்’ உண்டு. பிற மொழிகளில் சாம வேதம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவை டச்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகியவை யாகும். பென்பி-ஜெர்மன், டாக்டர் காலண்டால்-டச்சு. பாதிரி ஸ்டீவன் - ஆங்கிலம், கிரிஃபித்-ஆங்கிலம் போன்றவை சில. நம் நாட்டில், வங்காளி, ஹிந்தி, ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஸாம கானம்

ஸாம வேதத்தை ‘பண்புரை இசைகொள் வேதம்’ என்கிறது ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 50.

முற்காலத்தில் ரிஷிகள், ஸாமவேதம் மக்கள் மனதில் எளிதாகப் பதிய வேண்டும் என்பதற்காக, மந்திரங்களை இசையில் அமைத்தார்கள். இசைக்கையில் எளிதாக நினைவிற்கு வரும். இந்த சாமகான நூலில் நான்கு பிரிவுகள் உண்டு. அவையாவன:- 1. வேய கானம், 2. அரண்யே கேய கானம், 3. ஊஹ கானம், 4. ஊஹ்யம். ‘வேயகானம்’ என்பதை ‘ப்ரக்ருதி’ என்றும் சொல்வதுண்டு. இதில் 17 ப்ரபாடகங்கள் (பிரிவுகள்) உண்டு.

‘அரண்யே கேய கானம், ‘ஆரணம்’ எனப்படும். அமைதியான சூழ்நிலையில் அறியப்பட வேண்டிய விஷயங்கள், வனத்தில் கோஷித்துப் பாடப்படுபவை. இது ஆறு ப்ரபாடகங்களையும், பல அரை ப்ரபாடகங்களையும் கொண்டது.

பெரிய திருமொழிக்கு தனியன் அருளிச் செய்த எம்பார், இந்த திவ்யப்பிரபந்தத்தை - ‘‘தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக் கிலக்கியம் ஆரணசாரம்’’ என்று போற்றியிருப்பது இங்கே பொருத்திப் பார்க்கத்தக்கது.

‘ஊஹகானம்’:- பயன்பாடு மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ள கானங்கள்.

‘ஊஹ்யம்’ இதை ‘ரகசிய கானம்’ என்பார்கள். இது ஆறு ப்ரபாடகங்களும், ஏழு பர்வங்களும் கொண்டது. (’ப்ரபாடகம்’ என்றால் பாகம், அரைபிரபாடகம் என்றால், அதில் பாதி அளவைக் கொண்ட பகுதி).

ஸாம தேவர்கள்

ஒவ்வொரு மந்திரத்திற்கும் அல்லது பல மந்திரங் களுக்கும் ஓர் தேவதை, ஓர் ரிஷி, சந்தஸ், ஸ்வரம் ஆகியவை உண்டு. தேவர்கள், அக்நி, சோமன், இந்திரன், சூரியன், மருத்துகள் போன்றவர்கள்.

ரிஷிகள்:- வாம தேவர், வசிஷ்டர், காண்வர், விச்வாமித்ரர் போன்றவர்கள்.

சந்தஸ்ஸுக்கள்:- காயத்ரி, அனுஷ்டுப், திருஷ்டுப், ஜகதி, பங்கதி, பிருஹதீ, ககுப் போன்றவை. அதிகமாக பயன்படுவது ‘‘காயத்ரி சந்தஸ்’’ ‘சந்தஸ்’ என்றால் ‘‘வேத மந்திர நடை’’ அல்லது ‘யாப்பு’ என்று பொருள்படும்.

ஸ்வரங்கள்:- ஆதியில் ரிஷிகள், இடி முழக்கம், மழை யோசை, தேர் செல்லும் ஒலி ஆகியவற்றை ஸ்வரங்களாக்கி அவற்றில் மந்திரங்களை ஒலியமைத்தார்கள். நாய், பூனை போன்றவை எழுப்பும் ஒலியையும், கண்வர் போன்றவர்கள் கற்றார்கள் என்று அறிகிறோம். முக்கியமாக ஐந்து ஸ்வர நிலைகள்:- 1.ஹிங்காரம், 2. ப்ரஸ்தாபம், 3. உத்கீதம், 4. ப்ரதிஹாரம், 5.நிதனம் ஆகியவை.

சாமவேதத்திற்கென்று நூற்றுக்கணக்கான ஸ்வரங்கள் உண்டு. இவற்றைப் பயன்படுத்தி சாமகானம் இசைப்பது, ‘‘ப்ராசீன கட்சி’’ (பழமையான முறை). தற்காலத்திலுள்ள ஷட்ஜமம் (ஸ), ரிஷபம் (ரி), காந்தாரம் (க), மத்தியமம் (ம), பஞ்சமம் (ப) தைவதம் (த), நிஷாதம் (நி) இந்த ஏழு ஸ்வரங்களை உபயோகித்து சாம கானத்தைப் பாடுவது புதியமுறை.

மந்திர மர்மம்

மந்திரம்-மந்திரமென்பது வெறும் மொழியல்ல. இது ஆதியில் பெருமை பொருந்திய ரிஷிகள் அனுபவித்த உணர்ச்சி சின்னங்களாகும். நாமும் நம்மையே அந்த மந்திரங்களோடு ஈடுபடுத்திக்கொண்டாலொழிய அம் மந்திரங்கள் கற்பிக்கும் மர்மமான பொருளை அறிவது கடினம். இந்த மந்திரங்கள் பூர்வார்சிகம் (முன்னால் வருபவை) உத்தரார்சிகம் (பின்னால் வருபவை) என்று பிரிக்கப் பட்டுள்ளன. ‘‘ஆர்சிகம்’’ என்றால், ‘‘மந்திரங் களின் தொகுதி’’ என்று பொருள்படும்.

ஸாம வேதத்தின் சிறப்பு

  எது ஸாதுவோ-சிறப்பை அளிப்பதோ- அது ஸாமன். ‘ஸ’ என்பது சுகத்தைக் குறிக்கும். ‘அம’ என்பது அனலைக் குறிக்கும். ஆரம்பகாலத்தில், ‘ஸாமன்’ என்பது நீர், நிலம், அனல் என்பதைக் குறிப்பதாக எண்ணினார்கள். பிற்காலத்தில், ஓர் ரிஷி, அதை ‘ஆகாசம்’ என்று விளக்கினார். அதாவது ஸாமனை அடைவது ஆகாசம் போல் விரிந்து பரந்தது என்று பொருள் படும். இதை நாம் அடைய முற்படவேண்டும்.

ஸ்ரீகிருஷ்ண பகவான், பகவத் கீதையில், வேதங் களுக்குள் தான் ஸாம வேதம் என்று கூறியுள்ளான்.

‘‘வேதா3நாம் ஸாமவேதோ3(அ)ஸ்மி’’ (ப.கீ.10-22) - ‘வேதங்களுக்குள் (சிறந்ததான) ஸாமவேதமாகிறேன்’. ஸாமகானம் பாடப்படும் முறையில், தான் ‘ப்ரஹத் ஸாமம்’ என்றும் இசைப்பதற்கு பயன்படும் சந்தங்களுள் தான் ‘காயத்ரி சந்தஸ்’ என்றும் கூறுகிறான். ‘‘ப்3ருஹத்ஸாம ததா2 ஸாம்நாம் கா3யத்ரீ ச2ந்த3ஸாமகம்’’ (ப.கீ.10-35)

ஆழ்வார்கள் பரமாத்மாவை சாம வேதத்துடன் இணைத்து அருளிச் செய்துள்ளார்கள். ‘‘சாமவேதகீதனாய சக்ரபாணியல்லையே?’’ என்று திருமழிசையாழ்வாரும், (திருச்சந்தவிருத்தம்-14) - சாந்தோக்யோபநிஷத்தில் அந்தராதித்யவித்யையிலே செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைச் சொன்னதால் அவனே சக்ரபாணியாகை யாலே இவ்வாறு கூறினதென்பர். அதுவின்றி மற்றும் சாமவேதபூர்வபாகத்திலே சக்ரபாணியென்றே சொல்லி யுள்ளது; ‘பவித்ரம் தே விததம் ப்ரஹ்மணஸ்பதே ப்ரபுர் காத்ராணி பர்யேஷி விச்வத:’ (பிரமன் முதலாக எல்லோருக் கும் ஸ்வாமியே! உனது திருவாழியானது எங்கும் பரவினதாம். லோகப்ரபுவான நீ அதன்முகமாக பக்தர்களெல்லோருடைய உடலையும் சூழ்கின்றாய்) என்று ஸாமவேதோபநிஷத்தொன் றில் ஓதப்பட்டுள்ளதையும் ஸச்சரித்ர ரக்ஷையில் ஸ்ரீதேசிகன் அருளிச் செய்துள்ளார். கடல் கடைந்து கொண்ட அமுதை அமரர்க்கு அளிக்கும்போது புக்குக் கொண்ட ஸைம்ஹி கேயனைச் சக்ரத்தால் தலைவாங்கி ராஹுவாக்கின வரலாறு இங்கே நினைவுற்றதுமாம்.

 ‘‘சாந்தோகா! பௌழியா! தைத்திரியா! சாமவேதியனே! நெடுமாலே!’’ (திருமங்கை யாழ்வார்- பெரிய திருமொழி 7-7-2)

அதர்வண வேதம்

  வேதங்கள் நான்கினுள் இறுதியானது, அதர்வண வேதம். இது அறிவு மிகுந்த வயோதிகர்களின் வேதம் எனப்படுகிறது. இதில் பலவகைப்பட்ட இயல்பை உடைய மந்திரங்கள் காணப்படுகின்றன. இந்த வேதம் ‘‘அதர்வண’’ என்னும் தொன்மையான கவியின் (புலவனின்) பெயருடன் தொடர்பு கொண்டது. ‘அதர்வன்’ என்றால், ‘அறிவு மிக்க வயோதிகன்’ என்று பொருள்படும். இந்த வேதத்தின் மற்றொரு தர்சியான (கண்டவர்) அங்கீரசருடன் தொடர்பு கொண்டுள்ள தால், இது, ‘அதர்வங்கீரச வேதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வேதம், இரண்டு இயல்புகளைக் கொண்டதாக உள்ளது. சூனியமந்திரங்கள் மற்றும் சாந்தி புஷ்டி வேள்விகள் ஆகிய இரண்டு வகையில் பயன்படுத்தப்படுகிறது

இந்த வேதம், ப்ருகு மற்றும் அங்கீரசர் என்ற இரு ரிஷிகளோடு தொடர்பு கொண்டதால், ‘ப்ருக்வாங்கீரச வேதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

‘அதர்வ’ என்பது நிலையான, தடுமாற்றமில்லாத, நடுநிலையான தன்மையைக் குறிக்கிறது. இதன் மற்ற பெயர்கள், ‘ப்ரஹ்ம வேதம்’ மற்றும் ‘க்ஷத்ர வேதம்’ என்பவை. சில பெரியோர்கள், இதை ஆன்மீக பலம் பெறுவதற்காக பயன்படுத்துவதால், ‘ப்ரஹ்ம வேதம்’ என்றும், இது அரசர்களுக்கு முடிசூட்டும் வைபவத்துடன் தொடர்பு கொண்டதால், ‘க்ஷத்ர வேதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது நெடுங்காலமாக, ‘வேதம்’ என்னும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. பின்பு வேதம் என்னும் அந்தஸ்தைப் பெற்றது.

சௌநகசாகை அதர்வ வேதத்தில் 4 ப்ரபாடகங்கள் உள்ளன. இவை 20 அத்யாயங்களாகப் பிரிக்கப்பட்டி ருக்கின்றன. இவை மேலும் 730 ஸூத்ரங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை மேலும் 5987 மந்திரங்களாகவும், சிறிய உரைநடை பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ‘‘பிப்பலாத’’ என்னும் பகுதி 7950 மந்திரங்களைக் கொண்டது. மற்ற மூன்று வேதங்களில் உள்ள மந்திரங்களின் உச்சரிப்பில் ஏதாவது தவறு நேர்ந்தால், இந்த வேதத்தைச் சேர்ந்த ‘அதர்வ குரு’ அவற்றைத் திருத்துகிறார்.

இந்த வேதம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. அவை, அதர்வம் மற்றும் அங்கீரசம். ‘அதர்வம்’ மென்மையான பயன்பாடுகளைக் கொண்டது. ‘அங்கீரசம்’ கடுமையான பயன்பாட்டைக் கொண்டது.

இந்த வேதத்தில் உள்ள பாடங்களில், எதிரிகள், பேய் பிசாசுகள், சூன்யகாரர்கள், விஷப்பிராணிகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழி காணப் படுகிறது. ப்ராஹ்மணர்களைத் துன்புறுத்துபவர்களை எதிர்க்கும் மந்திரங்களும் உள்ளன. நன்மை பயக்கும் இயல்பைக் கொண்ட, அன்பு, நல்ல மணவாழ்க்கை, நீண்ட ஆயுள், ப்ரயாணத்தின் போது காப்பு, சூதாட்டத்தில் வெற்றி கொண்டிட அதிருஷ்டம் ஆகியவற்றிற்கான மந்திரங்கள் உள்ளன.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, குறிப்பாக இந்த வேதத்தில் காணப்படுவது நோய்கள் மற்றும் அவற்றின் தீர்வு, நீண்ட ஆயுள், வியாபாரத்தில் வெற்றி, செங்கோல் ஓச்சும் முறை ஆகியவற்றின் தொடர்பான விஷயங்கள், நடைமுறை விஜ்ஞானத்திற்கு ஏற்றதான, மருத்துவப்பலன் கொண்ட செடிகள், மூலிகைகள் குறித்த குறிப்புகள் உள்ளன. இருமல், மஞ்சள் காமாலை, ஆகியவற்றின் காரணமும், அதன் தீர்வும் விளக்கப்படுகின்றன.

‘‘பேஷாஜனி’’ என்றழைக்கப்படும் ஸூக்தங்கள், நல்ல இல்லற வாழ்க்கை, குழந்தைப்பேறு ஆகியவற்றை விளக்குகின்றன. எதிரிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் ‘அபிசாரம்’ என்ற பகுதி உள்ளது. இது, பொதுவாக, பாம்புகள் மற்றும் அரக்கர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

யோகம், மனிதனின் உடற்கூறு, அவனுக்கு ஏற்படும் பல நோய்கள், இயற்கை அழகு (தலையில் சொட்டை உடையவனுக்கு, முடி அடர்ந்து வளர்வதற்கான மந்திரம் உள்ளது!) ஆகியவை விளக்கப்படுகின்றன. ஆயுர்வேதம், அதர்வவேதத்தின் உபவேதமாகக் கருதப்படுகிறது.

நோய்களை முதன் முதலில் விளக்கிய இந்திய நூல், இந்த அதர்வண வேதம் எனலாம். வ்யாதியை உண்டாக்கும் கிருமிகள், அவற்றை அழிக்கும் மருந்துகள் விளக்கப் பட்டுள்ளன. உதாரணமாக, 1-2ஆவது ஸூக்தம், குஷ்டரோக நோயை விவரித்து, அதை நீக்கும் மூலிகை வகைகளை விளக்குகிறது. உடலில் மூளையே முக்கியமான உறுப்பு என்றும் காட்டித்தரப்பட்டுள்ளது.

மற்ற வேதங்களில் வழிபடப்படாத பல தேவதைகள், இதில் வணங்கப்படுகிறார்கள். வேகமும் கோபமும் கொண்ட தேவதைகள் பயத்துடனும் மரியாதையுடனும் வணங்கப் படுகின்றனர். மந்திரத்தைக் கையாளும், ‘‘மாந்திரீகம்’’ என்னும் பழக்கம் இந்த வேதத்தில்தான் வேர் கொண்டுள்ளது. இந்த வேதத்திற்குத் தனியான காயத்ரி மந்திரம் உண்டு. மற்ற வேதங்கள் திறத்தில் இல்லாததுபோல், இந்த வேதத்தைக் கற்க விரும்புபவர்கள், இரண்டாம் முறையாக உபநயனத்தை மேற்கொள்ளவேண்டும்.

வேதங்களின் சாகைகள் மற்றும் ஸூத்ரங்கள்

1. ரிக் வேதம்- 21 சாகைகள், - சாகல சாகை- ஸூத்ரம் ஆச்வலாயனம்.

2. யஜுர் வேதம் - 101 சாகைகள்- ஸுக்ல யஜுர் வேதம்-16 சாகைகள், கிருஷ்ண யஜுர் வேதம்-85 சாகைகள்.

ஸுக்ல யஜுர்-காண்வசாகை, மாத்யந்தினம்- ஸூத்ரம் வாஜசநேயம், காத்யாயனம்.

கிருஷ்ண யஜுர்-தைத்தரீய சாகை-மைத்ராயணீய சாகை, காடக சாகை-ஸூத்ரம் - போதாயனம், ஆபத்ஸ்தம்பம், சத்யாஷாடம், பாரத்வாஜம், வைகாநஸம்.

3. ஸாம வேதம்-1000 சாகைகள்-கௌதுமம், ராணாயணீயம், ஜைமிநீயம்- ஸூத்ரங்கள் - த்ராஹ்யாயனம், சாட்யாயனம். ஜைமிநீயம்.

4. அதர்வண வேதம்-9 சாகைகள் - பிப்பலாதம், சௌனகம் - ஸூத்ரங்கள் - பிப்பலாதம். சௌனகம். *

07

உபநிஷத்துக்கள் அதன் வகைகள் மற்றும் அவற்றின் சிறப்புகள்

வேதங்கள், எல்லாவற்றையும் ‘கற்றுத்தருபவை’, ‘அறிவிப்பவை’ என்று கண்டோம். ஆனால், வேதத்தின் பூர்வ பாகத்திலுள்ளவைகள், செல்வம், புகழ், பொருள் வகையான இலாபங்கள், வெற்றி, எதிரிகளை வெல்வது, போன்ற வற்றிற்காக, அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இதனால் வேதத்தின் பூர்வபாகம் ‘உழைப்புக்கான புத்தகம்’ என்று வகைப்படுத்தப்பட்டது. மாறாக, வேதத்தின், உத்தர காண்டத்தில் (உத்தரமீமாம்ஸையில்) உள்ள உபநிஷத்துக் கள் ‘‘அறிவிற்கான நூல்’’ என்று அறியப்படுகிறது. பூர்வபாகம் அல்லது பூர்வமீமாம்ஸையில் உள்ள மந்திரங்கள், மனிதர்கள் அதிகம் விரும்பும் பலன்களைப் பெற்றுத்தரும்போதிலும், உண்மையில் விரும்பத்தக்கது, வீடுபேற்றிற்கு வழிகாட்டுவ தாக உள்ள உத்தரமீமாம்ஸையே. வேதாந்தம், உபநிஷத் என்றெல்லாம் பெயர் பெற்ற இந்தப் பகுதி, மனித வாழ்வின் மிக உயர்ந்த இலக்கான வீடுபேற்றைப் பெரும் வழியைக் காட்டித் தருகிறது.

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத3ந்த்யவிபச்சித: | வேத3வாத3ரதா: பார்த்த2 நாந்யத3ஸ்தீதி வாதி3ந: ||
(ப.கீ. 2-42)

காமாத்மாந: ஸ்வர்க்க3பரா ஜந்மகர்மப2ல ப்ரதா3ம்| க்ரியாவிஶேஷப3ஹுளாம் போ4கை3ச்வர்யகதி3ம் ப்ரதி|| (ப.கீ.2-43)

போ4கை3ச்வர்ய ப்ரஸக்தாநாம் தயா(அ)பஹ்ருதசேதஸாம் | வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4: ஸமாதெ4ள ந விதீ4யதே || (ப.கீ.2-44)

இந்த மூன்று ச்லோகங்களின் திரண்ட பொருள்:-

‘‘பார்த்தனே! வேதங்களில் உள்ள ஸ்வர்க்கம் முதலான பலன்களைப் பற்றிய பேச்சுக்களிலேயே ஈடுபட்டவர்களாய், காமங்களிலேயே ஈடுபட்ட நெஞ்சை யுடையவர்களாய், ஸ்வர்க்கத்தையே மேலான ப்ராப்யமாகக் கொண்டவர்களாய், ‘ஸ்வர்க்கத்தைக் காட்டிலும் சிறந்த பலன் வேறு இல்லை’ என்று பேசுகின்றவர்களான, சிற்றறி வாளர்கள், ஸ்வர்க்காதி களை அனுபவிப்பதாகிற செல்வத்தை அடைவது குறித்து, காய்க்காத பூப்போலே மேலெழப் பார்க்கும்போது அழகாயிருப்பதாய், (ஸ்வர்க்காதி பலாநுபவம் முடிந்தவுடன்) புநர்ஜந்ம கர்மங்களாகிற பலத்தை அறிவிப்ப தாய், (தத்வஜ்ஞானமின்மையாலே) பல கிரியைகள் நிறைந் திருப்பதான, யாதொரு வார்த்தையை, மிகவும் பேசுகின்றார்களோ, அந்தப் பேச்சாலே, அழிக்கப்பட்ட அறிவையுடையவர்களாய், (அதனாலேயே) ஸ்வர்க்காதி களை அநுபவிப்பதாகிய செல்வத்திலேயே ஈடுபட்டவர் களான அப்புல்லறிவாளர்களுக்கு, மனத்தில், ஆத்ம யாதாத்ம்ய நிச்சயத்தை முன்னிட்டுக் கொண்டிருக்கும், (முற்கூறிய) கர்மயோகபுத்தி உண்டாவதில்லை’’.

உபநிஷத் என்றால் என்ன?

  சொற்களின் பொருளையும், ‘ஒருபொருள்பல சொல்லை’யும் நமக்குக் கற்றுத்தரும் நூல், ‘‘அமரகோசம்’’ என்று அழைக்கப்படுகிறது. இதில், ‘உபநிஷத்’ என்னும் சொல்லிற்கு, ‘‘தர்மரஹஸ்யோபநிஷத்’’ என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது, ‘உபநிஷத்’ என்றால், ‘ரகசிய மானது, மறைத்து வைக்க வேண்டியது’ என்று பொருள்படும். சங்கரர், ‘கடோபநிஷத்திற்கு அளித்த விளக்கத்தில், ‘‘உபநிஷதாமப்ரூமா’’ என்கிறார். இதன் பொருள், ‘இது பரமாத்மாவைக் குறித்த வித்யை அல்லது அறிவு என்று பொருள்படும். ஸம்சாரத்தில் ஈடுபடுத்தும் அறிவின்மையை அழிக்கும் அறிவு எனலாம். ஸுதர்சனசூரி என்பவர், ‘ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பது உபநிஷத்’ என்று விளக்குகிறார்.

‘உபநிஷத்’ என்பது வேறு ஓர் வகையிலும் விளக்கம் பெறுகிறது. சொல்லை இவ்வாறு பிரித்து- உப-நி-ஷத் பொருள் கொண்டால், ‘‘மிக அண்மையில் அமர்ந்து’’ என்பது கிடைக்கும். ஆசார்யன் திருவடிவாரங்களில் மிக அண்மையில் அமர்ந்து கற்பது’ என்று பொருள்படும். அல்லது மிக உயர்ந்த பரமாத்மாவிற்கு மிக அண்மையில் அழைத்துச் செல்லக் கூடியது என்றும் பொருள்படும்.

உபநிஷத்தை, ‘மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியம்’ என்று சொல்வது ஏன்? யாரும் இதை அறியக்கூடாது என்பதற்காகவா? அல்ல. இதைக் கற்கும் மாணவர், தகுதிபெற்றவராக இருக்கவேண்டும்; கடுமையான ஒழுங்குமுறைகளை கடை பிடிப்பவராக இருக்கவேண்டும் என்பதே கருத்து.

அமரகோசம் (அமரகோசத்தைப் பற்றிய சில குறிப்புகளை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழே அவை கொடுக்கப்பட்டுள்ளன.)

‘‘அமரசிம்மன்’’ என்பவரால் இயற்றப்பட்ட ‘‘அமர கோசம்’’ என்னும் நூல், ஸம்ஸ்க்ருத அகராதிகளில், மிகவும் நம்பத்தகுந்தது. இந்த வியக்கத்தக்க நூல், ஓர் நிரந்தரமான அகராதி. தனித்தன்மை வாய்ந்த இணைச்சொற்களால் இயற்றப்பட்டுள்ளது இந்த நூல். இவர் ஓர் அறிஞர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இன்றளவும் இந்த நூல் ஒரு அதிகாரபூர்வமானதாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இவர், ஒரு குறிப்பிட்ட சொல், எவ்வாறு அதன் வேரிலிருந்து அல்லது அதன் தொடக்கத்திலிருந்து கோர்க்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். பிற்பட்ட கால அகராதி ஆசிரியர்கள் பெரும்பாலும் இவரையே பின்பற்றினார்கள்.

‘‘அமரகோசம்’’ என்பது, ‘‘நாமலிங்கானுஶாஸனம்’’ என்றும் அழைக்கப்படுகிறது. 4-ஆம் மற்றும் 5-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டது. அமரகோசத் திற்கு 50-க்கும் மேற்பட்ட வியாக்யானங்கள் எழுதப் பட்டுள்ளன. அவற்றுள் மிகவும் முக்யமானவை:- ‘ப்ரபா’, ‘மஹேஸ்வரி’, ‘சுதா’, ‘ராமாஷ்ரயி’ மற்றும் ‘நாமசந்த்ரிகா’ ஆகியவை.

‘அமரகோசம்’ மூன்று காண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இந்நூல், அடிப்படையில் ஸம்ஸ்க்ருத வார்த்தை களுக்குச் சரியான இணைச்சொற்களை தருவதாகும். அமரகோசம் இயற்றப்பட்ட பிறகு வெளிவந்த அகராதிகள் மூன்று முக்கியமான விரிவான பாதைகளைப் பின்பற்றின. - நாநார்த்தகோசா, சமாநார்தகசப்தகோசா மற்றும் பர்யாயவாச்சி கோசா என்பவையே அவை. ‘ஷாஸ்வத’ என்பவர், 800 அனுஷ்டுப் சந்தஸ்ஸில், ‘அநேகார்தசமுச்சய’ என்னும் நூலை இயற்றினார். 7-ஆம் நூற்றாண்டில், புருஷோத்தம தேவ என்பவர், ‘த்ரிகாண்டகோசா’ மற்றும் ‘ஹாராவளி’ என்னும் இரண்டு அகராதிகளை உருவாக்கினார். 10-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த அறிஞர், ஹலாயுத’ என்பவர், ‘அபிதாந ரத்னமாலா’ என்னும் அகராதியை இயற்றினார்.

இது, ‘ஹாலாயுத கோசா’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்நூலில், அமர கோசத்தின் தாக்கம் காணப்படுகிறது. யாதவ ப்ரகாசர், மிகவும் விரிவான மற்றும் நம்பத்தகுந்த அகராதியை இயற்றினார். அது, ‘‘வைஜயந்தி கோசம்’’ என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி.1055க்கும் கி.பி.1137க்கும் இடையில் எழுதப் பட்டது. ஹேமசந்த்ரா என்பவர், ‘‘அபிதாநசிந்தாமணி’’ என்னும் அகராதியை எழுதியுள்ளார். இந்த அகராதி பெரும்பாலும், இணைச் சொற்களின் தொகுப்பாக இருக்கிறது.

12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹேச்வரா என்பவர், இரண்டு அகராதிகளை இயற்றியுள்ளார். அவை:- ‘விஶ்வப்ரகாசா’ மற்றும் ‘சப்தபேதப்ரகாசா’ என்பவை. ‘மன்காக’, 12-ஆம் நூற்றாண்டில் எழுதிய அகராதி ‘அநேகார்த்தம்’ என்பது. 12 மற்றும் 13-ம் நூற்றாண்டின் போது அஜயபால என்பவர் இயற்றிய அகராதி, ‘நாநார்த ஸங்க்ரஹம்’ என்பது. தனஞ்ஜெயா, 12-ஆம் நூற்றாண்டில் ‘‘நாமமாலா’’ என்னும் அகராதியை இயற்றினார். கேசவ ஸ்வாமி எழுதியது ‘நாநார்தாரநவ ஸங்க்ஷேப’ மற்றும் ‘சப்தகல்பத்ருமா’ என்பவை. 14-ஆம் நூற்றாண்டில், மேதினி கரர் இயற்றியது ‘நாநார்த சப்தகோசா’ என்பது.

‘சப்தகல்பத்ருமா’ மற்றும் ‘வாசஸ்பத்யம்’ ஆகியவை தற்காலத்தின் முக்யமான நூல்களாகும். ராதாகாந்ததேவ என்பவர் கி.பி.1828க்கும் 1858 க்கும் இடைப்பட்ட காலத்தில், ‘சப்தகல்பத்ருமாவை’ இயற்றினார். இந்த நூல் அஷ்டாத் யாயியை ஒட்டி, ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்டான வழிச்சொற்களைத் தருகிறது. இது 7 காண்டங்களில் எழுதப் பட்டுள்ளது. மேலும் இது ‘இந்திய இயலின் நிகண்டு அகராதி’ எனலாம்,

‘வாசஸ்பத்யம்’ என்னும் மிக விரிவான அகராதி, கி.பி.1873இல் தாரநாதபட்டாசார்யாவால் எழுதப்பட்டது. இந்நூல், இலக்கியம், இலக்கணம், ஜ்யோதிஷம், தந்த்ரம், தத்துவம், இசை, கவிதை, வரலாறு மற்றும் மருத்துவ விஜ்ஞானம் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட வார்த்தை கள் மற்றும் சொற்கூறுகளின் விரிவான ஆய்வை அறிமுகப் படுத்துகிறது.

மோனியர் வில்லியம்ஸின் ஆங்கில அகராதி, பெனஃபேஸின் ஸம்ஸ்க்ருத-ஆங்கில அகராதி மற்றும் வில்சன் மற்றும் மெக்டொனால்ட் ஆகியவர்களின் அகராதி களும் மிகவும் புகழ் பெற்றவை. ஆனாலும், மிகவும் சிறந்த அகராதி, வாமன் சிவராமஆப்தே அவர்களால் இயற்றப் பட்டதே. இந்த அகராதி தனித்துவமும் அழகும் பெற்றது, ஏனெனில், இவர், ஒரு வார்த்தையை விளக்குவதற்கு, அச்சொல்லின் பல்வேறு பொருள்களை, பல நூல்களி லிருந்து திரட்டி அளித்துள்ளார். அவர், மேலும் மூன்று தொகுதி களுடைய, ‘ஸம்ஸ்க்ருத அங்க்ரேஸி கோசா’ மற்றும் ‘ஸம்ஸ்க்ருத ஹிந்தி கோசா’ என்னும் அகராதிகளை எழுதியுள்ளார்.

  டபில்யூ. பி. யெட்ஸின் ஸம்ஸ்க்ருத ஆங்கில அகராதி 1846இல் பிரசுரிக்கப்பட்டது. ‘ரத்’ மற்றும் போதலிங்காவின் ஸம்ஸ்க்ருத ஜெர்மனிய அகராதி, ஏழு தொகுதிகளையுடையது, இது ஓர் அற்புதமான சாதனை யாகும். 1967இல், இராமாவதார சர்மா அவர்களால் எழுதப்பட்ட ‘வாங்மயார்நவ’ என்னும் நூல், ஓர் அரிய உழைப்பால் ஏற்பட்டதாகும்.

உபநிஷத்துக்கள் நமக்குக் கற்றுத் தருபவை

  உபநிஷத்துக்கள் நமக்கு அச்சமற்ற தன்மையையும், வலிமையையும் போதிக்கின்றன. உணர்வின் ஒருபடிப்பட்ட தன்மையை கற்பிக்கின்றன. உபநிஷத்துக்கள், இந்த ஸம்சாரம் என்னும் தளைகளிலிருந்து விடுபடுவதை கற்றுத்தருகின்றன. ‘‘நாம் எங்கிருந்து வந்தோம்: எங்கு செல்கின்றோம்’’ என்று கேட்கும் கேள்விக்குப் பதில் தருகின்றன. உபநிஷத் ‘ப்ரஹ்மமே மிக உயர்ந்த உண்மை; அதுவே உண்மையை உணர்த்துவது; அதுவே மிக உயர்ந்த இலக்கு’ என்பதைப் போதிக்கின்றன.

உபநிஷத்துக்களின் எண்ணிக்கை

  உபநிஷத்துக்கள் எத்தனை என்பதில் அறிஞர் களுக்குள் ஓர் ஒருமனதான முடிவு இல்லை. வேதங்களுக்கு 1180 சாகைகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஓர் உபநிஷத் உண்டு. சாம வேதத்திற்கு மட்டுமே 1000 உபநிஷத்துக்கள் உண்டு. ஆனால், இந்த உபநிஷத்துக்களுள் பல நமக்குக் கிடைக்காமல் போய்விட்டன. 207 உபநிஷத்துக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்காலத்தில் நாம் பெற்றிருப்பது 108 மட்டுமே. இவற்றுள், 22 உபநிஷத்துக்கள் சான்றாதாரங் களாக பெரியோர்களால்-பூர்வர்களால் எண்ணப்பட்ட போதிலும், முக்கியமான உபநிஷத்துக்கள் 10 மட்டுமே. இவை ‘‘தஶோபநிஷத்துக்கள்’’ எனப்படுகின்றன. இது முக்திகோப நிஷத்தில் ஓர் மேற்கோளால் காட்டித்தரப்படுகிறது.

‘‘ஈச கேன கட ப்ரச்ன முண்ட* மாண்டுக்ய தைத்திரி: ஐதரேய ச சாந்தோக்ய ப்ருஹதாரண்யக தஶ’’

22 உபநிஷத்துக்களின் பெயர்கள்:-

1. ஈஶ 2. கட 3. கேந 4. ப்ரச்ந 5. முண்டக 6.மாண்டூக்ய 7. தைத்திரீய 8. ஐதரேய 9. சாந்தோக்ய 10.ப்ருஹதாரண்யக 11. கௌஷீதகி 12. ச்வேதாஶ்வதர 13.அக்நிரஹஸ்யம் 14. நாராயணோபநிஷத் 15. ஸுபாலோப நிஷத் 16. அதர்வஶிகா 17. மந்த்ரிகோபநிஷத் 18. அதர்வ ஸிரஸ் 19. மஹோபநிஷத் 20. மைத்ராயணீய 21.நரஸிம்ஹ தாபனீய மற்றும் 22. ப்ரஹ்மபிந்து.

உபநிஷத் சொற்றொடர்கள் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ள முறை

  அடிப்படையாக மூன்று வகைப்பட்ட சொற்றொடர்கள் காணப்படுகின்றன.

1) அபேத ச்ருதிகள்- இவை, ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே என்னும் தத்துவத்தை கடைப்பிடிக்கின்றன. சங்கரர், இந்த சொற்றொடர்களுக்கு அதிகமான முக்யத்வத்தைத் தருகிறார்.

2) பேத ச்ருதிகள்-இவை ப்ரஹ்மம், ஜீவன் மற்றும் பருப்பொருள் ஆகியவற்றிடையே வேறுபாட்டைக் கூறு கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. ஆனால், ப்ரஹ்மமே, ஜீவன் மற்றும் பருப்பொருளைக் காட்டிலும் உயர்ந்தது என்று காட்டுகின்றன. மத்வாசாரியார் இந்த சொற்றொடர்களை அதிகமாகக் கருத்தில் கொண்டார்.

3) கடக ச்ருதிகள்-ஜீவனானவன், ப்ரஹ்மத்தின் ‘சரீரமாக’ அதனிடமிருந்தே, வடிவத்தையும் செயல்பாட்டையும் பெறுவதால், அதன் சரீரமாக இருப்பவன். அவன் (ஜீவன்) ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டவன். தனித்தன்மை வாய்ந்த ஒருவன். ‘‘தான்’’ என்கையில் ப்ரஹ்மத்தையும் தன்னையும் ஒருசேர குறிப்பிடுகிறான். இதில், ஜீவன் ப்ரகாரமாகவும் பரமாத்மா ப்ரகாரியாகவும் உள்ளனர். ராமாநுஜர், பேத, அபேத, ச்ருதிகளின் பொருளை சரியாகப் புரிந்து கொண்டதோடல்லாமல், கடக ச்ருதிகளின் உதவி கொண்டு, பல சொற்றொடர்களுக்கு மிகச் சரியாக தம் எண்ணத்திற்கேற்ப விளக்கமளித்தார். (இது விளக்கமளித்த மற்றவர்கள் செய்யாத காரியம்.).

இராமானுசர் ஒருவரே பேத, அபேத, கடக ச்ருதி வாக்யங்களையும் ஒருசேர நிர்வஹித்து, அவையனைத்தும் சேதன அசேதனங்களை தனக்கு சரீரமாயுடைய பரப்ரஹ்மமாய் திகழ்கின்றது என்று நிறுவியுள்ளார். இதுவே உண்மையான தத்துவமாகும்.

அபேத ச்ருதிகள்-உதாரணம் மற்றும் விளக்கம்:-

1) ‘தத்த்வமஸி’ (சாந்தோக்ய உபநிஷத் 6-8-7) - அது (ப்ரஹ்மம்) நீயாக இருக்கிறாய்.

2) ‘ஸர்வம் க2லு இத3ம் ப்3ரஹ்ம’ (சாந்தோக்யம் - 3-14-1) - இது எல்லாம் ப்ரஹ்மமே.

3) அஹம் ப்3ரஹ்மாஸ்மி (தை-நா-1-40) - நான் ப்ரஹ்மமாக இருக்கிறேன்.

இவை ப்ரஹ்மத்தையும், மற்ற பொருள்களையும் ஒன்றாக - ஒரே வேற்றுமையில் படிக்கின்றன. இது, பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இடையிலான சரீர - சரீரி பாவத்தால் ஏற்படும், ‘எல்லா சப்தங்களும் (சொற்களும்) ஒன்றையே குறிக்கும்’. (சர்வ சப்த வாக்யம்) என்பதால், ஒரே வேற்றுமையில் (ஒன்றாக) படிக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. உதாரணமாக, ‘தத் த்வம் அஸி’ என்னும் உபநிஷத் வாக்கியத்தில், ‘‘தத்’’ என்பது அண்டத்தின் ஒரே காரணமான ப்ரஹ்மத்தையும், ‘‘த்வம்’’ என்பது கேள்வியை எழுப்பிய, முன்னிலையில் நிற்கும் ச்வேதகேது என்னும் சிறுவனையும் குறிக்கும். அதோடல்லாமல், அவனுக்கு அந்தர்யாமியாக இருக்கும் பரமபுருஷனையும் குறிக்கிறது. எனவே, ‘‘தத்த்வம் அஸி’’ என்பது ‘‘ஜகத் காரணமான ப்ரஹ்மமே, உனக்கு அந்தர்யாமியான பொருள்’’ என்றாகிறது. இதனால், அபேத ச்ருதி சொற்றொடர்கள் நேரில் காணப் படுபவையான கோட்பாடுகளுக்கு முரண்படாமலும், மற்ற வேதச் சொற்றொடர்களுக்கு முரண்படாமலும் பொருந்தி நிற்கின்றன. உதாரணமாக இந்த முண்டக உபநிஷத் வாக்கியம்:-

‘‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே I
தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநச்நந்நந்யோ அபி4சாகஶீதிII’’
(முண்டக. 3-1-1)

இதன் பொருளாவது:- [அழகிய (ஜ்ஞாந கர்மங் களாகிற) இறக்கைகளை உடையவையும், ஒத்த குணத்தை உடையவையும், ஒன்றையொன்று விட்டுப்பிரியாதவை யுமான இரு பறவைகள் (பரமனும் ஜீவனும்) ஒரே மரத்தில் (தேஹத்தில்) அமர்ந்திருக்கின்றனர்; அவைகளில் ஒன்று (ஜீவன்) (கர்மமாகிற) பழத்தை இனிதாக உண்கிறது. அப்பழத்தை உண்ணாமலிருந்தும் மற்றொரு பறவை (பரமன்) மிகவும் பிரகாசிக்கிறது.]

பேத ச்ருதிகள்:- உதாரணம் மற்றும் விளக்கம்:-

1. ‘‘அத்ய தே3வ தத் விதி3தாத் அதோ அவிதிதா3த் அதி’’ (கேந-உப.) - இந்த்ரியங்களால் அறியப்படும் அசேதனத்தைக் காட்டிலும், (ஜடப்பொருள்) வேறுபட்டதாய், இந்திரியங்களால் அறியப்படாத சேதனத்தைக் காட்டிலும் (ஜீவாத்மாவைக் காட்டிலும்) மேற்பட்டதே பரம்பொருள்.’’

2. க்ஷராத்மாநாவீஸதே யஸ்து ஸோ(அ)ந்ய (ச்வே.உப.) - சேதன அசேதனங்களை நியமிப்பவன், அவற்றைக்காட்டிலும் வேறுபட்டவன்’.

இவை பரமாத்மாவிற்கும், சித், அசித் ஆகியவற்றிற் கும் பேதத்தை (வேறுபாட்டை) போதிக்கின்றன.

இந்த அபேத ச்ருதிகள் மற்றும் பேத ச்ருதிகள் மேலெழுந்த வாரியாக பார்க்கப்படுகையில், விரோதம் இருப்பதுபோல் தோன்றும். இவற்றை ஸாமாநாதிகரணம் என்னும் முறையால் ஒருங்கிணைத்து, இந்த முரண்பாட்டை நீக்குவது கடக ச்ருதிகள் எனப்படுகின்றன.

கடக ச்ருதிகள்:- உதாரணம் மற்றும் விளக்கம்:-

1. ‘‘யஸ்யாத்மா சரீரம்’’ (ப்ருஹதாரண்யகம் 5-7-22) ‘இந்த ஆத்மா, அதன் உடல்’.

2. ‘‘யஸ்ய ப்ருதி2வீ சரீரம்’’ (ப்ருஹ. 5-7-22) - ‘அதற்கு இந்த பூமி உடல்’

3. ‘‘ஸர்வாத்மா’’ (யஜு.ஆரண்யகம் 3-11-21) - ‘இது எல்லாவற்றின் ஆத்மா’.

4. ‘‘அந்தர் பஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித:’’ (மஹாநாராயண. உபநிஷத் -11) ‘எல்லாவற்றின் உள்ளும் புறமும் ஊடுருவி பரவி நிலைபெற்றிருப்பவன் நாராயணன்’

5. ‘‘ஸர்வ பூதாந்தராத்மா நாராயண:’’ (ஸுபால) ‘எல்லா இருப்பினங்களின் உள்ளுறை ஆத்மா, நாராயணன்’.

இந்தச் சொற்றொடர்கள், பேத, அபேத ச்ருதிகளின் இடையில் உள்ள முரண்பாட்டை நீக்குகின்றன. ‘வெவ்வேறாக இருக்கும் சித், அசித், ஈச்வரர்களுக்குள், ஈச்வரன், மற்ற இரண்டு தத்வங்களுக்கும் அந்தர்யாமியாகவும், அதனால் எல்லாச் சொற்களால் குறிப்பிடப்படுபவனாகவும் ஸர்வ சப்த வாச்யனாய் இருப்பதால், மற்ற பொருள்களோடு, ‘‘ஸாமாநாதிகரணமாக’’ (ஒரே வேற்றுமையில்) வாசிக்கப் படுவதில், விரோதமில்லை. இவையே கடக ச்ருதிகள். ‘‘சேதன அசேதனங்களோடு கூடிய ப்ரஹ்மம் ஒன்றே’’ என்பதைத் தெரிவிக்கும், ‘‘ஏகமேவாத்விதீயம்’’ (சாந்தோக்யம். 6-2-1), ‘‘ப்ரஹ்மம் ஒன்றே, இரண்டாவதாக ஏதுமில்லை’ என்னும் அபேத ச்ருதியும், பேத ச்ருதிகளோடு விரோத மில்லாமல் (முரண்பாடு இல்லாமல்) பொருந்தி நிற்கிறது. எல்லா வேதச் சொற்றொடர்களுக்குள்ளும் விரோதமில்லாமல் பொருள் கூற வழி இதுவேயாகும்.

  சில மதங்கள், வேதத்தை ப்ரமாணமாக (சான்றா தாரமாக) ஏற்றுக் கொண்ட போதிலும், அதில் உள்ள சொற்றொடர்களுக்கு தகாத பொருளைக் கூறுகின்றன. இவ்வாறு கூறுபவர்களை, ‘‘யாஸ்ச காஸ்ச குத்ருஷ்டய:’’ என்கிறார், மநு. (மநுஸ்ம்ருதி.12-95) - இந்த மதத்தைச் சார்ந்தவர்களால், இந்த பேத, அபேத, கடக ச்ருதிகளுக்கு மேலெழுந்தவாரியாகத் தென்படும் முரண்பாட்டைப் புரிந்து கொண்டு, சரியான பொருள் கூற இயலாது. உதாரணமாக, அத்வைத மதத்தினர் கொள்கைக்கு, பேத ச்ருதிகள் விரோதமாக உள்ளதால், அதைப் ‘‘பொய்’’ (ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல) என்று தள்ளுகிறார்கள். த்வைதிகள் கொள்கைக்கு, அபேத ச்ருதி விரோதமாகத் தோன்றுவதால், அவற்றை ஒதுக்குகிறார்கள். இவ்விருவரும் கடக ச்ருதிகளின் முக்யத்துவத்தை உணருவதில்லை. எல்லா ச்ருதி சொற்றொடர்களும் ஒன்றுக்கொன்று விரோதமில்லாமல், அவற்றின் முக்யத்வம் கெடாமல், நிர்வஹிக்கப்படுவது விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தில் மட்டுமேயாகும். இம்மதமே ‘‘ஸந்மதம்’’, ‘‘வைதிக மதம்’’ என்று போற்றத் தக்கதாகும்.

உபநிஷத்துக்களில் காணப்படும் பாத்திரங்கள்

உபநிஷத்தை இவ்வுலகோர்க்கு அளித்த ரிஷிகளின் பெயர்களை நாம் அறிவதில்லை. ஆனால், அவற்றிற்கு பொருள் கூறியவர்களையும், கற்றுத்தந்தவர்களையும் அறிய வருகிறோம். இவர்களில் முக்கியமானவர்கள் இவர்களாவர்:

மஹிதாஸ, ரைக்வ, ஸத்யகாம, ஐதரேய, சாண்டில்ய, ஜாபால, ஜைமிநி, உத்தாலக, ச்வேதகேது, பாரத்வாஜ, கார்காயாயன, ப்ரதார்தந, பாலாகி, அஜாதசத்ரு, வருண, யாஜ்ஞவல்க்ய, கார்கி, மற்றும் மைத்ரேயி.

உபநிஷத்துக்களை கற்பிக்க வந்த ஞானிகள் எதிர்கொண்ட இடர்ப்பாடுகள்:-

இந்த ஞானிகளோ, மிக உயர்ந்த தத்துவத்தைத் தரிசித்தவர்கள். இந்த உடலை, ஒர் வெறுக்கத்தக்க சிறையாக நினைத்தவர்கள். ஆனால், சாதாரணமான மனிதனோ, உடலுக்கும் ஆத்மாக்கும் வேறுபாடு அறியாதவன். உடலையே ஆத்மாவாக நினைப்பவன். இவ்விருவர் கண்ணோட்டங்களில் உள்ள, இப்படிப்பட்ட மிகப் பெரிய இடைவெளியைக் கடந்து, இந்த ஞானிகள், உபநிஷத் கருத்துக்களை போதிக்கவேண்டியதாயிற்று. இது மிகவும் கடினமானது. இதற்காக, ஞானிகள் தம் கருத்தை உணர்த்து வதற்காக யோசனைகள், கற்பனைகள், புராணக் கதைகள், உபகதைகள் மற்றும் நீதிக்கதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தம் கருத்தினை வலியுறுத்தினர். இவற்றின் மூலமாக, ஜீவனின் அழிவற்ற தன்மை, ப்ரஹ்மத்தின் இயல்பு ஆகியவற்றை விளக்கினர். இவர்களுடைய இந்தப் பெரு முயற்சியால் ‘‘அழியாத ஒன்றை அறியவேண்டும்’’ என்ற பெருவிருப்பு கொண்டவர்கள், பயன் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை!

பாஷ்யங்கள் (விரிவுரைகள்)

உபநிஷத் சொற்றொடர்களின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு தகுதியான விரிவுரைகள் தேவை. இவை, ‘பாஷ்யங்கள்’ எனப்படுகின்றன. பாஷ்யங்களுள், முக்கிய மானவை அபேத ச்ருதிகளை ஆதாரமாகக் கொண்ட, ‘சங்கர பாஷ்யம்’, பேத ச்ருதிகளை ஆதாரமாகக் கொண்ட ‘மத்வ பாஷ்யம்’ மற்றும் சடக ச்ருதிகளை ஆதாரமாகக் கொண்டு இராமானுசர் இயற்றிய ‘ஸ்ரீபாஷ்யம்’ ஆகியவையாகும்.

உபநிஷத்துக்களின் மொழி அணுகுமுறை

  உபநிஷத்தில் இருக்கக்கூடிய ஆழ்ந்த பொருள்களைப் புரிந்துகொள்ள அவற்றில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் நடை மற்றும் மொழியை அறிந்து உணர்வது அவசியம். சில உதாரணங்கள் காட்டப்படுகின்றன:-

1) அறிமுகப்படுத்தும் கதைகள்:- த்யானம் மற்றும் அறிவு ஆகியவற்றை ஆசிரியர் தன் மாணாக்கர்களுக்கு விளக்குகிறார். அ. வேள்வி நடத்துவது குறித்து யாஜ்ஞ வல்கியர், ஜனகரின் சபையில் அறிஞர்களுடன் உரையாடு கிறார். (ப்ருஹதாரண்ய உபநிஷத்). ஆ. வருணன் தன் மகனான ப்ருகுவிற்கு கற்றுத்தருகிறார் (தைத்ரீய உபநிஷத்).

2) உபநிஷத் என்னும் சொல்லே கூட, சில இடங் களில் ஓர் கோட்பாட்டையோ, முக்கியமான சொல்லையோ, ஓர் ரஹஸ்யத்தையோ அல்லது ப்ரஹ்மத்தைக் குறித்த அறிவையோ சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கும்.

3) வர்ணனைகள் (உவமைகள்) உத்தாலகன், தன் மகனுக்கு, ப்ரஹ்மம் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந் திருப்பதை, ஓர்: உப்புக்கட்டி, தண்ணீரில் கரைந்திருக்கும் உதாரணத்தைச் சொல்லி விளக்குகிறார்.

4) நீதிக்கதைகள்:- தேவர்களுக்கு கற்பிக்கையில், ப்ரஜாபதி, ‘‘த’’ என்னும் எழுத்தை மூன்று முறை உபயோகப் படுத்தி, தயாத்மா (சுயக்கட்டுப்பாடு-த3த்தா (தருமம்), த்3யேத்வம் (கருணை) என்பதைக் கற்றுத்தருகிறார். இவை மூன்றும் கட்டுப்பாடு, தாராள மனப்பான்மை மற்றும் இரக்கம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும்.

5) கருத்து நிரம்பிய சிறு வாசகம் அல்லது நன்மொழி:- புகழ்பெற்ற ‘நேதி நேதி’ (ப்ருஹ.உப.) ‘இது அல்ல இது அல்ல’ என்னும் சொற்றொடர்.

6) உருவகப்படுத்துதல் மற்றும் உவமைகள்:- ஓர் உதாரணம்:- ‘தேரில் அமர்ந்திருக்கும் வீரனைப் போன்றவன், ஆத்மா’. உடலாகிய தேரை சரியான வழியில் செலுத்தி, அழிவற்ற தன்மை என்னும் இலக்கை அடையவேண்டும். (சாந்.உப. 8-4-1).

7) அடையாளக் குறியீடுகள்:- வேடிக்கையான முடிவுகள், தொகுத்துக் கூறுதல் ஆகியவை, உபநிஷத்துக் களில் பல இடங்களில் காணப்பெறுகின்றன.

8) உபநிஷத்துக்களில் அதிகமாக காணப்படும் சொற்றொடர்:- ‘‘ய ஏவம் வேத3’’ என்பது. இதன் பொருள், ‘‘எவனொருவன் இவ்வாறு அறிகிறானோ’’ என்பதாகும். இதற்கு உதாரணம்:- எந்த வெற்றி ப்ரஹ்மமாகிறதோ, எது ப்ரஹ்மத்தை அடைவதாகிறதோ-அந்த வெற்றியை, இவன் வெல்கிறான். அந்த அடைதலை அவன் அடைகிறான். -எவன் இவ்வாறு அறிகிறானோ. (கௌஷீதகி-1-7).

உபநிஷத்தில் காணப்படும் மஹாவாக்கியங்கள்:-

  இந்த மஹா வாக்கியங்கள் மிக உயர்ந்த தத்துவங்களை மிகச் சிறிய அளவில் சுருக்கித் தருகின்றன. உதாரணமாக:-

1) தத்த்வமஸி - அது நீயாக இருக்கிறாய்

  1. அஹம் ப்3ரஹ்மாஸ்மி - நான் ப்ரம்மம்.
  2. ப்ரஜ்ஞானம் ப்3ரஹ்ம - ப்ரம்மம் என்பது அறிவு; 4) ஸோ அஹம் அஸ்மி - நான் அவன்;
  3. அயம் ஆத்மா ப்3ரஹ்ம - இந்த ஆத்மா ப்ரம்மம்.

உபநிஷத்தில் காணப்படும் இரட்டை எதிர்மறை:-

‘நேதி நேதி’ - இது அல்ல, இது அல்ல.

இனி, அடுத்ததாக புகழ் பெற்றதான பத்து உபநிஷத்துக்களைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப் படுகின்றன:-

இந்த தலைப்புகளின் கீழ்:- 1) வேதத்துடன் தொடர்பு; 2) கட்டமைப்பு மற்றும் அளவு: 3) தனித்தன்மை 4)சிறப்பான பகுதிகள் மற்றும் உபநிஷத் அறிவிக்கும் திரண்ட பொருள்; 5) அமைதிபடுத்தும் மந்திரம்; (சாந்தி மந்திரம்): 6)உபநிஷத்தின் மையக் கருத்து.

உபநிஷத்துக்களின்-வகைகள்

வேதங்களின் உத்தரபாகம் என்று சொல்லப்படுகின்ற உபநிஷத்துக்களில் பகவத் பரத்வம் பேசப்படும் இடங்களை முதலில் ஆராய்வோம்.

பொதுவாக, உபநிஷத்துக்கள் என்று சொல்லப்படும் அனைத்தையும் வேதங்களாக ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், உபநிஷத்துக்கள் என்ற பெயரில் நாளது வரையில் புதிது புதிதாக பல மந்திரத் தொகுப்புகளை எழுதி தங்கள் கொள்கைக்கு வலிமை சேர்க்க சிலர் முயற்சித்துள்ளனர். பூர்வபாகங்களான ஸம்ஹிதைகள், ஆரண்யகங்கள், ப்ராஹ் மணங்கள் இவற்றில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுக்கு மாறாகக் காணப்படும் கருத்துக்கள் கொண்ட எந்த நூலையும் வேதம் எனக்கொள்ள இயலாது. அது பிற்காலக் கற்பனைப் புனைவுதான், அந்த வகையில், பூர்வபாகங்களோடு நேரடித் தொடர்புடையவையாகவும், காலங்காலமாக ஸ்வரத்துடன் ஓதப்பட்டு வருபவையாகவும் உள்ள உபநிஷத்துக்கள் 10 ஆகும். அவற்றை தஶோபநிஷத் என்று கூறுவர். உபநிஷத் துக்கள் என்றால் அவைதான்.

அந்தக் கற்பனை உபநிஷத்துக்களின் மொழி, நடையைப் பார்த்தாலே, சாதாரண புராண ச்லோகங்களின் நடையைப் போன்று இருப்பதை நாம் காணமுடியும். இவை மிகவும் பிற்காலத்தில், சிலர் தங்கள் கொள்கைக்கும் ‘‘வேதத்தில் சான்று உண்டு’’ என்பதைக் காட்டிக்கொள்வதற் காக தங்களின் சமயக் கொள்கைகளுக்குத் தக்கவாறு எழுதி, அவற்றுக்கு ‘உபநிஷத்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, இப்படிப்பட்ட உபநிஷத்துக்கள் வேதம் பற்றிய ஆராய்ச்சியில் எடுத்துக் கழிக்கக்கூடத் தகுதியற்றவை என்பதால், அக்கற்பனை உபநிஷத்துக்களைக் காற்கடைக் கொண்டு (தள்ளிவிட்டு), வேதத்தோடு முழுத்தொடர்பு டையவையான அந்த 10 உபநிஷத்துக்களை ஆராய்வோம்.

1) ஈஶாவாஸ்யோபநிஷத்

1) வேதத்துடன் தொடர்பு- இந்த உபநிஷத் ஸுக்ல யஜுர் வேதம் மற்றும் வாஜஸநேய ஸம்ஹிதையுடன் தொடர்பு கொண்டது.

2) கட்டமைப்பு மற்றும் அளவு-இது ஓர் தலையாய உபநிஷத்தாக இருந்த பொழுதிலும், இதில் 18 மந்திரங்களே உள்ளன. அளவில் சிறியவற்றில் இது இரண்டாவது. இது நான்கு பகுதிகளாக விவரிக்கப்பட்டுள்ளது.

3) தனித்தன்மை:-

அ) இந்த உபநிஷத், பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையை உரைப்பதற்கு முன்பே இருந்தது.

ஆ) வேதாந்த தேசிகரால் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இ) இதில் உள்ள முதல் மந்திரம், எல்லா உபநிஷத் துக்களில் உள்ள முக்கியமான பொருள்களை உட் கொண்டுள்ளது.

ஈ) முதல் மந்திரம் ‘‘ஈஶா’’ என்னும் சொல்லைக் கொண்டு தொடங்குவதால் இந்த உபநிஷத் இந்த பெயரைப் பெறுகிறது.- ‘கண்ணிநுண் சிறுதாம்பு’ ‘அமலனாதிபிரான்’, ‘நான்முகன் திருவந்தாதி’ ஆகிய திவ்யப் பிரபந்தங்களைப் போல.

‘‘ஈஶா’’ என்னும் பெயரின் விளக்கம் மற்றும் மந்திரங் களின் சுருக்கமான பொருள்.

  பொதுவாக ‘ஈஶா’ என்னும் பெயரால் , ‘ருத்ரன்’ புரிந்து கொள்ளப்படுகிறான். இந்த நோக்கு, எல்லா விரிவுரை யாளர்களாலும் மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மஹோப நிஷத்தில், படைப்பிற்கு முன்பு நாராயணன் ஒருவன் மட்டுமே இருந்ததையும், ப்ரஹ்மனோ, ஈசானனோ (சிவனோ/ருத்ரனோ) இருக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது. இந்த உபநிஷத்திலேயே 16-வது மந்திரத்தில் ‘ஈஶா’ என்பது, ‘புருஷன்’ என்பதோடு, தைத்ரீய நாராயண உபநிஷத்தின் பலத்தால், ஸமன்வயப்படுத்தப் பட்டுள்ளது. ஈஶனாக இருப்பதற்கு, அவன் ‘உள்ளும் புறமும்’ வ்யாபித்து, ‘ஸர்வ வ்யாப்தி’யைப் பெற்றவனாக இருக்க வேண்டும். இந்தப் பண்பு, நாராயணனுக்கே பொருந்தும்; ருத்ரனுக்கு அல்ல. எனவே, இந்த உபநிஷத்தின் தலைப்பிலுள்ள ‘‘ஈஶா’’ என்பது, பரமாத்மாவாகிய ஸ்ரீமந்நாராயணனையே குறிக்கும். உலக வழக்கில், அந்தணன், அரசன், கறுப்பன், பருத்தவன் என்னும் சொற்கள், குறிப்பிடப்பட்டவர்களின் உடலைக் குறிப்பதோடு, அந்த உடலை ஞானத்தின் மூலம் வ்யாபித்திருக்கும் (ஊடுருவியிருக்கும்) ஜீவாத்மாவையும் குறிப்பது போல, இந்த அண்டத்திலுள்ள எல்லா சித் மற்றும் அசித் (அறிவுள்ள மற்றும் அறிவற்ற) பொருள்களை, பரம புருஷன் ஆத்மாவாக ஊடுருவியிருப்பதால், எல்லா பெயர்களும் அப்பொருளைத் தன் உடலாகக் கொண்ட எம்பெருமானையே குறிக்கும். இதைக் காட்டித்தரும் உபநிஷத் வார்த்தைகள் ‘‘ப்ரஹ்மனும் நாராயணனே’’ (ஸுபாலோப நிஷத்) - இவையாகும். இவற்றில் ‘‘நாராயண’’ என்னும் சொல்லோடு எல்லா அறிவுள்ள மற்றும் அறிவில்லாத பொருள்கள் ‘‘ஸாமாநாதிகரணமாக’’ (ஒரே வேற்றுமையில்) சொல்லப்பட்டிருப்பதால், எல்லாச் சொற்களும் நாராயண னையே குறிப்பது முக்கியப் பொருள் அல்லது முதல் பொருளிலாகும்.

இரண்டாவதான முக்கியமற்ற பொருளைக் குறிப்ப தல்ல. (கௌணம்/ஔபசாரிகம்) எல்லாச் சொற்களும் இயற்கையாகவே நாராயணனைக் குறிக்கின்றன. எனவே, ‘‘ஈஶாவாஸ்ய உபநிஷத்’’ என்பதில் உள்ள ‘‘ஈஶா’’ என்பதும் நாராயணனையே குறிக்கும்.

இந்த உபநிஷத்தில், முதலிரண்டு மந்திரங்கள், மிக உயர்ந்த ஒன்றின் எல்லாவற்றையும் ஊடுருவும் தன்மை யையும், கர்மத்தை பற்றின்றி ஆற்றி, இறைவனால் தரப் பட்டவைகளை பற்றின்றி அநுபவித்து, நூறு வருடங்கள் வாழ்ந்து, அந்த இறைவனை அடையும் சாதனைக்கு துணைக் கருவியாக்க வேண்டும் என்று அறிவிக்கின்றன.

அடுத்த ஆறு மந்திரங்கள், 3 முதல்-8 வரை, பரமாத்மாவின் இயல்பை விரிவாக விளக்குவதுடன், உபாகனின் இயல்பையும் விளக்குகின்றன. அடுத்த ஆறு மந்திரங்கள் சாதனைகளின் இயல்பை, முக்கியமாக, வீடு பேற்றைப் பெறுவதற்கான தன் உபாயங்களை விளக்கு கின்றன. கடைசி நான்கு மந்திரங்கள் 15 முதல் 18-வரை வீடுபேற்றை விரும்புவர்கள், பரமாத்மாவை த்யானிப் பதற்கான வழிபாட்டு முறைகளைக் கூறுகின்றன.

மொத்தத்தில், இந்த உபநிஷத், கர்மத்தையும், ஜ்ஞானத்தையும் இரண்டு கால்களாக கொண்டு வீடுபேற்றை நோக்கி நடக்க வலியுறுத்துகிறது.

இந்த உபநிஷத்தில் காணப்படும் மஹாவாக்யம், ‘‘ஸோஹமஸ்மி’’. இது 16-வது மந்திரத்தில் காணப்படுகிறது. இதன் பொருள் - ‘‘எவன் அந்த புருஷனோ, அவன் நான்’’

இந்த உபநிஷத்திற்கான சாந்தி மந்திரம் ‘‘ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத் பூர்ணமுத3ச்யதே| பூர்ணஸ்ய பூர்ணமாதா3ய பூர்ணமேவாவஶிஷ்யதே||’’ ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ||

‘எல்லாமே முழுமையானது; முழுமையானதிலிருந்து முழுமையானது வெளிப்படுகிறது; முழுமையானதிலிருந்து முழுமையானது எடுக்கப்பட்ட பிறகும், முழுமையானது இருந்தபடியே இருக்கிறது’.

2) கேனோபநிஷத்

1. வேதத்துடன் தொடர்பு:- சாம வேதம். தலவாகர (ஜைமிநி) ப்ராஹ்மணம்.

2. கட்டமைப்பு மற்றும் அளவு:- இந்த உபநிஷத்தில் நான்கு காண்டங்கள் உள்ளன. இவற்றில் 35 மந்திரங்கள் அடக்கம். இந்த காண்டங்களில், இரண்டு, உரையாடல் நடையிலும், ஒன்று [allegory] உருவகப்படுத்தல், நான்காவது தியானம்.

3. தனித்தன்மை:- அ) ஈஶாவாஸ்ய உபநிஷத்தைப் போலவே, இதுவும் உபநிஷத்தின் முதல் வார்த்தையான, ‘‘கேன’’ என்பதைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. ‘‘கேன’’ என்றால், ‘‘யாரால்?’’ என்று பொருள்படும்.

  ஆ) சங்கரர் இதற்கு இரண்டு பாஷ்யங்கள் இயற்றியுள்ளார்.

இ) எல்லா உபநிஷத்துக்களுக்குள்ளும் இதுவே அதிக பகுப்பாய்வு மற்றும் சமயம் சார்ந்த செய்திகளைக் கொண்டது.

ஈ) இந்த உபநிஷத்தில் நாம் பெறும் சிறப்புச் செய்தி:- ‘நமக்குக் கிடைத்திருக்கும் மனிதப் பிறவி, மிகவும் அரியது. இதை நாம் ஆன்மீகச் சிந்தனை வளர முழுவதுமாக பயன்படுத்த வேண்டும். மிக உயர்ந்த உண்மையைக் கண்டறிய வேண்டும். இப்பிறவியை வீணடித்து விட்டால், பெரிய நாசம் ஏற்படக்கூடும்’. இதை ஈடுசெய்ய கோடானு கோடி வருடங்கள் ஆகக்கூடும்.

இந்த உபநிஷத்தின் முதல் பகுதியில் காணப்படும், கேள்வி-பதில் வடிவிலான உரையாடல்:-

கேள்வி-யாரிடமிருந்து உயிர் தோன்றியது? எது மனிதனை பேசவும், கேட்கவும் காணவும் செய்கிறது?

பதில்-நமக்குள் அந்தர்யாமியாக உள்ள ப்ரஹ்மம் இதைச் செய்கிறான். அவன் உதவியில்லாமல், கைகால்களை அசைக்க இயலாது; காண இயலாது, கேட்க இயலாது; மனம் கூட அவனாலேயே இயக்கப்படவேண்டும்.

கேள்வி-இந்திரியங்களை இயக்குவது எது? மனமா? அல்லது வேறு முகவரா?

பதில்-இவை எதுவுமில்லை. இவற்றை இயக்குவது, முற்றிலும் வேறுபட்ட தத்துவம். அதுவே இந்த அண்டத்தை உண்டுபண்ணி, காத்து, அழிக்கும் சக்தி.

கேள்வி-ப்ரஹ்மத்தின் இயல்பு என்ன?

பதில்-இதை யாரும் முழுவதுமாக அறிய இயலாது. ஆனால், அதை உணர்ந்து ஆராய வேண்டியது அவசியம். ‘‘நான் அறிவேன்’’ என்று ஒருவர் கூறுவாராகில், அது உண்மையல்ல. அவன் (ப்ரஹ்மம்) எந்த உருவில் இருக் கிறான் என்று கூறுவது மிகவும் கடினம்.

அவன் இந்திரியங்களால் உணரப்படுவதில்லை; அவனே எல்லா அறிவிற்கும் ஆதாரமாக இருந்தபோதிலும், அவனை உணர்ந்தறிவதோ, முழுமையாக அறிவதோ இயலாதது.

இரண்டாம் பகுதி, ஓர் உருவகக் கதை. இதில் ‘நான்’ என்று அகந்தைகொண்ட தேவர்கள், தாமே தம் வெற்றி களுக்குக் காரணமென்றிருக்க, அவர்கள் நிலையை அவர்களுக்கு பரப்ரஹ்மம் உணர்த்தியதைப் பேசுகிறது.

மூன்று மற்றும் நான்காம் பகுதிகள், தேவர்களுக்கும் யக்ஷர்களுக்கும் இடையே நடைபெற்ற ஓர் உரையாடலாக உள்ளது.

ஓரு முறை, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் மூண்டுவிட, பரப்ரஹ்மம் தேவர்கள் பக்கலிலிருந்து அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தான். இதை உணராத தேவர்கள், இந்த வெற்றி தம்முடைய சொந்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணி இறுமாந்திருந்தனர். இவர்களுடைய பெருமையையும், கர்வத்தையும் அடக்க நினைத்த பரமாத்மா ஓர் யக்ஷனாக வடிவுகொண்டு, தேவர்களுடன் போருக்கு வந்தார். இவரை வெல்வதற்கு அக்நியும் வாயுவும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், யக்ஷனுக்கு எதிரில் இந்த இரண்டு தேவர்களும் வலுவிழந்து நின்றனர். அக்நியால் எதையும் எரிக்க இயலவில்லை; வாயுவால் ஓர் சிறு புல்லைக் கூட அசைக்க முடியவில்லை. இருவரும் தோல்வியுற்றுத் திரும்பினர். இந்த சூழ்நிலையில், இந்திரன் வந்தான். அவனாலும் யக்ஷனை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை. இந்திரன் ஹிமவானின் புதல்வியான உமாவை (அம்பிகையை) அணுகி, இந்த யக்ஷன் யார் என்பதையும், நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணத் தையும் வினவினான். உமையவள், யக்ஷனாக வந்தது பரமாத்மாவே என்பதையும், தேவர்களின் கர்வத்தை அடக்கவே பரமாத்மா, அவ்வாறு வந்தான் என்பதையும் விளக்கினாள்.

இந்த உருவகக்கதை நமக்கு சில மறுக்க இயலாத உண்மைகளை விளக்குகிறது. இக்கதையில் வரும் தேவர்கள், உருவகப்படுத்தப்பட்ட நம் புலனுறுப்புகள்; யக்ஷனாக வந்து அவர்களை வென்றவன், மிக உயர்ந்த சக்தியான பரமாத்மா. புலன்களையும், மனத்தையும் வென்றால் மட்டுமே, பரமாத்மாவை உணரமுடியும் என்பதே இதிலிருந்து நாம் அறியும் உண்மை. இப்படிப்பட்ட ப்ரஹ்ம ஜ்ஞானம், முதிர்ந்த ப்ரஹ்ம வித்யையில் இறுதிப் பயனைப் பெறுகிறது.

4. சாந்தி மந்திரம்:-

ஆப்யாயந்து மமாங்கா3நி வாக்ப்ராணஶ்சக்ஷு: ஶ்ரோத்ரமதோ2 ப3லமிந்த்3ரியாணி ச ஸர்வாணி I ஸர்வம் ப்3ரஹ்மௌபநிஷத3ம் மா(அ)ஹம் ப்3ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம ராகரோத3நிராகரணமத் ஸ்வநிராகரணம் மே(அ)ஸ்து I ததா3த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த4ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து II
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

‘‘என்னுடைய கைகால்கள் உறுதியாக வளரட்டும்; என்னுடைய பேச்சு, ப்ராணன், கண்கள், செவிகள், உயிர்/உள்ளுறம், மற்றும் எல்லா புலன்களிலும் விறுவிறுப்பு அதிகமாகட்டும்; நான் ப்ரஹ்மத்தை மறுக்காமல் இருக்கக் கடவேன்; அதுவும் என்னை மறுக்காமல் இருக்கட்டும். உபநிஷத்தில் கூறப்படும் எல்லா நற்குணங்களும் ஆத்மா வில் வசிக்கட்டும். அவை என்னில் வேர் பிடித்து வசிக் கட்டும்.’’

3. முண்டக உபநிஷத்

1. வேதத்துடன் தொடர்பு-அதர்வண வேதம்- சௌநகீய சாகை.

2. கட்டமைப்பு மற்றும் அளவு- இதில் மூன்று பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இரண்டு அத்யாயங்கள் உள்ளன. மொத்தமாக 65 மந்திரங்கள், ச்லோக வடிவில் உள்ளன.

3. தனித்தன்மை-இந்த உபநிஷத், இந்த பெயர் பெறுவதற்குக் காரணம், ‘‘முண்ட’’ என்றால், சிரைக்கப்பட்ட தலையைக் குறிக்கும். (மொட்டைத்தலை). இந்த பெயர் வரக் காரணம், தலை முடி சிரைக்கப்பட்ட ஓர் ஸந்நியாசி இதன் ஆசிரியராக இருந்திருக்கக்கூடும். அல்லது எப்படி ஓர் கத்தியானது தலை முடியை நீக்குகிறதோ, அதுபோல, உபநிஷத்துக்களில் உள்ள பர வித்யையானது, ஆத்மாவை மறைத்திருக்கும் திரையான அவித்யையை வேரோடு நீக்குவதால், இந்த பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும். (காம்பறத் தலை சிரைத்து, உன் கடைத்தலை இருந்து வாழும்- திருமாலை-38) என்பதைக் கருத்தில் கொள்க.

இந்திரன் நல்லவற்றையே எங்களுக்கு நல்க வேண்டும். நிலத்தின் கடவுளான ‘பூஷா’ மேலும் மேலும் செல்வத்தை எங்களுக்கு அளித்திட வேண்டுகிறோம். எதிரிகளை வெல்லும் வல்லமை படைத்த கருடன் எங்களுடன் உறவு கொண்டவனாய் இருக்கட்டும். தேவர்கள் குருவான ப்ருஹஸ்பதி எங்களுக்கு க்ஷேமத்தினை அளிக்கட்டும்.

தேவர்களுள் முதல்வனான நான்முக ப்ரஹ்மன் ப்ரஹ்மத்தைக்குறித்த அறிவை தன் மூத்த பிள்ளையான அதர்வனுக்கு போதித்தார். அதர்வன் அந்த வித்யையை அங்கீரனுக்கு போதித்தார். இவர் அதை, சத்யவாஹனுக்கு போதித்தார். அவர் அதை அங்கீரசனுக்குப் போதித்தார். இதன் பிறகு, சௌனக என்ற பெயர் கொண்ட முனிவர் அங்கீரசனை அணுகி, ‘‘எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்த தாகும்?’’ என்பதைத் தமக்கு கற்றுத்தருமாறு வேண்டினார். அங்கீரசன் இதைக் குறித்து, ‘உயர்ந்தது’ மற்றும், ‘தாழ்ந்தது’ இரண்டு விதமான கல்விகள் (அறியும் முறை) இருப்பதாகக் கூறி, அவற்றை விளக்கினார்.

இதில், ‘தாழ்ந்த அறிவானது, வேதங்கள் ஸ்ம்ருதிகள் மற்றும் வேதாங்கங்களான - சந்தஸ், வ்யாகரணம், ஜ்யோதிஷம்’ - ஆகியவற்றால் பெறப்படுகிறது.

உயர்ந்த அறிவானது, அழியாத ஒன்றைக் குறித்த அறிவு. அதுவே எல்லா இருப்பினங்களின் தோற்றுவாய் மற்றும் அடையத்தக்க இலக்கு. இது இதயத்தில் உள்ளது. அறிவாளிகள் இதைக் குறித்தே த்யானம் செய்கின்றனர். இந்த மிக உயர்ந்த ஒன்றை உணர்ந்த பிறகு, இதயத்தில் தேங்கியுள்ள ஐயப்பாடுகள் ஆகிய முடிச்சுகள் அவிழ்த்து விடப்படுகின்றன. எல்லா ஐயப்பாடுகளும் விலகி விடுகின்றன.

இந்த உள்ளுறை ஒன்றின் தலை, ஸ்வர்க்கலோக மாகும், சூரியனும் சந்திரனும், அதன் இரு கண்கள்; திசைகள் அவன் இரு செவிகள்; வேதமே அவன் பேச்சு; அவன் ப்ராணனே காற்று; இந்த முழு அண்டம் அவன் இதயம்; அவன் இரண்டு பாதங்கள் பூமியும் நெருப்புமாகும்’

இந்த உபநிஷத்தில் முதலிரண்டு காண்டங்கள் ‘பர’ மற்றும், ‘அபர’ வித்யைகளைக் குறித்துப் பேசுகின்றன. ‘அபர’ வித்யை முதலில் விவரிக்கப்படுகிறது. இது உலகியல் வாழ்க்கைத் தொடர்பான நெறிமுறைகளைக் கற்பிக்கிறது. ப்ரஹ்மத்தைக் குறித்த அறிவை வழங்குவது, ‘பரவித்யை’ எனப்படுகிறது. இதில், ப்ரஹ்மத்தின் திவ்யமங்கள விக்ரஹம் பஞ்சபூதங்களால் ஆக்கப்படாமல், அப்ராக்ருதமான மூலப்பொருள்களால் ஆக்கப்பட்டிருப்பதாக விவரிக்கப்பட்டி ருக்கிறது. சிலந்தியானது முதலில் வலையைப் பின்னி, பின்பு அதில் நுழைந்து வசிப்பதுபோல, ப்ரஹ்மமானது அண்டத்தை, முதலில் உயிருள்ள மற்றும் உயிரல் பொருள் களால் (அசேதன) உருவாக்கிவிட்டு, பின்பு அவற்றைப் பின் தொடர்ந்து உள்நுழைந்து உறைகிறது.

இரண்டாவது காண்டம், ப்ரஹ்ம ஜ்ஞானத்தை விளக்குகிறது. அதை குருவின் வாயிலாக அடையப்பட வேண்டியதைக் கற்பிக்கிறது.

மூன்றாவது காண்டம் புருஷனின் உருவத்தை வர்ணிக்கிறது. இவன் இதயத்தில் இருப்பதை உணர்ந்து, த்யானிப்பவர்களின் பந்தப்படுத்தும் விலங்குகள், தெரித்து உடைவதை விளக்குகிறது.

நான்காவது காண்டம், ‘ஓம்’ என்னும் ப்ரணவத்தைத் த்யானிக்க வேண்டியதின் அவசியத்தை விளக்குகிறது. ஜீவ பரமாத்மாக்களுக்கு இடையே உள்ள வேறுபாடு விளக்கப் படுகிறது.

ஐந்தாவது காண்டத்தில்தான், புகழ் பெற்ற ‘‘ஒரு மரத்தில் இரண்டு பறவைகள்’’ என்னும் உவமானத்தையும், அதன் விளக்கத்தையும் காண்கிறோம்.

இந்த உபநிஷத்தில் காணப்படும் ஓர் முக்கியமான மந்திரம், ‘ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறுபட்டவர்கள், வேறுபட்ட தன்மை உடையவர்கள்’ என்பதை விளக்க ப்ரமாணமாக பல இடங்களில் எடுத்தாளப்படுகிறது.

‘‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே I
தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநச்நந்நந்யோ அபி4சாகஶீதிII’’
(முண்டக. 3-1-1)

இதன் பொருளாவது:- [அழகிய (ஜ்ஞாந கர்மங் களாகிற) இறக்கைகளை உடையவையும், ஒத்த குணத்தை உடையவையும், ஒன்றையொன்று விட்டுப்பிரியாதவை யுமான இரு பறவைகள் (பரமனும் ஜீவனும்) ஒரே மரத்தில் (தேஹத்தில்) அமர்ந்திருக்கின்றனர்; அவைகளில் ஒன்று (ஜீவன்) (கர்மமாகிற) பழத்தை இனிதாக உண்கிறது. அப்பழத்தை உண்ணாமலிருந்தும் மற்றொரு பறவை (பரமன்) மிகவும் பிரகாசிக்கிறது.]’ என்பதாகும்.

இந்த மந்திரத்திற்கு ரங்கராமானுஜமுநி அளிக்கும் விளக்கம்:

‘‘ஒரு வீடு பற்றி எரிகையில், உள்ளுறைபவர்கள் எல்லோருமே எரிந்து சாம்பலாக வேண்டியிருக்க, எப்படி ஒரே உடலில் வசிக்கும் ஜீவ, பரர்களுள் கர்மம் ஜீவனை மட்டுமே தீண்டும்? பரமாத்மாவை அல்ல’ என்பது எவ்வாறு பொருந்தும்’’ என்னும் கேள்விக்கு, இந்த மந்திரம் பதிலளிக் கிறது. ஜீவன் என்னும் பறவைக்கு இரண்டு சிறகுகளாக இருப்பவை, கர்மம் மற்றும் ஜ்ஞானம். பரமாத்மா என்னும் பறவைக்கு இரு சிறகுகளாக இருப்பவை, ஸங்கல்பம் மற்றும் சக்தி ஆகியவை. ஆகையால், இரண்டு பறவைகள் ஒரே மரத்திலிருந்தாலும், கர்ம வயப்பட்ட ஜீவனானவன், தான் பல பிறவிகளில் சேர்த்த கர்மத்தின் பலனை அநுபவிக் கிறான். பரமாத்மா கர்ம வசப்படாதவன் ஆகையாலே அந்த பலனை அநுபவிப்பதில்லை.

இந்த உபநிஷத்தின் தேர்ந்த பொருளாவது:- ‘ஒருவர் ‘‘ஓம்’’ என்னும் மந்திரத்தை வில்லாக்கி, ஆத்மாவை அம்பாக்கி, பரப்ரஹ்மமாகிய இலக்கை நோக்கி செலுத்த வேண்டும்’ என்பது.

இந்த உபநிஷத்திலுள்ள முக்கியமான கருத்துக்கள்:-

1. அண்டத்தின் படைப்பைக் குறித்த விளக்கம். இந்த படைப்பு பரம புருஷனின் ஸங்கல்பத்தைச் சார்ந்திருப்பது விளக்கப்படுகிறது.

2. ஜீவாத்மா, பரமாத்மா ஆகியோரிடையே உள்ள வேறுபாடு தெளிவாக விளக்கப்படுகிறது.

3. ஸ்வாமி ராமாநுஜர், தம்முடைய ஸ்ரீபாஷ்யத்தில், சரீர- சரீரி பாவத்தை விளக்க, இந்த உபநிஷத்தில் உள்ள ச்லோகங்களை பெரும் அளவில் கையாண்டுள்ளார். சேதனர் கள், அவன் சரீரம்; அவனே சரீரி!

இதில் உள்ள சாந்திபாடம்:

ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா ப4த்3ரம் பஶ்யேமாக்ஷபி4யஜயத்ரா: ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாம் ஸஸ்தநூபி4ர் வ்யஶமே தே3வஹிதம் யதா3யு:

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வதே3வா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

இதன் பொருள்- ‘‘எங்கள் செவிகள் கேட்கப்பட வேண்டிய மங்களமானவற்றை மட்டுமே கேட்கட்டும். எங்கள் விழிகள், காணத்தக்க மங்களமானவற்றை மட்டுமே காணட்டும். எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆயுட்காலம் வரை நாங்கள் நல்ல உடல்நலத்துடனும், பலத்துடனும் வாழ்ந்து அவன் புகழ் பாடக்கடவோமாக!’’ என்பதாகும்.

4. கடோபநிஷத்

1) வேதத்துடன் தொடர்பு:- யஜுர் வேதம்-- தைத்திரீய சாகை, சாம வேதம், அதர்வண வேதம் மற்றும் ரிக் வேதத்துடன் சில தொடர்புகள்.

2) கட்டமைப்பு மற்றும் அளவு:- இந்த உபநிஷத்தில், இரண்டு அத்யாயங்கள் உள்ளன. ஒவ்வொன் றிலும் இரண்டு ‘வல்லிகள்’ (பகுதிகள்) உள்ளன.

3) தனித்தன்மை:- அ. பெர்ஷிய மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட முதல் உபநிஷத். ராஜாராம் மோஹன்ராய் இதன் ஆங்கில வடிவத்தை வெளிக் கொணர்ந்தார். ஆ. எட்வின் ஆர்னால்ட் என்பவர் இதை ‘மரணத்தின் ரகசியம்’ என்னும் தலைப்பில் ‘சீர் பாடலாக’ப் பாடி இதன் பெருமையை வெளியிட்டார், இ. ‘சமயம் மற்றும் தத்துவ ஞானத்தின் உண்மையான வெளிப்பாடு’ என்று கருதப்படுகிறது இந்த உபநிஷத்.

4) பெருமை மற்றும் அறிய வேண்டிய செய்திகள்:- அ. அதிகமாக வாசிக்கப்படும் உபநிஷத். இதில் வரும் நசிகேதனின் கதை, பள்ளிகளில் படிக்கப்படும் பாடப்புத்தகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆ. இதில் கூறப்படும் செய்திகள், ஒப்புயர்வற்று, அழகோடு, தெளிவாக உள்ளன. இ.பரமாத்மாவின் பெருமை தெளிவாக காட்டப் பட்டுள்ளது. ‘அவனை அறிபவர்களே அழிவற்ற தன்மை பெறுவது’ விளக்கப்படுகிறது. ஈ. சிறுவனான நசிகேதன், ப்ரஹ்ம வித்யையைத் தேடிச்செல்வது மிகவும் வியப்பிற் குரியது.

இந்தப் பின்னணியின் வரலாறு உபநிஷத்திலேயே காணப் படுகிறது.

‘வாஜச்ரவஸ்’ என்ற ஒரு மஹரிஷியிருந்தார். இவர் ‘விஶ்வஜித்’ என்ற யாகத்தை மேற்கொண்டார். அதன் பலனாவது, ஸ்வர்க்க லோகத்திற்கு ஈடான பலன்களைப் பெறுவதாகும். இந்த வேள்வியை நடத்தித்தரும் குருமார் களுக்கு, அவர்கள் கேட்ட த்ரவ்யத்தை தரவேண்டும் என்ற நியதி உள்ளது. அவ்வாறு கேட்கப்படும் த்ரவ்யம் எத்தனை பெரியதாக இருந்தாலும் தரவேண்டியதே.

ஒருமுறை, நசிகேதனின் தந்தையான வாஜச்ரவஸ் என்பவர், இந்த வேள்வியை நடத்தினார். வேள்வியை நடத்த வந்த குருமார்களுக்கு, சிறிதும் உபயோகப்படாத, மலட்டுப் பசுக்கள் போன்றவற்றைத் தானமாகத் தந்தார். இதையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நசிகேதன், தன் தந்தையிடம், ‘‘தந்தையே! என்னை யாருக்குத் தானமாகத் தரப்போகிறீர்கள்?’’ என்று மீண்டும் மீண்டும் கேட்டு நச்சரித்தான். பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டிருந்த வாஜச்ரவஸ், தன் மகனின் நச்சரிப்பால் ஆத்திரமடைந்து, சிறிதும் யோசியாமல், ‘‘உன்னையா? உன்னை யமனுக்கு தானமாக அளிக்கிறேன்’’ என்று கூறிவிட்டார். தான் கூறிய வார்த்தையின் தாக்கத்தை எண்ணி, வாஜச்ரவஸ் வருந்தினாலும், நசிகேதன், சிறிதும் அயரவில்லை. ‘தந்தை தன்னை யமனுக்கு தானமாகத் தந்துவிட்டார்’ என்ற அந்த சொல்லையே பெரிதாகக் கொண்டு, யமனைச் சந்திக்க யமலோகத்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டான்.

நசிகேதன் யம பட்டணத்தை அடைந்த நேரம், யமன் அங்கே இருக்கவில்லை. வேலையாக வெளியே சென்றிருந் தான். மூன்று நாட்களுக்குப் பின்பு தன் இருப்பிடம் திரும்பிய யமன், சிறுவனான நசிகேதன் மூன்று நாட்களாக உணவு உறக்கமின்றி தன் மாளிகை வாசலில் காத்திருப்பதைக் கண்டு மனம் கனிந்து, மூன்று இரவுகள், கழிந்ததற்கு இணையாக நசிகேதனுக்கு, மூன்று வரங்களைத் தருவதாக வாக்களித்தான்.

முதல் வரமாக நசிகேதன், தன் தந்தையின் எண்ணத் தில் மாற்றம் ஏற்படுத்தவும், தான் மீண்டும் தன் தந்தையிடம் செல்லவும் கேட்டான். இரண்டாம் வரமாக, ஸ்வர்க்க லோகங்களைப் பெற்றுத்தரும் அக்நி வித்யையை போதிக்கும் படி கேட்டான்.

யமன் அக்நி வித்யையின் விவரங்களை நசிகேத னுக்குப் போதித்தான். அக்நியை முன்னிட்டு செய்யும் வேள்வி குண்டத்தின், வடிவமைப்பை விளக்கினான். இந்த வேள்விக்கு ‘நசிகேதன் வேள்வி’ என்றே, தான் பெயர் சூட்டுவதாகவும், இந்த வேள்வியை மூன்று முறை செய்பவர்கள், மரணத்தின் தளையிலிருந்து, இந்த உடல் இருக்கையிலேயே விடுபடுவார்கள் என்றும் கூறினான்.

நசிகேதன் கேட்ட மூன்றாவது வரமே, இந்த உபநிஷத்தின் முக்கிய சாரமாக அமைகிறது. மரணத்தின் பின்பு நடப்பதென்ன?, ஆத்மாவின் நிலையென்ன? என்பதை தனக்கு விளக்குமாறு கேட்டான், நசிகேதன். யமன், இதை நசிகேதனுடன் விவாதிக்க விருப்பம் கொள்ளவில்லை. இதற்குப் பதிலாக வேறு எந்த செல்வத்தை வேண்டு மானாலும் கேட்கச் சொல்லி நசிகேதனை வற்புறுத்தினான். நசிகேதன் இதற்கு இணங்கவில்லை.

இறுதியாக, யமன் நசிகேதனுக்கு மரணத்திற்குப் பின்பு ஆத்மாவிற்கு ஏற்படும் நிலையை விளக்க முற்பட்டான். இதுவே இந்த உபநிஷத்தின் சாரமாக அமைகிறது. ‘மனித வாழ்வின் முடிவான உயர்ந்த இலக்கு, மிக உயர்ந்த ப்ரஹ்மத்தைக் குறித்த அறிவைப் பெறுவதாகும்’ என்பதே அது.

யமன் நசிகேதனுக்கு எடுத்துரைத்த உண்மை:-

  ஆத்மா என்பது சிறியதைக் காட்டிலும் சிறியது; மிகப்பெரியதைக் காட்டிலும் பெரியது. அது பிறப்பதில்லை; இறப்பதில்லை. அது கொல்வதுமில்லை; கொல்லப்படுவது மில்லை; ஆத்மாவைப் பற்றிய அறிவு, ஓர் ஆசிரியரிடமிருந்து பெறப்பட வேண்டும்.

யமன், நசிகேதனுக்கு, ‘‘ஓம்’’ என்னும் ப்ரணவத்தின் இயல்பையும், அதுகொண்டு த்யானிக்கப்பட வேண்டி யதையும் விளக்கினான்.

எடுத்துரைக்கப்பட்ட பரமாத்மாவின் பண்புகள்:

1) அசரீரம் - உடலில்லாதவன்; 2) மஹாந்தம்-மிக உயர்ந்தவன்; 3) விபு-எல்லாவற்றிலும் ஊடுருவியிருப்ப வன்; 4) என்றும் அழிவில்லாதவன், நிலையானவன், மாற்றங்களற்றவன்; 5) ஈசானம்-காலத்தின் இறைவன்; 6) அதிதி - ஹிரண்ய கர்பன்; 7) ஜ்யோதி ஸ்வரூபன் - மாசற்று ஒளிர்பவன்; 8) ஸர்வவ்யாபி- எல்லா இடத்திலும் ஊடுருவியிருப்பவன்.

ப்ராணனும் புலனுறுப்புகளும் அவனைச் சார்ந்தவை. அவனே துடிப்புள்ள ப்ராணன்; அதனால் தான் படைப்புத் தொழில் நடைபெறுகிறது.

இந்த பரமாத்மாவை, உபந்யாஸங்களைக் கேட்ப தாலோ, மிகச் சிறந்த கல்வியறிவாலோ பெற முடியாது. அவன் மனமுவந்து யாரைத் தேர்வு செய்கிறானோ, அவனால் தான் அவனை (பரமாத்மாவை) அடைய இயலும். அவன் அருளைப்பெற சீரிய வாழ்க்கை நெறி, நன்னடத்தை, நீதி நெறி,தூய்மை ஆகியவை தகுதிகளாக அமையும்.

இந்த உடல், ஓர் ரதத்திற்கு ஒப்பானது. ஜீவாத்மா அதிலமர்ந்திருக்கும் பயணி. அறிவே ரத சாரதி. (ஓட்டுபவர்). மனமே கடிவாளம். புலன்களே குதிரைகள். புலனுகர்ச்சிக்கான பொருள்களே வீதிகள். அறிவை ரதசாரதியாகவும், நன்கு கட்டுப்படுத்தப்பட்ட மனதை கடிவாளமாகவும் கொண்ட ஒருவர், ரதத்தை ஓட்டி, பயணத்தின் முடிவை அடைகிறார். அதுவே மிக உயர்ந்த பரமாத்மாவான நாராயணனின் இருப்பிடம்.

தேவ-மனித விலங்குகளாகவும், தாவரங்களாகவும் கர்மத்திற்கேற்ப, ஜீவர்கள் பல உடல்களை அடைகிறார்கள். எனவே, வீடுபேற்றை அடைய ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும். ஜீவ பரமாத்மாக்களுக்கிடையில் உள்ள உறவைப் புரிந்து கொண்ட ஒருவருக்கு, ஜீவனின் இயல்பு, பரமாத்மா வின் இயல்பு, அவனை அடைவதற்கான வழி, அவ்வாறு அவனை அடைய முயற்சிக்கும்போது ஏற்படும் இடர்ப் பாடுகள், அந்த இடர்ப்பாடுகள் நீங்கி, அவனை அடைந்து, அவனுக்குத் தொண்டு செய்து, அதனால் ஏற்படும் இன்பமும் அவனுக்கே ஆக வேணும் என்ற நினைவு கொள்வது ஆகியன புலப்படுகின்றன. தூய்மையான நீரை, தூய்மையான நீர் நிறைந்த நீர் நிலையில் சேர்ப்பது போல.

உடலில் 72,000 (நாடி) நரம்புகள் உள்ளன. இவற்றுள், இதயத்தைச் சூழ்ந்திருக்கும் 101 நரம்புகள் முக்கியமானவை. இவற்றுள் 101ஆவது நாடி மிகவும் முக்கியமானது. இது உச்சந்தலையை நோக்கி செல்கிறது. இதன் பெயர் ‘ஸுஷும்நா நாடி’. மரணம் நேர்கையில், இதன் வழியாகச் செல்பவன், வைகுண்டத்திற்கு வழிநடத்தப் பெற்று, பரமாத்மாவின் இருப்பிடத்தை அடைகிறான்.

இதன் சாந்தி பாடம்:

ஸஹநாவவது | ஸஹ நௌ பு4நக்து | ஸஹ வீர்யம் கராவஹை தேஜஸ்விநாவ தீ4தம ஸ்து மா வித்3விஷாவஹை | | ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||

இதன் பொருள்:-’அவன் நம் இருவரையும் (ஆசிரியரையும் மாணாக்கரையும்) காப்பாற்றட்டும், அவன் நம் இருவருக்கும் சத்து நிறைந்த உணவை அளிக்கட்டும், நாம் இருவரும் ஒன்றாக வலிமையைப் பெற அவனருளட்டும், நம் கல்வி ஒளிதருவதாகட்டும், நாம் ஒருவரை ஒருவர் எக்காலத்திலும் வெறுக்காமல் இருக்கக்கடவோமாக, உடல் நலக்குறைவினாலும் மனஉளைச்சலாலும் ஆன்மிகத்தில் பற்றற்றும் இருக்கும் நம்மை, அவற்றை நீக்கி எங்கும் அமைதி தவழச் செய்யட்டும்.

5. ப்ரஶ்நோபநிஷத்

  1) வேதத்துடனான தொடர்பு- முண்டகம் மற்றும் மாண்டூக்ய உபநிஷத்துக்களைப் போல, இந்த உபநிஷத்தும் அதர்வ வேதத்துடன் தொடர்பு கொண்டது.

2) கட்டமைப்பு மற்றும் அளவு - இது உரை நடையில் அமைந்துள்ளது. இதன் பகுதிகளான 16, 13, 12, 11, 7 மற்றும் 8 உள்ள சொற்றொடர்கள் வினா வடிவில் உள்ளன.

3) தனித்தன்மை - இந்த உபநிஷத் முழுவதுமே, வினா விடை வடிவில் அமைந்துள்ளது

4) சிறப்பம்சம் மற்றும் உபநிஷத் தரும் செய்தி:- அ. இதில், பிப்பலாதர் என்னும் ஒரே ஆசிரியர் தம்முடைய ஆறு மாணாக்கர்களின் வினாக்களுக்கு விடையளிக்கிறார். ஆ.இதில், பரிணாம வளர்ச்சி, காலத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது, சூரியனும் சந்திரனும் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றனர் எனப்படுகிறது. இ. பிப்பலாதருடைய கருத்துகள் மிகச் சிறப்புடையன. விஜ்ஞானக் கண்ணோட்டம் கொண்டவை. ஆன்மீகம் மற்றும் மனோதத்துவ கருத்துக்களைக் கொண்டவை.

பிப்பலாதரின் ஆறு மாணாக்கர்களின் பெயர் கள்:- 1. சுகேசன், 2. சத்யகாமா, 3. கார்கியா, 4. கௌசல்யா, 5.பார்கவ மற்றும் 6. கபந்தி. இவர்களே பிப்பலாதரிடம் கேள்வி கேட்பவர்கள்.

இவர்கள் அறுவரும், பிப்பலாதரை முதலில் அணுகிய போது, அவர், இவர்களை நோக்கி, வரப்போகும் ஒரு வருடகாலத்திற்கு, எளிமை (சிக்கனம்) தவிர்ப்பு (விரதம்) மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மேற்கொண்டு வாழ்ந்த பிறகு, திரும்ப வரச்சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

முதல் கேள்வியைக் கேட்டவர், கபந்தி என்பவர். இவர் படைப்பைக் குறித்து வினவினார். இதற்கு பிப்பிலாதர், அளித்த பதில்:- ப்ரஜாபதியானவர், எளிமையான வாழ்வை மேற்கொண்டபிறகு, அன்னம் மற்றும் ப்ராணன் என்னும் இருவரைப் படைத்தார். அவர்கள் வழியாக படைப்பைத் தொடங்கினார். இவற்றுள் சூரியன் என்பது ப்ராணன், சந்திரன் என்பது அன்னம்- அல்லது உயிர் மற்றும் பருப்பொருள். ஆசிரியரானவர் ப்ராணனின் துணைப் பகுதிகள், மற்றும் இந்த்ரியங்களின் தோற்றம் சூரியனிலிருந்து ஏற்படுவதை விவரித்தார். உணவு மற்றும் உடல் சந்திரனிலிருந்து தோன்றுவதை விளக்கினார். இந்த உபநிஷத்தில், வருடம், மாதம், ஒளிமிக்க மற்றும் இருண்ட இருவாரங்கள், பகல் மற்றும் இரவு, உணவு மற்றும் வீரியம் ஆகிய எல்லாமே ப்ரஜாபதி என்று அழைக்கப்படுகின்றன. இறைவனே, இவை இருப்பில் வரும் போது, இவற்றின் உருவத்தை அடைகிறான்.

இரண்டாம் கேள்வியைக் கேட்டவர் பார்கவர்:-இது 15 தத்துவங்களை ஆதரிக்கும் தேவர்களின் படைப்பு தொடர் பானது. மூன்று உலகங்களில் உள்ள எல்லாமே, ப்ராணத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மூன்றாவது கேள்வியைக் கேட்டவர், கௌசல்யா:- இதுவும் ப்ராணன் என்னும் தத்துவத்துடன் தொடர்புடையது. ப்ராணன் எவ்வாறு, எங்கிருந்து வருகிறது. அவன் தன்னை 5 பகுதிகளாக எவ்வாறு பங்கிட்டு விநியோகித்துக் கொள்கிறான்? அவன் எவ்வாறு வெளியேறுகிறான்?

பதிலாகத் தரப்படுவது:- ப்ராணன், ஆத்மா விலிருந்து தோன்றுகிறான், இவன் சிறப்பான சில செயல்பாடுகளால், ப்ராணன், அபானன், வ்யானன் உதானன் மற்றும் ஸமானன் என்று ஐந்து வகையாக பிரிக்கப்பட்டு உறைகிறான். ஆத்மா, இதயத்தில் வசிக்கிறான். ப்ராணன், கண், காது, வாய், நாசி, ஆகியவற்றில் வசிக்கிறான். இவற்றின் நடுவில் சமானன் வசிக்கிறான். சமானன், உணவை உடல் முழுவதிற்கும் சமமாக வினியோகிக்கிறான். இதயத்தில் உள்ள, 101 நாடிகள் (ரத்த நாளங்கள்), வ்யானனை உடையவையாக உள்ளன. (நூறு கிளைகள் மற்றும் 72,000 உப கிளைகள் உண்டு). இவற்றில், ‘உதானன்’ என்று அழைக்கப்படும் ஒன்று ஜீவனை ‘ஸுஷும்நா’ நாடி வழியாக, ஜீவனை மேல் உலகத்திற்கு சுமந்து செல்கிறது.

இவ்வாறு ப்ராணனின் தோற்றம் அதன் வருகை, இருப்பிடம் எல்லாவற்றையும் ஊடுருவும் தன்மை, ஐந்து வகைப்பட்ட பிரிவுகள், அதன் உள்ளுறை நோக்கம், இவற்றை அறிந்தவன், அழிவற்ற நிலையைப் பெறுகிறான்.

நான்காவது கேள்வியைக் கேட்பவர், கார்கியர். இது உறக்கம் மற்றும் கனவு தொடர்பானது. எந்த புலன்கள் உறங்குகின்றன? எவை விழித்திருக்கின்றன? இவற்றுள் எவை கனவைக் காண்கின்றன?

பதிலாகத் தரப்பட்டது:- உறங்குகையில், எல்லா கலைகளும் காரண சரீரத்தில் அமிழ்ந்து, உயர்ந்த தத்துவமான மனதுடன் ஒன்றுபடுகிறது. அப்பொழுது ஒருவர் கேட்ப தில்லை, காண்பதில்லை, நுகர்வதில்லை, சுவைப்பதில்லை, தொடு உணர்வு இல்லை, பேசுவதில்லை.

ப்ராணன் என்னும் அக்நிகள் மட்டுமே விழித்திருக் கின்றன. (கார்ஹபத்யம் போன்ற அக்நிகள்). கனவு நிலையில் க்ஷேத்ரஜ்ஞன் (வசிப்பவன்) என்றழைக்கப்படும் ஜீவாத்மா மட்டுமே கனவைக் காண்கிறான்.

ஆழ்ந்த உறக்கத்தில், ஜீவாத்மா, பரமாத்மாவின் மிக அருகில் சென்று அவனுடன் ஒன்றுபடுகிறான். ஆகையால் அவன் கனவுகளைக் காண்பதில்லை.

ஐந்தாவதாக வினா எழுப்பியவர், சத்யகாமா என்பவர். இவர் கேட்டது:- மனிதர்களுள் யார், ‘‘ஓம்’’ என்னும் ப்ரணவத்தை மரணமடையும் வரையிலும் த்யானிக் கிறார்கள்? அவருக்கு இதனால் எந்த உலகம் கிடைக்கிறது?

‘‘ஓம்’’ என்னும் ப்ரணவம், ‘அ’, ‘உ’, ‘ம’ என்னும் மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இதை ஒரு மாத்திரை அளவு காலத்திற்கு உச்சரித்தால், இதை உச்சரிப்பவர், மரணமடைந்தவுடன் இதே உலகத்திற்கு திரும்பி வருவது ஏற்படுகிறது. இதை இரண்டு மாத்திரை அளவு உச்சரிப்பவர், சந்திரலோகம் வரை சென்று அங்குள்ள அநுபவங்களைப் பெற்றபின், திரும்பிவருதல் ஏற்படுகிறது. இதையே மூன்று மாத்திரை அளவு உச்சரிப்பவர், மிக உயர்ந்த ஒளியை அடைந்து, ப்ரஹ்மத்தை அடைகிறார். இதயத்தில் வசிக்கும் புருஷனைக் காணப்பெறுகிறான்.

(’’மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால் மூன்றெ ழுத்தாக்கி’’ - பெரியாழ்வார் திருமொழி - 4-7-10)

இறுதியான ஆறாவது கேள்வி சுகேசனால் எழுப்பப் பட்டது:- ‘அவன் (பரமாத்மா) எங்கே வசிக்கிறான்?’ என்று வினவினான்?

இதற்கு பதிலாகத் தரப்பட்டது:- ‘ஓ! மகனே! அவன் இந்த உடலிலேயே வசிக்கிறான். இவன் அண்ட மளாவியவன். ஜீவன், நுண்ணியவன். பரமாத்மாவிடமிருக்கும் 16 கலைகள், உடலுருக்கொண்ட ஜீவாத்மாவிடமுள்ள 16 கலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

பரம புருஷனிடம் காணப்படும் 16 கலைகளாவன:- 1.ப்ராணன் - உயிர்; 2. ஸ்ரத்தா- நம்பிக்கை; 3. கம் - ஆகாசம்; 4. வாயு - காற்று; 5. ஜோதி - நெருப்பு/தீ; 6.அப - நீர்; 7. ப்ருத்வி - பூமி: 8. இந்த்ரியம் - புலன்கள்: 9. மந்- மனம்: 10. அன்னம் - உணவு: 11. வீர்யம் - வலிமை: 12.தபஸ் - எளிமை: 13. மந்த்ர - வேதங்கள்; 14.கர்ம- வேலை; 15. லோகா-உலகங்கள்: 16. நாம - பெயர் மற்றும் வடிவம்.

இவை மனிதர்களிடம் வகைப்படுத்தப்பட்டு உள்ள நிலை:- 11 புலன்கள் (ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்த்ரியங்கள் மற்றும் மனம்) மற்றும் ஐந்து நுண்ணிய தனிமங்கள்.

காண்பவன் ப்ரஹ்மத்திடம் அமிழ்கையில், இந்த 16 கலைகள் ப்ரஹ்மத்திடம் மறைந்து விடுகின்றன. இதுவே முக்தி அல்லது விடுதலை எனப்படுகிறது.

இதன் சாந்தி பாடம்:

ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா ப4த்3ரம் பஶ்யேமாக்ஷபி4யஜயத்ரா: | ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாம் ஸஸ்தநூபி4ர் வ்யஶமே தே3வஹிதம் யதா3யு: ஸ்வஸ்தி ந: இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வதே3வா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து || ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||

இதன் பொருள்:-

ஓம்! ஓ! தேவதைகளே! எங்கள் செவிகள் மங்களமான வற்றையே செவிமடுக்கட்டும். எங்கள் விழிகள் மங்கள மானவற்றையே காணட்டும். எமக்கு ஒதுக்கப்பட்ட வாழ் நாட்களை நாங்கள் முழுவதும் வாழக் கடவோமாக. எங்களுக்கு நல்ல ஆரோக்யமும் வலிமையும் கிடைக்கட்டும். நாங்கள் அவனை புகழ்ந்து பாடி வாழ்வோமாக!

6. ஐதரேயோபநிஷத்

1. வேதத்துடனான தொடர்பு:- இது, ரிக் வேதத்திலுள்ள ஐதரேய ஆரண்யகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த உபநிஷத்தை அறிவித்து பரவச் செய்த ‘‘மஹிதாஸ ஐதரேய’’ என்பவரின் பெயரை ஒட்டியே இந்த உபநிஷத் இந்த பெயரைப் பெறுகிறது.

2. கட்டமைப்பு மற்றும் அளவு:- சாந்தி மந்திரத் தையும் சேர்த்து இது ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது, ‘‘ஆத்ம சதகம்’’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஆத்மாவைக் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் ஆறு பகுதிகளைக் கொண்டது என்றபடி.

3. தனித்தன்மை:- இந்த உபநிஷத், வாமதேவர் என்று பெருமை பெற்ற ரிஷியின் அனுபவத்தை உள்ளடக்கியது.

4. சிறப்பம்சங்கள் மற்றும் உபநிஷத்தில் காணப்படும் சிறப்புச்செய்தி:-

அ. அண்டத்தின் படைப்பை வேதத்தின் கோட்பாடு களைக் கொண்டு தெளிவாக விளக்குகிறது.

ஆ. இந்த அண்டம் முழுவதும் மிக உயர்ந்த ப்ரஹ்மத்திடமிருந்து தோன்றியது என்பது விளங்குகிறது.

இ. தனிப்பட்ட ஜீவன் உலகளாவிய ஜீவனுடன் கொண்ட ஒற்றுமை மற்றும் அடையாளம் ஆகியவற்றிற்கு அழுத்தம் தருகிறது.

முதல் அத்யாயம்:- படைப்பைக் குறித்த விபரங்களை அடையாளக் குறியீடுகளோடு/ வரைபடங் களோடு/ வருணனைகளோடு தருகிறது.

முதல் பகுதி - முதலில் இருந்த ஒரே இருப்பினமான ஆத்மா, ‘‘அம்பஸ்’’ என்பதைப் படைத்தது. (மேலே ஸ்வர்க்கம்/ ஆதாரம்) மரீசி - நடுப்பகுதி, மா-பூமி, அப -பூமிக்குக் கீழ் உள்ள நீர்நிலை.

நீரிலிருந்து, அவன் (ஆத்மா) புருஷனை உருவாக்கி னான். இந்த புருஷனைக் குறித்து த்யானிக்கையில், வாய், வெடித்துத் திறந்தது. அதிலிருந்து அண்டம் வெளிப்பட்டது. அதுவும், வெளிவந்தவுடன் வெடித்தது. வாயிலிருந்து பேச்சு/வாக்கு வெளிப்பட்டது. அதிலிருந்து நெருப்பு தோன்றியது. இரண்டு நாசித் த்வாரங்கள் வெடித்து திறந்துகொண்டன. அதிலிருந்து ப்ராணன் தோன்றியது. அதிலிருந்து வாயு உற்பத்தியானது. கண்கள் வெடித்துத் தோன்றியவுடன் பார்வை வந்தது. அதிலிருந்து சூரியன் தோன்றியது. காதுகள் வெடித்து, ‘கேட்பது’ தோன்றியது. அதிலிருந்து திசைகள் தோன்றின. தோலானது வெடித்து மனம் தோன்றியது. அதிலிருந்து சந்திரன் தோன்றினான். கொப்பூழ் வெடித்து அதிலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் மூச்சு தோன்றியது. அதிலிருந்து மரணம் தோன்றியது. படைக்கும் உறுப்புகள் வெடித்து அதிலிருந்து வீரியம் தோன்றியது.

இரண்டாம் பகுதி - இவ்வாறு படைக்கப்பட்ட இலக்குகளுக்கு, ஓர் வசிப்பிடம் தேவைப்பட்டது. அதற்கு அவன், மனிதன் என்னும் வடிவத்தை ஏற்படுத்தினான். (பசு மற்றும் குதிரையை படைத்த பின்பு).

படைத்தவன், தான் படைத்த இலக்குகளை உடலினுள் நுழையச் சொன்னான். நெருப்பு (பேச்சு/வாக்கு) வாயில் நுழைந்தது. வாயு (ப்ராணன்) நாசித்துவாரங்களுள் நுழைந்தது. திசைகள் காதுகளுக்குள் நுழைந்தன. செடிகளும் மரங்களும் முடி வடிவத்தில் தோலில் நுழைந்தன. கீழ் நோக்கிச் செல்லும் மூச்சாக மரணம் கொப்பூழில் நுழைந்தது. வீரியமாக மாறிய நீர் பிறப்புறுப்புகளை அடைந்தது.

மூன்றாம் பகுதி - படைத்தவன் உணவை த்யானித்து, உணவைப் படைத்தான். ஆனால் அச்சம் கொண்ட உணவு மீண்டும் திரும்பி பறக்கத் தொடங்கியது. அவன் (படைத்தவன்) அவற்றை கண்கள், காதுகள் போன்றவற்றால் பற்றிக்கொள்ள நினைத்தான். ஆனால், தோல்வியடைந்தான் - ஆனால், இறுதியில் அபானன் என்னும் வாயுவால் அதைப் பற்றினான். ‘அபானன்’ என்பது கீழ்நோக்கிச் செல்லும் மூச்சு-வாயு. இதுவே உணவை ஆதரிக்கும் முக்யமான காரணம்.

இரண்டாம் அத்யாயம் - இதில், ஒரே ஒரு பகுதி உள்ளது. (இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கெதிரில் வாசிக்கக் கூடாது எனப்படுகிறது).

அவன் மனிதனுக்குள் விதையாக நிலை பெற்றான். மனிதன் இதை சாரமாக தன்னுள் கொண்டிருக்கிறான்.

கர்ப்பம் ஏற்படுவது முதற் பிறப்பு எனப்படுகிறது. பிறப்பு (ப்ரசவம்) என்பது, இரண்டாம் பிறப்பு எனப்படுகிறது. ஒருவர் வயோதிகராகி, இந்த உலகைவிட்டு நீங்கி மீண்டும் பிறப்பது மூன்றாம் பிறப்பு எனப்படுகிறது.

புகழ் பெற்ற ரிஷியான வாமதேவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘‘நான் (தாயின்) கர்பத்தில் வாசம் செய்தபொழுது, இந்த எல்லா தேவர்களின் பிறப்பையும் அறிந்திருந்தேன். இரும்புச் சங்கிலிகள் போன்று வலிமையுடைய நூற்றுக்கணக் கான உடல்கள் என்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தன. ஆனால், நான் ஓர் பருந்தைப்போல, என் பலத்தால் அவற்றை உடைத்தெறிந்து விட்டு சீக்கிரமாக கீழுள்ள வழியால் வெளிவந்து விட்டேன்’’. இவ்வாறு வாமதேவர் அழிவற்றவானார்.

மூன்றாம் அத்யாயம் - ஒரு பகுதி மட்டுமே கொண்டது. ப்ரஹ்மன், இந்திரன் ஹிரண்யகர்பன், தேவர்கள், பஞ்சபூதங்கள், எல்லாஉயிரினங்கள், மனிதர்கள், காய்கறிகள், அசையாத பொருள்கள், இவை எல்லாமே ப்ரஹ்மம் என்கிறது இந்த உபநிஷத்.

அறிவே இவற்றின் அடிப்படை. அறிவு-உணர்வே ப்ரஹ்மம் - ‘‘ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம’’ - இது இந்த உபநிஷத்தில் காணப்படும் ஓர் மஹாவாக்யம். இந்த வாக்கியம், முழு இருப்பின் (அண்டத்தின் நிலைப்பை) இயல்பை வேதாந்த மெய்ப்பொருள் வாயிலாக மிக சிறப்பாக முன் வைக்கிறது.

மேற்கண்டவாறு ப்ரஹ்மத்தை அறிபவன் அழிவற்ற தன்மையை அடைகிறான்.

இதன் சாந்தி மந்திரம்:-

வாங்மே மநஸி ப்ரதிஷ்டி2தா மநோ மே வாசி ப்ரதிஷ்டி2தமாவிராவீர்ம ஏதி4 வேத3ஸ்ய ம ஆணீஸ்த2: ஶ்ருதம் மே மாஹாஸீரநேநாதீ4தேநா ஹோராத்ராந் ஸந்த3தா4ம்ய்ருதம் வதி3ஷ்யாமி ஸத்யம் வதி3ஷ்யாமி தன்மாமவது தத்3வக்தாரமவது அவது மாமவது வக்தாரம் || ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||

என் பேச்சு (வாக்கு) மனதில் இடம் கொண்டுள்ளது. என் மனமும் வாக்கும் வேதம் பேசும் உண்மையை உணரச் செய்கின்றன. வேதச் சொற்கள் என்னை கைவிடாமல் இருக்கட்டும். நான் உண்மையையே நினைக்கக் கடவேன். உண்மையையே பேசக்கடவேன். அது என்னையும் என் ஆசிரியரையும் காப்பாற்றட்டும்.

7. மாண்டுக்யோபநிஷத்

1. வேதத்துடனான தொடர்பு-இந்த உபநிஷத், அதர்வண வேதத்துடன் தொடர்பு கொண்டது.

2. கட்டமைப்பு மற்றும் அளவு- இது மிக சிறியதும் குறுகியதுமான உபநிஷத். இதில் 12 மந்திரங்கள் மட்டுமே உள்ளன.

3. தனித்தன்மை- அத்வைத ஸித்தாந்தத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவரும், சங்கரரின் ஆசார்யருமான ‘கௌடபாதா’ இந்த உபநிஷத் தொடர்பாக ஓர் காரிகையை வெளியிட்டார். இதுவே சங்கரரின் அத்வைத ஸித்தாந்தத் திற்கு அடிப்படையாக அமைந்தது.

4. சிறப்பான அம்சங்கள் மற்றும் உபநிஷத் தரும் செய்தி-

அ. ப்ரணவமாகிய ‘‘ஓம்காரம்’’ நான்கு பகுதிகளைக் கொண்டது. இதில், மூன்று பகுதிகளைக் குறிக்கும் எழுத்துக்கள் உண்டு. நான்காவது பகுதி எழுத்தால் குறிக்க படாதது. அதுவே உண்மையில் ஆத்மா.

ஆ. இந்த உபநிஷத் முடிவாக வழங்கும் அறிவுரை-’’ தன்னால் ஒருவர் தனக்குள் நுழையவேண்டும்’

இந்த உபநிஷத் வாயிலாக கற்பிக்கப்படுபவை:-

1. ‘ஓம்’ என்பது, இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை உள்ளடக்கியது. காலத்திகு அப்பாற்பட்டதை யும் தன்னுள் கொண்டது.

2. காணப்படும் பொருள்வகையான, இருப்பு எல்லாம் ப்ரஹ்மமே; ஆத்மாவும் ப்ரஹ்மமே.

3. ‘‘உண்மை’’ என்னும் தத்துவம், நான்கு உணர் வெனும் நிலைகளில் வெளிப்படுகிறது. அவை, விழித் திருப்பது, கனவு காண்பது, கனவற்ற ஆழ்ந்த உறக்கம் மற்றும் இவற்றிற்கு மேம்பட்ட உயர்வான ஓர் நிலை. இந்த நான்கு நிலைகள், ப்ரஹ்மத்தின் நான்கு பாதங்களாக வர்ணிக்கப் படுகின்றன. இவற்றுள், முதல் மூன்று நிலைகள், ‘‘ஓம்’’ என்னும் ஓங்காரத்தின் மூன்று எழுத்துக்களையும், நிசப்த மானது நான்காவதான ‘‘அர்த்த மந்திரத்’’தையும் குறிக்கும்.

‘‘ஓம்’’ என்பதை ப்ரஹ்மத்துடன் ஒப்பிடப்படுகிறது இந்த உபநிஷத். இதை இயற்றியவரான மாண்டுக்ய மஹரிஷியின் பெயரால் வழங்கப்படுகிறது. ‘‘மண்டூகம்’’ என்றால் தவளை. தவளையானது, தாவிக்குதித்துச் செல்லும் இயல்பைக் கொண்டது. தவளையைப் போலவே, ஒருவர், விழித்திருக்கும் நிலை, கனவு காணும் நிலை மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகியவற்றிலிருந்து இவற்றின் வரம்பைக் கடந்து, மேலான நிலைக்குத் தாவிச்செல்லவேண்டும். ‘‘அக்ஷர உபாஸனை’’ என்ற பெயர் கொண்ட இந்த உபாஸனை, ‘‘ஓம்’’ என்பதை த்யானித்து, ஒருவர் உறுதியாக நான்காவது நிலையான ‘துரீய’ நிலைக்குச் செல்லலாம்’.

‘‘ஓம்’’ என்பதில் உள்ள எழுத்துக்கள் குறிப்பது, விளக்கப்படுகிறது. (ஓம்=அ, உ, ம) முதல் எழுத்தான ‘அ’ என்பது விழித்திருக்கும் நிலையை விளக்குகிறது. இது ‘‘வைஶ்வானரன்’’ எனப்படும். இந்த நிலையில் இவன் பருத்த நிலையில் உள்ள எல்லாப் பொருள்களையும் அநுபவிக்கிறான்.

ஆ. இரண்டாம் எழுத்தான, ‘உ’ ‘தைஜஸம்’ என்பது, கனவு நிலையைக் குறிக்கும். இது உள்நோக்கிச் செல்லும் உணர்வு. இது நுண்ணிய பொருள்களை அநுபவிக்கிறது. இந்த நிலையில், இவன் எல்லோருடனும் சமமானவனா கிறான். ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் மட்டும், இவன் குடும்பத்தில் பிறக்கிறார்கள்.

இ. மூன்றாம் எழுத்தான, ‘ம’ என்பது, ‘ப்ரஜ்னன்’ எனப்படுகிறது. இது கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தைக் குறிக்கும். இந்நிலையில் விருப்பங்களோ கனவுகளோ இல்லை. ஒருவர் உணர்வு மற்றும் பேரானந்தத்துடன் ஒன்றாகிறார்.

ஈ. அர்த்த மந்திரத்தில், நான்காவது பகுதி:- வரம்புகளைக் கடந்த நிலை. இது எண்ணங்கள், இரட்டைகள், அறிவு எல்லாவற்றையும் கடந்த ஓர் நிலை. இது மங்கள மானது. இரண்டாவதாக ஒன்றும் இல்லாதது. இது துரீய நிலை எனப்படுகிறது.

எவனொருவன் இந்த எல்லா நிலைகளையும் அறிந்துள்ளானோ, அவன், ‘தனக்குள்’ நுழைகிறான். அண்ட மளாவிய ஆத்மா, இரண்டு அம்சங்கள் (கூறுகளைக்) கொண்டது. இதில் நுண்ணியது வைஶ்வாநரன் எனப் படுகிறது. மிகவும் ஸ்தூலமானது (பருத்தது) ‘விராட்’ எனப்படுகிறது.

இந்த உபநிஷத்திலுள்ள மஹா வாக்யமானது- ‘‘அயம் ஆத்மா ப்ரஹ்ம’’ - தனிப்பட்ட ஜீவன் மிக உயர்ந்த ஜீவனிடமிருந்து பிரிக்கப்படாத இயல்பை, இந்த மஹாவாக்யம் காட்டித் தருகிறது.

சாந்தி மந்திரம்-

ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா ப4த்3ரம் பஶ்யேமாக்ஷபி4யஜயத்ரா: | ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாம் ஸஸ்தநூபி4ர் வ்யஶமே தே3வஹிதம் யதா3யு: ஸ்வஸ்தி ந: இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வதே3வா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து ||

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: |

‘‘ஓம்! தேவதைகளே! எங்கள் செவிகள் மங்களமான வற்றை மட்டுமே கேட்கட்டும். எங்கள் விழிகள் மங்களமான வற்றை மட்டுமே காணட்டும். நாங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வாழ்நாட்களை திடமான கை கால்களுடன் உங்கள் புகழைப் பாடியவண்ணம் வாழக்கடவோமாக’’

8. தைத்திரீய உபநிஷத்

1. வேதத்துடனான தொடர்பு- கிருஷ்ண யஜுர் வேதம் மற்றும் தைத்திரீய ஆரண்யகம். இந்த உபநிஷத்தின் தோற்றம் மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. கட்டமைப்பு மற்றும் அளவு- இதில் மூன்று, ‘வல்லி’கள் (பகுதிகள்) உள்ளன. இவற்றில் முறையே 12, 9 மற்றும் 10 அநுவாகங்கள் உள்ளன.

3. தனித்தன்மை - அ. மாணவர்கள் தாங்கள் கல்வி கற்று முடிந்தபிறகு, பாடசாலையை விட்டு வெளியே செல்கையில், இந்த உபநிஷத்திலுள்ள மந்திரங்கள் ஓதப்படத் தக்கவை. எந்த வேறுபாடும் இல்லாமல், எல்லா மாணாக்கர் களாலும், எல்லாக் காலங்களிலும் ஓதப்படத் தக்கவை.

ஆ. உபநிஷத்துக்களில் காணப்படும் தத்துவங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றை உணர்த்தும், கையகப்படுத்தும், ஓர் திசைகாட்டியாக உதவுகிறது.

4. சிறப்பம்சங்கள் மற்றும் உபநிஷத் தரும் செய்தி-

அ. இதில் காணப்படும் முக்யமான அறிவிப்பு, ‘ப்ரஹ்மத்தை அறிந்தவன், மிக உயர்ந்த நிலையை அடைகிறான்’ என்பது. (ப்ரஹ்ம விதாப்நோதி பரம்)

ஆ. ஆறு வேதாங்கங்களில் ஒன்றான ‘சிக்ஷை’ என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்த சிக்ஷையானது, வேதங்களைக் கற்பதற்கான சரியான உச்சரிப்பு, சொல்லிற்குத் தரப்படும் ஒலியழுத்தம், சொல்லை உச்சரிக்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய வலிமை, தெளிவாக எடுத்துரைத்தல் ஆகிய வற்றைக் கற்றுத்தருகிறது.

இ. மிக அதிக அளவில் ஓதப்படும் வேதங்களுள் இதுவும் ஒன்று,

1. சிக்ஷா வல்லி- குருகுலத்தில் கல்வி கற்று முடித்த மாணவர்கள் குருகுலத்தை விட்டுச் செல்கையில், ஆசிரியர் அவர்களுக்கு நல்கும் அழகான நல்லுபதேசம் இதில் காணப்படுகிறது. இது தற்காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டமளிப்பு விழா சொற்பொழிவு போன்றது.

ஆசிரியர் ப்ரஹ்மத்தை இவ்வாறு துதிக்கிறார். ‘‘நான் தமக்குள் நுழையக் கடவேன்; தாம் என்னுள் நுழையக்கடவீர்’’ ‘‘வ்யாஹ்ருதிகள்’’ எனப்படும் மெய்யுணர்வை வெளிக் காட்டும் அசைகளானவை ‘பூ: புவ: சுவ: மற்றும் ம:’ என்பவை. இவை விளக்கப்படுகின்றன. ‘பூ:’ என்பது உலகம், அக்நி, ரிக்வேதம் மற்றும் ப்ராணனைக் குறிக்கிறது. ‘புவ:’ என்பது ஆகாயம், காற்று, சாமவேதம், அபானன் என்னும் ப்ராணன் ஆகியவற்றைக் குறிக்கிறது. ‘சுவ:’ என்பது ஸ்வர்க்கம், சூரியன், யஜுர் வேதம் மற்றும் வ்யானன் என்னும் ப்ராணனைக் குறிப்பிடுகிறது. ‘ம:’ என்பது சூரியன், சந்த்ரன், எல்லா வேதங்களையும் பெருமைப்படுத்தும் ப்ரஹ்மம், மற்றும் உணவு ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

  இவ்வாறு, ப்ரஹ்மத்தின் 16 அம்சங்களைக் காண் கிறோம். இவை ப்ரச்னோபநிஷத்தில் பேசப்பட்டுள்ள 16 கலைகளை ஒத்ததாகும்.

மாணவர்கள் அடையாளக் குறியீடுகளாக உள்ள இந்த வ்யாஹ்ருதிகளைக் குறித்துத் த்யானம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

‘இந்த ச்ருதியானது ஐந்து பகுதிகளாக (பங்க்திகள்) வகைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த அண்டம், ப்ரஹ்மம்’ என்று கற்பிக்கப்படுகிறது. ‘‘ஓம்’’ என்பதும் ப்ரஹ்மம். இந்த அண்டமே, ‘‘ஓம்’’ என்பது. ‘‘ஓம்’’ என்பதே எல்லா வேதங் களிலும் உள்ள முதல் மந்திரம். அதுவே சப்தம் (ஒலி) ப்ரஹ்மம் அதுவே ப்ரஹ்மத்தின் உறைவிடமாகும்.

ஆசிரியர், தம் மாணாக்கர்களுக்கு மேலும் இவ்வாறு வலியுறுத்துகிறார். ‘‘உண்மையையே பேசுங்கள்; தர்மங்களை சரியாக ஆற்றி உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். வேதங்களைக் கற்றறிவதிலிருந்து நழுவாதீர்கள். உங்கள் அன்னை உங்களுக்கு தெய்வமாக இருக்கட்டும். உங்கள் தந்தை உங்கள் தெய்வமாக இருக்கட்டும். உங்கள் ஆசிரியர் உங்களுக்கு தெய்வமாக இருக்கட்டும். விருந்தினர் உங்களுக்கு தெய்வமாக இருக்கட்டும்’’.

2. ஆனந்தவல்லி:-

அ. இதில் விளக்கப்படும் உண்மைகள், ‘ப்ரஹ்மத்தை உணர்ந்தவர்கள், மிக உயர்ந்த, ‘அறிந்த நிலை’யை அடைகிறார்கள். ப்ரஹ்மமே உண்மையானது; அவனே அறிவு; அவனே முடிவற்றவன். ‘ஸத்யம், ஞானம், அநந்தம், ப்ரஹ்ம’. எவனொருவன் ‘இந்த ப்ரஹ்மமானது தன் இதயத்தில் ஓர் ரகசியமான இடத்தில் ஆகாசமாக உள்ளான்’ என்பதை உணர்கிறானோ, அவன் எல்லா விருப்பங்களையும் அநுபவிக்கிறான். ஏனெனில், ப்ரஹ்மம் எல்லா இடத்திலும் உள்ளது.

ஆ. ஆத்மாவிலிருந்தே எல்லா நுண்ணிய மற்றும் பருத்த பொருள்கள் வெளிக்கிளம்பியுள்ளன. உயிரும் சுவாசமும் தவத்திற்கு (எளிமைக்கு) அடித்தளம் ஆனவை, உணவு உயிர்வாழ்வதற்கு ஆதாரமானது. இந்த உபநிஷத், உணவு மற்றும் பொருள்வகையான வாழ்க்கையின் முக்கியத்வத்தை மதிக்கிறது. இவை ஆன்மீக வாழ்விற்கு வழி வகுக்கும் சாதனங்களாகும்.

இ. இந்த உபநிஷத்தில், ஐந்து விதமான மூடு நிலைகள் வர்ணிக்கப்பட்டுள்ளன. அவை 1. அன்னமய கோசம் - உணவால் அமைக்கப்பட்ட, பருத்த நிலையிலுள்ள உறை அல்லது கோசம். 2. ப்ராணமயகோசம்- உயிர் வாழ்வதற்குத் தேவையான முக்கியமான காற்றால் ஆனது. 3.மனோமய கோசம் - மனதால் அமைக்கப்பட்டது. 4.விஞ்ஞானமயகோசம் - அறிவால் அமைக்கப்பட்டது. 5.இறுதியாக ஆனந்தமயகோசம் - பேரின்பத்தால் அமைக்கப்பட்டது.

இந்த எல்லா உறைகளுக்குள்ளும் உள்ளாக, மனித னுக்குள் ‘‘ஆத்மா’’ உறைகிறான். பேரின்பம் என்பது ஆத்மா (ஜீவன்) மற்றும் ப்ரஹ்மத்தின் இயல்பாகும். ப்ரஹ்மத்தின் ஆனந்தம். ‘ப்ரஹ்மானந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இது எல்லைகாண இயலாத ஆனந்தமாகும்.

படிப்படியாக உயரும் ஆனந்தத்தின் அளவு இவ்வாறு விளக்கப்படுகிறது:- வலிமை மிக்க ஒர் வாலிபனின் ஆனந்தம், பிறகு ஓர் கந்தர்வனின் ஆனந்தம், பிறகு தேவர்களின் ஆனந்தம், பிறகு இந்திரனின் ஆனந்தம், பிறகு ப்ருஹஸ்பதி மற்றும் ப்ரஜாபதியின் ஆனந்தம், அதற்குப்பின்பு வருவது எண்ணிப்பார்க்க இயலாததாக, அறிவிற்கு எட்டாத தாக, இருக்கும் ப்ரஹ்மத்தின் ஆனந்தமான ப்ரஹ்மானந்தம்.

ஈ. படைப்பின் ரகசியம் இந்த வல்லியில் (பகுதியில்) விளக்கப்பட்டுள்ளது. ப்ரஹ்மம் ‘‘நான் பலவாகக் கடவேன்’’ (பஹுஸ்யாம்) என்று ஸங்கல்பித்து, இந்த அண்டத்தைப் படைத்தது. பின்பு, அதில் உள்ள எல்லாவற்றின் உட்புகுந்தது. இது அண்டத்தில் இறைவனின் உள்ளுறை இயல்பை விளக்குகிறது.

3) ப்ருகு வல்லி:- வருணதேவன் தன் மகனான ப்ருகுவிற்கு, சாதனை அல்லது ப்ரஹ்ம வித்யையை கற்றுத் தந்ததால், இந்த வல்லி, ‘‘ப்ருகுவல்லி’’ என்று அழைக்கப் படுகிறது. இதில் சாதனையாக இருக்கும் தபஸ் அல்லது எளிமை குறித்த அறிவுரை உள்ளது. முன்பு விளக்கப்பட்ட ஐந்து கோசங்களும் இதில் காணப்படுகின்றன.

ப்ருகுவானவன், ஆனந்தமய கோசத்திற்குள்ளாக, ப்ரஜ்யாத்மன் இருப்பதைக் கற்கிறான். - இதுவே உள்ளுக்குள் உறையும் ஆத்மா. அதுவே ப்ரஹ்மம். அதுவே ப்ரஹ்மம்! அதுவே உயிர் மற்றும் நிலைப்பின் அடிப்படை தத்துவம். அது பேரின்பமே வடிவாகக் கொண்டது. ப்ரஹ்மம், ஆனந்தம் மற்றும் ஆனந்தமயன், ஆகியவை, ஒரே பொருளைக் குறிக்கும்.

இந்த உபநிஷத்தில் நிறைவாக அறிவிக்கப்படுவது, ‘ப்ரஹ்மம் எல்லா மனிதர்களுக்குள்ளும் உள்ளது. அவன் அண்டத்தில் உள்ள எல்லாவற்றிலும் உள்ளான். ஒருவர் அவனை இவ்வாறே த்யானிக்கவேண்டும்.

இராமானுசர் தம்முடைய ஸ்ரீபாஷ்யத்தில், ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கு விளக்கமளிக்கையில், இந்த உபநிஷத் சொற்றொடர்களை மிகப்பெரிய அளவில் பயன் படுத்தியுள்ளார்.

தைத்திரீய உபநிஷத்-இந்த பெயர் பெற்ற வரலாறு

ஆயிரக்கணக்கான சாகைகளோடு, பரந்து விரிந் திருக்கும் வேதத்தை, கற்பதற்கு சற்றே எளிதாக்கும் வண்ணம், அதை, ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று நான்கு வேதங்களாகப் பிரித்து உதவி புரிந்தார், பகவான் வேத வ்யாஸர். இவருடைய சீடர்களில் ஒருவர் வைசம்பாயனர். வைசம்பாயனருடைய மருமகன் மற்றும் சீடர் யாஜ்ஞவல்க்யர் என்ற பெயர் கொண்ட மஹா ஞானி, அறிவாளி.

யாஜ்ஞவல்க்யர் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கங்களுக்கு ஏற்ப, காடுகளில் வசித்து, தன் குருவான வைசம்பாயனரிடம் எல்லா வித்யைகளையும் கற்றறிந்தார். ஒரு சமயம், மேருமலை அடிவாரத்தில் நடந்த அறிஞர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, எல்லோரு டைய கடுமையான கேள்விகளுக்கும் சற்றும் அயராமல் பதிலளித்து வெற்றி அடைந்து, ‘சிறந்த ஞானி’ என்னும் விருதைப் பெற்றார். தம்முடைய மாணாக்கரின் திறமையைக் கண்டு பெருமைப்படுவதற்கு பதில், பொறாமை கொண்டார், வைசம்பாயனர்.

யாஜ்ஞவல்க்யர், குருகுல வாசம் முடிந்து வீடு திரும்பும் காலம் நெருங்கியது. அவர் மனதில் ஓர் போராட்டம்.! வேதங்களின் இரண்டு பாகங்களான பூர்வமீமாம்ஸை மற்றும் உத்தரமீமாம்ஸை ஆகியவற்றை தெளிவாக வேறுபடுத்திக் காட்டவேண்டுமென்று ஆவல் கொண்டார். புரட்சிகரமாக, தொன்றுதொட்டு வரும் பழக்கங்களுக்கு மாறாக யாஜ்ஞவல்கியர், வேள்வி சடங்குகள் குறித்து ஆணையிடும் வேதத்தின் பகுதியை, இந்த சடங்குகளை விளக்கும் இலக்கிய தத்வார்த்தமான பகுதிகளில் இருந்து பிரிக்க நினைத்தார். ஆண்டாண்டு காலமாக ஒன்றோடொன்று இணைந்து இருந்த வேதத்தின் இரண்டு பகுதிகளைப் பிரிக்க நினைத்தார்.

ஏற்கெனவே சீடர் மீது கசப்பான எண்ணம் கொண்டி ருந்த வைசம்பாயனர், யாஜ்ஞவல்க்யரின் இந்த முயற்சியை பெரும் குற்றமாகக் கணக்கிட்டு, தம்மிடம் அவர் கற்ற வித்யையையெல்லாம், ‘‘உமிழ்ந்து விடவேண்டும்’’ என்று ஆணையிட்டார். குருவின் ஆணையை மீறாமல், யாஜ்ஞ வல்க்யர் தாம் கற்ற எல்லாவற்றையும் உமிழ்ந்தார். இந்த உமிழப்பட்ட வித்யையானது, நெருப்புக் கோளங்களாக ஒளிர்ந்தது. இவை வீணே போகக்கூடாது என்று எண்ணிய வைசம்பாயனர் தன்னுடைய பணிவான மாணவன் ஒருவனை அழைத்து, அதை விழுங்கச் சொன்னார். அவர் உடனே ஓர் தைத்ரீய பறவையாக மாறி, அதை விழுங்கினான். இவர் பெயராலேயே தைத்ரீய உபநிஷத் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இது வைசம்பாயனர் பணிவடக்க முள்ள தம் மாணவனுக்கு தந்த ஏற்றமாகும்.

அண்டத்தின் தோற்றத்தை விளக்க முற்படும் ‘‘ஸத்வித்யை’’ தொடர்பானது, ஆரம்பணாதிகரணம் (ப்ரஹ்ம ஸூத்ரம் 2-1-15 தொடக்கமாக) என்பது. ஒற்றுமை மற்றும் வேறுபாடு ஆகிய இரண்டையும் ஸமன்வயப்படுத்தும் வாக்யங்கள், இந்த உபநிஷத்தில் ஏராளமாக உள்ளன. இவற்றை அத்வைத கொள்கை உடைய சங்கரரோ, த்வைத கொள்கை உடைய மத்வரோ அதிக அளவில் பயன்படுத்த வில்லை. ஆனால், விசிஷ்டாத்வைத கொள்கை உடைய ஸ்வாமி ராமாநுஜரோ, இந்த உபநிஷத்தில் காணப்படும் வாக்கியங்களை பெரும் அளவில், தம்முடைய ஸ்ரீபாஷ்யத்தில் பயன்படுத்தி யுள்ளார்.

இந்த உபநிஷத்திலிருந்து, இராமாநுசர் பல சொற்றொடர்களை எடுத்தாண்டிருந்த பொழுதும், முக்கியமாக இடம் பெற்றிருப்பவை ஆனந்தவல்லி மற்றும் ப்ருகுவல்லி சொற்றொடர்கள். இவற்றில் ‘‘ப்ரஹ்மமே மிக உயர்ந்த உண்மை; அதை அடைவதே மேலான இலக்கு என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளவற்றை, தம் ஸ்ரீபாஷ்யத்தில் இணைத்துள்ளார், இராமாநுசர். ப்ருகுவல்லியில், வருணன் தன் மகனுக்கு த்யானத்தின் முக்கியத் வத்தை எடுத்துச் சொல்வது சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளது.

ப்ரஹ்மமே முதலில் இருந்தது; அதுவே தன்னை அண்டமளாவிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டது. அது எல்லா உணர்வுள்ள, உணர்வற்றவற்றில் உட்புகுந்து, அவற்றின் சரீர ஆத்மா (உடலுருக்கொண்ட ஆத்மா) என்று பெயர் ஏற்படும்படி செய்தது. ப்ரஹ்மமே உணவு, வாழ்வு, மனம், அறிவு, ஆநந்தம், ஆகியவையாக இருப்பது. மற்றும் ப்ரஹ்மம் மனிதனின் இதயத்தில் உள்ள குகையில் வசிப்பது. ஆகியவை இராமாநுசரால் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

இந்த விளக்கங்களின் சாயலை, நாம், ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்த பாசுரங்களில் காண்கிறோம். இறைவனைக் குறித்த நினைவு சிறிது நேரம் தடைப்பட்டாலும், அது விரஹம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளார்கள். (எம்பெருமானுடன் கூடியிருக்கும் ஸம்ச்லேஷ தசை மற்றும் அவனை விட்டுப் பிரிந்த விச்லேஷ தசை). இந்த உபநிஷத்தைப் பொருத்தமட்டில், விளக்கம் தருவதில் மிகச் சிறந்த ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர், இராமானுசர்.

சாந்தி மந்திரம்-

ஶந்நோமித்ர: | ஶம்வருண: ஶந்நோ ப4வத்வர்யமா | ஶந்ந இந்த்3ரோ ப்3ருஹஸ்பதி: | ஶந்நோ விஷ்ணுருருக்ரம: | நமோ ப்3ரஹ்மணே நமஸ்தே வாயோ| த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்மாஸி | த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்ம வதி3ஷ்யாமி| ருதம் வதி3ஷ்யாமி | ஸத்யம் வதி3ஷ்யாமி | தன்மாமவது தத்3வக்தாரமவது | அவது மாம் | அவது வக்தாரம் || ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||

‘‘மித்திரன் எமக்கு நிறைவான விளைவுகளை உண்டு பண்ணட்டும். வருணன் எங்களுக்கு நிறைவான விளைவு களை உண்டு பண்ணட்டும். இந்திரனும் ப்ருஹஸ்பதியும் எங்களுக்கு நிறைவான விளைவுகளை உண்டு பண்ணி எமக்கு நன்மை, மகிழ்ச்சி போன்றவற்றை நல்கட்டும்’’

9. சாந்தோக்ய உபநிஷத்

1. வேதத்துடனான தொடர்பு:- கேனோபநிஷத் தைப் போலவே, இதுவும் சாம வேதத்துடன் தொடர்பு கொண்டது.

2. கட்டமைப்பு மற்றும் அளவு:- இதில் எட்டு அத்யாயங்கள் உள்ளன. (ப்ரபாடகங்கள்) அவை, 13, 24, 19, 17, 24, 16, 26, 15 மொத்தம் 152 (? 154) காண்டங்கள் உள்ளன,

3. தனித்தன்மை:- சாமவேதமானது, அதன் இசை வடிவான தன்மையாலும், ஆன்மீக வெளிப்பாட்டாலும், பெருமை பெற்றிருப்பது போல சாந்தோக்ய உபநிஷத்தும் அதே தன்மையையும், பெருமையையும் பெற்றுள்ளது. தெய்வீகமான இனிமையான பாடல்கள் , ஒருவரை மிக உயர்ந்த தெய்வீகமான அநுபவத்திற்கு உயர்த்திவிடும் என்பது யாஜ்ஞவல்கியரின் கருத்து.

4. சிறப்பம்சங்கள் மற்றும் உபநிஷத் தரும் செய்தி:- அ. வேதவ்யாஸர், வேதாந்த ஸூத்ரங்களை எழுதுகையில், அவருக்கு மிகவும் விருப்பமான மேற்கோள் நூலாக இருந்தது சாந்தோக்ய உபநிஷத் ஆகும். அவர், இந்த உபநிஷத் சொற்றொடர்களை ஏராளமாக பயன்படுத்தி அதற்கு தனிப்பெருமை சேர்க்கிறார். இந்த உபநிஷத்தில், புகழ் பெற்ற தஹர வித்யை போன்றவையும், புகழ்பெற்ற மஹா வாக்கிய மான, ‘தத்த்வமஸி’ என்பதும் அடங்கியுள்ளன.

ஆ. ‘எதை அறிந்தால் எல்லாம் அறியப்பட்டதாகிறது? ‘‘இதயத்தின் உள்ளுக்குள் இருக்கும் தனி இடத்தில் இருப்பது என்ன?’ என்ற கேள்விகளுக்கு இந்த உபநிஷத் பதிலளிக்கிறது.

இ. ப்ருஹதாரண்யக உபநிஷத்தைப் போலவே, இதிலும், ‘‘ஆநந்தம்’’ என்பதன் பண்பு மனநிறைவாக உறுதி படுத்தப்பட்டுள்ளது.

ஈ. நாம் ப்ரஹ்மத்தை அறிந்தால், எல்லாம் அறியப் பட்டதாகிறது. மண்ணை அறிந்தால், மண்ணாலான குடம் மட்பாண்டங்கள் போன்றவை அறியப்பட்டதாகின்றன. தங்கத்தை அறிந்தால், தங்க நகைகள் அறியப்பட்டவை யாகின்றன.

சாந்தோக்ய உபநிஷத் பெயர் விளக்கம்:-

  சாமவேதத்தின் தலவகார சாகையின் ஓர் பகுதியான சாந்தோக்ய ப்ராஹ்மணம், சாந்தோக்ய உபநிஷத் என்கிற பெயரிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சாந்தோக்ய ப்ராஹ்மணத்தில் உள்ள 10 அத்யாயங்களில், எட்டு அத்யாயங்கள் மட்டுமே உபநிஷத்தாக அமைக்கப் பட்டுள்ளன. ‘‘சந்தா’’ என்னும் பெயரை அடிப்படையாகக் கொண்டது, சாந்தோக்யம் என்னும் உபநிஷத். சந்தஸ் என்பது எதுகை மோனையுடன் இசையுடன் பாடப்படுவதைக் குறித்தாலும், அது, எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்றும் பொருள்படும். இந்த உபநிஷத்தை வடிவமைத்த முனிவர், இவ்வாறு மந்திரங்களை எதுகை மோனையில் அமைக்கையில், அது இந்த படைப்பை, பல்வேறு காரணிகளும், இயல்பும், வெளிக் கொணர்வதைக் கண்டார். அவற்றையெல்லாம் சித்தரிக்கும் வண்ணம், எதுகை மோனையுடனும் இசையுடனும் அமைக்கப்பட்டுள்ளதே உத்கீதம். உத்கீதமானது, சாந்தோக்யத்தின் ஒரு பகுதி.

  முதல் அத்யாயம்:- ஓம்கார-உத்கீத உபாஸனை. ‘‘ஓம்’’ என்பது ஒற்றை எழுத்தாக ஓதப்படுகையில், இது மிக உயர்ந்த ஒன்றின் அடையாளக்குறியீடு மற்றும் சிறப்பான அடையாளமாக அமைகிறது. இது ‘‘உத்கீதை’’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ‘ஓம்’ என்னும் ‘அசையை’ உத்கீதமாக வணங்குபவன் விருப்பங்கள் ஈடேறப்பெற்றி ருப்பவனாக, வளத்தைப் பெருக்குபவனாகத் திகழ்கிறான். ‘‘ஓம்’’ என்ற ஒலியையே வழிபடுபவன், மிக உயர்ந்த ஒன்றையே வணங்குகிறான்.

ஒரு காலத்தில், தேவர்களுக்குள்ளும், அசுரர் களுக்குள்ளும் போர் மூண்டபோது, தேவர்கள், ‘உத்கீதை’யை த்யானித்தார்கள். ஆனால், அவர்களால் அசுரர்களை வெல்ல இயலவில்லை. ஆனால், அவர்கள் முக்ய ப்ராணனை தம் வாக்கின் ‘‘மேல்படிந்ததாக’-ஆதிக்கம் செலுத்துவதாக வழிபட்டதால், அசுரர்களை வெல்லும் வலிமையைப் பெற்றார்கள்.

சௌனகரின் புதல்வனான அதிதன்வன், ‘‘உத் கீதையை அறிந்தவர்கள் வாழ்க்கை, மற்றவர்கள் வாழ்க்கையை விட மேம்பட்டதாக இருக்கும். உத்கீதையை அறிந்தவன், இவ்வுலகிலும், மற்ற உலகிலும் பெரும் சிறப்பை அடை வான்’’ என்று கூறியுள்ளார்.

இரண்டு, மூன்று மற்றும் நான்காம் அத்யாயங்கள் உபாஸனைகளை விளக்குகின்றன.

காயத்ரி மந்திரம் மிகவும் முக்கியமானது. இதன் சாரம் வேதத்தில் காணப்படுகிறது. படைப்பானது, காயத்ரியின் பெருமையைப் பேசுகிறது. இதன் ஆத்மாவான புருஷன், மிக உயர்ந்தவன். காயத்ரியால் சுட்டிக்காட்டப்படும் ப்ரஹ்மம், இதயத்திலுள்ள ஓர் இடத்தில் வசிப்பவன். இவ்வாறு அறிந்தவன் அழிவற்ற செல்வத்தை அடைகிறான்.

இதயத்திலுள்ள இந்த இடம், ஐந்து வாசல்களைக் கொண்டது. இதை அறிந்தவர் மேலுலகங்களை அடைகிறார். - இந்த வாசல்களைக் காப்பவர்கள்:-

அ. கிழக்கு வாசல்-ப்ராணன் - தேவதை-சூரியன்;
ஆ. தெற்கு வாசல்- வ்யானன் - தேவதை- சந்திரன்;
இ. மேற்கு வாசல்-அபானன் - தேவதை- அக்நி;
ஈ. வடக்கு வாசல்-சமானன் - மனம்;
உ. மேலுள்ள வாசல்-உதானன் - காற்று (ஆகாசம்)

‘சாண்டில்யர் என்னும் அறிஞர்’, ‘‘என்னுள் இருக்கும் ஆத்மா ப்ரஹ்மம்; நான் இந்த உலக வாழ்க்கை முடிந்தவுடன், அதை அடைவேன்; இதை நம்புபவர்கள் தாங்கள் சிந்தித்த பலனைப் பெறுவார்கள்’’ என்று கூறியுள்ளார்.

  இதில், புகழ்பெற்ற ஸத்யகாமாவின் கதை உள்ளது. தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதை குருவிடம் மறைக்காமல் கூறியதால், குருவின் நம்பிக்கையைப் பெற்றான். இவன், தன் குரு: வெளியூருக்குச் சென்றிருக்கை யில், அவருடைய பசுமாட்டு மந்தையை பராமரித்து, அதன் எண்ணிக்கையை 400 லிருந்து, 1000 ஆக உயர்த்தினான். அந்த ஆநிரையில் இருந்த ஓர் காளைமாடு, ஸத்யகாமனுக்கு ப்ரஹ்மத்தைக் குறித்த உபதேசத்தை அளித்தது.

ஸத்யகாமாவின் கதை நமக்கு உணர்த்தும் உண்மைகள்:-

1. ப்ராஹ்மணன் என்னும் தகுதி, பிறப்பால் வருவதல்ல; நன்னடத்தையால் வருவது.

2. மனிதரல்லாத ஏதோ ஓர் இருப்பினம் கூட, ஆசிரியராக இருக்கலாம்!

ஐந்தாம் அத்யாயம் - இந்த அத்யாயத்தில் மரணத்திற்குப் பிறகு ஆத்மா செல்லும் பல்வேறு பாதைகள் விவரிக்கப்படுகின்றன. இதைத்தவிர, இந்த அத்யாயத்தில் வைஶ்வாநர வித்யையும் உள்ளது.

அ. ஹிரண்யகர்பன் வரையிலான தேவர்களை வழிபடுபவர்கள், ‘ஸுஷும்நா’ நாடி வழியாக, உச்சந்தலை யிலிருந்து வெளியேறி, தேவயாந பாதைவழியாக, ப்ரஹ்ம லோகத்தை அடைகிறார்கள்.

ஆ. முன்னோர்களை வழிபடுபவர்கள், தானம் செய்பவர்கள் போன்றவர்கள் முதலில் பித்ருலோகம் சென்று, பிறகு சந்த்ரலோகத்தை அடைகிறார்கள். இவர்களுக்கு மறு பிறப்பு உண்டு.

இ. தீய கர்மங்களை ஆற்றுபவர்கள் தாழ்ந்த பிறவிகளை அடைகிறார்கள்.

ஈ. ப்ரஹ்மத்தை வழிபடுபவர்கள், உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆத்மா, ப்ரஹ்மத்தை அடைகிறது. இவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

வைஶ்வாநர வித்யையைக் குறித்து அறிய விரும்பிய ஐந்து மாணவர்கள், உத்தாலக ஆருணி என்பவரிடம் சென்றனர். உத்தாலகரும் இந்த வைஶ்வாநர வித்யையில் அதிகம் தேர்ச்சி பெற்றிராததால், அவரும் இவர்களுடன் இணைந்து, கேகய நாட்டைச் சேர்ந்த அஶ்வபதி என்பவரிடம் சென்றார்கள். அவர் வைஶ்வாநர வித்யையை இவர்களுக்குப் போதித்தார்.

‘வைஶ்வாநரனே அண்டத்திற்குக் காரணமாக உள்ளவன். அவன் மேலுலகத்தைத் தன் தலையாகவும், ஆகாயத்தைத் கொப்பூழாகவும், சந்த்ர சூரியர்களைத் தன் விழிகளாகவும், ஆழங்காண இயலாத தன்மை உடையவ னாகவும், த்யானிக்கப்பட வேண்டும்’’ என்று கற்பித்தார்.

ஆறாம் அத்யாயம்:- ஶ்வேதகேது மற்றும் ‘‘தத்த்வமஸி’’: இந்த அத்யாயமே இந்த உபநிஷத்தின் தேர்ந்த சாரம் என்று கூறலாம். ஏனெனில், இதில்தான் அண்டத்தின் படைப்பு மற்றும் அழிவு குறித்த பாடங்கள் உள்ளன. இந்த பாடம், ‘‘ஸத்வித்யை’’ எனப்படுகிறது.

இந்த உபநிஷத்தின் முக்ய கதாபாத்ரமாக இருப்பவன் ஶ்வேதகேது என்பவன். உத்தாலகரின் மகனான இவன், பன்னிரண்டு வருடகாலம் குருகுல வாசம் செய்து விட்டு, வீடு திரும்பினான். ‘‘எனக்கு எல்லாம் தெரியும்’’ என்னும் கர்வம், அவன் முகத்திலும், நடத்தையிலும் வெளிப்படுவதைக் கண்ட உத்தாலகர், தம் மகனை நல்வழிப்படுத்த எண்ணம் கொண்டார்.

ஶ்வேதகேதுவை அழைத்து, ‘‘மகனே! எதைக் கேட்பதால் எல்லாம் கேட்கப்பட்டதாகிறது? எதை அறிந்தால் எல்லாம் அறியப்பட்டதாகிறது’’ என்பதை உன் ஆசிரியரிடமிருந்து கற்றறிந்தாயா?’’ என்று வினவினார். இதற்கு பதிலளிக்க இயலாத ஶ்வேதகேது, தன் தந்தையைப் பணிந்து, மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் இயல்பை போதிக்கும்படி கேட்டுக்கொண்டான்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல், சிறப்பு வாய்ந்தது. இதில், மிகத் தெளிவான உதாரணங்களும், புகழ்வாய்ந்த, ‘‘தத்த்வமஸி’’ என்னும் மஹா வாக்கியமும் இடம் பெற்றுள்ளன.

ஶ்வேதகேதுவிற்கு அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள்:-

1. ஆரம்பத்தில், ‘‘ஸத்’’ என்பது மட்டுமே இருந்தது; தனியாக இருந்தது; இரண்டாவதாக ஏதும் இருக்கவில்லை. அந்த ‘ஸத்தானது’ ‘‘நான் பலவாகக் கடவேன்! என ஸங்கல்பித்தது. அது ஒளியையும், நீரையும் படைத்தது. அதிலிருந்து அண்டத்தின் தோற்றம் ஏற்பட்டது.

2. ஆழ்ந்த உறக்கமாகிய ஸுஷுப்தி என்னும் நிலையில், ஆத்மா ப்ரஹ்மத்தை அடைகிறான்.

பல கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் அளிக்கப் பட்ட பிறகு, உத்தாலகர், இவ்வாறு நிறைவு செய்தார்:- ‘‘இந்த முழு அண்டமும் மிக உயர்ந்த தேவனை உயிராகக் கொண்டது. அவனே அண்டமளாவிய ஆத்மா!’’

‘தத்த்வமஸி’- அது நீயாக இருக்கிறாய்’’

இந்த மஹா வாக்கியத்திற்கு, மூன்று ஆசார்யர்கள் அளித்த விளக்கம்:-

சங்கரர் - அது நீயாக உள்ளாய்-நீ அவனே.
இராமானுசர் - நீ (ஆத்மா) இறைவனின் உடல்;
மத்வர்-நீ அவனுடைய தாஸன்.

உத்தாலகரால் எடுத்துக் காட்டப்பெற்ற உவமைகள்-

ஶ்வேதகேதுவிற்கு, தத்துவங்கள் நன்றாக விளங்க வேண்டும் என்பதற்காக, உத்தாலகர், பல உவமைகளை முன் வைத்தார்:-

1. தேனீக்களும் தேனும்:- தேனீக்கள் பல மலர் களின் தேனைச் சேகரித்து வந்து தேன் கூட்டில் நிரப்புகின்றன. அந்த கூட்டிலுள்ள தேனுக்கு, தான் எந்த மலரிலிருந்து வந்தோம் என்பது தெரியாது. நமக்கு அந்த தேன் எல்லாமே, அடிப்படைக்காரணமான மலரிலிருந்து வந்தது என்பது தெரியும். தேனின் எல்லா சிறு துணுக்குகளில் உள்ள ஜீவனே அண்டத்தின் ஜீவன். நீ ஶ்வேதகேது! அதன் உடலாக இருக்கிறாய் - தத்த்வமஸி!!

ஆறுகள்:- கடலிலிருந்து மேலெழும் நீராவி, மழை மேகமாகி, மழையாகி, ஆறுகளாகி கடலில் கலக்கின்றன. ஆனால், அவைகளுக்கு தாம் யார், எங்கிருந்து வந்தோம் என்ற நினைவு இருப்பதில்லை. இதே போல், இந்த அண்டத் திலுள்ள இருப்பினங்கள், தாம் எங்கிருந்து தோன்றினோம் என்பதை அறிவதில்லை.

மரம்:- மரம் வெட்டுண்டு காய்ந்து அழிகிறது. ஆனால் அதில் உள்ள உயிர் (ஆத்மா) அழிவதில்லை. அழிவற்ற அந்தத் துகளே ஆத்மா. அதுவே, ‘‘ஸத்’’ எனப்படும் அண்டமளாவிய ஆத்மாவைச் சென்றடைவது.

ந்யக்ரோதா (ஆலமரம்) பழம்:- இப்பழத்தின் கொட்டையைத் தன் மகனிடம் காட்டி, ‘இதில் என்ன காண்கிறாய்?’’ என்று கேட்க, ‘‘ஏதுமில்லை’’ என்றான் ஶ்வேதகேது. ‘இதில்தான் பெரிய ந்யக்ரோதா மரம் அடங்கியுள்ளது; இவை எல்லா வற்றிற்கும் ஆத்மாவாக உள்ளது அண்டமளாவிய ஆத்மா.

உப்பு:- உப்பு, நீரில் கரைந்தபிறகு, அது முழுவதும் உப்பையே சுவையாகக் கொண்டுள்ளது. உப்பு தனியாகக் காணப்படுவதில்லை. இவ்வாறு தனியாகக் காணப்படாத போதிலும், எல்லா இடங்களிலும் ஊடுருவியிருப்பதே அண்டமளாவிய ஆத்மா.

கண் கட்டப்பட்ட மனிதன்:- இரு கண்களும் துணியால் கட்டி மறைக்கப்பட்ட ஒருவன், வழியறியாமல் கூச்சலிடுகிறார். நல்லவர் ஒருவர் வந்து, அந்த கண்கட்டை அவிழ்த்து விடுகிறார். இப்பொழுது தெளிவான பார்வைபெற்ற மனிதன், தான் போக வேண்டிய ஊருக்கு வழிகேட்டறிந்து போய்ச் சேர்ந்துவிடுகிறான். இதேபோல், உண்மையறியாமல் திசை தடுமாறும் மனிதனுக்கு, ஓர் சிறந்த குரு அல்லது ஆசார்யர், அஜ்ஞானம் என்னும் இருளைப் போக்கி ஜ்ஞான மருளும் வழிகாட்டியாக விளங்குகிறார்.

இந்த உபநிஷத்தில், இந்தப் பகுதியில் ‘‘தத்த்வமஸி’’ என்னும் மஹாவாக்யம் ஒன்பது இடங்களில் காணப் பெறுகிறது.

ஏழாம் அத்யாயம்:- இதில் ‘தஹரவித்யை’ விளக்கப் படுகிறது. ‘பூம வித்யை’ முக்யமாக ஆராயப்படுகிறது.

சனத்குமாரர், நாரதருக்கு முடிவான பேருண்மையான ப்ரஹ்மத்தைக் குறித்து கற்பிக்கின்றார். முக்ய ப்ராணன், விருப்பங்கள், நினைவு, ஆகாசம், வெப்பம், நீர், பிறப்பு இறப்பு, சிந்தனை, நோய், வலிமை, அறிவு, உணர்ச்சி, உறுதி, மனம், பெயர்கள், மந்திரங்கள், வேள்விகள் ஆகிய அனைத்தும் ஆத்மாவிலிருந்து கிளம்புவதைக் கற்பித்தார். இதை அறிந்த மனிதன், மரணம், நோய், வலி மற்றும் துன்பத்தால் தாக்கப் படுவதில்லை என்றும் போதித்தார். ‘‘பூமா’’ என்பது சுகம்; அதுவே அறியப்படவேண்டும். எங்கே ஒருவர் வேறு எதையும் காண்பதில்லையோ, வேறு எதையும் கேட்ப தில்லையோ, வேறு எதையும் அறிவதில்லையோ, அதுவே, ‘‘பூமா’’ என்று அறிவுறுத்தினார்.

எட்டாம் அத்யாயம்:- ‘தஹர வித்யை’ பெரிய அளவில் விளக்கப்படுகிறது. இந்த மனித உடலானது, ப்ரஹ்மம் வசிக்கும் இடம்; இது, ப்ரஹ்மபுரம் எனப்படுகிறது. இதன் உள்ளே தாமரை மலர் போன்ற ஓர் அறை உள்ளது. இதன் உள்ளே ஓர் சின்னஞ்சிறிய வெற்றிடம் உள்ளது. இதன் பெயர் ‘‘அந்தராகாசம்’’. இதுவே நிலையான மெய்மையான ப்ரஹ்மத்தின் இருப்பிடம். அந்த சின்னஞ்சிறு அந்தராகாசம், அதன் உள்ளே இருப்பதும் அறியப்படவேண்டும். இதனுள் வசிக்கும் ப்ரஹ்மமானது, தீமையற்றது; மூப்பற்றது; பசி மற்றும் தாகமற்றது; அதுவே உண்மை எனப்படுவது. இந்த அந்தராகாசமானது கீழுலகும், மேலுலகும் ஒன்று சேர்ந்த அளவிற்கு விரிந்து பரந்தது. த்யானிக்கப்படுவதற்காக அது சிறிய அளவு உள்ளதாக கொள்ளப்படுகிறது.

இந்த அத்யாயத்தில், தேவர்கள் தலைவனான இந்திரன் மற்றும் அசுரர்கள் தலைவனான விரோசனன், ஆகியோருக்கு ப்ரஜாபதி அளித்த அறிவுரையின் விளக்கம் உள்ளது. இதில், ‘‘நான் எனப்படும் ஆத்மா எது?’’ என்பது படிப்படியாக விளக்கப்படுகிறது. இதில் விளக்கியபடி, ப்ரஹ்மத்தை வழிபடுபவர்கள், அதை அடைந்தபிறகு மீண்டும் திரும்பி வருவதில்லை என்று உபதேசிக்கப் படுகிறது.

சாந்தி மந்திரம்:-

ஆப்யாயந்து மமாங்கா3நி வாக் ப்ராணஶ்சக்ஷு: ஶ்ரோத்ரமதோ2 ப3லமிந்த்3ரியாணி ச ஸர்வாணி ஸர்வம் ப்3ரஹ்மௌபநிஷத3ம் மாஹம் ப்3ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்3ரஹ்மநிராகரோத3நிராகரணமஸ்வநிராகாரணம் மே(அ)ஸ்து ததா3த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த4ர்மாஸ்து மயி ஸந்து தே மயி ஸந்து || ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||

என்னுடைய கைகால்கள் வலிமை பெற்று விளங்கட்டும்; என்னுடைய பேச்சு, ப்ராணன், கண்கள், செவிகள், உள் உரம் மற்றும் எல்லா புலனுறுப்புகள், தம்முடைய வலிமையில் ஏற்றம் பெறட்டும். எல்லாமே உபநிஷத்துலுள்ள ப்ரஹ்மமே! நான் ப்ரஹ்மத்தை மறுக்காமல் இருக்கக்கடவேன்! ப்ரஹ்மம் என்னை மறுக்காமல் இருக்கட்டும். *

10. ப்ருஹதாரண்யகோபநிஷத்

1. வேதத்துடனான தொடர்பு:- சதபதப்ராஹ்மணம்; ஶுக்ல யஜுர் வேதம். உபநிஷத் வார்த்தைகளை விளக்கு வதற்காக, காண்வ சாகை அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

2. கட்டமைப்பு மற்றும் அளவு:- இதில் 8 அத்யா யங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பல ப்ராஹ்மணங்களும், துணை ப்ராஹ்மணங்களும் உள்ளன. இதுவே மிகப்’பெரிய’ உபநிஷத். இது பழங்காலத்து உரைநடை பாணியில் அமைந்துள்ளது

3. தனித்தன்மை:- அ. எல்லா உபநிஷத்துக்களின் சாரமான பொருள், இதில் காணப்படுகிறது. ஆ. ஈசாவாஸ்யம், கேனோபநிஷத் மற்றும் கடோபநிஷத்தில் உள்ள பகுதிகள், இந்த உபநிஷத்திலுள்ள ‘‘ஜ்யோதிர் ப்ராஹ்மணம்’’ என்னும் பகுதியில் காணப்படுகின்றன.

4. சிறப்பம்சம்:- அ) மிகவும் புகழ்பெற்ற உபநிஷத் உரையாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஆ) இந்த உரையாடல்களில் பெண்கள் பங்கேற்றுள்ளது ஓர் சிறப்பு அம்சம். இ) புகழ்பெற்ற மஹா வாக்யங்களான, ‘‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’’ மற்றும், ‘‘நேதி நேதி’’ என்பவை இதில் காணப்படுகின்றன. ஈ) ப்ராணனின் உயர்வு மற்றும் மிக உயர்ந்ததன் அறிவு விளக்கப்பட்டுள்ளது.

அத்யாயங்கள்

பத்து உபநிஷத்துக்களில் பத்தாவது இதுவே. ‘‘ப்ருஹத்’’ என்றால், ‘பெரியது’ என்று பொருள்படும். ‘‘ஆரண்யம்’’ என்றால், ‘‘காடு’’ என்று பொருள். வேதங்களின் முடிவான பகுதிகள், ‘ஆரண்யகங்கள்’ எனப்படுகின்றன. இவை குருமார்களால், தங்கள் சீடர்களுக்கு காடுகளில் ஏகாந்தமாக கற்பிக்கப்படுகின்றன. உபநிஷத்துக்கள் பொதுவாக ஆரண்யகங்களின் பகுதிகளாகவே உள்ளன. இந்த அடிப்படையில், எல்லா உபநிஷத்துக்களுமே, ‘‘ஆரண்ய கங்கள்’ என்று அழைக்கப்படலாம். எனவே, இந்த ‘பெரிய’ உபநிஷத் ‘‘ப்ருஹதாரண்யகோபநிஷத்’’ என்னும் பெயரைப் பெறுகிறது.

இந்த உபநிஷத், ஶுக்ல யஜுர் வேதத்தின் ஒரு பகுதியான, ‘சதபத’ ப்ராஹ்மணத்தின் நிறைவு பகுதிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உபநிஷத் காண்வ சாகை மற்றும் மாத்யந்தின சாகை ஆகிய இரண்டு சாகைகளைக் கொண்டிருந்த போதிலும், எல்லா விளக்கங்களும் காண்வ சாகை அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

இதில் உள்ள எட்டு அத்யாயங்களில், முதல் இரண்டு, நேராக ப்ரஹ்மத்தைக் குறித்துப் பேசாமல், ‘ப்ரவர்க்யா’ என்னும் சோம யாகத்தைக் குறித்துப் பேசுவதால், எல்லா பாஷ்ய காரர்களும், இந்த முதல் இரண்டு அத்யாயங்களை விட்டு விட்டு, மேலுள்ள அத்யாயங்களுக்கே பாஷ்யம் அருளியுள்ளார்கள்.

மூன்றாம் அத்யாயத்தில், அஶ்வமேத யாகம் பேசப் படுகிறது. அதன்பின், ப்ரஹ்மம், அண்டத்தின் ஆத்மாவாக, அதுவே காரண காரியங்களாக இருப்பதும், அது ஆத்மா வாகவும், உணர்வுள்ள மற்றும் உணர்வற்றவை அதன் ப்ராகாரங்களாகவும் இருப்பது, இதில் விளக்கப்பட்டுள்ளது.

ப்ரஹ்மமானது, எல்லா ஜீவர்களின் ஆத்மாவாக இருப்பதால், ‘‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’’ என த்யானிக்கப் படுகையில், ‘‘அஹம்’’ என்பது ஜீவனின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதைப் புரிந்துகொண்டு த்யானிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உணர்ந்து த்யானிப்பது, முக்தியை அடைவிக்கும் எனப்படுகிறது.

மேலும், இந்த சதபத ப்ராமணம், வாக்கு, மனம் மற்றும் ப்ராணனின் முக்யத்வத்தை எடுத்துரைக்கிறது.

நான்காவது அத்யாயத்தில், ஆறு ப்ராஹ்மணங்கள் உள்ளன. இதில் முதல் ப்ராஹ்மணம் ‘‘பாலாகி ப்ராஹ்மணம்’’ எனப்படுகிறது. பாலாகி என்பவர், தன்னுடைய வித்யையில் மிகவும் கர்வம் கொண்டு, தன்னை ஓர் ப்ரஹ்ம ஞானியாக பறை சாற்றிக்கொள்ள, ‘‘அஜாத சத்ரு’’ என்னும் அரசனை, அடைந்தார். அஜாத சத்ரு ஓர் சிறந்த ஞானி. அவன் பாலாகியிடம், உள்ளுறை ஆத்மா இருக்கும் இடத்தைக் குறித்துப் பேசுமாறு கூறி ஆயிரம் பசுமாடுகளைப் பரிசாக அளித்தான். பாலாகி, ‘உள்ளுறை ஆத்மா இருக்கும் இடமாக, சூரியன், சந்திரன், மின்னல்’ ஆகியவற்றைக் கூற, அஜாதசத்ரு அதை சரியில்லையென்று ஒதுக்கிவிட்டான். பின்பு பாலாகி யின் மனதைப் புண்படுத்தாதவாறு, இதமாக ஜீவனின் இருப் பிடத்தை விளக்கினான். ‘‘ஜீவன் செல்லுவதும் உறங்குவதும் ப்ரஹ்மத்திடம்’. ‘ஸத்யா’ என்று குறிப்பிடப் படுபவர்கள் ஜீவர்கள். அவர்களைக் காட்டிலும் மிக உயர்ந்த வனான, ‘‘ஸத்யஸ்ய ஸத்யம்’’ என்று வழங்கப்படும் பரமாத்மாவிடம் செல்வதை விளக்கிக் கூறினான் அஜாதசத்ரு.

இந்த அத்யாயத்தில், நான்காவது ப்ராஹ்மணம் ‘மைத்ரேயி ப்ராஹ்மணம்’ எனப்படுகிறது. இது, யாஜ்ஞ வல்கியர் தன் மனைவியும் சிஷ்யையுமான மைத்ரேயிக்கு வழங்கும் அறிவுரையாக உள்ளது. உலகியல் இருப்பின் மீது பற்றற்ற தன்மை ஏற்படுகையில், ப்ரஹ்மத்தை த்யானிப்பது எளிது; இந்த மனப்பான்மை பெண்களுக்கு ஏற்படுமாகில், அவர்களும் ப்ரஹ்ம வித்யையைக் கற்பதற்கு தகுதி பெற்றவர்கள் என்று எடுத்துரைத்தார். பின்பு, அவர் மைத்ரேயிக்கு, ஆத்மா மற்றும் அண்டத்தின் மிக உயர்ந்த இறைவனைக் குறித்த அறிவை போதித்தார். ‘‘இதுவே ஆத்ம ஜ்ஞானம்; இதைப் பெறுவதே முக்திக்கு வழிவகுக்கும்’ என்று எடுத்துரைத்தார்.

ஐந்து மற்றும் ஆறாவது அத்யாயங்களில், ‘கார்கி ப்ராஹ்மணம்’ மற்றும் ‘அந்தர்யாமி ப்ராஹ்மணம்’ ஆகியவை காணப்படுகின்றன. ஒரு முறை யாஜ்ஞவல்கியர், சக்ரவர்த்தி ஜனகரின் சபைக்குச் சென்றிருந்தார், அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த வேள்வியில் பங்குபெற வந்த ஞானிகளுக்குள் ‘‘யார் ப்ரஹ்ம ஞானி’’ என்ற கேள்வி எழ, அவர்களுக்குள் விவாதம் மூண்டது. யாஜ்ஞவல்கியர், சிறந்த ப்ரஹ்ம ஞானியின் முன்பு தாம் தலைவணங்கக் காத்திருப்பதாகச் சொன்னார். இதைச் செவியுற்ற அறிஞர்கள், ஒவ்வொருவராக கேள்விகளைக் கேட்கலாயினர். அவர்கள், அஸ்வலா, அர்த்தபாகா, புஜ்யு, உஷஸ்தன் மற்றும் ககோலா ஆகியோர். அனைவரின் வினாக்களுக்கும் யாஜ்ஞவல்கியர் அவர்கள் மனநிறைவு கொள்ளும் வண்ணம் பதிலளித்தார்.

பின்பு, சிறந்த பெண்ணான கார்கி, கேள்வி கேட்கலானாள். இவள் பெயராலேயே ‘கார்கி ப்ராஹ்மணம்’ என வழங்கப்படுகிறது. அவள் கேட்ட எல்லாக் கேள்வி களுக்கும் சரியாக பதிலளித்த பின்பும், அவள் கேள்விக் கணைகளைத் தொடுத்தவாறு இருப்பதைக் கண்டு, யாஜ்ஞவல்கியர், இனி மேற்கொண்டு கேள்விகளைக் கேட்டால், அவருடைய சிரம் கீழே விழுந்து விடுமென்று எச்சரிக்க, கார்கியும் மௌனமாக அமர்ந்து விட்டாள்.

அடுத்து வரும் பகுதி ‘அந்தர்யாமி ப்ராஹ்மணம்’ எனப்படுகிறது. இது, இந்த உபநிஷத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இங்கே, கேள்வி கேட்பவர், உத்தாலகர். இவர், யாஜ்ஞவல்கியரிடம், ‘‘அண்டத்திலுள்ள எல்லாவற்றையும் உள்ளிருந்து கட்டுப்படுத்தும் அந்தர்யாமியை அறிவீரா?’’ என்று கேட்டார். யாஜ்ஞவல்கியர், ‘‘நீர், நிலம், நெருப்பு, ஸ்வர்க்கம், சூரியன், சந்த்ரன், ஒளி, இருள், ப்ராணங்கள், புலனுறுப்புகள், மனம் ஆகிய அனைத்தையும், உணர்வுள்ள மற்றும் உணர்வற்ற அனைத்தையும், உள்ளிருந்து கட்டுப் படுத்துபவன் அந்தர்யாமி’’ என்பதை தெளிவாக்கினார்.

கார்கி மீண்டும் எழுந்து, இரண்டு கேள்விகளை எழுப்பினாள். ‘‘முழு அண்டத்திற்கு ஆதாரமாக இருப்பது எது? அதற்கும் ஆதாரமாக இருப்பது எது?’’ என்று கேட்டாள். யாஜ்ஞவல்கியர், அவை, முறையே ‘‘ஆரம்பத்திலிருந்து மூலப்ரக்ருதியான ஆகாசம்’’ மற்றும் ‘‘மிக உயர்ந்த ப்ரஹ்மமான அக்ஷரம்’’ என்று பதிலளித்தார். இவர் பதிலால் மிகவும் மனம் நிறைவடைந்த கார்கி, அவையோர் முன்பு, இவரே மிக சிறந்த ‘ப்ரஹ்மஜ்ஞானி’ என்று அறிவித்தாள்.

ஆனால், விதக்தன் என்பவன், மேலும் கேள்விகளைக் கேட்கத் துணிந்தான். அவன் வினாக்களுக்கு சலிப்படை யாமல் விடையளித்த யாஜ்ஞவல்கியர், அவன் வரம்பு மீறி வினாக்கள் எழுப்புவதைக் கண்டு, அவன் வினாக்களாலேயே அவனை மடக்கி, அவனை பதிலளிக்க இயலாமல் செய்தார். தோற்றவனான, விதக்தனின் தலை நிலத்தில் வீழ்ந்தது.

இந்த அத்யாயத்தில், யாஜ்ஞவல்கியர், ஜனகருக்கு, ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மா, பரமாத்மாவின் அணைப்பில் இருப்பதையும், மரணமடைகையில், பரமாத்மா அந்த உடலிலிருந்து ஜீவாத்மாவை உடனழைத்துச் சென்று, அதன் கர்மத்திற்கேற்ப வேறு உடலைத் தருவதையும் விளக்குகிறார்.

எட்டாவது அத்யாயத்தில், ஐந்து ப்ராஹ்மணங்கள் உள்ளன. இதில் சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும்’ ‘ப்ராண வித்யை’ மற்றும் ‘பஞ்சாக்நி வித்யை’ ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. பஞ்சாக்நி என்பது நெருப்பை குறிப்பதல்ல; ஓர் உடலிலிருந்து புறப்பட்ட ஜீவன் செல்லும் ஐந்து இடங்கள், ஐந்து வேள்வித் தீக்களாக உருவகப்படுத்தப் பட்டுள்ளன. இந்த ஐந்து இடங்களானவை:- ஸ்வர்க்கம், மேகம், ப்ருத்வி, புருஷன் மற்றும் பெண்ணின் யோநி வழியாக கர்ப்பத்தை அடைவது.

இந்த அத்யாயத்தில், அர்ச்சிராதி மார்க்கம், பித்ரு யாநம், கர்பகதி ஆகியவை வர்ணிக்கப்பட்டுள்ளன.

இந்த அத்யாயத்தில் கடைசி ப்ராஹ்மணம் ‘வம்ச ப்ராஹ்மணம்’ எனப்படுகிறது. இது, ஒருவர், தன்னுடைய ஆசார்யரிலிருந்து தொடங்கி முதல் ஆசார்யரான பரமாத்மா வரையிலும் நினைத்து த்யானம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறது.

இந்த உபநிஷத்தின் தேர்ந்த கருத்தாக அறியப் படுவதாவது:- ப்ரஹ்மமே அண்டத்திற்குக் காரணமாகவும், காரியமான அண்டமாகவும் உள்ளது; உணர்வுள்ள மற்றும் உணர்வற்றவை; அதன் உடலாக அல்லது ப்ராகாரங்களாக இருப்பவை. படைப்பு என்பது உணர்வற்ற மற்றும் உணர்வுள்ளவை, பெயர் மற்றும் வடிவங்கள் உடையனவாக வகைப்படுத்தப்படுவதேயாகும். இது வடமொழியில், ‘‘நாம ரூப வ்யாகரணம்’’ எனப்படுகிறது. ப்ரஹ்மமானது இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட எல்லாவற்றின் உட்புகுந்து வசித்து, அவற்றை உள்ளிருந்து நியமிக்கிறது. இந்த ப்ரஹ்மத்தை அன்புடன் வழிபடுவதே, உலகியல் விருப்பங்களிலிருந்து விடுபட்டு முக்திக்கு வழி ஏற்படுத்தித் தரும்.

சாந்தி மந்த்ரம்:-

‘‘ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத் பூர்ண மித3ச்யதே | பூர்ணஸ்ய பூர்ணமாதா3ய பூர்ணமேவாவ ஶிஷ்யதே ||’’

	 ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

‘எல்லாமே முழுமையானது; முழுமையானதிலிருந்து முழுமையானது வெளிப்படுகிறது; முழுமையானதிலிருந்து முழுமையானது எடுக்கப்பட்ட பிறகும், முழுமையானது இருந்தபடியே இருக்கிறது’.

11. கௌஷீதகி உபநிஷத்

  கௌஷீதகி உபநிஷத் மிகவும் பழமையான உபநிஷத்துக்களில் ஒன்றாகும். ஆருணி என்பவரின் புதல்வனான ஶ்வேதகேதுவிடம், சித்ராகார்க்யாயணி என்பவர், மிக உயர்ந்த ஒன்றைக்குறித்து கேட்ட கேள்விகளுக்கு, ஶ்வேதகேது அளித்த பதில்களால் ஆக்கப்பெற்றிருப்பது இந்த உபநிஷத். இதில், நான்கு அத்யாயங்கள் உள்ளன.

இந்த உபநிஷத்தானது, முக்தி பெறுவதில் ஜ்ஞானத்தின் பங்கை வலியுறுத்துகிறது. ப்ரஹ்மத்தை அறியாதவர்கள், தங்கள் புண்ய பாவ கர்மங்களுக்கு ஏற்ப, மரணத்திற்குப் பிறகு, சந்திரலோகத்தை அடைந்து, மீண்டும் திரும்பி, இந்த பூலோகத்தில் வந்து பிறப்பதை விளக்குகிறது. ப்ரஹ்மத்தைக் குறித்த அறிவு ஏற்பட்ட ஒருவர், நற்கர்மங்கள் மற்றும் தீய கர்மங்களின் தளையிலிருந்து விடுபட்டு, முக்திடையவதை இந்த உபநிஷத் விளக்குகிறது.

எல்லா அறிவும் நிரம்பிய, வயது வரம்பற்ற, அழிவற்ற, ஆனந்தமயமான, ப்ராஜ்ஞாத்மாவைக் குறித்துப் பேசுகிறது. ப்ரஹ்மத்தை த்யானிப்பதால் இந்த மிக உயர்ந்த ப்ராஜ்ஞனை அடைய இயலும் என்கிறது. முக்ய ப்ராணனின் பெருமையை விளக்குகிறது.

சூரியன், சந்த்ரன் மற்றும் இதர தேவதைகளின் வழிபாடும், மகன் தந்தைக்கு ஆற்றும் சடங்குகளும், இந்த உபநிஷத்தில் இடம் பெறுகின்றன.

12. மஹோபநிஷத்

  படைப்பைக் குறித்துப் பேசுகிறது இந்த உபநிஷத். ஆரம்பத்தில் நாராயணன் ஒருவனே இருந்தான்; தனியாக இருந்ததால், அவன் மகிழ்ச்சியடையவில்லை. எனவே, அவன் தன் ஸங்கல்பத்தால் அவ்யக்தம் என்பது தோன்றியது. அதிலிருந்து ப்ரஹ்மன், போன்ற 14 புருஷர்கள் தோன்றி னார்கள். மூலப்ரக்ருதி என்னும் ஓர் பெண் தோன்றினாள். ஐந்து புலனுறுப்புகளும், ஐந்து செயல் உறுப்புகளும் தோன்றின. அஹங்காரம், மனம், காமம், கர்மம் ஆகியவை தோன்றின. ஐந்து தன்மாத்திரைகளும் பஞ்ச பூதங்களும் தோன்றின.

மிக உயர்ந்த புருஷனின் (நாராயணனின்) நெற்றி வியர்வையிலிருந்து நீர்நிலைகள் தோன்றின. இதிலிருந்து ஓர் தங்கமயமான அண்டம் தோன்றியது, அதிலிருந்து நான்முக ப்ரஹ்மன் தோன்றினான். நாராயணன், நான்கு வடிவங் களாகத் தன்னை விரிவுபடுத்திக் கொண்டு, நான்கு திசைகளை நோக்கி இடம் கொண்டான். இவ்வாறு இந்த அண்டமே அவனுடைய வெளிப்பாடு ஆயிற்று!

இந்த உபநிஷத்தில், வ்யாஸரின் மகனான, சுகர் தன்னுடைய தந்தையிடமிருந்து, தன் கேள்விகளுக்கு மனநிறைவு கொள்ளும்படியான பதில்கள் கிடைக்காததால், மிதிலைக்குச் சென்று, ஜனகமஹாராஜாவிடம் தகுந்த பதில்களைப் பெற்ற நிகழ்ச்சியும், நியதா என்னும் சிறுவன், மூன்று கோடி புனித ஸ்தலங்களை தரிசித்த பிறகு, இந்த துன்பம் என்னும் தளையிலிருந்து விடுபடுவதற்கு வழியை அறியாததை, ரிபு என்பவரிடம் கூறிய கதை, இந்த உபநிஷத்தில் காணப்படுகிறது. ரிபு என்பவர் நியதாவிற்கு உபதேசித்த அறிவுரைகள், இதில் உள்ளன.

13. மைத்ராயணி உபநிஷத்

இந்த உபநிஷத், சற்றே பிற்பட்ட கால கட்டத்தைச் சேர்ந்தது. இந்த உபநிஷத்தின் முக்கியமான ஆசிரியர் மைத்ரி என்பவர். இது ‘மைத்ராயணா’ என்னும் சாகையைச் சேர்ந்தது. இதில் நான்கு ப்ரபாடகங்கள் உள்ளன. இது ஆத்மாவைக் குறித்து த்யானிப்பதைப் போதிக்கிறது.

முதல் ப்ரபாடகம், ‘‘ப்ருஹத்ரதா’ என்னும் அரசன், வனம் சென்று, ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து, ‘சக்யான’ என்னும் முனிவரிடம் இருந்து ஆத்மாவைக் குறித்த அறிவை போதிக்கும்படி, வரம் பெற்றதை விளக்குகிறது.

இரண்டாம் ப்ரபாடகத்தில், சக்யனர் உடம்பு மற்றும் ஆத்மாவின் தன்மையை அரசனுக்கு விளக்கிய பின்பு, தன்னுடைய குருவான மைத்ரேயர் தனக்குக் கற்பித்த, ப்ரஹ்ம வித்யையை அவனுக்குக் கற்பித்தார். இப்பகுதியில் ப்ரஜாபதியானவர், ‘வாலகில்யா’ என்பவரை நோக்கி ஆற்றிய உரையும் உள்ளது.

மூன்றாம் ப்ரபாடகத்தில், ஆத்மாவானது, நற்கர்மம் மற்றும் தீய கர்மங்களின் அடியாக பல பிறவிகளைப் பெற்று உழல்வது விளக்கப்பட்டுள்ளது.

நான்காம் ப்ரபாடகத்தில், ‘அவரவர்களுக்கு உரிய தர்மத்தைப் பின்பற்றுவதின் அவசியமும், ஸத்வ குணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டியதின் அவசியமும்’ விளக்கப் பட்டுள்ளது. மனம், என்பதே பந்தத்திற்கும், முக்திக்கும் காரணமாக இருப்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

14. மஹா நாராயண உபநிஷத்

  இந்த உபநிஷத், படைப்பவனான இறைவன், அண்டத்தைப் படைத்தபிறகு, அதிலுள்ள ஒவ்வொன்றிலும் உட்புகுந்து நியமிப்பவனாக இருப்பதை வர்ணிக்கிறது. இவனே மிக உயர்ந்தவற்றைக் காட்டிலும் உயர்ந்தவனாக, அழிவற்றவனாக, எல்லையற்ற வடிவங்கள் உடையவனாக, ஆதிஅந்தம் அறியப்படாதவனாக, வர்ணிக்கப்படுகிறான். இவன் கண்களால் காணப்படுவதில்லை; த்யானத்தால் இதயத்தில் இருப்பதாக அறியப்படுகிறான். இவனை இவ்வாறு அறிந்தவர்கள், அழிவற்ற நிலையை அடைகிறார்கள்.

  இந்த உபநிஷத், யஜுர் வேத ஸம்ஹிதையில் உள்ள ‘பரமாத்ம ஸூக்தம்’ என்பதில் உள்ள ரகசியமான அறிவை போதிக்கிறது. தைத்ரீய ப்ராஹ்மணத்தில் உள்ள ஹிரண்ய கர்பனுடைய துதியைக் கூறுகிறது.

திரிபாத் விபூதி மஹா நாராயண உபநிஷத்

இதில் நாராயணன் படைப்பிற்கு காரணமாக இருப்பது விளக்கப்படுகிறது. நாராயணன், ப்ரஹ்மனைப் படைத்ததும், ப்ரஹ்மன் மற்றவர்களை படைத்ததும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.

நாராயணன், எல்லா வல்லமை படைத்திருப்பதும், எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதும், எல்லா தேவதை களும் அவனுடைய வடிவங்களாக இருப்பதும், அவன் எல்லாக் காலங்கள், இடங்கள் மற்றும் திசைகளை ஊடுருவி நிலை பெற்றிருப்பதையும் விளக்குகிறது. இவ்வாறு அறிந்தவர்கள் நாராயணனையே அடைவார்கள், என்பது, இந்த உபநிஷத்திலும் யஜுர் வேதத்திலுள்ள உபநிஷத்துக்களும் கூறுகின்றன.

‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உச்சரிப்பவர்கள், நெடுங்காலம் வாழ்ந்து, பின்பு மோக்ஷத்தை அடைவது, இந்த உபநிஷத்திலும் சாம வேதத்திலுள்ள உபநிஷத்துக்களிலும் தெளிவாக்கப் பட்டுள்ளது.

‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்னும் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் தளைகளிலிருந்து விடுபட்டு, நாராயணனின் இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தை அடைகிறார்கள். நாராயணன், எல்லோருக்கும் உள்ளுறைபவன்; அனைத் தையும் கட்டுப்படுத்துபவன். அவனே, ‘‘ஓம்’’ எனப்படுபவன். இதுவே இந்த உபநிஷத்திலும், அதர்வ வேதத்திலுள்ள உபநிஷத்துக்களிலும் கூறப்பட்டுள்ளது.

அஷ்டாக்ஷர மந்திரத்தை காலையில் உச்சரிப்பவ னால், முந்தைய இரவு செய்யப்பட்ட பாவங்கள் அழிகின்றன. மாலையில் ஜபித்தால், அன்றைய தினம் முழுவதும் செய்யப்பட்ட பாவங்கள் அழிகின்றன. மதியம் சூரியனை நோக்கியவாறு உச்சரிப்பதால், வேதங்கள் குறிப்பிடும் எல்லா பெரிய சிறிய பாவங்களும் அழிந்து, இவ்வாறு செய்பவர் இறுதியில் அந்த நாராயணனையே அடைகிறான்.

15. ஶ்வேதாஶ்வதர உபநிஷத்

  இந்த உபநிஷத், இதைக் கற்றுக்கொடுத்த ஆசிரியரின் பெயரையே பெறுகிறது. இதில் 6 அத்யாயங்கள் உள்ளன. மொத்தம் 113 ச்லோகங்கள் உள்ளன (செய்யுள் பகுதிகள் உள்ளன).

இது, த்யானம் மேற்கொள்ளப்பட வேண்டிய இடம், முறை, அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை விளக்குகிறது. எல்லா இடத்திலும், ஊடுருவியுள்ள ப்ரஹ்மம், எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது. கருணையே வடிவமானது. இதுவே உள்ளிருந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஒளி. இது முக்தியை விரும்புபவர்கள், த்யானிப்பதற்கு ஏற்றவண்ணம் கட்டை விரல் அளவில் அவர்கள் இதயத்தில் வாசம் செய்கிறது. இவ்வாறு அறிந்த ஒருவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.

அவன் நுண்ணியதைக் காட்டிலும் நுண்ணியன். மிகப் பெரியதைக் காட்டிலும் பெரியவன்; காண்பவன்; கேட்பவன்; அறிபவன் அவனே. ஆயினும் அவனை யாரும் காணவோ, கேட்கவோ அறியவோ இயல்வதில்லை.

இந்த உபநிஷத்தில், ஓர் மிக பெயர்பெற்ற உபமானக் கதை இடம் பெற்றுள்ளது. ‘‘ஒரு மரத்தின் கிளையில் இரண்டு அழகான பறவைகள் அமர்ந்துள்ளன. அதில் ஒன்று மரத்தின் கனிகளை உண்டு அநுபவிக்கிறது. மற்றது கனியை உண்ணாமல், உயர்ந்து விளங்குகிறது. கனியை உண்ணும் பறவையே, கர்மத்தின் பலனை அநுபவிக்கும் ஜீவாத்மா. உண்ணாமல் இருக்கும் பறவையே கர்மவசப்படாத பரமாத்மா!! இவை இரண்டும் வசிக்கும் மரமே இந்த உடல்.

இந்த உபநிஷத், தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கற்றுத் தரப்படவேண்டும் என்னும் கட்டளை காணப் படுகிறது. ஸ்ரீமத் பகவத் கீதையின் பல ச்லோகங்கள், இந்த உபநிஷத் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டவை.

16. ஸுபாலோபநிஷத்

இந்த உபநிஷத், ப்ரஹ்மனுக்கும், ‘‘ஸுபாலா’’ என்னும் பெயர்கொண்ட அறிஞருக்கும் (முனிவருக்கும்) இடையில் நடைபெறும் உரையாடல் வடிவத்திலுள்ளது. இதில் பத்து பாடங்கள் உள்ளன.

முதல் பாடத்தில், இரண்டு பகுதிகள் உண்டு. இவை அண்டத்தின் நிலைப்பு மற்றும் அழிவைப் பேசுகிறது.

இரண்டாம் பாடத்திலுள்ள 3,4 மற்றும் 5-வது பகுதிகள், அண்டமளாவிய ஆத்மா அல்லது ப்ரஹ்மத்தை விவரிக்கிறது. இது, இதயத்திலுள்ள தாமரையில் அமர்ந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது கூறப்படுகிறது.

மூன்றாம் பாடத்தில், உள்ள 6-வது பகுதியில், புருஷனான நாராயணனைக் குறித்த விளக்கங்கள் உள்ளன.

நான்காம் பாடத்தில் உள்ள 7-வது பகுதியில், உள்ளிருந்து நியமிக்கும், அழிவற்ற இருப்பினமான இறைவன், நாராயணன் என்று பேசப்படுகிறது.

ஐந்தாவது பாடத்திலுள்ள 8, 9 மற்றும் பத்தாம் பகுதிகள், உடலில் இருக்கும் ஆத்மாவைக் குறித்துப் பேசுகிறது. இதை உணரும் வழிமுறைகள் கற்றுத் தரப் படுகின்றன.

இந்த பகுதி முழுவதும் ரைக்வர் என்பவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளன.

ஆறாவது பாடத்திலுள்ள 11-வது பகுதி, ரைக்வரால் கேட்கப்பட்ட ‘‘மேல் நோக்கிச் செல்லும் பாதை’’ விவரிக்கப்படுகிறது.

ஏழாவது பாடத்திலுள்ள 12, மற்றும் 13-வது பகுதிகள், உண்ணத்தக்க உணவைப் பற்றியும், ‘‘சமாதி’’ நிலையைப் பற்றியும் பேசுகிறது.

எட்டாவது பாடத்திலுள்ள 14-வது பகுதியில், மிக உயர்ந்த ஒன்றிற்கு அப்பால் எதுவும் இல்லை என்பதை அறிவிக்கிறது.’

ஒன்பதாவது பாடத்திலுள்ள 15-வது பகுதியில், ரைக்வர் எழுப்பிய வினாவிற்கு அறிவால் முக்தி கிடைப்பது விவரிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் பாடத்திலுள்ள ‘‘ப்ரஹ்ம வித்யை’’ என்பது, விரிவாக விளக்கப்பட்டு, முக்தி பெற வழிவகுக்கும் இந்த கோட்பாடு யாருக்கெல்லாம் கற்றுத் தரவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

17. நரஸிம்ஹ தாபநீய உபநிஷத்

  இதில் இரண்டு உபநிஷத்துக்கள் உள்ளன.

1. நரஸிம்ஹ பூர்வ தாபநீய உபநிஷத்.

2. நரஸிம்ஹ உத்தர தாபநீய உபநிஷத்.

1. நரஸிம்ஹ பூர்வ தாபநீய உபநிஷத்-இது ஐந்து உபநிஷத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அ. இதில், பாதி மனிதன் பாதி சிங்கமாகிய நரஸிம்ஹனின் வடிவம் வர்ணிக்கப்படுகிறது.

ஆ. இதில் மரண பயத்தை வெல்லும் நரஸிம்ஹ மந்திரம் உள்ளது.

இ. தேவர்கள், நரஸிம்ஹ மந்திரத்தைக் குறித்து எழுப்பிய வினாக்களுக்கு, ப்ரஹ்மனும் முனிவர்களும் அளித்த பதில்களும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஈ. இதில், நரஸிம்ஹ மந்திரத்தின் பகுதிகளான, ப்ரணவ மந்திரம், சாவித்ரி மந்திரம், யஜுர் லக்ஷ்மி மந்திரம் மற்றும் நரஸிம்ஹ காயத்ரி ஆகியவை ப்ரஹ்மனால் தேவர்களுக்கு உபதேஸிக்கப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.

உ. இதில், ப்ரஹ்மன் ரிஷிகளுக்கு மஹாசக்ரம் அல்லது ஸுதர்சன சக்ரத்தின் பெருமையை விளக்குவது காணப்படுகிறது.

2. நரஸிம்ஹ உத்தர தாபநீய உபநிஷத்-

இதில், ஒன்பது அத்யாயங்கள் உள்ளன. இதில் முதல் அத்யாயத்தில், ‘ஓம்’’ என்பதில் அமைந்துள்ள ‘அ,உ,ம’ என்ற எழுத்துக்களின் விபரம் காணப்படுகிறது. விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் மற்றும் தூரிய நிலை ஆகியவை விவரிக்கப்படுகின்றன. இதில் உள்ள மற்ற அத்யாயங்களில் ‘‘ஓம்’’ என்னும் மந்திரம், தூரிய நிலை, நரஸிம்ஹனை வழிபட்டு தேவர்கள் அசுரர்களை வென்றது, ‘‘ஓம்’’ என்பதை த்யானிப்பது, நரஸிம்ஹனை த்யானிப்பது, இதனால் ப்ரஹ்மத்தை அடைவது, ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

ஸம்ஹிதைகள்

வேதங்களின் முதல் பகுதியாகவும், மிகப் பழமை யானதாகவும் இருப்பவை ஸம்ஹிதைகள். ‘ஸம்ஹிதைகள்’ என்றால், ‘தொகுப்பு’ என்று பொருள்படும். வேதத்தின் இந்தப் பகுதியில், புனிதமான வழிபாட்டிற்குரிய மந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்கள், தேவர்கள் மற்றும் அவர் தம் தேவியரை புகழ்ந்து போற்றுவதாக உள்ளன. வேதங்களின் மற்ற பகுதிகளான ப்ராஹ்மணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிஷத்துக்களுக்கு ஆதாரமாக இருப்பவை ஸம்ஹிதைகள்.

இந்த ஸம்ஹிதைகளில், அண்டத்தைப் படைத்த மிக உயர்ந்த பரப்ரஹ்மத்தைத் துதிக்கும் பாடல்கள் உள்ளன. இவற்றில், மந்திரங்கள் துதிப்பாடல்களாக அமைந்துள்ளன. மிக உயர்ந்த பரப்ரஹ்மத்தைத் தவிர அதன் சரீரமாய் இருக்கும் தேவதைகளும் வணங்கப்படுகின்றன. துதிப்பாடல்கள் வடிவில் அமைந்த மந்திரங்கள், பல்வேறு வேள்விகள் நடத்தப்படுகையில், குறிப்பிட்ட தேவதையை மகிழ் விக்கவும் பாடப்படுகின்றன. இந்த மந்திரங்கள், தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்காகவும், அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக ஆற்று வதற்கான திறமையை வழங்கவும் ஓதப்படுகின்றன. இவற்றில், அண்டத்தின் படைப்பைக் குறித்த குறிப்புகள், தெய்வீகம், இயற்கையின் குணங்கள், அன்றாட வாழ்க்கை மற்றும் நடத்தையை விவரிக்கும் மந்திரங்கள் உள்ளன. சூதாட்டத்தின் தீமையை விளக்கும் மந்திரங்களும் உள்ளன. இந்த மந்திரங்கள் வேதத்தில் கற்பிக்கப்பட்டுள்ளபடி, சரியான முறையில், சரியான ஒலியோடு உச்சரிக்கப்பட வேண்டும்.

ஸம்ஹிதைகளில் இந்திரன், வருணன், யமன், சூரியன் மற்றும் திரிமூர்த்திகள் என்றழைக்கப்படும் ப்ரஹ்மா, விஷ்ணு மற்றும் ருத்ரனை வழிபடும் மந்திரங்கள் உள்ளன.

மொத்தம் ஐந்து ஸம்ஹிதைகள் உள்ளன. அவை ரிக்வேத ஸம்ஹிதை, ஸுக்ல யஜுர் வேத ஸம்ஹிதை, கிருஷ்ண யஜுர் வேத ஸம்ஹிதை, சாம வேத ஸம்ஹிதை மற்றும் அதர்வ வேத ஸம்ஹிதை என்று தொகுக்கப் பட்டுள்ளன..

நான்கு வேதங்களிலும் சேர்ந்து ஸம்ஹிதைகளுக்கு 1,180 சாகைகளும், 20,379 மந்திரங்களும் உள்ளன. இவற்றுள் ரிக் வேதத்தில் 10,552 மந்திரங்கள் (சாகைகள்) யஜுர் வேதத்தில் 1,975. சாம வேதத்தில் 1,875. அதர்வண வேதத்தில் 5,977 மந்திரங்கள். இந்த மந்திரங்கள் அமைதியாக மனதில் உச்சரிக்கப்படுகையில் மிகவும் பயனுள்ளவை யாகின்றன என்கிறது அக்நி புராணம்.

ப்ராஹ்மணங்கள்

ப்ராஹ்மணங்கள், வேதத்தின் இரண்டாவது பகுதி யாகும். இவை உரைநடையில் அமைந்துள்ளன. இவை ஸம்ஹிதையில் உள்ள மந்திரங்களின் பொருளை விளக்கு கின்றன. வேள்விகள் நடத்தப்படவேண்டிய முறையைத் தெரிவிக்கும் இவை, கர்ம காண்டத்துடன் தொடர்பு கொண்டவை. சடங்குகளை விவரிப்பவை. இந்த சடங்கு களின் பொருள், பல வழிகளில் விளக்கப்படுகிறது. இவை களை, வேதங்களின் ‘‘சமய சித்தாந்தவியல் கட்டுரைகள்’’ என்னலாம். இவை வேள்வி, சடங்குகள் ஆற்றப்பட வேண்டியதற்கு தக்க வழிமுறைகள், சட்டங்கள், ஒழுங்கு முறைகள், ஆகியவற்றை மிக நுணுக்கமாக விளக்குகின்றன. சமய தொடர்பான கடமைகளை எடுத்துரைக்கின்றன. எந்த பலனுக்காக, எந்த வேள்வி நடத்தப்படவேண்டும் என்பதை தெளிவாக்குகிறது.

மந்திரங்கள் எவ்வாறு உச்சரிக்கப்படவேண்டும், அவற்றிற்கு என்ன பொருள், எந்த தேவதைக்கு படைக்கப்பட வேண்டும், அதற்கான வழிமுறை, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை மிக விரிந்த அளவில் விளக்குகின்றன.

வேதங்களின் அழிவற்ற தன்மை, பண்டை வீரர்களின் பெருமை, அண்டத்தின் படைப்பு ஆகியவற்றை ப்ராஹ் மணங்கள் விளக்குகின்றன.

ப்ராஹ்மணங்களில் விதிக்கப்பட்ட வழிமுறைகளை சற்றும் பிசகாமல் பின்பற்றி ஒருவர் வேள்வி நடத்துவா ரானால், அவர் விரும்பும் பலன் உறுதியாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த மந்திரங்களின் பொருளுணர்ந்து ஒருவர் உச்சரிப்பாராகில், அவர், இயற்கையையும், அதை நிர்வகிக்கும் தேவதைகளைக் கட்டுப்படுத்துமளவிற்கு வலிமை பெற்றவர் ஆகிறார்.

ப்ராஹ்மணங்களில் அதிக முக்யத்வத்தைப் பெறுவது, அக்நி தேவதை. ப்ராஹ்மணங்கள், ‘‘விதி’’ மற்றும், ‘‘அர்த்தவாதம்’’ என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. விதியில், வேள்விகள் நடத்த வேண்டிய முறை விளக்கப்பட்டுள்ளது. அர்த்தவாதம், சடங்குகள், தேவதை களின் பெருமை ஆகியவற்றைப் புகழ்ந்து பாடுகிறது.

வேதத்திலுள்ள ஸம்ஹிதைகள் ஒவ்வொன்றும் ஓர் ப்ராஹ்மணத்துடன் தொடர்பு கொண்டதாக 1,180 ப்ராஹ் மணங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுது இருப்பவை 22 ப்ராஹ்மணங்கள் மட்டுமே.

இவை:- 1. ஐதரேய ப்ராஹ்மணம்; 2. சாந்தோக்ய மந்த்ர ப்ராஹ்மணம்; 3. தேவதத்யாய ப்ராஹ்மணம்; 4. கோபத ப்ராஹ்மணம்; 5. ஜைமிநீய ஆர்ஷேய ப்ராஹ்மணம்; 6.ஜைமிநீய ப்ராஹ்மணம், 7. ஜைமிநீய உபநிஷத் ப்ராஹ்மணம்; 8. காண்வ சதபத ப்ராஹ்மணம்; 9. கடக ப்ராஹ்மணம்; 10. கௌஷீதகி ப்ராஹ்மணம்; 11. கௌதும ஆர்ஷேய ப்ராஹ்மணம்; 12. சாமவிதான ப்ராஹ்மணம்; 13.ஸம்ஹிதோபநிஷத் ப்ராஹ்மணம்; 14. சதபத ப்ராஹ்மணம்; 15. சட்விம்ஶ ப்ராஹ்மணம்; 16. சாங்காயன ப்ராஹ்மணம்; 17. தைத்திரீய ப்ராஹ்மணம்; 18. தைத்திரீய சார்தி ப்ராஹ்மணம்; 19. தாண்டிய ப்ராஹ்மணம்; 20. வாதூல அன்வாக்யான ப்ராஹ்மணம்; 21. வம்ச ப்ராஹ்மணம்; 22.அழிந்துபோன ப்ராஹ்மணங்களின் பகுதிகள்’.

ஆரண்யகங்கள்

வேதத்தில், த்யானம் தொடர்பானவை ஆரண்யகங்கள். இவை ப்ராஹ்மணங்களின் பகுதியாக கருதப்படுகிறது. இது, காடுகளில் பயிலப்படும் நூலாகும். இவை அண்டமளாவிய பொருள்வகைக்கு அப்பாற்பட்ட வற்றைக் குறிக்கும் சொற் களின் பொருளை விளக்குகின்றன. இவற்றைக் குறித்த அடையாளக் குறியீடுகள், தத்துவங்கள் மற்றும் மறைந் திருக்கும் அர்த்தங்களைக் காட்டித் தருகின்றன. ஸம்ஹிதை யில் உள்ள மந்திரங்களின் ஆழ் பொருளைக் கற்றுத் தருகின்றன. உபாஸனங்களைக் கற்பிக்கின்றன.

வடமொழியில் ‘‘ஆரண்யம்’’ என்றால், ‘காடுகள்’. ஆரண்யகங்களில் உண்மையைத் தேடி, தனிமையான வாழ்வை மேற்கொள்ள விரும்பும் தவயோகிகளுக்கு ஆரண்யகங்கள் உதவுகின்றன. இது மூன்றாவது ஆச்ரமமான வானப்ரஸ்தத்தை நாடும் பக்தனுக்கானது. இறைவனை வழிபடும் முறைகளை வெகு விரிவாக எடுத்துரைக்கின்றன. ‘‘விதேஹி பக்தி’’ என்பதை வர்ணிக்கின்றன. எந்த நாளில், எந்த நேரத்தில், எவ்வாறு அமர்ந்து, எந்தத் திசைநோக்கி, எந்த மந்திரங்களை உச்சரிக்கவேண்டும் என்பதை போதிக்கின்றன. இதனால், ஸம்ஹிதை மற்றும் ப்ராஹ்மணங்களில் காணப் படும் மந்திரங்களின் ஆழ்பொருள், வானப்ரஸ்தர்களுக்கு தெளிவாகிறது. ஆரண்யகங்கள், வேதாந்தம் அல்லது உபநிஷத்துகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. ஆரண்ய கங்கள் உபநிஷத்துடன் சேர்ந்து ‘ஞானகாண்ட’ மாகின்றன.

தற்காலத்தில் காணப்படும் ஆரண்யகங்கள்:- 1.ஐதரேய ஆரண்யகம்; 2. காடக ஆரண்யகம்; 3. மைத்ராயணீய ஆரண்யகம்; 4. சாங்காயன ஆரண்யகம்; 5. தைத்ரீய ஆரண்யகம்; 6. தாலவாகார ஆரண்யகம்.

08

வேதாங்கங்கள்

வேதங்கள் நான்கு. அவை, ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண வேதங்கள். இந்த நான்கு வேதங்களின் அங்கங் களாக, விளக்கமளிக்கும் பகுதிகளாக உள்ளவை, வேதாங்கங் கள். இவை, ஸூத்ரங்கள் அல்லது மூதுரைகளாக வடிவமைக் கப்பட்டுள்ளன. முதல் முன்னம் இந்த வேதாங்கங்கள், முண்டக உபநிஷத்தில் குறிக்கப் பட்டிருந்தன. பின்பு, இவை தனிப் பட்டதோர் ‘சுதந்திரமான நூல் தொகுப்பு’ என்னும் அங்கீகாரம் பெற்றது. இந்த வேதாங்கங்கள் வேதச் சொற்றொடர்களின் பொருளை நாம் அறிந்து கொள்ள வழிவகுக்கின்றன.

வேதாங்கங்கள் ஆறு. இவை, இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆறு வேதாங்கங்கள் ஆவன:- சிக்ஷை, கல்பம், நிருக்தம், வ்யாகரணம், சந்தஸ் மற்றும் ஜ்யோதிஷம். இவை இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் முறை:-

1. முதல் தொகுதி:- இவை, வேதங்களின் பாடங்களோடு தொடர்பு உடையவை. இவை-சிக்ஷை, வ்யாகரணம் மற்றும் சந்தஸ்,

2. இரண்டாம் தொகுதி:- இவை, வேதச் சொற்றொடர்களின் பொருளோடு தொடர்பு கொண்டவை. இவை:- நிருக்தம், ஜ்யோதிஷம் மற்றும் கல்பம்

இந்த ஆறு வேதாங்கங்கள், மனிதனின் பல்வேறு உறுப்புகளோடு ஒப்பிடப்பட்டுள்ளன.

1. சிக்ஷை - நாசி, 2. நிருக்தம் - செவிகள்; 3. வ்யாகரணம் - வாய்; 4. சந்தஸ் - கால்கள்; 5. கல்பம் - கைகள்.

அ) சிக்ஷை:- இந்த வேதாங்கம், வேத ஒலியியல் அல்லது உச்சரிப்பினோடு தொடர்பு கொண்டது.. இது, வேதங்களுக்கும் மற்ற ஸம்ஸ்க்ருத மந்திரங்களுக்கும் பொதுவானது. வேத மந்திரங்களை சரியான ஒலியுடனும் அசை(தாளத்தில் ஒரு மாத்திரைக்காலம்)யுடனும் ஓதுவது மிகவும் முக்கியமானது. இதற்காக தெளிவான சொல்ல மைப்பு, சொற்களை இணைக்கும் முறை, மற்றும் சரியான உச்சரிப்பு ஆகியவற்றைக் கற்றுத்தருவதே, சிக்ஷை என்னும் வேதாங்கம். இது எழுத்துக்களை, அவற்றை சரியாக உச்சரிக்க உதவும் உடலின் உறுப்புகள் ஆகியவற்றைக் குறித்த அறிவைப் புகட்டுகிறது. வேத மந்திரங்களை தவறாக உச்சரிப்பதினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைத் திருத்தும் முறையை தெளிவாக்குகிறது.

ஒலியியல் குறித்த மிக பழமையான நூல்கள், ‘‘ப்ராதிசாக்யங்கள்’’ எனப்படுகின்றன. இது ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள சொற்களை சரியான உச்சரிப்பு மற்றும் இசையோடு ஓதுதலைக் கற்பிக்கிறது. மேலும், இந்த நூல்கள் வெவ்வேறு சாகைகளைச் சேர்ந்தவர்கள் ‘‘சந்தி’’ குறித்து கற்க வேண்டிய நியதிகளைப் போதிக்கின்றன.

தற்காலத்தில் நான்கு ‘‘ப்ரதிசக்யங்கள்’ காப்பாற்றப் பட்டு வருகின்றன. அவை:-

அ. சகல சாகையின் ரிக் வேத ப்ரதிசாக்யங்கள்;
ஆ. சுக்ல யஜுர் வேத ப்ரதிசாக்யங்கள்;
இ. தைத்ரீய கிருஷ்ண யஜுர் வேத ப்ரதிசாக்யங்கள்;
ஈ. சௌனகிய சாகையின் அதர்வவேத ப்ரதிசாக்யங்கள்;

இவை வேத மந்திரங்கள் ஓதப்படவேண்டிய முறையை விவரிக்கின்றன. வேத ஸ்வரங்களை உச்சரிக்க வேண்டிய முறைகள் - உதாத்த, அநுதாத்த, மற்றும் ஸ்வரித எனப்படுபவை

ஆ) வ்யாகரணம்:- இது ‘வேதத்தின் வாய்’ எனப்படுகிறது. இந்த வேதாங்கம் ஸம்ஸ்க்ருத மொழி இலக்கணத்தை, அந்த மொழி சார்பாக ஆராய்கிறது. பண்டைக் காலத்திய, வேத இலக்கணம் குறித்த நூல்கள் எவையும் இப்பொழுது இல்லை. தற்காலத்தில் நமக்குக் கிடைத்திருப்பது புலவர் பாணினியின் இலக்கண நூல் மட்டும்தான். இதில் எட்டு அத்யாயங்கள் உள்ளன. இதனால், இந்த நூல், ‘‘அஷ்டாத்யாயி’’ என்று வழங்கப்படுகிறது.

முதன் முதலில் வடமொழி இலக்கணத்தை ஏற்படுத்தி யவர் ப்ரஹ்மதேவன் எனப்படுகிறது. பாணினியின் காலத் திற்கு முன்பு, இந்திரன், வாயு பகவான் தொடக்கமாக 13 பேர் இலக்கணத்தை வளர்த்ததாகக் கூறப்படுகிறது. பாணினி, அபிசாபி, கச்யபர் தொடக்கமாக 10 நபர்கள் இலக்கணத்தை விரிவாக எழுதியதாக பாணினி தன்னுடைய அஷ்டாத்யாயீயில் குறிப்பிட்டுள்ளார். எனவே, பாணினிக்கு முன்பு 23 நபர்கள் வடமொழி இலக்கணத்தை விரிவாக்கியது அறியப்படுகிறது.

ரிக் வேதத்திலுள்ள ஓர் மந்திரம், வ்யாகரணத்தை நான்கு கொம்புகள் உள்ள ஓர் காளைமாட்டிற்கு ஒப்பிட்டுப் பேசுகிறது இந்த நான்கு கொம்புகளாவன:- நாமம், ஆக்ஹய தம், உபஸர்க்கம் மற்றும் நிபாதம்.

இந்த காளைக்கு மூன்று கால்கள் உண்டு. அவையே மூன்று காலங்களாகும். (இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்) அதற்கு இரண்டு கரங்களுண்டு. அவை:- ‘ஸுப்’ மற்றும், ‘திங்த’. அதற்கு ஏழு சுரங்களுண்டு. அவை:- ஏழு ‘விபக்திகள்’ இந்த காளையானது, உரம் (இதயம்), கண்டம் (கழுத்து) மற்றும் சிரத்துடன் கட்டப்பட்டுள்ளது. ரிக் வேத மந்திரம் ஒன்று இவ்வாறு அறிவுறுத்துகிறது. ‘‘வ்யாகர ணத்தை அறியாதவன், பார்வை இருந்தும் காண்பதில்லை; கேட்கும் திறன் இருந்தும் கேட்பதில்லை’’ இலக்கணம் அறிந்தவர் களுக்கே மந்திரங்கள் தங்கள் ஆழ்ந்த பொருளை தன்னிடையே தெளிவாக்கும் எனப்படுகிறது.

வரருசி என்னும் ஆசிரியர் இலக்கணம் சரியாக கையாளப்பட வேண்டியதின் அவசியங்களை வற்புறுத்துகிறார். அவை:- அ) ரக்ஷை- வேதத்தை சரியான முறையில் கற்பதை பாதுகாப்பது. ஆ) ஊஹம்-புதிய சொற்களை உருவாக்குவது; இ) வேதங்களை ஆகமங்களின் அங்கங்களோடு சேர்த்துப் படிப்பது; ஈ) லகு-- எல்லா சாஸ்த்ரங்களையும் குறைந்த காலத்தில் அதிசீக்கிரத்தில் கற்பது. உ) அசந்தேஹ- வேதங்களில் உள்ள சொற்களைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படாமல் தவிர்த்தல்.

இலக்கணம், ரிக் வேதத்திலிருந்து தோன்றியது. இதில் ப்ராஹ்மணம் பகுதி ‘க்ரித’, ‘குர்வத்’ மற்றும் ‘கரிஷ்யத’ ஆகியவை பாலினத்தைச் சேர்ந்ததாக விளக்கப் பட்டுள்ளது. ஆரண்யகங்களும் உபநிஷத்துக்களும் வர, ஊஷ்மாந, தாது, ப்ரபாதிகா, நாமா, ஆக்யதா, ப்ரத்யய, விபக்தி ஆகியவற்றை விளக்குகின்றன.

ஸம்ஸ்க்ருத வ்யாகரணத்தை, பெருமளவில் பிரபலப் படுத்தியவர்கள் பாணினி, காத்யாயனர் மற்றும் பதஞ்சலி ஆகியோர். இவர்கள் முனித்ரயம் (மூன்று முனிவர்கள்) என்று பெருமைபடுத்தப்படுகிறார்கள். இவர்கள் முறையே, ஸூத்ரம், வார்த்திகா மற்றும் பாஷ்யம் ஆகியவற்றை வடிவமைத்தார்கள். மூவருள், சிறப்புற்று விளங்குவது பாணினியே. அதனால் தான் அவர் பெயரே எங்கும் வழக்கில் உள்ளது.

பாணினியின் ஸூத்திரங்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தபடியால், அதற்கான விளக்கங்களான, ‘‘வார்த்திகா’’க்கள் எழுதப்பட்டன. தற்காலத்திலுள்ள புதுமுறை இலக்கணம், பாணினி மற்றும் பதஞ்சலியின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.

இ) சந்தஸ்

வேத மந்திரங்கள் ஓதப்படவேண்டிய அசை-அளவு, ‘சந்தஸ்’ எனப்படுகிறது. வேதங்களில் ஐந்து வகையான சந்தஸ்கள் உண்டு. அவற்றிலுள்ள பாதங்கள் மற்றும் பாதங்களிலுள்ள எழுத்துக்களின் அடிப்படையில், இந்த அசை அல்லது அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஐந்து சந்தஸ்ஸுக்களாவன:-

அ. ஜகதி-4 பாதங்கள், ஒவ்வொன்றும் 12 எழுத்துக்கள்
ஆ. திரிஷ்டுப்-4 பாதங்கள், ஒவ்வொன்றும் 11 எழுத்துக்கள்;
இ. விரஜ (பங்க்தி) - 4 பாதங்கள், 10 எழுத்துக்கள்;
ஈ. அநுஷ்டுப்-4 பாதங்கள், 8 எழுத்துக்கள்;
உ. காயத்ரி-3 பாதங்கள், 8 எழுத்துக்கள்.

சந்த சாஸ்திரத்திற்கு வ்யாக்யானம் அளித்தவர் ‘பிங்களாசார்யா’ என்பவர். இதில், வேத மந்திரங்களின் அளவு காணப்படுகிறது. இதில் எட்டு அத்யாயங்கள் அமைந்துள்ளன.

சதபத ப்ராஹ்மணமானது, ‘‘சந்தஸ்’ என்றால், ‘உடலின் சக்தி’ என்று பொருள் கூறுகிறது. இதில், காயத்ரி சந்தஸ்- தலை; ப்ருஹதி-முதுகு; த்ருஷ்டுப்-இடை; பங்க்தி- முழங்கால். சந்தஸ் என்பதற்கு இவ்வாறும் பொருள் கூறப்படுகிறது. புவி சந்தஸ்-உணவு; விரி சந்தஸ்- காற்று; வன்மைஅளி சந்தஸ்-அக்நி; முயதி சந்தஸ்-எதிர் உலகம்; காயத்ரி சந்தஸில் தான் வேதம் அதிகமாய் நிற்கிறது. இதுவே, தேகபலம், மனோபலம், சமூக பலம் ஆகியவற்றைத் தருகிறது. இந்த சந்தஸை அறிந்தவனே வேதத்தை அறியமுடியும். இல்லாதவன் வேதத்தை அறிய இயலாது என்பது பூர்வர்கள் எண்ணம்.

ஆறு வேதாங்கங்கள் ஆவன:- சிக்ஷா, கல்பம், நிருக்தம், ஜ்யோதிஷம், வ்யாகரணம் மற்றும் சந்தஸ். இதில் ‘சந்தஸ்’ என்னும் வேதாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு திருமங்கையாழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட ப்ரபந்தங்கள். ‘‘மாறன்பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற வவதரித்த -வீறுடைய கார்த்திகையில்கார்த்திகைநாள்’’ என்பது ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவாக்கு (உபதேசரத்தின மாலை - 9).

சந்தங்கள் ஏழு வகைப்படும். அவை: காயத்ரி, உஷ்னிக், அநுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, திருஷ்டுப் மற்றும் ஜகதி என்பவை. இவை ஒவ்வொன்றும் அவற்றில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையால் வேறுபட்டவை. உதாரண மாக, காயத்ரி சந்தஸ்ஸில் 24 எழுத்துக்கள் உள்ளன. ஜகதி என்பதில் உள்ளது 48 எழுத்துக்கள்.

தேவர்கள், எம்பெருமான் சூரியநாராயணனுக்குத் தேர் வடிவமைக்கையில் காயத்ரி மற்றும் ஜகதி சந்தஸ்களை குதிரைகளாக்கினர். உஷ்னிக் மற்றும் த்ரிஷ்டுப்பை சக்கரங் களாக்கினர். அனுஷ்டுப் மற்றும் பங்க்தி என்பவற்றைக் கட்டைகளாக்கினர். ப்ருஹதி என்பதை தேர்த்தட்டாக்கினர்.

இதில் ஓர் சிக்கல் ஏற்பட்டது. இந்த சந்தஸ்ஸுக்களில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை வேறுபட்டிருப்பதால், தேரின் வடிவம் சமச்சீராக அமையாமல். மேடும் பள்ளமுமாக, ஏற்றத்தாழ்வுடன் அமைந்தது. இதைக்கவனித்த தேவர்கள், இந்த சந்தஸ்களில் உள்ள எழுத்துக்களின் சராசரியை எடுத்துக் கொண்டனர். அது 36 எழுத்துக்களாக அமைந்தது. இந்த ‘36’ என்பதை அடிப்படையாகக் கொண்டே திருமங்கையாழ்வார் தம் திவ்யப்பிரபந்தமான திருவெழுகூற்றிருக்கையில், 36 வரிகள் அமைத்தார். மீதமுள்ள பத்து வரிகளுக்குக் கணக்கென்ன என்று பார்த்தால், ஆழ்வார், குடந்தை ஆராவமுதன் மீது கொண்டிருந்த பக்தியால், அவனே பத்து அவதாரங்களையும் பண்ணினான் என்று காட்டுவதற்காக, பத்து வரிகளைச் சேர்த்துக் கொண்டார். ஆக, திருவெழுகூற்றிருக்கை 36+10=46 வரிகளைக் கொண்ட ப்ரபந்தமாக அமைந்தது.

காயத்ரி மந்திரத்தில் வரும் ‘பர்கஸ்’ என்ற சொல் சூரியநாராயணனைக் குறிக்கும். இந்த ப்ரமாணத்தை, கூரத்தாழ்வான், சோழ மன்னனின் சபையில் நிலை நிறுத்தினார். காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்கள், எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுடைய 24 திருநாமங்களைக் குறிக்கும் என்பது அன்னமாசார்யாவின் திருவுள்ளம். பகவான் ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீமத் பகவத் கீதை (10-35)இல் ‘‘காயத்ரீ ச2ந்த3ஸாமஹம்’’ (சந்தங்களுக்குள் நான் காயத்ரீ) என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளானன்றோ?!

ஈ) நிருக்தம்

நிருக்தம் சொற்பிறப்பியல் தொடர்பானது. இதில், வேதத்தில் காணப்படும் கடினமான சொற்களுக்கான அருஞ் சொற்பொருளைக் கொண்டது. வேத மந்திரங்கள் காட்டித் தரும் தத்வஜ்ஞானம் மற்றும் கடினமான வேத சொற்கள் நிருக்தத்தில் விளக்கப்படுகின்றன. நிருக்தமே பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நிகண்டு மற்றும் அகராதிகளுக்கு அடிப்படையானது.

முதன் முதலில் வேதங்களை விளக்கும் ஒழுங்கான முறை நைருக்தர்களால் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள், சொற்பிறப்பியல் உதவியோடு, வேதத்திலுள்ள சொற்களின் மூலத்திலிருந்து பெற்ற கருத்தின் அடிப்படையில், அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள முயன்றார்கள். இவ்வாறு பொருள் கொள்ள முற்பட்டவர்களில் மிகவும் புகழ் பெற்றவர், யாஸ்கர் என்னும் அறிஞர். இவர் சொற்பிறப்பியல் என்பது இலக்கணத் திற்குத் துணையானது என்னும் கருத்தைக் கொண்டவர்.

நிகண்டு என்பது வேத மொழியை கற்பிப்பதில் ஓர் சிறந்த இடத்தை உடையது. இதுவே உலகத்தின் முதல் அகராதி என்னலாம். நிருக்தத்தின் தொடக்கத்தில், ‘‘நிகண்டு ஸமாம்நாயம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து அத்யாயங்கள் இருப்பதால், இது, ‘‘பஞ்சாத்யாயீ’’ என்று அழைக்கப்படுகிறது. முதல் மூன்று அத்யாயங்களில், வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்ட இணைச்சொற்கள் காணப் படுகின்றன. முதல் அத்யாயத்தில், இயற்கையில் நிகழ்வு களான, பூமி, காற்று, நீர், விடியற்காலை, இரவு பகல் போன்றவற்றைக் குறிக்கும் இணைச்சொற்கள் உள்ளன. இரண்டாம் அத்யாயம் மனிதன் தொடர்பானது. அவன், கைகால்கள், குணங்கள், செயல்பாடுகள், வெற்றிகள் ஆகியவற்றின் இணைச்சொற்கள் உள்ளன. மூன்றாம் அத்யாயம் தெளிவில்லாத சொற்களான கனம், லேசாக இருப்பது போன்றவற்றின் இணைச்சொற்கள் உள்ளன. இந்த மூன்று அத்யாயங்களும் ஒன்றாக இணைந்து ‘‘நைகாந்துக காண்டம்’’ எனப்படுகிறது.

புரிந்து கொள்வதற்குக் கடினமான வேதச்சொற்களை பட்டியலிட்டிருக்கும் நான்காம் அத்யாயம், ‘‘நைகம காண்டம்’’ எனப்படுகிறது.

வேதத்தில் காணப்படும் தேவதைகளைக் குறித்த அருஞ்சொற்பொருள் அடங்கியிருக்கும் ஐந்தாம் அத்யாயம், ‘‘தைவத காண்டம்’’ என்றழைக்கப்படுகிறது.

‘‘நிருக்தம்’’ என்பது, உண்மையில் விளக்கம் என்பதைக் குறிக்கும். அல்லது, சொற்பிறப்பியல் அடிப் படையில், ஓர் சொல்லுக்குப் பொருள் கூறுவதே, ‘‘நிருக்தம்’’ என்னலாம். பலர் இந்த அறிய செயலைச் செய்திருந்த போதிலும், இன்று புழக்கத்தில் இருப்பது, யாஸ்கரின் நிருக்தம் மட்டுமே. இவருடைய வழிமுறை, விஞ்ஞான அடிப் படையில் இருப்பதாகவும், மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்திருந்த பொழுதிலும், புதுமையாக இருப்பதாகவும் தற்காலத்தவர்கள் புகழ்கிறார்கள்.

யாஸ்கரின் நிருக்தத்தில் 12 அத்யாயங்களும், ஓர் அநுபந்தமும் (பிற்சேர்க்கையும்) உள்ளன. அறிமுகப் பகுதியான முதல் அத்யாயத்தில் கீழ்க்கண்ட கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன:-

1. பேச்சு என்பது பேச்சு தொடர்பான உறுப்புகளில் மட்டுமே உள்ளதா?

  1. முன்னிடைச் சொற்களுக்கு தமக்குச் சொந்தமான சுதந்திரமான பொருள் உண்டா?
  2. பெயர்சொற்கள் எல்லாமே வினைச் சொற்களிலிருந்து அடையப்பெற்றனவா?
  3. வேதச் சொற்களுக்கு பொருள் உண்டா?

இவற்றை மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறார், பேரறிஞரான யாஸ்கர்.

இரண்டாம் அத்யாயத்தில், சொற்பிறப்பியலின் கொள்கைகளை பட்டியலிடுகிறார். சொற்களின் உச்சரிப்பு, இலக்கண வடிவம் மற்றும் அடிப்படை வகைப்படுத்தலை மனதில் கொண்டே சொற்கள் அடையப்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார்.

இரண்டு மற்றும் மூன்றாம் அத்யாயங்களில், நிகண்டுவின் முதல் மூன்று அத்யாயங்களில் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட இணைச்சொற்களின் வழித்தோன்றல் களை முறையாக விளக்குகிறார். இதற்கு உதவியாக, வேத சொற்றொடர்களை உதாரணமாகக் காட்டுகிறார்.

நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் அத்யாயங்கள், நிகண்டுவின் நான்காம் அத்யாயத்திலுள்ள தெளிவற்ற வேத சொற்றொடர்களுக்கான முறையான விளக்கம் உள்ளது.

ஏழிலிருந்து பன்னிரண்டாவது அத்யாயங்களில், நிகண்டுவின் ஐந்தாவது அத்யாயத்தில் உள்ள வேதத்திலுள்ள தேவதைகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றை விளக்குகை யில், யாஸ்கர், ரிக் வேதத்திலுள்ள சொற்றொடர்களை மேற்கோள் காட்டுகிறார்.

பதின்மூன்றாவது அத்யாயம், அநுபந்தம் அல்லது பிற்சேர்க்கையாக இருப்பது. இது, ‘பரிசிஷ்ட’’ எனப்படுகிறது. இதன் முடிவில், ‘‘நமோ யாஸ்காய’’ என்று காணப்படுவதால், இது யாஸ்கரைக் காட்டிலும் வேறு ஒருவர் வடிவமைத்தது என்பது தெளிவாகிறது.

பன்னிரண்டு அத்யாயங்களைக் கொண்ட யாஸ்கரின் நிருக்தம், ரிக் வேதத்தின் 600 செய்யுட்களுக்கு விளக்கம் தருகிறது. 1,300 சொற்களுக்கு சொற்பிறப்பியல் அடிப்படை யில் பொருள் தருகிறது. யாஸ்கரின் விளக்கங்கள் இயல் பாகவும், இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைத் தவிர்த்தும் காணப்படுகின்றன. இவருடைய விளக்கங்களின் சிறப்பிற்கு இரு உதாரணங்கள்:- வேதத்தில் காணப்படும் வ்ருத்ரா என்னும் யக்ஷன் என்பவன் உண்மையில் ஓர் நீர் சுமந்த மேகத்தின் உருவகப்படுத்தல் என்று விளக்குகிறார். மழை என்பது, நீர் மற்றும் ஒளியின் கூட்டு என்று கூறிவிட்டு, இந்திரனுக்கும் வ்ருத்ரனுக்கும் இடையே அடிக்கடி மூளும் போரும் உருவகப்படுத்தப்பட்டது என்கிறார்.

வேதத்தைக் கண்டு க்ரஹித்த ரிஷிகள் தங்களுடைய கவிதைத் திறமையை பறைசாற்றிக் கொள்வதற்காக, இரண்டு பொருள்படும் சொற்களை உபயோகித்துள்ளார்கள். இதை, அவை காணப்படும் பாடப்பகுதிக்கு ஏற்ப பொருள் கண்டு விளக்குகிறார், யாஸ்கர். உதாரணமாக வேதத்தை கண்டறிந்த விற்பன்னர்கள், சூரியனை சுட்டிக்காட்டுகையில், கவிதை நயத்தோடு, ‘‘ஜாரா’’ என்னும் சொல்லை பயன்படுத்தி யுள்ளார்கள். மேலோட்டமாக இந்தச் சொல், ‘‘கள்ளக்காதலன்’’ என்பதைக் குறிப்பிடும். ஆனால், யாஸ்கர், ரிக் வேதத்தில் இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில், ‘‘ஜ்ர’’ என்னும் வேரிலிருந்து தோன்றிய சொல்லான, ‘‘ஜரயிதா’’ என்பது ‘‘நுகர்பவர்’’ என்று பொருள் தருவதாகக் கொண்டு அந்தச் சொற்றொடருக்கு விளக்கம் தருகிறார்.

யாஸ்கருக்குப் பிற்பட்ட காலத்தில் இயற்றப்பட்ட நிருக்தங்களும், அவர் கற்பித்ததை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.

பாணினி, காத்யாயனர் மற்றும் பதஞ்சலி ஆகியோரும், சொற்பிறப்பியல் அடிப்படையில் சொற்களுக்கு பொருள் கூற முற்பட்டுள்ளனர். தெளிவான சொற்பிறப்பியல் அடிப்படை இல்லாத சொற்கள், ‘‘அவ்யுத்பன்ன’’ என்று அழைக்கப் படுகின்றன. இவற்றின் தோற்றத்தை அறிந்து கொள்ள உதவுவது, சாகதயாணரின் உணாதி ஸூத்ரங்களாகும். 750 உணாதி ஸூத்ரங்கள் உள்ளன. இவை நிருக்தத்திற்கும் பாணினியின் இலக்கணம் ஆகியவற்றிற்கும் அநுபந்தமாக பிற்சேர்க்கையாக உள்ளன.

வினைச்சொல்லிலிருந்து அடையப்படாத பெயர் சொற்களை சொற்பிறப்பியல் அடிப்படையில் விளக்கியவர் களுள் புகழ் பெற்றவர், சாயனர் என்பவர்.

‘‘யாஸ்க நிருக்த’த்தின் பெருமை:-

மொழியியல் கருத்துக்களை உலக வரலாற்றிலேயே முதன் முதலாக தெரிவிக்கும் நூல் இது. கிரேக்க விஞ்ஞானி யான, பிளாட்டோ, ‘‘சொற்களுக்கும் பொருள்களுக்கும் உள்ள உறவை கண்டுபிடிப்பது இயலாத காரியம்’’ என்று கைவிட்டு விட்டார். ஆனால், அதே காலத்தில் பாரத தேசத்தில் வாழ்ந்து வந்த நிருக்தகாரர்கள், இந்த அறைகூவுதலை ஏற்று, சொற்களுக்கும், பொருள்களுக்கும் உள்ள உறவை மொழி யியல் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் அளித்தார்கள். 2,600 வருடங்களுக்கு முன்னால், அவர்கள் கண்டு பிடித்த கொள்கைகள், இன்று நவீன மொழியியலுக்கு அடிப்படையாக அமைந்து நிற்கின்றன. பழங்கால பாரத மக்களின் நுண்ணறிவுக்கு இது ஒரு சான்று. பாரத பண்பாட்டின் பெருமைக்கு விளக்கமாக இது அமைந்துள்ளது

உ) ஜ்யோதிஷம்

இது வான சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் தொடர்பான வேதாங்கம். இது வானத்திலுள்ள தெய்வீகமான வடிவங்களை குறித்த கல்வியாகும். இந்த சாஸ்த்திரம் சந்திரனை அடிப் படையாகக் கொண்டு, தாரகைகள் மற்றும் க்ரஹங்களின் (கோள்களின்) நிலையை விளக்குகிறது. ஏனெனில், சந்திரன் சூரியனைவிட பூமிக்கு அருகில் உள்ளதாலும், சந்திரன், மனிதன் மற்றும் பூமியின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்து வதாலும் இவ்வாறு கணக்கிடப்படுகிறது.

ஆதியில், ஜ்யோதிஷத்தை இயற்றியது சூரியன், பிறகு கார்க என்னும் ரிஷியால் விரிவாக்கப்பட்டது. இந்த வேதாங்கம், எந்த வேள்விச்சடங்கு, எக்காலத்தில் ஆற்றப்பட வேண்டும் என்பதைப் போதிக்கிறது. உதாரணமாக பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களின் முக்யத்துவம் விளக்கப்படுகிறது. ஜ்யோதிஷத்தில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன.

அவை:- 1. ஸித்தாந்தம் அல்லது ஜோதிடத்துடன் தொடர்பு கொண்ட வானியல். 2. ஸம்ஹிதை அல்லது வாஸ்து சாஸ்த்ரம் மற்றும் சகுனம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய இம்மைக்குரிய ஜோதிடம்;

3. ஹோரை-அல்லது ஜோதிட கணிப்பு. ஹோரை ஜ்யோதிஷம் பல பகுதிகளை உடையது. அவை வாழ்க்கை யின் எல்லா அம்சங்களையும் விவரிக்கிறது.

ஹோரை ஜ்யோதிஷத்தில் பல கிளைகள் உள்ளன. அவை வாழ்க்கையின் அநேகமாக எல்லா பகுதிகளையும் கோடிட்டுக் காட்டுகின்றன. அவை:-

அ. ஜாதக சாஸ்த்ரம்-தனி ஒருவரின் ஜாதகத்தை அடிப் படையாகக் கொண்டு கணிப்பது.

ஆ. முஹூர்த்தம்:- மிக அதிக பயனை அளிக்கும், தக்க காலத்தைத் தேர்ந்தெடுக்கும் ஜோதிடம்.

இ. ஸ்வர சாஸ்த்ரம்:- பெயர் மற்றும் ஒலியை அடிப்படையாகக் கொண்டு கணிப்பது.

ஈ. ப்ரஶ்னம்:- காலத்தை அடிப்படையாகக் கொண்ட கணிப்பு.

உ. அங்க ஜ்யோதிஷம்:- எண்களின் அடிப்படையில் கணிக்கும் எண்கணிப்பு அல்லது ஜோதிடம்.

ஊ. நாடி ஜ்யோதிஷம்:- தனிப்பட்ட ஒருவரின் எதிர்கால கணிப்பைக் குறித்த பழங்கால ஓலைச்சுவடிகளில் காணப்படும் அறிவிப்புகள்.

எ. ஸம்வத்ஸர பலன்:- சூரியனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் வருட ஜோதிடம்.

ஏ. ஜைமிநி ஸூத்ரங்கள்:- ஜைமிநியின் கணிப்புப்படி, நிகழ்வுகளின் நேரத்தைக் கணக்கிடுதல்

ஐ. நஷ்ட ஜாதகம்:- காணாமல் போய்விட்ட ஜாதகத்தை தேடிக்கண்டுபிடித்தல் அல்லது புதிதாக எழுதுதல்.

ஒ. ஸ்த்ரீ ஜாதகம்:- பெண்களின் ஜோதிடம்.

ஜ்யோதிஷ்டத்தைச் சார்ந்த மற்ற கிளைகள்:-

அ. க்ருஹ சாமுத்ரிகா.

ஆ. ஹஸ்த ரேகை அல்லது சாமுத்ரிகா சாஸ்த்ரம் அல்லது கைரேகை சாஸ்த்ரம்

இ. பாத சாஸ்த்ரம்:- பாதத்திலுள்ள ரேகைகள் மற்றும் அடையாளங்களை அடிப்படையாக கொண்டது.

ஈ. சகுன சாஸ்த்ரம்:- சகுனத்தை அடிப்படையாகக் கொண்ட கணிப்புகள்.

உ. ஸ்வப்ன வித்யை:- கனவுகளின் விளக்கங்களின் அடிப்படையில் கணிப்பது.

ஊ. கபால வித்யை:- ஒரு மனிதனின் கபாலத்தின் வடிவத்தை ஆராய்ந்து அவனுடைய குணங்களையும், வலிமைகளையும் கணிப்பது.

எ. அக்ரிதி வித்யை:-மனிதனின் உடலில் உள்ள மச்சங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அமைப்பை அடிப்படை யாகக் கொண்டு அவன் குணத்தை மதிப்பிடுவது. *

ஊ) கல்பம்

கல்பம் என்றால் வேள்வி நடத்துகையில் மேற் கொள்ளப்பட வேண்டிய சடங்குகள், அவற்றை கடைப் பிடிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விளக்கும் வேதாங்கமே கல்பம் எனப்படுவது. மேலும், இது, சிறுவர், மாணவர், க்ருஹஸ்தர், அரசன், ஸந்யாசி போன்றவர்களின் கடமை களையும் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

கல்பம் என்பது, கற்பிக்கும் கையேடுகள். இவை சடங்குகள், தத்துவம், இலக்கணம் ஆகியவற்றைக் கற்பிக் கின்றன. நான்கு வகைப்பட்ட கல்ப ஸூத்ரங்கள் உள்ளன.

1. ச்ரௌத ஸூத்ரங்கள் அல்லது கூட்டமைப்பான வேள்விகள் இவை ச்ருதியை அடிப்படையாகக் கொண்டு, வேத வேள்விக்களுக்கான சடங்குகளை விரிவாக விளக்கு கின்றன. யஜுர் வேதத்தின் ச்ரௌதஸூத்ரங்களும் கல்ப ஸூத்ரங்களுக்குள் அடங்கியவை. இவை வேள்விக்குப் பயன்படும் கயிற்றின் அளவு முதலியவற்றைப் பற்றிய குறிப்புகள், வேள்விகள் நடத்தப்பெற இருக்கும் மேடைகளின் பல்வேறு வடிவங்கள், மற்றும் அளவு ஆகியவற்றை விவரிக்கிறது. இதில், வேதத்தோடு தொடர்பு டையதான ‘பரிசிஷ்ட’ என்னும் பாடமும் காணப்படுகிறது.

2. கல்பா அல்லது வேத சடங்குகள்-இவை, எந்த வேத வேள்வியானாலும், அது நடத்தப்பட வேண்டிய இடத்தின் பரப்பளவு, வேள்வி குண்டம் இருக்கவேண்டிய இடம், மேடை ஆகியவற்றை விளக்குகிறது.

3. க்ருஹ்ய ஸூத்ரம் அல்லது குடும்பம் சார்ந்த சடங்குகள். இது இல்வாழ்க்கை தொடர்பான திருமணம், குழந்தை பிறப்பு, பெயர் சூட்டு விழா, உபநயனம், இறுதிச்சடங்கு போன்றவற்றை விவரிக்கிறது.

4. தர்ம ஸூத்ரம் அல்லது பணி தொடர்பான கடமைகள். இது பழக்க வழக்கங்கள், சட்டங்கள், நெறிமுறைகள், ஆகிய வற்றுடன் தொடர்பு கொண்டது. இதுவே பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி நூல்களின் அடிப்படையாகும்.

இவ்விதமாக ஆறு வேதாங்கங்களுள், சிக்ஷை மற்றும் சந்தஸ், வேதத்தைச் சரியான முறையில் ஓதுவதைக் கற்பிக் கின்றன. வ்யாகரணமும், நிருக்தமும் வேதத்தைப் புரிந்து கொள்ள உதவிபுரிகின்றன. ஜ்யோதிஷமும் கல்பமும், வேள்விகளை நடத்துகையில், வேதங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதைக் கற்றுத்தருகின்றன.

‘கல்பம்’ என்றால் சடங்கு. ஸூத்ரம் என்றால் நீதிமொழி-பழமொழி. ஸூத்ரம், என்பது குறுகியதாக, செயற்கையான புதிரான சொற்றொடர்களாக இருப்பவை. தனித்தனியான இழைகள் ஓர் கயிறாக திரிக்கப்படுவது போன்றவை, ஸூத்ரங்கள். பரந்து விரிந்து சிதறிக்கிடக்கும் கட்டளைகளை சுருக்கமான, சொற்றொடர்கள் வடிவத்தில் தருகின்றன. வேதச் சடங்குகள், குடும்பத்தில் நடைபெறும் சடங்குகள், மற்றும் நீண்டகாலப் பழக்க வழக்கங்களாய் தொடர்ந்து தொடரும் சடங்குகள் குறித்த பாடங்கள், ஸூத்ரங்கள் வடிவில் கற்பிக்கப்படும் நூலே கல்பஸூத்ரம் எனப்படுகிறது.

1. கல்ப ஸூத்ரங்கள்:- இந்த கல்ப ஸூத்ரங்கள், வேதங்களின் பகுதிகளான ப்ராஹ்மணங்களுடன் தொடர்பு கொண்டவை. ஆயினும், இரண்டிற்கும் இடையில் வேறுபாடு உண்டு. வேதத்திலுள்ள பல்வேறு வேள்விகளை விளக்கி, அவற்றைக் குறித்த சடங்கு மற்றும் கோட்பாடுகளை நிச்சயிப்பதே ப்ராஹ்மணங்களின் இலக்காகும். கல்ப ஸூத்ரங்கள், சடங்குகளை விளக்குவதை இலக்காகக் கொண்டவை. அவற்றின் விபரம் மற்றும் நியாயப்படுத்துதல் ஆகியவற்றை விளக்க முற்படுவதில்லை.

2. ப்ராஹ்மணங்களும் ச்ரௌத ஸூத்ரங்களும்:- ச்ரௌத ஸூத்ரங்கள் எனப்படுபவையும், ப்ராஹ்மணங்களை அடிப் படையாகக் கொண்டவைதான். ஆனால், எல்லா ச்ரௌத ஸூத்ரங்களுக்கான ஆதாரம் ப்ராஹ்மணங்களில் காணப் படுவதில்லை. மந்திரங்களின் பொருளை அறிவிப்பதும், பல வேள்விகளின் தோற்றம் மற்றும் முக்யத்வத்தை அறிவிப் பதே ப்ராஹ்மணங்களின் இலக்கு. ஆனால், இவற்றில், வேள்வி நடத்துவதை குறித்த தெளிவான ஆணைகள் காணப் படுவதில்லை. ஆனால், ச்ரௌத ஸூத்ரங்களோ வெனில், அவை அந்தந்த ஸூத்ரத்தைச் சார்ந்தவர்கள் ஆற்ற வேண்டிய சடங்குகளை, முறையாக, முழுமையாக, கட்டமைப்போடு வர்ணிக்கின்றன.

3. ச்ரௌத ஸூத்ரங்களும் க்ருஹ்ய ஸூத்ரங்களும்:- இந்த இரண்டிற்குமிடையே உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால், ச்ரௌத ஸூத்ரங்கள் மிகப்பெரிய வேள்விகளை விவரிக்கின்றன. இவற்றில் மூன்று அல்லது அதற்கும் அதிகமான வேள்வித் தீக்களைக் கொண்ட யாகங்கள் வர்ணிக்கப்படுகின்றன. க்ருஹ்ய ஸூத்ரங்கள் எளிதாக, வீட்டில், வீட்டிலுள்ள ஒரே வேள்வித் தீயைக் கொண்டு நடத்தப்படும் யாகங்களை வர்ணிக்கின்றன.

இவற்றிற்கிடையே உள்ள இரண்டாவது வேறுபாடு, ச்ரௌத ஸூத்ரங்கள் அதிக பட்சமாக பதினாறு குருமார்கள் பங்கேற்கும் வேள்விகளை வர்ணிக்கின்றன.

இந்த குருமார்களுள் ரிக் வேத மந்திரங்களை ஓதுபவர், ‘ஹோதா’ அல்லது, ‘‘ஹோத்ரு’’ என்றழைக்கப்படுகிறார். யஜுர் வேதத்தை ஓதுபவர், ‘‘அத்வர்யு’’ எனப்படுகிறார். சாம வேத கீதங்களைப் பாடுபவர், ‘உத்காதா’ எனப்படுகிறார். அதர்வ வேதத்தை ஓதுபவர், ‘ப்ராஹ்மணர்’ என்றழைக்கப்படுகிறார். பெரிய வேள்விக்கான ஹோம குச்சிகள், ‘‘சமஸா’’ எனப்படும் பாத்திரம், ‘குச’ எனப்படும் புல், பால், உருக்கப்பட்ட வெண்ணை ஆகியவை குறித்த விளக்கம் ச்ரௌத ஸூத்ரங்களில் உண்டு.

க்ருஹ்ய ஸூத்ரங்கள், ஓர் குடும்பத் தலைவன் தானே நடத்தக் கூடிய வேள்வியை விளக்குகிறது. அவருடைய ப்ரதிநிதியாக அவருடைய மனைவியோ, மகனோ, மாணவனோ அல்லது ஓர் ப்ராஹ்மணனோ இதை நடத்தலாம். ச்ரௌத வேள்வியில் சோமம் ஸமர்ப்பிக்கப் படுகிறது, க்ருஹ்ய வேள்வியில் சோமம் ஸமர்ப்பிக்கப் படுவதில்லை.

4. ச்ரௌத ஸூத்ரங்களின் பொருளடக்கம்:-

அ) ‘‘அக்ந்யாதா3னா’’ என்று அழைக்கப்படும் வேள்வித்தீயை அமைப்பதே முதல் இடத்தைப் பெறுகிறது. இவை, ‘ஆஹவநீயம்’’, ‘‘கார்ஹபத்யம்’ மற்றும் ‘‘அன்வா ஹார்யபசனம்’ (தக்ஷிணா) என்று மூன்றாக இருக்கலாம். அல்லது இவற்றுடன் ‘‘சப்4யா’’ மற்றும் ‘‘ஆவஸத்2யா’’ என்ற இரண்டும் சேர்ந்து ஐந்தாக இருக்கலாம்.

ஆ) இதன் பிறகு, அக்நிஹோத்ர ஸமர்ப்பணைகள் விவரிக்கப்படுகின்றன.

இ) ‘காம்ய’ எனப்படும் கட்டாயமற்ற - விருப்பத்திற் கேற்ற படையல்கள் விவரிக்கப்படுகின்றன. இவை , ‘ஜெய’ மற்றும் ‘அப்4யாதன’ படையல்கள், ராஷ்ட்ரப்4ருத், ஸமஸ்தா மற்றும் சதுர்ஹோத்ரா என்னும் பெயர்களால் அறியப் படுகின்றன.

ஈ) தர்சபூர்ணமாஸா என்றழைக்கப்படும் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கான வேள்விகள், இவற்றில் படைய லாகத் தரப்படும் ‘ஆக்3ரயண’ விவரிக்கப்பட்டு, அதன்பின், கட்டாயமற்ற, விருப்பப்படி ஸமர்ப்பிக்கப்படும், அமாவாசை மற்றும் பௌர்ணமி படையல்கள் கூறப்படுகின்றன. இதற்கான சில உதாரணங்கள்:- அக்நி விஷ்ணு வேள்வி; சுமனா வேள்வி, வசிஷ்ட வேள்வி போன்றவை. இவை அமாவாசை மற்றும் பௌர்ணமி வேள்வியை அடுத்து நடத்தப்பட வேண்டியவை.

உ) சாதுர்மாஸ்ய வேள்விகள்:- ‘‘நிரூட்4பஶுசுப3ந்தா4’’ எனப்படும் மிருகங்கள் பலி தரப்படும் வேள்விகள் விளக்கப்படுகின்றன.

ஊ) சோமத்தை படையலாகத் தருவது:- ‘‘ச்ரௌத ஸூத்ரங்களில் மிக அதிக அளவில் வர்ணிக்கப்படுகிறது. சில உதாரணங்கள்;- அக்நிஷ்டோமா, அத்யக்நிஷ்டோமா, ஷோடஶின் மற்றும் வாஜபேய வேள்விகள்.

வேள்விச் சடங்குகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு ச்ரௌத ஸூத்ரத்திற்கும் மாறுபடுகிறது.

5. ச்ரௌத ஸூத்ரங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

வேள்விகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் குறித்த அறிவு ‘‘ப்ராஹ்மணா’’ காலத்தின் முடிவிற்குள் மிக அதிக அளவில் சேர்ந்திருந்தன. இந்த கிடைப்பதற்கரிதான பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்றாயிற்று. இவற்றை சுலபமான வழியில் காப்பாற்ற ஏற்பட்ட நூல்களே கல்ப ஸூத்ரங்கள்.

6. வேதங்களும் ச்ரௌத ஸூத்ரங்களும்:-

அ) ரிக் வேதத்திலுள்ள ச்ரௌத ஸூத்ரங்கள், ஆஶ்வலாயன ச்ரௌத ஸூத்ரம் மற்றும் ஶாங்கா2யன ச்ரௌத ஸூத்ரம்.

ஆ) யஜுர் வேதத்திலுள்ள ச்ரௌத ஸூத்ரங்கள்:- பெ3ளதா4யன (போ3தா4யன), பா4ரத்வாஜ, ஆபஸ்தம்ப3, சத்யாஷாட4 - ஹிரண்யகேசீ போன்ற ச்ரௌத ஸூத்ரங்கள், யஜுர் வேதத்திலுள்ள தைத்ரீய ஸம்ஹிதையைச் சேர்ந்தவை. மானவ மற்றும் வாராஹ ச்ரௌத ஸூத்ரங்கள், மைத்ராயாணீ சாகையைச் சேர்ந்தவை. வாஜஸநேய ஸம்ஹிதையைச் சேர்ந்த, மாத்யந்தின மற்றும் காண்வ. சாகைகளுக்கு, ‘காத்யாயன ச்ரௌத ஸூத்ரம் என்னும் ஒரே ஒரு ச்ரௌத ஸூத்ரம் மட்டுமே உள்ளது. ‘வைகானஸ ச்ரௌத ஸூத்ரம்’, தைத்ரீய மற்றும் வாஜஸநேயி ஸம்ஹிதைகளுக்கு உரியது. தைத்ரீய ஸம்ஹிதையைச் சேர்ந்தது, ‘வாதூல ச்ரௌத ஸூத்ரம் ‘.

இ) சாம வேதத்திலுள்ள ச்ரௌத ஸூத்ரங்கள்:- ‘ஆர்ஷேய கல்ப’, லாட்யாயன, நிதா3ன ஸூத்ரம், த்ராஹ்யாயண, ஜைமிநீய, க்ஷுத்3ரஸூத்ரம், கல்பானுப ஸூத்ரம், உபக்ரந்த2 ஸூத்ரம், அநுபாத ஸூத்ரம், பஞ்சவிதா4 ஸூத்ரம், புஷ்ப ஸூத்ரம் முதலியவை.

ஈ) அதர்வ வேதத்திலுள்ள ச்ரௌத ஸூத்ரங்கள்:- வைதான ச்ரௌதஸூத்ரம், கௌஶிகஸூத்ரம் என்பவை அதர்வவேதத்தில் உள்ளன.

09

உப வேதங்கள் (வேத உபாங்கங்கள்)

  உப வேதங்கள், ‘‘துணை வேதங்கள்’’ என்று அழைக்கப்படுகின்றன. இவை வேதங்களால் பெறப்பட்ட அறிவை விரிவாக்கி, அதைப் பயன்படுத்தும் முறைகளை கற்பிக்கின்றன. உப வேதங்களானவை:-

1. அர்த்த வேதம்-இது, ரிக் வேதத்துடன் தொடர்பு கொண்டது. இது அரசாட்சி, சமூகவியல், அரசியல் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை விளக்குவது. இதில், நேர்மையான வழியில் செல்வம் ஈட்டுவதைக் குறித்த கல்வியும் உள்ளது. நீதி சாஸ்த்ரம், சிற்ப சாஸ்த்ரம் மற்றும் 64 கலைகள் இந்த உபவேதத்தில் கற்பிக்கப்படுகிறது.

2. தனுர் வேதம்-இது யஜுர் வேதம் தொடர்பானது. போர் காலத்தில் தற்காப்பு, போர்க்கருவிகளை உருவாக்குவது, போர் தொடர்பான சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை விவரிக்கிறது. வில் வித்யையை விரிவாக விளக்குகிறது. தீயவற்றை அழிப்பதற்கே ஆயுதங்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. போரில், தற்காப்பிற் கான வழிமுறைகள், தாக்கும் வழிமுறைகள், விவாதிக்கப் பட்டுள்ளன. இதில், சக்ரம் போன்ற ஏவுகணைகள், வாள், உந்தி ஏவப்படும் வாட்கருவிகள் ஆகியவை பட்டியலிடப் பட்டுள்ளன. ப்ரஹ்மாஸ்த்ரம், வைஷ்ணவாஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம், அக்நியாஸ்த்ரம் போன்றவை, இவை தொடர்பான தேவதைகளுடன் வர்ணிக்கப்பட்டுள்ளன. போலியான போர் பயிற்சி ஆகியவை காணப்படுகின்றன. இந்த உப வேதத்தை, விச்வாமித்ர முனிவர் அல்லது ப்ருகு முனிவர் இவர்களில் ஒருவர் எழுதியிருப்பார் என்று எண்ணப்படுகிறது.

3. கந்தர்வ வேதம்:- இது சாமவேதம் தொடர்பானது. இது இசையை விளக்குவது. வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள், நடனம், நாடகம் ஆகியவற்றை விளக்குவது, இது பரதர் என்பவருடன் தொடர்பு கொண்டது. ஆதியில் ப்ரஹ்மதேவன் நான்கு வேதங்களிலிருந்து தனிமங்களைச் (உறுப்புகள்- கூறுகள்) சேகரித்து, இந்த உபவேதத்தை உருவாக்கினார் என்றும், அவர் அதை நாரத முனிவருக்குத் தர, அவர் பரதர் என்னும் முனிவருக்கு வழங்கினார் என்றும் கூறப்படுகிறது. பரதர், இதை சிவதாண்டவத்தின் அசைவுகளுடன் கூட்டி, நாட்டிய சாஸ்த்ரத்தை உருவாக்கினார் என்றும் கூறப் படுகிறது. இதுவே இந்திய நாட்டில் காணப்படும் பரத நாட்டியத்தின் அடிப்படையாகும். இந்தக் கலைகளால், மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை வழிபடச் செய்வதே இந்த சாஸ்த்ரங் களின் நோக்கமாகும்.

4. ஆயுர் வேதம்:- இது அதர்வண வேதத்தின் தொடர்புடையது. இது ஆரோக்யம் மற்றும் மருத்துவத்துடன் தொடர்புடையது. இதில் உள்ள கட்டுரைகள் ப்ரஹ்மா, அச்வினி குமாரர்கள், தன்வந்த்ரி, இந்திரன், பரத்வாஜர், அத்ரி, அக்நிவேஷா போன்றவர்களால் வடிவமைக்கப் பட்டவை எனப்படுகிறது.

பிற்காலத்தில், சரக என்பவர் சரக ஸம்ஹிதையை எழுதினார். அதன் பின்பு சுஷ்ருதா மற்றும் வாக்பாதர் ஆகியோர் எழுதினர். இவற்றில் நல்ல ஆரோக்யத்துடன் இருப்பது செடி, வேர்களிலிருந்து, பழங்களிலிருந்து மருந்துகள் தயாரிப்பது ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை மற்றும் ஊசி போடுதல் ஆகியவை காணப் படுகின்றன. ஆயுர் வேதத்தில் எட்டு விதமான சிகிச்சை முறைகள் காணப் படுகின்றன. மருந்தியல், தாம்பத்யம், இளமையோடு இருத்தல் ஆகியவை கற்பிக்கப் படுகின்றன.

அர்த்த வேதம், தனுர் வேதம், கந்தர்வ வேதம் தொடர்பான நூல்கள் அநேகமாக கிடைக்காமல் போய் விட்டன. ஆயுர் வேதத்தில் சில நூல்கள் கிடைக்கின்றன.*

10

இதிஹாசங்கள் மற்றும் புராணங்கள்

வேதத்தின் பொருளைப் புரிந்துகொள்வதற்கு உதவும் புராண இதிஹாசங்கள், ‘‘வேத உப ப்ருஹ்மணங்கள்’’ என்று வழங்கப்படுகின்றன. இவை வேதங்களிலிருந்தே தம் அதிகாரத் தன்மையைப் பெறுகின்றன.

1. வேதா3ர்த்த2ம் அறுதியிடுவது - ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே. 2. ஸ்ம்ருதியாலே - பூர்வபா4க3த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது. மற்றையிரண்டாலும் - உத்தரபா4க3த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது. 3.இவை யிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரப3லம். 4. அத்தாலே அது முற்பட்டது. 5. இதிஹாஸ ஶ்ரேஷ்ட2மான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது; மஹாபா4ரதத்தால் - தூதுபோனவன் ஏற்றம் சொல்லுகிறது, என்று பிள்ளை உலகாரியன் தாம் அருளிச் செய்த ஸ்ரீவசனபூஷணத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1) இதிஹாசங்கள்

இதிஹாசங்களும், புராணங்களைப்போலவே, வேதங் களின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு உதவும், வேத உப ப்ரஹ்மணங்களாகும். புராணங்களைப்போல, முன்பு நடந்தவற்றை, குரு சிஷ்ய பரம்பரை வாயிலாக அறிவது போலல்லாமல், இதிஹாசங்கள், அவற்றின் கதா பாத்ரங்கள் வாழ்ந்த சம காலத்திலேயே வாழ்ந்தவர்களால் எழுதி ஏடுபடுத்தப்பட்டவை. ‘இதிஹாசம்’ என்றால் ‘இவ்வாறு நடைபெற்றது’ என்று பொருள்படும். நாம் மிகவும் விரும்பி கற்று அறிய விரும்பும் இதிஹாசங்கள் இரண்டு. அவை, ‘‘இராமாயணம்’’ மற்றும் ‘‘மஹாபாரதம்’’ ஆகியன. இராமாயணம், ஸ்ரீராமன் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்த வால்மீகி ரிஷியால் எழுதப்பட்டது. மஹாபாரதம், பாண்டவ- கௌரவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவரான வேதவியாசரால் எழுதப்பட்டது.

அ) இராமாயணம்

வால்மீகி பகவானால் இயற்றப்பட்ட ராமகாதை, ‘‘வால்மீகி இராமாயணம்’’ என்னும் பெயர் பெற்றது. இதில் 24,000 ச்லோகங்கள் உண்டு. யுகங்கள் தோறும், தர்மம் சோதனைக்குள்ளாகி, அதர்மம் தலை விரித்தாடுகையில், சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும், பகவான் மஹாவிஷ்ணு, பல்வேறு அவதாரங்களை எடுக்கிறான். இதன்படி, பகவான், இராவணன், கும்பகர்ணன் போன்ற அரக்கர்களை அழிக்க, த்ரேதாயுகத்தில் மேற்கொண்ட அவதாரமே இராமாவதாரம். ‘பகவான் விஷ்ணு, இராமனாக, அவதரித்தது போலவே, வேதம் இராமாயணமாயிற்று’ எனப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்திலுள்ள இராமாயணத்தில், ஒரு லக்ஷம் ச்லோகங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.

ப்ராஹ்மணனான தந்தைக்கும், அரக்கியான தாய்க்கும் பிறந்தவன் இராவணன். இவன் பல்லாயிரம் வருடங்கள் நான்முகப்ரஹ்ம தேவனைக் குறித்து தவம் இயற்றி, பல வரங்களைப் பெற்று, வலியவனானான். யாராலும் வெல்ல முடியாதவனானான். இவனுடைய கொடுமை தாங்க முடியாத தேவர்களும், ரிஷிகளும், சாதுக்களும், பகவான் மஹா விஷ்ணுவிடம் சென்று முறையிட, பகவான், இக்ஷ்வாகு குல அரசனான தசரதனின் மகனாகப் பிறக்க, திருவுள்ளம் கொண்டான். இதன் காரணமாகவே, இராமன் தாசரதி என்று அழைக்கப்படுகிறான். பகவான் விஷ்ணுவுடனேயே, பெரிய பிராட்டியாரான மஹாலக்ஷ்மி ஜனகரின் வளர்ப்பு மகளான சீதையாக அவதரித்தாள். சிவபெருமான் அநுமனாகவும், மற்ற தேவர்கள் வானரங்கள் மற்றும் கரடிகளாகவும் இராமனுக்கு உதவி புரிய அவதரித்தனர். பகவானின் படுக்கையான ஆதிசேஷன், இலக்குவனனாகவும், பகவானின் சங்கு சக்ரங்கள் பரதன் சத்ருக்னர்களாகவும் அவதரித்தனர்.

சூரிய வம்சத்தில் தர்மம் தவறாத இக்ஷ்வாகு குலத்தில் தோன்றி, அயோத்யையை ஆண்டுவந்த அரசன் தசரத சக்ரவர்த்தி. இவருக்கு மூன்று தேவிமார்கள். கௌசல்யா, கைகேயி மற்றும் சுபத்ரா என்பவை அவர்கள் பெயர்கள். மூன்று தேவிமார்களை மணந்தபின்பும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள், மகப்பேறு இல்லாமல் வருந்தினான் தசரத சக்ரவர்த்தி. வசிஷ்டர் முதலிய குருமார்கள் ஆலோசனையின் படி, ரிஷ்யசிருங்கர் என்னும் தவயோகியின் தலைமையில், புத்ர காமேஷ்டி யாகத்தை சிறப்பாக நடத்தினான். வேள்வித் தீயிலிருந்து தோன்றிய வேள்வி புருஷன், ஓர் கிண்ணத்தில் ப்ரசாதத்தைத் (பாயஸம்) தந்தான். இதை, தசரதன், தன்னுடைய மூன்று தேவிமார்களுக்குத் தர, அதன் பலனாக தசரதனுக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தார்கள். கௌசல்யாவின் புதல்வனாக ஸ்ரீராமனும், கைகேயியின் புதல்வனாக பரதனும், சுபத்ரைக்கு இரட்டைப்பிறவிகளாக இலக்குவனனும் சத்ருக்னனும் பிறந்தார்கள்.

இந்த நான்கு புதல்வர்களும், பாராட்டி சீராட்டி வளர்க்கப் பட்டு, அரச குமாரர்களுக்கு உரிய அத்தனை கல்விகளையும், குருகுல வாசத்தில் கற்றார்கள். ராஜகுருவான வசிஷ்டர் இவர்களுக்கு சகல வித்யைகளையும் போதித்தார்.

இராமனுக்கு பதினாறு வயது கூட நிரம்பாத நிலையில், விச்வாமித்ரர் என்னும் ராஜரிஷி, தசரதன் சபைக்கு வந்து, தம்முடைய வேள்வியை அரக்கர் தொல்லையிலிருந்து காப்பாற்ற, இராமனைத் தம்முடன் அனுப்பி வைக்கும்படிக் கேட்டார். பால்மணம் மாறாத சிறுவனை, வலிமை மிக்க அரக்கர்களுடன் போரிட அனுப்புவதற்கு தசரதனின் மனம் ஒப்பவில்லை. ஆனால், அவன் பலவிதமாக விவாதம் புரிந்தும் மறுத்தும் மன்றாடிக் கேட்ட பிறகும், விச்வாமித்ரர் தம்முடைய கோரிக்கையை விடவில்லை. இறுதியில் விச்வாமித்ரரின் சினத்திற்கு பயந்தும், வசிஷ்டரின் அறிவுரையை ஏற்றும், இராமனையும் இலக்குவனனையும் அரக்கர்களுடன் போரிட அனுப்புவதற்கு தசரதன் சம்மதித்தான்.

காட்டில் மாரீசன், சுபாகு ஆகிய அரக்கர்களுடன் போரிட்டு, விச்வாமித்ரரின் வேள்வியைக் காத்தான் இராமன். சுபாகு மரணமடைந்தான். மாரீசன் காயங்களுடன் தப்பிச்சென்றான். மனமகிழ்ந்த விச்வாமித்ரர், இராம இலக்குமணர்களுக்கு பல அஸ்திர சஸ்த்ர வித்யைகளையும், மந்திரங்களையும் கற்றுத்தந்தார். பின்பு மிதிலை நகரை ஆண்டு வந்த ஜனக மஹாராஜாவின் சபைக்கு அழைத்துச் சென்றார்.

மிதிலையை ஆண்டுவந்த ஜனகர், ஓர் ஒப்புயர்வற்ற கர்மயோகி. அவர் ஓர் முறை யாககுண்டம் அமைப்பதற்காக நிலத்தை உழுகையில் ஏர் முனையில் ஓர் அழகான பெண்குழந்தை அகப்பட்டது. ‘‘சீதா’’ என்று அழைக்கப்படும் ஏர் முனையில் கிடைத்ததால், குழந்தை ‘‘சீதா’’ என்றே அழைக்கப்பட்டாள். அழகிலும், அறிவிலும், பண்பிலும் நிகரற்று விளங்கிய சீதையின் மற்ற பெயர்கள், ஜானகி, (ஜனகரின் மகள்), வைதேஹி, (தேகத்தின் மீது பற்றைத் துறந்த ‘விதேஹனான ஜனகரின் மகள்) போன்றவை. இவள் திருமண வயதை அøந்தவுடன், அவளுடைய சுயம்வரத்தை நடத்த எண்ணம் கொண்டார், ஜனகர். அவர் போற்றி வணங்கிவந்த ‘சிவதனுசை (சிவன் தந்த வில்லை) வளைத்து நாணேற்றுபவரே சீதையின் கரம் பற்றத் தகுந்தவர்’ என்று நாடு முழுவதும் அறிவித்தான்.

விச்வாமித்ர முனியுடன் வனம் வந்து, அரக்கர்களை அழித்து வெற்றி கண்ட இராமனும், இலக்குவனனும், விச்வாமித்ர முனியுடன், மிதிலையை அடைந்தனர். அவருடைய ஆசியுடன், சீதையின் சுயம்வரத்தில் பங்கேற்று சிவதனுசை வளைத்து, நாணேற்றியதோடல்லாமல், அதை முறித்து, சீதையின் மணமாலையை ஏற்றான் இராமன். எல்லோரும் மனமகிழ்ந்தனர். இராமன்-சீதை திருமணம் நடந்த அதே நாளில், பரத, சத்ருக்ன, இலக்குவனின் திருமணமும், சீதையின் சகோதரிகளுடன் இனிதே நடைபெற்றது.

இதன் பிறகு, மணமக்கள் அயோத்திக்குத் திரும்பி மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். இராமனுக்கு சுமார் 27 வயது முடியும் தருவாயில், தசரதன் அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து, ராஜ்யபாரத்தை அவனிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தான். இந்தக் கட்டத்தில், ஓர் எதிர்பாராத சங்கடம் ஏற்பட்டது. கைகேயி, இராமனிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள். தன் மகன் பரதனைக் காட்டிலும் இராமனிடம் அதிக பாசம் கொண்டிருந்தாள். கைகேயியின் தாதியானவள் மந்தரை என்ற பெயர் கொண்ட கூனி ஒருத்தி. இராமன் பாலகனாக இருக்கையில், விளையாட்டாக உண்டை வில்லால் அவள் கூன்விழுந்த முதுகின் மீது கல்லால் அடித்து விட்டான். இதனால், கடும் சினம் கொண்ட கூனி, ‘‘இராமனைப் பழி வாங்குவேன்’’ என்று சபதம் பூண்டாள்.

இராமனின் பட்டாபிஷேகம் குறித்த பேச்சு எழுந்தவுடன், பால் போன்ற தூய்மையான கைகேயியின் மனத்தை, நயமாகப் பேசி நஞ்சாக மாற்றினாள் கூனி. ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்னும் மூதுரைக்கு ஏற்ப, மனம் மாறினாள் கைகேயி. தசரத மஹாராஜா தன்னைக் காணவந்த பொழுது, தான் எப்பொழுதோ கேட்டிருந்த வரங்களை இப்பொழுது தர வேண்டுமென்றாள்.! அவற்றில் ஒருவரமாக பரதன் முடிசூடிக்கொண்டு நாட்டை ஆளவேண்டும் என்றும், அடுத்த வரமாக இராமன் வனம் சென்று பதினான்கு ஆண்டுகள் வாழ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாள். இடி விழுந்தாற்போல் உடைந்து போனான், தசரதன். எவ்வளவோ மன்றாடியும், கைகேயி தன் மனதையும், வேண்டிய வரங் களையும் மாற்றிக் கொள்ள இசையவில்லை. மரணப் படுக்கையில், வீழ்ந்த தசரதன், இராமனை வரவழைத்து, மிகுந்த மன வருத்தத்துடன், அவன் சிற்றனையின் விருப்பத்தைத் தெரிவித்தான்.

தந்தையின் சொல் கேட்ட இராமன், சிறிதும் மனம் வருந்தவில்லை. மலர்ந்த தாமரை போன்ற முகம் மாறவில்லை. மாறாக மேலும் மலர்ந்தது. ‘‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்று தசரதனின் ஆணையை ஏற்று, கைகேயியை வணங்கிவிட்டு கானகம் செல்ல ஆயத்த மானான் இராமன். ‘‘இராமனைப் பிரிந்து இமைப்பொழுதும் வாழமாட்டோம்’’ என்ற எண்ணத்தைக் கொண்ட சீதையும், இலக்குவனும், இராமனுடன் வனம் சென்றனர். இராமனைப் பிரிந்த தசரத சக்ரவர்த்தி உயிர் நீத்தார்.

கங்கைக் கரையை அடைந்து, அங்கு குகன் என்னும் வேடுவ அரசனின் உதவியுடன் ஆற்றைக் கடந்து, ‘தண்டகாரண்யம்’ என்னும் காட்டில், மூவரும் வாழ்ந்து வரலாயினர். தன் மாமனான யுதாஜித் என்பவரின் நாட்டிற்குச் சென்றிருந்த பரதனும், அவனுடன் சென்றிருந்த சத்ருக்னனும் விஷயம் அறிந்து அயோத்தி திரும்பினர். நடந்தவற்றைச் செவியுற்று தன் தாயின் மீது அளவற்ற சீற்றம் கொண்டான், பரதன். ‘‘இந்த ராஜ்யமும் நானும் ஸ்ரீராமனின் உடைமைகள்; ஓர் உடைமைப் பொருள் மற்றொன்றை ஆளுமோ?’’ என்று வெகுண்டு பேசிவிட்டு, இராமனை மீண்டும் அழைத்துவர, கானகம் புறப்பட்டான். இராமனைச் சந்தித்து அவன் திருவடிகளில் வீழ்ந்து, மீண்டும் அயோத்தி வந்து அரசுப் பொறுப்பை ஏற்கும்படி மன்றாடினான் பரதன்.

இராமன், பரதனின் கோரிக்கையை ஏற்கவில்லை. அவனுடைய அவதாரத்தின் நோக்கம் ஈடேறவேண்டு மல்லவா? வேறு வழியில்லாமல், பரதன் ராஜ்யபாரத்தை சுமக்க இசைந்தான். ஆனால், அரியணையில், இராமனின் பாதுகைகளை சக்ரவர்த்தியின் ஸ்தானத்தில் வைத்து, அவற்றின் பிரதிநிதியாக, தான் இராமனின் வனவாசம் முடிந்து வரும்வரை ஆட்சி புரிவேன் என்ற தன் முடிவைத் தெரிவித்தான். இராமனும் அவனுக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தான்.

இராமன், சீதை, இலக்குவன் ஆகியோர், கானகத்தில் ரிஷிகளைச் சந்தித்தும், அவர்கள் குறைகளைக்கேட்டும், அவர்கள் ஆச்ரமத்தில் விருந்தினர்களாக இருந்தும் காலத்தைக் கழித்தவாறு, சித்ரகூட மலையில் ஓர் குடிலை அமைத்துக் கொண்டு வாழந்து வந்தனர். அப்பொழுது அங்கே வந்து சேர்ந்தாள், சூர்பணகை என்னும் அரக்கி. இராவணனின் தங்கை!. அவள், இராமனின் பேரழகில் மயங்கி, அவனை அணுகி, தன்னை மணம்புரிந்து கொள்ளுமாறு கேட்டாள். இராமன் தன் மனைவியான சீதை அருகில் இருப்பதைக்காட்டி, இலக்குவனை வேண்டுமானால் மணம் முடித்துக் கொள்ளலாம் என்றான். சூர்பணகை இலக்குவனை அணுகினாள். அவன் கோபம் கொண்டு, தன் வாளால் சூர்ப்பணகையின் மூக்கையும் காதையும் அறுத்தெரிந்து பங்கப்படுத்தினான்.

கடுங்கோபம் கொண்ட சூர்ப்பணகை, பெரும் குரலெடுத்து ஓலமிட்டவாறு, இலங்கையை அடைந்து, தன் அண்ணனான இராவணனிடம் நடந்ததைக் கூறினாள். மேலும், சீதையின் பேரழகைக் குறித்தும் சொன்னாள். தங்கையை அவமானப்படுத்தியவர்களை அழிக்கவும், ஜானகியை சிறையெடுக்கவும், இராவணன் தன் புஷ்பக விமானத்தில் பறந்தான்.

இராவணனின் திட்டப்படி, மாரீசன் ஓர், பொன் மானாக மாறி, சீதையின் பார்வையில் படும்படி நடமாடினான். சீதை, அந்த பொன் மான் தனக்கு வேண்டுமென விரும்பிக்கேட்க, இராமன் அதை துரத்திச் சென்றான். வெகு தூரம் சென்றபின், இராமன் அந்த மாயமானை அம்பெய்து கொன்றான். உயிர்விடுமுன்பு, அந்த மாரீசமான், ‘‘ஹே சீதா! ஹே லக்ஷ்மணா!’’ என்று கூக்குரலிட்டுவிட்டு, மடிந்தான். இதைச் செவியுற்ற சீதை, இராமன் ஆபத்திலுள்ளதாக நினைத்து, மிகவும் பதற்றமடைந்து, தனக்குக் காவலாக இருந்த இலக்குவனை போய் இராமனுக்கு உதவும்படி பணித்தாள்.

இலக்குவன் அவ்விடம் விட்டு அகன்றபின், இராவணன் ஓர் சாதுவாக வேடமணிந்து வந்து, சீதையிடம் பிட்சை கேட்டான். பிட்சை இடுவதற்காக முன்னே வருகையில், இலக்குவன், ‘‘இதைத்தாண்டவேண்டாம்’’ என்று அறிவுறுத்தி கிழித்து வைத்த கோட்டைத் தாண்டினாள், சீதை. உடனே இராவணன், சீதையை தன் புஷ்பக விமானத்தில் ஏற்றி ஆகாய மார்க்கமாக புறப்பட்டான்.

கதறியழுத சீதையின், குரல்கேட்டு அங்கே வந்தான், கழுகுகளின் அரசன் ஜடாயு. இவன் தசரதனின் நண்பன். சீதையை இராவணனிடமிருந்து காப்பாற்ற, மிக்க வீரத்துடன் போரிட்டு, இறுதியில் இராவணனால் இரண்டு சிறகுகளும் வெட்டப்பட்டு உயிருக்கு மன்றாடிய நிலையில், தரையில் வீழ்ந்தான் ஜடாயு.

மாயமானைக் கொன்றுவிட்டு, குடிலுக்குத் திரும்பிய இராம இலக்குவனர்கள் சீதையைக் காணாமல் திடுக்கிட்டு, பதறினர். அவளைத்தேடி எல்லாப் பக்கங்களிலும் அலைந்தனர். ஜடாயுவை சந்தித்து விவரம் அறிந்தனர். உயிர் துறந்த ஜடாயுவிற்கு முக்தி அளித்த பின்பு, மேற்கொண்டு சீதையைத் தேடி அலைகையில், அநுமனின் நட்பைப் பெற்றனர். அவர் வாயிலாக வாலி சுக்ரீவர்களைக் குறித்து அறிந்துகொண்டு, வாலியை வதம் செய்ய சுக்ரீவனுக்கு உதவினான், இராமன். சீதையைத் தேட தன் வானர படையை அனுப்பினான், சுக்ரீவன்.

வானர வீரர்கள், நான்கு திசைகளிலும் சென்று சீதையைத்தேட, அநுமன் கடலைத்தாண்டி இலங்கை சென்றான். அங்கே இராவணனுக்குச் சொந்தமான அசோக வனத்தில் சோகமே வடிவாக அமர்ந்திருந்த, சீதையைக் கண்டான். இராமன் தந்த கணையாழி மோதிரத்தைக் காட்டி, சீதையிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். பேருவகை அடைந்த சீதை, தான் அணிந்திருந்த சூடாமணி என்னும் நகையை அநுமனுக்குத் தந்து, அதை இராமனிடம் கொடுத்து, விரைவில் தன்னை மீட்டுச் செல்லும்படி கூறச்சொன்னாள்.

சீதையை வணங்கி விடைபெற்ற அநுமன், இராவணனின் வீரர்களைக் கொன்று குவித்து விட்டு, அரக்கர்கள் தன் வாலில் வைத்த தீயினால் அங்கிருந்த வனங்களைக் கொளுத்தி தீக்கிரையாக்கிவிட்டு, இராமன் இருந்த இடம் நோக்கித் திரும்பினான்.

சீதையின் இருப்பிடத்தை அநுமன் வாயிலாக அறிந்த இராமன், மட்டற்ற மகிழ்ச்சியடைந்து, சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அநுமன் ஆகியோர் தலைமையில், வானர சேனையுடன் இலங்கை நோக்கி பயணமானான்.

கடலைத்தாண்டி இலங்கை செல்லக் காத்திருக்கை யில், இராவணன் தம்பியான விபீஷணன், தன் அண்ணனின் செயலை வெறுத்து, இலங்கையை விட்டுவந்து இராமனிடம் சரணடைந்தான். வீபீஷணனை இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்துவைத்தான், இராமன். பிறகு, தன் வேண்டுகோளுக்குப் பணிந்து, கடலரசன் வழிவிட, வானர சேனை உதவியுடன் இலங்கைக்குப் பாலம் அமைத்தான். அதன் வழியாக படைகள் இலங்கையை அடைந்தன.

இரு சேனைகளுக்கும் உக்கிரமான சண்டை நடை பெற்றது. இராவணனின் படையில் பெரும்பங்கு அழிந்தது. அவன் மகன் இந்திரஜித், தம்பி கும்பகர்ணன் ஆகியோர் மாண்டனர். கடும் போரில் ஆயுதங்களை இழந்து நின்ற இராவணனைக் கொல்லாமல், ‘‘இன்று போய் நாளை வா’’ என்று திருப்பி அனுப்பினான் கருணைவள்ளலான இராமன். இறுதியாக இராவணனின் பத்து சிரங்களையும் கொய்து, அவனை வதம் செய்து விட்டு, சீதா பிராட்டியை மீட்டு, அக்னி ப்ரவேசம் செய்வித்து, புஷ்பக விமானம் மூலம் அயோத்திக்கு அழைத்து வந்தான்.

உளம் மகிழ்ந்த பரதன், ஆட்சிப்பொறுப்பை இராமனிடம் ஒப்படைத்தான். தம்பிமார்களும், மந்திரிகளும் அநுமன், சுக்ரீவன் அங்கதன் புடைசூழ, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் செய்துகொண்டு பல்லாண்டு காலம், தர்ம பரிபாலனம் செய்து ஆட்சி புரிந்து வந்தான்.

‘ஆதி காவ்யம்’ எனப்படும் ஸ்ரீராமாயணம், ‘ஆதிகவி’ என்று போற்றப்படும் வால்மீகியால் எழுதப்பட்டது. வால்மீகி முனிவருக்கு மனதில் தோன்றிய சில ஐயங்களை நாரதரிடம் வெளியிட, அவர், அவற்றிற்கு பதிலளித்தார். அந்த பதில்களின் விரிவாக்கமே இராமாயணமாக அமைந்தது. ஏனெனில், வால்மீகி கேட்ட கேள்விகளின் பொருளாக இருந்தவன், ஸ்ரீராமச்சந்திரன். அந்த 16 வினாக்களாவன:- 1.சீலகுணம் நிறைந்தவன் யார்? 2.வீர்யமுடையவன் எவன்? 3. தர்மம் அறிந்தவன் எவன்? 4. செய்நன்றி மறவாதவன் யார்? 5. சத்யமே சொல்லுபவன் யார்? 6. திடமான விரதத்தை உடையவன் யார்? 7.நன்னடத்தை மற்றும் நல்லொழுக் கத்தோடு கூடியவன் யார்? 8. எல்லா உயிரினங்களுக்கும் ஹிதத்தைச் செய்பவன் யார்? 9. எல்லா அறிவும் நிரம்பிய வித்வான் யார்? 10. மிகவும் சமர்த்தனானவன் யார்? 11.தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்றபடி அழகாக இருப்பவன் யார்? 12. ‘ஆத்மா’ என்னும் சொல்லுக்குப் பொருளான ஜீவாத்மா, அஜ்ஞானம், உடல், இயல்பு மற்றும் பரமாத்மா என்னும் ஐந்தும் பொருந்தும்படி இருப்பவன் யார்? 13. கோபத்தை வென்றவன் யார்? 14.ஒளியை உடையவன் யார்? 15. நல்லவற்றையும் தீயதாகக் கொள்ளும் குணம் அசூயை எனப்படும். இந்த அசூயை இல்லாதவன் யார்? 16. போர்க்களத்தில் எவருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்?

நாரதருக்கும் வால்மீகி பகவானுக்கும் நடைபெற்ற இந்த கேள்வி-பதில் வடிவிலான உரையாடல் ‘‘ஸங்க்ஷேப ராமாயணம்’’ எனப்படுகிறது.

வால்மீகி இராமாயணம், ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டது. இதை அக்காலத்தில் பொதுமக்கள் பாஷையான ‘‘வ்ரஜ மொழியில்’ எழுதியவர் கோஸ்வாமி, துளசிதாஸர். இது, ‘துளசி ராமாயணம்’ என்று வழங்கப் படுகிறது. தமிழில் கம்பநாட்டாழ்வான் ‘வால்மீகி ராமாய ணத்தை’ மூல நூலாகக் கொண்டு ராமகாதை எனப்படும் ‘கம்பராமாயணத்தை’ இயற்றினார்.

காயத்ரி மந்திரம் 24 எழுத்துக்களைக் கொண்டது. காயத்ரி மந்திரத்தின் விரிவாக்கம் ஸ்ரீராமாயணம் என்பாருமுண்டு. வால்மீகி இராமாயணத்தின் ஒவ்வொரு ஆயிரம் ச்லோகங்களின் முதல் ச்லோகத்தின் முதல் எழுத்து, காயத்ரி மந்திரத்தின் ஓர் எழுத்தாக அமைந்துள்ளது. இந்த சொற்களைக் கொண்டே தொடுக்கப்பட்டது, ‘காயத்ரி ராமாயணம்’ எனப்படுகிறது.

நான்கே வரிகளில் இராமாயணத்தின் சாரத்தை உள்ளடக்கிய ச்லோகம் உண்டு.! இதைத் தெலுங்கில், ‘‘ஒச்சாடு, கட்டாடு, கொட்டாடு, தெச்சாடு’ என்பதுண்டு. இதன் பொருள்:- ‘‘வந்தான், பாலம் கட்டினான், இராவணனைக் கொன்றான்; சீதையைக் கொண்டுவந்தான்’’ என்பதாகும்!

இராம நாமத்தை ஒவ்வொருவரியிலும் கொண்டு ஒருவரிப் பாடலாக இராமாயணம் முழுவதையும் கூறுவது, ‘‘நாம ராமாயணம்’’ ‘‘சுத்த ப்ரஹ்ம பராத்பர ராமா’’ என்று தொடங்கும் பாடல்.

கம்பநாட்டாழ்வார், அமுதத்தமிழ் மொழியில் இயற்றியது, ‘‘கம்பராமாயணம்’’ திருவரங்கம் பெரிய கோயிலில், மேட்டழகிய சிங்கர் செவிசாற்றிய அற்புத காவியம்.

ஆழ்வார்களுள், குலசேகராழ்வார், தம்முடைய பெருமாள் திருமொழியில், ‘‘அங்கண் நெடு மதிள்சூழ்’’ என்று தொடங்கும் திருமொழியில், இராமாயணம் முழுவதையும், 11 பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார்.

ஆசார்யரான பெரியவாச்சான் பிள்ளை, திவ்யப் பிரபந்த பாசுர வரிகளைக் கொண்டே இயற்றிய இராமாயணம், ‘‘பாசுரப்படி இராமாயணம்’’ என்று வழங்கப்படுகிறது. இவற்றைத் தவிர நம் உரையாசிரியர்கள் திவ்யப் பிரபந்த விரிவுரைகளில் பல இடங்களில் ஸ்ரீராமாயண ச்லோகங்களை மேற்கோளாகக் காட்டியுள்ளனர். ஸ்ரீராமாயணம் சரணாகதி சாஸ்த்ரம் என்று போற்றப்படுகிறது.

நம்பிள்ளை 10-7-5ஆம் பாசுரத்தின் விரிவுரையில் கீழ்க்கண்டவாறு ஸ்ரீராமாயணத்தின் பெருமையை வெளிப் படுத்தியுள்ளார்.

‘‘நண்ணா அசுரர் நலிவு எய்த - அவ்யபதேச்யனுக்கு (கிருமிகண்டசோழனுக்கு) அநந்தரத்திலவன், தமப்பன் செய்ததனைக்கேட்டு, ‘இவன் என் செய்தானானான்!’ என்று சிரித்தான், ‘ஒரு மதிளை வாங்குங் காட்டில் அத்தரிசனம் குலைந்ததோ, திருவாய்மொழி என்றும் ஸ்ரீராமாயணம் என்றும் வலியன இரண்டு மஹாப்பிரபந்தங்கள் உளவாக இருக்க?’ என்றான் ஆயிற்று; இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான பிரபந்தமாயிற்று. ‘உலகத்தில் தெய்வப்பிறவி என்றும், அசுரப்பிறவி என்றும் உயிர்களின் படைப்பு இரண்டு விதம்: ‘விஷ்ணு பத்தியோடு கூடியது தெய்வப் பிறவி; விஷ்ணு பத்தி இல்லாதது அசுரப் பிறவி’ என்னக்கடவது அன்றோ? பொருந்தாமையையுடைய அசுரர் கூட்டமானது மண் உண்ணும்படியாக. சம்பந்தம் இல்லை என்ன ஒண்ணாதே, ‘பொருந்தோம்’ என்கை அன்றோ உள்ளது?

நல்ல அமரர் பொலிவு எய்த - அநுகூலரானவர்கள் உண்ணாதே தடிக்க. இவர்களுக்கு நன்மையாவது, பகவானிடத்தில் பத்தியுடையராயிருக்கை. ‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்’ என்னக் கடவதன்றோ? எண்ணாதனகள் எண்ணும் நன்முனிவர் - புறம்பு ஒருவர் எண்ணாதன சிலவற்றை எண்ணுவார் சிலர் உண்டாயிற்று. அவர்கள் ஆவார்: ‘சர்வேச்வரன் காப்பாற்று மவன்; அவனை ஒழிந்தவை அடங்கலும் அவனாலே பாதிக்கப்படுகின்ற பொருள்கள்’, என்று இருக்கை. அன்றிக்கே, ‘இரண்டு உலகங்களையுமுடைய ஸர்வேச்வரனுக்கு இன்னமும் சில உலகங்கள் வேண்டும்; எல்லாக் குணங்களும் நிறைந்த வனுக்கு இன்னமும் சில குணங்கள் வேண்டும்’, என்று இப்புடைகளிலே எண்ணுவார் சிலர் உண்டாயிற்று; அவர்கள் என்றபடி.

இன்பம் தலை சிறப்ப - திருவாய்மொழி அவதரித்த பின்பு, ‘அவனுக்கு இந்தக் குணங்களும் இந்த உலகங்களும் போரா’ என்று இருந்த இழவு தீர்ந்து, அதனால் எல்லை இல்லாத ஆனந்தத்தை அடைந்தவர்களாக, அவனுடைய செல்வ நிறைவினை நினைந்து கொண்டே இருக்கும் தன்மையர் ஆகையாலே, ‘நன்முனிவர்’ என்கிறது. அன்றிக்கே, ‘திருவாய்மொழியை ஒழிய வேறு ஒரு செல்வம் வேண்டா’ என்று இதுவே நினைந்து பேருவகையராம் தன்மையர் ஆகையாலே ‘நன்முனிவர்’ என்கிறது’ என்னுதல்.’’

ஸத்குரு தியாகராஜர் இயற்றியவை 24,000 கீர்த்தனைகள். இவற்றில் அதிகமான கீர்த்தனைகளுக்கு நாயகனாக இருப்பவன் ஸ்ரீராமன். தியாகராஜரின் கீர்த்தனை யில் இராமனின் காவியம் பாடப்பட்டுள்ளது. இது, ‘‘தியாகராஜ இராமாயணம்’’ என்று வழங்கப்படுகிறது.

வால்மீகி இராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன. அவை:-

அ. பால காண்டம்:- ஸ்ரீராமனின் அவதாரத்திலிருந்து பட்டாபிஷேக ஏற்பாடுகள் வரை இதில் அடக்கம்.

ஆ. அயோத்யா காண்டம்:- தசரதனின் சோகம், இராம லக்ஷ்மண சீதை ஆகியோர் வனவாசம் செல்வது இந்த காண்டத்தில் உள்ளது.

இ. ஆரண்ய காண்டம்:- இராமன், சீதை, இலக்குவன் ஆகியோரின் வனவாசமும், சீதாபிராட்டியை இராவணன் தூக்கிச் செல்வதும் இதில் அடக்கம்

ஈ. கிஷ்கிந்தா காண்டம்:- இந்தப் பகுதியில், ஸ்ரீராமனுக்கு அநுமன் நட்பு கிடைப்பதிலிருந்து, வானர முதலிகள் சீதையைத் தேடிச்செல்வது வரை விளக்கப்படுகிறது.

உ. சுந்தர காண்டம்:- இது அநுமனின் புகழ்பாடும் பகுதி. சீதை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, ஸ்ரீராமனிடம் அநுமன் சொல்லுவது வரை இந்த காண்டத்தில் காணப்படுகிறது.

ஊ. யுத்த காண்டம்:- இராம-இராவண யுத்தத்தை விளக்குகிறது. இராமன் சீதையுடன் திரும்ப, அயோத்தி வந்து முடிசூடுவது வரை இந்தப் பகுதியில் அடக்கம்.

எ. உத்தர காண்டம்:- இதில் ராம ராஜ்யத்தின் சிறப்பும், சீதை மீண்டும் வனத்திற்குச் செல்வது, சீதா ராமரின் புதல்வர்களான லவ-குசர்கள் பிறப்பு, மற்றும் சீதையும் இராமனும் தங்கள் சோதிக்குத் திரும்புவது வரையிலும் விளக்கப்படுகிறது. இந்த காண்டம் இராமாயணத்தின் முடிவுரை போன்றது. *

ஆ) மஹாபாரதம்

துவாபரயுகத்தில், துஷ்டர்களை அழிக்க, பகவான் மஹாவிஷ்ணு கிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்தார். சந்திரகுலத் தோன்றல் குடும்பத்தினர்களான பாண்டவ கௌரவர் இடையே போர் மூண்டைதையும், அந்த யுத்த களத்தில் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசித்ததையும், பீஷ்மர் யுதிஷ்ட்ரனுக்கு உபதேசம் செய்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையும், உள்ளடக்கியது மஹாபாரதம். இதை எழுதியவர், சமகாலத்தில் வாழ்ந்தவரான வ்யாஸபகவான்.

  ஹஸ்தினாபுரத்தை ஆண்ட குரு வம்ச அரசன் சந்தனுவின் வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது மஹா பாரதம். இவருக்கும் கங்கைக்கும் பிறந்த மகன் தேவவ்ரதன். சந்தனு மஹாராஜா மீனவப் பெண்ணான சத்யவதியை மணக்க விரும்பினார். ஆனால், சத்யவதியின் தந்தை, தன் மகளுக்குப் பிறக்கும் மகனே சந்தனுவிற்குப் பிறகு அரசாளவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தான். தேவவ்ரதன் தனக்கு வரவேண்டிய அரசுரிமையைத் துறந்து, தன் தந்தை சத்யவதியை மணக்கும்படி ஏற்பாடு செய்தான். தனக்கு சந்ததிகள் உருவாகக் கூடாது என்று, திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதையும் ஹஸ்தினாபுரத்தின் நன்மைக்காக அர்ப்பணித்த தேவவ்ரதரே பீஷ்மர் என்னும் மாமனிதர்!

சத்யவதி இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள், சித்ராங்கதன் மற்றும் விசித்ரவீர்யன் ஆகியோர். எத்தகைய திறமையும் இல்லாத இவர்கள், இளவயதிலேயே மாண்டனர். விசித்ரவீர்யனுடைய மனைவிகளான அம்பிகை யும் அம்பாலிகையும் விதவைகளாயினர். இவர்களுக்கு வ்யாஸபகவான் அருளால் பிறந்தவர்கள் முறையே திருதராஷ்ட்ரன் மற்றும் பாண்டு. இவர்களுக்குப் பணிவிடை செய்த பணிப்பெண்ணுக்குப் பிறந்தவர் மாமேதையான நீதிமானான விதுரர்.

த்ருதராஷ்ட்ரன் பிறவியிலேயே குருடனானதால், அவன் தம்பியாகிய பாண்டு, பட்டமேற்று, ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். த்ருதராஷ்ட்ரனை மணந்தவள், காந்தார நாட்டின் இளவரசி காந்தாரி. இவளுடைய சகோதரன் சகுனி. அந்தகனை மணக்க நேர்ந்த காந்தாரி, தானும் தன் பார்வையை துணியால் மறைத்து குருடியாக வாழலானாள். தன் தங்கைக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு மனம் வெதும்பிய காந்தார இளவரசன் சகுனி, இந்த குரு வம்சத்தை உடனிருந்து கெடுத்து பூண்டோடு அழிக்க வேண்டும் என்று சபதமேற்றான்.

அரசர் பாண்டு இரு பெண்களை மணந்தார். முதல் மனைவி குந்திதேவி, கண்ணனின் அத்தை. இரண்டாம் மனைவி மாத்ரி. வேட்டை ஆடச்செல்கையில், மான் என்று நினைத்து ஓர் ரிஷியைக் கொன்றதால், பாண்டு சாபத்திற் குள்ளானான். இதனால் அவன் தாம்பத்ய வாழ்க்கை மேற்கொள்ள தகுதியற்றவனான். குந்திக்கு, யமன், வாயு, மற்றும் இந்திரனின் வரத்தால், பிறந்தவர்கள், முறையே யுதிஷ்ட்ரர், பீமன் மற்றும் அர்ஜுனன். மாத்ரிக்கு, அச்வினி குமாரர்கள் ஆசியால், பிறந்தவர்கள் நகுலன் மற்றும் சகாதேவன். இந்த ஐந்து புதல்வர்களும், பாண்டவர்கள் எனப்பட்டனர். குந்தி தேவிக்கு, திருமணத்திற்கு முன்பே சூரியபகவானின் ஆசியால் பிறந்தவன் கர்ணன்.

த்ருதராஷ்ட்ரனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள் கௌரவர்கள் எனப்பட்டனர். இவர்களில் மூத்தவன், துரியோதனன். அதற்கடுத்தவன் துச்சாதனன். பாண்டவர்கள் மற்றும், கௌரவர்கள் ஆகியோருக்கு, ஆசார்யராக இருந்து, எல்லா வித்யைகளையும் கற்பித்தவர் துரோணாசார்யர் என்பவர். தான் அரசாளவில்லை என்கிற ஏக்கம் த்ருதராஷ்ட்ரன் மனதில் வேரூன்றியிருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள தன் மகன் துரியோதனன், மகுடம் சூட வேண்டும் என்று மிகவும் ஆவல் கொண்டிருந்தான். இந்நிலையில் பாண்டுவின் மரணம் நேர்ந்தது. மாத்ரியும் உடனே தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். குந்தியும் பாண்டவர்கள் ஐவரும், ஹஸ்தினாபுரத்திற்கு அடைக்கலமாக வந்து சேர்ந்தனர். கௌரவர்களுக்கு இயற்கையிலேயே பாண்டவர்கள் மீது வெறுப்பு இருந்தது. ‘அனைவரிலும் மூத்தவரான யுதிஷ்ட்ரனே முடிசூடிக்கொள்ள தகுதி பெற்றவனாகிறான்’ என்னும் எண்ணம் அந்த வெறுப்பை மேலும் வளர்த்தது. பாண்டவர்களை அழித்துவிட பல திட்டங்களைத் தீட்டினர். இத்திட்டங்களுக்கு, இவர்களுக்கு உதவியவன் இவர்களுடைய தாய்மாமனான சகுனி.

ஒருமுறை வாரணவதம் என்னும் ஊரில் ஓர் அரக்கு மாளிகை அமைத்து, அதில் பாண்டவர்களையும் குந்தியையும் வஞ்சகமாக தங்கவைத்து தீமூட்டினர். விதுரரின் சமயோஜித புத்தியால், பாண்டவர்கள் இந்த ஆபத்தை அறிந்து கொண்டு, சுரங்கம் வழியாக எரியும் மாளிகையில் இருந்து தப்பிச் சென்றார்கள். பாண்டவர்களும், குந்தியும். இறந்துவிட்டார்கள் என்ற செய்தி பரவியது. பாண்டவர்கள் தம் தாயுடன் வனத்தில் வசிக்கலானார்கள்.

குந்திக்கு சூரியபகவான் வரத்தால் பிறந்த கர்ணன், ஓர் பெட்டியில் கிடத்தி ஆற்றில் விடப்பட்டான். இவனை ஓர் தேரோட்டி கண்டெடுத்து, அவனை அவனும் அவன் மனைவியும் பாசத்தைக் கொட்டி வளர்த்தனர். கர்ணன் துரியோதனனின், சிறந்த நண்பனாகி, அங்கதேசத்திற்கு அரசனானான்.

பாஞ்சால நாட்டின் அரசனான துருபதனுக்கு, த்ருஷ்டத்யும்னன் மற்றும் த்ரௌபதி என்று இரண்டு மக்கள். த்ரௌபதி திருமண வயதை அடைந்தவுடன், அவளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஓர் யந்திரத்தில், கட்டப்பட்டு நிற்காமல் சுழன்று கொண்டிருக்கும் மீனை, அதன் நிழலை நீரில் பார்த்துக் குறிவைத்து அம்பெய்ய வேண்டும் என்பதே நிபந்தனை. த்ரௌபதியின் அழகையும், அறிவையும் அறிந்திருந்த பல தேசத்து அரசர்கள், போட்டியில் கலந்து கொண்டார்கள். துரியோதனனும் கர்ணனும் கலந்துகொண்ட இந்த சுயம்வரத்தில், பாண்டவர்கள் அந்தணர்களாக வேடம் பூண்டு கலந்து கொண்டார்கள். ‘வில்லுக்கு ஓர் விஜயன்’ என்று போற்றப்படும் அர்ஜுனனே போட்டியில் வென்றான்.

குந்தி, எதிர்பாராமல் கூறிய ஓர் தவறான கட்டளையால், பாண்டவர்கள் ஐவரும் த்ரௌபதியை மணக்க நேர்ந்தது. மணமகளுடன் ஹஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்களைக் கேலி செய்து அவர்களுக்கு உரிய அரசுரிமையை தராமல் விரட்டியடித்தான், துரியோதனன். பிறகு, பீஷ்மர், விதுரர் ஆகியோரின் ஆலோசனையின் படி ராஜ்ஜியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இந்திரப்ரஸ்தம் என்னும் பகுதி பாண்டவர்களுக்குத் தரப்பட்டது. இங்கே சீரும் சிறப்புமாக ஆட்சி புரிந்தனர் பாண்டவர்கள்.

  பாண்டவர்கள் நன்றாக வாழ்வதைக் கண்டு மனம் பொறுக்காத துரியோதனன், அவர்களை அழிக்க நினைத்தான். நட்பு பாராட்டுவதைப் போல தூது அனுப்பி, பாண்டவர்களை சொக்கட்டான் விளையாட ஹஸ்தினாபுரத்திற்கு வரவழைத் தான். சொக்கட்டான் விளையாட்டில், பணயம் வைத்து ஆடுவது என்று முடிவாயிற்று. இதற்கு, சகுனி, தன் தந்தையின் தொடை எலும்பிலிருந்து செய்த ப்ரத்யேகமான தாயக் கட்டையைப் பயன்படுத்தினான். இது துரியோதனன் விரும்பிய எண்ணைத் தரவல்லது. இந்த சூதை அறியாத யுதிஷ்ட்ரன், தன் செல்வம், நாடு, தன் சகோதரர்கள் என்று பணயம் வைத்துத் தோற்று, தன்னையும் தோற்றான். இறுதியில் த்ரௌபதியை பணயம் வைத்து, அவளையும் தோற்றான்.

இறுமாப்பின் எல்லையிலிருந்த துரியோதனன், த்ரௌபதியின் கூந்தலைப் பிடித்திழுத்து, சபைக்கு இழுத்து வரும்படி துச்சாதனனை அனுப்பினான். அவ்வாறு இழுத்து வரப்பட்ட த்ரௌபதியின் புடவையைக் களைந்து, அவளை மானபங்கப்படுத்த முனைந்தான் துச்சாதனன். த்ரௌபதி, ஸ்ரீகிருஷ்ணனிடம் அளவற்ற பக்தி கொண்டவள். அவள் அவனைச் சரணடைந்து, தன்னைக் காப்பாற்றுமாறு ஓலமிட்டாள். துவாரகையில் இருந்த கண்ணன், த்ரௌபதி தன்னை, ‘‘கோவிந்தா!’’ என்று அழைத்ததைக் கேட்டு அவள் மானபங்கம் படாதபடி, ஆயிரக்கணக்கான புடவைகளை சுரக்க வைத்தான். த்ரௌபதி ரக்ஷிக்கப்பட்டாள். அப்பொழுது அவள், துச்சாதனின் குருதி கொண்டு தடவியபின் தன் கூந்தலை முடிவேன் என்று சபதம் செய்தாள்.

  பாண்டவர்களுக்கு இத்தனை தீமை இழைத்தும் மனநிறைவு அடையாத துரியோதனன் அவர்களுக்கு 12 ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஜ்ஞாத வாசமும் தண்டனையாக விதித்தான். அதையும் முடித்துவிட்டு வந்த பாண்டவர்களுக்கு, ஒரு கிராமத்தைக் கூட தரமறுத்தான். இதன்பின் மூண்டதே பாரதப்போர்!.

  ஸ்ரீகிருஷ்ணனின் உதவியை வேண்டி, துரியோ தனனும், அர்ஜுனனும் அவரைக் காணச் சென்றனர். கண்ணன் தன்னுடைய பதினாறாயிரம் வீரர்களைக் கொண்ட நாராயணபடையை துரியோதனனுக்கும், தன்னுடைய உதவியை அர்ஜுனனுக்கும் அளித்தான். போரில் ஆயுதம் எடுக்கமட்டேன் என்று உறுதிபூண்டான். அர்ஜுனனுக்குத் தேரோட்டும் பார்த்தசாரதியானான்.

யுத்தம் தொடங்கிய முதல்நாள், அர்ஜுனன், கண்ணனிடம் தான் வீற்றிருந்த தேரை இரண்டு சேனைகளின் இடையே நிறுத்தச் சொன்னான். கௌரவர் தரப்பில், பீஷ்மர், துரோணர் போன்ற ஆசார்யர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இருப்பதைக் கண்டு, மதிமயங்கி, ‘இந்தப் போரில் நான் ஈடுபடமாட்டேன்’ என்று வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டு தேர்த்தட்டில் அமர்ந்துவிட்டான் அர்ஜுனன்.

அர்ஜுனன் இவ்வாறு மனத்தின் வலுவிழந்து சோகத்தில் ஆழ்ந்த சமயம், அவனுக்கு ‘உடலின் நிலை யாமை, ஆத்மாவின் அழிவற்ற தன்மை, கடமைகளை சரியாக ஆற்றவேண்டியதன் அவசியம், தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம்’ ஆகியவற்றை கண்ணன், எடுத்து ரைத்த உரையாடலே உலகப்புகழ்பெற்ற ஸ்ரீமத் பகவத்கீதை. கீதையை உபதேசித்ததோடு நில்லாமல், தானே பரமாத்மா என்பதை அர்ஜுனனுக்குக் காட்டித்தந்து, தன் விச்வ ரூபத்தையும் வெளிப்படுத்தினான் கண்ணன். இதன்பின் மனம் தெளிந்த அர்ஜுனன் உற்சாகமாக போரில் ஈடுபட்டான்.

பதினெட்டு நாள் நடைபெற்ற இப்போரில், வெற்றி, தோல்வியானது இரு தரப்பினரை மாறி மாறித் தழுவியது. இறுதியில் த்ரௌபதியின் சபதத்தை நிறைவேற்றும் வண்ணம், பீமசேனன் துச்சாதனனை வதைத்து, அவன் குருதியைக் கொண்டு, அவள் கூந்தலை முடிப்பித்தான். வாழ்நாள் முழுவதும் கண்களை மறைத்துக் கட்டியிருந்த காந்தாரி கண் திறந்து, தன் மகன் துரியோதனனைப் பார்த்து, அவன் உடலுக்கு வஜ்ர கவசத்தைத் தந்தாள். ஆனால், அந்த வலு அவன் தொடைகளை அடையவில்லை. இதை கண்ணன் ஸூக்ஷ்மமாக பீமனுக்குத் தெரிவிக்க, அவன் தன் கதாயுதத்தால் துரியோதனன் தொடையைப் பிளந்து அவனை மாய்த்தான்.

முற்பிறப்பில் தான் செய்திருந்த சபதத்தை நிறை வேற்றும் வண்ணம், அம்பை என்னும் இளவரசி போர் முனையில் பீஷ்மரை வீழ்த்தினாள். தன் விருப்பப்படி உயிர் விடும் வரத்தைப் பெற்றிருந்த பீஷ்மர், உத்தராயண சுக்லபட்ச ஏகாதசிக்காக அம்புப்படுக்கையில் படுத்துக் காத்திருந்தார். அப்பொழுது, யுதிஷ்ட்டிரர் கேட்ட சில கேள்விகளுக்கு பீஷ்மர் விடையாகும் வண்ணமாக உபதேசித்ததே பகவான் விஷ்ணுவின் பெயர்களின் புகழ்பாடும், ‘‘விஷ்ணு ஸஹஸ்ர நாமம்’’ இவ்வாறு மஹாபாரதம், தொடக்கத்தில் ஸ்ரீமத் பகவத் கீதையையும் முடிவில் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையும் கொண்டுள்ளது அதன் தனிச்சிறப்பு!

தன் தந்தை துரோணர் கொல்லப்பட்டதை அறிந்த அவர் மகன் அச்வத்தாமன், பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களான உபபாண்டவர்களை, அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் கொன்றுவிட்டான். அர்ஜுனன் மகன் அபிமன்யு. இவன் போரில் கர்ணனால் கொல்லப்பட்டான். அபிமன்யுவின் மனைவி வத்சலா கர்பமாக இருந்தாள். பாண்டவர்களின் ஒரே வாரிசாக இருந்த அச் சிசுவை ப்ரஹ்மாஸ்த்திரத்தால் அழிக்க நினைத்தான் அச்வத்தாமன். அந்த சிசுவை காத்தருளினான், கண்ணன். அபிமன்யுவின் அந்த குழந்தை, ‘‘பரீக்ஷித்’’ என்ற பெயர் கொண்ட புகழ்பெற்ற அரசன். சுகப்ரஹ்ம ரிஷியிடம் பாகவதத்தை ஏழு நாள்களில் கேட்ட பாக்யம் பெற்றவன்.

கண்ணனின் உதவியால் கடும்போரை வென்ற பாண்டவர்கள், யுத்த பூமியான குருக்ஷேத்திரத்திலிருந்து, ஹஸ்தினாபுரம் திரும்பினார்கள். யுதிஷ்ட்டிரன் முடி சூட்டிக் கொண்டு பல்லாயிரம் வருடங்கள் தர்ம பரிபாலனம் செய்து ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தான்.

  மஹாபாரதத்தில் இந்த முக்கியமான வரலாற்றைத் தவிர, பல உப கதைகள் உண்டு. இதில், 1,25,000 ச்லோகங்கள் உள்ளன. இந்த மஹாபாரதத்தில் இல்லாதது ஏதுமில்லை. இதில் இல்லாவிட்டால் அது வேறு எங்கும் கிடைக்காது. இந்த மஹாகாவியத்தில் ஏறத்தாழ பாதியளவு 18 நாள் நடைபெற்ற குருக்ஷேத்ர போரை விவரிப்பதாக உள்ளது. இதில் 20 பர்வங்கள் உண்டு. ஒவ்வொன்றும் 100 உப பர்வங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் நம்மிடம் உள்ளது 18 பர்வங்கள் மட்டுமே. இந்த பர்வங்களைக் குறித்த சுருக்கமான விளக்கம் கீழ்க்காணுமாறு:-

1. ஆதி பர்வம்- (உப பர்வங்கள் 1 முதல் 19 வரை):- முன்னுரை, பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் பிறப்பு மற்றும் வளர்ப்பு.

2. ஸபா பர்வம்:- (உப பர்வங்கள் 20 முதல் 28 வரை):- அரண்மனையில் வாழ்க்கை, சொக்கட்டான் விளையாட்டு, பாண்டவர்களின் வனவாசம்.

3. ஆரண்ய பர்வம் அல்லது வன பர்வம்:- (உப பர்வங்கள் 29 முதல் 44 வரை) வனத்தில் பாண்டவ சகோதரர்களின் 12 வருட வனவாசம்.

4. விராட பர்வம்:- (உப பர்வம் 45 முதல் 48 வரை):- விராட மன்னனின் அரண்மனையில் பாண்டவர்களின் ஒருவருட அஜ்ஞாதவாசம்.

5. உத்யோக பர்வம்:- (உப பர்வங்கள் 49 முதல் 59 வரை) மஹாபாரதப் போருக்கான ஆயத்தம்

6. பீஷ்ம பர்வம்:- (உப பர்வங்கள் 60 முதல் 64 வரை):- பீஷ்மரைத் தளபதியாகக் கொண்டு கௌரவர் நடத்திய முதல் கட்ட யுத்தம் மற்றும் கண்ணன் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தது.

7. த்ரோண பர்வம்:- (உப பர்வங்கள் 65 முதல் 72 வரை):- த்ரோணாசார்யாரைத் தளபதியாகக் கொண்டு கௌரவர்கள் நடத்திய யுத்தம்.

8. கர்ண பர்வம்:- (உப பர்வம் 73) கர்ணனைத் தளபதியாகக் கொண்டு கௌரவர்கள் நடத்திய யுத்தம்.

9. சல்ய பர்வம்:- (உப பர்வங்கள் 74 முதல் 77 வரை) சல்யனைத் தளபதியாகக் கொண்டு கௌரவர்கள் நடத்திய யுத்தத்தின் கடைசி பகுதி.

10. சௌப்திக பர்வம்:- (உப பர்வங்கள் 78 முதல் 80 வரை):- த்ரோணரின் மகனும் துரியோதனனின் நண்பனுமாகிய அச்வத்தாமா, துரியோதனன் போரில் தோற்றதற்குப் பழிவாங்குவதற்காக, பாண்டவர்களின் புதல்வர்களை, அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் கொன்ற விபரம்.

11. ஸ்திரீ பர்வம்:- (உப பர்வங்கள் 81 முதல் 85 வரை):- கௌரவர்களின் தாய் காந்தாரியும் மற்ற பெண்களும் கௌரவர்களின் இறப்பைக் குறித்து வருந்தி அழுதது.

12. சாந்தி பர்வம்:- (உப பர்வங்கள் 86 முதல் 88 வரை):- யுதிஷ்ட்ரருக்கு, பீஷ்மரின் உபதேசமும், ஆலோசனைகளும் மற்றும் யுதிஷ்ட்ரர் அரசனாக முடிசூட்டிக்கொள்வது.

13. அநுஸாசன பர்வம்:- (உப பர்வங்கள் 89 முதல் 90 வரை):- யுதிஷ்ட்ரனுக்கு பீஷ்மர் அளித்த இறுதி அறிவுரைகள்.

14. அச்வமேதிக பர்வம்:- (உப பர்வங்கள் 91 முதல் 92 வரை):- யுதிஷ்ட்ரரை அரசனாக வைத்து பாண்டவர்கள் நடத்திய அச்வமேதயாகம்.

15. ஆச்ரம வாசிக பர்வம்:- (உப பர்வங்கள் 93 முதல் 95 வரை):- த்ருதராஷ்ட்ரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் வனத்திற்குச் செல்லல், மற்றும் அவர்களின் இறப்பு.

16. மௌசல பர்வம்:- (உப பர்வம் 96:- உலக்கையை வைத்துக் கொண்டு யாதவ குலத்தினரிடையே ஏற்பட்ட சண்டை.

17. மஹாப்ரஸ்தானிக பர்வம்:- (உப பர்வம் 97):- பாண்டவர்களின் மஹாப்ரஸ்தானம் எனப்படும் இறுதி யாத்திரை.

18. ஸ்வர்காரோஹண பர்வம்:- (உப பர்வம் 98):- பாண்டவர்கள் சொர்க்க லோகத்திற்குச் செல்வது.

அநுபந்தம்:- கில-ஹரி வம்ச பர்வம்:- (உப பர்வங்கள் 99 முதல் 100 வரை):- ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு, யாதவ வம்சத்தின் அழிவு.*

2) புராணங்கள்

  புராணங்கள், வ்யாஸ பகவானால் தொகுக்கப் பட்டவை. புராணங்களின் பொருளடக்கம் இவ்வாறு விவரிக்கப்படுகிறது. இவை வேதங்களின் ‘‘விரிவாக்கம்’’ அல்லது, ‘‘புது விரிவு’’ என்று அழைக்கப்படலாம். வேதத்தில் அறிவுறுத்தப் பட்டிருக்கும் கருத்துக்களைப் புரிந்து கொள்ள போதிய அறிவு இல்லாத சாதாரண மனிதன், அவற்றைப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட கதைகளாக, நிகழ்ச்சிகளாக வடிவமைக்கப்பட்டிருப்பவையே புராணங்கள். இதில் பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணன், தேவர்கள், அவர் தம் தேவியர்கள், அரசர்கள், புலவர்கள், அரக்கர்கள், அசுரர்கள், பொது மக்கள் ஆகியோரைக் குறித்த கதைகளும் சரித்திர வரலாறு, தோத்திர பாடல்கள், அண்டத்தைப்பற்றிய விளக்கங்கள், வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய, சடங்குகள், எதிர்காலக் கணிப்புகள் மற்றும் சமய சார்பான அறிவுரைகள் காணப்படுகின்றன.

இவற்றில், இறைவனின் அவதாரங்கள் விளக்கப் படுகின்றன. பக்தி மார்க்கமும், முக்திக்கு வழியும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. அண்டத்தின் படைப்பு, காலமானது கல்பங்கள், மந்வந்த்ரங்கள், யுகங்களாகப் பிரிக்கப் பட்டிருப்பது, இவை ஒவ்வொன்றிற்கும் உரிய இறைவர்கள், ரிஷிகள் ஆகியோர் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. நன்மைக்கும் தீமைக்கும் காலங்காலமாக நடைபெற்று வரும், போராட்டமும், அதில் நன்மைக்குக் கிடைக்கும் வெற்றியும் விவரிக்கப்படுகிறது.

வேதங்களைப் போலவே, புராணங்களும் முக்திக்கு வழிகாட்டுபவைதான். வேதங்கள், கர்மம், உபாஸனை மற்றும் ஞான மார்க்கத்தைக் காட்டுகின்றன. புராணங்கள், இதிஹாசங்கள் போலவே பக்தி மார்க்கத்தை, முக்திக்கு வழியாகக் காட்டித்தருகின்றன.

முன்பொரு காலத்தில், 64 புராணங்கள் இருந்ததாக அறியப்படுகிறது. இதில் முக்கியமானவை 18 மஹா புராணங்கள். 18 முதன்மையான உப புராணங்கள். மற்றவை இரண்டாம் பட்சமான புராணங்கள்.

அ) மஹா புராணங்கள்

மஹா புராணங்களில் மொத்தம் 4,00,000 ச்லோகங்கள் (செய்யுட்கள்) உண்டு. இது, மாஹாபாரதத்தைப் போல, நான்கு மடங்கு அளவில் பெரியது. இந்த மஹா புராணங்கள் எல்லாவற்றிலும், ஐந்து முக்கியமான பொருள்கள் விவரிக்கப் படுகின்றன. அவையாவன:-

1. ஸர்க்கம்:- அண்டங்களின் உருவாக்கமும் செயல் வகைகளும்.

2.ப்ரதி ஸர்க்கம்:- ஒழுங்கு மாறாது அவ்வப்பொழுது நடைபெறும் அழிவும் படைப்பும்.

3. மன்வந்த்ரங்கள்:- பலவகைப்பட்ட காலங்கள்.

4. வம்சம்:- சந்திர வம்சம் மற்றும் சூர்யவம்சத்தின் வரலாறு.

5. வம்சாநுசரித்திரம்:- அரசர்களின் மரபு வழி.

வ்யாஸபகவான், இந்தப் புராணங்களை எழுதி, அவற்றைத் தம் சீடரான ரோமஹர்ஷனருக்கு போதித்தார். இவருக்குப்பிறகு, சீடர் அவரது சீடர், என்று வாய்மொழியாக உபதேசிக்கப்பட்டு, சீடர்கள் தங்கள் தங்கள் பங்கிற்கு சில பகுதிகளைச் சேர்க்க, புராணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. புராணங்கள் தோன்றிய காலத்தைத் துல்லியமாக நிர்ணயம் செய்வது கடினமானதாக உள்ளது.

  இந்த 18 மஹா புராணங்கள், ஸாத்விக, ராஜஸ மற்றும் தாமஸ புராணங்கள் என்று வகைபடுத்தப்பட்டுள்ளன.

1. ஸாத்விக புராணங்கள் ஆறு:- இவை மஹாவிஷ்ணுவின் புகழ் பாடும் வைஷ்ணவ புராணங்கள்.

2. ராஜஸ புராணங்கள் ஆறு:- இவை நான்முக ப்ரஹ்மனின் புகழ் பாடும் ப்ரஹ்ம புராணங்கள்.

3. தாமஸ புராணங்கள் ஆறு;- சிவனின் பெருமை பாடும் சைவ புராணங்கள்.

ஆ) வைஷ்ணவ புராணங்கள்

1. ஸ்ரீவிஷ்ணு புராணம்:- இதில் ஆறு பெரிய பகுதிகள் உள்ளன. இதில் அண்டத்தின் படைப்பு, பராசர முனிவரால் மைத்ரேய முனிவருக்கு வர்ணிக்கப்படுகின்றது. இதில் காணப்படும் முக்கியமான வரலாறுகள், அண்டத்தின் படைப்பு, பல்வேறு உயிரினங்களின் படைப்பு, நான்கு வர்ணத்தைச் சேர்ந்தவர்களின் படைப்பு, ருத்ரனின் வரலாறு, தக்ஷயஜ்ஞம், தூர்வாச முனிவரின் கதை, லக்ஷ்மிதேவி மஹா விஷ்ணுவைப் பிரிந்து செல்லுதல், தேவ அசுரர்கள் மோதல், பாற்கடலைக் கடைதல், அதிலிருந்து அதிசயமான பொருள்கள் தோன்றுதல், மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றி மீண்டும் பகவானை அடைதல், மோஹினி அவதாரம், துருவ சரித்திரம், ப்ரஹ்லாத சரித்ரம், சூரியன் சந்திரன் உள்ளிட்ட நவக்ரஹங்களின் வரலாறு, மன்மந்த்ரங்களின் விளக்கம், நான்கு ஆச்ரமங்கள், வேள்விகள், சடங்குகள், மநு, இக்ஷ்வாகு போன்ற வம்சங்களின் மரபு, மற்றும் வரலாறு, சமந்தக மணியின் கதை, கண்ணனின் பால லீலைகள், கம்ஸன், சிசுபாலன், ருக்மி, ருக்மிணி, பாரிஜாத மலர், புண்ட்ரகன் ஆகியோரின் வரலாறு, கம்ஸனின் அழிவு, கண்ணன் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளல், யாதவர்களின் அழிவு, ப்ரளயம், கலியுகத்தின் தொடக்கம், ஆகியவற்றைக் குறித்த விரிவான விளக்கங்கள், ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் காணப் படுகின்றன.

மேலும் இந்தப் புராணம், ‘புராணரத்னம்’ என்று வழங்கப்படுகிறது. தத்துவங்களை உள்ளபடி எடுத்துரைப் பதால் இந்தப் புராணத்தை மிகப்பெரிய சான்றாதாரமாகக் கொண்டனர் நம் ஆசார்யர்கள்.

தத்த்வேந யஶ்சித3 சிதீ3ஶ்வரதத்ஸ்வபா4வ
போ4கா3பவர்க்க3 தது3பாயக3தீருதா3ர: I
ஸந்த3ர்ஶயந் நிரமிமீத புராணரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய II (ஸ்தோத்ரரத்னம் - 4)

உதாரரான எந்தப் பராஶரர், சித்து, அசித்து, ஈஶ்வரன் என்னும் தத்வத்ரயம், அவற்றின் ஸ்வபாவங்கள், (இவ்வுல கத்து) போகங்கள், மோக்ஷம், போகமோக்ஷஸாதனங்கள், ஜீவன் செல்லும் கதிகள் ஆகிய இவைகளை, உள்ளபடி நன்கு விளக்கிக் கொண்டு, புராணங்களுள் மேலான ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அருளினாரோ, அப்படிப்பட்ட, ரிஷிஶ்ரேஷ் டரான, பராஶரருக்கு, நமஸ்காரம்.

என்று ஸ்ரீஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அருளிச் செய்த பாராஶர ரிஷியின் பெருமையைக் கொண்டாடுகிறார்.

2. நாரத புராணம்:- இந்த புராணம், நாரதரால் ஸனத் குமாரருக்கு சொல்லப்பட்டதாகும். இந்தப் புராணத்தில் காணப்படும் விஷயங்கள்:- பூகோள சாஸ்த்ரம், ம்ருகண்டு மார்க்கண்டேயர், கங்கை ஆகியோரின் சரித்திரம், பகீரதனின் தவம், கங்கை பூமிக்கு இறங்கியது, அதிதியின் தவம், மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரம் ஆகியவை.

ஏகாதசி விரதம், தர்சபூர்ணமாச விரதம், ஹரி பஞ்சகம், போன்ற விரதங்களும், வர்ணாச்ரம தர்மங்களும், இறுதிச் சடங்குகளும், யமனின் இருப்பிடம் பற்றிய குறிப்பும், தேவமாலி, சுமாலி ஆகியோரின் வரலாறும், யுகங்கள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

3. வாமன புராணம்:- புலஸ்தியர் என்னும் ரிஷி, நாரதருக்கு, பகவானின் வாமன அவதாரத்தை வர்ணிப்பது இந்தப் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நன்னடத்தையும், சமயப்பற்றும், பாவச்செயல்களும், விளக்கப்பட்டுள்ளன. நர நாராயணர்கள், துர்கை, ப்ரஹ்லாதன் ஆகியோரின் வரலாறு கஜேந்த்ர மோக்ஷம், தக்ஷயஜ்ஞம், ராசிகளின் தோற்றம், ஜம்பு த்வீபம், தர்மத்தின் பத்து பண்புகள், ஆகியவை விளக்கப் பட்டுள்ளன. மஹிஷாசுரனின் கதை, துர்க்கையின் அவதாரம், குரு வம்சம், குருக்ஷேத்ரம், வாமன அவதாரத்தின் விளக்கம், உமையவள்--சிவனின் திருமணம், கார்த்திகேயனின் பிறப்பு, பல மன்வந்த்ரங்களில் மருத்துக்களின் குணங்கள், விஷ்ணு வானவர் காலநேமியை அழித்தல், துந்து என்பவன் நடத்திய அச்வமேத யாகம், ப்ரஹ்லாதனின் தீர்த்த யாத்திரை, சரஸ்வதி ஸ்தோத்திரத்தின் பெருமை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

4. மத்ஸ்ய புராணம்:- இதில் 15,000 ச்லோகங்கள் உள்ளன. இவை 291 அத்யாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இறை வனான மஹாவிஷ்ணு தான் மத்ஸ்யாவதாரம் எடுத்தபொழுது, இதை வெளியிட்டருளினான். இதை ரோமஹர்ஷ மஹரிஷி ரிஷிகளின் நன்மையைக் கருதி நைமிசாரண்யத்தில் அவர்களுக்கு உபதேசித்து அருளினார். இந்த ரிஷியின் எண்ணப்படி, மத்ஸ்ய புராணமே மிகவும் தெய்வீகமான ஒன்றாகும்.

  மநு என்பவர், தவத்தை மேற்கொள்ள வனத்திற்குச் சென்றதிலிருந்து இந்தப் புராணம் தொடங்குகிறது. இவர், தீர்த்தமாடுகையில், ஓர் சிறிய மீன் அகப்பட்டதையும், அதை தன் கமண்டலத்தில் வைத்துக் காப்பாற்றிவர, அது மிகப்பெரியதாக வளர்ந்து, மத்ஸயாவதாரமாகி, ஜீவராசிகளை, ஓர் படகில் ஏற்றி, அந்த படகை ஓர் பாம்பால் கட்டி, தன் கொம்புடன் இணைத்து, ப்ரளயத்திலிருந்து, ஜீவராசிகளை காப்பாற்றியது விவரிக்கப்படுகிறது. இந்த படகுப் பயணத்தின்போது, மநுவிற்கும், மச்சாவதாரமாக இருந்த இறைவனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே மத்ஸ்ய புராணத்தின் பொருளாக ஆகிறது.

  இதில் காணப்படும் முக்கியமான விஷயங்கள்:- நான்முக ப்ரஹ்மனிலிருந்து தொடங்கும் படைப்பு, ப்ரஹ்ம னின் வழித் தோன்றல்கள், தக்ஷனின் வழித்தோன்றல்கள், திதியின் விரதம், மருத்துக்களின் தோற்றம், மந்வந்த்ரங்கள், ஒவ்வொரு மந்வந்த்ரத்தின் மநுவைப் பற்றிய விளக்கம், சந்திர வம்சம் மற்றும் சூரியவம்சம், தக்ஷ யஜ்ஞம், சதியின் கோபம், பார்வதியின் தோற்றம், இறுதிச் சடங்குகள், கச்சதேவயானி யயாதி, சுக்ராசார்யர், ப்ருஹஸ்பதி ஆகியோரின் கதைகள், விக்ரஹங்களை வடிவமைக்கும் கலை, பதினாறு வகைப்பட்ட தானங்கள் ஆகியவை விளக்கப்படுகின்றன.

5. கருட புராணம்:- இதில், பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் வர்ணிக்கப்படுகின்றன. ‘ஸூதர்’ என்பவர் கூறியதாக இவை அமைந்துள்ளன. இதை, முதன் முதலில் கருடன் கஶ்யப முனிக்கு இதைச் சொன்னதால், ‘கருட புராணம்’ எனப்படுகிறது. கஶ்யபர் இதை வ்யாஸ பகவானுக்குக் கூறினார்.

இந்த புராணத்தின்படி, மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 22. அவையாவன:-

1. முதல் அவதாரம்:- ஸனத்குமாரர்கள்-மிகவும் நல்லொழுக் கம் உடைய நித்ய ப்ரஹ்மசாரிகள்.

2. இரண்டாம் அவதாரம்:- வராஹ அவதாரம்- ஹிரண்யா க்ஷனிடமிருந்து பூமியைக் காப்பாற்ற எடுத்த அவதாரம்.

3. மூன்றாவது அவதாரம்:- நாரதர்-நிஷ்காம கர்மத்தின் நற்பேற்றைக் காப்பாற்ற எடுத்த அவதாரம்.

4. நான்காவது அவதாரம்:- நர-நாராயணன் - தர்மத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்த, பத்ரிகாச்ரமத்தில் தவம் மேற்கொண்ட அவதாரம்.

5. ஐந்தாவது அவதாரம்:- கபிலர்-ஸாங்க்ய சாஸ்திரத்தை அழிவிலிருந்து காப்பாற்ற, எடுத்த அவதாரம்.

6. ஆறாவது அவதாரம்:- தத்தாத்ரேய-ப்ரஹ்ம வித்யையை பரப்ப, ரிஷி அத்ரி மற்றும் அவர் மனைவி அநசூயாவின் வீட்டில் அவதரித்தது.

7. ஏழாவது அவதாரம்:- யஜ்ஞதேவ-ருசி ப்ரஜாபதி மற்றும் ஆஹுதியின் மகனாக அவதாரம்

8. எட்டாவது அவதாரம்:- ரிஷபதேவ-ரிஷி நாபி- மேருதேவியின் மகனாக அவதரித்து, க்ருஹஸ்தாச்ரமத்தின் வழிமுறைகளை ஏற்படுத்த எடுத்த அவதாரம்.

9. ஒன்பதாவது அவதாரம்:- ப்ருது-பசு உருவெடுத்து, பூமியிலிருந்து தானியங்களையும் பருப்புகளையும் பிரித் தெடுத்த அவதாரம்.

10. பத்தாவது அவதாரம்:- மத்ஸ்ய:- வைவஸ்வத மனுவின் உயிரைக் காப்பாற்ற மீனாக அவதாரம்.

11. பதினொன்றாவது அவதாரம்:- கூர்மாவதாரம், (ஆமை வடிவம்) பாற்கடலைக் கடைகையில், மந்த்ர மலையை தன் முதுகில் தாங்கிய அவதாரம்.

12. பன்னிரண்டாவது அவதாரம்:- தன்வந்த்ரி- நோய் களைக் குணப்படுத்தும் மருந்துகளை வெளியிட எடுத்த அவதாரம்.

13. பதிமூன்றாவது அவதாரம்:- மயக்கும் அழகிய மோஹினி அவதாரம்.- அசுரர்களின் கையிலிருந்த அமிர் தத்தை மீட்டு தேவர்களுக்கு அளிக்க எடுத்த அவதாரம்.

14. பதினான்காவது அவதாரம்:- நரஸிம்ஹ அவதாரம்- ஹிரண்யகசிபுவை அழித்து, தன் பக்தனான, ப்ரஹ்லாதனைக் காப்பாற்ற எடுத்த அவதாரம்.

15. பதினைந்தாவது அவதாரம்:- வாமன அவதாரம் -மூன்றடி மண் கேட்டு, இரக்க குணமுள்ள அசுர அரசன் மஹாபலியின் ஆத்மாவைக் காப்பாற்ற எடுத்த அவதாரம்.

16. பதினாறாவது அவதாரம்:- பரசுராமர்-ஒழுக்கமற்ற, துஷ்டர்களான க்ஷத்ரிய அரசர்களை கொன்று அவர்கள் வம்சத்தை அழிக்க எடுத்த அவதாரம்.

17. பதினேழாவது அவதாரம்:- வ்யாஸர்-வேத அறிவை வளர்ப்பதற்காக, பராஶரருக்கும் சத்யவதிக்கும் மகனாகப் பிறந்த அவதாரம்.

18. பதினெட்டாவது அவதாரம்:- ஸ்ரீ ராமன்.

19. பத்தொன்பதாவது அவதாரம்:- ஸ்ரீகிருஷ்ணன்

20. இருபதாவது அவதாரம்:- பலராமன்

21. இருபத்தொன்றாவது அவதாரம்:- கௌதம புத்தர்

22. இருபத்திரண்டாவது அவதாரம்:-கல்கி-கலியுகத்தில் விஷ்ணுயசஸ் - சுமதி என்னும் ப்ராஹ்மண தம்பதியருக்கு மகனாக, பூமியை பாவிகளிடமிருந்து விடுவிக்க எடுக்கப் போகும் அவதாரம்.

கருட புராணம் எல்லா சாஸ்திரங்களின் ஸாரத்தை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. பகவான் விஷ்ணு, தானே இந்த புராணத்தை ப்ரஹ்மனுக்கும் சிவனுக்கும் வெளி யிட்டருளினான் எனப்படுகிறது. இதில் உள்ள கருட மந்திரம் மிகவும் சக்திவாய்ந்தது. கஶ்யப ரிஷி இதை உச்சரித்து நாகத்தின் விஷத்தால் பட்டுப்போயிருந்த மரத்தைத் துளிர்க்கச் செய்தார் எனப்படுகிறது. இதில் நவக்ரஹங்கள், சிவன், விஷ்ணு, சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி மந்திரங்கள் உள்ளன. உபநயனம் போன்ற வைபவங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய சடங்குகளும், தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட பொருள்களை தூய்மைப் படுத்துவது போன்றவைகள உள்ளன. இதில் இராமாயணமும், மஹாபாரதமும், கண்ணனின் கதைகளும், உயர்ந்த யோக சாஸ்த்ரமும் நரஸிம்ஹ ஸ்தோத்ரம், ம்ருத்யு அஷ்டக ச்லோகம் போன்றவையும், இறந்தவர்களுக்கு ஆற்றப்படவேண்டிய சடங்குகளை கிருஷ்ணன் கருடனுக்குக் கூறியதாகக் காணப் படுகிறது. மரணத்திற்குப் பிறகு ஏற்படும் அநுபவங்களும் விளக்கப்பட்டுள்ளன. பிண்ட தானத்தின் முக்கியத்வம் விவரிக்கப்பட்டுள்ளது.

6.பாகவத புராணம்:- வேத வியாஸர் வேதங்களை முறைப்படுத்திய பிறகும், மஹாபாரதத்தை இயற்றி முடித்த பின்பும், அவர் மனதில் நிம்மதியில்லை. ஏதோ ஓர் குறையிருப்பதைப் போல் உணர்ந்தார். இதை அவர் நாரத மஹரிஷியிடம் தெரிவிக்க, அவர் வியாஸரிடம் இவ்வாறு கூறினார்:- ‘‘நீங்கள் வேதங்களிலும் இதிஹாசங்களிலும் கர்மம் மற்றும் ஞான மார்க்கத்தை சிறப்பாக விரிவாக விளக்கி யிருக்கிறீர்கள். ஆனால், பாமர மக்களால் எளிதில் புரிந்துகொண்டு பின்பற்றக்கூடிய, பக்தி மார்க்கத்தை விளக்கவில்லை. இதுவே உங்கள் மனச் சுமைக்குக் காரணம்’’ என்று எடுத்துரைத்தார். நாரதரின் அறிவுரையைக் கேட்டு, வேதவ்யாஸர், இந்த கலியுகத்திற்கேற்ற பக்தி மார்க்கத்தைச் சொல்லும் புகழ் பெற்ற ஸ்ரீமத் பாகவதத்தை எழுதி அருளினார். இதுவே பாகவத புராணம்.

  இந்த ஸ்ரீமத் பாகவதத்தில், பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் வர்ணிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணாவதாரம் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் 12ஸ்கந்தங்களாகவும், 18 அத்யாயங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன. இதில் 18,000 செய்யுள்கள் உள்ளன. வியாஸர், இந்த புராணத்தை, தம் மகனான சுகப்ரஹ்ம ரிஷிக்குக் கற்றுத் தந்தார். சுகர் இதை பரீக்ஷித் மன்னருக்கு ஏழு நாள்களில் கூறி முடித்தார். ‘சமீகா என்னும் முனிவரின் சாபத்தால் ஏழு நாள்களுக்குள் மரணத்தைச் சந்திக்க, இருந்த பரீக்ஷித் மஹாராஜன்’ அந்த ஏழு நாள்களில் இந்தப் புராணத்தைக் கேட்டு முடித்தான். அர்ஜுனனின் மகனான அபிமன்யுவின் மகனே இந்த பரீக்ஷித் மஹாராஜன். இவர் ஸ்ரீமத்பாகவதத்தைக் கேட்கையில், கூடியிருந்த சபையில் ஸூதர் என்னும் ரிஷியும் இருந்தார். அவர் இதை பிற்காலத்தில் நைமிசாரண்யத்தில் பல ரிஷிகள் பயனடையும் வண்ணம் உபதேசித்து அருளினார்.

இ) ப்ரஹ்ம புராணங்கள்

1. ப்ரஹ்ம புராணம்:- இந்த புராணத்தைக் குறித்த அறிவு, வேத வியாஸரால் ரோம ஹர்ஷனருக்குப் புகட்டப்பட்டது. அவர் நைமிசாரண்யத்தில் பல ரிஷிகள் யாகம் நடத்திக் கொண்டிருக்கையில் அவர்களுக்குக் கற்பித்தார். முதல் முன்னம் இந்த புராணம் ப்ரஹ்ம தேவனால் தக்ஷன் மற்றும் சில ரிஷிகளுக்கு உபதேசிக்கப்பட்டது.

ரோமஹர்ஷனால் நைமிசாரண்யத்தில் ரிஷிகளுக்கு உபதேசித்த பல விஷயங்களுள் சில ப்ரஹ்மனின் படைப்பிலிருந்து தொடங்கி ஸ்வயம்பு என்கிற ஆணும் சத்ருபா என்னும் பெண்ணும் படைக்கப்பட்டது. இந்த இருவரின் வீரா. ப்ரியவ்ரதா மற்றும் துருவனின் தந்தையான உத்தானபாதன் என்ற பெயர்கொண்ட புத்ரர்கள், தக்ஷனின் 5,000 புதல்வர்கள், நாரதர் ப்ரஹ்மனின் புதல்வராகப் பிறந்தது. விஶ்வ கர்மாவின் சரிதை, சந்திர சூரிய வம்சங்கள், உலகின் பூகோளம், பூமியின் வடிவம், 12 ஆதித்யர்கள், சூரியனின் 108 பெயர்கள், இந்திரத்தும்ந்யன் மார்க்கண்டேயர், கௌதமர், கருடன், விச்வாமித்ரர், இந்திரன், குபேரன், ஹரிச்சந்திரன், பிப்பலாதர், இவர்களின் சரித்திரம், சிவன்,பிரஹ்மனின் ஐந்தாவது சிரத்தைக் கொய்தது, ஆகியவை காணப்படுகின்றன. யோகத்தைக் குறித்த கல்வியும் உள்ளது.

2. பவிஷ்ய புராணம்:- இதில் ஐந்து பகுதிகள் காணப் படுகின்றன. அவை:-

அ. படைப்பு, தேவர்களின் பெருமை, சிவன், விஷ்ணு, ப்ரஹ்மா ஆகியோரின் வழிபாடு, ஆகியவை விளக்கப் படுகின்றன.

ஆ. இரண்டு, மூன்று மற்றும் நான்காவது பகுதிகள் சிவன், விஷ்ணு மற்றும் சூரியனின் பெருமை பேசப்படுகிறது. இந்தப் புராணம், ‘‘பவிஷ்ய புராணம்’’ என்று பெயர் பெற்றிருப்பதால், இதில் எதிர்காலத்தில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. அவை ஆதாம், ஏவாள், நோவாவின் படகு, ஸம்ஸ்க்ருத மொழியின் தொய்வு, மற்ற மொழிகளின் தோற்றம், புத்தனின் தோற்றம், ஆசார்யர்களின் தோற்றம், அசோகன், சந்திர குப்தன் போன்ற அரசர்களின் தோற்றம், ஜயதேவர், சைதன்யர் போன்ற சாதுக்களின் தோற்றம், பாரத நாட்டை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் ஆகியவை காணப்படுகின்றன.

இ. ஐந்தாம் பகுதியில், சூரிய வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள், சொர்க்கத்தின் வர்ணனை, சதுரங்க விளையாட்டு, ப்ரஹ்மனின் பெருமை ஆகியவை காணப்படுகின்றன. இஸ்லாமிய மதம், பௌத்தமதம், கிறிஸ்துவ மதம் ஆகியவற்றின் தோற்றம் முன்பே அறியப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழப் போகும், திகம்பரர், மத்வாசார்யர் போன்ற ஆசார்யர்களின் தோற்றமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. அக்நிபுராணம்:- இந்த புராணம் 15,000 லிருந்து 16,000 ச்லோகங்களைக் கொண்டது. நெருப்பின் தேவதை அக்நி, இதை வசிஷ்ட ரிஷிக்குச் சொன்னார். அவர் அதை வ்யாஸருக்கும், வ்யாஸர் தம் சீடரான ஸூதருக்கும், அவர் அதை சௌநக முனிவரின் தலைமையில் நைமிசாரண் யத்தில் வசித்த ரிஷிகளுக்கும் உபதேசித்தார்.

  இதில் 383 குறுகிய அத்யாயங்கள் உள்ளன. இதில் வேதம் மற்றும் உபநிஷத்துக்களின் தொகுப்பு உள்ளது. சடங்குகள் விளக்கப்படுகின்றன. இறுதி அத்யாயத்தில், ப்ரஹ்ம ஞானம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புராணம் மற்ற புராணங்களுக்கு ஓர் இணைப்பு போன்றது.

இதில் காணப்படும் பொருளடக்கத்தில், சில தலைப்புகள்:- ப்ரஹ்மத்தைப் பற்றிய சாரம், பகவான் விஷ்ணுவின் பல அவதாரங்கள், ஹரிவம்சம் மற்றும் மஹாபாரதம், படைப்பின் விளக்கம், வழிபடும் முறைகள் கோயில் நிர்மாணம், சிற்பசாஸ்த்ரம், தீர்த்தயாத்ரை, வானியல், மந்வந்த்ரங்கள், வர்ணாச்ரம தர்மம், நரகம், பாவங்கள், பரிகாரங்கள், தானத்தின் பெருமை, காயத்ரி மந்திரத்தின் வலிமை, கனவுகள். சகுனங்கள், போர் முறைகள், அரசனின் கடமைகள் குறித்து, இராமனின் கருத்து, தனுர்வேதம், சொத்து, கடன், உயில், பொய்யை கண்டறிதல், புராணங்களை செவிமடுப்பதால் ஏற்படும் நன்மை, பல்வேறு வம்சங்கள், ஆயுர்வேதம், இலக்கியம், இலக்கணம், கவிதை, இதிஹாசங் கள் எழுதும் முறை, 64 கலைகள், ப்ரளயம், யமன், நரகம், அடுத்த பிறவி, யோகம், தியானம், ப்ராணாயாமம், ப்ரஹ்மம் மற்றும் இதயத்திலுள்ள ஆத்மாவைக் குறித்த அறிவு, வாழ்வு முடியும் ஐந்து வழிகள், பரதனின் கதை, பகவத்கீதை, யமகீதை (யமனால் நசிகேதனுக்கு சொல்லப் பட்டது), அக்நி புராணத்தின் நன்மைகளை எடுத்துரைப் பதோடு, இந்தப் புராணம் நிறைவு பெறுகிறது.

4. ப்ரம்ம வைவர்த்த புராணம்:- இந்தப் புராணம் ஸூதரால், நைமிசாரண்யத்திலிருந்த ரிஷிகளுக்கு, விளக்கப்பட்டது. இதில், நான்கு பகுதிகளும், 32 அத்யாயங்களும் உள்ளன. இந்த நான்கு பகுதிகளாவன:-

அ. ப்ரம்ம காண்டம்:- அண்டத்தின் படைப்பு, நாராயண தத்துவத்தின் விளக்கம், ராதை, கோபியர்கள், கோபாலர்கள், பசு மாடுகள், மற்றும் உணர்வற்ற பொருள்களின் தோற்றம் விளக்கப்படுகிறது.

ஆ. ப்ரக்ருதி காண்டம்:- முப்பெருந்தேவியரின் பெருமை, சத்யவான் சாவித்ரி கதை, இராமாயண கதைகள், துர்வாசர் இந்திரனை சபித்தது, லக்ஷ்மியின் வழிபாடு ஆகியவை காணப்படுகின்றன.

இ. கணேச காண்டம்:- கணபதி, ஜமதக்நி, கார்த்த வீர்யார்ஜுனன், மற்றும் பரசுராமரின் பெருமை பேசப்படுகிறது.

ஈ. ஸ்ரீகிருஷ்ண காண்டம்:- கண்ணனின் லீலைகள் மிக விரிவாக வர்ணிக்கப்படுகின்றன.

5. ப்ரஹ்மாண்ட புராணம்:- இந்தப் புராணம், முதலில் வாயு பகவானால் வேத வியாஸருக்கு உபதேசிக்கப் பட்டது. வ்யாஸர் இதை ஸூதருக்குக் கற்பித்தார். ஸூதர் இதை யக்ஷக்ஷேத்ரம் என்னும் இடத்தில் பல ரிஷிகளுக்குக் கற்பித்தார். இதில் நான்கு பகுதிகள் உள்ளன. அவையாவன:- அ. ப்ரக்ரியை; ஆ. அனுஷங்கிகம் (தொடர்வது); இ. உபோதகத் (தொடக்கம்) ஈ.உபஸம்ஹாரம்.

இந்தப் புராணத்தின் பொருளடக்கத்தில் உள்ள சில தலைப்புகள்:- அண்டத்தின் படைப்பு, கல்பங்கள், யுகங்கள், மந்வந்த்ரங்கள், ஜம்பு த்வீபம், அநுத்வீபம், பரத வம்சம் போன்ற பல வம்சங்கள், ஆசார்யர்களின் தோற்றம் மற்றும் குணங்கள், கார்த்திகேயனுக்கும் பரசுராமருக்கும் இடையே மூண்ட கலகம், அண்டத்தின் அழிவு அத்யாத்ம ராமா யணத்தின் ஏழு பகுதிகள், விலைமதிப்பற்ற ரத்தினங்களின் விவரணம், சிந்தாமணியின் வர்ணனை, மோக்ஷ ஏகாதசியில் யுதிஷ்ட்டிரர் கண்ணனை வணங்குவதும், அவன் பதில்களும் காணப்படுகின்றன.

6. பாத்ம புராணம்:- 5,000 ச்லோகங்கள் கொண்ட இந்தப் புராணம், பகவான் விஷ்ணுவின் பெருமையை வர்ணிக்கிறது. இதில் ஐந்து பகுதிகள் உண்டு. அவையாவன:- அ. ஸ்ருஷ்டி காண்டம்; ஆ. பூமி காண்டம்; இ. ஸ்வர்க்க காண்டம்; ஈ. பாதாள காண்டம்; உ.உத்தர காண்டம்.

இந்தப்புராணம், முதலில் பகவான் விஷ்ணுவால் ப்ரஹ்மனுக்கு சொல்லப்பட்டது. பிற்காலத்தில் ரோம ஹர்ஷணர் தம் மகனான உக்ரச்ரவனுக்கு உபதேசிக்க (இவருக்கு ‘ஸூதன்’ என்னும் பெயருண்டு). இவர் நைமிசாரண்யத்தில் வசித்த ரிஷிகளுக்கு உபதேசித் தருளினார்.

அ. ஸ்ருஷ்டி காண்டம்:- இது பீஷ்மர் மற்றும் புலஸ்திய மஹரிஷிக்கு இடையிலான உரையாடலாக அமைந்துள்ளது. மெய்ப்பொருள் அறிவு விளக்கப்பட்டுள்ளது. இதில் ப்ரஹ்மனின் ஆயுட்காலம், கால அட்டவணை, நான்கு வர்ணங்கள், மஹாலக்ஷ்மியின் தோற்றம், தேவதைகள், அசுரர்கள், ஸர்ப்பங்கள், மருத் கணங்களின் தோற்றம், சூரிய வம்சம், ஸ்ரீராமன் சம்புகனை அழித்தது, கணேசன், கார்த்திகேயனின் தோற்றம், காயத்ரி மந்திரத்தின் பெருமை, ருத்ராக்ஷம், நெல்லிக்கனி, துளசி ஆகியவற்றின் பெருமை, சூர்ய வழிபாடு ஆகியவை காணப்படுகின்றன.

ஆ. பூமி காண்டம்:- இதில் பூமியைக் குறித்த உண்மைகள், ப்ருது, யயாதி, அஷ்ரு போன்ற அரசர்களின் வரலாறு, பலதரப்பட்ட பாவ புண்யங்கள், வைஷ்ணவத்தின் விரிவாக்கம், அறிவு நிரம்பிய கிளியாகிய குஞ்சலின் கதை ஆகியவை உள்ளன.

இ. ஸ்வர்க்க காண்டம்:- படைப்பின் ஒழுங்கமைவு, புனித ஸ்தலங்கள் மற்றும் ஆறுகள் குறித்த வர்ணனை- பாரதவர்ஷம் மற்றும் நர்மதை நதி, பகவான் விஷ்ணுவின் பெருமை, ஸ்ரீராமர் இலங்கையிலிருந்து திரும்பியது, பரத கண்டத்தின் பூகோள பரப்பளவு ஆகியவை உள்ளன.

ஈ. பாதாள காண்டம்:- ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் குறித்த கதைகள், இராவணன் கதை, லக்ஷ்மணன் சீதையை அசோக வனத்திலிருந்து அழைத்து வருவது, சீதையும் இராமனும் அயோத்திக்குத் திரும்பியது அச்வமேதயாகம், லவகுசலர்களின் வரலாறு ஆகியவை இடம் பெற்றுள்ளன.

உ. உத்தர காண்டம்:- சிவபெருமானும் பார்வதி தேவியும் உரையாடும் பாணியில் உள்ள பகுதியில் மதம் சார்பான மெய்பொருள் அறிவு காணப்படுகிறது. பகவான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள், ஸ்ரீராமனின் நூறு நாமங்கள், பாகீரதி நதி கீழிறங்குதல், வைஷ்ணவரின் பண்புகள், பகவான் விஷ்ணுவின் இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தின் வர்ணனை, பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள், ஸ்ரீராமன், ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள், ஜராசந்தனின் கதை, ருக்மிணி ஸ்வயம்வரம், ஸ்ரீ க்ருஷ்ணனின் பட்டமஹிஷிகள், அநிருத்தன் உஷை ஆகியோரின் வரலாறு, யாதவ குலத்தின் சரிவு, விஷ்ணு வழிபாட்டில் உள்ள சடங்குகள், பகவான் விஷ்ணு மிக உயர்ந்த இறைவன் எனப்படுவது மற்றும் பரசுராமரின் வரலாறு இந்தப் பகுதியில் அடக்கம்.

ஈ) சைவ புராணங்கள்

1. சிவ புராணம்:- இந்தப் புராணம் முதலில் ப்ரஹ்ம னால் தன் மகன் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது. பிறகு ரோமஹர்ஷனரால் (லோமஹர்ஷனர் என்றும் கூறுவதுண்டு) நைமிசாரண்யத்தில், பல ரிஷிகளுக்குப் போதிக்கப்பட்டது. இந்தப் புராணம் ஆறு ஸம்ஹிதைகள் அல்லது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவையாவன:- அ. ஞான ஸம்ஹிதை- 78 அத்யாயங் கள்; ஆ.வித்யேச்வர ஸம்ஹிதை-16 அத்யாயங்கள்; இ.கைலாச ஸம்ஹிதை-12 அத்யாயங்கள்; ஈ. ஸனத்குமார ஸம்ஹிதை: 59 அத்யாயங்கள்; உ. வயவிய ஸம்ஹிதை- 30 அத்யாயங்கள்; ஊ. தர்ம ஸம்ஹிதை- 65 அத்யாயங்கள்.

இந்தப் புராணம், பகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து நான்முக ப்ரஹ்மன் தோன்றுவதிலிருந்து தொடங்குகிறது. இதன் பிறகு படைப்பு, ருத்ரனின் தோற்றம், அரக்கனான தாரகாசுரனின் வரலாறு, ருத்ரன் மன்மதனை எரித்தது, பார்வதியின் தவம், சிவ-பார்வதி திருமணம், தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் ஆக்கப்பட்ட திரிபுரத்தின் வர்ணனை, கணேசன் கார்த்திகேயனின் பிறப்பு, சிவன் லிங்கமாக தோற்றமளிப்பது, பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்கள், நந்தியின் வரலாறு, அர்ஜுனன் பாசுபதாஸ் தரத்தைப் பெறுவது, சிவனின் ஆயிரம் பெயர்கள், ஸுதர்சன சக்ரம், சிவராத்ரி விரதத்தின் பெருமை, சந்திரசேகரன் மற்றும் நீலகண்டன், சிவன் சாம்பலை தரிப்பது, கால அளவுகள், தக்ஷ யஜ்ஞம், உபமன்யுவின் கதை, ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபுவின் கதை, யமனின் கதை, பரசுராமனின் வரலாறு, பூகோளம், வானியல், ஒவ்வொரு கல்பத்தின் 14 மந்வந்திரங்கள், ஒவ்வொரு மந்வந்திரத்தின் தேவதை, ரிஷிகள், மற்றும் வைவஸ்வத மநுவின் தோற்றம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

2. லிங்க புராணம்:- இந்த புராணம் ரோம ஹர்ஷனரால் ரிஷிகளுக்கு வெளியிடப்பட்டது. அண்டத்தின் படைப்பை விவரிப்பதோடு தொடங்கும் இந்தப் புராணத்தில், காணப்படும் சில விஷயங்கள்:- யோகம், முக்கியமாக சிவனால் போதிக்கப்பட்ட பாசுபதயோகம், 28 கலியுகங்களில் பாசுபதயோகத்தை கற்பிப்பதற்கு சிவனின் பல்வேறு அவதாரங்கள், இந்த அவதாரங்களில் சிவனின் நான்கு சீடர்கள், பாசுபத யோகத்தின் அமைப்பு, சிவன் லிங்கமாக வணங்கப் படுவதற்கான காரணங்கள், பகவான் விஷ்ணுவிற்கும் ப்ரஹ்மனுக்கும் சிவன் காயத்ரி மந்திரத்தைக் கற்பித்தது, தேவதாரு காடுகள், புவியியல், வானவியல், துருவனின் கதை, தக்ஷனின் மரபு, பராசரர் திரிபுரம், மரணம் ஸம்பவிக்கப் போவதை உணர்த்தும் சகுனங்கள், வாரணாசி நகரம், ஹிரண்யாக்ஷன் மற்றும் வராகம் ஹிரண்யகசிபு மற்றும் நரஸிம்ஹம், சிவனின் ஆயிரம் நாமங்கள், தக்ஷ யஜ்ஞம், பார்வதியின் தவம், தாரகாசுரன் மற்றும் உபமன்யு குறித்த விவரங்கள்.

3. கூர்ம புராணம்:- பகவான் விஷ்ணு, தான் கூர்மாவதாரம் எடுக்கையில், இந்தப் புராணத்தை நாரதருக்கு உபதேசித்தாகக் கூறப்படுகிறது. நாரதர் ஸூதருக்கு உபதேசிக்க, அவர் ரிஷிகளுக்கு உபதேசித்தார். முதன் முதலில் இந்த புராணம் நான்கு பாகங்களாக இருந்தது. அவை:- அ. ப்ராமி ஸம்ஹிதை, ஆ. பகவதி ஸம்ஹிதை; இ. கௌரி ஸம்ஹிதை; ஈ. வைஷ்ணவி ஸம்ஹிதை. ஆனால், தற்காலத்தில் பூர்வ உத்தர பாகங்களில் ப்ராமி ஸம்ஹிதை மட்டுமே பழக்கத்தில் உள்ளது.

பூர்வ பாகத்தில் இந்த்ரத்யும்னனின் கதை, கூர்ம புராணத்தின் வர்ணனை, வர்ணாச்ரமதர்மம், புவியியல், அவதாரங்கள், இறைவர்களின் அறிவுரை, மநுக்களின் வர்ணனை, தக்ஷ யஜ்ஞம், வாமனாவதாரம், இக்ஷ்வாகு, புரூரவ வம்சங்கள், இராம கிருஷ்ண அவதாரங்கள், யுகங்கள், வாரணாசியின் பெருமை, லிங்கங்கள், ப்ரயாகை மற்றும் யமுனை ஆகியவற்றின் வர்ணனை உள்ளது.

உத்தர பாகத்தில் யோகம் சிவனின் ருத்ரதாண்டவம் அஷ்டாங்கயோகம் குறித்த மெய்யுணர்வான அறிவு, ப்ரஹ்மச்சாரிகளின் கடமைகள், உணவு கட்டுப்பாடு, சடங்குகள், வானப்ரஸ்தர்கள் மற்றும் சந்யாசிகளின் கடமைகள், மது அருந்துவதின் தீமை, அதற்கான பரிகாரம், யாத்ர ஸ்தலங்களின் பெருமை ஆகியவை உள்ளன. இதில், பாற்கடலை கடைதல், லக்ஷ்மியின் தோற்றம், மது கைடபர்களின் அழிவு, சந்த்ர சூரிய வம்சங்கள், 7-வது மன்மந்த்ரத்தின் வரலாறு, பார்வதியின் 1000 நாமங்கள், வேத வ்யாசரின் 28 நாமங்கள், சிவனின் 28 அவதாரங்கள், ஈச்வர கீதை, காயத்ரி மந்திரத்தின் உச்சரிப்பு, மாய சீதையின் கதை, கால பைரவர், நந்தி ஆகிய விஷயங்கள் தொடர்பான குறிப்புகளும் உள்ளன.

4. மார்க்கண்டேய புராணம்:- இதில் ஜைமிநியின் ஐயங்களை மார்க்கண்டேயர் நீக்கி வைக்கிறார். இதுவே மிக குறுகிய மஹாபுராணம். இது ஜைமிநியின் வினாக்களுக்கு மார்க்கண்டேயர் பதிலளிக்கும் பாணியில் அமைந்துள்ளது. ஜைமிநியின் வினாக்கள்:- அ. மிக உயர்ந்ததான அண்டத்தின் தோற்றம், நிலைப்பு, மற்றும் அழிவிற்குக் காரணமான பகவான் எதற்காக மனித வடிவில் அவதாரம் செய்கிறான்? ஆ. த்ரௌபதி எவ்வாறு பாண்டவர்களின் மனைவியானாள்? இ. த்ரௌபதியின் பிள்ளைகள் இறந்தது எவ்வாறு?

மார்க்கண்டேயர் மஹாபாரதத்தை நன்கு அறிந்திருந்த பறவைகளை அடைந்து உபதேசம் பெறும்படி ஜைமிநியை அனுப்பியதும், அந்த பறவைகளின் வரலாறும், அவை ஜைமிநியின் ஐயங்களைத் தெளிய வைத்ததும் காணப் படுகின்றன.

ஜைமிநியின் கேள்விகளுக்கு, விந்திய மலையில் வசித்த, அறிவாளியான பறவை அளித்த பதில்கள்.

1. மிக உயர்ந்தவனும் பிறப்பற்றவனுமான பகவான் மஹாவிஷ்ணு, தன் மக்களாகிய மனிதர்களின் குறைகளைத் தீர்க்க யுகந்தோறும் அவதாரம் செய்கிறான். தர்மம் குலைந்து அதர்மம் தலை தூக்கும் பொழுது, மனிதர்களின் துன்பத்தைக் களைய அவன் மனித வடிவத்தில் தோன்றுகிறான். சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் அவன் தன் பிள்ளைகளான மனிதர்களின் பிள்ளையாகப் பிறக்கிறான். அவன் அவதாரம் கர்ம வசப்பட்டதல்ல. அவன் தன் இச்சையால், தன் மாயையால் எடுத்துக் கொள்ளும் பிறவிகளே, அவன் அவதாரங்கள்!

2. த்வஷ்டா என்னும் ரிஷியின் மகன் த்ரிசிரன் என்பவன். இவன் தன்னை தலைகீழாகத் தொங்கவிட்டுக் கொண்டு, கடுமையான தவத்தில் ஈடுபட்டான். இந்த தவத்தின் வீர்யம் இந்திரனை அச்சம் கொள்ள வைத்தது. எனவே, த்ரிசிரனை கொன்று விட்டான். இந்த அடாத செயலினால், இந்திரன் தன் வலிமையின் ஓர் பகுதியை இழந்தான். இது தர்ம தேவதையால் க்ரஹிக்கப்பட்டது. தன் புதல்வனின் மரணத்தால் கோபம் அடைந்த த்வஷ்டா, தன் உடலிலிருந்து ஓர் முடியைப் பிடுங்கி அதிலிருந்து வ்ருத்ரா என்னும் அரக்கனை உருவாக்கி, இந்திரனைக் கொல்ல முயன்றார். இந்திரன் இந்த அரக்கனுடன் சமாதானம் செய்து கொள்வதுபோல் நடித்து, அவன் அயர்ந்திருந்த நேரத்தில் அவனைக் கொன்றுவிட்டான். இதனால் இந்திரன் தன் வலிமையின் மற்றும் ஓர் பகுதியை இழந்தான். இது வாயு பகவானால் எடுத்துக் கொள்ளப்பட்டது. கௌதம முனிவரின் ஆச்ரமத்திற்குச் சென்று, அவரைப் போல உருவம் தரித்து, அவர் மனைவியான அகலிகையை அடைய முயன்று, கௌதம முனிவரின் சாபத்திற்கு உள்ளாகி, மேலும் தன் வலிமையை இழந்தான், இந்திரன் வலிமை இந்த முறை அச்வினி குமாரர்களால் ஸ்வீகரிக்கப்பட்டது.

இறைவன் உலகில் அவதாரம் செய்கையில், தேவர் களும் இப்பூவுலகில் தோன்றுகிறார்கள். இந்த நியதியின்படி, ஐந்து தேவர்கள் குந்தியின் ஐந்து புதல்வர்களாகத் தோன்றினார்கள். இந்திரனிடமிருந்து பறிபோன வலிமையில் ஐந்து பங்குகள் பாண்டவர்களானார்கள்.

தர்ம தேவதை ஸ்வீகரித்த பங்கிலிருந்து-யுதிஷ்டிரன்

வாயு பகவானிடமிருந்து - பீமன்

இந்திரனின் சொந்த வலிமையிலிருந்து-அர்ஜுனன்

அச்வினி குமாரர்கள் வலிமையிலிருந்து-நகுலன் மற்றும் சகாதேவன்.

இந்திரனின் மனைவி சசி:- துருபத மஹாராஜா செய்த வேள்வியிலிருந்து அவர் மகளான த்ரௌபதியாகத் தோன்றினாள்.

பாண்டவர்கள் ஐவரும் இந்திரனின் அம்சமாகையால், அவள் ஐவரையும் மணக்க நேரிட்டது.

  3.விச்வாமித்ரர், ஹரிச்சந்திரனின் ராஜ்ஜியத்தைப் பிடுங்கிக் கொண்டதோடல்லாமல், அவனையும் அவன் குடும்பத் தையும் அவ்விடமிருந்து துரத்தினார். ஹரிசந்திரன் மனைவி மிகுந்த சோகத்துடன் மெதுவாக வெளியேறிக் கொண்டிருக் கையில், விச்வாமித்ரர் அவளை தடியால் அடித்தார். இந்த செயல் ஐந்து விச்வதேவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. விச்வாமித்ரரை நோக்கி, ‘‘வெட்கம் வெட்கம்’’ என்று நிந்தித்தார்கள். உடனே கோபம் கொண்ட விச்வாமித்ரர் அவர்களை மனிதர்களாகப் பிறக்கும்படி சபித்தார். அவர்கள் அவரைப் பணிந்து கருணைக்காக மன்றாடியபொழுது, அவர் சாந்தமடைந்து, அவர்கள் ஐவரும் மனிதர்களாகப் பிறந்தாலும், சம்சார பந்தத்தில் ஈடுபடமாட்டார்கள் என்று வாக்களித்தார். இந்த ஐந்து விச்வதேவர்களே, த்ரௌபதியின் ஐந்து புதல்வர்களாக உப பாண்டவர்களாகப் பிறந்து, உறங்கிக் கொண்டிருக் கையிலேயே அச்வத்தாமாவால் கொல்லப் பட்டார்கள்.

  விபுல் அச்வனின் கதை, சுக்ரிஷ் மற்றும் தும்புருவின் கதை, பகவான் விஷ்ணுவின் திவ்யமான லீலைகள், நாராயணன் வாசுதேவன், ப்ரத்யும்னன், சங்கர்ஷணன், மற்றும் அநிருத்தன் வடிவெடுப்பது விளக்கப்படுகிறது. பாண்டவர் களின் தோற்றம், இந்திரன் மனைவியாகிய சுசி, த்ரௌபதி யாகப் பிறப்பது, பலராமர், சுகரை கொன்று விட்டு அந்த பாவத்திற்காக பரிகாரம் தேடுவது, ஹரிச்சந்திரனின் முழுமையான சரித்திரம், ஐந்து திக்பாலகர்களை விச்வாமித்ரர் சபித்தல், அவர்கள் த்ரௌபதியின் புதல்வர்களாகப் பிறப்பது, வசிஷ்டர் விச்வாமித்ரரை கொக்காக மாறும்படி சபித்தல், விச்வாமித்ரர் வசிஷ்டரை குருவியாக மாறும்படி சபித்தல், இவ்விருவரும் தம்முடைய பழைய வடிவைப் பெற பிரமன் உதவிபுரிதல், ஸ்வர்க்கம், நரகம், மறுபிறப்புகள் ஆகியவற்றின் விளக்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

5. ஸ்கந்த புராணம்:- இதுவே மிகப்பெரிய புராணம். இதில் ஏழு பகுதிகள் உள்ளன. அவை:- மஹேச்வரன், வைஷ்ணவம். ப்ரம்ம, காசி, அவந்தி க்ஷேத்ரம், நகர் மற்றும் ப்ரபாச காண்டங்கள். இந்த புராணம் முதலில் சிவபெருமானால் பார்வதிக்கு சொல்லப்பட்டது. பின்பு ஸ்கந்தனுக்கும் நந்திக்கும் சொல்லப்பட்டது. நந்தி, இதை சனகர் போன்ற ரிஷிகளுக்கு உபதேசிக்க அவர் வ்யாஸருக்கு உபதேசித்திட, வ்யாஸர் நைமிசாரண்யத்தில் ரிஷிகளுக்குக் கூறினார். இதன் முக்கிய அம்சம், ஸ்கந்தன் அதாவது, கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் சுப்ரமண்யனின் தோற்றமும், அவன் தேவ சேனாதிபதியாகி தாரகாசுரனை அழித்ததும் விவரிக்கப்பட்டுள்ளது.

அ. மஹேஶ்வர காண்டம்:- தக்ஷ யஜ்ஞம், பாற் கடலைக் கடைதல், சப்த ரிஷிகளின் வருகை, கார்த்தி கேயனின் பிறப்பு, அவன் தாரகாசுரனை அழித்தல், சிவராத்ரி விரதத்தின் மகிமை, சிவனை வழிபடும் முறைகள், அருணாசல சிவலிங்கத்தின் பெருமை, அண்டத்தின் படைப்பாளனாக சிவன், அருணாலேச்வரர் பார்வதிக்கு அருள் புரிதல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

  ஆ. வைஷ்ணவ காண்டம்:- வராஹ மந்திரம், பத்மாவதியின் தோற்றம், மஹாவிஷ்ணு---பத்மாவதி திருமணம், பரீக்ஷித் மஹாராஜாவின் கதை, திருமலையில் உள்ள தீர்த்தங்களின் பெருமை, அங்குள்ள 180 தீர்த்தங்கள். முக்கியமானவையான, ஸ்வாமி புஷ்கரிணி, ஆகாச கங்கை, பாபவிநாசம், பாண்டு தீர்த்தம், குமாரதாரா தீர்த்தம், தும்புரு தீர்த்தம் ஆகியவை முக்தியளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மார்க்கண்டேய குண்டம், புருஷோத்தம தீர்த்தம் நீலகண்டனின் கோயில், இதன் அருகில் நாரதர் நரஸிம்ஹனின் விக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்தது ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. பூரி ஜகன்னாதர் ரத யாத்ரைக்கு மர சிற்பங்கள் செய்து ப்ரதிஷ்டை செய்வது விளக்கப்பட்டுள்ளது. பத்ரிகாச்ரமத்தின் பெருமை, கார்த்திகை மாதத்தின் சிறப்பு, மார்கழி மாத நீராடலின் பெருமை ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இ. ப்ரஹ்ம காண்டம்:- இதில் ராமேஶ்வர தீர்த்த பெருமை, சேது பந்தனம், ராமேச்வரலிங்கம், சாதுர்மாஸ்ய விரதத்தின் சிறப்பு, க்ஷோடச உபசாரம் செய்யும் முறை, ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

ஈ. காசி காண்டம்:- விந்தியமலைத் தொடர் சூரியனின் பாதையில் குறுக்கிட்டதும் அகத்தியர் அதன் உயரத்தைக் குறைத்ததும், காசியின் பெருமையை கார்த்தி கேயன் வர்ணித்ததும் காணப்படுகிறது.

உ. அவந்தி க்ஷேத்ர காண்டம்:- மஹாகால தீர்த்தத்தின் பெருமை, உஜ்ஜயினின் பல பெயர்கள், அவந்திபுரத்தின் அழகு, நர்மதை நதி கீழிறங்கியது, அரசர் மநுவிற்கு நாரதனின் வரம், ஜமதக்னி முனிவர் காம தேனுவைப் பெற்றது, மற்றும் நரகத்தின் வர்ணனை இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளன.

ஊ. நகர காண்டம்:- வசிஷ்டரின் மகன் திரிசங்குவை சபித்ததும், விச்வாமித்ரர் அவனுக்காக திரிசங்கு சொர்க்கத்தை அமைத்ததும் காணப்படுகிறது.

எ. ப்ரபாச காண்டம்:- புராண உப புராணங்களின் வர்ணனை, ப்ரபாச தீர்த்தம், சோமநாதலிங்கம் மற்றும் சித்தேஶ்வர லிங்கங்களின் வழிபாடு, அவற்றின் பல பெயர்கள், தலைமுடியை மழித்துக்கொள்வதின் பொருள், ப்ரபாச தீர்த்தத்திலிருந்து சரஸ்வதியின் தோற்றம், த்வாரகா மாஹாத்மியம், அதன் புனிதத் தன்மை, ரிஷிகள் ப்ரஹ்லாத னிடம் கேட்ட கேள்விகள் ஆகியவை உள்ளன.

6. வராஹ புராணம்:- இதில், பகவான் விஷ்ணு வராஹமாக அவதாரமெடுத்து, பூமியைக் காப்பாற்றியது விளக்கப்பட்டுள்ளது. பகவான் விஷ்ணுவை பூமிதேவி துதி செய்வது இதில் உள்ளது. அண்டத்தின் தோற்றம், ருத்ரன், ஸனத்குமாரன் மற்றும் மரீசியின் தோற்றம் ஆகியவை காணப்படுகின்றன.

இதில் காணப்படும் முக்கியமான சில தலைப்பு கள்:- அக்நியின் தோற்றம், வைஷ்ணவத்தின் தோற்றம், மஹிஷாசுரனின் வதம், பன்னிரண்டு வகையான குற்றங்கள் அவற்றிலிருந்து விடுபட்டு முக்தியடைதல் விஷ்ணுவின் வழிபாடு ஸனாதன தர்மம், மாயை, சண்டாளன் மற்றும் ப்ரம்ம ராக்ஷசனுக்கு இடையிலான உரையாடல், கோமுகம், பத்ரிகாச்ரமம், மதுரா, சாளக்ராமம், பஞ்சாரண்ய க்ஷேத்ரம் ஆகியவற்றின் பெருமை, ச்ராத்தத்தின் தோற்றம், பிண்ட சங்கல்பங்கள், யமனின் ஆஸ்தானம், நரகம், யமதூதர்கள், சித்ரகுப்தன் நற்கர்மம் மற்றும் தீய கர்மங்களின் பலன், அதிலிருந்து விடுபடும் முறைகள், பகவான் விஷ்ணுவை அறியும் வழிமுறைகள், கௌதம ரிஷி, ப்ரக்ருதி மற்றும் புருஷன், பூகோளம், ஜம்பு த்வீபம், சக் த்வீபம், குஷ த்வீபம், க்ரௌஞ்ச த்வீபம், சால்மலி த்வீபம் ஆகியவை வர்ணிக்கப்பட்டுள்ளன. பல திவ்யக்ஷேத்ரங்கள் மற்றும் தீர்த்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உ) உப புராணங்கள்

  உப புராணங்களின் பெயர்கள்:- 1. ஸனத்குமாரம், 2. நரஸிம்ஹம், ப்ருஹந்நாரதீய, சிவ தர்மம், துர்வாசம், கபிலம், வாமனம், பார்கவம், வருணம், காளிக புராண, ஸாம்பம், நந்திகேஶ்வரம், சூர்யம், பராசரம், வசிஷ்டம், தேவி பகவதி, கணேஷம், மற்றும் ஹம்ஸம். (சில புத்தகங்களில் இந்த உபபுராணங்களின் பெயர்கள் மாறுபட்டு காணப்படுகின்றன.)

ஊ) மன்வந்த்ரங்கள்

  புராணங்களில் பல இடங்களில் மன்வந்தரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை என்ன என்பதை அறிந்து கொள்ளுதல் உபயோகமானது. மனிதர்களாகிய நம் வாழ்க்கையில், காலத்தின் அலகு களானவை, நொடி, நிமிடம், மணி, பகல், இரவு, வாரம், மாதம், வருடம் போன்றவை. மன்வந்த்ரம் என்பது படைப்பு, நிலைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றின் கால அளவை நிர்ணயம் செய்யும் ப்ரஹ்மாண்டமான அலகுகள். இவை புரிந்து கொள்வதற்கு எளிதாக ‘மனித வருடம்’ என்னும் அலகோடு ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது.

யுகங்கள் -4 - அவையாவன:-

அ. சத்ய யுகம்-17,28,000 வருடங்கள் (க்ருத யுகம்)

ஆ. த்ரேதாயுகம்-12,96,000 வருடங்கள்

இ. த்வாபர யுகம்-8,64,000 வருடங்கள்

ஈ. கலியுகம்-4,32,000 வருடங்கள்.

இவை நான்கும் சேர்ந்து ஓர் மஹாயுகம். ஓர் மஹாயுகம் தேவர்களின் 12,000 ஆண்டுகளுக்கும் மனிதர்களின் 43, 20,000 வருடங்களுக்கும் சமம்.

71 மஹாயுகங்கள்-ஒருமந்வந்த்ரம்

14 மந்வந்த்ரங்கள்-ஒரு கல்பம்.

ஒரு கல்பம்-ப்ரஹ்மதேவனின் ஒரு நாள்!

ஒவ்வொரு மந்வந்த்ரமும், ஓர் மநுவால் ஆட்சி செய்யப்படுகிறது. இப்பொழுது நடைபெற்றுக் கொண்டி ருக்கும் கல்பத்தில் 6 மந்வந்த்ரங்கள் கழிந்து விட்டன. நடைபெற்றுக் கொண்டிருப்பது 7ஆவது மந்வந்த்ரம். கடந்த ஆறு மந்வந்த்ரங்களின் மநுக்கள் இவர்களாவர்:- ஸ்வாயம்பு, ஸ்வாரோஸிஷ, உத்தம, தாமச, ரைவத, மற்றும் சாக்ஷுஷ. வைவஸ்வதர் ஏழாவது மநுவாவார். ஒவ்வோர் மந்வந்த்ரத் திற்கும், மநுக்களும் தேவதைகளும் இந்திரர்களும் மாறுவார்கள்.

இப்பொழுது நாம் வசிக்கும் அண்டத்தின் வயது-184,03,20,000 வருடங்கள். 71 மஹாயுகங்களில் இது 28ஆவது மஹாயுகம். நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலியுகத்தில், 5,117 வருடங்கள் கழிந்து விட்டன. இனி மீதம் இருப்பது 4,26,883 வருடங்கள். நாம் வசிக்கும் அண்டம் படைக்கப்பட்டு, 196,08,52,076 வருடங்கள் ஆகியுள்ளன. (ஏறத்தாழ 2 பில்லியன் வருடங்கள்) ஏழாவது ப்ரளயம் (நாம் வசிக்கும் அண்டத்தின் அழிவு) 17,61,87,029 வருடங் களுக்குப் பிறகு ஏற்படும்.

விஞ்ஞான அறிவுடன் காணப்படும் ஒற்றுமை:-

அ. இந்த ப்ரபஞ்சம் 2 பில்லியன் வருடங்களுக்கு முன், விரிவடையத் தொடங்கியது (அண்டமும் டாக்டர் ஐன்ஸ்டீ னும்-பூமியின் தோற்றம் குறித்த பட்டியல்-பேராசிரியர் ஜார்ஜ்காமோ)

ஆ. கடல் நீரில் உப்பின் சதவிகிதம் 3 (3%) இதற்காக, ஆறுகள் 300 மில்லியன் வருடங்கள் உழைத்திருக்க வேண்டும்!

இ. மில்கிவே எனப்படும் நக்ஷத்திர மண்டலத்தை அமைக்கும் தாரகைகள், 300 பில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியவை.

ஈ. நிலையான மாற்றமில்லாத ப்ரபஞ்சம் கிடையாது.

உ. மெய்ஞானிகளின் கணிப்பிற்கும், விஞ்ஞானிகளின் ஆய்விற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.*

11

ஆகமங்கள்

ஆகமம் என்றால் என்ன?

ஆகமம் என்றால் ‘வாழையடி வாழையாக முன்பு இருந்தவற்றை, நிகழ்காலத்தில் இருப்பவர்களுக்கு வழங்கு வது’ என்று பொருள்படும். சடங்குகள், வேள்விகள், கோயில் அமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகியவற்றை விளக்கும் தெய்வீகத்தன்மை நிரம்பிய மந்திரங்கள், உரைநடைப் பகுதிகள் நிறைந்த ஓர் பெட்டகமே, ஆகமம். இதில், ப்ரஹ்மம், ஸகுண ப்ரஹ்மமாக வழிபடப்படும் முறைகளும், விதிகளும் உள்ளன. ஆகமங்களில் சிலவிதமான நம்பிக்கைகள், வசியம் செய்தல், மந்திரங்கள் மூலம் கெடுதி விளைவித்தல், ஆகியவையும் காணப்படுகின்றன.

அ) ஆகமத்தின் பகுதிகள்

ஆகமத்திற்கு நான்கு பகுதிகள் உண்டு. அவை:-

1. தத்வ ஞானமும் இறையுணர்வும் விளக்கப் படுகிறது. (ஜ்ஞான பாதம்).

2. மனக்கட்டுப்பாடும் யோகமும் விவரிக்கப்படுகிறது. (யோக பாதம்)

3. கோயில்கள் நிர்மாணிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் காணப்படுகின்றன. (க்ரியா பாதம்)

4. மதம் சார்பான சடங்குகள், வேள்விகள் மற்றும் பண்டிகைகள் விவரிக்கப்படுகின்றன. (சர்யா பாதம்)

ஆ. ஆகமத்தின் வகைகள்

ஆகமங்கள் மூன்று வகைப்படும். அவை, சாக்தம், சைவம் மற்றும் வைஷ்ணவம்.

வைஷ்ணவ ஆகமங்கள் இரண்டு வகைப்படும். அவை:- பாஞ்சராத்ர ஆகமம் மற்றும் வைகானஸ ஆகமம் ஆகியவை.

‘பாஞ்சராத்ரம்’ அல்லது, ‘பஞ்சராத்ரம்’ என்று அழைக்கப்படும் இந்த ஆகமம், நெடுங்காலமாக நம் நாட்டில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த வ்ருஷ்ணி அல்லது சாத்வத வம்சத்தைச் சேர்ந்தவர்களின் பரம்பரையாக வந்தது இந்த ஆகமம் எனக் கொள்ளப்படுகிறது. மஹாபாரத்திலுள்ள பீஷ்மபர்வத்தில் இந்த ‘சாத்வத’ முறையிலான வழிபாடு விவரிக்கப்பட்டுள்ளது. அதில் ‘பகவான் வாசுதேவனே வணங்கப்படத்தக்கவன்; அவனைச் சரணடைவதும் அவனுக்குத் தொண்டு செய்வதுமே, ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் வலியுறுத்தப்பட்டிருக்கும் சில விஷயங்கள்:-

1. விஷ்ணு, நாராயணன், வாசுதேவன் என்றழைக் கப்படும் இறைவன் ஒருவனையே மிக உயர்ந்த தெய்வமாக வழிபடவேண்டும்.

2. அஹிம்ஸையை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

3. மனித வாழ்வின் இலக்கு மோக்ஷம் அல்லது முக்தியை அடைவதாகும். தாழ்ந்ததான ஸ்வர்க்கலோகம் போன்றவற்றை அடைவதல்ல.

4. பல்வேறு தெய்வங்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களை வழிபடுவதிலிருந்து விலகியிருத்தல் வேண்டும்.

I. பாஞ்சராத்ரம்-பெயர் விளக்கம்

  ‘‘பாஞ்சராத்ரம்’ என்பது இவ்வாறு விளக்கப்படுகிறது:- ‘ஐந்து இரவுகளில் வடிவமைக்கப் பெற்றது’ (பாஞ்சராத்ரம் அதிக்ரிதம்) இதில் பாஞ்சராத்ரம் என்பது பலவிதமாக விளக்கப்படக்கூடும்.

1. ‘பஞ்சாணாம் ராத்ரீணாம் சமாஹார:’--- ஐந்து இரவுகளின் தொகுதி.

2) ‘பஞ்சவித4ம் ராத்ரம்’- ஐந்து விதமான இரவுகள்.

3) ‘பஞ்ச வித்3யந்தே ராத்ரய: யஸ்மிந் தத்’-ஐந்து இரவுகளில் உருவகப்படுத்தப்பட்ட கல்வி.

‘பாஞ்சராத்ரம்’ என்னும் சொல்லின் பொருளை விளக்க உதவும் சான்றாதாரங்கள், சதபத ப்ராஹ்மணம் மற்றும் மஹாபாரதத்தின் ‘‘நாராயணீய’’ பகுதியில் காணப் படுகின்றன.:-

1. சதபத ப்ராஹ்மணம்: (1-1-63)- இதில் ஐந்து இரவுகளில், ஐவருக்கு போதிக்கப்பட்டது விளக்கப்படுகிறது.

2. மஹாபாரதம் (12-338.4)- இதில் ‘பாஞ்சராத்ரிகா’ என்பது நாராயணனின் அடைமொழியாக பயன்படுத்தப் பட்டுள்ளது.

இவற்றைத் தவிர, பாத்மஸம்ஹிதை, அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை, மார்க்கண்டேய ஸம்ஹிதை, சாண்டில்ய ஸம்ஹிதை ஆகியவற்றில் ‘‘பாஞ்சராத்ரம்’’ என்னும் சொல்லின் விளக்கத்தைக் காண்கிறோம்.

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில், பாஞ்சராத்ரம், ஐந்து இரவுகளில் கற்பித்த ஐந்து ஸித்தாந்தங்களை விளக்குகிறது. இந்த ‘தந்த்ரம்’ ‘பாஞ்சராத்ர தந்திரம்’ என்று பெயர் பெற்ற தற்கே காரணம், இதில் இறைவனின் மெய்யான ஐந்து நிலைகளான, பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை நிலைகள் விளக்கப்பட்டுள்ளதேயாகும். இறைவன், இந்த ஐந்து நிலைகளில் உறைவதற்கு ஒரே காரணம், ஜீவாத்மாக்களைத் தளைகளிலிருந்து விடுவித்து முக்தி பெறச்செய்வதற்காக ஆகும்.

ஈச்வர ஸம்ஹிதை (519-33)இல் இந்த விபரம் காணப்படுகிறது. தன்னைக் குறித்த இந்த விலைமதிப்பற்ற அறிவை, இரவு பகலாக ஐந்து ரிஷிகளுக்கு இறைவன் வழங்கினான். பஞ்சாயுதங்களின் அம்சங்களாக அறியப்படும் ஐந்து ரிஷிகளின் பெயர்கள்:- சாண்டில்யர், ஔபகாயனர், மௌஞ்சாயனர், கௌசிகர் மற்றும் பரத்வாஜர். இந்த ஐந்து ரிஷிகளுக்கும் இறைவனுக்கும் இடையே நடைபெற்ற தெய்வீகமான உரையாடலே, ‘பாஞ்சராத்ரம்’ எனப்படுகிறது.

இறைவன் என்பவன் நாராயணன், வாசுதேவன், விஷ்ணு என்று உருவகமாக வழிபடுவதே பாஞ்சராத்ரத்தின் முக்கியமான கருத்தாகிறது. இது ரிக்வேத புருஷ ஸூக்தத் துடன் (ரிக் வேதம் 10-90) ஒத்திருப்பது காணப்படுகிறது.

அ) பல்வேறு கால கட்டங்களில் பாஞ்சராத்ரம்

1. ஆதிகாலம்:- க்ருத யுகத்திலிருந்து த்வாபர யுகம் வரையிலும் சதபத ப்ராஹ்மணத்திலிருந்து மஹாபாரதமாகிய இதிஹாச காலம் வரையிலும்.

2. ஆகமகாலம்:- மஹாபாரத காலத்திற்குப் பிறகு, முதலாம் நூற்றாண்டிலிருந்து கலியுகம் நான்காம் நூற்றாண்டு வரையிலும். இந்த காலத்தில் கோயில்களை அமைப்பது, அவற்றின் வடிவம் ஆகியவை சிறப்பைப் பெற்றன.

3. ஆசார்யர்கள் காலம்:- நான்காம் நூற்றாண்டிற் கும் பதிமூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட இந்த கால கட்டத்தில், ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள், பாஞ்சராத்ர கோட்பாட்டை மேலும் ஒழுங்குபடுத்தி ஆன்மீகச் செயல் பாடுகளுக்கு வழிவகுத்தார்கள். உதாரணத்திற்கு, ஆளவந் தாரின் ஆகம ப்ராமாண்யம், ஸ்ரீபாஷ்யகாரரின் ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யம், ஸ்ரீநிகமாந்த தேசிகனின் ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை ஆகிய நூல்கள்.

4. ஆதுநிககாலம்:- நாகரீகமான தற்காலம். இப்பொழுதுள்ள கோயில் நிர்வாகம், சீரமைப்பு, மதம் சார்ந்த மற்ற அமைப்புகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் நூல் வெளியீடு ஆகியவை காணப்படுகின்றன.

ஆ) பாஞ்சராத்ர ஆகமத்தின் வளர்ச்சி

ஈச்வர ஸம்ஹிதை (1-29) மற்றும் பாரமேச்வர ஸம்ஹிதை (1-35) ஆகியவை, பாஞ்சராத்ரம் க்ருத யுகத்தி லிருந்தே பழக்கத்திலிருந்த மதக்கோட்பாடு என்கின்றன. (ஏஷா க்ருத யுகே தர்ம). மஹாபாரதம் பீஷ்ம பர்வத்தில், இது சாத்வத வழிபாட்டு முறைக்கேற்ப சங்கர்ஷணனால் வளர்க்கப்பட்டது எனப்படுகிறது. இது த்வாபரயுகத்தின் முடிவிலும் மற்றும் கலியுகத்தின் ஆரம்பத்திலும் ஆகிய காலகட்டத்தில் வளர்க்கப்பட்டது. இவற்றால், பாஞ்சராத்ரம் க்ருதயுகத்திலிருந்து கலியுகம் எனப்படும் இந்நாள் வரை தொடர்ந்து இருந்து வருகிறது என்று அறிகிறோம்.

ஸ்ரீமத் பகவத் கீதையிலும் இந்த கோட்பாடு, ‘‘யோகம்’’ என்னும் பெயரில், பகவான், வைவஸ்வான், மநு, இக்ஷ்வாகு என்பவர்களுக்கும் அரசர்களுக்கும் ரிஷிகளுக்கும் கற்பித்தான் என்று அறிகிறோம்.

இ) பாஞ்சராத்ரத்தில் வ்யூகங்கள்

1. மஹாபாரதம் மோக்ஷ தர்ம பர்வம் (12-336-53) நான்கு வ்யூகங்களைக் குறித்துப் பேசுகிறது.

மஹாபாரதம் பீஷ்ம பர்வம் மற்றும் சாந்தி பர்வத்தி லிருந்து சில குறிப்பிடத்தக்கச் செய்திகள் அறியப்படுகின்றன. ‘‘பரமாத்மா தன்னை நான்கு வ்யூஹங்களாக விரிவுபடுத்திக் கொண்டு, அண்டங்களை ரக்ஷிக்கிறான். அவை:- ‘வாசுதேவன்’- இவனே பரமாத்மா. சங்கர்ஷணன் ‘தனிப்பட்ட ஆத்மா’, ப்ரத்யும்னன் ‘மனம்’ என்னும் தத்வம், அநிருத்தன், ‘அஹங்காரம்’ என்னும் தத்வம்.

  மஹாபாரதம் பாஞ்சராத்ரத்தை ‘சாத்வதம்’ அல்லது ‘ஏகாங்கி தர்மம்’ என்று அழைக்கிறது.

2. ச்ருதியானது, ‘‘ஏகோஹம் பஹூஸ்யாம்’’ என்கிறது- ‘நான் ஒருவன் பலவாகக் கடவேன்’ என்பது இதன் பொருள். இந்தச் சொற்றொடரே பாஞ்சராத்ரம் விவரிக்கும் வ்யூகங்கள் கோட்பாட்டிற்கு அடிப்படையாகிறது. இந்த வ்யூஹ கோட்பாடு, உண்மையில் சதுர் வியூஹ கோட்பாடாகும். இந்த நான்காவன:- வ்யூஹ வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன் மற்றும் அநிருத்தன் ஆகிய நால்வரைக் குறிப்பதால், அவர்கள் க்ருஷ்ண பரமாத்மா, அவருடைய மூத்த சகோதரரான சங்கர்ஷணன் (பலராமன்). அவர் மகன் மற்றும் பேரன் ஆகியோர். பாஞ்சராத்ரம், இந்த நான்கு வ்யூஹங்களை விளக்கிய பொழுதிலும், இந்த வ்யூஹம் என்பது, மிக உயர்ந்த பரமாத்மாவின் ஐந்து நிலைகளை விளக்குகிறது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

மிக உயர்ந்த புருஷனின் ஐந்து நிலைகளாவன:- பரத்வம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை எனப்படுபவை. பரத்வம் என்பது ஜ்ஞானத்தால் அறியப்படுவது. வ்யூஹ நிலை என்பதே அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவை விளக்கும் முக்கியமான நிலையாகும். விபவம் என்பது தர்மத்தை நிலைநாட்ட பரமாத்மா மேற்கொள்ளும் அவதாரங்கள். அந்தர்யாமி என்பது, பரமாத்மா ஒவ்வொருவரின் ஹ்ருதயத்திற்குள் உறையும் நிலை. இவர் த்யானத்தால் அறியப்படுகிறார். இறுதியானது அர்ச்சை. இதில், பரமாத்மா கல், மரம், உலோகங்களால் ஆன உருவங்களில் வழிபடப்படுகிறான். பாஞ்சராத்ரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில், இந்த அர்ச்சை வடிவங்கள் இறைவனின் ப்ரதிநிதியான பதுமைகளாக நினைக்கப்படுவதில்லை. அந்த அர்ச்சாமூர்த்திகள், அந்த பரமாத்மாகவே வழிபடப்படுகிறார்கள். இது பாஞ்சராத்ர தத்துவக் கோட்பாடு நமக்குக் கற்றுத்தரும் குறிப்பிடத்தக்கப் பொருளாகும்.

‘வாசுதேவன்’ என்பது, இரண்டு ‘வேர்களாக’ பிரிக்கப்பட்டால், வஸ்= வசிப்பது; திவ்= ஒளிர்வது. இது இருப்பு மற்றும் ஒளியை சுட்டிக்காட்டும்.

மிக உயர்ந்த ஒன்றின் மனதில், படைக்கவேண்டும் என்னும் ஆவல் உறங்கிக் கொண்டிருப்பதை பாஞ்சராத்ரம் விளக்குகிறது.

படைக்கவேண்டும் என்னும் ஆவல் வெளியேறத் துடிக்கிறது. வாசுதேவன், இதை இழுத்துக் கட்டுப்படுத்துவதே சங்கர்ஷணன் என்னும் நிலை. (சம்+க்ரிஷ் = இழுத்துக் கட்டுப்படுத்துவது). இவ்வாறு இழுத்து நிறுத்துவது, பயன்படாமல் போகிறது. படைக்கவேண்டும் என்னும் ஆவல் வலுப்பெறுகிறது. இதுவே ப்ரத்யும்னன் எனப்படும் நிலை. (ப்ர+திவ்= இறுதியான நிலை). இழுத்து நிறுத்தும் சக்தியை மீறிக்கொண்டு தடையற்று படைப்பு வெளிப்படுவது அநிருத்தன் எனப்படுகிறது. (அ+நி+ருத்) இவ்வாறு மிக உயர்ந்த ஒருவன் நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் காணப்படுகிறான்.

உ) சாதனமும் உபாஸனமும்

  வெவ்வேறு இடங்களில் இருக்கும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைவதே மிக உயர்ந்த ஆனந்தம். இதற்காக ஜீவாத்மாவானவன், சாதனங்களை அதாவது உபாயங்களை மேற்கொள்கிறான. ‘மிக உயர்ந்த இறைவன் குடிகொண்டி ருக்கும் கோயிலிலும், அதைச்சுற்றியும் உள்ள பணிகளில் ஒருவர் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதே சிறந்த சாதனம்; என்கிறது பாஞ்சராத்ரம்.

உபாஸனை என்பது, எப்பொழுதும் இருப்பது, அவ்வப்போது இருப்பது, மற்றும் ஊக்குவிக்கப்பட்டது, என்று மூன்று வகைப்படும். இவை, நித்ய, நைமித்திக மற்றும் காம்ய உபாஸனைகள் எனப்படும்.

விக்ரஹ வழிபாடு என்பது இருவகைப்படும். அவை:- இல்லங்களில் வழிபாடு மற்றும் பொது வழிபாடு. இவை முறையே, ஸ்வார்த்த யஜ்ஞம் மற்றும் பரார்த்த யஜ்ஞம் எனப்படுகிறது. இது சமூகத்தின் நன்மைக்காக நடத்தப் பெறுகிறது.

கோயில்களில் நடைபெறும் யாகங்களில், பகவான் விஷ்ணுவானவர் பிம்பம்(உருவம்), கும்பம் (நீர் நிறைந்த குடம்), குண்டம்(யாக குண்டம்) மற்றும் மண்டலம் (வரை படங்கள்) ஆகியவற்றில் எழுந்தருளுமாறு வேண்டப்பட்டு, துதிக்கப்படுகிறார். இவ்வாறான விரிவான வழிபாடு இறைவனை அடைவதையே இலக்காகக் கொண்டுள்ளது.

ஊ) பாஞ்சராத்ர ஆகமத்தில் யோகம்

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில், யோகம் என்பது ‘தனிப்பட்ட ஜீவன் மற்றும் மிக உயர்ந்த பரமாத்மா ஆகிய இருவருக்கிடையிலான சேர்க்கை’ என்று வரையறுக்கிறது. யோகம் என்பது முக்திக்கு வழிவகுக்கும் ஓர் செயல். இதுவே உள்ளுறையும் அந்தராத்மாவைக் கண்டறிய ஒரே வழி. எட்டு பாகங்களுடன் கூடிய யோகத்தை அப்யாஸம் செய்தால் ஒருவர் தன் ஆத்மாவைக் காணப்பெறுகிறார். அஷ்டாங்க யோகம் என்று பெயர் பெறும் இந்த யோகம், அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 31 மற்றும் 32 வது அத்யாயத்தில் விளக்கம் பெறுகிறது.

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை, பாஞ்சராத்ரத்தின் பழமை யான பாடம். இதில் அஹிர்புத்ந்யன் என்றழைக்கப்படும் சிவன் நாரதருக்கு உபதேஸம் செய்கிறார். இந்த உபதேஸத்தை சிவன், சங்கர்ஷணனிடமிருந்து பெற்றார். இதில், சிவன், இறைவன் நாராயணனை ஸுதர்சன சக்கரத்தின் வடிவத்தில் வழிபடுவதிலுள்ள சிறப்பையும் அதற்கான வழிமுறை களையும் நாரதருக்கு உபதேஸிக்கிறார். இதுவே முக்திக்கு வழி என்று அறிவுறுத்துகிறார் சிவன்.

யோக பாதத்தில் யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், த்யானம் மற்றும் சமாதி ஆகியவை அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகளாக விளக்கப்பட்டுள்ளன.

பாஞ்சராத்ரம் - முறையாக பின்பற்றத் தக்கவையா, இல்லையா? அவை வேதநெறிகளைச் சார்ந்தனவா? பற்றிய ஓர் விவாதம்.

ஆகமங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல என்பதை முதன் முதலில் முன் வைத்தவை ப்ரஹ்ம ஸூத்ரங்கள். இரண்டாம் அத்யாயத்தில் இரண்டாம் பாதத்தில் இது காணப்படுகிறது. இந்த பகுதி, உத்பத்யஸம்பவாதிகரணம் எனப்படுகிறது. இதில் ஸூத்ரம் 2-2-39 லிருந்து 2-2-42 ஆவது ஸூத்ரம் வரையில் விளக்கப்படுகிறது என்பது ஸ்வாமி இராமானுசரின் கருத்து. ‘‘உத்பத்யஸம்பவாத்’’ என்பது ‘தோற்றத்தைக் குறித்த நிச்சயமற்ற தன்மை’ என்று பொருள் கொள்ளலாம்.

  இந்த ஸூத்ரங்களுக்கு, சங்கரர் தம் பாஷ்யத்தில் அளித்த விளக்கத்தில், பாஞ்சராத்ர ஆகமத்தின் கோட்பாடு களை வெளிப்படையாக ஏற்கிறார். ஆனால், அதன் ப்ராமாணிகத்தை மறுக்கிறார். இதற்குக் காரணம் பாஞ்சராத்ர ஆகமம் வாசுதேவனிலிருந்து தனிப்பட்ட ஜீவனாக சங்கர்ஷ னின் தோற்றத்தை அநுமதிக்கிறது என்பதாகும். ஜீவன், என்பது நித்யமானது; அதற்கு பிறப்பென்பது இல்லை. பாஞ்சராத்ரம் சங்கர்ஷணன் என்னும் ஜீவனின் தோற்றத்தைப் பற்றிப் பேசுவதால் இது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது சங்கரரின் கருத்து.

பாஞ்சராத்ரத்திற்கு ப்ராமாணிகத்வம் (சான்றாதாரமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை) இல்லை என்பதை முன் வைக்கும் மற்றுமொரு வாதம்:- வேதங்கள் நான்கேதான். பாஞ்சராத்ரத்தை யாரும் வேதம் என்பதில்லை. பாஞ்ச ராத்ரத்தைப் பின்பற்றுபவர், எவ்வளவுதான் பக்திமானாக இருந்தாலும், அவரை ப்ராஹ்மணன் என்று அழைக்க இயலாது. இதை வேதத்தின் சாகை என்றும் சொல்ல இயலாது. ஏனெனில், வேதத்தின் சாகையைப் பின்பற்றி வேள்விகளை ஆற்றுவோர் உண்டு. பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர், பாஞ்சராத்ரம் அஹிம்ஸை, உண்மை பேசுதல், மன அமைதி யோடு இருத்தல் ஆகியவற்றைப் பேசுகிறது. ஆனால் அது நன்னடத்தையைப் போதிக்கும் எல்லா கல்விகளுக்கும் பொதுவானது. இது பாஞ்சராத்ரத்தை ஏற்றுக்கொள்ள ஒரு சான்றாதாரமான நூல் என்பதற்கு வழிவகுக்காது. இது ஆயுர்வேதம், தனுர்வேதம் என்று சொல்வதற்கு இணை யானது. இதனால், பாஞ்சராத்ரம் வேதத்திற்கு இணையான தாகாது. எனவே, அதற்கு ப்ரமாணமாக இருக்கும் தகுதி கிடையாது.

பாஞ்சராத்ரத்திற்கு எதிரான மற்றொரு வாதம்

நாரதர், சாண்டில்யர் என்ற ரிஷிகள், வேதங்களில் கிடைக்காத பூர்ண ஜ்ஞானத்தை பாஞ்சராத்ரம் மூலம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமத் திற்கு ப்ராமாணிகத்வம் இல்லை என்று கூறுபவர்கள், இந்தச் செயலை ‘வேதத்திற்கு எதிரான கொள்கையாகக்’ கொண்டனர்.

  இந்த வாதங்களுக்கு எதிராக, ‘பாஞ்சராத்ர ஆகமத் திற்கு ப்ராமாணிகத்வம் உண்டு’ என்பதை நிலைநிறுத்திட பலச் சான்றாதாரங்கள் உள்ளன. அவற்றை முன் வைத்தவர்கள் பெயரும், அவர்களுடைய வாதமும் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன. :-

1. மஹா பாரதத்தில் வ்யாஸர்:- பாஞ்சராத்ர ஆகமம் மெய்யானது, அதிகாரபூர்வமானது என்பதை மஹாபாரதம் சாந்தி பர்வத்திலுள்ள நாராயணீய பகுதியில் காண்கிறோம். இராமானுசர், தம்முடைய ஸ்ரீபாஷ்யத்தில் இரண்டாம் அத்யாயத்தில் உத்பத்யஸம்பவாதிகரணத்தில், சங்கர்ஷண னின் தோற்றம் குறிப்பிடப்படுவதால், பாஞ்சராத்ர ஆகமம் ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை என்பதை முன் வைக்கும் ஸூத்ரங்களுக்கு (2-2-41லிருந்து 2-2-42வரை) மறுப்பு தெரிவிக்கையில், மஹாபாரதம் சாந்தி பர்வத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.

2. காஷ்மீர அரசனான சங்கரவர்மன் (883---902 கி.பி) அவையில் புகழும் பெருமையும் பெற்றுத் திகழ்ந்தவர் ஜெயந்த பட்டர் என்னும் அறிஞர். இவர் இயற்றிய நூல்கள் ‘நியாயமஞ்சரி’, மற்றும் ‘ஆகமடம்பரா’ ஆகியவை. இந்த நூல்களில், இவர், ஆகமங்கள் ப்ரமாணங்களாக இருக்கத் தகுதி பெற்றவை என்பதை விவரிக்கிறார். இவர் முன் வைக்கும் வாதங்கள்:-

அ. இறைவனே ஆகமங்களின் ஆசிரியர். இந்த ஆகமங்கள் வெறுப்பும் மயக்கமும் நிறைந்த மனித புத்தியால் இயற்றப் பட்டது என்பதை ஏற்க இயலாது.

ஆ. ஆகமங்கள், வேதத்தின் சில பகுதிகளை ஏற்றுக் கொள்கின்றன. வேதத்தைக் கற்பதோடு முரண்படுவதில்லை.

இ. உபநிஷத்துக்கள், முக்திக்கு வழிவகுப்பவையாக, கற்பிப்பதை ஆகமங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, விவாதிக்கப்படுகின்றன.

ஈ. வ்யாஸர் போன்ற புகழ்பெற்றவர்கள், ஆகமங்களை அதிகார ஆணையாக ஏற்றுள்ளனர்.

இந்த ஜெயந்த பட்டர் மிகவும் உயர்ந்த சிவ பக்தர். இவர் சைவ ஆகமங்களின் ஏற்புடைய தன்மையை நிலை நிறுத்த வாதிட்ட போதிலும், இது பாஞ்சராத்ர ஆகமத்திற்கும் பொருந்தும் என்பது பெரியோர்களின் கருத்தாகும். சைவ, வைணவ ஆகமம் இரண்டுமே ஏற்கத்தக்கவை என்று இவர் வலியுறுத்துகிறார்.

3. தைர்யராசி:- ஜெயந்த பட்டர் எழுதிய நாடகம் ‘ஆகமடம்பரா’ என்பது. இதில் பல தர்சனத்தைச் சேர்ந்தவர்கள் தம் பக்கத்து வாதங்களையும் எடுத்துரைப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தைர்யராசி என்பவர் ஆகமங்களின் அதிகாரத்தன்மையைக் குறித்து விவாதிக்கிறார். இவர் முன்வைத்த கருத்துகளாவன:-

அ. இறைவன் ஒருவனே, வேதம் மற்றும் ஆகமங் களைப் படைத்தவன்.

ஆ. ஒன்றுக்கொன்று முரண்படும் வேதச் சொற்றொடர் களுக்கு, அறிஞர்கள் ஒன்று கூடி அவற்றின் பொருளை சமன்வயப்படுத்துவது போல் ஆகமங்களில் உள்ள வேதத் தைப் பற்றியக் கருத்துக்களை சமன்வயம் செய்து கொள்ள வேண்டும்.

இ. வேதம், ஆகமம் இரண்டுமே இறுதியான மிகச் சிறந்த புருஷார்த்தமான மோக்ஷத்திற்கு வழி காட்டுபவையே. இவை காட்டும் பாதைகளில் வேறுபாடு இருப்பது, இவற்றை இறைவன் விரும்பியே படைக்கிறான். மக்கள் தம் தம் தகுதிகளுக்கு ஏற்ற பாதையில் பயணித்து வந்து தன்னை அடையவேண்டும் என்பதே அவன் திருவுள்ளம். பல திசைகளில் ஓடும் ஆறுகள், கடலில் கலப்பது போன்றது இது.

ஈ. வேதங்களைப் போல ஆகமங்களும் ஆரம்பம் காண இயலாதவை. சங்கர்ஷணன் போன்றவர்கள் இதை இயற்றியவர்கள் என்பதால், இதற்கு மதிப்பில்லாமல் போகாது. இது வேதங்களில் காணப்படும் கதைப்பகுதிகள் போன்ற வேதத்தின் பொருளை தெளிவாக்குவதற்கு ஒப்பானது.

உ. பாஞ்சராத்ர ஆகமத்தின் ஆசிரியன் இறைவன். இது அநாதியானது; இது வேதத்திற்கு இணையானதாக மதிக்கப் படவேண்டும்.

ஊ. பாஞ்சராத்ர ஆகமம், ப்ராஹ்மணர்களால் வழக்கத் தில் கொள்ளப்பட வேண்டுமா, இல்லையா, என்னும் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். அறிவுள்ள, நல்லவர்கள் பாஞ்சராத்ரத்தை அவமதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எ. பாஞ்சராத்ர சொற்றொடர்கள், வேதத்தை ஆதார மாகக் கொண்டவை. இது பேராசை, தவறான நம்பிக்கை, மோசடி, இவற்றின் இருப்பிடமான ஓர் மானுடனால் இயற்றப்பட்டது என்பது பொருந்தாது. குற்றமற்ற இந்த ஆகமத்தை, இந்த முறையில் இயற்றியிருக்க வாய்ப்பில்லை. இது யோகியரின் அறிவால் ஏற்பட்டது எனவும் இயலாது. பாஞ்சராத்ர ஆகமம் அதிகார பூர்வமானது.

தைர்யராசியின் உரை, கரவொலியோடு அவையோ ரால் வரவேற்கப்பட்டது பாஞ்சராத்ர ஆகமத்தின் அதிகாரத் தன்மையை தெளிவாக நிலை நிறுத்தியதற்காக இவரைப் புகழ்ந்து, ‘ந்யாய சாஸ்த்ரத்தின் ப்ரதிநிதி’ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார் ஜெயந்த பட்டர்.

4. சக்ரதரா:- இவர் ந்யாய மஞ்சரியின் சிக்கலான பகுதிகளுக்கு தெளிவான விளக்கவுரையை எழுதியுள்ளார். இந்த நூலின் பெயர் ‘‘ந்யாய மஞ்சரி க்ரந்தி பங்கா’’ என்பதாகும். இதில், இவர், சைவ ஆகமங்களை எழுதியவர்கள் வேதத்தை நன்கு அறிந்தவர்கள் என்று குறிப்பிட்டு, இருபிறப் பாளர்களான இறைவன் சங்கர்ஷணனைப் போன்றவர்களும் இடைவெளியற்ற (துண்டிக்கப்படாத) பரம்பரையில் பிறந்தவர்கள். இவர் இயற்றிய பாஞ்சராத்ரமும், கற்றவர்களால் அதிகாரமற்றது எனக் கூற இயலாது என்பதை வெளிப்படுத்தி யுள்ளார்.

5. புஷ்கராக்ஷர்:- புகழ்பெற்ற துறவியான இவரும், பாதராயணர் இயற்றிய ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு விளக்கம் எழுதினார். இவர், பாஞ்சராத்ரமும் மற்ற ஆகமங்களும் வேதத்தை ஆதாரமாகக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.

மதிப்பிற்குரிய புஷ்கரர், வேதாந்த ஸூத்ரங்களுக்கு இவ்வாறு பொருளுரைக்கிறார்:- ‘‘எது அறிவை விளைவிக் காதோ அது ஐயத்தை ஆதாரமாகக் கொண்டது; அது தவறான அறிவை தோற்றுவிப்பது அது செல்லுபடியாகாது. இந்த மூன்று காரணிகள், பாஞ்சராத்ரம் மற்றும் பிற ஆகமங்களில் காணப்பெறுவதில்லை. இந்த ஸூத்ரத்திலுள்ள ‘‘விஜ்ஞாநாதி பாவே’’(2-2-41) என்பது, அவற்றிலிருந்து (ஆகமங்கள்) அறிவு விளைவதை சுட்டிக்காட்டுகிறது. இதிலுள்ள ‘‘ஆதி’’ என்னும் சொல், ஐயத்தையும், தவறான அறிதலையும் ஒதுக்கி விடுகிறது. ‘‘வா’’ என்பதால், பாஞ்சராத்ரம் அதிகாரமற்றது என்னும் கருத்தை ஒதுக்குகிறது. எனவே, அதற்கு எதிர்ப்பு ஏதுமில்லை. இதற்கு மேல் பாஞ்சராத்ரத்தின் அதிகாரத் தன்மைக்கு விளக்கம் ஏதும் தேவையில்லை’’

6. யாமுனாசார்யர்:- ஸ்ரீவைஷ்ணவர்கள் குருபரம் பரையில் சிறப்பான இடத்தை வகிப்பவர், ஆளவந்தார் என்ற திருநாமத்தை உடைய யாமுனாசார்யர். இவர் தாம் இயற்றிய ‘‘ஆகமப்ராமாண்யம்’’ என்னும் புகழ் பெற்ற நூலில், இரண்டு முக்கியமான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். அவை:-

அ. ‘‘உத்பத்யஸம்பவாத்’’ என்பதைக் குறித்த விவாதத்தை தெளிவு செய்கிறார்.

ஆ. பாஞ்சராத்ர ஆகமத்தைப் பின்பற்றுபவர்கள், வேத வழிமுறைகளை கடைபிடிக்கும் ப்ராஹ்மணர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

உத்பத்யஸம்பவாதிகரணத்தில், முதலிரண்டு ஸூத்தி ரங்களை (2-2-39, 2-2-40) ஆகியவற்றை முதற்கண்ணோட் டமாகவும், அடுத்த இரண்டு ஸூத்ரங்களை (2-2-41, 2-2-42) ஸித்தாந்தமாகவும் விளக்கியிருக்கிறார் யாமுனா சார்யார். புஷ்கராக்ஷர் செய்தது போலே, இவரும் ‘வா’ என்பது ஸித்தாந்தத்தை விளக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏ) ஆகமப்ராமாண்யம்

‘‘உத்பத்யஸம்பவாதிகரணத்தை விளக்குகையில், சங்கரரும், பாஸ்கரரும், வாசுதேவனிடமிருந்து ஜீவ தத்துவ மான சங்கர்ஷணனும், அவனிடமிருந்து மனஸ் தத்வமான ப்ரத்யும்னனும், அவனிடமிருந்து அஹங்கார தத்வமான அநிருத்தனும் உண்டானார்கள் என்று அநாதியான ஜீவனது உற்பத்தியையும் பரப்ரஹ்மத்திடமிருந்து உத்பத்தியாகும் மனத்தை ஜீவனாகிய சங்கர்ஷணனிடமிருந்து உண்டாகிறது என்பதும் ச்ருதிகளுக்கு விரோதமானபடியால், பாஞ்சராத்ரம் ப்ரமாணமாகாது என்றார்கள்’’.

இதற்கு ஸித்தாந்தமாக யாமுனாசார்யரும் அவர் கருத்தை அடியொட்டி எம்பெருமானாரும் தரும் விளக்கம்:- ‘‘இந்த கொள்கை ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்திற்கு முரணான தல்ல. நான்கு ரூபங்களை உடைய, ஒரே (வாசுதேவ) தத்வத்தை உபாஸிப்பது, பரப்ரஹ்மோபாஸனம் என்பதை, சாத்வதம், பௌஷ்கரம், போன்ற ஸம்ஹிதைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. பரப்ரஹ்மமானது தன் இச்சையினாலே பக்தர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு, ஸூக்ஷ்மமான வாசுதேவன் விபவ அவதாரங்களை எடுப்பதைப் போலவே, வ்யூஹ அவதாரங்களையும் எடுத்துக் கொள்கிறான் என்பதில் எந்த விரோதமும் இல்லை. மேலும் ஜீவன், மனம், அஹங்காரம் ஆகிய தத்வங்களுக்கு ஸ்தானமாயுள்ள (இருப்பிடம்) சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகியோரை, ஜீவன், மனம், அஹங்காரம் ஆகிய சொற்களால் குறிப்பிடுவதிலும் தவறில்லை’’.

3. தயிரைக் கடைந்து வெண்ணெயையை எடுப்பது போல், வேதங்களின் சாரமாக, பாஞ்சராத்ரத்தை ஸ்ரீமந் நாராயணன் உபதேசித்தான் என்று மஹாபாரதம் அறிவிப்ப தால், நாரத, சாண்டில்யர் போன்ற ரிஷிகள், பாஞ்சராத்ரத்தின் மூலம் ஞானத்தைப் பெற்றார்கள் என்பது வேத கண்டன மாகாது.

4. பாஞ்சராத்ரம், வேதத்திற்கு ஒப்பானது என்பதை நிலைநாட்ட, சப்த ப்ரமாணம் பற்றிய, பாட்ட, ப்ரபாகர, மீமாம்ஸகர்கள் கொள்கைகளையும், தர்க்க சாஸ்த்ர கொள்கை களையும் பாஞ்சராத்ர ஸம்ஹிதை ப்ரமாணமல்ல என்ற அத்வைத கொள்கையையும் கண்டிப்பதுடன், பாஞ்சராத்ர முறையில் பூஜை செய்பவர்கள், வர்ணத்தில் தாழ்ந்தவர்கள் என்பதையும் மறுக்கிறார் யாமுனாசார்யர்.

5. பகவானால், ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதால் ஸ்ம்ருதிகள் போன்றே பாஞ்சராத்ரமும் வைதிகமானது.

6. விதி ரூபமாக இல்லாத வேதச் சொற்றொடர்கள், அர்த்தமுள்ளவையாக இருக்கமுடியாது: விதி ரூபமான மனுஸ்ம்ருதியைப் போன்று, பாஞ்சராத்ரம் இல்லாததால் அது, ப்ரமாணமாகாது என்கிற ப்ரபாகர மீமாம்ஸகர்களின் கூற்று மறுக்கப்படுகிறது.

7. நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், இதிஹாச புராணங்கள், மீமாம்ஸைகள், ந்யாயசாஸ்த்ரம், தர்ம சாஸ்த்ரம் ஆகிய 14 வித்யைகளில் ஒன்றாக சொல்லப்படாததால் மட்டுமே, பாஞ்சராத்ரம் ப்ரமாணமாக இருக்கும் தன்மையை இழந்து விடாது.

8. சாத்வதர்கள் என்னும் பாகவதர்கள், (பகவானுடைய வர்கள்) வாஜஸநேய சாகையைச் சேர்ந்தவர்கள். காத்யாயன க்ருஹ்யமுறையில் ஏகாயன ச்ருதியில் சொல்லப்பட்ட கர்மாக்களை அனுஷ்டிப்பவர்களாயும், ப்ராஹ்மண கோத்ரங் களைச் சேர்ந்தவர்களாயும் இருப்பதால், அவர்கள் அனைவரும் வைதிக ப்ராஹ்மணர்களே. பூஜைசெய்பவர், தக்ஷிணை பெறுவதால், அவரைத் தாழ்ந்தவராக (தேவலகர் என்று) கருதுவது தவறு. யாகங்களில் அத்வர்யுக்களுக்கு தக்ஷிணை கொடுத்தால் மட்டுமே யாகம் முழுமையடைந்ததாகக் கருதப்படும். அதைப் போன்றதே பூஜைகளுக்காகப் பெறப்படும் தக்ஷிணையும் ஆகும்.

9. விஷ்ணுவின் அர்ச்சா விக்ரஹத்திற்குச் சாற்றிக் களையப்பட்ட மாலை, புஷ்பங்களை, நிர்மால்யம் என்று அவமதிப்பது தவறு. அவைகளை மதிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று விஷ்ணுவின் அர்ச்சா விக்ரஹத் திற்கு அமுது செய்வித்த ப்ரஸாதங்கள் உயர்ந்தவை. ப்ராணாக்நிஹோத்ரத்திற்குச் சமமானது நைவேத்யம். மற்ற தேவதைகளின் நிர்மால்யம், நைவேத்யம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டவன், ப்ராயச்சித்தமாக சாந்த்ராயணவ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

திருவரங்கம் பெரிய கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஆகிய திருக்கோயில்களில் பாஞ்சராத்ர ஆகமம் பின்பற்றப்படுகிறது.

II வைகானஸ ஆகமம்

  வைஷ்ணவ ஆகமங்கள் இரண்டினுள் வைகானஸ ஆகமமும் ஒன்று. இது நான்கு வேதங்களின் சாரம் எனப் படுகிறது. மனித வாழ்வின் மிக உயர்ந்த இலக்கான மோக்ஷம், விஷ்ணுவை விக்ரஹ ரூபத்தில் வழிபடுவதால் கிடைக்கும் என்பதை வைகானஸம் போதிக்கிறது.

ஆதியில், மஹா விஷ்ணுவானவர் வேதங்களை, ப்ரஹ்ம தேவனுக்கு போதிக்க, அவர் அதை ‘விகனஸர்’ என்ற பெயர் கொண்ட ரிஷிக்கு போதித்தார். விகனஸர், இதை ஒன்றரைக் கோடி ச்லோகங்கள் கொண்ட நூலாக வடிவமைத்து, தம்முடைய நான்கு மாணாக்கர்களான, மரீசி, அத்ரி, ப்ருகு மற்றும் கச்யபருக்குக் கற்றுத் தந்தார். இவை வழிவழியாக வந்து தற்காலத்தில், 28 நூல்கள் உள்ளன. இவற்றுள் 8 நூல்கள் அச்சேறியுள்ளன.

இந்த வைகானஸர்கள், பிற்காலத்தில் பகவான் விஷ்ணுவின் அணுக்க பக்தர்களாகி ‘‘பிறவியிலேயே’’ அர்ச்ச கர்களாகும் தகுதி பெற்றவர்களாக (ஜன்ம வைஷ்ணவர்கள்) ஆனார்கள். ஆசார்யனை அணுகி, சங்கு சக்கர முத்திரைகளை (தாப-ஸம்ஸ்காரங்களை) பெறும் வைஷ்ணவர்களைப் போன்றவர்கள் அல்ல இவர்கள். பிறவியிலேயே வைஷ்ண வர்கள். எனவே, கோயில் அர்ச்சகராகும் தகுதியை இவர்கள் இயற்கையாகவே பெற்றவர்களாகிறார்கள். மற்றவர்கள், தாப ஸம்ஸ்காரத்தைப் பெற்று, தீக்ஷை பெற்றபின்பு தான் அர்ச்சகர்களாகும் தகுதியைப் பெறுகிறார்கள்.

கோயில்களில் நடைபெறும் இறை வழிபாடு, வேத வேள்விகளின் தொடர்ச்சியே என்பது இவர்கள் நம்பிக்கை. இவர்கள் பகவான் விஷ்ணுவையே மிக உயர்ந்த இறைவனாக வழிபடுகிறார்கள். விஷ்ணுவை அடைய வழிவகுக்கும் பாதை நான்கு பகுதிகளாக விளக்கப்படுகிறது.

1. விஷ்ணுவையும் அவன் பெருமையையும் மீண்டும் மீண்டும் புகழ்ந்து பாடுவது. (ஜபம்)

2. வேள்வித்தீயில் ஆஹுதி தருவது (ஹூடா அல்லது ஹவன்)

3. வீட்டிலோ அல்லது கோயிலிலோ விக்ரஹ வழிபாடு (அர்ச்சனை)

4. சஞ்சலமில்லாத த்யானம் அல்லது ஆழ்ந்த சிந்தனை, (த்யானம்)

வைகானஸ ஆகமம், விஷ்ணுவின் வழிபாட்டை வலியுறுத்துவது வேதங்களில் காணப்படுகிறது. ரிக் வேதம், பத்தாவது மண்டலத்தில் அறுபத்தி ஆறாவது ஸூக்தத்தில், ‘‘சாந்தம் வைகானஸ’’ என்பது காணப்படுகிறது. க்ருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரீய சாகையிலும், ‘வைகானஸம்’ பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அ) வைகானஸம்-பெயர் விளக்கம்.

1. க்ருஷ்ண யஜுர் வேதம், தைத்ரீய ப்ரச்சனம் 11, 4ஆம் அத்யாயம் வைகானஸத்தை ஓர் சிறந்த வகையான ‘‘சாமமாக’’ கூறுகிறது.

2. சாமவிதான ப்ராஹ்மணம் வைகானஸத்தை ஓர் ரிஷி என்கிறது.

3. கீதோபநிஷத் இதை ஓர் மதம் சார்ந்த கல்வி என்கிறது.

4. தர்ம சாஸ்த்ரங்கள், இராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், சாகுந்தலம் போன்ற வடமொழி நூல்கள், ‘வைகானஸம்’ என்பது, மூன்றாவது ஆச்ரமமான வானப்ரஸ் தத்தைக் குறிப்பதாகப் பேசுகின்றன. மூன்றாவது ஆச்ரமமான வானப்ரஸ்தர்கள் விஷ்ணுவை விக்ரஹ ரூபத்தில் த்யானித்து, ‘வைகானஸ தர்மத்தை’ கடைபிடிக்க வேண்டும் என்று இவற்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

5. காத்யாயனோபநிஷத் ஐந்து ரிஷிகள் ஒன்றாக உருவாக்கியதே வைகானஸம் என்கிறது.

1. க்ரியாதிகாரம்:- இது ‘விகன’ என்பதை, விஷ்ணு வாக அல்லது விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய முதல் ரிஷியாக அடையாளம் காட்டுகிறது. (விகனாவை விஷ்ணு, விகனா முநிநாம் ப்ரதமோ முநி-க்ரி - 36/28,29) இந்த முநி, இந்த சாஸ்திரத்தை உண்டாக்க தன் மனதை ‘அகழ்ந்தார்’ எனப்படுகிறது. அதனால், ‘விகனா’ என அழைக்கப்பட்டார் (மனசா கனநாத்)

2. மஹாபாரதமும் இவ்வாறான ‘அகழ்தலை’ குறிப் பிடுகிறது.

3. யஜுர் வேதத்தின் அருணம் என்னும் பகுதியில் ‘கச்யப’ என்பது, ‘பச்யக’ (காண்பவர்) என்னும் சொல்லின் எழுத்துக் கள் மாற்றி அமைக்கப்படுவதால் கிடைப்பது போல், ‘விகன’ என்பதும் ‘வினக’ என்பதின் எழுத்துக்கள் மாற்றி அமைக்கப் படுவதால் கிடைக்கிறது என்று விளக்குகிறது. ‘வினக’ என்பது புலன்களைக் கட்டுப்படுத்திவைப்பதைக் குறிக்கும். வைகானஸத்தைப் பின்பற்றுபவர்கள் அமைதி யாகவும் ஸத்வ குணம் மேலோங்கியவர்களாகவும் மதிக்கப் படுகிறார்கள்.

ஆ) தோற்றமும் வளர்ச்சியும்

இந்த சமய மரபு, பகவான் விஷ்ணுவிடமிருந்தே தோன்றியது எனப்படுகிறது. ஆதியில் பகவான் விஷ்ணு இதை நான்முக ப்ரஹ்மனுக்குப் போதித்தார். பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்களின் செயல்வகையான ‘‘தாந்தரிகம்’’ தமக்கு மனநிறைவையளிக்காததால், வேதத்தின் அடிப்படையிலான வழிபாட்டை தமக்குக் கற்றுத்தரும்படி பகவான் விஷ்ணுவிடம் ப்ரஹ்மன் வேண்ட, விஷ்ணுவானவர் வேதம் என்னும் கடலைக் கடைந்து, ப்ரஹ்மனுக்கு வேதத்தை அடிப்படை யாகக் கொண்ட வழிபாட்டு முறையைக் கற்பித்துத் தந்தார். இவை ஆயிரம் கோடி ச்லோகங்களைக் கொண்டதாக இருந்தது. நாளடைவில் இந்த நூல் தொலைந்து விட்டது. ப்ரஹ்ம தேவன், காவியணிந்து, தண்டமேந்தி, ஜடாமுடி தரித்த துறவியாக மாறி, நைமிசாரண்யத்திற்குச் சென்று, பகவான் விஷ்ணுவை குறித்துத் தவமிருந்தார். இந்த தவத்தின் வலிமையால், பகவான் தமக்குக் கற்பித்த வழிபாட்டை மீண்டும் தரிசித்தார், ப்ரஹ்மதேவன்.

ப்ரஹ்மன், இப்பொழுது விகநசா அல்லது பெருமை பெற்ற முனி என்று அழைக்கப்பட்டார். இவர் தாம் பெற்ற வித்யையின் முக்கியமான பகுதிகளை, தன் மகனான மரீசிக்கும் மற்ற ரிஷிகளுக்கும் வழங்கினார். இது ஒன்றரைக் கோடி ச்லோகங்களைக் கொண்டிருந்தது. இதைப் பெற்றுக்கொண்ட நான்கு ரிஷிகள், வைகானஸர்கள் என்று அறியப்பட்டனர். அவர்கள் மரீசி, ப்ருகு, அத்ரி மற்றும் கச்யபர். இவர்கள், தாங்கள் வகுத்த 28 நூல்களில் அரைகோடி ச்லோகங்களை நான்கு லட்சம் ச்லோகங்களாக சுருக்கினர். இவற்றுள் எட்டு நூல்கள் தற்காலத்தில் அச்சிடப்பட்டு வழக்கில் உள்ளன. அவையாவன:-

1) மரீசி எழுதிய - ஆனந்த ஸம்ஹிதை மற்றும் விமானார்ச்சன கல்பம்.

2) அத்ரி எழுதிய-சமுர்த்தார்ச்சநாதிகரணம்.

3) காச்யபர் எழுதிய - ஜ்ஞாந காண்டம்

4)ப்ருகு எழுதிய-க்ரியா-கி2ல-ப்ரகீர்ண யஜ்ஞாதிகாரா.

இவை வைகானஸத்தை, பாகவத சாஸ்த்ரம் என்று விளக்குகின்றன. இவர்கள், வேதச் சடங்குகளை மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடிப்பதில் பாஞ்சராத்ரிகளிடமிருந்து வேறுபட்டிருந்தாலும், ஆலய வழிபாடு மற்றும் பூஜை, பண்டிகை போன்றவை இருதரப்பினருக்கும் பொதுவாக உள்ளது. வைகானஸ நூல்கள், கோயில்களை வடிவமைப்பது, அதன் சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் விக்ரஹங்களை வடிவமைப்பது ஆகியவற்றை மிகவும் தெளிவாக விளக்கு கின்றன. திருமலை கோயிலில் எல்லாச் சடங்குகளும் மற்ற பழக்கங்களும் வைகானஸ ஆகமத்தை ஒட்டியே நடைபெறுகின்றன.

இலக்கியக் குறிப்புகள்

காளிதாஸர் தம் சாகுந்தலத்தில் வைகானஸத்தைக் குறிப்பிடுகிறார். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தண்டின், 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெயந்தபட்டர், 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வேதாந்த தேசிகர் ஆகியோர் வைகானஸ ஆகம நூல்களைக் குறித்து தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

வரலாற்றுக் குறிப்புகள்

பகவான் விஷ்ணு, விக்ரஹ ரூபத்தில் கோயில்களில் வழிபடப்பட்டதற்கு பல சான்றாதாரங்கள் காணப் படுகின்றன:-

1) கோசுண்டி கல்வெட்டு. (தென் இந்தியாசி கி.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு ‘கஜ்யன்’’ என்ற பெயர் கொண்ட பாகவதர், ‘‘நாராயண- வாடிகா’’ என்னும் கோயிலை விஷ்ணுவிற்கு நியமித்து, அங்கே வைகானஸ ஆகமத்தின்படி பூஜை நடத்தினார் என்று அறிவிக்கிறது.

2) உதயகிரியில், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குப்த வம்சத்தைச் சேர்ந்த அரசன், வாசுதேவவிஷ்ணுவிற்கு கோயில் அமைத்து வைகானஸ ஆகமத்தைப் பின்பற்றி வழிபாடு செய்தான்.

3) கர்நாடகத்திலுள்ள மிகப் பழமையான, ‘‘ஹல்மிதி’’ கல்வெட்டுகள் கி.பி.450ஐ சேர்ந்தவை. லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்தபடி காட்சி தரும் அச்யுதனுக்கு கோயில் இருந்ததாகவும், அங்கே வைகானஸம் பின்பற்றப் பட்டதாகவும் கூறுகிறது.

4) பாதாமியின் சாளுக்ய அரசன், சிவன், ப்ரஹ்மா ஆகியோருடன் சேர்ந்த விஷ்ணுவிற்கு அமைத்த குடவரைக் கோயில், கி.பி.578ஐ சேர்ந்தது. வைகானஸ ஆகமத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது.

5) வைணவ பக்தர்களான பாண்டிய அரசர்கள், பல கோயில்களை நிர்மாணித்தார்கள். அவற்றில் ‘‘பல-யாக- சாலை-குடுமி பெருவழுதி’’ என்னும், அரசர்களைச் சிறப்பிக்கும் பட்டங்களைக் காணலாம்.

6) ஆழ்வார்கள், கி.பி.5 முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள். இவர்கள் தங்கள் திவ்யப்பிரபந்த பாசுரங்களில், வேத மந்திரங்கள் ஓதப்பட்டதையும், வேள்விச் சடங்குகள் ஆற்றப்பட்டதையும், அருளிச் செய்துள்ளார்கள். இதுவும் அக்காலத்தில் வைகானஸ முறையிலான வழிபாடு பரவி இருந்ததை சுட்டிக்காட்டுகிறது.

7. தென் இந்தியக் கல்வெட்டுகளில் வைகானஸ ஆகமத்தின் அடிப்படையில் திருக்கோயில்களில் ஆராதனங் கள் நடைபெற்றனமையும், வைகானஸர்களுக்கு நில தானம் அளிக்கப்பட்டமைக்கும் சான்றுகள் பல காணப்படுகின்றன. தற்போதும் பல திவ்ய தேசங்களில் வைகானஸ முறை யினாலான ஆராதனங்கள் நடைபெற்று வருகின்றன. உதாரணத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி, வானமா மலை, ஸ்ரீபெரும்பூதூர் போன்றவை.

8. இன்றைக்கு வைகானச ஆகமத்திற்கு சான்றாக இருப்பது, திருமலை கோயிலாகும்.

இ) வைகானஸ இலக்கியம்

வேதங்களே ஆகமங்களுக்கு - குறிப்பாக வைகானஸ ஆகமத்திற்கு, அடிப்படையானவை. ரிக் வேதம் (11-2-26) பகவான் விஷ்ணுவின் பல்வேறு வடிவங்கள் த்யானிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த வழிபாடு, இவ்வுலக, மேலுலக வாழ்க்கைகளின் இன்பத்திற்கு வழிவகுக்கும். பகவான் விஷ்ணுவை விக்ரஹ ரூபத்தில் வழிபட வேண்டும் என்று முன்மொழியப்படுகிறது.

இத்தகைய வழிபாடு, வேள்விகள் நடத்துவதைக் காட்டிலும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. எவ்விடத்திலும் வ்யாபித் திருப்பவனான பகவான் விஷ்ணு, அவன் பக்தர்கள் விரும்பும் வடிவத்தை ஏற்று, அவர்களால் வழிபடப்பட்டு, கருணை யுடன் அருள் பாலிக்கிறான்.

வைகானஸ ஆகமங்கள், நான்கு புகழ் பெற்ற முனிவர்களால் ஏற்படுத்தப்பட்டது. இவற்றில் ஒன்றரை லக்ஷம் க்ரந்தங்கள் உண்டு. ஓர் க்ரந்தம் என்பது 32 எழுத்துக்கள், அநுஷ்டுப் சந்தத்தில் அமைந்த ஓர் பகுதி. அத்ரி, ப்ருகு, கச்யபர் மற்றும் மரீசியால் இயற்றப்பட்ட இந்த வைகானஸ ஆகம பாடங்கள் இவ்வாறு புகழப்படுகின்றன:- ‘‘இவை வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை, குற்றமற்றவை; சான்றாதாரங்களாக இருக்க தகுதிபெற்றவை. இவை பகவான் விஷ்ணுவின் வழிபாட்டை விளக்குகின்றன’’

நான்கு ரிஷிகள் இயற்றிய நூல்களின் விவரம்:-

1) அத்ரி:- பூர்வ, ஆத்ரேய, விஷ்ணு மற்றும் உத்ரதந்த்ர எனப்படும் நான்கு தந்த்ரங்கள்.-மொத்தம் 88,000 க்ரந்தங்கள்.

2) ப்ருகு:- கில, புராதந்த்ர, வாசாதிகார, சித்ராதிகா, மந்தாரக க்ரியா அர்ச்சா, யஜ்ஞா, வருணப்ரகீர்ணா, நிருக்தா, கிலஅதிகார என 13 தந்த்ரங்கள். - மொத்தம் 64,000 க்ரந்தங்கள்.

3) கச்யபர்:- சத்யா, தர்க்கா மற்றும் ஓர் நூல் ஆகிய மூன்று காண்டங்கள்-மொத்தம் 64,000 க்ரந்தங்கள்.

4) மரீசி:-- ஜெய, ஆனந்தம், சம்ஜுன, வீரா, விஜயா, விஜித், விமலா, ஞானா என்று 8 ஸம்ஹிதைகள். மொத்தம் 1,84,000 க்ரந்தங்கள்.

ஈ) வைகானஸ ஆகமத்தின் கிளைகள்

‘விமாநார்ச்சன கல்ப ஸூத்ரம்’ என்பது, ஆறு வேதாந்தங்களின் முக்கியமான துணைப்பகுதி. இதில் மூன்று தெளிவான பகுதிகள் உள்ளன.

1) ஸ்மார்த்த ஸூத்ரங்கள்:- இவை, கரு உண்டாவ திலிருந்து (நிஷேகம்) இறுதிச் சடங்கு வரை (அந்த்யேஷ்டி) எல்லாச் சடங்குகளையும் விவரிப்பது.

2) ச்ரௌத ஸூத்ரங்கள்:- அக்நிஷ்டோமம், சாதுர் மாஸ்யம் போன்ற வேள்விகளை விளக்குவது.

3) தர்ம ஸூத்ரங்கள்:- சட்டங்கள், கடமைகள், சமூகம் குற்றவியல் தொடர்பான நீதி, சட்டங்கள், ஆகியவற்றை விவரிப்பவை.

ச்ரௌத ஸூத்ரத்தின் பகுதியான கல்ப ஸூத்ரம், யாக குண்டங்களின் அளவை விளக்குகிறது. ஸ்மார்த்த ஸூத்ரத் தின் பகுதியான அத்யாத்ம ஸூத்ரம் ‘‘தான்’’ என்னும் எண்ணத்தைக் குறித்த விஜ்ஞானத்தை விளக்குகிறது. 18 கல்ப ஸூத்ரங்களின் முக்யமான சில ‘ஆபஸ்தம்பம்’, ‘ஆஶ்வலாயனம்’, ‘அக்நிவேஷ்யம்’, ‘காத்யாயனம் போன்றவை.

இவ்வாறு வைகானஸ ஆகம ஸூத்ரங்கள், ‘பாகவத சாஸ்த்ரம்’ என்று அழைக்கப்பட தகுதி பெற்றவை ஆகின்றன. இவை, பகவான் விஷ்ணுவின் விக்ரஹங்களை, கோயில் களிலும், இல்லங்களிலும் ப்ரதிஷ்டை செய்து வழிபடும் முறைகளைப் போதிக்கின்றன.

உ) வைகானஸ ஆகமத்தின் உள்ளடக்கம்

1. பகவான் விஷ்ணுவே மிக உயர்ந்த தத்துவம். இதை அடைவிக்கும் வழியாக இருப்பது, அவனை உருவம் உடையவனாகவும், உருவமற்றவனாகவும் வழிபடுவதாகும்.

2. உருவமுடையவனாக வழிபடுவது இரண்டு வகைப்படும். அவை:- இல்லங்கள் மற்றும் கோயில்களில் வழிபடுதல். கோயிலில் வழிபடுவது நேராக மோக்ஷத்திற்கு வழிவகுப்பதால், இரண்டினுள் இது சிறந்தது.

3. எல்லா வைகானஸ நூல்களும், பகவான் விஷ்ணு வின் புகழைப் பாடுபவையே.

4. பகவான் விஷ்ணு, வேத மந்த்ரங்களால் துதிக்கப்பட வேண்டும்-இந்த வழிபாடு நான்கு பாதங்களை உடையது.

வைகானஸ ஆகமங்கள், அர்ச்சகர்களின் தகுதியையும், அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் தெளிவாக விளக்குகின்றன. அவர்கள் தம் கடமைகளை சிறப்பாகவும், கவனத்துடனும் ஆற்றவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. உயர்ந்த கல்வியும், சிறந்த பண்பும் உடையவர்கள், முறையாக தீக்ஷை பெற்று, அர்ச்சகர்கள் ஆகும் பொழுது, அவர்கள் பாகவதர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். தம்மையே விக்ரஹ வழிபாட்டிற்கு அர்ப்பணம் செய்துகொண்ட அர்ச்சகர்கள், கற்சிலையையும் தெய்வ மாக்கும் சக்தி பெற்றவர்கள் எனப்படுகிறது. செல்வத்திற்காக வழிபாடு செய்யும் அர்ச்சகர்களை நிந்திக்கிறது வைகானஸ ஆகமம்.

வைகானஸ ஆகமத்தின்படி நடைபெறும் வழிபாடு உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் அமைதி (சௌம்ய) மற்றும் இரக்கம் (ஸ்ரீகர) ஆகியவற்றை வழங்குவதாக அறியப்படுகிறது. இதற்கு பிரதிநிதியாக விளங்குவது திருமலையில் நடைபெறும் வழிபாடு. எனவே வைகானஸ ஆகமம் என்பது, ஸ்ரீவைஷ்ணவத்திற்குப் பொதுவான வழிபாடு முறையென்றால், ஸ்ரீநிவாஸனை வழிபடும் மரபு அதன் சிறப்பான பகுதி எனலாம்.*

12

தர்சனங்கள்

‘தர்சனம்’ என்றால், ‘கண்ணோட்டம்’ அல்லது ‘காட்சித்திறம்’ அல்லது ‘சமயம் தொடர்பான நோக்கு’ என்று பொருள் கொள்ளலாம். அறிவிற் சிறந்த சான்றோர்கள், தத்துவங்களை, தாங்கள் புரிந்துகொண்ட விதத்தில், தங்கள் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, இந்த தர்சனங்களை அமைத் துள்ளார்கள். இவை வேதங்களை அடிப்படையாகக் கொண்ட, தொன்மை வாய்ந்த பள்ளிகளைச் சார்ந்தவையாகவோ. வேதத்தை ஏற்காதாவையாகவோ உள்ளன.

அறிவிற்சிறந்த சான்றோர்கள், தாங்கள் அறிந்து கொண்ட விதத்தில், புரிந்துகொண்ட விதத்தில், வேதத்தி லுள்ள கருத்துக்களை, பலவகைப்பட்ட முறைகளில் விளக்கி னார்கள். இவ்வாறு விவரிக்கப்பட்ட தர்சனங்களின் எண்ணிக்கை ஆறு. இவை மனித வாழ்க்கையின் இறுதியான இலக்கான, உண்மை அறிவைப் பெறுவதைக் கற்பிப்பதால், ‘‘ஷட் தர்சனங்கள்’’ எனப்படுகின்றன.

தர்சனங்களில் காணப்படும் பொருளடக்கம்

தர்சனங்களில், பெருமைக்குரிய ரிஷிகள் வடிவமைத்த ஸூத்ரங்களும், மூதுரைகளும் காணப் படுகின்றன. இவை புரிந்து கொள்வதற்குக் கடினமானவை. இந்த ஸூத்ரங்களுக்கு விளக்கம் எழுதிய ஞானிகள் ‘பாஷ்யகாரர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவற்றில், தர்சனங்களில் காணப் படும் தத்வங்களுக்கு, பகுத்தறி வதற்கு ஏற்ற வகையில், புரியும் வகையில் விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. வேதத்திலுள்ள பாடங்களுக்கு விளக்கமளிக்கும் இந்த தர்சனங்களைப் புரிந்து கொள்வதற்கு சிறந்த அறிவும், உயர்ந்த கல்வியும் மிகவும் அவசியம்.

தர்சனங்களின் வகைகள்

‘இறைவன் என்னும் உயர்ந்த தலைவன் இருக்கிறானா இல்லையா?’ என்னும் நம்பிக்கையின் அடிப்படையில், தர்சனங்கள் மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:-

1. ஆஸ்திக தர்சனங்கள்:- ‘இறை நம்பிக்கை கொண்டவர் களின் தர்சனங்கள்’

2. நாஸ்திக தர்சனங்கள்:- ‘‘இறைவன் என்ற ஒருவன் இல்லை’’ என்று நினைப்பவர்களின் தர்சனங்கள்.

3. த்வாஸ்திக தர்சனங்கள்:- ‘விதி’ அல்லது ‘நடப்பவை’ நம் தடுப்பாற்றலை மீறியவை என்று நம்புபவர்களின் தர்சனங்கள்.

முக்கியமான ஆறு தர்சனங்கள்

1. நியாய தர்சனம்:- இது அக்ஷபாத கௌதம ரிஷியால் கி.மு.300-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது, தர்க்கரீதியான ஆய்வை வலியுறுத்துகிறது. ‘அறிதல்’ மற்றும் ‘அறிந்ததை ஆராய்தல்’ ஆகியவை இந்த தர்சனத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

இரண்டிரண்டு பகுதிகளைக் கொண்ட ஐந்து அத்யாயங்கள், 537 ஸூத்திரங்கள் கொண்ட நியாய தர்சனம், தர்க்கத்தையும் விவாதத்தையும் முக்கியமான கட்டமைப்பாகக் கொண்டது.

இந்த தர்சனம், ‘‘அணுவளவான ஆத்மா, உடலைக் காட்டிலும் வேறுபட்டது; சம்சாரம் என்னும் வலைக்குள் அகப்பட்ட இந்த ஆத்மா விடுபடும்வரையில், ஓர் உடலி லிருந்து மற்றோர் உடலுக்கு மாறி, மாறி செல்கிறது. மிக உயர்ந்ததும் இறுதியுமான இலக்கை உணர்கையில், இந்த ஆத்மா விடுபடுகிறது’’ என்னும் கொள்கையை உடையது. இந்த தர்சனம்.

மனிதன், இங்கே பூமியில் வாழ்கையில், அவன் அறிவு மற்றும் உணர்ச்சிகள் சார்ந்த வாழ்விற்கு, ‘மனம்’ என்னும் தத்துவமே காரணம், இந்த மனமே, அவன் தன் புலன்களால் உணர்வதைத் தூண்டுகிறது. அவ்வாறு உணர்ந்தவற்றை நினைவில் சேமிக்கிறது; தேவையான சமயத்தில் அவற்றை நினைவுபடுத்துகிறது. கனவுகளை ஏற்படுத்துகிறது. ஐயம், மயக்கம், அறிதிறன், முடிவு எடுப்பது, ஆகிய இன்பதுன்ப உணர்வுகள் அனைத்திற்கும், மனமே காரணம். இவர்கள் கொள்கைப்படி, ‘‘மனம்’’ என்பது ஒன்று மட்டுமே ‘‘அந்த: கரணம்’’ (உள்ளுறை உணர்வு கருவி).

கௌதமரின் கொள்கைப்படி, ‘‘ஆத்மா’ என்பது ஓர் ‘‘த்ரவ்யம்’’ அல்லது ‘பொருள்’. ‘அறிதிறன்’ அதன் ஓர் குணம். இந்த ஆத்மா, தன் மனதை அடைகிறது. மனம் புலனுறுப்பு களை அடைந்து, புலனுறுப்புகள் அவை நுகரும் பொருள்களை அடைகின்றன. இதுவே அறிதிறன் என்னும் ‘கருத்தியல்’ அல்லது ‘ஊகக்கோட்பாட்டை’ விளக்கப் போதுமானது.

நியாயதர்சனத்தின்படி ‘‘ஆத்மா’’ என்பது, ‘‘விபு’’ அதாவது எங்கும் வ்யாபித்திருப்பது. மற்ற எல்லாமே ‘‘அணு’’ அதாவது நுண்ணியவை. மனம் என்பது, விளக்க இயலாத முறையில் வெளி உலகிற்கும் உள்ளுணர்விற்கும் இடையே சமரசம் செய்யும் ஓர் மர்மமான தத்துவம். இது, ஆத்மாவிற்காக, அதன் இரட்டைபோல் எல்லா வேலைகளையும் செய்யும் ஆற்றல் பெற்றது. ஆனால், ஆத்மாவின் ‘‘விபுத்வம்’’ இதற்குக் கிடையாது. இந்த மனமே, மனிதன் அநுபவிக்கும் எல்லா துன்பங்களுக்கும் காரணம். நியாய தர்சனத்தில், இறுதியில் வீடு பேற்றிற்குத் (விடுதலைக்குத்) தடையாக இருக்கும் இன்பமான அநுபவங்களும், ‘துன்பம்’ என்றே அழைக்கப்படுகின்றன.

நியாய கோட்பாட்டில் ‘‘புத்தி’’ எனப்படுவது, ஆத்மாவின் உடைமை. அது என்றும் நிலைத்திருப்பதல்ல. இது மனதின் உடைமை அல்ல. இது மனதின் உடைமையாக இருக்குமாகில், மனமானது, அறிதிறனுக்குப் பயன்படும் கருவியான ‘‘அந்த: கரணமாக’’ இருக்க இயலாது. அறிபவன், ‘தான்’ எனப்படும் ஆத்மாவே.

மனம் என்பது, நல்ல மற்றும் தீய செயல்களில் ஈடுபடுத்தும் வலிமை வாய்ந்தது என்கிறார், கௌதமர். இதன் தீய செயல்களில் சில:- கெட்ட எண்ணங்கள் அல்லது வன்மம், முரண்பாடான எண்ணங்கள், காமம் போன்றவை. நல்ல செயல்கள்;- கருணை, நம்பிக்கை, பிறர்பொருள் மீது ஆசை கொள்வதிலிருந்து விடுதலை ஆகியவை. தோஷம் அல்லது குற்றங்கள், மூன்று தலைப்புகளின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த பிரிவுகள்:- ராகம்:- விருப்பு;. த்வேஷம்-வெறுப்பு; மற்றும் மோகம்:- தவறான அறிவு. இவை காட்டும் விளையாட்டே, சம்சாரம் என்னும் வலை. தத்வ ஞானத்தின் உதவியால், இவற்றைக் களைவதே மோக்ஷம் அல்லது விடுதலைக்கு வழிகாட்டும் கருவி.

நியாய கோட்பாடானது, ‘‘தான்’’ எனப்படும் ஆத்மா. உயிரியல் மற்றும் உளவியல் ரீதியாக, ஞானம்- அறிதிறன்; இச்சை- விருப்பம்; மற்றும் யத்தனம்- முயற்சி ஆகியவற்றை அநுபவிக்கும் திறன் பெற்றது என்கிறது. இந்த மூன்று இயல்புகளும், ஆத்மாவிற்குச் சொந்தமானவை என்கிறது. ஆத்மா என்னும் தத்வம்,’மானஸப்ரத்யக்ஷத்’தைப் பெறுகிறது என்பதை நியாய கோட்பாடு அநுமதிக்கிறது.

பதினாறு விதமான உறுதியான அறிவைப் பெறுவதால், வீடு பேற்றை அடையலாம் என்பது கௌதமரின் கொள்கை. அவை:- ஐயம், உட்கருத்து, உதாரணம், முடிவான கருத்து, தர்க்கத்தின் பகுதிகளை உறுதிபடுத்துதல், வாதம், அழிக்கக்கூடிய விமரிசனம், தவறான நம்பிக்கை, விவாதத்தில் மையக் கருத்திலிருந்து விலகிச் செல்வது, அல்லது தவிர்ப்பது, மறுப்பது, எதிர்தரப்பினரின் தவறுகளை சுட்டிக் காட்டுவது போன்றவை.

‘‘ஓர் செயல் ஏற்படுத்தும் பலன், ‘அத்ருஷ்டம்’ எனப்படுகிறது. இறைவன் இதை மேற்பார்வை பார்க்கிறான்; கட்டுப்படுத்துகிறான்; ஆனால் அதை மாற்றுவதில்லை’’ என்பதே நியாய கோட்பாட்டின் கொள்கை.

2. வைஶேஷிக தர்சனம்:- இந்த தர்சனம், ‘‘அணுவே அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணம்’’ என்று கூறுகிறது. இது ‘காணாதர்’ என்னும் ரிஷியால் கி.மு. 6-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது எனப்படுகிறது. இவர்கள், ‘ஈச்வரன்’ என்னும் இறைவன் இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். அண்டம், ‘பரமாணு’ எனப்படும் நுண்ணிய அணுக்களால் ஆனது என்கிறார்கள். இந்த பரமாணு, என்றும் நிலைத் திருப்பது; பகுதிகளற்றது; மிக நுண்ணியது; புலன்களுக்கு அகப்படாத உண்மையான வஸ்துக்கள். அண்டம் உருவாகக் காரணமாக இருக்கும் மண், நீர், தீ மற்றும் காற்று இந்த பரமாணுக்களிலிருந்தே தோன்றுகின்றன என்கிறது, இந்த கோட்பாடு.

பூதங்களின் தோற்றம் இவ்வாறு விளக்கப்படுகிறது: உதாரணமாக, மண் தோன்றுவதற்குக் காரணமான இரண்டு பரமாணுக்கள் ஒன்றாக வந்து சேர்கின்றன. இதன் பெயர், ‘‘த்வயாணுகா’’. இதுவும் பரமாணுவைப் போலவே மிகவும் சிறியது; புலன்களுக்குப் புலப்படாதது. மூன்று த்வயாணுக்கள் பொருந்திஇணைந்து ஓர்’’த்ரையாணுகா’’வை உண்டாக்கு கின்றன. இது, கண்களுக்குப் புலப்படும். சாளரத்தின் வழியாக வீசும் சூரியனின் கதிர்களில், தூசு மிதப்பது கண்களுக்குப் புலனாவது போன்றவை இவை. இதன் அளவு, வரம்பிற்குட் பட்டது. மிகப் பெரியதான மலையிலிருந்து, மிகச் சிறியதான கடுகு வரை, இந்த த்ரையாணுக்கள் ஒன்று சேர்வதால் உண்டாகின்றன. ஓர் பொருளை சேதப்படுத்தி சிதைக்கையில், ஓர் எல்லைக்கு மேல் அதை சிதைக்க இயலாது. இந்த சிதைக்க இயலாத நுண்ணிய வஸ்துவே வைஶேஷிகர்களால் பரமாணு எனப்படுகிறது.

இவ்வாறு பரமாணுக்கள் இணைந்து அண்டத்தை உருவாக்குவது ‘‘அத்ரிஷ்டம்’’ அல்லது ‘காணப்படாத ஒன்று’ என்பது, வைஶேஷிகர்களின் கூற்று. இந்த அண்டம், அணுக்களிலிருந்து உருவானது என்று உணர்ந்து தெளிவதே முக்திக்கு மார்க்கம் எனப்படுகிறது.

வைஶேஷிக தர்சனம், அண்டத்தின் தோற்றத்திற்கு பரமாணுக்களே காரணம் என்று முன் வைக்கும் கருத்து மறுக்கப்படுகிறது. இதற்காக எடுத்துரைக்கப்படும் காரணங்கள்:-

1) பரமாணுக்களிலிருந்து த்வயாணுக்கள் ஏற்பட இயலாது. இதே போல அணுக்களிலிருந்து அண்டத்தின் தோற்றம் ஏற்படாது. இந்த காரணம் விளக்கப்படுகிறது.

இரண்டு பரமாணுக்கள் ஒன்று கூடுகையில், முழுமையாக கூடுகின்றனவா அல்லது பகுதிகளாக மட்டுமா?

அ. முழுமையாக கூடுமாகில் (ஒன்றுபடுமாகில்), அவை ஒன்றினோடு ஒன்று அமிழ்வதால், த்வயாணுக்கள், பரமாணு வின் அளவே இருக்கும். அவ்வாறிருக்க, த்வயாணுக்கள் தம்மைக் காட்டிலும் பெரிய உருவகங்களை எவ்வாறு தோற்றுவிக்கும்?

ஆ. பரமாணுக்கள் ஒன்றின் பக்கம் ஒன்றாக பகுதிகள் மூலம் கூடுகின்றன, அவ்வாறு கூடி, த்வயாணுக்களை உருவாக்கு கின்றன என்று கூற இயலாது. ஏனெனில், வைசேஷிகர்கள் கூற்றுப்படி பரமாணுக்கள், பகுதிகளோ அவயவங்களோ அற்றவை. எனவே, பரமாணுக்கள் இணைந்து அண்டத்தை உருவாக்குகிறது என்னும் கருத்து, முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

2. முதன் முதலில் பரமாணுக்கள் ஒன்றாக வருவதை இயக்கும் சக்தி எது? அது, ‘அத்ருஷ்டம்’ என்றால், அது எங்கிருந்து, எவ்வாறு இயங்குகிறது? இது இயங்குவது ஆத்மாவிலிருந்தா, அணுவிலிருந்தா அல்லது ஈச்வரனின் ஸங்கல்பத்தாலா?

அ) இது தனிப்பட்ட ஆத்மாவிலிருந்து, எனப்படு மாகில், அது தனக்கு வெளியே இருக்கும் அணுக்களின் இயக்கத்தை ஏற்படுத்தும் சக்தியற்றது. ஒருகால், இது இயலுமாகில், ஆத்மா நித்யமானதால் படைப்பு என்பது தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டே இருக்கும்.

ஆ) அது அணுவில் இருந்து இயக்குகிறது என்று கொள்வோ மாகில், அத்ருஷ்டம் உணர்வற்ற அசேதன மானதால், அது, அணுக்கள் ஒன்று சேர்வதை இயக்க இயலாது. மேலும், ஆத்மாவின் செயல்பாட்டால் ஏற்படும், அத்ருஷ்டம் அணுக்களில் உறையமுடியாது.

இ) ஈச்வரன் ‘அத்ருஷ்டத்தை இயக்குகிறான் என்பது பொருத்தமாக இருக்கும். அவர், தன் ஸங்கல்பத்தால் பரமாணுக்களை, த்வயாணுக்களாகவும், த்ரையாணுக் களாகவும், பொருள்களாகவும் மாற்றுகிறான் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. இதற்கு, உபநிஷத்துக்களில் வேதாந்திகள் காட்டித் தந்தபடி, ஈச்வரனை எல்லாம் அறிந்தவனாக, எல்லா சக்தியும் படைத்தவனாக ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். அப்பொழுது தான், அவன் இந்த அண்டத்தை தன் ஸங்கல்பத்தால் படைக்கிறான் என்று அநுமதிக்கப்படும். ஆனால், வைசேஷிகர்கள் இந்த கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

எனவே, ‘அத்ருஷ்டம்’ என்பது ஆத்மாவையோ, அணுவையோ ஈச்வரனையோ இருப்பிடமாகக் கொண்டு இயங்குவது பொருத்தமாக நிரூபிக்கப்படாததால், ‘அண்டம் பரமாணுக்களிலிருந்து தோன்றுகிறது’ என்னும் வைசேஷிகர் களின் கோட்பாடு ஏற்கத்தக்கதல்ல.

3. சாங்கிய தர்சனம்:- இந்த தர்சனம், கபிலர் என்ற பெயர் கொண்ட முனிவரால் ஏற்படுத்தப்பட்டது. இவர் சிறந்த ஞானி என்றும் எல்லாம் அறிந்தவர் என்றும் ச்ருதியால் கொண்டாடப்பட்டவர். இவர் மற்ற தர்சனங்களை ஏற்படுத்திய, கணாதர் போன்றவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் என்று எண்ணப் படுகிறது. இவர் பகவானின் அம்சம் என்றும், ‘‘வாசுதேவர்’’. என்று பெயர் பூண்டவர் என்றும் அறியப்படுகிறது. இவர், மற்ற தர்சனங்களைக் குறித்து எந்த நூலும் இயற்றவில்லை. தம்முடைய தர்சனமே சிறந்த புருஷார்த்தத்திற்கு (பலனுக்கு) வழிகாட்டும் என்ற கொள்கையை உடையவர், இவர். இவர் இந்த சாங்கிய சாஸ்த்திரத்தை, ஸூத்ர வடிவமாக அமைத்து, தமது சிஷ்யரான ஆஸூரி என்பவருக்கு உபதேசம் செய்தார்.

அவர் தம்முடைய சிஷ்யரான பஞ்சசிகருக்கும், அவர் தொடங்கி சிஷ்ய பரம்பரையாக ஈசுவரக்ருஷ்ணன் என்பவரை இந்த தர்சனம் வந்தடைந்தது. இவர், இந்த ஸித்தாந்தத்தை தெளிவாகவும், சுருக்கமாகவும் 72 ச்லோகங்களில் எழுதி முடித்தார். இந்த நூலின் பெயர், ‘‘சாங்கிய தத்வகாரிகை’’ என்பதாகும். இந்த நூலிலிருந்து சங்கரபகவத்பாதாள் மேற்கோள் காட்டியிருப்பதாலும், ‘கௌடபாதர்’ என்பவர் இந்த நூலுக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியிருப்பதாலும், ஈச்வரகிருஷ்ணர் இவர்கள் காலத்திற்கு முற்பட்டவர் என்பதும், இவர் இயற்றிய நூல் புராதனமானது என்றும் நிலை நிறுத்தப்படுகிறது. சாங்கிய கோட்பாட்டிற்கு விரிவான விளக்கம் எழுதியவர், ‘‘வாசஸ்பதி மிச்ரர்’’ என்பவர். இந்த உரை ‘‘சாங்கிய தத்வ கௌமுதீ’’ என்று வழங்கப்படுகிறது.

சாங்கிய தர்சனத்தில், அண்டத்தின் தோற்றம் விளக்கப்படும் முறை இவ்வாறானது:- அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணமானவை ப்ரக்ருதி மற்றும் புருஷன் ஆகியவை.

ப்ரக்ருதி என்பது ப்ரதானம் என்றும் வழங்கப்படுகிறது. இதை, வேதம் குறிப்பிடாததால் ‘அசப்தம்’ என்றும், அநுமானத்தால் அறியப்படுவதால், ‘ஆநுமானிகம்’ என்றும் வழங்கப்படுகிறது. இது ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களால் அமைக்கப்பட்டது. இது அசேதனமானது. (ஜடப்பொருள்) எப்பொழுதும் நிலைத்திருப்பது. மாற்ற மடைந்து கொண்டே இருப்பது. அண்டம் தோன்றுவதற்கு முன்பு, இந்த ப்ரக்ருதியில் மூன்று குணங்களும் சமநிலையில் உள்ளன. இந்த சமநிலை குலைக்கப்படுகையில், இந்த ப்ரக்ருதி பலவிதமான தரப்படுத்தல்களுக்கு உட்பட்டு, பல்வேறு பொருள்களை உடைய அண்டமாக உருமாறுகிறது.

இந்த ப்ரக்ருதியிலிருந்து பல்வேறு தத்துவங்கள் தோன்றுவது இவ்வாறு விளக்கப்படுகிறது:- ப்ரக்ருதி யிலிருந்து முதலில் தோன்றுவது, ‘‘மஹத்’’. இதிலிருந்து அஹங்காரம் தோன்றுகிறது. இது மூன்று வகைப்படும். ஸாத்விக அஹங்காரத்திலிருந்து தோன்றுவது பதினொரு புலனுறுப்பு கள், (அவை:- கண் போன்ற ஞானேந்த்ரியங்கள் ஐந்து; கைகால் போன்ற கர்மேந்திரியங்கள் ஐந்து; மனம் ஒன்று) தாமஸ அஹங்காரத்திலிருந்து தோன்றியவை ஐந்து நுண்ணிய தன்மாத்திரைகள்; (ஒலி, ஒளி, சுவை, மணம் மற்றும் தொடு உணர்வுகள்). இந்த ஐந்து தன் மாத்திரை களிலிருந்து ஆகாசம், வாயு, தீ, நீர் மற்றும் மண் ஆகிய ஐந்து பூதங்கள் தோன்றுகின்றன. இந்த ஐந்து பூதங்களின் சேர்க்கையால் அண்டம் என்பது உருவாகிறது.

புருஷன் என்பவன் ப்ரக்ருதியிலிருந்து வேறுபட்ட வன். அவன் அறிவுள்ளவன்; நிலையானவன்; எல்லாவற்றை யும் ஊடுருவியிருப்பவன்; மற்றும் மாற்றமில்லாதவன்.

ஸாங்கிய கோட்பாடு இந்த ப்ரக்ருதி மற்றும் புருஷனைத் தவிர ஈச்வரன் என்னும் ஓர் இறைவனை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் ‘ஈச்வரனில்லாமல் ப்ரக்ருதியைக் கொண்டே எல்லாவற்றையும் சாதித்து விடலாம்’ என்று எண்ணுவதாலும், ஈச்வரன் என்பவனை அங்கீகரித்தால், ‘‘கல்பனா கௌரவம்’’ என்ற தோஷம் வரும் என்று நினைப்பதாலும், இவர்கள் சித்தாந்தம், ‘‘நிரீச்வர சித்தாந்தம்’’ என்று அழைக்கப்படுகிறது.

ப்ரக்ருதியும் புருஷனும் இணைந்து அண்டத்தைத் தோற்றுவிக்கும் விதத்தை, இந்த கோட்பாடு இப்படி விளக்குகிறது:- புருஷன் என்பவன் பார்வை உள்ளவனாகவும், இயக்கம் அற்றவனாகவும் கொள்ளப்படுகிறான். ப்ரக்ருதி என்பது பார்வையற்றதாகவும், இயக்கம் உள்ளதாகவும் விளக்கப்படுகிறது. பார்வை உள்ள முடவனோடு, பார்வை யற்ற ஒருவர், சேர்ந்து இயங்க முடிவதுபோல, அறிவுள்ள புருஷனால் கண்காணிக்கப்பட்ட அறிவற்ற ப்ரக்ருதி, இந்த அண்டமாக பரிமளிக்கக்கூடும் என்பது இவர்கள் தரும் விளக்கம்.

சாங்கிய கோட்பாடு, ‘தளையுண்டிருத்தல் மற்றும் ‘விடுபட்டிருத்தலை’ (முக்தி) இவ்வாறு விளக்குகிறது.- நிறமற்ற ஓர் ஸ்படிகக்கல், சிவந்த நிறமுடைய மலரினோடு வைக்கப்படுகையில், அந்த ஸ்படிகம் சிவந்த நிறமுடைய தாகத் தோற்றமளிக்கிறது. சிவந்த மலர் நீக்கப்பட்டால், ஸ்படிகம் மீண்டும் தன் நிறமற்ற தன்மையை அடைகிறது. இதே போல, எப்பொழுதும் தூய்மையான விடுபட்ட நிலையிலுள்ள புருஷன், ப்ரக்ருதியின் விளைபொருளான மனம் அல்லது அந்த:கரணத்தின் வசப்பட்டிருக்கையில், தளையுண்டிருக்கிறான். அந்த:கரணத்தின் செயல்பாட்டி லிருந்து விலகிக் கொண்டால், முக்தியடைந்தவனாகிறான்.

இந்த கொள்கையின்படி ஜீவர்கள் அல்லது புருஷர்கள் பலர். இவர்கள் ‘தாம் ப்ரக்ருதியிலிருந்து வேறுபட்டவர்கள்’ என்று உணராததால் தளையுண்டிருக்கிறார்கள். தாம் வேறுபட்டவர்கள் என்னும் அறிவை, இவர்களுக்கு கற்பிப்பவை ப்ரமாணங்கள் அல்லது சான்றாதாரங்கள். அவை மூன்று வகைப்படும். ப்ரத்யக்ஷம் (நேரில் காண்பது), அநுமானம் (ஒன்றைக் கொண்டு மற்றொன்றின் இருப்பை அறிவது), மற்றும் சப்தம். சப்தம் என்பது வேதச் சொற்றொடர் களைக் குறிக்கும். இவை கபிலரால் உபதேசிக்கப்பட்டுள்ளன.

சாங்கிய தர்சன கோட்பாட்டில், காணப்படும் குறைகள், இவ்வாறு விளக்கப்படுகின்றன:-

1. அறிவற்ற ப்ரக்ருதியானது, அறிவுள்ள ஓர் தத்துவத்தின் மேற்பார்வையில்லாமல் பல பரிமாணங்களையும் பொருள் வகைகளையும் கொண்ட அண்டத்தைத் தானே படைப்ப தென்பது இயலாத காரியம். நூல் இருந்தாலும், அதைத் துணியாக நெய்வதற்கு நெசவாளி அவசியம். மண் இருந்தாலும், அதை மண்பாண்டங்களாக மாற்ற குயவன் தேவை. இவ்விருவரும் அறிவுள்ளவர்கள். மிகப்பெரிய மலைகளும் கடல்களும் இறைவனால் படைக்கப்படுகின்றன என்று வேதங்கள் காட்டித்தருகின்றன. அவ்வாறிருக்க, அறிவற்ற ப்ரக்ருதி எவ்வாறு அண்டத்தைப், ‘படைக்க’ இயலும்?

இதற்கு சாங்கியர்கள் தரும் விளக்கம்:- ‘‘பசுமாடு, உட்கொண்ட பசும்புல் பாலாவதில்லையா? பால் தயிராவ தில்லையா? கடலிலுள்ள நீர்த்துளி மழைமேகமாக மாறுவ தில்லையா? இரும்பு துகள்கள் காந்தத்தால் கவரப்படுவ தில்லையா?’’

  இவையும் நிலை நிற்கக்கூடிய வாதங்கள் அல்ல. இந்த நிகழ்வுகளிலும், மறைமுகமாக அறிவுள்ள ஓர் தத்துவத்தின் பங்கு இருக்கவே செய்யும்.

முடவனும், குருடனும் சேர்ந்து இயங்குவதுபோல், அண்டம், புருஷனாலும், ப்ரக்ருதியினாலும் படைக்கப் படுகிறது என்பதும் பொருத்தமல்ல. ஏனெனில், சாங்கிய கோட்பாட்டின்படி, புருஷன் நித்யமானவன்; எனவே, இதை அடிப்படையாகக் கொண்டு, எக்காலத்தில் அண்டத்தின் தோற்றம் ஆரம்பமாயிற்று என்று உறுதிப்படுத்த இயலாது.

சாங்கியர்கள், புருஷன் தளையுண்டிருப்பதும் முக்திய டைவதும் குறித்துக் கூறும் கருத்துக்களும். ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், புருஷன் ப்ரக்ருதி ஆகிய இரண்டிற்கும், ‘‘சேதனத்வம்’’ என்பது இல்லை. இவை, ‘‘அறி’’வை தம் தர்மமாகக் கொள்ளவில்லை. ப்ரக்ருதியானது, உணர்வற்றது; அறிவற்றது. புருஷன் உணர்வுள்ளவனானாலும், ஸாங்கியர் கள் அவனை அறிவின் இருப்பிடமாக, அறிவிற்கு பொருளாக ஏற்பதில்லை. அவன், ஞானம், விருப்பம், இயங்குவதற்கு யத்தனம் அல்லது முயற்சி ஆகியவை இல்லாத ‘‘நிர்லேப’’ என்கிறார்கள். இப்படிப்பட்ட புருஷன், எவ்வாறு தளைப் பட்டிருக்கவோ, முக்தியடைந்தோ இருக்க இயலும்? இன்பம் துன்பம் ஆகியவற்றை அநுபவிப்பதான தளையையும் அதிலிருந்து விடுபடுவதான முக்தி ஆகிய இரண்டையும் புருஷனுக்கு ஏற்படுத்துவதே ப்ரக்ருதியின் முக்யமான வேலை என்கிறார்கள்.

அவர்கள், ‘‘நித்யமுக்தன்’’ என்று வர்ணிக்கிற புருஷன், எவ்வாறு தளைப்பட்டிருக்கவோ முக்தியடைந் திருக்கவோ இயலும்? இவை தர்க்க ரீதியாக விளக்க இயலாமல் உள்ளன. எனவே, ப்ரதானத்தை (ப்ரக்ருதியை) அண்டத்தின் காரணமாகக் கூறும் சாங்கிய கோட்பாடு ஏற்கத்தக்கதல்ல.

கபிலர் தாம் காட்டும் சாங்கிய தர்சனமே சிறந்த புருஷார்த்த சாதனம் என்று கூறுகிறார். இந்த கோட்பாடு, வேதத்திலுள்ள பல சொற்றொடர்களை மேற்கோள் காட்டு வதால், இது உண்மையோ என்ற ப்ரமிப்பை ஏற்படுத்துகிறது. அவ்வாறு ப்ரமிப்பில் ஆழ்ந்து, இந்த கோட்பாட்டைப் பின்பற்றி உண்மையான புருஷார்த்தத்தை இழந்துவிடக் கூடாது என்பதால் இந்த கோட்பாடு கண்டிக்கப்படுகிறது.

4. பௌத்த தர்சனத்தின் கோட்பாடுகள்:- பௌத்த மதத்தில் நான்கு விதமான கோட்பாடுகள் அல்லது பள்ளிகள் உள்ளன.

  அவை:-1) வைபாஷிகம்; 2) சௌத்ராந்திகம்; 3) யோகாசாரம்; மற்றும் 4) மாத்யாமிகம்.

வைபாஷிகர்களும் சௌத்ராந்திகர்களும் ‘அண்டம் பரமாணுக்களிலிருந்து தோன்றியது’ என்கிறார்கள். அவர்கள் கொள்கைப்படி, இந்த அணுக்கள், ‘க்ஷணிகமானவை’ அதாவது தோன்றியவுடன் ஒரு கணநேரமே நிலைத்து நிற்பவை. எனப்படுகிறது. யோகாசாரர்களும் மாத்யாமி கர்களும் வேறு கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார்கள். இந்த நான்கு கோட்பாடுகளும் வேதாந்த கருத்துக்களுக்குப் புறம்பானவை.

அ) வைபாஷிக கோட்பாடு:- காற்று, நெருப்பு, நீர் மற்றும் மண் ஆகிய தனிமங்கள் (மூலப்பொருள்கள்), அணுக்களால் ஆக்கப்பட்டவை. மண்ணை உண்டாக்கும் அணுக்களுக்கு நிறம், சுவை, தொடு உணர்வு மற்றும் மணம் உண்டு. நீரை உண்டாக்கும் அணுக்களுக்கு, நிறம், சுவை மற்றும் தொடு உணர்வு உண்டு. நெருப்பு அணுக்களுக்கு நிறமும் தொடு உணர்வும், வாயு அணுக்களுக்கு தொடு உணர்வு மட்டுமே உண்டு. இவை ஒன்றிணைந்து நான்கு பௌதிகமான பூதங்களை உண்டாக்குகின்றன. அண்டம் இவை ஒன்றோ டொன்று இணைவதால் உருப்பெறுகிறது. ஆத்மா என்று தனியான ஓர் இருப்பினம் கிடையாது. மனம் என்பது சித்தம் எனப்படுகிறது. வெளியே உள்ள பொருட்களும், உள்ளுறை எண்ணங்களும் கணநேரமே நீடிப்பவை. (க்ஷணிகம்).

  இந்த கோட்பாடு ஏற்புடையதல்ல என்பதற்கான காரணங்கள்.- பரமாணுக்கள் க்ஷணிகமானவை என்கிறார்கள். ‘இவை தோன்றியவுடன் ஒன்றோடு ஒன்று இணைந்து மண் போன்றவற்றை உண்டாக்கும். அவை அடுத்தகணம் ஒருங்கிணைந்து அண்டத்தை தோற்றுவிக்கும்’ என்கிறார்கள். கணநேரமே இருக்கும். பரமாணுக்கள், இதை எப்படி நிறைவேற்றும்? சித்தம் மற்றும் வெளியிலுள்ள பொருள்கள் எல்லாமே க்ஷணிகமானது என்றால், வெளியே உள்ள பொருள்களின் அறிதிறன் கூட சித்தத்திற்கு ஏற்படுவது கடினம்.

ஆ) சௌத்ராந்திக கோட்பாடு:- அண்டத்தின் தோற்றத்தை விளக்குவதில், இவர்களும் வைபாஷிகர்கள் போன்றவர்களே. அவர்களுக்குக் கூறும் மறுப்பு, இவர் களுக்கும் பொருந்தும்.

  இவர்கள் கருத்துப்படி, வெளியே உள்ள பொருள்கள் நேரடியாக அறியப்படுவதில்லை. பொருள் குறித்த அறிதிறன் அடிப்படையில் அநுமானிக்கப்படுகிறது. (முடிவு செய்யப் படுகிறது). இதற்குக் காரணம் வெளியே உள்ள பொருள்கள் கணநேரமே நீடிப்பதால், அறிவு அதை உணர போதிய அவகாசம் கிடைக்காது. எனவே வெளியே உள்ள பொருள் அது மறையுமுன் மனதிடம் ஓர் பதிவை ஏற்படுத்துகிறது. இந்த மனப்பதிவிலிருந்தே நாம் பொருளை இன்னதென்று உணர்கிறோம். இந்த மனப்பதிவு ‘‘ஆகாரம்’’ எனப்படுகிறது.

  இந்த கோட்பாட்டிற்கு மறுப்பானது:- வெளியே உள்ள பொருளானது, தனது உருவத்தை ஞானத்திற்கு மாற்றும் (கொண்டுசெல்லும்) திறனற்றது. மேலும் இந்த கோட்பாட்டின்படி, ஞானம் மற்றும் வெளியே உள்ள பொருள் ஆகிய இரண்டும் க்ஷணிகமானவை. வெளியே உள்ள பொருள் தன் வடிவத்தை ஞானத்திற்குப் ‘பதிவாக’ ஏற்படுத்துவதற்கு முன்பு, அழிந்து விடும். பிறகு, பொருளைக் குறித்த அறிவை, ஞானம் எவ்வாறு பெறும்?

இவர்கள், கண்ணாடியில் முகம் தெரிவதை உதாரண மாகக் கூறுகிறார்கள். இதுவும் பொருத்தமல்ல. ஞானத்திற்கு உருவமில்லை. மேலும், கண்ணாடியில், பாதரசம் பூசப் பட்டிருப்பதால் அது ப்ரதிபலிக்கும். இதைப்போன்ற வரையறுக்கும் காரணிகள் ஞானத்தின் திறத்தில் கிடையாது.

‘அருகருகில் இருப்பதால் இந்த அறிவு ஏற்படும்’ என்று கூறப்படுமாகில், உதாரணமாக தெளிவான மணியின் அருகில் சிவந்த மலர் வைக்கப்பட்டால், மணி சிவந்து காணப்படுவது போன்றது இது என்றால், அதுவும் சரியல்ல. ஏனெனில், பொருள் மற்றும் அறிவிற்குப் பொதுவான சிறப்பம்சம் எதுவும் கிடையாது. பௌதிகமான உருவம் கொண்ட இரண்டு பொருள்களையே அருகருகில் வைக்க இயலும். ஆனால், சௌத்ராந்திகர்கள் கொள்கைப்படி, இரண்டும் (பொருளும் அறிவும்) உருவமற்றவை. மேலும் க்ஷணிகமானவை. எனவே, பொருளின் வடிவம் (ஆகாரம்) அறிவிற்கு எட்டுமாறு, செய்ய இயலாது.

இ) யோகாசாரர்களின் கோட்பாடு:- முன்பு சொன்ன இரு கோட்பாடுகளைப்போல் அல்லாமல், இவர்கள், வெளியே பொருள்கள் இருப்பதையே மறுக்கிறார்கள். இவர்கள் கருத்துப்படி, ‘‘விஞ்ஞானம்’’ எனப்படும் அறிவு ஒன்றே மெய்யானது. அதன் உள்ளடங்கியவை அனைத்தும் போலியானவை. பொருளும் கிடையாது; அதை அறிவதும் கிடையாது. எண்ணங்களின் தொடர்ச்சி மட்டுமே உள்ளது என்கிறார்கள். அறிதிறன் ஏற்படுவதற்கு, மனதில் மறை பொருளாக இருக்கும் பதிவுகளே காரணம்; இது ‘‘வாசனை’’ எனப்படுகிறது. இது, முன்பு ஏற்பட்ட அநுபவத்தின் காரணமாக ஏற்படுவது. இந்த அநுபவம், அதற்கு முற்பட்டதைச் சார்ந்தது, அது அதற்கு முற்பட்டு அதற்கு முற்பட்டு என்று ஓர் ஆரம்பமற்ற தொடராக இருப்பது. இதுவே விஞ்ஞானம். இதன் வெளிப்பாடே ‘பொருள்களை அறிவது’ எனப்படுகிறது. இந்த விஞ்ஞானத்திற்கு மட்டுமே இருப்பு என்பது உண்டு. மற்ற எதற்கும் இருப்பு இல்லை என்பதால், இவர்கள் ‘‘விஞ்ஞானவாதிகள்’’ எனப்படுகிறார்கள்.

இந்த கோட்பாடு இவ்விதம் மறுக்கப்படுகிறது:- நம் வாழ்வில் ‘காண்பவர்’ மற்றும் ‘காணப்படும் பொருள்கள்’ இருப்பதை பார்க்கிறோம். அறிவு என்பது காண்பவர் மற்றும் காணப்படும் பொருள் தொடர்பானது. மேலும், நாம் காணும் பொருள்கள், கனவில் காணப்படுபவை போன்றதல்ல.

‘‘நான் அறிகிறேன்’’ என்பது உள்ளுணர்வு. ‘‘இந்த பொருள் உள்ளது’’ என்பது வெளியே இருப்பது. ‘‘அறிவதும்’’, ‘‘இருப்பதும்’’ எவ்வாறு ஒன்றாக முடியும்? புகையைக் கொண்டு நெருப்பை அறியும் போதிலும் ‘‘புகையும்’’, ‘‘நெருப்பும்’’ வெவ்வேறானவை அல்லவா?

யோகாசார கோட்பாடு நாம் பொருள்களை உணர்வது, கனவு காண்பது போன்றது என்கிறார்கள். கனவில் காணும் பொருள்கள் உண்மையில் இல்லை. அதைப்போலவே, நாம் விழித்திருக்கையில் காணும் பொருள்களும் இல்லை என்கிறார்கள். கனவில் காணும் பொருள்களும், நினைவில் காணும் பொருள்களும் வெவ்வேறு என்னும் அடிப்படையில் இந்த வாதம் தள்ளப்படுகிறது. விசிஷ்டாத்வைத ஸித்தாந் தத்தின்படி, கனவில் காணப்படும் பொருள்களும், உண்மை யானவையே. இவை ஈச்வரனால் படைக்கப்படுகின்றன. இந்த உண்மை உபநிஷத் சொற்றொடர்களில் காணப்படுகிறது. உறக்கம் கலைந்து எழுந்தவுடன் இவை மறக்கப்படுவதால் இது உண்மையல்ல என்று எண்ணப்படுகிறது.

போலியாக அறிவதற்கும் கூட, வெளியே ஓர் பொருளின் இருப்பு அவசியம். முத்துச் சிப்பியை வெள்ளியாக அறிவது, போலியான அறிவுதான். ஆனால், முத்துச்சிப்பியே இல்லையென்றால், அது ‘‘வெள்ளி’’ என்று தவறாக, எவ்வாறு அறியப்படும், எனவே நம்முடைய எல்லா அறிவும் வெளியில் உள்ள பொருள்களின் உண்மையான இருப்பைச் சார்ந்தே உள்ளது.

ஈ) மாத்யாமிக கோட்பாடு:- இவர்கள் கருத்துப்படி, வெளி உலகில் எந்த பொருளுக்கும், ‘‘இருப்பு’’ என்பதே கிடையாது. அண்டம், ‘‘சத்’’ எனப்படாது. அது சத்தாக இருக்குமாகில், அது எல்லா இடத்திலும், எப்பொழுதும் ஒரே வடிவில் இருக்கவேண்டும். அதன் ‘‘ஸ்வரூபம்’’ மாற்றத்திற்கு உட்படாததால், அது வேறுவிதமான வடிவத்துடன் இருக்க இயலாது. அண்டத்தில் எந்த பொருளும், ‘‘அசத்’’தின் வடிவமானது அல்ல. அசத்தாக இருப்பது அறிவால் அறியப்படாது. ஆனால், அண்டத்தில் உள்ளவை அறியப் படுகின்றன. அது, ‘‘சத்’’, ‘‘அசத்’’ இரண்டாகவும் இருக்க இயலாது. மேலே கூறிய காரணங்களால், ‘‘சத்’’, மற்றும் ‘‘அசத்’ அற்றதாகவும் இருக்க இயலாது. (அதே காரணங் களால்) இவை நான்கு மட்டுமே விளக்கக்கூடிய செயல் வகைகளாக இருக்க முடியும்.

  ‘மெய்யானது’ என்று கருதப்படும் ‘‘தத்துவம்’’ இந்த நான்கு பண்புகளால் விவரிக்கப்பட இயலாதது. தத்வம் என்பது உண்மையுமல்ல, போலியுமல்ல, உண்மையான போலியுமல்ல, உண்மை மற்றும் போலியிலிருந்து வேறு பட்டதும் அல்ல. ஆனால், மேலே விளக்கப்பட்ட நான்கு வகைகளைக் காட்டிலும் வேறுபட்டது. எனவே, தத்வம் என்பது, ‘‘சதுஷ்கோடி விநிர்முக்தம்’’ எனப்படுகிறது. அதாவது, அது, ‘‘சூன்யம்’’. மாத்யாமிகர்கள் கருத்துப்படி, அது இன்ன தென்று உறுதிப்படுத்த இயலாத ஒன்று. இதுவே, ‘‘தத்வத்தின்’ இயல்பானால் அண்டமும் பொருள்களும் ‘‘இருப்பு’ என்பதை பெற்றவையல்ல.

இந்த ‘‘ஸர்வசூன்யவாதம்’’ ஞானிகளால் முழுவதுமாக ஒதுக்கப்படுகிறது. தத்வம் சர்வசூன்யமானது என்பது சரியல்ல. ‘சூன்யம்’, ‘துச்சம்’ (இருப்பு, இல்லாதது) ஆகிய சொற்கள் எதிர்மறையான பொருளைக் காட்டுமே தவிர, இருப்பையே முழுவதுமாக மறுப்பவை அல்ல. ஒரு பொருள் இல்லையென்றால், அது வேறு எங்கேயோ ஏதோ ஒரு சமயத்தில் உள்ளது என்றே பொருள்படும். ‘‘ஆகாசத்தாமரை’’ என்பதைப்போல, இல்லாத ஒன்றைக் குறிப்பதாகாது எனவே, ‘‘எல்லாமே சூன்யம்’’ என்னும் வாதம் நிலை நிற்காது. ‘‘இங்கே இல்லாத ஒன்று’’ வேறு எங்கேயோ எப்பொழுதோ இருக்கவே செய்யும்.

இந்த மாத்யாமிக கோட்பாடு ப்ரமாணங்களால் நிரூபிக்கப் பட்டதா? இல்லையா? இந்த கோட்பாடு, ப்ரமாணங்களை ஏற்குமாகில், அதன் கொள்கைகள் நிரூபிக்கப்படமாட்டா. ப்ரமாணங்களை ஏற்காவிட்டால், இந்த கோட்பாடு தோற்கடிக் கப்படும். எதிர் தரப்பினரின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படும். அதாவது, ‘ஸர்வசூன்யத்வம்’ என்னும் கோட்பாடு ஒதுக்கப் படுமாகில், அண்டம் உண்மையானது என்னும் எதிர்தரப்பினர் கருத்து நிலை நிறுத்தப்பட்டுவிடும்.

மாத்யாமிகர்கள் தங்கள் கோட்பாட்டை ‘‘ஸம்வ்ருத்தி’’ என்னும் கொள்கையால் நிலை நிறுத்த முயற்சிக்கிறார்கள். இது, இல்லாததை இருப்பதுபோல தோன்றச்செய்யும் ஓர் மாயை. இது அத்வைதிகளின் மாயாவாதம் போன்றது. இந்த ஸம்வ்ருத்தியை கடைபிடிப்பதாலும் அவர்கள் தங்களுடைய ‘ஸர்வசூன்யவாத’த்தை நிலை நிறுத்த இயலாது

5. ஜைனமத கோட்பாடு:- ஜைனர்களும், இந்த அண்ட மானது பரமாணுக்களிலிருந்து தோன்றுகிறது என்னும் கொள்கையை உடையவர்கள். ஈச்வரனே படைப்பிற்குக் காரணம் என்பதை அவர்கள் ஏற்பதில்லை.

இந்த கோட்பாட்டில், ஜீவர்கள் மற்றும் அஜீவர்கள் என்பவர்கள் விவரிக்கப்படுகிறார்கள். ஆறு வகைப்பட்ட ‘‘த்ரவ்யங்களை’’ அநுமதிக்கிறார்கள். அவை ஜீவன், தர்மம், அதர்மம், புத்கலா, காலம் மற்றும் ஆகாசம். புத்கலா என்னும் தத்வம் ரூபம், ரஸம், கந்தம், மற்றும் ஸ்பர்சத்தை உடையதாக அறியப்படுகிறது. (வடிவம், சுவை, மணம் மற்றும் தொடு உணர்வு) இது இரண்டு வகைப்படும். அவை; பரமாணு மற்றும் பரமாணுக்களின் கூட்டுத்தொகை (பல் கூட்டுத் திரட்டு) காற்று, நீர், நெருப்பு, மற்றும் மண் ஆகியவை இந்த கூட்டுத் தொகையால் ஆனவை.

இவர்கள் கொள்கையின்படி, பொருள்கள் சீரான குணத்தை உடையவை அல்ல. வெவ்வேறு கோணங்களில் காண்கையில், அவை வெவ்வேறாகத் தென்படும். இதை ‘‘அநேகாந்தா’’ என்கிறார்கள். இதற்கு உதாரணம், ‘‘அணுக் களின் கூட்டுத்தொகையால் உருவான குடம், ஓர் த்ரவியமே. ஆனால், அது ஆகாசம் போன்ற ஓர் திரவியம் அல்ல. இவ்வாறு ஓர் கருத்தைக் கொண்டிருப்பதால், பொருள்கள் ‘வேறு பட்டவை’ மற்றும் ‘வேறுபடாதவை’ என்று முடிவெடுக்கப் படுகிறது.

இந்த கண்ணோட்டத்தை நிலைநிறுத்த இவர்கள் ‘‘ஸ்யாத்வாதம்’’ அல்லது, ‘‘சப்தபங்கி’’ என்னும் விதியைக் கடைப்பிடிக்கிறார்கள். ‘‘ஸ்யாத்’’ என்றால், ‘‘இருக்கலாம்’’ என்று பொருள் படும். ‘‘சப்தபங்கி’’ என்றால், ஏழு படிப்பட்ட ஓர் விதி. இந்த விதி கீழ்க்கண்டவாறு பயன்படுத்தப்படுகிறது. இதன்படி, ஏழு விதமான மாற்று வழிகள் அறியப்படுகின்றன.

1) ஸ்யாத் அஸ்தி:- இருக்கலாம்;

2) ஸ்யாத் நாஸ்தி:-இல்லாதிருக்கலாம்;

3) ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச:- இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்;

4) ஸ்யாத் அவ்யக்தவ்யம்:- விளக்க இயலாததாக இருக்கலாம்;

5) ஸ்யாத் அஸ்தி ச அவ்யக்தவ்யம்:- இருக்கலாம் விளக்க இயலாததாக இருக்கலாம்;

6) ஸ்யாத் நாஸ்தி ச அவ்யக்தவ்யம்:- இல்லாமலும் விளக்கஇயலாததாக இருக்கலாம்;

7) ஸ்யாத்அஸ்தி ச நாஸ்தி ச அவ்யக்தவ்யம்:-இருக்கலாம், இல்லாதிருக்கலாம், விளக்க இயலாததாகவும் இருக்கலாம்.

  ஜைனர்கள் இந்த ஏழுபடியான விதியை பொருள் களுக்கும், ‘‘பர்யாயங்கள்’’ என்று அழைக்கப்படும் அதன் பண்புகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த ‘பர்யாயங்கள்’ என்பவை, தரப்படுத்தல்கள். இவை தற்செயலாக நேர்பவை. ஒத்த பொருள்களில் ஒரே நேரத்தில் பொருளும் அதன் செயல்வகைகளும் அநுமதிக்கப்படுவதால், நிரந்தரமான தன்மையும் மாறுதலும் ஒரே நேரத்தில் காணப்படும். நிலையான இருப்பினமாகப் பார்க்கையில் ஓர் பொருள் நிலையானது (நித்யம்) மற்றும் வேறுபாடற்றது (அபின்னம்) அதே வேளையில் அதன் பல்வேறு தரப்படுத்தல்களைக் கணக்கிலெடுத்தால் அது நிலையற்றது, வெவ்வேறானது (பின்னம்).

இவ்வாறான பண்புகள் ஒரே பொருளில் ஒரே நேரத்தில் இருக்க இயலாது என்னும் அடிப்படையில் இந்த கோட்பாடு ஒதுக்கப்படுகிறது. இருப்பும் (ஸத்வ) இல்லாமையும் (அஸத்வ) ஒரே பொருளில் ஒரே நேரத்தில் இருக்க இயலாது. ஏனெனில், இவை ஒன்றுக்கொன்று நேர் எதிரான பண்புகள். ஓர் பொருளின் திறத்தில், அது, ‘‘உள்ளது’’, ‘‘இல்லை’’ என்று சில வரையறைகளுக்கு உட்பட்டு கூற இயலும். இந்த வரையறுக்கும் விதிகள், ‘‘உபாதி’’ எனப்படுகிறது. இதற்கு உதாரணம் ஓர் குடம் இப்பொழுது உள்ளது. வேறு ஓர் சமயத்தில் இல்லாமல் இருக்கலாம். குடம் ஓர் இடத்தில் இருக்கும், வேறு இடத்தில் இல்லாமல் இருக்கலாம். அது குடமாக இருக்கும், வேறு பொருளாக இருக்காது. ஒர் பொருளை பொருத்தமட்டில், ‘‘அஸத்வம்’’, அல்லது ‘‘இல்லாமை’’ உபாதியை அடிப்படையாகக் கொண்டே அமையும். ஆனால், ஜைனர்கள் தங்கள் சப்தபங்கி முறை பயன்படுத்தி, ‘‘உபாதி’’ இல்லாமல் அசத்வத்தை நிலை நிறுத்த முயல்வது (நிருபாதிக அஸத்வம்) தர்க்க ரீதியாக நிலைநிற்காத கொள்கையாகும்.

இந்த கோட்பாட்டில் காணப்படும் மற்ற குறைகள்:-

அ) உடல் எந்த அளவோ, ஜீவனும் அதே அளவு; ஆ) முக்தியடைந்த நிலையில் அவன் உடலுடன் தொடர்பு கொண்டிருக்கும் போதிலும், ஜீவன் விபுவானவன். இ) முக்தி என்பது தொடர்ந்து மேல் நோக்கிச் செல்லும் இயக்கம்; ஈ) தர்மமும் அதர்மமும் ஆகாசத்தைப் போல ஊடுருவி இருப்பவை. உ) பூமியானது எப்பொழுதுமே கீழ்நோக்கி இயங்குகிறது.

இவையெல்லாம் உபநிஷத்துக்களுடன் முரண் பட்டவை. தர்க்க ரீதியாக நிலைபெறாதவை.

6. பாசுபத கோட்பாடு:- புராதனமான சைவ மதத்தைப் பின்பற்றும் பாசுபதர்களால் ஏற்படுத்தப்பட்டது, இந்த தர்சனம். இவர்கள் கருத்துப்படி, ஈச்வரனால் மேற்பார்வை பார்க்கப்பட்ட ப்ரக்ருதி, அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணமாகிறது. இதில், ஈச்வரன் அண்டத்தின் தோற்றத்திற்கு ஓர் கருவியாக (நிமித்த காரணம்) பேசப்படுகிறான். ப்ரக்ருதி, மூலப் பொருளாக (உபாதான காரணம்) பேசப்படுகிறது.

இந்த தர்சனம் ஏற்றுக் கொள்ளப்படாததற்கான விளக்கங்கள்:- ஈச்வரன் நிமித்தமாகவும், ப்ரக்ருதி உபாதானமாகவும் இருக்குமாகில், அண்டத்தின் படைப்பு ஓர் குயவன், ஓர் மண் பானையை உருவாக்குவதை ஒத்திருக்கும். ஈச்வரன் குயவனைப்போல செயல்படுவானாகில், அவனுக்கு குயவனைப்போல ஓர் உடல் இருக்க வேண்டும். உடல் இருந்தால், அவன் புண்ய பாவ கர்மங்களுக்கு உட்படுவான். இன்பதுன்பங்களை அநுபவிப்பான். இவை ஈச்வரன் திறத்தில் காணப்படாதவை. ஒருகால், ப்ரக்ருதியைக் கொண்டு அண்டத்தைப் படைக்கும் கருவியான ஈச்வரனுக்கு, உடல் இல்லை என்று கொண்டால் அப்பொழுது அவன் ப்ரக்ருதியை மேற்பார்வை பார்க்கும் செயலை மேற்கொள்ள இயலாது. எனவே, இந்த கோட்பாடு குறையுள்ளதாகிறது.

  ருத்ரனை பசுபதியாகக் கொண்டு - அதாவது பசுக்களாகிய ஜீவாத்மாக்களுக்குத் தலைவனான ருத்ரன் - விளக்கப்படும் இந்த மதத்தின் பல சடங்குகள், வேதத்திற்குப் புறம்பானவையாக உள்ளன. அவை:- சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்வது, நரமாமிசத்தை உட்கொள்வது, கபாலத்தில் மது அருந்துவது போன்ற பழக்கங்கள். மற்றும் ‘தீட்சைபெற்று இந்த மதத்திற்குள் வருபவர்கள் எல்லோரும் ப்ராஹ்மணர்கள் ஆகலாம்’ என்னும் கொள்கையும் ஆகும். இவை ஒதுக்கப்படுகின்றன.

மேற்கூறப்பட்ட தர்சனங்களில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து. கண்டிக்க வேண்டியவற்றைக் கண்டித்து, ஒதுக்கவேண்டியவற்றை ஒதுக்கி, பூலோகத்தில் வாழும் மக்களுக்கு சரியான தர்சனத்தையும், முக்தியை அடைய சிறந்த பாதையையும் காட்டி அருள் புரிந்தவர் பகவத் ராமாநுஜாசார்யர் ஆவார். *

13

மீமாம்ஸா ஶாஸ்த்ரம்

வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வார்த்தைகளின் அதிகார ஆணையான தன்மையை நிரூபித்து நிலை நிறுத்துவதே மீமாம்ஸ கோட்பாட்டின் இலக்கு. ‘உண்மையான சான்று இல்லாமல் அடையப்பெறும் அறிவு பயனற்றது’ என்பது மீமாம்ஸகர்களின் கருத்து.

ஒரு பொருளின் தன்மையை உறுதிப்படுத்த, இவர்கள், ப்ரத்யக்ஷம், அநுமானம் மற்றும் சப்தம் என்னும் ப்ரமாணங்களை (சான்றாதாரங்களை) சார்ந்துள்ளார்கள். நேரில் கண்டு பெறும் அறிவு ப்ரத்யக்ஷம். ஒன்றைக் கொண்டு மற்றொன்றின் இருப்பை அறிவது அநுமானம்; சப்தம் என்பது இருவகைப் படும். அவை லௌகீக சப்தம்-அறிவாளிகளால் காட்டப்படும் சான்றுகள்.; வைதீக சப்தம்- வேதம் காட்டித்தரும் சான்றுகள். ‘வேதத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் செயல்களே ‘‘தர்மம்’’ எனப்படும்’ என்பது இவர்கள் கொள்கை.

இந்த மீமாம்ஸை சாஸ்த்திரம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

அவை:- அ) பூர்வ மீமாம்ஸை அல்லது கர்ம மீமாம்ஸை; ஆ) உத்தர மீமாம்ஸை அல்லது ப்ரஹ்ம மீமாம்ஸை.

அ) பூர்வ மீமாம்ஸை:- இது மிகவும் தொன்மை வாய்ந்த தர்சனம். இது ஜைமிநி என்னும் ஆசிரியரால் உருவாக்கப் பட்டது. கி.மு.4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர். வேதங்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டவை. அவை பூர்வகாண்டம் அல்லது கர்மகாண்டம் மற்றும் உத்தரகாண்டம் அல்லது ஞானகாண்டம். வேதத்தின் பூர்வகாண்டத்தை விளக்குவதால், இந்த சாஸ்த்திரம் ‘‘பூர்வமீமாம்ஸை’’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வுலகில் பல்வேறு பலன்களைப் பெறுவதற்கு கர்மங்கள் ஆற்றப்படவேண்டும். வேள்விகள் ரூபமான இந்த கர்மங்களை விவரிப்பதால், இது கர்ம மீமாம்ஸை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நூலில், வேதங்களில் காணப்படும் அதிகார ஆணைகள் விளக்கப் பட்டுள்ளன. வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ள வேள்வி, சடங்குகளின் விவரம் இதில் காணப்படுகிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேள்விகளை முறை தப்பாமல் மேற்கொள்வதால், உறுதியாக அதற்குத் தகுந்த பலன் கிடைக்கும் என்று அறிவுறுத்துகிறது. ‘தர்மம் என்றால் என்ன’ என்பது இதில் ஆராயப்படுகிறது. வேதம் மற்றும் அதைச் சார்ந்த சாஸ்த்திரங்கள் விதிக்கும் ஆணைகளுக்கு ஏற்று நடப்பதே தர்மம் எனப்படுகிறது.

இந்த அண்டம் என்பது, எப்பொழுதுமே உள்ளது. அதில் ஏற்படும் பல்வேறு வெளிப்பாடுகளுக்குக் கர்மமே காரணம் என்கிறது. இந்த கர்மம் மூன்று வகைப்படும்.

அ. விரும்பியதை அடைவதற்காக மேற்கொள்ளும் செயல்கள், காம்ய கர்மம்.

ஆ. வேதத்தால் தடைசெய்யப்பட்டது நிஷித்தகர்மம்;

இ. தினமும் ஒவ்வொருவராலும் தவறாமல் ஆற்றப்பட வேண்டிய நித்ய கர்மம்.

ஆத்மா நித்யமானது எனப்படுகிறது. இந்த ஆத்மா பொருள்வகையான வாழ்விலிருந்து விடுபடுவதே மோக்ஷம் எனப்படுகிறது.

இந்த பூர்வமீமாம்சையில், 16 அத்யாயங்கள் உண்டு. இவை ஜைமிநியால் இயற்றப்பட்டது எனப்பட்ட போதிலும், ஜைமிநி இயற்றியது 12 அத்யாயங்களே, இறுதியான நான்கு அத்யாயங்கள் ஸங்கர்ஷணர் என்பவரால் இயற்றப்பட்டது என்பது பூர்வாசார்யர்கள் கருத்து. சிலர் 13,14,15 மற்றும் 16 அத்யாயங்கள் காசக்ருஸ்த்னர் என்பவரால் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நான்கு அத்யாயங்கள், ‘‘தேவதா காண்டம்’ என்று அழைக்கப்படுகின்றன. இது வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேவதைகளைப் பற்றி எடுத்துரைக்கிறது. இந்த நூல் அதை இயற்றிய ஆசிரியரின் பெயரால், ‘‘ஸங்கர்ஷண காண்டம்’’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த காண்டத்தில், இறுதியான ஸூத்ரம், ‘‘அவன் விஷ்ணு எனப்படுகிறான்; அவனே ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுகிறான்’’ என்று கூறுவதன் மூலம், விஷ்ணுவே மிக உயர்ந்த இறைவன் என்பதைக் காட்டித்தருகிறது. இந்த இறுதி ஸூத்ரம் ப்ரஹ்ம ஸூத்திரங்களின் தொடக்கத்துடனும் தொடர்பு ஏற்படுத்தித் தருகிறது.

ஆ. உத்தர மீமாம்ஸை அல்லது ப்ரஹ்ம மீமாம்ஸை :- இது வேதத்தின் இரண்டாவது பகுதியான ஞான காண்டத்துடன் தொடர்பு கொண்டது. உபநிஷத் துக்களில் காணப்படும் தத்வார்த்தங்களை விளக்குகிறது. இது, பகவான் வேதவியாசரால் இயற்றப்பட்டது. இதில் நான்கு அத்யாயங்கள் உள்ளன. தன் கருத்துக்களை சுருக்கமான ஸூத்ரங்களாக வடிவமைத்திருக்கிறார், வேதவியாஸர். இவை, வேதாந்த ஸூத்ரங்கள், ப்ரஹ்ம ஸூத்ரங்கள், சாரீரக ஸூத்ரங்கள், வ்யாச ஸூத்ரங்கள், பாதராயண ஸூத்ரங்கள் என்னும் பெயர்களாலும், வேதாந்த தர்சனம் என்றும் அறியப்படுகிறது. இந்நூலில் நான்கு அத்யாயங்கள் உண்டு. ஒவ்வொன்றிலும் நான்கு பாதங்கள். ஆக மொத்தம் பதினாறு பிரிவுகள் உண்டு. இதில் காணப்படும் ஸூத்ரங்களின் எண்ணிக்கை 547. ஒவ்வொரு பாதத்திலும் வேறுபட்ட எண்ணிக்கையில் அதிகரணங்கள் உண்டு. இவை, அவை தெளிவுபடுத்தும் பொருளுக்கு ஏற்ற பெயரைப் பெறுகின்றன. ஒவ்வொரு அதிகரணத்திலும் வேறுபட்ட எண்ணிக்கையை உடைய ஸூத்ரங்கள் அடக்கம்.

வேதாந்த ஸூத்ரங்கள் இடம் பெறும் நான்கு அத்யாயங்களின் பெயர், ஸமன்வயம், அவிரோதம், சாதனம் மற்றும் பலம்.

1) ஸமன்வயம் என்கிற அத்யாயம், ‘ப்ரஹ்மம் ஒன்றுதான் அண்டம் தோன்றுவதற்கும், நிலைப்பதற்கும் லயமடைவதற் கும் காரணம்’ என்பதை விளக்குகிறது.

2) மற்ற தர்சனங்களுடனும், உள்ளுக்குள்ளேயே ஏற்படும் முரண்பாடுகள் விலக்கப்படுகின்றன. இந்த இரண்டு அத்யாயங்களும் உயிரினங்களுக்கும், மிக உயர்ந்த இறைவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன. இது சம்பந்த ஞானம் எனப்படுகிறது.

3) மூன்றாம் அத்யாயம் முக்தி பெறுவதற்கான வழி முறைகளை ஆராய்கிறது. இது அபிதேய ஞானம் எனப்படுகிறது.

4) நான்காம் அத்யாயம் சாதனைகளை மேற்கொள்வதால் கிடைக்கும் பலனைக் கூறுகிறது. இது ப்ரயோஜன ஞானம் எனப்படுகிறது.

இவ்வாறு, பூர்வமீமாம்ஸை, இவ்வுலக வாழ்க்கைக் கான கர்மங்கள், வேள்விகள், அவற்றின் பயன்களை விளக்குவதாக இருக்கிறது. ஆனால், உத்தர மீமாம்ஸையோ வெனில், இவ்வுலக அநுபவங்கள், ‘இனி போதும்’ என்று ஒதுக்கிவிட்டு, பரப்ரஹ்மம் என்பது என்ன, ‘நான் என்பது யார்’ ப்ரம்மத்தை அடையும் வழியாது, அதனால் கிடைக்கும் பயன் என்ன என்பவற்றை ஆராய்கிறது. இக்காரணத்தால், ‘இந்த இரண்டு மீமாம்ஸ சாஸ்த்ரங்களும் வேறு வேறானவையா? ஒரே கோட்பாட்டின் இரண்டு பகுதிகளா? ஒன்றைக் கற்று, பின்பற்ற, மற்றதன் உதவி தேவையா இல்லையா?’ என்னும் வினாக்கள் எழுகின்றன. இவற்றை உருவாக்கிய ஆசிரியர்கள் வெவ்வேறு. பூர்வமீமாம்ஸையில் விளக்கப்பட்டிருக்கும் தத்துவங்கள் கர்மத்தில் பந்தப்படுத்துபவை. இவை உத்தரமீமாம்ஸையில் வேதாந்தம் விளக்கும் முக்திக்கு நேர் எதிரானது. ‘‘வேதாந்தத்தைக் கற்பதற்கு, பூர்வமீமாம்ஸையை அறிந்திருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை’’. என்னும் கருத்து பரவலாக நிலவுகிறது.

இந்த கருத்திற்கு எதிராக, மூன்று வலுவான வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. அவை:-

1) வேள்வி, சடங்குகள் மற்றும் ப்ரஹ்மத்தைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டிருப்பவற்றை அறிய, இந்த இரண்டு மீமாம்ஸைகளும் கற்கப்படவேண்டும்.

2) வேதாந்ததைக் கற்றுத் தெளிந்து உணர, பூர்வமீமாம்ஸை குறித்த அறிவு மிகவும் அவசியம்.

3) பூர்வமீமாம்ஸையும் உத்தரமீமாம்ஸையும் ஒரே சாஸ்த் திரத்தின் இரண்டு பகுதிகளாகும்.

முதல் வாதத்தின் விளக்கம்:- வேதத்தில் காணப்படும் அதிகார ஆணைகளைப் புரிந்து கொள்ள, எல்லா வேதங்களையும் உபநிஷத்துக்களையும் வேதாங்கங் களையும் கற்றுணர வேண்டும் என்னும் அறிவுரை உள்ளது. மேலும், மனிதர்கள் எதிர்பார்க்கும் பலன்கள் நான்கு வகைப்படும். அவை:- அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு எனப் படுபவை. இவை புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. இவை நான்கையும் பெற, வேத வேதாங்கங்கள் எல்லா வற்றையும் குறித்த அறிவு அவசியம். பூர்வமீமாம்ஸையில் விளக்கப் பட்டிருக்கும் ஸ்வர்க்கலோகம் வரையிலான இன்பங்களின் நிரந்தரமற்ற தன்மை உணரப்படுகையில் தான், உத்தர மீமாம்ஸையில் விளக்கப்பட்டிருக்கும் முக்தியின் அழியாத உயர்ந்த தன்மை மனதில் படும்.

இரண்டாவது வாதம்:- உத்தரமீமாம்ஸையில் கூறப் பட்டிருக்கும் விஷயங்களைப் புரிந்து கொள்ள, உண்மையில் பூர்வமீமாம்ஸை உதவுகிறது. பூர்வமீமாம்ஸை முதல் அத்யாயம் வேதங்களில் உள்ள கட்டளைகள் அதிகார பூர்வமானவை என்பதை நிலைநிறுத்துகிறது. இது உத்தர மீமாம்ஸை விளக்கும் வேதாந்தங்களைப் புரிந்து கொள்ள மிகவும் அவசியமானது. பூர்வமீமாம்ஸையில், தத்துவங் களிடையே உள்ள வேறுபாட்டை விளக்கும் இரண்டாம் அத்யாயம் வேதாந்தத்தின் மூன்றாம் அத்யாயம் மூன்றாம் பகுதியிலுள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. மூன்றாம் அத்யாயம் காட்டித்தரும் விளக்கங்கள் வேதாந்தம் முழுவதை யும் புரிந்து கொள்ள உதவுகிறது. வர்ணங்களுடன் தொடர்பு கொண்ட சடங்குகள், ஆச்ரமங்களுக்கு மட்டும் உரியதா அல்லது ப்ரஹ்ம வித்யையை அறிவதற்கு உதவுமா என்பது, பூர்வமீமாம்ஸையின் நான்காவது அத்யாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதுவும் வேதாந்த விசாரத்தை மேற்கொள்பவர் களுக்கு பயன்படுவதாகும். ஐந்தாம் அத்யாயத்தில், சடங்குகளை ஆற்றும் சரியான முறை விளக்கப்பட்டுள்ளது. இது ப்ரஹ்ம ஸூத்ரத்தின் இறுதி அத்யாயத்தின் மூன்றாம் பகுதியைப் புரிந்துகொள்ள உதவும். ஆறாம் அத்யாயம், வேதாந்தத்தைக் கற்க யாருக்குத் தகுதி உள்ளது என்பதை ஆராய்கிறது. இதே போல பூர்வ மீமாம்ஸையில் மற்ற அத்யாயங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேதாந் ததைக் கற்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, பூர்வமீமாம்ஸையைக் குறித்த அறிவு, உத்தர மீமாம்ஸையின் பொருளை அறிந்து தெளிந்து உணர இன்றியமையாததாகிறது.

பூர்வமீமாம்ஸைக்கும் உத்தரமீமாம்ஸைக்கும் இடையே முரண்பாடு கிடையாது. இவற்றைக் கற்று பலனை அடைய விரும்பும் சாதகன் ஒருவனே. பூர்வமீமாம்ஸையில் விதிக்கப் படும் வேள்விகளின் நிலையற்ற பயனை உணர்வதாலேயே, அவன், உத்தர மீமாம்ஸையைக் கற்கும் நிலைக்குச் செல்கிறான். முதலில் வருவது சடங்குகள்; பின்னால் வருவது தத்வஞானம். முதலில் வருவது பணி பயிற்சிகாலம் பின்னால் வருவது செயல்திறன் மிக்க நிலை. எனவே இந்த இரண்டு மீமாம்ஸைகளும் ஒரே பாடத்தின் இரண்டு பகுதிகளாகும்.

வெவ்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்ட இந்த இரண்டு நூல்கள் எப்படி ஒன்றாகும். எனில், ஒரே ஆசிரியர், பல நூல்களை இயற்றுவதும், பல ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு நூலை வடிவமைப்பதும் பொதுவாகக் காணப்படுகிறது. இதற்கு உதாரணம், பாணினி ஸூத்ரங்களின் விளக்கங்கள். ப்ரஹ்ம ஸூத்ரங்களை விளக்குகையில் ஜைமிநியின் விளக்கங்கள் பாதராயணரால் மறுக்கப்படுவது போல் தோன்றுகின்றதே எனில், ஒரு வீட்டின் பகுதியை அகற்றி விட்டு, புதிதான பாணியில் அங்கு ஓர் பகுதியை அமைத்தால், அது வீட்டிற்கு அழகைக் கூட்டுமே தவிர குறைக்காது. அதே போல, ஜைமிநியின் கருத்துக்கள், சாதாரண மனிதர்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக, பாதராயணர் அதற்கு சிறப்பாக விளக்கத்தை அளிக்கிறார். பாதராயணர், ‘‘ஜைமிநி இவ்வாறு கூறுகிறார்’’ என்பதும், ஜைமிநி தன் முடிவுகளை நிலை நிறுத்த, பாதராயணரின் சொற்களை அதிகார பூர்வமாகக் கொள்வதும் காணப்படுவதால், இந்த இரண்டு சாஸ்த்திரங்களும் ஒரே போதனையின் இரு கிளைகளாகக் கொள்ளப்படவேண்டும்.

மூன்றாவதாக, வேதாந்தத்தைக் கற்பதற்கு முன்பு, பூர்வமீமாம்ஸை கற்கப்படவேண்டும், என்பது ஸ்ரீராமாநுஜரின் கருத்து. இந்த இரண்டு மீமாம்ஸைகளும் ஒருசேர, ‘‘மீமாம்ஸை சாஸ்த்ரம்’’ எனப்படுகிறது. வேதங்களை விளக்குவதே இந்த சாஸ்திரத்தின் நோக்கம். ஒரே சாஸ்திரமான இதில் மூன்று பகுதிகள் உண்டு.

1) கர்ம காண்டம்:- 12 அத்யாயங்கள் கொண்டது. பல்வேறு வைதிக சடங்குகளை விவரிக்கும் இதுவே, ஜைமிநியால் இயற்றப்பட்ட பூர்வமீமாம்ஸை.

2) தேவதா காண்டம்:- 4 அத்யாயங்கள். தேவதைகளின் இயல்பு, மற்றும் அந்தஸ்தை விளக்கும் பகுதி. இது ஸங்கர்ஷணர் என்பவரால் இயற்றப்பட்டதால், ஸங்கர்ஷண காண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ஜைமிநிக்கு முக்யத்வம் தருவதற்காக, ஸங்கர்ஷணரின் பெயர் வ்யாசரால் குறிப்பிடப்படவில்லை என்பது பூர்வர்கள் கருத்து.

3) ப்ரஹ்ம ஸூத்ரங்கள்:- பாதராயணர் என்னும் பெயர் பெற்ற வ்யாச பகவானால் இயற்றப்பட்டது. இதில், நான்கு அத்யாயங்கள் உள்ளன. இது, ‘‘பரதேவதா காண்டம்’’ என்றும் அறியப்படும்.

  வெவ்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்ட இந்த மூன்றும், ஒரே சாஸ்த்ரத்தின் மூன்று பகுதிகளாகும். மொத்தம் இருபது அத்யாயங்களைக் கொண்ட இந்த சாஸ்த்ரத்தின் மையக்கருத்தும், அதை செயல்படுத்தும் வகையும், அதில் (இந்த சாஸ்த்ரத்தில்) எல்லா இடத்திலும் பரவியுள்ளது. எனவே, வேதாந்ததைக் கற்பதற்கு முன்னோடியாக பூர்வமீமாம்ஸை கற்கப்படவேண்டும்.

அத்வைத வேதாந்திகளின் கருத்தாவது ‘வேதாந்த த்தைக் கற்பதற்கு முன்பு, பூர்வமீமாம்ஸை கற்க அவசிய மில்லை என்பதாகும். அவர்கள் கருத்துப்படி, வேதாந்ததைக் கற்க அவசியமான தகுதிகள் நான்கு. அவை:-

1) நிலையாக இருப்பவற்றிற்கும் (நித்ய வஸ்துக்கள்), நிலையற்றவற்றிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்வது.

2) அமைதி, நடுநிலை ஆகியவற்றுடன் சாதனை களில் ஈடுபடுவது.

3) இவ்வுலகிலும், அதற்குப் பிறகும் கர்மத்தின் பலனில் பற்றில்லாமல் இருப்பது.

4) முக்தியில் விருப்பம்.

‘வேதாந்த விசாரத்தில் இறங்குவதற்கு முன்பு, பூர்வமீமாம்ஸையின் அறிவு அவசியம் தேவை’ என்னும் கருத்தை உடைய சான்றோர்களால் இந்த கருத்து மறுக்கப்படுகிறது.

1. நிலையான, நிலையற்ற பொருள்களுக்கிடை யிலான வேறுபாட்டை அறியும் திறமை, வேதாந்தத்தைக் கற்றபிறகே ஒருவருக்கு ஏற்படுகிறது. எனவே, வேதாந்தத் தைக் கற்க, இது ஒரு தகுதியாக அமையாது.

2. அமைதி, நடுநிலை (சமம், தமம்) ஆகியவற்றைப் பழகி, மனதை ஓர் நிலையில் நிறுத்தி, சாதனையில் ஈடுபட்டு, ‘‘நான்’’ என்பது என்ன என்பதை அறிவதற்கு உதவுவது வேதாந்தமே. எனவே, வேதாந்தத்தைக் கற்க, இவை எவ்வாறு தகுதிகளாக அமையும்?

3. பலனில் பற்றறுப்பது மற்றும் முக்தியில் விருப்பம் ஆகியவை வேதாந்தத்தைக் கற்பதால் கிடைப்பது உண்மையே ஆயினும், பூர்வமீமாம்ஸையைக் கற்பது, ப்ரஹ்மத்தை உணர பல்வேறு வழிகளில் உதவும். இதுவே பலனில் பற்றைத் துறப்பதற்கும், முக்திக்கும் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

பூர்வமீமாம்ஸை சாதனையாளர்களுக்கு உதவும் வழிகள்:-

1. வேதாந்தத்தைக் கற்க எந்த முறையை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாக்குகிறது.

2. ப்ரஹ்மத்தை அறிவதற்கும், அதைக் குறித்து தியானத்தில் ஈடுபடுவதற்கும் தேவையான விவாதங்களை, ஒருவர் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.

3. வேள்வி, சடங்குகள் வழங்கும் மேம்போக்கான அறிவை விட்டுவிட்டு, நிலையான பலனான ப்ரம்மத்தைக் குறித்த ஞானத்தைத் தேட வழி வகுக்கிறது..

எனவே, ‘‘ப்ரஹ்மஸூத்ரத்தில் கட்டளையிடப் பட்டிருப்பதைப் போல, பூர்வமீமாம்ஸையைக் கற்ற பிறகே, வேதாந்தம் அல்லது உத்தர மீமாம்ஸையின் கல்வி தொடரப்படவேண்டும்’’ என்பது பூர்வர்கள் கருத்து.

ப்ரஹ்ம ஸூத்ரங்களை, உள்ளவாறே புரிந்து கொள்வ தற்குக் கடினமானவை. எனவே, ஞானமிக்க ஆசார்யபுருஷர்கள் அவற்றிற்கு விளக்கங்களை எழுதினார்கள். இந்த விளக்கங்கள், ‘‘பாஷ்யங்கள்’’ எனப்படுகின்றன. இந்த விளக்கங்களின் அடிப்படையில், ஆறு மெய்ப்பொருளியல் அல்லது தத்வ ஆராய்ச்சி நூல்கள் தோன்றின. இவற்றுள் மூன்று மிகவும் புகழ் பெற்றவை. மற்ற மூன்று ஓரளவே புகழ் வாய்ந்தவை. அந்த தத்துவ நூல்கள் கீழ்க்கண்டவாறு:-

அ. அத்வைத தத்வம்:- ‘‘இருப்பு’’ என்பதை உடையது ஒரே தத்துவமே. இதுவே ப்ரஹ்மம்; இரண்டாவதாக ஏதுமில்லை’ என்பது இந்த ஸித்தாந்தத்தின் கொள்கை. இந்த பாஷ்யம், சங்கராசாரியரால் இயற்றப்பட்டது. இதன்படி, ப்ரஹ்மம் என்பது ஒன்றே. இருப்பு, ஞானம் மற்றும் அழிவற்ற தன்மை என்பவையே ப்ரஹ்மம். இதற்கு குணங்கள் கிடையாது. இது நிர்குண ப்ரஹ்மம் எனப்படுகிறது. இந்த அண்டத்தில் உள்ள எல்லாமே ப்ரஹ்மம் தான். இந்த அண்டம் ஓர் மாயத்தோற்றம். ப்ரஹ்மத்தைக் குறித்த அறிவின்மையான ‘அவித்யை’ என்பதே இந்த மாயையில் தளைப்பட்டிருப் பதற்கான காரணம். இந்த மாயையில் இருந்து விடுபட்டு, ‘‘நானே ப்ரஹ்மம்’’ என்று உணர்வதே முக்தி எனப்படுகிறது.

ஆ. த்வைதம்:- ஆனந்ததீர்த்தர் என்று வழங்கப்படும் மத்வாசாரியாரால், முன் மொழியப்பட்டது த்வைத சித்தாந்தம். இதன் கொள்கைப்படி, தத்துவங்கள் இரண்டு. அவை ஜீவாத்மா மற்றும் பரமாத்மா. இவை வெவ்வேறு தத்துவங்கள். இரண்டிற்கும் இணைப்பு என்பது இல்லை. பரமாத்மா என்பவன் மஹா விஷ்ணு. இவன் திருவடிகளில் முழுமையாக சரணடைவதன் மூலம் ஜீவனானவன் இந்த சம்சாரம் என்னும் சுழலிலிருந்து விடுபட்டு முக்தியடைகிறான்.

இ. விசிஷ்டாத்வைதம்:- இது சிறப்பிக்கப்பட்ட அத்வைதத்தை விளக்குகிறது. இது, பகவத் ராமாநுஜரால் ஏற்படுத்தப்பட்டது. இது, ‘‘ஸ்ரீபாஷ்யம்’’ என்று வழங்கப் படுகிறது. இந்த கொள்கையின்படி தத்துவங்கள் மூன்று. அவை:- சித், அசித் மற்றும் ஈச்வரன். ‘சித்’ என்பது ஞானத்தை உடைய ஜீவாத்மா. அசித் என்பது அறிவற்ற ப்ரக்ருதி. ஈச்வரன் மஹாவிஷ்ணு. இவன் மற்ற இரண்டு தத்துவங்களைத் தன் உடலாகக் கொண்டவன். எண்ணற்ற கல்யாண குணங்களைக் கொண்ட சகுண ப்ரஹ்மம். ‘மஹாவிஷ்ணுவானவன் ‘சரீரி’’-உடலை உடையவன். சித், அசித் வடிவிலான அண்டம் அவனது சரீரம்- உடல்.

இந்த சரீரி-சரீர பாவமே விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படைக் கொள்கை. இதை உணர்ந்து பகவானிடம் சரண டையும் ஜீவாத்மா, இந்த சம்சாரம் என்னும் சுழலிலிருந்து விடுபட்டு, முக்தியடைந்து, ஸ்ரீவைகுண்டம் என்னும் பரமாத் மாவின் இருப்பிடத்தை அடைந்து, அவனுடன் அதிக பட்ச மான ஒற்றுமையைப் பெறுகிறான்’ என்பது விசிஷ்டாத்வைத சித்தாந்தம். பகவத் ராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யம், ‘‘சாரீரக மீமாம்ஸாபாஷ்யம்’’ என்று வழங்கப் படுகிறது.

ஈ. த்வைதாத்வைதம்:- நிம்பார்க்கர் என்பவரால் வெளியிடப்பட்ட இந்த விளக்கம், அத்வைதம் மற்றும் த்வைத ஸித்தாந்தங்களின் கொள்கைகளை ஒருங்கிணைக்க முயல்கிறது.

உ. சுத்த அத்வைதம்:- ‘வல்லபர்’ என்பவரால் தரப்பட்டது. இந்த சித்தாந்தத்தின்படி, ஜீவனும் பரமனும் ஒன்று. ப்ரஹ்மம் இறைவன். அது பக்தியுடன் வணங்கப்பட வேண்டிய ஒன்று.

ஊ. அசிந்த்ய பேத அபேதம்:- ‘‘கற்பனைக் கெட்டாத ஒருமை’’ என்பது இதன் பொருள். வித்யாபூஷணர் என்பவர் இந்த கோட்பாட்டை முன் மொழிந்தார். இது, ஒன்றான தன்மை மற்றும் வேறுபாடு ஆகிய இரண்டையும் குறிப்பிடுகிறது. இது அத்வைதத்திற்கு எதிரானது. *

14

நம்மாழ்வார் பெருமை

‘‘மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ4தி:
ஸர்வம் யதே3வ நியமேந மத3ந்வயாநாம் |
ஆத்3யஸ்ய ந: குலபதேர் வகுளாபி4ராமம்
ஸ்ரீமத் தத3ங்க்4ரியுக3ளம் ப்ரணமாமி மூர்த்4நா ||’’

  என்னும் ச்லோகத்தில், ஆளவந்தார் ‘‘ஆத்யஸ்ய ந: குலபதே:’’ என்று துதித்தவரும்,

திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும் * மருவினிய வண்பொருநலென்றும் * - அருமறைகள் அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும் * சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.

  என்னும் திருவாய்மொழி தனியனில், ஈச்வரமுனிகளால்,

‘அருமறைகள் அந்தாதி செய்தான்’’ என்று குறிப்பிடப்பட்டவரும்,
வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் * ஆன்றதமிழ்மறைகளாயிரமும் * - ஈன்ற முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த* இதத்தாய் இராமாநுசன்.

என்று பட்டர் அருளிய திருவாய்மொழித் தனியனில். ‘‘ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்’ என்று போற்றப்பட்டவரும்
‘‘பூ4தம் ஸரஸ்ய மஹதா3ஹ்வயப4ட்டநாத2-
ஸ்ரீப4க்திஸார குலஶேக2ர யோகி2வாஹாந்ந ப4க்தாங்க்4ரிரேணு பரகால யதீந்த்3ரமிஶ்ராந் ஸ்ரீமத்பராங்குஶமுநிம் ப்ரணதோ(அ)ஸ்மி நித்யம்’’

என்னும் நித்யாநுஸந்தான தனியனில் மற்ற ஆழ்வார்களை அவயவங்களாக உடைய அவயவி என்று வணங்கப்படுபவரும், ‘ப்ரபன்ன ஜன கூடஸ்தர்’ என்றும் போற்றப்படுபவர், ஸ்வாமி நம்மாழ்வார்.

மறைப்பாற்கடலைத்திருநாவின் மந்திரத்தாற்கடைந்து துறைப்பாற்படுத்தித்தமிழாயிரத்தின்சுவையமிர்தங் கறைப்பாம்பணைப்பள்ளியானன்பரீட்டங்களிருத்தருந்த நிறைப்பான்கழலன்றிச்சன்மவிடாய்க்கு நிழலில்லையே.

	 திருவரங்கக்கலம்பகம்-3

வேதமாகிய திருப்பாற்கடலை (தமது) சிறந்த நாக்காகிய, மந்த்ர பர்வதத்தால் கடைந்து, துறைகளின் வகைகளோடு பொருந்தச்செய்து, ஆயிரம் தமிழ் பாசுரங் களாகிய, இனிய சுவையையுடைய அமிர்தத்தை, நஞ்சினை யுடைய திருவநந்தாழ்வானாகிய திருவணையிற் பள்ளி கொள்ளுதலை உடைய திருமாலின் தொண்டர்களது கூட்டம் மனமகிழ்ந்து, உண்ணும்படி நிறைத்தருளிய நம்மாழ்வாரது, திருவடிகளேயல்லாமல் பிறவித்துன்பமாகிய தாபத்திற்கு வேறு நிழலாவது இல்லை, என்று பிள்ளைப் பெருமாளை யங்கார் நம்மாழ்வாரது பெருமையைப் போற்றுகிறார்.

நம்மாழ்வார் என்றழைக்கப்படும் இவர் யார்?

எல்லோரையும் போல் இந்த சம்சார மண்டலத்தில், ஓர் தாயின் வயிற்றில் தோன்றிய இவர் இத்தனை பெருமை பெற்று விளங்கக் காரணமென்ன? இவர், சாதாரணமான மானுடப் பிறவியல்ல. இவர் ஓர் நித்யஸூரியோ, முக்தரோ அல்லது உண்மையில் அந்த பரமாத்மாவேயோ?’’ என்னும் ஐயம் தோன்றுகிறது. இவர் யாராக இருக்கக்கூடும் என்னும் ஐயம், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்ய ஹ்ருதயத்தில் இவ்வாறு காட்டித்தரப்படுகிறது.

‘அத்ரி-ஜமதக்நி-பங்க்திரத-வஸு-நந்தஸுநுவான வனுடைய யுகவர்ணக்ரமாவதாரமோ? வ்யாஸாதிவ தாவேசாவதாரமோ? மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ? முன்னம் நோற்ற அநந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ? என்று சங்கிப்பர்கள்’’ - (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா - 92).

இந்த நூற்பாவின் பொருளாவது:- எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஓர் வர்ணத்தில் வந்து தோன்றுகிறான். அந்த முறையில், கலியுகத்தில், நான்காவது வர்ணத்தில் நம்மாழ்வாராகத் தோன்றினானோ? அல்லது வேதங்களை முறைப்படுத்தி வெளியிட வ்யாஸ பகவானிடம் ஆவேசித் ததைப் போல, தமிழ் மறையை வெளியிட ஆழ்வாரிடம் ஆவேசித்தானோ? அல்லது நித்யர், முக்தரில் இவர் ஒருவரோ? அல்லது இவர்கள் யாருமல்லாமல், பல பிறவிகளில் சேர்த்து வைத்த புண்ணியத்தின் பலனாக, இப்படி ஓர் சிறந்த பிறவியைப் பெற்ற ஒருவரோ? அல்லது அநந்தாழ்வான் மீது பள்ளி கொள்ளும் பரமாத்மா, தன்னுடைய ‘‘காரணமற்ற கருணையினாலே’’ நித்ய சம்சாரியான ஒருவரை நித்ய ஸூரிகளுக்கு இணையாக மாற்றியருளினானோ? என்று பலவகையில் யோசிப்பதுண்டு.

ஆழ்வார் எம்பெருமானுடைய அவதாரமா?

  ஸ்வாமி நம்மாழ்வாரின் பெற்றோர், பலகாலம் மகப்பேறின்றி வருந்தி, பின், திருக்குறுங்குடி நம்பியிடம் விண்ணப்பிக்க, நம்பியும் ‘‘நாமே உமக்குப் பிள்ளையாகப் பிறப்போம்’’ என்று வாக்களித்ததால், திருக்குறுங்குடி நம்பியின் அவதாரமே ஆழ்வார் என்பாருண்டு. ஆழ்வாரின் பெருமை அறியாமல், அவரை இகழ்ந்த சங்கப்புலவர்கள், பின்பு அவர் பெருமையை உணர்ந்து பாடிய பாடலில் ஆழ்வார் எம்பெருமான் தானேயோ? என்ற ஐயம் எழுகிறது.

‘‘சேமம் குருகையோ செய்யதிருப்பாற்கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ? தாமந் துளவமோ வகுளமோ தோளிரண்டோ நான்கு முளவோ? பெருமானுக்கு.’’

  ஆனால், நம்மாழ்வார், தம் வாக்காலேயே ‘‘மாறி மாறி பலபிறப்பும் பிறந்து’’ என்று அருளிச் செய்துள்ளார். பல்லாக்கு சுமப்பவன், ஓர் தோளில் வலி ஏற்பட்டால், மறு தோளுக்கு மாற்றிக்கொள்வது போல, ‘ஒரு உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறி பல பல பிறப்பை அடைந்ததை ஆழ்வார் அருளிச் செய்வதால், அவர் எம்பெருமானின் அவதாரம் அல்ல; சம்சாரி ஜீவனே’ என்பது தெளிவாகிறது.

ஆழ்வார் நித்யஸூரிகளில் ஒருவரா அல்லது முக்தரில் ஒருவரா?

ஆழ்வாருடைய ப்ரபாவத்தை காண்பவர்கள், எம்பெருமான் ஓர் நித்யஸூரியையோ, முக்தரையோ ‘‘நீர் போய் பூமியில் அவதரித்து சம்சாரிகளை திருத்தும்’’ என்று அனுப்பி வைத்தார் என்று கூறுவதுண்டு. நித்யஸூரியோ, முக்தரோ ஆழ்வாராக அவதரித்திருந்தால், அவர் ஆறியிருப்பார். அதாவது, ‘‘எம்பெருமான் நம்மை இங்கே அனுப்பி வைத்த காரியம் முடிந்த பின்பு, எப்படியும் நம்மை மீண்டும் ஸ்ரீவைகுண்டத்திற்கு அழைத்துச் சென்று விடுவான். கவலைப்பட என்ன இருக்கிறது?’ என்று பொறுமையாக இருந்திருப்பார். ஆனால், ஆழ்வார், தம் பாசுரங்களில், இந்த சம்சாரத்தில் வாழ விருப்பமில்லாமல் கால்பாவாமல் அருளிச் செய்த பாசுரங்கள் பலவற்றைக் காண்கிறோம். உதாரணமாக, ‘‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’’ - (திருவிருத்தம் - 1) என்றும், ‘‘பாவியேனைப் பல நீ காட்டிப்படுப்பாயோ?’’ (திருவாய்மொழி 6-9-9) என்றும், ‘‘முன்பரவை கடைந்தமுதம் கொண்ட மூர்த்தீயோ!’’ திருவாய்மொழி - 7-1-10) என்று கூக்குரலிட்டு கதறுகையாலும், இவர் நித்ய முக்தரல்ல என்பது தெளிவாகிறது.

ஆழ்வார் ஓர் சம்சாரியே

  எம்பெருமான் செய்தருளிய விசேஷ கடாக்ஷத்தால் நித்ய சம்சாரிகளில் ஒருவரே நம்மாழ்வார். இதைத்தாமே தம் திருவாக்கால் அருளிச் செய்கிறார்:- ‘‘அடியை அடைந்து உள்ளந்தேறி ஈறிலின்பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்’’ என்கிறார். எனவே, ஆழ்வார் எம்பெருமானோ, நித்யரோ, முக்தரோ அல்ல. எம்பெருமானால் தேர்ந்தெடுத்து மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஓர் சம்சாரி ஜீவனே என்பது நம் பூர்வாசார்யர்களின் திருவுள்ளம்.

ஆழ்வார் அவதாரம்

‘நம்மாழ்வார் பிறந்தது வைணவ நெறியில் ஆழ்ந்த, வேளாளர் குடி; குருகூரை, நெறிதவராது ஆண்ட பெருமக்கள் குடி. குருகாபுரியைப் படை வீடாகக் கொண்டு, திருவழுதிவள நாட்டையாண்ட குருகனாரின் பேரனின் மகன் திருவழுதி வளநாடன் என்பவர். இவர் மகன் தர்மரதன் என்ற அறந்தாங்கியார் இவர் மகன் சக்ரபாணியார்; இவர் மகன் அச்சுதர்; அச்சுதர்-செந்தாமரைக்கண்ணர்-செங்கண்ணர்- பொற்காரியார் -காரியார் என்று குடிவழி. காரியார் பெற்ற தெய்வத்திருமகனே மாறன் சடகோபன். பொற்காரியார் தம் மகன் காரியாருக்கு திருவண்பரிசாரத்து திருவாழ்மார்பர் என்பவரின் அருந்தவ மகளான உடையநங்கை என்னும் மங்கைநல்லாளைத் திருமணம் செய்வித்தார். உடைய நங்கையார் குலம், குணம், ஒழுக்கம், அழகு எல்லாவற்றிலும் காரியாருக்கு ஒத்தவர்.

  திருமணமாகி நெடுங்காலம் குழந்தைப் பேறு இல்லாத காரியார்-உடையநங்கை தம்பதிகள், திருக்குறுங்குடி எம்பெருமானை வேண்ட அவனுடைய நல்லாசியினால், அவதரித்தவர் நம்மாழ்வார்.

குருகையார் குலத்திற்கோர் ஒளிவிளக்காக தென்திசை ஆதித்யனாக தோன்றினார் ஸ்வாமி நம்மாழ்வார். இவர் பிறப்பு, ‘‘வகுள பூ4ஷண பா4ஸ்கரோத3யம்’’ (ஆசார்ய ஹ்ருதயம் -83) என்று கொண்டாடப் படுகிறது. வைகாசி விசாகத்தில், பௌர்ணமியன்று வெள்ளிக் கிழமையில் அவதரித்தார். இவ்வுலகில் அகஇருள் நீங்கத் தோன்றிய ஸூரியர்கள் ஐவர் எனப்படுகிறது. அவர்கள், ‘‘ராமதிவாகரன் - ஸ்ரீராமன்; அச்யுதபானு-கண்ணன்; வகுளபூஷணபாஷ்கரன் - நம்மாழ்வார்; கலித்வம்ஸ லோக திவாகரன் - திருமங்கை யாழ்வார்; மற்றும் இராமாநுஜ திவாகரன் - உடையவர். இந்த ஐந்து ஸூரியர்களும் சீரியரே ஆயினும், ‘‘நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்’’ என்னும் சூரியனின் ஒளி மிகச் சிறப்படையதாக போற்றப்படுகிறது. இந்த பெருமையைத் தம்முடைய உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்கிறார், பெரிய ஜீயரான, மணவாளமாமுனிகள்.

‘‘உண்டோ வைகாசி விசாகத்துக்கொப்பொருநாள்? உண்டோ சடகோபர்க்கொப்பொருவர்? உண்டோ திருவாய் மொழிக்கொப்பு தென்குருகைக்குண்டோ* ஒருபார்தனி லொக்குமூர்?’ (உபதேசரத்தினமாலை-15)

செயலற்ற சேய்

  தாம் செய்த தவப்பயனாக, அழகே வடிவாகப் பிறந்த ஆண் மகனைக் கண்டு உளமகிழ்ந்தனர், காரியார் - உடைய நங்கை தம்பதிகள். தம் தலைவனுக்கு குழந்தை பிறந்ததை, ஊரே கொண்டாடி மகிழ்ந்தது. ஆனால், பிறந்த குழந்தை, மற்ற குழந்தைகளைப் போல அழவில்லை; பால் அருந்தவில்லை; விளையாடவில்லை. அமைதியாக இருப்பதைக் கண்டு பெற்றோர் கவலை கொண்டபோதிலும், குழந்தை வாட்ட மேதுமின்றி ஒளியுடன் திகழ்வதைக் கண்டு நிம்மதி யடைந்தார்கள்.

  பொதுவாக குழந்தை, தான் தாயின் கர்பத்தில் இருக்கையில் முழுமையான ஞானத்துடனேயே இருக்கிறது. அது தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியேறுகையில், அதை, ‘‘சடம்’’ என்னும் வாயு பற்றிக் கொள்வதால், ‘அது தான் யார்?’ என்பதை மறந்து, அஞ்ஞானத்தில் மூழ்கி, தன்னை ஓர் குழந்தையாக உணர்ந்து அழுகிறது. சம்சாரி ஜீவனாக வளர்ந்து வாழ்ந்து, முடிகிறது. ஆனால், ஸ்வாமி நம்மாழ்வார், தாம், தம் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்படுகையில், தன்னைப் பற்ற வந்த ‘‘சடம்’’ என்னும் வாயுவை கோபித்து, ‘‘ஹூம்’’ என்று பெரு ஓசையுடன் அதை காலில் எட்டி உதைத்தார். இதனால், அவர் அஞ்ஞானத்தால் தாக்கப்படாமல் முழுமையாக மலர்ந்த ஞானத்துடனேயே இருந்தார். இப்படி, ‘‘சடம்’ என்னும் வாயுவை கோபித்து அடித்துத் துரத்தியதால்தான், இவர், ‘‘சடகோபன்’’ என்று வணங்கப்படுகிறார்.

இவ்வாறு மற்ற குழந்தைகளிலிருந்து மாறுபட்டு இருந்ததால், இவர், ‘‘மாறன்’’ எனப்பட்டார். எம்பெருமான், தன்னுடைய அந்தரங்க காரியதரிசியான சேனைநாதனை நியமித்து, இவருக்கு வைஷ்ணவ இலச்சினைகளை வழங்கி, ரகசிய மந்திரங்களையும், மந்திரார்த்தங்களையும் உபதேசித் தருளினான்.

திருப்புளியாழ்வார்

  திருக்குருகூரில், எம்பெருமான் ஆதிநாதன் கோயி லருகே ஓர் புளியமரம் வளர்ந்திருந்தது. இது ஆதிசேஷ னுடைய அவதாரம் என்று கருதப்படுகிறது. இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளாததால், இது, ‘‘உறங்காப்புளி’’ எனப்படுகிறது. இன்றும் இந்த மரத்தை நாம் காணலாம். வேறுபட்ட குழவியாக இருந்த ‘மாறனை’ இந்த புளிய மரத்தடியில் ஓர் தங்கத் தொட்டிலிட்டு அதில் கிடத்தினர் பெற்றோர். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. ஆனால் பேசவில்லை; கண் திறக்கவில்லை.

சடகோபன் திருவாய் மலர்ந்தருளிய முதல் வார்த்தை

திருக்குருகூருக்கு அருகில் இருக்குமோர் சிற்றூர் திருக்கோளூர். இங்கே முன் குடுமி சோழிய ப்ராஹ்மண வகுப்பைச் சேர்ந்த விஷ்ணுசேனர் என்பவரின் புதல்வராக அவதரித்தவர் மதுரகவியாழ்வார். செஞ்சொற்கவிகளை இனிமையாகப் பாடும் திறமை பெற்றவர், இவர், மதுரகவி என்றே அழைக்கப்பட்டார். சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் தோன்றிய மதுரகவியாழ்வார் தீர்த்த யாத்திரையாக வட நாட்டிற்குச் சென்றிருந்தார்.

ஓர் நாள் தம்முடைய சொந்த ஊரான திருக்கோளூரில் கோயில் கொண்டிருக்கும் ‘‘வைத்தமாநிதி’’ பெருமாளை வணங்கு வதற்காக, தென்திசை நோக்கி நிற்க, அத்திசையில் வாநுயர ஒளிர்ந்ததோர் ஒளியைக் கண்டார். பேரதிசயம் அடைந்த ஆழ்வார், அந்த ஒளி தோன்றிய திசையை நோக்கி தம் பயணத்தைத் தொடர்ந்தார். தம் சொந்த ஊர் அருகிலேயே அந்த ஒளி இருப்பதைக்கண்டு வியந்தார். திருக்குருகூரை அடைந்து அங்கே புளிய மரத்தடியில் ஒளிப்பிழம்பாக அமர்ந்திருந்த சடகோபரைக் கண்டு பேரானந்தம் எய்தினார். இவரையே ஆசார்யராக அடைய வேண்டும் என்று தீர்மானித்தார். வாய் பேசாமல் கண் திறவாமல் இருந்த ஆழ்வாரின் தியானத்தைக் கலைக்கும் வண்ணம், ஓர் சிறு கல்லை வீசியெறிந்து ஓசை எழுப்பினார். இப்படி, ஓர் சிஷ்யருக்காகவே இத்தனை காலம் காத்திருந்தது போல கண் மலர்ந்தார் சடகோபன்!

  கண் திறந்து பார்த்தால் போதுமா? அவரைத் தம்முடன் பேச வைக்கவேண்டும் என்பதற்காக ஓர் கேள்வியைக் கேட்டார், மதுரகவியாழ்வார். அது, ‘‘செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’’ என்பதாகும். உடனே சடகோபர் முதன் முறையாக தம் சோதி வாய் திறந்து, ‘‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’’ என்று பதிலளித்தார். தம் புதல்வன் முதன் முதலில் பேசியதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர், பெற்றோர். மதுரக வியாழ்வாருக்கு என்ன கைமாறு செய்வதென்று அறியாமல், பொன்னும் மணியும், வாரி வழங்கினர். இவற்றில் நாட்ட மில்லாத மதுரகவியாழ்வார் சடகோபரின் அடிபணிந்து, தம்மை சிஷ்யராக ஏற்கும்படி வேண்ட அவ்வாறே அவரைச் சீடராக ஏற்றுக்கொண்டார், சடகோபர்.

வினோதமான விடையின் பொருள்

‘‘செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’’ என்னும் நம்மாழ்வாரின் பதிலுக்கு, இரண்டு விதமாகப் பொருள் கூறப்படுகிறது. ‘‘செத்தது’’ என்பது அசித்தான உடல், அதனுடன் சிறியதான ஜீவாத்மா சேருவது, அதன் பிறப்பு. இப்படி பிறப்பு ஏற்பட்டவுடன், அந்த ஜீவாத்மா, அந்த உடலால் ஏற்படும் அநுபவங்களைப் பெற்று அங்கேயே இருக்கும் என்பது ஒரு பொருள்.

  ‘செத்தது’ என்பது உடல். அதன் வயிற்றில் அடை பட்டுக் கிடப்பது சிறியதான ஜீவாத்மா. அதற்கு பிறப்பாவது,. அஞ்ஞானம் நீங்கப் பெறுதல். அஞ்ஞானம் நீங்கப்பெற்ற வுடன், அது, எம்பெருமானை தியானித்துக் கொண்டு அங்கே இருக்கும் என்பது மற்றொரு பொருள்.

இப்படி வினோதமான கேள்வியை எழுப்பிய மதுரகவியாழ்வாரும், அதற்கு மிகப் பொருத்தமான பதிலை அளித்த சடகோபரும், நெடுநாள் பிரிந்திருந்த கன்றும் தாய்ப்பசுவும் ஒன்று சேர்ந்தது போல் மகிழ்ந்தனர். சடகோபரைத் தம் ஆசார்யராக ஏற்று எல்லா பணி விடைகளையும் செய்து, அவர் திருவடி வாரத்திலேயே வாழ்ந்து வரலானார், மதுரகவியாழ்வார்.

நம்மாழ்வார் அருளிச் செய்த திவ்யப்ரபந்தங்கள்:-

‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே’ என்றிருந்த ஆழ்வாருக்கு மேலும் தன் வடிவழகையும், கல்யாண குணங்களையும், திவ்ய லீலைகளையும் காட்டித்தர திருவுள்ளம் கொண்டான், எம்பெருமான். இவற்றை சேவித்த நம்மாழ்வார், தாம் பெற்ற அநுபவத்தின் ஆனந்தம் கட்டுக்கடங்காமல் வெள்ளமாகப் பெருகிவர, அதை பாசுரங்களாக அருளிச் செய்தவைதான், நான்கு திவ்யப்ரபந்தங்கள். இந்த நான்கு திவ்யப்ரபந்தங்களும் நான்கு வேதங்களுக்கு சமமாகக் கொள்ளப்படுகின்றன. ரிக் வேதத்தின் சாரமாக திருவிருத்தமும் (100 பாசுரங்கள்), யஜுர் வேதத்தின் சாரமாக திருவாசிரியமும் (7பாசுரங்கள்), அதர்வண வேதத்தின் சாரமாக பெரிய திருவந்தாதியும் (87பாசுரங்கள்), ‘‘வேதங்களில் நான் சாமவேதம்’’ என்று கண்ணன் திருவாய் மலர்ந்தருளிய சாம வேதத்தின் சாரமாக திருவாய்மொழியும் (1102பாசுரங்கள்) விளங்குகின்றன. இந்த பாசுரங்களையும், அவற்றின் ஆழ்ந்த பொருளையும் மதுரகவியாழ்வாருக்கு உபதேசித்து, அவற்றைப் பட்டோலைப்படுத்தினார், நம்மாழ்வார்.

ஆழ்வாரின் திருநாமங்கள்

உலக இயல்பிற்கு மாறுபட்ட குழந்தையாக இருந்ததால், ‘‘மாறன்’’ என்று அழைக்கப்பட்டார். காரியார் புதல்வராக இருந்ததால், ‘காரிமாறன்’ என்னும் திருநாமத்தைப் பெற்றார். அறியாமைக்குக் காரணமாகும், ‘‘சடம்’’ என்னும் வாயுவை பிறக்கும்போதே கோபத்துடன், ‘‘ஹூம்’’ என்று சத்தமிட்டு எட்டி உதைத்துவிட்டு பிறந்தவரானதால், ‘‘சடகோபன்’’ எனப்படுகிறார். குருகூரில் நித்யவாசம் செய்யும் எம்பெருமான் ஆதிநாதன் அளித்த வகுளமலர் மாலையை எப்பொழுதும் சூடியிருந்ததால், ‘‘வகுளாபரணர்’’, ‘‘மகிழ்மாலை மார்பன்’’ என்று வழங்கப்பட்டார். திருவழுதி நாட்டில் தோன்றியதால், ‘‘திருவழுதி வளநாடன்’’ என்னும் திருநாமத்தைப் பெற்றார். இந்த திருநாமங்களைத் தவிர, குழந்தைமுனி, பாலயோகி என்னும் பல திருநாமங்கள் இவருக்கு உண்டு. இவர் தம் பாசுரங்களில், தம்மை, ‘‘குருகூர் சடகோபன்’’ என்றே அதிகமான இடங்களில் அருளிச் செய்துள்ளார். இப்பெயரை ஆழ்வார் தாமே ஏற்றுக் கொண்டார் எனப்படுகிறது.

இந்த சடகோபன் என்னும் திருநாமமே, ‘‘சடாரி’’ ‘‘சடரிபு’’, ‘‘சடவைரி’’ என்று வடமொழியில் சொல்லப் படுகின்றன. எம்பெருமானுடைய திருவடி நிலைகள், ‘‘சடகோபன்’’, ‘‘சடாரி’’ என்று அழைக்கப்படுகின்றன. இதற்கான காரணம், வைநதேய ஸம்ஹிதையில் காணப் படுகிறது. ‘‘சடாசுரன் என்னும் அரக்கனை, எம்பெருமா னுடைய திருப்பாதங்கள், கோபாக்நியால் சுட்டெரித்து விட்டதால், அவை ‘சடகோபன்’ என்னும் பெயரைப்பெற்றன’’ என்பது அது.

பரமன் திருவடி களில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஸ்வாமி நம்மாழ்வார், இப்பெயரைத் தாமே ஏற்று திருவாய்மொழியில் பல இடங்களில் தம்மை சடகோபன் என்று கூறிக்கொள்கிறார் என்பது பூர்வர்கள் கருத்து. பிற மத நம்பிக்கை என்னும் யானையை அடக்கும், ‘‘மாவட்டி- அங்குசம்’ போன்று இவருடைய சீரிய பாடல்களின் கருத்து அமைந்திருப்பதால், இவர் ‘பராங்குசன்’ என்று அழைக்கப் படுகிறார். ‘‘நம்மாழ்வார்’ என்ற திருநாமம் திருவரங்கனால் நம் ஆழ்வாருக்கு சூட்டப்பட்ட திருநாமம் ஆகும்.

நம்மாழ்வாரின் புகழ் பாடும் இரு நூல்கள்

1) கண்ணிநுண் சிறுத்தாம்பு

  ஸ்வாமி நம்மாழ்வாரைத் தம் ஆசார்யராக ஏற்று, ‘‘தேவுமற்றறியேன்’’ என்று வாழ்ந்து வந்த மதுரகவியாழ்வார் அருளிச் செய்த திவ்யப்ரபந்தம், 11 பாசுரங்களைக் கொண்ட ‘‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’’ என்பது. முக்தியடைவதற்கு வழி காட்டுபவையாக, கர்ம ஞான பக்தி யோகங்கள் மற்றும் சரணாகதி என்னும் ப்ரபத்தியைக் காட்டிலும் மேலான மார்க்கமாகக் கொள்ளப்படுவது, ‘‘ஆசார்ய நிஷ்டை’’. அதாவது, ஓர் ஆசார்யனை அடிபணிந்து, அவரே உபாயம், அவரே உபேயம் என்று வாழ்ந்து அவரால், ‘‘இவன் நம் பயல்’’ என்று அபிமானிக்கப்படுதல். இவ்வாறு வாழ்பவர்களுக்கு, மோக்ஷம் என்பது உள்ளங்கை இலங்கு நெல்லிக்கனி எனப்படுகிறது.

இந்த மார்க்கம், ஐந்தாவது மார்க்கமாக உள்ளதால், ‘‘பஞ்சமோபாய நிஷ்டை’’ என்றும், இதற்குமேல் எந்த உபாயமும் இல்லாததால், ‘‘சரமோபாய நிஷ்டை’’ அல்லது, ‘‘அந்திமோபாயநிஷ்டை’’ என்றும் கௌரவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

அடியார்க்கு ஆட்பட்டிருப்பதே திருமந்திரத்தின் தேர்ந்த பொருள் என்பதை காட்டித்தருவது, அதிலுள்ள ‘‘நம:’’ என்னும் பதம். நம: பதத்தின் அர்த்தமாக வாழ்ந்தவர் மதுரகவியாழ்வார். எனவே, இவர் அருளிச்செய்த ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ திருவெட்டெழுத்து ‘நம’ பதத்தின் இடத்தில் வைத்துப் பெருமைப்படுத்தப்படுகிறது.

‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ 11 பாசுரங்களுக்கு 4 ஆசார்யர்கள் வ்யாக்யானம் அருளிச் செய்திருப்பதே இந்த திவ்யப்பிரபந்தத்தின் பெருமையைப் பறை சாற்றுவதற்குப் போதுமானது. இதில் 10 பாசுரங்களில் நம்மாழ்வாரின் ப்ரபாவத்தை விரிவாக எடுத்துரைத்து விட்டு, 11-வது பாசுரத்தில், இந்த பாசுரங்களைக் கற்பவர்கள் உறுதியாக வைகுந்த பதவியை அடைவார்கள் என்று பலச்ருதி கூறுகிறார், மதுரகவியாழ்வார்.

முதல் பாசுரமாகிய, ‘‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்’’ என்பதில், நம்மாழ் வாரின் எல்லையில்லாத இனிமை பேசப்படுகிறது. நம்மாழ்வார், ‘குழந்தை கண்ணனை, யசோதை பிராட்டி, உரலினோடு சேர்த்து கட்டிய பொழுது, செயலற்றவன் போல் ஏங்கி அழுததை, ‘‘இது என்ன எளிமை, என்ன எளிமை’’ என்று தம் திருவாய்மொழி பாசுரமாகிய, ‘‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’’ என்பதில் அருளிச் செய்கிறார், நம்மாழ்வார். அவர், இந்த பாசுரத்தை அருளிச் செய்கையில், கண்ணன் ஆப்புண்டிருந்த நிகழ்ச்சியில் மிகவும் ஈடுபட்டு, ஆறுமாதம் மோகித்து மயங்கிய நிலையில் இருந்தார். ஆழ்வார், முக மலர்ச்சிக்காக இந்த முதல் பாசுரத்தில் கண்ணன் ஆப்புண்ட நிகழ்ச்சியை நினைவுகூறுகிறார், மதுரகவியாழ்வார். அப்படிப் பட்ட பெருமை வாய்ந்த மாயனான எம்பெருமானைக் காட்டிலும் தமக்கு இனிமையானவர், தென் குருகூர் நம்பி என்கிறார். ‘தென் குருகூர் நம்பி என்று உச்சரித்த மாத்திரத்திலேயே தமக்கு தம் நா தித்திக்கும் என்று அநுபவிக்கிறார், மதுரகவியாழ்வார். ஆசார்யரை, ‘‘நம்பி’’ என்று முதன் முதலில் அழைத்தவர் மதுரகவியாழ்வாரே என்பது அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் வ்யாக்யானம்.

‘நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்’ என்னும் இரண்டாம் பாசுரத்தில், ஆசாரியனே எல்லாம் என்று, ‘‘தேவு மற்றறியேன்’’ என்று தாம் இருக்கும் நிலையை வர்ணிக்கிறார். நம்மாழ்வாருக்கு உண்ணும் சோறு, பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனாக இருந்தது போல், மதுரகவியாழ்வாருக்கு தாரக போஷக போக்யமாக இருந்தவர் ஸ்வாமி நம்மாழ்வார். நம்மாழ்வாருடைய பொன்னடிகளையே உபாயமாகவும் உபேயமாகவும் பற்றினார். இவ்வாறு பற்றியது இம்மைக்கும் மறுமைக்கும் சேர்ந்தது என்று கூறுகிறார். ‘குருகூர்நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே’ என்பதால் திருவாய்மொழியை இன்னிசையாகப் பாடிக்கொண்டு வலம் வருவேன் என்றும் அல்லது நம்மாழ்வார் பெருமையைப் பேசும் கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரங்களைப் பாடிக்கொண்டு திரிவதாகவும் கொள்ளலாம்.

‘‘திரிதந்தாகிலும் தேவபிரானுடை கரியகோலத் திருவுருக் காண்பன்நான்’’ என்னும் மூன்றாம் பாசுரத்தில், தம்மைச் சீடராக ஏற்ற நம்மாழ்வாரின் வண்மையைப் புகழ்ந்து பாடுகிறார். நம்மாழ்வார் உகந்த விஷயம் என்பதால், ‘தேவபிரானுடைய கரியகோலத்திருவுருவை தாம் காண்பதாக அருளிச் செய்கிறார். இது, தாம் நம்மாழ்வாருக்கு உரிய அடியவனாக இருப்பதால் ஏற்பட்ட நன்மை என்கிறார். எம்பெருமானுடைய வண்மையும், பேரழகும் பயன்படாமல் போன காலத்தில், தம்மை ஆட்கொண்டு உய்வித்த நம்மாழ்வாரை, ‘‘பெரிய வண் குருகூர்நம்பி’’ என்று கொண்டாடுகிறார். நம்மாழ்வாருக்கு வைகுந்தமாநகர் எப்படி போக்யமானதோ, அதுபோல இவருக்கு குருகூர் உள்ளது. அவருக்கு ‘அயர்வறு அமரர்கள் அதிபதி’ அநுபவிக்கத் தக்கதாக உள்ளதுபோல, இவருக்கு ‘‘பெரியவண்குருகூர் நம்பியாகிய நம்மாழ்வார்’’ இருக்கிறார்.

நான்காவது பாசுரத்தில், தம்முடைய தண்மையைக் (தாழ்ச்சியைக்) கூறி, அதைப் பாராட்டாது தம்மை அங்கீகரித்த ஆழ்வாரின் சீலத்தைப் போற்றுகிறார். தீமை செய்தவர் களுக்கும் நன்மை செய்ய நினைக்கும் நான்மறை கற்ற பெரியவர்கள் கூட அங்கீகரிக்க இயலாத அளவு, புன்மையே வடிவெடுத்ததைப் போன்றிருந்த தம்மை, தாயாய், தந்தையாய், தலைவனுமாக இருந்து ஆழ்வார் அடிமை கொண்டதை நினைத்து மகிழ்கிறார். தாய் செய்வதை தந்தையும், தந்தை செய்வதை தாயும் செய்ய இயலாது. ஆசாரியர் செய்வதை, இவர்கள் இருவரும் செய்யமாட்டார்கள். தலைவன் செய்வதை அடியவன் செய்யமாட்டான். ஆனால் நம்மாழ்வார், மதுரகவியாழ்வாருக்கு இவர்கள் எல்லோரும் செய்யக்கூடிய நன்மையைத் தாம் ஒருவரே செய்தார் எனப்படுகிறது. இந்த பாசுரத்தில், முதன் முதலில் நம்மாழ்வாரை, ‘‘சடகோபன்’’ என்கிறார். தம்முடைய வஞ்சகத்தைப் போக்கியதால் அவரை ‘சடகோபன்’ என்று கொண்டாடுகிறார். தூர்வார இயலாமல் இருக்கும் படுகுழி போன்ற தம் பாவங்களைப் போக்கிய குண பூர்த்தி உடையவரான அவரை, ‘நம்பி’ என்கிறார்.

‘நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்’ என்று துவங்கும் ஐந்தாம் பாசுரத்தில், முன்னிரண்டு வரிகளில், தம்முடைய புன்மையையும், பின்னிரண்டு வரிகளில் ஆழ்வார் தமக்கு செய்த நன்மைகளையும் விவரிக்கிறார். இப்பாசுரத்தில், ‘‘பிறர்’’ என்பதால், நித்யர், முக்தர், பத்தர் எனப்படும் மூவகைப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்த புருஷோத்த மனைக் குறிப்பிடுகிறார். ‘நன் பொருள்’ என்று ஈச்வரனுக்கு அடிமையான ஆத்மாவைக்குறிப்பிடுகிறார். பகவானுக்கு அடிமையான ஆத்மாவை, தனதென்று நம்பி, ஆசைப்பட்டது களவாகும். அத்தோடல்லாமல், பிற மக்களுக்குச் சொந்தமான பெண்களையும் என்னுடையவர்கள் என்று நம்பி, கள்வ னானதைக் குறிப்பிட்டு தன் புன்மையை விளக்குகிறார் ‘இவ்வாறு சிற்றின்பத்திற்காக களவு செய்யலாம்’ என்று அலைந்து திரிகையில், செம்பொன்மாடத் திருக்குருகூரில், தமக்கு, ‘‘வைத்தமாநிதி’யாக இருக்கும் ஆழ்வாரைக் கண்டதாகக் கூறுகிறார். அவரைக் கண்டு அவரால் ஆட்கொள்ளப்பட்டு, திருந்தி, ‘‘அடியார்களுக்கு அடிமை’’ என்னும் எல்லை நிலத்தை உணர்ந்து, ‘‘அடியேன்’’ என்று ஆனேனே என்று மகிழ்கிறார். இதனால், செய்ய வேண்டிய வற்றை செய்து முடித்த,:’சதிரை உடையவன்’ ஆனேனே’ என்கிறார். ஆசாரியர்கள் அழைத்தால், ‘‘அடியேன்’’ என்று கூறவேண்டும் என்று கற்பித்தவரும் மதுரகவியாழ்வார் ஆவார்.

ஆறாம் பாசுரத்தில், ஆழ்வார் திருவருளால் நீங்கிய பாவங்கள், இந்த சரீர சம்பந்தத்தால் மீண்டும் ஒட்டுமோ என்னும் கேள்வி எழ, அது ஒருகாலும் நடக்காது என்று உறுதி கொள்கிறார், மதுரகவியாழ்வார். தம் ஆசாரியரான நம்மாழ்வாரின் அருள் காரணமாக தம்மை அங்கீகரித்ததால் தம்முடைய பாவங்கள் நீங்கினவே தவிர, தம் சாதனையால் அல்ல. அவ்வாறிருக்க ஆழ்வாரின் அங்கீகாரம் நீங்கினால் அல்லவோ பாவங்கள் மீண்டும் ஒட்டும். அது ஒருநாளும் நடக்காது’ என்று அறுதியிடுகிறார். இவ்வாறு அங்கீகரித்த அந்த நாளிலிருந்தே, அதன் பயனும் கிட்டுமாறு அருள் புரிந்தார் ஆழ்வார். தம்முடைய புகழை அன்று முதலே பாட அருள் புரிந்தார். இது எப்பொழுதுமே தொடரும். வேறு விஷயத்தில் என்னைப் போகவிடமாட்டார். என்று அருளிச் செய்து, ‘‘எம்பிரான்’’ என்று ஆழ்வாரைத் தம் ஸ்வாமியாகக் கொண்டாடுகிறார், மதுரகவியாழ்வார்.

ஏழாம் பாசுரத்தில், தம் குற்றங்களைப் பாராமல், தம்மை ஏற்றுக்கொண்டு, ஆழ்வார் அருள் புரிந்ததைக் கொண்டாடு கிறார், மதுரகவியாழ்வார். தம்மைப் பெறுவதற்காகக் காத்திருந்த நம்மாழ்வார், தம்மைக் கண்டவுடன், நிதியை கண்டெடுத்தாற் போல் மகிழ்ந்தார் என்கிறார். உலகத்திலுள்ள மற்றவர்க்கும், ஆழ்வாருக்கும் உள்ள வேறுபாடு கூட அறியாமல் இருந்த தம்மை, கண்டெடுத்து அங்கீகரித்து, ப்ராயச்சித்தங்களால் அழிக்க இயலாமல் இருந்த தம் பாவங்களைப் போக்கி அருளினார் ஆழ்வார். இவருடைய அருளை பகவத் விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் இல்லாதவர்கள்’ என்று வேறுபாடு இல்லாமல், எட்டு திசைகளிலும் பரவும்படி எடுத்துக் கூறுவேன்’ என்கிறார். ‘அழகிய தமிழில் திருவாய் மொழியை அருளிச் செய்த நம்மாழ்வார் புகழைப் பாடுவதே இனி என் வேலை’ என்கிறார்.

எட்டாம் பாசுரத்தில், ‘இதற்கு முந்தைய பாசுரத்தில் அருளிச் செய்த, ‘‘எண் திசையும் அறிய இயம்புகேன்’’ என்பதற்கான காரணம் கூறப்படுகிறது. ‘‘கைங்கர்யம் புருஷார்த்தம் கருணை சாதனம்’’ (பகவானுக்கும் பாகவதர் களுக்கும் செய்யும் தொண்டே மிகச் சிறந்த பலன். அதைப் பெறுவதற்குச் சாதனமாக அமைந்திருப்பது அவன் கருணையே) என்று இருப்பவர்களை, ‘அருள் கொண்டாடும் அடியவர்’ என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்டவர்கள், ஆனந்தக் கடலில் முழ்கிக் கிடக்கும் வண்ணம் பெறுவதற்கு மிகவும் அரிதான வேத இரகசியங்களை, ஸத்வ குணம் மேலோங்கி நிற்பவர்களுக்கு மட்டுமே கிடைக்ககூடிய உபநிஷத் ஸாரங்களை தம்முடைய இன்னருளால் ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்களாகப் பாடி உய்வித்தார் என்று போற்றுகிறார். ஈச்வரன் கைவிட்ட ஆத்மாக்களையும், அவர்களுடைய துர்கதியைக் கண்டு அவர்களைத் திருத்து வதற்காக, ‘‘ஆயிரம் இன் தமிழ் பாடிய’’ இவருடைய கருணையைக் காணுங்கள்; இவர் அருளை சீர்தூக்கிப் பார்த்தால், இந்த உலகத்தையே விஞ்சியிருக்கும். ‘‘கடல் மண் ணெல்லாம் விலையோ?’ (திருவிருத்தம் - 60) என்னும்படி ஒளிர்வது, இவருடைய கண்ணுடைமை’ என்று போற்றுகிறார்.

ஒன்பதாம் பாசுரத்தில் ஆழ்வாருடைய அருள், இந்த உலகைக் காட்டிலும் பெரியது என்று எவ்வாறு சொல்லக் கூடும் என்பதற்கான காரணம் தரப்படுகிறது. மிக உயர்ந்த ப்ரமாணமான வேதங்கள் தவிர வேறு எந்த சாஸ்த்திரத்தையும் சான்றாதாரமாக ஏற்காத, ‘வேத ப்ரமாண நிஷ்டரான’ ஆழ்வார், வேதத்தின் பொருளான எம்பெருமானைக் காட்டித்தந்த தோடல்லாமல், அதன் உட்பொருளான ததீய சேஷத்வத்தை (அடியார்க்கு ஆட்பட்டிருத்தல்) காட்டித்தருகிறார். அதுவும் எப்படி? அறிவதற்கு அரிதான வேதத்தின் உட்பொருளை எல்லோரும் அறியும்படி, ‘‘நிற்கப்பாடி’ அதாவது, கல்லைத் துளைத்து அதில் நீரை நிறுத்துவாரைப் போல, தொளை இல்லாத என் நெஞ்சிற்கு இதுவே விஷயமாம்படி செய்தார். என் தாழ்ச்சியைப் பாராது, எனக்கு உபகாரம் செய்தார். இப்படி பேருபகாரம் செய்த குருகூர் நம்பியிடம் அடியேன் கொண்ட காதலின் பயன், அவருக்கு அடிமையாக இருப்பதல்லவா? என்கிறார், மதுரகவியாழ்வார். பகவானிடத்தில் ஈடுபாடு காரணமாக பிறக்கும் அடிமைப்பயன் இச்சரீரத்தைத் துறந்தபிறகு ஏற்படும். ஆனால், நம்மாழ்வாரிடம் கொண்ட அடிமைப்பயன் இந்த உடலில் இருக்கும்போதே கிடைத்தது என்று மகிழ்கிறார்.

பத்தாம் பாசுரத்தில், ஆழ்வார் தமக்குச் செய்த உபகாரத்தைப் பேசி, இதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்? என்று தவிக்கிறார், மதுரகவியாழ்வார். உலகத்தில் ஓர் உதவி செய்தால், அது ஓர் பயனைக் கருதியே இருக்கும். அப்படி ஓர் பயன் இருக்காவிட்டாலும், உபதேசிக்கும் நன்மையைக் கேட்டு ஏற்றுக்கொள்ளும் தகுதியாவது இருக்கவேண்டும். இது இரண்டுமே இல்லாத அடியேனை, ஆழ்வார் ஏற்றுக் கொண்டு திருத்தியருளினார். இதற்கு என்ன காரணம்? பற்றி எரியும் வீட்டின் எல்லா கதவுகளையும் அடைத்துக் கொண்டு உள்ளே இருக்கும் ஒருவனை, வெளியே இருப்பவர் விடுவிப்பதற்குக் காரணம் என்ன? வீட்டிற்குள்ளே இருப்பவன் கெடும் கேட்டினைப் பொறுக்க மாட்டாமை அல்லவா? இதைப்போலவே, ஆழ்வார், இவரை ஆட்கொண்டு, இவருடைய செயல்களையெல்லாம் நல்லவையாக ஆகும்படி திருத்திப் பணிகொண்டார் என்று நன்றி பாராட்டுகிறார். நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் குருகூரில், சோலைகளில் வசிக்கும் குயில்கள் கூட ஆழ்வாரின் பாசுரங்களைக் கேட்டு, தாமும் அந்த பாசுரங்களை உரக்கப் பாடுபவை. இப்படி பெருமை பெற்ற குருகூர் நம்பி திருவடியில், எக்காலமும் அன்பு பாராட்டும் தன்மை, தமக்கு வேண்டும் என்கிறார், மதுரகவியாழ்வார். ஆழ்வார் செய்த உபகாரத்திற்கு கைம்மாறு காணாமல் தடுமாறுகிறார். மதுரகவியாழ்வார்.

பத்தாம் பாசுரம், ‘இப்பிரபந்தத்தையே தஞ்சமாக நினைப்பவர்களுக்கு வசிக்கும் இடம் பரமபதம்’ என்று பலச்ருதியைக் கூறுகிறது. இப்பாசுரத்தில், எம்பெருமான், ‘‘அன்பன்’’ எனப்படுகிறான். ஏனெனில், அவன் ‘‘ஜீவாத்மாக் களிடம் வாத்சல்யம்’’ என்னும் குணத்தைத் தன் ஸ்வரூபமாக உடையவன். அவனுக்கு, ‘வேண்டியர், வேண்டாதவர்; நண்பர் பகைவர் போல்வார் எவரும் இல்லை. அவன் அன்பு, ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பொதுவானது. ஆகையால் அவன் ‘அன்பன்’. ஆனால், ஆழ்வார் ‘அந்த அன்பனாகிய எம்பெருமானை அடைந்தவர்க்கெல்லாம் அன்பன். எம்பெருமானுடன் தமக்கான இப்பந்தத்தை உணர்ந்து, ‘‘உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்’’ என்று அவனையே பற்றி இருப்பவர்களுக்கு அன்பன். ஆழ்வார், ‘‘அடியார் அடியார்தம் அடியார் அடியார்’’ என்று அவன் திருவடி சம்பந்தம் உடைய வரிடம் கொண்ட அன்பினால் உளம் நிறைந்தவராகையால், ‘நம்பி’ என்று போற்றப்படுகிறார்.

இப்படிப்பட்ட தென் குருகூர் நம்பிக்கு தாம் ‘அன்பனாய்’ இருப்பதை அருளிச் செய்கிறார், மதுரகவியாழ்வார். இவர், எம்பெருமான் மற்றும் அவனடி யார்கள் திறத்தில் மட்டும் அன்பு பூண்டவரல்ல. இவர்கள் உகப்பே புருஷார்த்தம் என்று இருப்பதற்காக ஆசார்யரான ஆழ்வாரைப் பற்றி அவரிடத்தில் அளவற்ற அன்பு பூண்ட அன்பர். தம் ஆசார்யரான ஆழ்வாரைக் குறித்து, தாம் பாடிய பாசுரங்கள் தமக்கும் இன்பம் பயக்குமாறு இருப்பதால், மதுரகவி என்கிறார். இதை நம்புபவர்கள் இருக்கூடிய இடம் வைகுந்தம் என்று உறுதியளிக்கிறார். இது ஆழ்வார் ஆணையே காரணமாக நாம் செல்லக்கூடிய பரமபதம் என்று அறுதியிடுகிறார், மதுரகவியாழ்வார்.

ஆசார்ய ஹ்ருதயத்தில் பேசப்படும் நம்மாழ்வாரின் பெருமை:

வேதம் தமிழ் செய்த மாறனின் ஏற்றத்தை மதுரகவியாழ்வார் அருளிச் செய்த, ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுர வ்யாக்யானங்களின் வாயிலாக அறியப் பெற்றோம். இனி ஆசார்யரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், தம்முடைய ‘‘ஆசார்ய ஹ்ருதயம்’’ என்னும் நூலில், நம்மாழ்வாரின் ஏற்றத்தை விரிவாக விளக்குவதோடு இல்லாமல், திருவாய்மொழி மற்றும் தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைப்பதைக் காணலாம்.

  ஸ்வாமி நம்மாழ்வார், வேதத்தைத் தமிழில் செய்தார் எனப்படுகிறது. உண்மையில் இந்த வெளிப்பாடால் உணர்த்தப்படுவது என்ன? நம்மாழ்வார் வேதம் முழுவதையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தாரா? நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மற்றும் உபாங்கங்கள், அனைத்தையும் தமிழ் மொழியில் தந்தாரா? அல்லது வேதாந்தம், உபநிஷத் எனப்படும், வீடுபேற்றிற்கு வழிவகுக்கும் பகுதிகளை மட்டும் தமிழ்ப்படுத்தினாரா? அல்லது வேதத்தின் தேர்ந்த சாரத்தை தமிழ் மொழியில் நமக்குத் தந்தாரா? என்று பல ஐயப்பாடுகள் தோன்றக் கூடும். இந்தக் கேள்விகளுக்கு, பதிலை அறுதியிட்டு இறுதியாக கூற வல்லவர், நம்மாழ்வாரின் திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்தவராக இருக்க வேண்டும். எம்பெருமான் திருவருளால்: ‘‘இந்தப் பயனுக்காகவே அவதரித்தாரோ?’’ என்று எண்ணவைப்பவர், ஆசார்யரான அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்.

திருவாய்மொழிக்கு, ஈடு முப்பத்தாறாயிரப்படியை அருளியவரான (ஏடுபடுத்தியவரான) வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரர்தான் அழகிய மணவாளப்பெருமாள் நாயனார். வைணவ உலகம் போற்றும் ‘அஷ்டாதச ரஹஸ்யங்கள்’’ என்னும் நூலை அருளிச் செய்த, பிள்ளை உலகாரியரின் தம்பியாவார். அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் நம்மாழ்வாரின் பெருமை, திருவாய்மொழியின் ஏற்றம், ஆகியவற்றிற்கு ஆழ்வாரின் திருவுள்ளக்கருத்து என்ன, திருவாய்மொழி பாசுரங்களின் ஆழ்ந்த கருத்து என்ன, என்பவற்றை, மிகத் தெளிவாகவும், அழகாகவும் எடுத்துரைத் திருக்கும் நூல்தான் ‘‘ஆசார்ய ஹ்ருதயம்’’ என்பது.

இதில் ஆசார்யன் என்பது நம்மாழ்வாரையும், ஹ்ருதயம் என்பது அவர் திருவுள்ளத்தையும் குறிக்கும். ‘ஆசார்ய ஹ்ருதயம்’ என்றால், ‘‘மாறன் மனம்’’ என்று பொருள்படும். ‘‘வேதம் தமிழ் செய்த மாறனின்’’ சிறப்பையும், அவர் திருவுள்ளத்தின் ஆழ்ந்த எண்ண ஓட்டத்தையும், ‘‘மாறன் மனம்’’ அறிந்த அழகியமணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய நூலைக் கொண்டே அறிய முயல்வது வெகு சிறப்பாக இருக்கும் அல்லவா? அதற்கான ஓர் எளிய முயற்சியை மேற்கொள்ளலாம்.

ஆசார்யஹ்ருதயம் ஓர் ஒப்புயர்வற்ற நூல். இதைப் போன்ற ஒரு நூல் இதற்கு முன்போ பின்போ எழுதப்பட வில்லை என்றே கூறலாம். இந்த நூலின் ஆசிரியர், பொதுவாக எல்லோரும் சொற்றொடர்களை அமைப்பது போல் அமைக்காமல், அருளிச் செயல்கள், உபநிஷத் வாக்யங்கள், இதிஹாச புராணங்களில் உள்ள சொற் றொடர்கள் ஆகிய வற்றிலிருந்து சொற்களை அல்லது சொற் றொடர்களை தேர்ந்தெடுத்து வாக்யங்களை அமைத்துள்ளார்.

உதாரணத்திற்கு ஓர் ஸூத்திரம்:-

‘‘ருக்கு சாமத்தாலே சரசமாய், ஸ்தோபத்தாலே பரம்புமா போலே, சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர்சுவை ஆயிரம் ஆயிற்று’’ (நூற்பா-51)

‘‘ரிக் வேதம், சாமவேதமாக விரிவடைவதைப் போல, நம்மாழ்வார் அருளிச் செய்த திருவிருத்தம், திருவாய்மொழி யாக விரிவடைந்தது’’ என்பதை விளக்குவதே இந்த ஸூத்ரம்.

ரிக் வேதம் சுவை நிறைந்த ‘‘ஸ்தோபம்’’ எனப்படும் இசை நிறைச் சொற்களுடன் இணைந்து சாமவேதமாக விரிவடையும். இந்த ஸூத்ரத்தை வடிவமைக்கவும், விளக்கவும் உபயோகப்படுத்தப்பட்ட ப்ரமாணங்கள்:-

1. ‘‘ருசஸ் ஸாமரஸ:’’ என்பது சாந்தோக்ய உபநிஷத்.

2. ‘‘சொல்லார் தொடையல்’’ என்பது திருவிருத்தம் நூறாவது பாசுரத்தில் காணப்படும் சொற்றொடர்.

3. ‘இசை கூட்டி’’ என்பது திருவாய்மொழி பாசுரம் 2-4-11 லிருந்து எடுக்கப்பட்டது.

4. ‘‘அமர்சுவை ஆயிரம்’’ என்பது திருவாய்மொழி 1-3-11 லிருந்து எடுத்தாளப்பட்டது.

இப்படி பூமாலை தொடுப்பதில் கைதேர்ந்தவர் பல வண்ண மலர்களைக் கொண்டு, உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நேர்த்தியோடு கட்டுவதைப் போலவும், தொழில் திறமை வாய்ந்த பொற்கொல்லர் நவரத்தினங்களை இழைத்து கண்ணைப்பறிக்கும் நகைகள் செய்வதைப் போலவும், இந்த நூலை உருவாக்கியுள்ளார், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்.

  இந்த நூலுக்கு விளக்கமான உரையை அருளிச் செய்தவர், பெரிய ஜீயரான மணவாளமாமுநிகள். ஸூத்ரங் களைப் பதம் பிரித்துக் கூட்டி, எளிய தமிழில் விளக்கம் தந்து, ஸூத்ரத்தில் உபயோகப் படுத்தப்பட்டிருக்கும் சொற்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்னும் குறிப்பைத்தந்து, பேருதவி புரிந்திருப்பவர் நமக்கு சமகாலத்தில் வாழ்ந்தவரான வித்வான் பி.ஆர்.புருஷோத்தம நாயுடு அவர்கள்.

இனி ஆசார்ய ஹ்ருதயத்தைக் கைவிளக்காகக் கொண்டு தமிழின் பெருமையையும், மாறனின் பெருமை யையும் திருவாய்மொழியின் பெருமையையும் அறிய முற்படலாம்:-

நம்மாழ்வாரின் ஏற்றம்

வேத வ்யாஸர் மற்றும் சௌநக பகவான் ஆகியோருக்கு உள்ள ஏற்றம், ஸ்வாமி நம்மாழ்வாருக்கும் உண்டு, என்பது ஆசார்ய ஹ்ருதயம் 47ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது. வேத வ்யாஸர் மற்றும் சௌநக பகவான் ஆகிய இருவரும், ரிஷி, முநி, கவி என்று கொண்டாடப்பட்டார்கள். இதற்குக் காரணங்கள்:-

ரிஷி என்றால், ‘பார்ப்பவர்’. மனனம் செய்வதால் ‘முனி’. நூல்களை பார்ப்பவர், சொல்பவர், ‘கவி’.

‘புராண ரிஷி’ என்றும், பகவான் நாராயணனின் ஆவேச அவதாரமாகக் கருதப்படும் வேதவ்யாஸர், வேதங்கள் முன்பு இருந்த அதே க்ரமத்தில் கண்டதால், ‘‘ரிஷி’’ என்றும் மஹா பாரதத்தை மனதில் மனனம் செய்து எழுதியதால் ‘‘முனி’’ என்றும், உலகத்தைத் தூய்மை செய்யும் கவிகளுள் முதன்மையானவர் என்ற பெயர் பெற்றதால், ‘‘கவி’’ என்றும் கொண்டாடப்பட்டார்.

‘மந்த்ரதர்சி’ என்று போற்றப்படும் சௌநக பகவான், மந்திரங்களை முன்பு இருந்ததைப் போலவே பார்த்ததால், ‘‘ரிஷி’’ என்றும், ‘‘பகவானாகிய சௌநகமுனி’’ என்று வணங்கப்பட்டதால், ‘‘முநி’’ என்றும், மந்திரங்களை முன்பு இருந்ததைப் போலவே சொன்னதால், ‘‘கவி’’ என்றும் வணங்கப்பட்டார்.

இவர்களைப்போலவே, ‘‘பரம்பொருள் விஷயமாய், தமிழில் உள்ள ஆயிரம் பாசுரங்கள் திருவாய் மொழி என்னும் உபநிஷத்தை எவர் அறிந்தாரோ, அப்படிப் பட்டவராய் இவ்வுலகில் அவதரித்து, கிருஷ்ண பகவான் விஷயத்தில் உண்டான ஆசையின் உருவம் போல் இருக்கிற ‘ரிஷி’யாகிய நம்மாழ்வாரை, வணங்குகிறோம்’’ என்பதால், ‘‘ரிஷி’’ என்றும், ‘‘ஞானம் இல்லாதவற்கு ஞானத்தை உண்டு பண்ணுபவரும், திருப்புளி ஆழ்வாரின் கீழ் எழுந்தருளி இருப்பவருமான, ‘‘முனி’’வரான ஸ்ரீசடகோபரை வணங்கு கிறேன்’’ என்பதால் ‘‘முனி’’ என்றும், ‘‘உலகம் படைத்தான் கவியாயினேற்கு’’ (திருவாய்மொழி 3-9-10) என்று ஆழ்வார் தம்மை, ‘‘கவி’’ என்று கூறிக்கொள்வதால், இவரும், ‘‘ரிஷி’’, ‘‘முநி’’, ‘‘கவி’’ என்று அழைக்கப்படுகிறார்.

வேத வ்யாஸர், சௌநக பகவான் போன்றவர்களைப் போல, ரிஷி, முநி, கவி என்று அழைக்கப்பட்ட போதிலும், இவர்களைக் காட்டிலும் ஸ்வாமி நம்மாழ்வாருக்கு உள்ள ஏற்றம் மற்றும் தனிப்பெருமை நாயனாரால் ஸூத்ரம் 58 இல் விவரிக்கப்படுகிறது.

ஸ்ரீ ராமாயணத்தை இயற்றிய வால்மீகி பகவான், தாம் செய்த தவத்தின் பலத்தால் பெற்ற ‘தர்ம வீர்ய ஞானத்தால்’ தெளிந்தவராய், ஸ்ரீராமனை நினைத்து மகிழ்ந்தவராய், அவனுடைய சரிதையை உள்ளத்தில் உவகை கொண்டு மேலே மேலே எழுதிக் கொண்டு செல்வார்.

ஆனால், ஒரு காரணமும் இல்லாமல், எம்பெருமான், ‘‘மயர்வற மதிநலம் அருளியதால்’’ உள்ளம் உருகி நெகிழ்ந்து, அவன் பிரிவாற்றாமை தாங்காமல், கலங்கி, உள்ளம் சோர்ந்து, அவன் லீலைகளை நினைத்து, மோகித்துக் கிடப்பார் ஆழ்வார். ‘‘எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே’’ (திருவாய்மொழி 1-3-1) என்று அவன் வெண்ணெய் களவை நினைத்தும், ‘‘பிறந்தவாறும் வளர்ந்த வாறும்’’ (திருவாய் மொழி 5-10-1), என்று அருளிச் செய்கையில், ‘‘பிறப் பில்லாதவன் பிறந்தானே’’ என்று வியந்தும், ‘‘கண்கள் சிவந்து பெரியவாய்’’ (திருவாய்மொழி 8-8-1) என்று, தம்மோடு கலந்த பின்பு, அவன் நிறம் பெற்ற அதிசயத்தையும் கண்டு ‘‘இதென்ன, இதென்ன’’ என்று மூவாறு மாதகாலம் மயங்கிக் கிடந்தார், ஸ்வாமி நம்மாழ்வார்.

ரிஷிகளைப் போல், மேலும் மேலும் எழுதிக் கொண்டு போகாமல், ‘‘ஒரு சொல் எடுப்பதற்கு, ஓர் மலையை எடுக்குமாறு போலே’’ வருத்தப்பட்டு, ஏங்கி அழுது, பொருமி, தாழ்ந்த சொற்களாலே திருவாய்மொழியை அருளிச்செய்த ஏற்றத்தைப் பெற்றவர் நம்மாழ்வார்.

பரமாத்மாவைக் காண்பதற்கு வேதம் ஒரு கண், யோகம் மற்றொரு கண் எனப்படும், ப்ரமாணத்திற்கு ஏற்ப, வேதத்தைக் கற்றும் அஷ்டாங்கயோகம் போன்றவற்றை மேற்கொண்டும், பகவானின் தரிசனம் பெற முயல்பவர்கள், ரிஷிகள். தம் முயற்சியால் பகவானைக் காண நினைக்கும் இவர்கள், எவ்வளவுதான் முயன்றாலும் பகவானின் தெளிவில்லாத தரிசனத்தையே பெறுகிறார்கள். இவர்கள், இவ்வுலக வாழ்க்கை என்னும் சிற்றின்பம் என்பதில் தளையுண்டிருப்பதால் ‘‘ஆசா பாச பத்தர்’’ எனப்படுகிறார்கள்.

பரம்பொருள், மனத்தாலோ, த்யானத்தாலோ சிறந்த கல்வியாலோ அடையத்தக்கவன் அல்லன். அவன் அருளாலேயே அவனைக் காணமுடியும் என்பதற்கு ஏற்ப, அவன் தந்த ‘‘திவ்ய சஷுஸ்ஸாலே’’ -தெய்வீகமான பார்வையாலே- அவனே காட்டக் கண்டவர், ‘‘கண்டேன் கமலமலர் பாதம்’’ (திருவாய்மொழி 10-4-9) என்று பாடிய நம்மாழ்வார். இவர், ‘‘பொய்ந்நின்ற ஞானமும்’’ (திருவிருத்தம் -1) என்னும் திருவிருத்தப் பாசுரத்தில் அருளிச் செய்தபடி, ‘‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’’ என்று, இவ்வுலகப் பற்றை முழுமையாக நீத்துவிட விரும்பியவர். ‘‘அவன் அருளால் வன் பாசங்கள் நீங்கிற்று’’ என்று, தம் முயற்சியால் போக்க முடியாத புறப்பற்றுகளை, ‘‘அவன் திருவருளாலே வாசனையோடு விட்டார்’’ என்பதை 59ஆவது ஸூத்ரத்தில், நாயனார் விளக்குகிறார்.

உட்கொள்ளும் உணவு விஷயத்திலும் பராசரர், வ்யாஸர், வால்மீகி ஆகியோரைக் காட்டிலும், நம்மாழ் வாருக்கு உள்ள ஏற்றம் 60-ஆம் ஸூத்ரத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, காய், தானாக விழும்கனி, இலைகள், நீர், காற்று ஆகியவை உணவாகும். பிறந்தது முதல் பால் கூட அருந்தாமல் கண்ணன் நினைவாகவே இருந்த நம்மாழ்வாருக்கு, ‘‘உண்ணும் சோறு, பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’’ (திருவாய்மொழி 6-7-1) என்கிறபடி, தாரக போஷக போக்யமாக இருந்தவை கண்ணனின் நினைவும் அவன் திருநாமம் மட்டுமே என்று விவரிக்கப்படுகிறது.

உலக வாழ்க்கை, உறவினர்கள் தொடர்பு, என்பதை வேரோடு களைந்து நசை அறுத்தவர், நம்மாழ்வார். ஆனால், ரிஷி, முனிவர்கள் தங்கள் புதல்வர்கள்பால் வைத்திருந்த பற்றை விடமுடியாமல் தவித்தவர்கள் என்பது 61ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது. மாமேதையான வசிஷ்டர், தன் புத்திரனை இழந்த சோகத்தால், மலை சிகரத்தின் மீதேறி குதித்தார், நெருப்பில் வீழ்ந்தார், கழுத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் வீழ்ந்தார். இந்த முயற்சிகளால் அவர் உயிர் பிரியவில்லை. புத்திர சோகத்தில் ஆழ்ந்திருந்தார். வ்யாஸ பகவான் தன் புத்திரனான சுகரைப் பிரிந்த சோகம் தாங்காமல், ‘‘மகனே! மகனே!’’ என்று கதறியவாறு காட்டில் அலைந்து திரிந்தார்.

இவர்கள், தங்கள் சொந்தங்களைப் பிரிந்து பட்ட துன்பத்தை, நசையறுத்த நம்மாழ்வார், பகவான் பிரிவாற்றா மையில் படுவாரானார். ‘‘சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்’’ (திருவாய்மொழி 9-8-10) என்றும், ‘‘எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை’’ (திருவாய்மொழி 8-5-11) என்றும் இருந்ததே, இவர் அலமாப்பு (பிரிவாற்றாத துன்பம்)

பலன், பலனை அடைவதற்கான சாதனம், பலனைக் கொடுக்கும் தெய்வங்கள், என்ற, இந்த மூன்று விஷயங்களின் திறத்தில், முனிவர்கள், ரிஷிகள் எண்ணத்திற்கும், ஆழ்வார் எண்ணத்திற்கும் மிகுந்த வேறுபாடு உண்டாகையாலே, இவர் அவர்களைக் காட்டிலும் மிகவும் வேறுபட்டவர் என்பது 62ஆம் ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது.

பகவானை அடைவதே பலனாகவும், அதற்கு தம் சொந்த முயற்சியான கர்மயோகமும், ஞானயோகமுமே வழி என்றும், எல்லா தேவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாக எம்பெருமான் உள்ளதால், இந்திரன் போன்ற தேவதாந் தரங்கள் பற்றத்தக்கவர்கள் என்பது ரிஷிகளின் கருத்து.

ஆனால், ஆழ்வாரோ, ‘‘தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே’’ (திருவாய்மொழி 2-9-4) என்றும், ‘‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’’ (திருவாய்மொழி 3-3-1) என்றும், எம்பெருமான் திருவடிகளில் கைங்கர்யமே மிகச்சிறந்த பலனாக நினைப்பவர். ‘அதற்கான வழியும், அவன் திருவடிகளில் ப்ரபத்தியே’ என்று இருப்பவர். ‘‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்’’ (திருவாய்மொழி 5-10-11), என்றும், ‘‘அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’’ (திருவாய்மொழி 6-10-10) என்றும், அவனையே உபாயமாகப் பற்றியவர். ‘‘ஸ்ரீமந் நாராயணனைத் தவிர மற்றவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் அல்லர்’’ என்பதை, ‘‘மற்றொரு தெய்வம் தொழாள்’’ (திருவாய்மொழி 4-6-10) என்று அறுதியிடுகிறார். எல்லா வேதங்களின் சுருக்கமான திருமந்திரத்தின் ஆழ்பொருளை உணர்ந்து, அதன்படி நிற்பவர் ஞானியான நம்மாழ்வார்!

நம்மாழ்வார் பிறப்பின் ஏற்றம்

  கண்ணன், வ்யாஸபகவான், ஆகியோருடைய அவதாரத்தைக் காட்டிலும், நம்மாழ்வாருடைய பிறப்பில் உள்ள ஏற்றம் 77ஆவது ஸூத்ரத்தில் சொல்லப்படுகிறது. கண்ணன், தேவகி என்னும் ஒருத்தி வயிற்றில் பிறந்து, ஓர் இரவில் யசோதை என்னும் ஒருத்தி மகனாக வளர, ஒளிந்து சென்றவன். வியாஸமுனிவரோ கன்னிகையான மச்சகந் திக்குப் பிறந்தவர். ஆனால், நம்மாழ்வார், கிருஷ்ண ப்ரேமையே- கண்ணனிடத்தில் வைத்த ஆசையே-- ஓர் வடிவுபெற்றது போல்- ‘க்ருஷ்ண த்ருஷ்ணா’ தத்வமாக’ அவதரித்தவர். ஆகையால் இவர் பிறப்பே ஏற்றம் மிக்கது!

நம்மாழ்வாருடைய தாயாரின் ஏற்றம்

இந்த விஷயம் 78ஆவது ஸூத்ரத்தில் அருளிச் செய்யப்படுகிறது.

‘‘திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற’’ (பெரியாழ் வார் திருமொழி 1-2-17) என்று கொண்டாடும்படி, கண்ணனை மகனாகப் பெற்றாள் தேவகி. ஆனால் அவனை வளர்த்து, அவன் பால லீலைகளை அநுபவிக்கப்பெறாதவள். இவள் ‘‘பெற்றும், பேறு இழந்தவள்’’.

சத்யவதி என்னும் பெண், பராசர முனிவரின் அருளால் விஷ்ணுவின் அம்சமாக, வ்யாஸபகவானைப் பெற்றாள். ஆனால், அந்த பிள்ளையைப் பெற்ற சுகத்தைச் சிறிதும் அநுபவிக்க இயலாமல், பராசரரால் மீண்டும் கன்னியாகும்படி ஆக்கப்பட்டாள். ‘‘புந: கந்யா பவிஷ்யதி’’ என்பது ப்ரமாணம். இவள் கன்னியானவள்.

‘‘எல்லாம் தெய்வநங்கை யசோதை பெற்றாளே’ (பெருமாள் திருமொழி 7-5) என்கிறபடி, கண்ணனின் சிறுவயது லீலைகள் அனைத்தையும் அநுபவிக்கும் பேறு பெற்றாள் யசோதை. ஆனால், ஊரார், இவனை இவள் பெற்றாளா அல்லது தத்து எடுத்தாளா?’’ என்று ஐயப்படும்படியும், அவனுடைய மனிதச் செயலுக்கு அப்பாற்பட்ட செய்கைகளைக் கண்டு, ‘‘இவள் என்மகன் தானா?’’ என்று தானும் ஐயப்படும்படி ஓர் நிலை, யசோதைக்கு வாய்த்தது.

ஆனால், நம்மாழ்வாரின் திருத்தாயாரான உடைய நங்கை, இந்த தாழ்ச்சியெல்லாம் இல்லாமல், ‘‘நெடுங்காலம் நங்கைமீர்’’ எனப்படும் ஏற்றத்தைப் பெற்றவள். சரணாகதியை ஒரு முறை செய்தால் போதுமாக இருக்க, காலமெல்லாம் கண்ணனின் திருவடிகளை, ‘‘நெடுங்காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற’’ (திருவிருத்தம்-37) என்று பற்றியிருந்தவளும், பகவானு டைய சங்கு, சக்கரம் ஆகிய வற்றின் பெருமையை, இரவு பகலென்று பாராமல் எப்பொழுதும் பேசும் ஒப்பற்ற நங்கையாகவும் இருந்தவள், நம்மாழ்வாரைப் பெற்ற திருத்தாயாரான உடையநங்கை. இவளுக்கு, ‘கண்ணனைப் பெற்றும் பேரிழந்த தேவகியும், வியாஸ முனிவரைப் பெற்றபின்பும் கன்னியான மச்சகந்தியும் (சத்யவதி), ‘இவன் தன் பிள்ளையா? இல்லையா?’ என்று ஐயப்பாட்டுடன் வாழ்ந்த யசோதையும்’’ ஒருகாலும் நேராகமாட்டார்கள்.

நம்மாழ்வார் அவதரித்த இடத்தின் ஏற்றம்

  வ்யாஸபகவானும், கண்ணனும் அவதரித்த இடங் களைக் காட்டிலும், நம்மாழ்வார் அவதரித்த இடத்தின் ஏற்றம் 79ஆம் ஸூத்ரத்தில் காட்டித்தரப்படுகிறது.

  வியாஸர் பிறந்த இடம், மீனவர்கள் வாழ்ந்த இடமாகிய கங்கைக்கரை. அங்கே மீன்களின் நாற்றம் மிகுதியாக இருக்கும். கண்ணன் பிறந்தவுடன் வளரச் சென்றது ஆயர்பாடி. அங்கே வெண்ணெயின் முடைநாற்றம் மிகுந்து இருக்கும். இந்த இரண்டு மணங்களும் இவ்வுலகத்திற்குச் சொந்தமானவை.

ஆழ்வார் அவதரித்ததோ, பகவானுடைய ஸம்பந்தம் பெற்று, இவ்வுலகத்தாரின் ஸம்பந்தம் இல்லாத, திருத் துழாயின் மணம் கமழும் இடம். ‘‘வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற’’ (திருவாய்மொழி 4-4-3) என்று ஆழ்வாரே, தம் இடத்தில் வீசும் தண்ணந்துழாய் நறுமணத்தை அருளிச் செய்துள்ளார், அன்றோ?!

வியாஸரும் கண்ணனும் பிறந்த இடங்களைக் காட்டிலும், ஆழ்வார் பிறந்த இடத்திற்கான ஏற்றம் மேலும் விவரிக்கப்படுகிறது. 80ஆம் ஸூத்ரத்தில், இவர்கள் தோன்றிய இடத்தில் உள்ள ஆறு, துறை, ஊர் ஆகியவை ஒப்பிடப்பட்டு, ஆழ்வார் தோன்றிய இடத்தின் பெருமை நிலைநாட்டப் பெறுகிறது.

வியாஸர் பிறந்த ஊர், சிவபெருமானுடைய ஸம்பந்தம் பெற்ற கங்கை நதியின் கரையில் உள்ளது. அங்கே துறையாக இருப்பது ஓடங்கள் வந்துபோகும், ஓடத்துறை. ஊரோவெனில் மீனவர்கள் வலை பின்னும் வலைச்சேரியாக இருக்கும்.

கண்ணன் பிறந்த ஊரான வடமதுரை, யமுனை நதியின் கரையில் உள்ளது. அதன் நீர் தமோ குணத்தைக் காட்டுவதான கருமை நிறமானது. அங்குள்ள துறை காளியன் என்னும் பாம்பின் விஷத்தால் கெடுக்கப்பட்ட துறை. ஊரைப்பார்த்தால்: ‘‘அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம்’’ (திருப்பாவை-28) என்று நன்மை தீமை அறியாத ஆயர்கள் வாழுமிடம்!

ஆனால், நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரியில், ஓடும் ஆறு தாமிரபரணி. ‘‘பவள நன்படர்க் கீழ்ச் சங்குறை பொருநல்’’ (திருவாய்மொழி 9-2-5) என்ற பெருமை பெற்றது. துறையைப் பார்த்தால், தூய்மையான வெண் சங்கங்கள் வந்துசேரும் திருச்சங்கணித்துறை. ஊரோ மிகவும் புகழ் பெற்றது. ‘‘நல்லார் நவில் குருகூர்’’ (திருவிருத்தம் 100) என்று பெரியோர்களால் புகழப்பட்ட ஊர். ‘‘நல்லார் பலர் வாழ் குருகூர்’’ (திருவாய்மொழி 10-8-11) என்று பகவானை அநுபவித்துக் கொண்டு’’ வாழும் நன் ஞானிகள் வாழுமூர்!.

இப்படி ஆறு, துறை, ஊர் ஆகியவற்றைப் பார்த்தால், மற்றவர் பிறந்த ஊர்களுக்கும் ஆழ்வார் பிறந்த ஊருக்கும் இடையே உள்ள வேறுபாடு ‘‘வாசாம கோசரம்’’ பேசி முடியாது என்கிறார் நாயனார்!

இனி இதிஹாச புராணங்களில், பரோபகாரம் செய்வதற்காக தோன்றிய மூவருடன் ஆழ்வாரை ஒப்பிட்டு அவர், அந்த மூவர் செய்தவற்றை, இவர் ஒருவரே செய்தார் என்று இவருடைய அவதாரம் பெருமைபடுத்தப்படுகிறது 82ஆவது ஸூத்ரத்தில்.

சீதாபிராட்டி, ஜனக குலத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்தாள். இவள் ஸ்ரீராமனை மணந்து அவனுடைய எல்லா காரியங்களிலும் துணையாக நின்று, தான் பிறந்த குலத்திற்குப் புகழைச் சேர்த்தாள்.

பரதாழ்வான், தசரத குலத்தில் நடுப்பிள்ளையாகப் பிறந்தான். இராமனுக்கு உரிய இராஜ்யத்தை தான் ஆள மறுத்தாலும், இராமனைப் பிரிந்த துக்கம் தாளாமல் மரவுரி, சடை தரித்து கண்ணீரால் உண்டான சேற்றில் படுத்துக் கிடந்து, தன் குலத்திற்கு, முன்பு இல்லாத ஏற்றத்தை உண்டாக்கினான்.

வசுதேவ குலத்தில் ‘‘மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவனள் தன் வயிற்றில் சிக்கன வந்து பிறந்து நின்றாய்’’ (பெரியாழ்வார் திருமொழி 5-3-1) என்கிறபடி, ஆறு குழந்தைகளுக்குப் பிறகு, கடைக்குட்டியாகத் தோன்றினான், கண்ணன். பிறந்து அவன் தன் பெற்றோர், தங்களால் அவிழ்த்துக் கொள்ளமுடியாத கால்கை விலங்குகளை அறுந்து விடுமாறு செய்து, சிறையிலிருந்து விடுவித்தான்.

ஆழ்வாரோவெனில், இவ்விருவரும் பெற்ற ஏற்றத்தினைத் தாம் ஒருவரே பெற்றார். எவ்வாறென்றால்:

இவர் பிறந்ததால், ஆழ்வார் திருநகரி ‘‘மலிபுகழ் வண்குருகூர்’’ ஆயிற்று. (திருவாய்மொழி 4-2-11) ‘‘குடி கிடந்து ஆக்கம் செய்து’’ (திருவாய்மொழி 9-2-2) என்கிறபடி, அடிமைக்குல மரியாதை தப்பாதபடி நின்றார். இதனால், தான் பிறந்த குலத்திற்கு புகழ் சேர்த்தார்.

இவர் எம்பெருமானின் மீது கொண்ட காதலால், பெண் பேச்சு பேசுகையில், ‘‘கண்ணநீர் கைகளால் இறைத்து’’ (திருவாய்மொழி 7-2-1) என்றும், ‘‘இட்டகால் இட்ட கையரா’’ (திருவாய்மொழி 7-2-4) என்றும், தரையில் கிடந்து அன்பின் விசேஷத்தை வெளிப்படுத்தி யதால், தம் குலத்திற்கு முன்பு இல்லாத பெருமையைச் சேர்த்தார். பிறவி என்னும் சிறையையும் தகர்த்த பெருமை பெற்றவர் ஆழ்வார். ‘‘அறுவர் தம் பிறவி அம்சிறையே’’ (திருவாய்மொழி 1-3-11) என்று அருளிச் செய்தபடி, தம்முடைய பிரபந்தங்களைக் கற்பதால், தம்முடன் தொடர்பு கொண்டவர்கள், பிறவியாகிய சிறையையும் அறுப்பார்கள் என்று புகழப்படுகிறது.

இப்படி, சீதை, பரதன், கண்ணன் ஆகியோர் செய்த செயலை, இவர் ஒருவரே செய்தார். இவருடைய அவதாரமே பரோபகாரம் மிக்கது என்று போற்றப்படுகிறது.

சூரியனுடைய கதிர்களால் இருள் நீங்கும், தாமரை மலரும், கடல் நீர் வற்றும். இராமனையும் கிருஷ்ணனையும், நம்மாழ்வாரையும் சூரியனுக்கு ஒப்பிட்டு, அந்த இரு சூரியர்களும் செய்யாத காரியத்தை இந்த சூரியன் செய்த அதிசயம் விளக்கப்படுகிறது 83ஆவது ஸூத்ரத்தில்.

ஸ்ரீராமன் ‘‘இராமதிவாகரன்’’ என்று அழைக்கப் படுகிறான். திவாகரன் என்பது சூரியனின் பெயர்களில் ஒன்று. இராமனாகிய, இந்த சூரியனின் ஆயிரமாயிரம் கிரணங்களாக அமைந்திருந்தது அவன் சரமாரியாக தொடுத்த அம்புகளின் கூட்டம்! இந்த அம்புக் கூட்டம் என்னும் கிரணங்களால் வற்றியது அரக்கர் கூட்டம் என்னும் கடல்!! ஆனால், அவை, ஜீவாத்மாக்கள் ஆழ்ந்து தவித்த பிறவி என்னும் கடலை வற்றச்செய்யவில்லை.

கண்ணன், ‘‘அச்யுதபானு’’ என்று குறிப்பிடப் படுகிறான். ‘‘பானு’’ என்பது, சூரியனின் பெயர். இந்த உலக மாகிய தாமரை மலரும்படி, இந்த அச்யுதபானு தேவகி வயிற்றிலிருந்து கிழக்கு திசையில் தோன்றினான். ஆனால், இந்த அச்யுதபானுவின் பிறப்பால், மனம் என்னும் வலிமைமிக்க தாமரை மலரவில்லை!

ஆனால், நம்மாழ்வாராகிய ‘‘வகுளபூஷண பாஸ்கர’’ உதயத்தில் இவ்விரண்டும் இனிதே நடைபெற்றன. பாஸ்கரன் என்பது சூரியனைக் குறிக்கும். ஆதிநாதன் பரிசளித்த வகுள மலர் மாலையை எப்பொழுதும் சூடியிருந்ததால், இவர் வகுளபூஷணபாஸ்கரர் என்று அழைக்கப்பட்டார்.

இந்த பாஸ்கரன் அருளிச் செய்த திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்கள், அக இருளைப் போக்கும் ஆயிரம் கிரணங்களுக்குச் சமம். இவற்றைக் கற்பவர்களுக்கு பிறவி என்னும் கடல் வற்றியே தீரும். ‘‘போதில் கமல வன் னெஞ்சம்’’ எனப்படும் (பெரியாழ்வார் திருமொழி 5-2-8) மலராத மனமும் மலரும் என்கை. இராம, கிருஷ்ணர்களைக் குறித்துச் சொன்ன, ஆதித்யன், திவாகரன், பானு என்ற சொற்களைத் தவிர்த்து, ஆழ்வாரை ‘‘பாஸ்கரன்’’ என்ற பெயரால் குறிப்பிட்டது, அவர் ‘‘ஊரும் நாடும்’’ (திருவாய்மொழி 6-7-2) என்கிற பாசுரத்தில் கூறியபடி, தம் ஸம்பந்தம் உடையவர் எல்லோருக்கும் ப்ரகாசம் செய்பவர் என்பதைக் காட்டித்தருவதற்காகும்.

ஆழ்வாருக்கு எவ்வளவுதான் ஏற்றம் சொன்னாலும், முதல் மூன்று சாதிகளான ப்ராஹ்மணர், க்ஷத்ரியர் மற்றும் வைசிய குலங்களில் பிறந்தால் கிடைக்கக்கூடிய பெருமை, ஒளி, நான்காம் வர்ணத்தில் பிறந்த ஆழ்வாருக்குக் கிடைக் குமோ? என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கப்படுகிறது, 81ஆவது ஸூத்திரத்தில்.

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன், ஸ்ரீராமனாக அவதாரம் செய்து, இராவணனை அழித்தபின்பு, பிரமன் முதலியோர், ‘‘தேவரீர் நாராயணன் என்னும் தெய்வம்’’ என்று கூறியதை விரும்பாமல், ‘என்னை மனிதனாகவும், இராமன் என்ற பெயருடையவனாகவும், தசரத சக்ரவர்த்திக்குப் புதல்வனாகவும் எண்ணுகிறேன்’’ என்று பதிலளித்தான்.

கிருஷ்ணாவதாரத்தில், கோவர்த்தன கிரியைத் தூக்கிப்பிடித்து கோகுலத்தைக் காத்த பின்பு, கோபாலர்கள் கண்ணனை அதிசயத்துடன் பார்த்து, ‘‘நீங்கள் தேவனா, கந்தர்வனா, அசுரனா’’ என்று வினவ, சற்றே சீற்றமடைந்தான் கண்ணன். பின்பு, ‘‘நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் உங்களுக்காகத் தோன்றியவன், வேறுவிதமாக எண்ண வேண்டாம்’’ என்று சமாதானம் சொன்னான்.

  இப்படி, ஸர்வேஶ்வரன் மனிதனாகப் பிறக்கையில், ‘‘தேவன்’’ என்று அழைக்கப்படுவதையும் இழிவாகக் கருதுகிறான். மீன், ஆமை என்று எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த பிறவிகளில் பிறக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு அவன் கல்யாண குணங்கள் நிறம் பெருகின்றன.

இதைப்போலவே, உயர்ந்ததான ப்ராஹ்மணப் பிறவியைப் பெறுவது, ஆத்மாவின் ஸ்வரூபமான கைங்கர்யத்திற்குத் தடையாக நிற்கும் அஹங்காரத்தை வளர்க்கும் என்பதால், கைங்கர்யத்தை வேண்டுபவர்கள், அதை விரும்புவதில்லை. ஆழ்வார் தம்மை ‘‘பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் தொண்டர்’’ (திருவாய்மொழி 9-2-1) என்றும், ‘‘உன் பொன்னடிக் கடவாதே வழிவருகின்ற அடியர்’’ (திருவாய்மொழி 9-2-1) என்றும் கூறிக்கொள்கிறார்.

பகவானிடத்தில், விருப்பம் இல்லாத மக்கள் நிறைந்த இப்பூவுலகத்தில், இந்த அடிமைச்சுமை ஒளிபெறாது. ஆனால், அவனுடன் நெருங்கி அவனுக்கு அந்தரங்கமாக இருந்து கைங்கர்யம் செய்யும் பரமபதத்தில் ஒளி பெறும். இதை ஆழ்வார், ‘‘ஆழிஅம் கைப்பேர் ஆயர்க்கு ஆளாம் பிறப்பு--, உண்ணாட்டுத் தேசன்றே’’ (பெரிய திருவந்தாதி 79) என்று அருளிச் செய்கிறார். ‘‘உண்ணாடு’’ என்பது பரமபதம். ‘‘தேசு’’ என்றால் ஒளி.

பரமபதத்தில் பகவானுடைய கைங்கர்யத்திற்கு தகுதியானதாக மேற்கொள்ளும் சரீரத்தைப் போன்று, அடிமைப்பொருளான ஆன்மாவிற்கு இதுவும் (இந்த பிறப்பும்) ஒளியை உண்டாக்குவது என்பது கருத்து.

  ஆழ்வார் தாழ்ந்ததான நான்காம் வர்ணத்தில் பிறந்ததற்கான காரணம் மேலும் சிறப்பாக விளக்கப்படுகிறது 84ஆம் ஸூத்ரத்தில்.

பிறர்க்கு நன்மை செய்யவும், அடிமைப்பயனைப் பெறவும் அவதரித்த ஆழ்வார், முதன் மூன்று சாதிகளில் அவதரிக்காமல், நான்காம் சாதியில் பிறந்ததற்கு சிறப்பான ஓர் காரணம் காட்டப்படுகிறது.

யயாதி என்பவருடைய சாபத்தால் அரசாட்சியை இழந்து, கீழ் நிலையை அடைந்தது யதுவம்சம். அதை மீண்டும் மேல் நிலைக்கு கொண்டு வந்து அதன் பெருமையை நிலை நிறுத்த, அந்த வம்சத்திலேயே கோபாலனாகத் தோன்றினான் பகவான்.

ஹிரண்யாக்ஷன் என்னும் அரக்கனால் சிறை எடுக்கப்பட்டு, கடலின் ஆழத்தில் ஒளித்து வைக்கப்பட்டாள் பூமி தேவி. அவளை மீட்டுவர பகவான் ‘‘கேழலாய்க் கீழ்புக்கு இடந்திடும்’’ (திருவாய்மொழி 2-8-7) என்கிறபடி வராஹமாக (பன்றியாக) அவதாரம் செய்து, பூமி தேவியைக் காப்பாற்றினான்.

‘‘நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன்’’ என்று செருக்கோடு இருக்கும் முதல் மூன்று சாதியினர் அந்த செருக்கை விட்டு, ‘‘நான் அடிமை’’, எம்பெருமானுக்கு ஆட்பட்ட ‘‘அபிமான துங்கன்’’ (திருப்பல்லாண்டு-11) என்பதை உணர்ந்து உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதற்காக, அஹங்காரத்தை வளர்த்து, கேடு விளைவிக்கும் முதல் மூன்று சாதிகளைத் தவிர்த்து, நான்காம் வர்ணத்தில் தாழ இழிந்து பிறந்தார், ஸ்வாமி நம்மாழ்வார், எனப்படுகிறது.*

தமிழ் மொழி மற்றும் திருவாய்மொழியின் ஏற்றம் - ஆசார்ய ஹ்ருதயத்தில் அருளிச் செய்தபடி.

திருவாய்மொழியின் ஏற்றம்

‘‘ப4க்தாம்ருதம் விஶ்வஜநாநுமோத3னம்
ஸர்வார்த்த2த3ம் ஸ்ரீஶட2கோபவாங்மயம் |
ஸஹஸ்ரசாகோ2பநிஷத் ஸமாக3மம்
நமாம்யஹம் த்3ராவிட3 வேத3 ாக3ரம்’’ ||

  இந்த தனியனில் திருவாய்மொழியை, ‘‘திராவிட வேதம்’’ என்றும், ஆயிரம் சாகைகளின், உபநிஷத்தின் சாரம் என்றும் போற்றுகிறார் நாதமுனிகள். ‘‘வேதங்களுக்குள் நான் சாமவேதம்’’ என்று ஸ்ரீகிருஷ்ண பகவான் ‘தான் சாமவேதம்’ என்று கூறிக்கொள்கிறான். அதன் ஆயிரம் கிளைகளின் சாரமே, திருவாய்மொழி என்பதை இந்தத் தனியனிலிருந்து அறிகிறோம். இந்த திராவிட வேதத்தின் சிறப்பை, தனித் தன்மையைக் காண்போம்:-

‘திராவிட வேதம்’ என்றும், ‘சந்தங்கள் ஆயிரம்’ என்றும் திருவாய்மொழி வழங்கப்படுகிறதே. இப்படி ஓர் வேதம் உண்டோ? என்னும் கேள்விக்குப் பதிலளிக்கிறார், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார். ஆசார்ய ஹ்ருதயம் 39ஆவது ஸூத்ரத்தில், வேதமானது அதை அத்யயனம் செய்பவர்கள் மற்றும் அது ஓதப்படும் உலகங்களைப் பொறுத்து வெவ்வேறானது. அதைப்போலவே, திருவாய் மொழியும் ஒருவகைப்பட்ட வேதம் எனப்படுகிறது.

‘அப்படியிருந்தாலும், எல்லாம் ஒரே மொழியில் இருக்கவேண்டாமா? வடமொழி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இருப்பது எவ்வாறு?’ என்னும் ஐயத்திற்கு, 40ஆவது ஸூத்ரத்தில் பதிலளிக்கப்படுகிறது. வேதம் ஒன்றேயானாலும், அதனுள் ருக்வேதம், யஜுர்வேதம், அதர்வணவேதம் மற்றும் சாமவேதம் என்று பிரிவுகள் இருப்பதுபோல், மொழி வேறுபாட்டால் திருவாய்மொழி இவ்வாறு பிரிந்திருக்கும் என்கிறபடி.

தமிழ் மொழியின் ஏற்றம்

  வடமொழி அநாதியானது; ஆகையால், அந்த மொழி யில் உள்ள வேதங்களுக்கு ஏற்றம் அதிகம் என்பார்க்கு, பதில் கூறுவதற்காக தமிழ்மொழியின் ஏற்றத்தை எடுத்துரைக்கிறார், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்.

41ஆவது ஸூத்ரத்தில், தமிழ்மொழி அகஸ்தியரால் ஆக்கப்பட்டது அல்லவா? அது எப்படி வடமொழிபோல் அநாதியாகும் என்னும் கேள்விக்குப் பதிலளிக்கப்படுகிறது. ‘‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’’ என்று திருநெடுந்தாண்டகம் 4-ஆம் பாசுரத்தில், தமிழும் வடமொழியும் ஒருசேர பேசப்படுகிறது. அநாதியான தமிழ் மொழி அகஸ்தியர் என்னும் முனிவரால் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது அவ்வளவே. இதனால் தமிழ் மொழி ‘‘ஆகஸ்தியம்’’ எனப்படுகிறது. மற்றபடி, அதுவும் வடமொழி போல் அநாதியானதே.

வேதத்தை, ‘‘மறை’’ என்று சொன்னாலே போதும். ஆனால் அது, ‘வடமொழி மறை’ எனப்படுகிறது. இதற்குக் காரணம், ‘‘தென்மொழி மறையாகிய’’ திருவாய்மொழி என்பது உண்டு என்று உணர்த்துவதற்கேயாம்’ என்று தெரிவிக்கிறார், 42-ஆம் ஸூத்ரத்தில்.

திருவாய்மொழியின் ஏற்றம்

‘ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு திவ்யப் பிரபந்தங்களும், நான்கு வேதங்களுக்கு இணை’ என்று ஏற்றுக்கொண்டாலும், வேதங்களுக்கு அங்க, உபாங்கங்கள் என்பவை இருப்பதுபோல் இவற்றிற்கும் உண்டோ என்னும் கேள்விக்குப் பதிலளிக்கப்படுகிறது 43ஆவது ஸூத்ரத்தில்.

வேதங்கள் நான்கு: அவை:- ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வணம்.

வேதாங்கங்கள் ஆறு: அவையாவன சிக்ஷை, வியாகரணம், நிருக்தம், சந்தஸ், கல்பம், ஜோதிஷம் ஆகியவை.

எட்டு உபாங்கங்கள்:- மீமாம்ஸை, நியாயம், புராணங்கள், தர்ம சாஸ்த்ரம், தொடக்கமாக எட்டு நூல்கள்.

நான்கு வேதங்களுக்கு, இந்த 14 நூல்கள் (6+8) இருப்பதைப்போல நம்மாழ்வார் அருளிச் செய்த ப்ரபந்தங் களுக்கு இருப்பவை, மற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த, 14 திவ்யப்ரபந்தங்கள். அவை:-

திருமங்கையாழ்வார் அருளிச் செய்த ‘‘நன் மாலைகள்’ என்று கொண்டாடப்படும், பெரிய திருமொழி, திருவெழுக் கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரியதிருமடல், திருக்குறுந் தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகிய ஆறு திவ்யப் பிரபந்தங்கள்.

‘மற்ற எண்மர்’ எனப்படும் மற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யப்பிரபந்தங்கள், வேத உபாங்கங்கள் போன்றவை.

‘‘மற்ற எண்மர்’’ ஆவர், பொய்கையாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி யாழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார். இவர்களுடைய அருளிச் செயல்கள் முறையே:-பொய்கையாழ்வார்:- முதல் திருவந்தாதி, பூதத்தாழ்வார்:- இரண்டாம் திருவந்தாதி, பேயாழ்வார்:- மூன்றாம் திருவந்தாதி, திருமழிசை யாழ்வார்:- நான்முகன் திருவந்தாதி, மற்றும் திருச்சந்த விருத்தம். குலசேகராழ்வார்:- பெருமாள் திருமொழி; பெரியாழ்வார்:- திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி; தொண்டரடிப் பொடியாழ்வார்:- திருப்பள்ளி யெழுச்சி மற்றும் திருமாலை; திருப்பாணாழ்வார்:- அமலனாதிபிரான் ஆகியவை.

நான்கு வேதங்களுக்கு, வேதாங்கங்கள், வேத உபாங்கங்கள் உபகாரமாக இருப்பதைப் போல், மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், நம்மாழ்வாரின் திவ்யப் பிரபந்தங்களுக்கு உபகாரமாக இருக்கும் என்றபடி.

வேதங்களும் வேதாங்க உபாங்கங்களும் ஒருசேர குறிப்பிடப்பட்ட போதிலும், நான்கு வேதங்கள் முதன்மை பெற்றிருப்பது போல், நம்மாழ்வாரின் திவ்யப்பிரபந்தங்கள் மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்களுடன், சேர்த்து பேசப்பட்ட போதிலும், அவை முதன்மை பெற்றவை எனப்படுகிறது, 44ஆவது ஸூத்ரத்தில்.

வேதத்தின் ஏற்றத்திற்குக் காரணமாக இருப்பது, அது சாஸ்த்திரமாக இருப்பது, பகவானுடைய ஆணையாக இருப்பது, குற்றமில்லாததாக இருப்பது, செவிவாயிலாக கேட்கப்படுவது, மெய்மையாக இருப்பது, அநாதியாக அழிவில்லாமல் இருப்பது ஆகியவை. இந்த பண்புகள் தமிழ் மறையாகிய திருவாய்மொழிக்கும் உண்டு, என்பது 45ஆவது ஸூத்ரத்தில் காட்டித் தரப்படுகிறது. இதற்குப் ப்ரமாணமான பாசுரங்கள்:- ‘‘ஆணை ஆயிரம்’’ (திருவாய்மொழி 6-3-11) ‘‘ஏதமில் ஆயிரம்’’ (திருவாய்மொழி 1-6-11), ‘‘செவிக்கு இனிய செஞ்சொல்லே’’ (திருவாய்மொழி 10-6-11) ‘‘பொய்யில் பாடல்’’ (திருவாய்மொழி 4-3-11), ‘‘முந்தை ஆயிரம்’’ (திருவாய்மொழி 6-5-11), ‘‘அழிவில்லா ஆயிரம்’’ (திருவாய்மொழி 9-7-11) ஆகியவை.

‘‘வேதம், ஒருவரால் செய்யப்பட்டதல்ல எனப்படு கிறது. ஆனால், ஆழ்வார்கள் இந்த திவ்யப்பிரபந்தங்களுக்குக் கர்த்தாவாக கூறப்படுகிறார்களே, இது எவ்வாறு?’’ என்பதற்கு விளக்கம் தரப்படுகிறது. 46-ஆம் ஸூத்ரத்தில், எப்பொழுதுமே உள்ள வேதங்கள், பிரமன் சொன்னதால் அவனுக்கு வேதத்தைச் சொன்ன ‘‘கர்த்ருத்வம்’’ (காரணமாக இருப்பது) ஏற்படுகிறது. இந்த ஆழ்வார்களுக்கும் ஏற்பட்ட கர்த்ருத்வமும், அதைப் போன்றதே எனப்படுகிறது.

மேலும், பிரமனானவர், சூரியனையும் சந்திரனையும் முன் கல்பத்தில் இருந்ததைப் போலவே படைத்தார் எனப் படுகிறது. இதைப்போலவே எப்பொழுதும் இருக்கும் திவ்யப்பிரபந்தங்கள், முன்பு இருந்ததைப்போலவே இந்த கல்பத்திலும் ஆழ்வார்களினால் படைக்கப்பட்டவை என்று விளக்கப்படுகிறது 48-ஆம் ஸூத்ரத்தில்.

மஹாப்ரளயம் முடிந்தவுடன், எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் முன்பிருந்த அதே கட்டமைப்பில் அண்டத்தைப் படைக்க நினைவுகூர்கிறான். முன் கல்பத்தில் இருந்த வேதங்களையும் நினைவு கூர்ந்து அதை தன் நாபிக் கமலத்தில் உதித்த முதல் பிள்ளையான நான்முக ப்ரஹ்மனுக்கு உபதேசித்தான். நான்முக ப்ரஹ்மன், இந்த வேதங்களைக் கற்க எல்லா தகுதிகளையும் பெற்றிருந்த தன் மகனான ருத்ரனுக்கும் மற்றவர்களுக்கும் கற்பித்தான். இதே க்ரமத்தில், எம்பெருமான் நம்மாழ்வாருக்கு திவ்யப்பிரபந்தங் களைக் கற்பிக்க, அவர் அதை தம் சீடரான மதுரகவி யாழ்வாருக்கும் மற்றவர்களுக்கும் கற்பித்தார் என்பது 49ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது.

இதே ஸூத்திரத்தில், ‘‘வேதமானது, அதை ஓதும் ரிஷிகளின் பெயர்களைக் கொண்டு ஆதர்வணம், தைத்திரீயம், மற்றும் காண்வம் என்று வழங்கப்படுவது போல, திராவிட வேதமான திருவாய்மொழி ‘சடகோபன் சொல்’ என்னும் பெயரைப் பெற்றது என்பது விளக்கப் படுகிறது.

நம்மாழ்வார் அருளிச் செய்த திவ்யப்பிரபந்தங்கள் நான்கு. அவற்றுள் ‘திருவாய்மொழி வேதத்திற்கு இணை யானது எனப்பட்டால், மற்ற மூன்று அருளிச் செயல்களுக்கும் வேதத்திற்கு இணையான மேன்மை உண்டா?’ என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கப்படுகிறது, 50ஆவது ஸூத்ரத் தில். திவ்யப் பிரபந்தங்கள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. அவை, முதலாயிரம், இரண்டாம் ஆயிரம், மூன்றாம் ஆயிரம் மற்றும் நான்காம் ஆயிரம். ஆகியவை. இவற்றுள், நம்மாழ்வார் அருளிச் செய்த மூன்று திவ்யப்பிரபந்தங்களாகிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, ஆகியவை, ‘‘இயற்பா’’ என்னும் பிரிவில் இடம் பெற்றுள்ளன. இவை முறையே ருக், யஜுர் மற்றும் அதர்வண வேதங்களுக்கு இணையானவை. நான்காம் ஆயிரத்தில் இடம் பெற்றிருக்கும், திருவாய்மொழி, சாமவேதத்தை ஒக்கும்.

சாமவேதமானது, இசையுடன் ஓதப்படுவது. ஆதலால், அது, ‘‘பண்புடை வேதம்’’. (திருவாய்மொழி 6-6-5) ‘‘இசை கொள் வேதம்’’ (பெரியதிருமொழி 5-3-2) என்று பண்ணும் இசையும் சேர்ந்ததாக வழங்கப்படுகிறது. ‘‘பண்ணார் பாடல்’’ என்று போற்றப்படும் இசையுடன் ஓதப்படும் திருவாய்மொழி, சாம வேதத்தின் சாரமாகக் கொள்ளப்படுகிறது.

ரிக் வேதத்தின் விரிவாக அமைந்துள்ளது சாமவேதம். சுருக்கமான ரிக்வேதம் ‘‘ஹாவு ஹாவு ஹாவு’’ என்னும் இசைநிறை சொற்களாலே சாம வேதமாக விரிவடைகிறது. இதைப் போலவே, ரிக் வேதத்திற்கு இணையான, ‘சொல்லார் தொடையல்’ (திருவிருத்தம்-100) திருவிருத்தத்திலுள்ள நூறு பாசுரங்கள் இசை கூட்டப்பட்டு, ‘‘அமர் சுவை ஆயிரம்’’ (திருவாய்மொழி 2-4-11) என்கிறபடி, திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களாக விரிவடைந்தது, 51ஆம் ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது.

சாமவேதமானது, பலவகைப்பட்டிருப்பது. அதில், ‘திருவாய்மொழி எந்த சாமத்தோடு ஒத்திருப்பது’ என்னும் வினாவிற்கு, சாந்தோக சாமத்தின், உபநிடத பாகமான சாந்தோக்யத்தை ஒத்தது திருவாய்மொழி என்பது 52ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது. வேதங்களுள் சிறந்தது சாமவேதம். அதில் சிறந்தது அதன் உபநிடத பாகமான சாந்தோக்யஉபநிஷத். அதுவே திருவாய்மொழியாக அவதரித்தது என்று காட்டித் தரப்படுகிறது.

பெரிய திருமொழி பாசுரம் (5-5-9) எம்பெருமான், ‘‘சாந்தோகன், பௌழியன், ஐந்தழல் ஒப்பும் தைத்தரியன் சாமவேதி’’ என்று போற்றுகிறது. இதில், ‘‘சாந்தோகன்’’ என்றும், ‘சாமவேதி’’ என்றும் பிரித்து தனித்தனியாக் அருளிச் செய்கிறபடியால், சாந்தோகன் என்னும் சொல்லால் விசேஷமான சாந்தோக சாமத்தை அருளிச் செய்துள்ளார், திருமங்கையாழ்வார் என்பது தெளிவு.

பகவானை, ‘‘சாமவேத கீதனாகிய சக்ரபாணி அல்லையே’’ என்கிறார், திருமழிசையாழ்வார் (திருச்சந்த விருத்தம்-14). ‘‘ஸாமவேதோ(அ)ஸ்மி’’ (வேதங்களில் நான் சாமவேதம் ஆகிறேன்) - பகவத் கீதை- (10-22) என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன் தானும். இவ்விடங்களில், ‘‘சாமம்’’, ‘‘கீதம்’’ என்பவை, பொதுவான சாமத்தையும் இசையையும் காட்டாமல், விசேஷமான சாந்தோக்ய சாமத்தையும், அதன் பண்ணாகிய ‘‘பாலையாழ்’’ என்னும் பண்ணையும் காட்டு பவை. எனவே, ஆழ்வார்களும், இறைவனாகிய தானும், இறைவனாகிய தன்னோடு ஒற்றுமைப் படுத்திக் கொள்ளும் படி சிறப்புடையதாய், இறைவனால் விரும்பப்படுவதான ‘‘சாந்தோக சாமமே திருவாய்மொழி’’ என்பது உறுதி படுத்தப்படுகிறது.

இந்த சாமத்திற்கு ஐந்து பாகங்கள் உண்டு. அவை:- ப்ரஸ்தாவம், உத்கீதம், பிரதிஹாரம், உபத்ரவம், நிதானம் ஆகியவை. இவற்றுள் உத்கீதமே, சாந்தோக்ய சாமத்தின் சுவையாக இருப்பது. இதன் உறுப்பாக இருப்பது, ப்ரணவ மாகிய, ‘‘ஓம்’’ என்னும் தொகையெழுத்து. ‘ப்ரஹ்ம ஞானத்தைப் பெற விரும்புபவன், இந்த உத்கீதத்தின் உறுப்பான ப்ரணவத்தை த்யானம் செய்யக்கடவன்’ என்று சாந்தோக்ய உபநிஷத்தின் ஆரம்பத்திலேயே அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்த உத்கீதத்தின் வடிவானதே. திருவாய்மொழி. ப்ரணவமாகிய, ‘‘ஓம்’’ என்பதை தொகை வடிவமாக தந்தால், ‘‘திருவாய்மொழி ஒரு சிலரே கற்கமுடியும். மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டதாகும்’’ எனும் நிலை ஏற்படாமல் இருக்க, ஸ்வாமி நம்மாழ்வார் தம் கருணையால், ‘‘ஓம்’’ என்பதை அ, உ, ம என்று மூன்று எழுத்துக்களாகப் பிரித்து, தம் திருவாய்மொழி முதல் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன் அயர் வறும் அமரர்கள் அதிபதியவன் அவன்* துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே !

இப்பாசுரத்தில் முதல் எழுத்துக்களை கவனித்தால், அவை ப்ரணவத்தில் உள்ள அ, உ, ம, என்கிற வரிசை க்ரமத்தில் இல்லாமல், ‘‘மாறாடி’’ உ, ம, அ என்று இருப்பது புலப்படும். இவ்வாறு மாற்றி அமைக்க நம்மாழ்வார் திருவுள்ளக் கருத்து என்ன என்று ஆராய்கையில், எழுத்துக்களின் வரிசையை மாற்றி அமைத்ததன் மூலம், திருவாய்மொழிக்கு உள்ளுறை பொருளாக இருப்பது ‘‘உத்கீதம்’ என்று காட்டித்தருவதற்காகும்.

உத்கீதம், ‘‘உத்’’ என்று அழைக்கப்படுகிறது. திருவாய்மொழியின் முதல் பாசுரத்தின் முதல் எழுத்து, ‘‘உ’’ (உயர்வற). கடைசி பாசுரத்தின் கடைசி எழுத்து ‘‘தே’’ என்பது (உயர்ந்தே) இந்த இரண்டு எழுத்துக்களையும் இணைத்தால் ‘‘உத்’’ என்பது கிடைக்கும். (உ, தே= த்+ஏ) இவ்வாறு ‘உத்’ கீதமே திருவாய்மொழிக்கு ஆதாரம் என்பதை நம்மாழ்வார் காட்டித்தந்தார்.

மாறி மாறி பல உடல்களில் புகுந்து வெளிவரும் ஜீவாத்மாக்கள் செல்லும் மார்க்கங்கள், ‘கர்ப்பகதி’ (பல கர்ப்பங்களில் புகுதல்), யாம்யகதி (யமனிடம் செல்லுதல்), தூமாதிகதி (ஸ்வர்க்கம் ஆகிய மேலுலகங்களுக்குச் செல்லுதல்). இந்த பலபிறப்பு பிறப்பதை வெறுத்து, முக்திபெற நினைப்பவர்கள், முக்தியடைந்து செல்லுவது அர்ச்சிராதிகதி என்பது. இதில் செல்பவர்கள் திரும்பி வருவதில்லையாதலால். இது ‘முடிவான கதி’ அல்லது ‘‘சரமகதி’’ எனப்படுகிறது.

சாந்தோக்ய உபநிஷத்தின் நடுப்பகுதியில், இந்த அர்ச்சிராதிகதி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதே விளக்கத்தை ஆழ்வார் தம்முடைய திருவாய்மொழியில் ‘‘சூழ்விசும்பணி முகில்’’ என்று தொடங்கும் திருவாய் மொழியில் (திருவாய்மொழி 10-10-11) அருளிச் செய்துள் ளார், இதனாலும் திருவாய்மொழி சாந்தோக்யத்தை ஒக்கும்.

பகவானை அநுபவிப்பவர்கள், அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடாக ‘‘ஹாவு’’, ‘‘ஹாவு’’ என்று சாம கானத்தைப் பாடுவார்கள். ‘‘ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே’’ என்று இதைக் கூறுகிறது தைத்ரீய உபநிஷத். திருவாய்மொழியும், பகவானை அநுபவிக்க ஆசை உள்ளவர்களுக்கு ஓர் இனிய பொருளாக உள்ளது. தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்’’ (திருவாய்மொழி 9-4-9) என்று அருளிச் செய்கிறார் நம்மாழ்வார்.

எல்லா வேதங்களைக் காட்டிலும், அதிகமாக மிகப் பெரிய ஒலியைக் கொண்டது சாமவேதம். அது ஓதப்படுகை யில், அதன் பேரொலியால் மண்டபம் அதிர்ந்தது என்பது ப்ரமாணம். திருவாய்மொழியும் பெரிய ஒலியை உடையது. ‘‘பாடு நல்வேத ஒலி’’ (திருவாய்மொழி 5-9-3) எனப் படுகிறது. இந்த காரணத்தால் திருவாய்மொழி ‘‘பெரிய திருவத்யயனம்’’ என்று வழங்கப்படுகிறது.

மேலே கூறப்பட்ட தன்மைகளால், ‘‘திருவாய்மொழி யானது, சாந்தோக்ய சாமத்தின் உபநிஷத் பாகமான சாந்தோக்யத்திற்கு ஒப்பானது’’ என்று அறுதியிடப்படுகிறது.

திருவாய்மொழி சாந்தோக்ய சாமத்தின் சாரமான ‘‘உத்’’ கீதத்தின் பொருளை விவரிப்பது என்பது மிகவும் விரிவாக 53ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது. ‘‘புரவி ஏழ் ஒருகால் உடைய தேரிலே’’ என்று தொடங்கும் இந்த ஸூத்ரத்தின் சுருக்கமான பொருள்:- ஏழு சந்தஸ்களை ஏழு குதிரைகளாகவும், நான்கு நான்காகப் பிரிக்கப்பட்ட மாதங்களை நாபியாகவும், ஐந்து ஆண்டுகளின் தொகுப்பை அரங் களாகவும், ஆறு காலங்களை சக்கரங்களாகவும் உடைய காலம் என்னும் தேரில் பவனி வருபவன் சூரியபகவான். திருமால் கையிலுள்ள திருச்சக்கரத்தை ஒத்த பேரொளியை உடையது சூரிய மண்டலம். இதில் எழுந்தருளியிருப்பவன் எம்பெருமான். அங்கே அழகிய தாமரை மலர் மீது, பொன்மயமான திருமேனியோடும், பல பலவிதமான ஆபரணங்களைப் பூண்டு, பொன்மயமான மீசையோடும், பொன்மயமான திருக்குழலோடும், தாமரை போன்ற கண்களோடும் ‘‘திருக்கண்டேன்’’ (மூன்றாம் திருவந்தாதி-1) என்கிறபடி, திருமகளோடும் சேர்ந்து காட்சியளிப்பவன் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன்.

இந்த பேரொளிப் பிழம்பான இறைவனின் பெயர், சாம ரசமான ‘‘உத்’’ என்பதாகும். எம்பெருமானின், இந்த ‘உத்’ என்னும் திருநாமத்தின் பெருமையைத்தான், நம்மாழ்வார் ‘‘உ’’ என்னும் எழுத்தில் தொடங்கி, ‘‘தே’’ என்னும் எழுத்தில் முடியும் திருவாய் மொழியில் சொன்னார் என்பது இந்த ஸூத்ரத்தின் கருப்பொருள். ‘‘ஓராயிரமாய் உலகேழ் அளிக்கும் பேராயிரம்’’ (திருவாய்மொழி 9-3-1) என்று. ஒரு திருப் பெயரே ஆயிரம் முகமாக நின்று, உலகத்தைப் பாதுகாக்க வல்லது. அப்படிப்பட்ட ‘‘உத்’’ என்னும் திருநாமப் பெயரை, ஆயிரம் பாசுரங்களில் வெளியிட்டுள்ளபடி. ‘‘கங்கை நதி யானது ஒன்றே ஆனாலும், அது உலகத்தைத் தூய்மை படுத்தும் பொருட்டு, ஆயிரம் கிளைகளாய் பெருக்கெடுத்து ஆயிரம் தீர்த்தங்களாக பெருக்கெடுத்து ஓடுவது போல், ஆழ்வார், ‘‘உத்’’ என்பதன் பெருமையை, உலகம் நன்மைபெற, ‘‘தீர்த்தங்கள் ஆயிரம்’’ (திருவாய்மொழி 7-10-11) என்று போற்றும்படி, ஆயிரம் பாசுரங்களாக அருளிச் செய்தார்’’ என்பது வேதவ்யாஸபட்டர் திருவுள்ளம் எனப்படுகிறது.

சாந்தோக்ய உபநிஷத்தில் சூரியமண்டலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வர்ணிக்கும் பகுதியில், ‘‘ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷோ த்ருச்யதே’’ என்று தொடங்கி, ‘‘தஸ்ய உத் இதி நாம’’ என்பது வரையிலான சொற்றொடர்களைத் தழுவியே இந்த ஸூத்ரம் 53, அருளிச் செய்யப்பட்டது என்பது சான்றோர் வாக்கு.

ஆழ்வார் அருளிச் செய்த திவ்யபிரபந்தகள் வேதங் களோடு ஒத்திருப்பதை விளக்கிய பின்பு, வேதப்பொருளை விளக்கிச் சொல்லும் வேத உப ப்ருஹ்மணங்களோடு, பிரபந்தங்களுக்குள்ள ஒற்றுமை 54ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது. பகவானுடைய ஸ்வரூபத்தையும் குணங்களையும் விளக்குவது பஞ்சராத்ரம் என்னும் ஆகமம். அவன் விபூதிகளை விளக்குவது புராணங்கள். அவனுடைய திவ்ய லீலைகளை விளக்குவது இதிஹாசங்கள். அவனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தின் எழிலை விளக்குவது திருவாய்மொழி. எனவே இதுவும் வேத உபப்ருஹ்மணம் எனப்படுகிறது.

‘இறைவன் குணங்களற்றவன் என்பது தவறு’ என்று காட்ட ‘பகவான்’ என்பதற்குப் பொருளாக இருக்கக்கூடிய ஆறு குணங்களை விளக்குவது பாஞ்சராத்ரம். அறிவுடையதும், தானே ப்ரகாசிப்பதும், எல்லா பொருள்களைப் பற்றி அறிந்ததும், எப்பொழுதும் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் குணம், ‘‘ஞானம்’’. அண்டத்திற்கு முதற் காரணமாக இருக்கும் குணம், ‘‘சக்தி’’ சுதந்தரத்தோடு கூடிய கர்த்தாவாக இருக்கும் தன்மை, ஐச்வர்யம் அண்டத்தை படைப்பதில் சிறிதும் சிரமமில்லாத குணம், பலம். மாறுதல்கள் அற்று (விகாரமற்று) இருப்பது, வீரியம். எந்த உதவியையும் தேடாத குணம், தேஜஸ்.

புராணங்கள், இறைவனின் விபூதிகளை விளக்கு பவை. இவற்றில், அவனுடைய படைத்தல், அழித்தல் ஆகியவையும், வம்சங்கள், மந்வந்த்ரங்கள், வம்சத்தைப் பின்பற்றி வருபவருடைய சரிதங்கள் ஆகிய ஐந்து கருத்துக்கள் விளக்கப்படுகின்றன.

பகவான் இந்த பூவுலகில் பல அவதாரங்களை எடுத்து செய்யும் லீலைகள், இதிஹாசங்களில் விளக்கப்பட்டுள்ளன.

பாஞ்சராத்ரம், புராணங்கள், இதிஹாசங்கள் ஆகிய வற்றை, நம்மாழ்வார் தம் திவ்யப்பிரபந்தங்களில் அருளிச் செய்திருந்த போதிலும், பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை வர்ணிப்பதே அவருடைய நோக்கு என்று காட்டித்தரப்படுகிறது. திருவாய்மொழியில், முதல், நடு, இறுதியில் பல இடங்களில் வர்ணித்துப் பேசுகையால், ‘‘தெரியச் சொன்ன’’ ((திருவாய்மொழி 6-9-11) என்று, தெளிவாகச் சொன்னார் என்பது அறியப்படுகிறது. இவர், தம் திவ்யப்பிரபந்தங்களில் எம்பெருமானின் திவ்யமங்கள விக்ரஹத்தை வர்ணித்திருக்கும்படி:-

திருவிருத்தம்:- தொடக்கம்- ‘‘முழுநீர் முகில் வண்ணன்’’ (பாசுரம் 2)

முடிவு- ‘‘மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்’’ (பாசுரம் 94)

திருவாசிரியம்:-

தொடக்கம்:- ‘‘மீதிட்டு பச்சை மேனி மிகப்பகைப்ப’’ (பாசுரம்-1)

முடிவு:- ‘‘தாமரைக் காடு மலர்க்கண்ணோடு கனிவாயுடை யதுமாய்’’ (5)

பெரிய திருவந்தாதி:-

தொடக்கம்- ‘‘நற் பூவைப்பூ ஈன்ற வண்ணன் (1)

முடிவு:- ‘‘கார்கலந்த மேனியான்’’ (86)

திருவாய்மொழி:-

தொடக்கம்:- ‘‘துயரறு சுடரடி’’ (1-1-1)

முடிவு- ‘‘புனக்காயா நிறத்த புண்டரீகன் செங்கனிவாய்’’ (10-10-6)

இவற்றால், உப ப்ரஹ்மணமாக இருக்கும் தன்மை, திருவாய்மொழிக்கு மட்டுமின்றி மற்ற மூன்று திவ்யப் பிரபந்தங்களுக்கும் பொருந்தும் என்று காட்டப்படுகிறது.

ஆழ்வாருடைய திவ்யப்பிரபந்தங்கள், மஹரிஷிகளின் இதிஹாஸ புராணங்கள் போல், வேத உப ப்ருஹ்மணங்கள் என்று ஒப்புமையைப் பெற்றிருந்தபோதிலும், அவர்களு டைய நூல்களுக்கு, ஆழ்வாரின் திவ்யப்பிரபந்தங் களுக்கு உள்ள ஏற்றம் கிடையாது என்பது விளக்கப்படுகிறது 55ஆவது ஸூத்ரத்தில்.

மூன்று குணங்களாவன, ராஜஸம், தாமஸம் மற்றும் ஸத்வம் ஆகியவை. நான்முக ப்ரஹ்மனிடம், இந்த மூன்று குணங்களும் கலந்து காணப்படும். ஆனால், மூன்றில் ஒரு குணம் மேலோங்கியிருக்கும். ப்ரஹ்மன் தாமஸ குணம் மேலோங்கியிருக்கும் காலத்தில் அக்நி, சிவன் ஆகியோரின் பெருமையைப் பேசுகிறான். ராஜஸ குணம் மேலோங்கி யிருக்கிற நாட்களில், தன்னுடைய பெருமையைப் பேசுகிறான். ஸத்வ குணம் மேலோங்கி இருக்கையில் சர்வேச்வரனுடைய பெருமையைப் பேசுகிறான். முக்குணங்களும் கலந்திருக்கும் நாட்களில், பிதிரர்கள், சரஸ்வதி ஆகியோருடைய பெருமைகளைப் பேசுகிறான்.

ப்ரஹ்மன், ராஜஸ குணம் மேலோங்கி இருக்கிற காலத்தில் வால்மீகி ரிஷிக்கு வரம் தர, அதன் காரணமாகப் பிறந்தது வால்மீகி ராமாயணம்.

தாமஸ குணம் மேலோங்கி நிற்கும் தெய்வம் சிவன். இவன் ரிஷியாகும் தன்மை பெற்றிருந்த காலத்தில், தன்னைப் போன்ற ரிஷிகளான அகத்தியர், புலஸ்தியர், தக்ஷர் மற்றும் மார்கண்டேயருக்கு ஸர்வேஶ்வரனை வணங்கும் விதத்தைப் போதித்தான். இதில் ஒருவரான புலஸ்தியர், பராசரருக்கு, புராண ஸம்ஹிதை செய்யும் ஆற்றலை வரமாகத் தந்தார். இதன் காரணமாக அவதரித்தவை ஸ்ரீவிஷ்ணு புராணம் போன்ற நூல்கள்.

இவ்வாறு இல்லாமல் சுத்த ஸத்வ தெய்வமான ஸ்ரீமந் நாராயணனின் திருவருளால், நேராக அவதரித்தவை ஆழ்வாருடைய திவ்யப் பிரபந்தங்கள் எனவே இவற்றிற்கு இதிஹாஸ புராணங்களைக் காட்டிலும் ஏற்றம் அதிகம்.

‘‘நம்மாழ்வாருடைய திவ்யப்பிரபந்தங்களுக்கு மூலம் இன்னது’’ என்பது 56ஆவது ஸூத்ரத்தில் அருளிச் செய்யப் படுகிறது.

‘‘எவன் தனக்கு மேல் இல்லை என்னும்படி, மேலான ஸத்வகுணத்தின் நிலமாக இருப்பவனோ’’ எனப்படும் பரம ஸத்வத்தோடு கூடிய திருமால், தான் உயிர்களிடம் கொண்ட வாத்சல்யத்தால், வேத நெறி விசாரித்து, ஆராய்ந்து, ‘‘நெறி உள்ளி உரைத்த’’ (திருவாய்மொழி 1-3-5) என்கிறபடி இருப்பவன், எம்பெருமான். இவன், ப்ரஹ்மன், சிவன் ஆகியோருக்கு அந்தர்யாமியாக இருந்து, படைத்தல், அழித்தல் ஆகிய செயல்கள் செய்வதால், ‘‘அயன்’, ‘சிவன்’ என்று அழைக்கப்படுகிறான். அறப்பெரியனான, இந்த திருமகள் கேள்வன் அருளக் கொண்டு, ஆழ்வார், இந்த திவ்யப் பிரபந்தங்களைப் பாடினார்’’ எனப்படுகிறது. ‘‘திருமாலால் அருளப்பட்ட சடகோபன்’’ (திருவாய் மொழி 8-8-11) என்கிறபடி, எம்பெருமானால் அருளப்பட்ட, மயர்வற மதிநலத்தால், ‘‘அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்’’ (கண்ணிநுண் சிறுத்தாம்பு-8) என்று எம்பெருமானுடைய நேரான திருவருள் மூலமாகத்தான், இந்த திவ்யப்பிரபந்தம் பாடினார் என்கிறபடி.

ப்ரஹ்மன் அருளால், வால்மீகி பகவான், ஸ்ரீராமா யணத்தைப் பாடினார். புலஸ்தியருடைய திருவருளால், ஸ்ரீபராசரர் ஸ்ரீவிஷ்ணுபுராணத்தைப் பாடினார். இதனால், ப்ரஹ்மனுடைய திருவருளும், சிவனுடைய திருவருளும் இதிஹாஸ புராணங்களுக்குக் காரணம் என்பது தெளிவா யிற்று. அதுபோல், ‘‘ஆழ்வார், திவ்யப்பிரபந்தங்கள் பாடுவ தற்கு, எம்பெருமானுடைய திருவருள் காரணம்’’ என்பதற்கு அவர் பிரபந்தங்களில் அகச்சான்று ஏதேனும் உள்ளதோ? என்பதற்கு 57ஆவது ஸூத்ரத்தில் பதிலளிக்கப்படுகிறது.

‘‘இன் கவி பாடும் பரமகவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது’’ (திருவாய்.7-9-6) என்று செந்தமிழ் பாடுவாரான முதலாழ்வார்கள் இருக்கையில், அவர்களைக் கொண்டு பாடுவித்துக் கொள்ளாமல், தன்னைக்கொண்டு பாடுவித்ததை அருளிச் செய்கிறார் நம்மாழ்வார்.

‘‘நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையின் ஏர்விலா என்னைத் தன் ஆக்கி’’ (திருவாய்.7-9-5) என்று, என்னைத் தன்னோடு ஒத்த ஞானம் சக்தி, இவைகளை உடையவனாகச் செய்து, என் நா முதல் வந்து புகுந்து, ‘‘என்னாகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’’ (திருவாய்.5-9-4) என்கிறபடி, என்னைக் கருவியாகக் கொண்டு பாடச் செய்தபொழுதும், என்னுடைய சம்பந்தத் தால் வரும் குற்றம் தட்டாதபடி நின்று, ‘‘என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ்’’ (திருவாய்.7-9-7) என்று, நான் புகழ்ந்ததால் தான், ஸ்ரீவைகுண்டநாதனாக, இறைமைத் தன்மை பெற்றதாக நினைத்து, ‘‘தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்’’ (திருவாய்.7-9-2) என்று, ‘‘சொல்லும் தன்னது, என்று சொன்னாலும் தான், சொல்லிற் றும் தன்னை’’ என்னும்படி எனக்கு அந்தராத்மாவாய் நின்று, தன்னைத்தானே துதித்துக் கொண்டான்.’’ என்கிறார், நம்மாழ்வார்.

இவ்வாறு எம்பெருமான் அந்தராத்மாவாக இருந்து பாடச்செய்த பொழுதும், அவன், ஆழ்வார் தானே பாடியதாக நினைக்கும்படிச் செய்தான், என்பதை மேலே விளக்குகிறார், ஆழ்வார்.

‘‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடைய மால் வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு’’ (திருவாய். 6-4-9) என்று, ‘சர்வேச்வரனை என் சொற்கள் மாத்திரத்தாலே நிலை வேறுபடும்படி செய்ய வல்ல நாவீறுடைய எனக்கு’ என்றும், ‘‘நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்’’ (திருவாய்.4-5-4) என்கிறபடி, இசைமாலை களைக் கொண்டு துதித்துக் கிட்டப்பெற்றேன்’ என்றும், ‘‘மொய்ய சொல்லால் இசை மாலைகளை ஏத்தி, உள்ளப் பெற்றேன்’’ (திருவாய்.4-5-2) என்று, ‘செறிந்த சொற்களாலே இசையோடு கூடிய தொடைகளாலே ஏத்தி நினைக்கப் பெற்றேன்’ என்றும், ‘‘வானவர்கோனைக் கவி சொல்ல வல்லேற்கு’’ (திருவாய்.4-5-9) என்று, ‘ஸ்ரீவைகுண்ட நாதனை கவி சொல்லவல்ல எனக்கு’ என்றும், தானே பாடியதாக நினைத்து இந்த திவ்யப் பிரபந்தத்தை அருளிச் செய்ததாகச் சொல்கிறார், ஆழ்வார்.

இவ்வாறு செய்ததோடல்லாமல், நாடே கைகூப்பி வணங்கும்படி தனக்கு அருள் புரிந்தான் என்கிறார், ஆழ்வார். ‘‘சடகோபன் சொல்’’ (திருவாய்.2-2-11) என்று நான் இதனை பாடினேனாக நினைத்து நாடும் கைகூப்பி வணங்கும்படி செய்தான். ‘‘என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து’’ (திருவாய்.7-2-9) என்று என்னுடைய சொற்களாலே நான் கர்த்தாவாகச் சொன்ன இனிய கவி என்று நாட்டிலே அனைவரும் கொண்டாடும்படியாக ஆக்கினான் என்கிறார் ஆழ்வார். எனவே, ஆழ்வார் சர்வேச்வரன் அருள் அடியாகவே பாடினார் என்பது தெளிவாகிறது.

திருவாய்மொழியின் சிறப்பு மேலும் விளக்கப்படுகிறது:

வால்மீகி ரிஷி, இராமாயண காவியம் என்று எழுதத் தொடங்கி, கங்கை நதியின் தோற்றம், முருகனின் பிறப்பு, புஷ்பக விமானத்தின் வர்ணனை என்று பொருள் அல்லாத கதைகளைப் பேசியதால், வாக்கு தூய்மை இல்லாத நிலையைப் பெற்றவர் ஆகிறார்.

  வேதவியாஸர் ‘‘நாராயணனுடைய இந்தக் கதையை சொல்லப்போகிறேன்’’ என்று தொடங்கி, பீஷ்மருடைய பிறப்பு முதலியவற்றைப் பேசி, பாரதப் போரை மிகவும் விரிவாக விளக்கி, ‘‘பூசல் பட்டோலை’’ (போரைப் பற்றிக் கூறும் நூல்) எழுதியவர் என்கிற பெயர் பெற்று, வாக்கு தூய்மையை இழந்தார். பிறகு கண்ணபிரானுடைய கதையை சொல்லுவதாகிய நீரால் தன் வாக்கைத் தூய்மை படுத்திக் கொண்டது விவரிக்கப்படுகிறது.

வால்மீகி, இவ்வாறு தன் வாக்கை, ‘‘எச்சில் வாயை’’ (வாக்கு, தூய்மையற்ற தன்மையை) சுத்தம் பண்ணிக் கொண்டது இராமாயணத்தில் காணப்படாத போதிலும், இந்த நியாயம், வேதவியாஸரைப் போல அவருக்கும் பொருந்தும் என்று அருளிச் செய்யப்படுகிறது. 63ஆவது ஸூத்ரத்தில்.

இப்படி, எழுதத் தொடங்கிய பொருளுக்கு சேராத வற்றைப் பேசி, அந்த, ‘எச்சில் வாயை’ சுத்தி பண்ணுவதற்கு சிறிதும் தேவையில்லாமல், ‘திருமாலவன் கவி’ என்கிற வாயோலைப்படியே தம் ப்ரபந்தங்களை அருளிச் செய்தவர், ஆழ்வார். ‘‘திருமாலவன் கவியாது கற்றேன்’’ (திருவிருத்தம் -48) என்றும், ‘‘மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்’’ (திருவாய்.6-8-11) என்றும், ‘‘உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி’’ (திருவாய்.4-5-6) என்றும், ஸர்வேச்வரனுக்காகவே ஏற்பட்ட இந்த நூல் ‘‘வாய்த்த ஆயிரம்’’ (திருவாய்.2-2-11) என்றும் போற்றப்படுகிறது.

வேதங்களில், புருஷ ஸூக்தம் போலவும், தர்ம சாஸ்த்ரங்களில், மநு தர்ம சாஸ்த்ரம் போலவும், மஹா பாரதத்தில் ஸ்ரீமத் பகவத் கீதை போலவும், புராணங்களில் ஸ்ரீவிஷ்ணு புராணம் போலவும், இந்தத் திருவாய்மொழி, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் சாரமாக உள்ளது. ‘‘தீது இல் அந்தாதி’’ (திருவாய்.8-2-11) எனப்படும் இந்த திவ்யப் பிரபந்தம், மற்ற புராணக் கதைகளின் கலப்பில்லாமல், பகவான் ஒருவனைப்பற்றியே பேசுகிற, மற்றை ஆழ்வார் களின் ப்ரபந்தங்களின் சாரமாக இருக்கும் என்று சிறப்பிக்கப்படுகிறது.

வேதம், கர்மகாண்டம், ஞானகாண்டம், என்னும் இரு பகுதிகளை உடையது. இதில், கர்ம காண்டத்தின் ஜைமிநி அருளிய விளக்கம் பூர்வமீமாம்ஸை எனப்படுகிறது. இது கர்ம ஸூத்ரம் எனப்படும். ஞான காண்டத்திற்கு வேத வ்யாஸர் ஸூத்திர வடிவில் எழுதிய விளக்கம் ‘ப்ரஹ்ம ஸூத்ரம்’ என்றும், உத்தர மீமாம்ஸை என்றும் வழங்கப்படுகிறது. ஜைமிநியானவர், வ்யாஸபகவானின் சிஷ்யர். இவ்விருவர், பரம்பொருளின் ஸ்வரூபம், குணம், அதன் உபாஸனை, உபாஸிப்பதால் கிடைக்கும் பலன் ஆகியவற்றைக் கூறுவதில், இவ்விருவர் கருத்தும் மேலெழப் பார்க்கையில் முரண் பாடுள்ளதாகத் தோன்றும்.

இந்த முரண்பாட்டை, தகுந்த விளக்கங்களால் ‘பரிஹாரம்’ செய்கிறார்கள். முரண்பாட்டை விலக்குகிறார்கள். ‘‘கடவுள் இல்லை’’ என்று சொல்லும் ஜைமிநியின் கருத்து, இவ்வாறு விளக்கப்படுகிறது:- ‘‘கடவுள் இல்லை’’ என்று சொல்லுவதில் ஜைமிநிக்கு கருத்து அன்று. வேதங்களைக் கேட்கத் தகுதியற்றவர்க்கு, கருமங்களைச் செய்வதில் விருப்பம் இன்மையை விலக்குவதற்காக, கருமங்களின் முக்கியத்வத்தைச் சொல்வதிலேயே கருத்து’’ என்று விளக்கப்படுகிறது.

இவ்வாறு, குரு சிஷ்யர்களிடையே முரண்பாடும், முரண்பாட்டை விலக்குவதற்கான பரிஹாரமும், ஆழ்வார்கள் திறத்தில் கிடையாது. அவர்கள் ஒருவருக்கொருவர் அந்யோன்யம் கொண்டாடி இருப்பார்கள் என்பது, 64ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்கள், ‘‘செஞ்சொற் கவிகாள்’’ (திருவாய்.10-7-1) என்றும், ‘‘இன்கவிபாடும் பரம கவிகளால்’’ (திருவாய்.7-9-6) என்றும், ‘‘செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும்’’ (பெரிய திருமொழி 2-8-2) என்றும், ‘‘பதியே பரவித் தொழும் தொண்டர்’’ (பெரிய திருமொழி 7-1-7) என்றும், ‘‘அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர்’’ (பெருமாள் திருமொழி 2-2) என்றும் ஒருவருக்கொருவர் பெருமைபடப், ‘‘பேசிக்கொண்டு’’, ‘‘பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்’’. இவர்களுக்குத் தலைவரானவர், நம்மாழ்வார். இவர், வேதம், இதிஹாச புராணங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் சிறப்பாக விளக்கி தம் சொல்லினால் தந்ததே ‘‘வலம் கொண்ட ஆயிரம்’’ (திருவாய். 3-8-11) எனப்படும் திருவாய்மொழி.

மநுதர்ம சாஸ்த்திரத்திற்கு மாறுபட்ட பொருளை உரைக்கும் ஸ்ம்ருதிகள் விலக்கப்படுகின்றன. அதேபோல், திருவாய்மொழிக்கு சேராத சாஸ்திரங்களும் விலக்கப் படுகின்றன என்று விளக்கப்படுகிறது.

ராமாநுஜர் ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கு விசிஷ்டாத்வைத பரமாக விளக்கம் தந்து, தம் ஸ்ரீபாஷ்யத்தை எழுதுகையில், அந்த ப்ரஹ்ம ஸூத்ர சொற்றொடர்களில் பொதிந்துள்ள பொருள், ஐயத்தை உண்டு பண்ணும் சமயங்களில் திருவாய்மொழி பாசுரங்களின் துணை கொண்டு அறுதியிட்டு உறுதியாக அருளிச் செய்வார் என்பது 65ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது.

ராமாநுஜர், இவ்வாறு செய்வதற்குக் காரணம் என்ன என்பது 66ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்படுகிறது. ‘‘வேதத்தில் சொல்லப்படுகின்ற விதிகள், தேவரீரைச் சரணமாக பற்றியிருக்கின்ற பெரியோர்களின் கம்பீரமான மனத்தை அநுஸரித்தவை ஆகின்றன’’ என்று, பரமாசார்யரான ஸ்ரீ ஆளவந்தார் தம்முடைய ‘‘ஸ்தோத்ர ரத்னம்’’ என்னும் நூலில் 20ஆவது ச்லோகத்தில் அருளிச் செய்துள்ளார். இந்தக் கருத்தை மனதில் கொண்டே, நம்மாழ்வாரின் அருளிச் செயல்களின் பொருளை மனதில் கொண்டு, ஸ்ரீராமாநுஜர் அவ்வாறு செய்தார் எனப்படுகிறது

திருவாய்மொழி சொல்லுகின்ற அர்த்தங்களில், ‘‘ஆப்தி’’ (நம்பிக்கை) ஏற்படுவது எவ்வாறு என்று 67ஆவது ஸூத்திரத்தில் விளக்கப்படுகிறது. உண்மைப்பொருளை உள்ளவாறு சொல்வதில் ஒப்புயர்வற்ற வேதமானது, ‘‘பராசர முனிவருடைய புதல்வரான அந்த வியாஸர் சொன்னார்’’ (வேதம்) என்றும் ‘‘எது ஒன்றினை மநுவானவர் சொன்னாரோ, அது மருந்து’’ (யஜுர் வேதம்) என்றும், ‘‘ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள்’’ (யஜுர் வேதம்) என்றும், வியாஸரையும் மநுவையும் ப்ரஹ்மத்தை அறிந்தவர்களாகவும், அவர்கள் சொல்வது, நம்பிக்கைக்கு உறுப்பாகும்படி இருப்பது போல், ஆழ்வாரும், ‘‘உளன் சுடர்மிகு சுருதியுள்’’ (திருவாய். 1-1-7) என்றும், ‘‘மார்க்கண்டேயனும் கரியே’’ (திருவாய். 5-2-7) என்றும், ‘‘பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை’’ (திருவாய்.2-8-6) என்றும், நம்பிக்கைக்கு உறுப்பான விஷயங்களை, தம் பாசுரங்களில் அருளிச் செய்வதால், இந்த திவ்யப்பிரபந்தமும், வேதத்தைப் போல நம்பிக்கையின் மிகுதிக்கு உறுப்பாக இருப்பதால், வேதத்திற்குச் சமமானது என்று விவரிக்கப் படுகிறது.

திருவாய்மொழி, வேதத்தின் விரிவுரையான உப ப்ருஹ்மணம் ஆனாலும், வேத ரஹஸ்யமான உபநிஷத்தும் ஆகும் என்பது 68ஆவது ஸூத்ரத்தில் விளக்கப்பட்டுள்ளது. விரிவான மஹாபாரதம், ஐந்தாவது வேதம் எனப்படுகிறது. அதில் உள்ள ஸ்ரீமத் பகவத்கீதை உபநிடதமாகக் கொள்ளப் படுகிறது. இதைப்போலவே, திருவாய்மொழி, சாமவேதத் திற்கு சமமாக இருந்தபடி, வேத ரஹஸ்யமான சாந்தோக்ய உபநிஷத்தின் சாரமாக இருப்பது. எனவே, தமிழ் மறையாக இருக்கும் தன்மை இதை விட்டு நீங்காது என்று விளக்கப் படுகிறது.

திருவாய்மொழி, வேதம் மற்றும் உப ப்ருஹ்மணங் களோடு ஒத்தது எனப்படுகிறதே, இவ்விரண்டிற்கும் சில அலங்காரங்கள் உண்டே? அவை திருவாய்மொழியில் உண்டா? என்னும் கேள்விக்கு, பதிலளிக்கப்படுகிறது, 69ஆவது ஸூத்ரத்தில்.

வேதத்திற்கு உரிய அலங்காரங்கள் ஆவன:- உதாத்தாதி, கிரமஜடாபஞ்சாதிகள், ப்ரச்ந அஷ்டகங்கள். அம்சம், பர்வம் முதலியவை உப ப்ருஹ்மணங்களுக்கே உரியவை. பாதம், விருத்தம், காண்டம், அத்யாயங்கள் ஆகியவை வேதங் களுக்கும் உப ப்ருஹ்மணங்களுக்கும் பொதுவானவை.

இதைப்போன்ற அலங்காரங்கள், திருவாய்மொழிக் கும் உண்டு என்பது விளக்கப்படுகிறது. அவையாவன:- எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, நிரை, ஓசை, தளை, யாப்பு, பா, இசை, தாளம், ஆகியவை.

வடமொழியில் கூறப்பட்ட அம்சம், பர்வம் போன்ற வைகளுக்கு, உட்பிரிவுகளாக அத்யாயம் முதலியவை இருப்பது போல, திருவாய்மொழி, நூறு நூறு பாசுரங்களுக்கு, உட்பிரிவாய் இருப்பவை ‘‘இப்பத்தும்’’ (திருவாய்.9-4-11) ‘‘இவை பத்தும்:’’ (திருவாய்.5-5-11) என்று சொல்லப்பட்ட திருப்பதிகங்கள். வடமொழியில் முதன்மையான பிரிவுகளை அம்சம், பர்வம், காண்டம் என்பது போன்றவை, திருவாய் மொழியில் உள்ள ‘‘நூறே சொன்ன’’ (திருவாய்.9-4-11), ‘‘பத்து நூற்று’’ (திருவாய். 6-7-11) என்னும்படி நூறு நூறு திருப்பாசுரங்களாக இருக்கும் முதன்மையான பிரிவுகள்.

வால்மீகி முனிவர் 24,000 ச்லோகங்களைக் கூறினார் என்பது போல, ஆயிரம் பாசுரங்களைக் கொண்ட திருவாய் மொழி, பெரிய பாகமாக உள்ளது.

‘‘திருவாய்மொழியின் முதல் மூன்று பத்துக்கள் த்வய மந்திரத்தின் பின் வாக்கியத்தின் பொருளை விவரிப்பதாய், அதற்கு மேல் உள்ள மூன்று பத்துக்கள் த்வய மந்திரத்தின் முன் வாக்கியத்தின் பொருளை விவரிப்பதாய், அதற்கு மேல் உள்ள மூன்று பத்துக்கள் அதற்குத் தக்கனவான பொருள்களைக் கூறுவனவாய், பத்தாம் பத்து, பலத்தைப் பெறுதலைக் கூறுவ தாக இருக்கையாலே, ‘‘உள்பிரிவு வேறுபாடுகளும் ஆழ்வாருக்குக் கருத்தாகும் என்று தோற்றுகிறது’’

ஆகையால், ‘அலங்காரங்களால் குறைவற்ற ஆயிரம்’ என்பதால் இந்நூல், ‘‘செய்கோலத்தாயிரம்’’ (திருவாய். 4-1-11) என்று கொண்டாடப்படுகிறது.

பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளி யிருக்கும் நிலைகள் ஐந்து. அவை, பரமபதம், வ்யூஹம், அந்தர்யாமித்வம், விபவம் மற்றும் அர்ச்சை ஆகியவை. இவைகளை, எந்தெந்த ப்ரமாணங்கள் விவரிக்கின்றன என்பது 70ஆவது ஸூத்ரத்தில் விரிவாகக் கூறப்படுகிறது.

‘ஆதி3த்ய வர்ணம், தமஸஸ்து பாரே’ (புருஷ ஸூக்தம் -16) ‘சூரியனுடைய வர்ணம் போன்ற வர்ணத்தையுடைய இந்த பரமபுருஷனை நான் அறிவேன்; அவன் தமஸ்ஸாகிய ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பால் பரமபதத்தில் இருக்கிறான்’ என்றும், ‘‘தத்3விஷ்ணோ: பரமம் பத3ம் ஸதா3பஶ்யந்தி ஸூரய:’’ (யஜுர் வேதம் முதல் காண்டம் 3ஆம் ப்ரச்நம் 6-11, ரிக் வேதம் முதல் மண்டலம் 22ஆவது ஸூக்தத்தில் 20ஆவது மந்திரம்). ‘விஷ்ணுவின் அந்த உயர்ந்த இடத்தை (பரம பதத்தை) நித்ய சூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்’’ என்னும் சொற்றொடர்களால் பரமாத்மாவின் ‘பரமபதம்’ என்னும் நிலையை விளக்குவன வேதங்கள்.

பரமாத்மா, ஜீவாத்மாக்களை காத்தருள்வதற்காக தன்னை நான்கு மூர்த்திகளாக விரிவுபடுத்திக் கொள்கிறான். மாறுபட்ட உருவங்கள், குணங்கள், செயல்களை உடைய இவர்கள் பரவாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன் மற்றும் அநிருத்தன் என்று அறியப்படுகிறார்கள். இந்த நிலையே வ்யூஹம் எனப்படுகிறது. வ்யூஹத்தின் செயல் பாட்டை விரிவாக விளக்குவது பகவச்சாஸ்த்ரம் என்று அழைக்கப்படும் பாஞ்சராத்ர ஆகமம். ‘இதை உண்டாக்கியவன் ஸ்ரீமந்நாராயணனே ஆவான்’. எனவே, வ்யூஹ நிலையை விவரிப்பது ஸ்ரீபாஞ்சராத்ரம்.

அந்தர்யாமியாக இருக்கும் நிலையை விளக்குவது மநுஸ்ம்ருதி. பரமாத்மா, இந்த அண்டத்தில் உள்ள எல்லாப் பொருள்களுள்ளும் ஊடுருவி நிற்பவன்; எல்லா சொற் களுக்கும் தானே பொருளாக இருப்பவன்; எல்லா உயிர் களையும் உள்ளிருந்து கட்டுப்படுத்துபவன், ஏவுபவன், சித், அசித் வடிவமான இந்த அண்டம் முழுவதும் அவன் சரீரம்’ இந்த விஷயத்தை மநு ஸ்ம்ருதி கூறுகிறது:-

‘‘ஏஷ ஸர்வாணி பூதாநி பஞ்சபிர் வ்யாப்ய மூர்த்திபி: | ஜந்ம வ்ருத்தி க்ஷயை: நித்யம் ஸம்ஸாரயதி சக்ரவத் || '' (மநு ஸ்ம்ருதி)

இதன் பொருள்:-

‘இவன், எல்லா உயிர்களையும், மண் முதலிய ஐந்து பூதங்களாலான சரீரங்களால் பரந்து, பிறத்தல், வளர்தல், இறத்தல் என்னும் இவைகளால், எப்பொழுதும் சக்கரம் போன்று சுழலும்படி செய்கிறான்’ என்பதாகும்.

இவ்வாறாக அந்தர்யாமி நிலையை விவரிப்பது மநு முதலிய ஸ்ம்ருதிகள்.

நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களைத் தண்டிக் கவும் அவன் இப்பூவுலகில் தோன்றுவது அவதாரங்கள். இந்த அவதாரங்களில், பரமாத்மாவின் செயல்களை விவரிப்பவை ஸ்ரீராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்கள்.

எல்லோருமே அவனுடைய அவதாரங்களை அநுபவிப்பார்கள் என்று சொல்ல இயலாது, எனவே, அவதாரங்களுக்கு பிற்பட்ட காலத்தில் தோன்றியவர்களும் பயன்பெறும் வண்ணம், பரமாத்மா ‘‘அர்ச்சா நிலையை’ மேற்கொள்கிறான். இந்த அர்ச்சாவதார நிலையை, ‘‘ஆகமூர்த்தி’ என்கிறார், திருமழிசையாழ்வார். இதற்கு, பூஜைகளால் அர்ச்சிக்கத்தக்க ‘‘யாக மூர்த்தி’’ (ஆக மூர்த்தி) அல்லது, ‘‘இப்படி ஆகக்கடவேன்’ என்று தானே ஸங்கல்பித்துக் கொண்டு தோன்றின மூர்த்தி’ என்றும் பொருள் கொள்ளலாம்.

பரமாத்மா ஆராதனைக்கு எளியவனாக இருப்பது அர்ச்சாவதாரத்தில். ‘‘தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’’ (முதலாம் திருவந்தாதி-44) என்கிறபடி, பக்தர்கள் விரும்பும் உருவங்களை மேற்கொண்டு, அவர்கள் சூட்டும் பெயர்களை ஏற்றுக்கொண்டு, தேசம், காலம் அதிகாரம், நீராடல், உணவு உண்ணல், ஆகியவற்றில் ஓர் வரையறை இல்லாதபடி மிகவும் சுலபனாக, அர்ச்சாவதாரத்தில் உள்ளான், பரமாத்மா. பரமாத்மாவின் இந்த நிலையை விவரிப்பதே ‘‘சடகோபன் பண்ணிய தமிழ்’’ (திருவாய். 2-7-13) எனப்படும் திருவாய்மொழி. அர்ச்சாவதாரம், ஆராதனைக்குத் தக்கதாக இருப்பதைப்போலவே, திருவாய்மொழியும் எல்லோரும் கற்பதற்கு ஏற்றபடி எளிதான தமிழ் மொழியில் இருக்கிறது. இந்தக் காரணத்தாலும், ஆழ்வார் வடமொழி வேதத்தை தமிழ் மறையாகச் செய்தார் எனப்படுவதும் உண்டு. ‘‘எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்குலகில் வரும் சடகோபனை’’ (இராமாநுச நூற்றந்தாதி-18) எனப்படுகின்ற தன்றோ?

ஒருவரால் செய்யப்படாத வேதம் பல்வேறு நிலை களை அடைந்தால், அது கலக்கத்தை அடையாதா? ஆனால், பொருள்களில் தெளிவு எவ்வாறு பிறக்கும் என்னும் கேள்விக்கு பதிலளிக்கப்படுகிறது, 71ஆவது ஸூத்ரத்தில்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்தும், மேடான நிலங்களிலிருந்தும் உற்பத்தி ஆகும் காவிரி, தாமிரபரணி போன்ற ஆறுகள் வேகத்தோடு சமவெளியில் வந்து விழுகையில், மண்ணுடன் கலந்து கலங்கியதாய் அடியில் என்ன இருகிறது என்பதைக் காட்டாத நிலையில் இருக்கும். அதே காவிரி மற்றும் தாமிரபரணி ஆறுகள், நெடுந்தூரம் ஓடி, காவிரிக்கரையில் உள்ள ‘‘தோதவத்தித் தூய்மறையோர் துறை’’ (பெரியாழ்வார் திருமொழி-4-8-1) என்னும் துறையை அடைகையிலும், தாமிரபரணி ஆறு, ‘‘பொருநல் சங்கணித் துறை’’ (திருவாய்.10-3-11) என்ற துறையை அடைகையிலும் முறையே ‘‘தெண்ணீர்ப் பொன்னி’’ (பெருமாள் திருமொழி 1-1) என்றும், ‘‘துகில் வண்ணத்தூநீர்’’ (திருவாய்.7-2-11) என்றும் கொண்டாடும்படி தெள்ளத்தெளிந்து, அடியில் கிடக்கிற பொருள்களை மிகத் தெளிவாகக் காட்டித்தரும்.

வேதமும் இந்த ஆறுகளைப் போன்றதே. அதன் தெளிவை கலங்கச் செய்பவர்கள், வேதமே நடுங்கும் படியான, ‘‘அல்பசுருதர்’’ எனப்படும் தமக்குத் தோன்றிய பொருளைச் சொல்லும் குறைவான ஞானத்தை உடையவர்கள். இப்படி வேதச் சொற்றொடர்களின் பொருளை சரியாக உணராதவர்கள் கலக்கத்தால் ஏற்பட்டவை அத்வைதம், த்வைதம் மற்றும் த்வைதாத்வைதம் போன்ற ஸித்தாந்தங்கள்.

இப்படி கலக்கப்பட்ட வேதம் என்னும் ஆறானது, ‘‘நன் ஞானத்துறை’’ (திருவிருத்தம் - 93) என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் அருளிச் செயல்கள் என்னும் துறையைச் சேர்ந்து, ‘‘தெளிவுற்ற ஆயிரம்’’ (திருவாய்.7-5-11) என்று, கலக்கம் தீர்ந்து, தெளிந்து, தன்னுடைய உட்பொருளை உள்ளபடி காட்டுவதாயிற்று ‘‘அறிவித்தேன் ஆழ்பொருளைச் சிந்தாமற்கொண்மின்’’ (நான்முகன் திருவந்தாதி-1) என்பதுபோல், பரம ரஹஸ்யமான அர்த்த விசேஷங்களை தெள்ளத்தெளிவாகக் காட்டித்தருபவை, ஆழ்வாரின் அருளிச் செயல்கள்.

‘‘வேதத்தை அத்யயனம் செய்ய, கால வரம்பும், அதிகாரி வரம்பும் உள்ளதே, வேதத்தின் அவதாரமான இந்த திருவாய்மொழிக்கு இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பது எவ்வாறு?’’ என்னும் கேள்விக்கு பதிலளிக்கப் படுகிறது, 72ஆவது ஸூத்ரத்தில்.

கடல் நீரானது உப்புத்தன்மை நிறைந்தது. அது, அதில் வாழும் மீன் போன்றவைகளுக்கு மட்டுமே உபயோகப்படும்; மற்றவர்க்கு அல்ல. கடலில் இறங்கி நீராடுவதற்கும், ‘‘பௌர்ணமி போன்ற காலங்களில் மட்டும் இறங்கலாம்’’ என்னும் கால நியதியும் உண்டு. ஆனால், அதே கடல் நீரை, மேகம் பருகி, மழைமேகமாகி மழையாகப் பொழிந்து விட்டால், கடல் நீரின் உப்புத்தன்மை நீங்கி விடுகிறது. இந்த மழைநீர் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் பயன்படும்.

இதைப்போலவே, வேதத்தை அத்யயனம் செய்வதற்கு முதல் மூன்று வர்ணத்தினரான, ப்ராஹ்மணர், க்ஷத்ரியர் மற்றும் வைசியர்களே அதிகாரிகள். அவர்களும் ஆவணி, புரட்டாசி போன்ற குறிப்பிட்ட மாதங்களிலும், ஸுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் போன்ற காலங்களில் குறிப்பிடப்பட்ட வேத உபநிஷத் பகுதிகளை ஓதக்கடவர்கள் ஆகிறார்கள்.

ஆனால், ‘‘நூற்கடல்’’ (மூன்றாம் திருவந்தாதி-32) எனப்படும் வேதம் ‘‘இவள் வாயனகள் திருந்தவே’’ (திருவாய்.6-5-7) என்று ஆழ்வார் திருவாக்கால் தெளிந்து, கால, அதிகாரி நியதிகளால் கட்டளை இடப்படவேண்டாத தன்மையை அடைந்து, ப்ராஹ்மணர்கள், பெண்கள் நான்காம் வருணத்தினர் ஆகிய அனைவராலும் அத்யயனம் செய்யத் தக்கதாகிறது. ‘‘இதனை அத்யயனம் செய்பவர்களுக்கு மோக்ஷம் கையில் இருக்கிறது’’ என்னும் பெருமையைப் பெற்றதாயிற்று.

‘‘வேதம் காரணம், திருவாய்மொழி காரியம், வேதம் சிலர்க்கே உரியது, திருவாய்மொழி எல்லோருக்கும் உரியது,’’ எனப்படும் இந்த விஷயம் ஓர் எடுத்துக் காட்டின் வாயிலாக விளக்கப்படுகிறது, 73ஆவது ஸூத்ரத்தில். மண்குடமானது அதை பயன்படுத்துபவரால் மட்டுமே தொடப்படுவது; எல்லோருக்கும் அதைத் தீண்ட உரிமை இல்லை. ஆனால், பொற்குடமானது எல்லோரும் தொட்டு பயன்படுத்தும்படி உள்ளது. வேதம் மண்குடம் போன்றது. திருவாய்மொழி, பொற்குடம் போன்றது என்று வர்ணிக்கப்படுகிறது.

எம்பெருமானுடைய ஐந்து நிலைகளாவன:- பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம் மற்றும் அர்ச்சாவதாரம். இவற்றுள் நாம் எளிதில் நெருங்கி அநுபவிக்கும் வண்ணம் இருப்பது அர்ச்சாவதாரமே. திருவாய்மொழி இதற்கு இணையானது என்பது, விரிவாக விளக்கப்படுகிறது, 74ஆவது ஸூத்ரத்தில்.

இந்த ஸூத்திரத்தில், மூன்று கடல்கள் பேசப் படுகின்றன. அவை, நாம் காணும் உப்பு நீர்க்கடல், ‘‘பெரும்புறக்கடல்’’ என்று வணங்கப்படும் எம்பெருமா னாகிய கடல் மற்றும் ‘‘ஶ்ருதி சாகரம்’’ எனப்படும் வேத சாஸ்த்திரமாகிய கடல். இந்த மூன்று கடல்களிலும் நாம் இறங்கி அநுபவிக்க இயலாது. இந்தக் கடல்களில், ‘அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களும், இறங்கி பயனடையத்தக்க இடங்களும் உண்டு’ என்பது விளக்கப்படுகிறது.

உப்பு நீர்க்கடலில், ஆழத்தில் நீர் அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில், நாம் இறங்கி நீராடவோ, அந்த நீரை அருந்தவோ இயலாது. அதே உப்புக்கடல்நீர், மேகத்தால் பருகப்பட்டு, மழையாகப் பொழிந்து, அந்த மழைநீர் மடுவாகத் தேங்கி இருக்கையில், அது தடாகமாக எல்லோருக்கும் பயன்படும்.

எம்பெருமான் என்னும் கடல், ‘அலைந்த இடம்’ ‘வ்யூஹ நிலை’, ‘ஆழ்ந்த இடம்’ அந்தர்யாமித்வம், ‘‘ஓடும் இடம்’’ அவதாரங்கள். இவை, குறைந்த அறிவும் சிறிய ஞானமும் உள்ளவர்களுக்கு, அநுபவிக்க இயலாத நிலைகள். ஆனால், ‘‘தேங்கி நிற்கும்’’ மடுவாக, இருப்பது அவன் அர்ச்சாவதார நிலை. ‘தாகம் கொண்டவன் வாயைத் திறந்து காத்திருக்க, தண்ணீர் தானே வந்து கொட்டும்படி செய்யப்பட்ட, ‘சாய்கரகமாக’ இருப்பது அவனுடைய அர்ச்சாவதார நிலை.

சாஸ்திரமாகிய கடலில், எம்பெருமானின் வ்யூஹ நிலையை விளக்கும் பாஞ்சராத்ரம், ‘அலைந்த இடம்’. அந்தர்யாமி நிலையை விளக்கும் மநு முதலான ஸ்ம்ருதிகள், ‘ஆழ்ந்த இடம்’. அவன் விபவ நிலையை விளக்கும் இதிஹாசங்கள் ‘ஓடும் இடம்’ அர்ச்சாவதாரத்தை வர்ணிக்கும் திருவாய்மொழி ‘தேங்கிய தடாகம்’ போன்றது. நம் அனைவரும் பயன்பெறக்கூடியது.

உப்புக்கடலின் முடிந்த நிலையானது தடாகம். எம்பெருமான் என்னும் கடலின் முடிந்த நிலையானது, அர்ச்சாவதாரம். சாஸ்திரம் என்னும் கடலின் முடிவான நிலையானது திருவாய்மொழி என்று காட்டித்தரப்படுகிறது,

திருவாய்மொழியின் முந்தைய நிலைகள் வேதம், பாஞ்சராத்ரம், மநுதர்ம சாஸ்த்ரம், மற்றும் இதிஹாசங்கள். அர்ச்சாவதாரத்தின் முந்தைய நிலைகள், பரத்வம், வ்யூஹம், விபவம் மற்றும் அந்தர்யாமித்வம் ஆகியவை.

ப்ரமாணம் என்பது சான்றாதாரம். ப்ரமேயம் என்பது ப்ரமாணத்தால் அறியப்படும் பொருள். எம்பெருமானை அறிவதற்கு முடிவான ப்ரமாணம், திருவாய்மொழி. இந்த ப்ரமாணத்தால், அறியப்படும் முடிவான ப்ரமேயம், அர்ச்சாவதார எம்பெருமான்.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்தது நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி. வேதங்களை அத்யயனம் செய்வதாலும், அநுஷ்டானங்களை மேற்கொள்வதாலும் ஒருவர் ப்ராஹ்மணர்’’ என்று அறியப்படுகிறார். ஆனால், ஒருவர் ‘‘சந்தங்கள் ஆயிரம்’’ எனப்படும் திருவாய்மொழியை கற்றுத் தேர்ந்த பிறகுதான், அவருக்கு ‘‘வைஷ்ணவன்’’ என்னும் மிக உயர்ந்த நிலை ஏற்படும்.

‘‘குறிகொள் ஆயிரத்துள் இவைபத்தும் திருக்குறுங்குடியதன் மேல், அறியக்கற்றுவல்லார் வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே’’ (திருவாய்மொழி.5-5-11) என்பது ஆழ்வார் திருவாக்கு.*

15

உபய வேதாந்தங்களுக்கு இடையிலான கருத்தொற்றுமை (ஐககண்ட்யம்)

(வடமொழி வேதங்களுக்கும், ஆழ்வார்கள் அருளிச் செயலுக்கும் இடையே அமைந்துள்ள கருத்தொற்றுமை)

ச்ரிய:பதியான ஸர்வேச்வரனுடைய நிர்ஹேதுக க்ருபைக்கு பாத்ரபூதரான ஆழ்வார் முதல் ஆளவந்தார் எம்பெருமானார் தேசிகன் நடுவாக மணவாள மாமுனிகள் முடிவாகவுள்ள நம் பூர்வாசாரியர்கள் ச்ரிய:பதியான நாராயணனே பரதத்வமென்றும், அந்த எம்பெருமானே பரமஹிதம் என்றும், அவன் சரணாரவிந்தங்களில் பரம ப்ரீதியுடன் செய்யும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்றும் இப்படி தத்வ ஹித புருஷார்த்தங்களை தங்கள் உபதேசங்களாலும் க்ரந்தங்களாலும் வெளியிட்டி ருக்கிறார்கள். தத்வ ஹித புருஷார்த்தங்களை இப்படி உள்ளபடி அறிந்த சேதனனே மேலான புருஷார்த்தத்தை அடைகிறான்.

இவைகளை உள்ளபடி தெரிவிக்கின்ற சாஸ்த்ரங்களில் சிறந்த சாஸ்த்ரம் வேதமென்று சொல்லப்படுகின்றது. வேதா3ச்சா2ஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தை3வம் கேவாத் பரம் என்ற வசனம் இவ்விஷயத்தில் ப்ரமாணம். அந்த வேதம் ஸம்ஸ்க்ருத வேதம் த்ராவிட வேதம் என இரண்டு பிரிவை உடையதாயிருக்கும். ஸம்ஸ்க்ருத வேதம் போல் த்ராவிட வேதமும் உண்டு என்பது வடமொழி மறையென்றது தென்மொழி மறையை நினைத்திறே என்ற அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீஸூக்தியிலும் ‘‘அதாவது மறையென்று கேவல வேதவாசி சப்தத்தாலே சொல்லவமைந்திருக்க வடமொழி மறை என்று ஸம்ஸ்க்ருத வேதமென்றது - த்ராவிட வேதமும் உண்டென்று நினைத்திறே யென்கை. ப்ரதிகோடி யில்லாதபோது இப்படி விசேஷிக்க வேண்டுவதில்லையிறே என்று கருத்து’’ என்ற மணவாளமாமுனிகள் வ்யாக்யான ஸ்ரீஸூக்தியிலும் மிகத் தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

இங்கு த்ராவிட வேதமென்று குறிப்பிட்டது ஆழ்வாரருளிய திவ்யப் பிரபந்தத்தை, ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட ப்ரபந்தம் நித்யமான வேதத்திற் சேர்ந்ததென்பது எவ்வாறு பொருந்துமெனின்? ருஷிகளால் கண்டு வெளியிடப்பட்ட மந்த்ரம் வேதத்தில் சேர்ந்ததுபோல் ஆழ்வாரால் கண்டு வெளியிடப்பட்ட ப்ரபந்தமும் நித்ய மென்பதில் விரோதம் இல்லாமையால் வேதமெனத் தட்டில்லை.

ஆழ்வாரால் கண்டு வெளியிடப்பட்டது திவ்யப் பிரபந்தம் என்னும் விஷயம் ‘‘ஆம்நாயாநாம் ப்ரக்ருதி மபராம் ஸம்ஹிதாம் த்ரஷ்டவந்தம்’’ என்ற தேசிக ஸ்ரீஸூக்தியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ‘‘வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3சரதா2த்மஜே| வேத3: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||’’ (ஸர்வேச்வரன் தசரத சக்ரவர்த்திக்கு குமாரனாக அவதரித்தபோது, அவனுடைய கல்யாண குணங்களைப் பேசும் வேதம், வால்மீகி பகவானிட மிருந்து ஸ்ரீராமாயணமாக அவதரித்தது) என்ற ஸ்காந்த புராண வசனத்தின்படி வேதத்தின் ஆவிர்பாவ விசேஷமாக ஸ்ரீராமாயணத்தை சொல்லுகிறது போலவே, அவன் கோயில் முதலான திவ்ய தேசங்களில் அர்ச்சாரூபத்தோடு அவதரித்த போது அந்த வேதம் ஆழ்வாரிடமிருந்து திவ்யப்ரபந்தமாக அவதரித்தது என்று ஸம்ஸ்க்ருத வேதத்தின் ஆவிர்பாவ விசேஷமாகவும் திவ்யப்ரபந்தம் சொல்லப்படுகிறது. இதனால் ப்ரமேய வஸ்துவாகிய எம்பெருமான் ஸர்வ சுலபமாயிருக்கும் அர்ச்சாவதாரங் கொள்ள, அவனைச் சொல்லுகிற வேதமும் ஸர்வ ஸுலப மாகவும் ஸர்வாதிகாரமாகவுமுள்ள த்ராவிட வேதமா யிற்றென்பது விளங்கும்.

ஸம்ஸ்க்ருத வேதத்தின் பூர்வ பாகம் பகவதாராதந ரூபமான கர்மத்தைச் சொல்லுகிறது. உத்தர பாகமென்ற வேதாந்தம் ஆராத்யனான ஸர்வேச்வரனை நேராகச் சொல்லுகிறது. இது உபநிஷத்தென்று சொல்லப்படும். இந்த ஸம்ஸ்க்ருத உபநிஷத், ஸர்வேச்வரனது ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி முதலியவைகளைச் சொல்லுவதுபோல ஆழ்வார் அருளிய திவ்யப்ரபந்தமும் ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவைகளைத் தெளிவாகச் சொல்லுகையால் த்ரமிடோபநிஷத் என்று வேதாந்த வித்துகளால் வ்யவஹரிக்கப்படுகிறது.

இதை த்ரமிடோபநிஷத்ஸங்கதி, த்ரமிடோ பநிஷத் தாத்பர்யரத்நாவளி என்று வழங்கப்படும் க்ரந்தங்களின் பெயர்களாலும் அறியலாம். இனி ஆழ்வார் அருளிச் செய்த திவ்யப் பிரபந்தம் உபநிஷ தர்த்தங்களை உட்கொண்டுள்ளது என்பது நிரூபிக்கப்படும்.

ச்ரிய:பதியான நாராயணனே பரதத்வம்

ஸம்ஸ்க்ருதோபநிஷத்தில் காரணந்து த்4யேய: என்ற வாக்யத்தால் ஜகத் காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது என்று அறுதியிட்டு, அந்த ஜகத் காரணம், யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே| யேந ஜாதாநி ஜீவந்தி| யத் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தி| தத்3விஜிஜ்ஞாஸஸ்வ| தத்3 ப்3ரஹ்மேதி* (எவனிடமிருந்து தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான ப்ராணிகளெல்லாம் உண்டா கின்றனவோ, எந்த வஸ்துவைக் குறித்து உண்டான பொருள்கள் மோக்ஷ காலத்தில் போகின்றனவோ, உண்டான அப்பொருள்கள் யாவும் லய காலத்தில் எதனுடன் ஏக பாவத்தை அடைகின்றனவோ, அதுவே பரப்ரஹ்மம் என்று அப்படிப் பட்ட பொருளை உணர்வாயாக) என்று ப்ரஹ்ம சப்தத்துக்குச் சொல்லப்படும் பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஜகத் காரண வஸ்துவான ப்ரஹ்மம் ‘‘தத் ஐக்ஷத ப3ஹுஸ்யாம்’’, (’’அந்த ஸத் என்று சொல்லப்படும் காரணப் பொருளாகிய, யான் பல வாகிறேன்’’ என்று ஸங்கல்பித்தது) என்று சொல்லப் படுவதால், அது அறிவில்லாத அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டதென்றும் ‘‘ஆநந்த மய:’’ ‘‘அளவிட்டு அறிய முடியாத ஆநந்த குணத்துக்கு கடலாயிருப்பவன்’’ என்று சொல்லப்படுவதால், அறிவுள்ள சேதனப் பொருளைக் காட்டிலும் வேறுபட்டதென்றும் தெரிகிறது.

‘‘யேநாக்ஷரம் புருஷம் வேத3 ஸத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்3ரஹ்ம வித்3யாம்’’ என்று (’’எந்த ஜ்ஞாநத்தால் அக்ஷரனான புருஷனை அறிபவனே அந்த ப்ரஹ்ம வித்யையைச் சொல்லக்கடவன்’’) என்று சொல்லியிருப்பதனால் அந்த ஜகத் காரணப் பொருள் புருஷனென்றும் தெரிகிறது. ‘‘ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷோ த்ருச்யதே தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவமக்ஷிணீ’’ என்ற ச்ருதியில் அந்த ஜகத் காரண பொருளான புருஷன் ஆதித்ய மண்டலாந்தர்வர்த்தி என்றும், புண்டரீகாக்ஷன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இனி இந்த புண்டரீ காக்ஷனான புருஷன் நாராயணன் என்று நிரூபிக்கப்படும். சைவ புராணத்தில் நாராயணன் தினந்தோறும் ஆயிரம் தாமரை புஷ்பங்களாலே சிவனை அர்ச்சித்து வந்ததாகவும், ஒரு நாள் அவன் பக்தியைச் சோதிக்க வேண்டி ஒரு தாமரை புஷ்பத்தை சிவன் காணாமல் செய்ததாகவும், அப்போது அர்ச்சிக்கும் நாராயணன் புண்டரீகாக்ஷனாகையால் தன்னுடைய கண்மலரால் அர்ச்சித்ததாகவும் அதனால் சிவன் ஸந்துஷ்டனாய் சக்ரம் கொடுத்ததாகவும் சொல்லியிருப்பதால் புண்டரீகாக்ஷன் நாராயணன் என்பது பரபக்ஷத்தாலும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

‘‘ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்3ரஹ்மா நோந:’’ என்ற ச்ருதியில் (’’ப்ரஹ்மாவும் பரமசிவனும் உண்டாவதற்கு முன்னே நாராயணன் ஒருவனே இருந்தான்’’) என்று சொல்லியிருப்பதாலும் ‘‘யதா2ங்கரப்3தோ3யம் மஹாதேவே(அ)வதிஷ்டதே ததா2 புருஷப்3தோ3யம் வாஸுதேவே(அ)வதிஷ்டதே’’ - (சங்கர சப்தம் மகாதேவனைக் காட்டுவதுபோல, புருஷ சப்தம் வாஸு தேவனைக் காட்டுகிறது) என்று சொல்லியிருப்பதாலும், அந்த ஜகத் காரணப் பொருளாய் புண்டரீகாக்ஷனாய் உள்ள புருஷன் நாராயணன் என்பது தெளிவு. ஜகத்துக்கு காரணமா யிருக்கும் பொருளே மேலான உண்மைப் பொருள் என்பது உபநிஷத் துக்களின் கொள்கையாதலால், கீழ் நிரூபித்தபடி ச்ரிய: பதியான நாராயணனே பரதத்வம் என்பது அந்த உபநிஷத்துக்களை நன்றாக பரிசீலனை செய்யும்போது தெளிவாகத் தெரிகிறது. இனி ஆழ்வார் திவ்ய ஸூக்திகளில் இதே விஷயம் வெளிப் படுத்தப்படுகின்றது என்பது நிரூபிக்கப்படும்.

எம்பெருமானிடத்தில் காரணப் பொருளாய் இருக்கை, பக்திக்கு விஷயமாய் இருக்கை, க்ருபையைச் செய்பவனாய் இருக்கை என்கிற மூன்று தர்மங்கள் ஒன்றை விட்டொன்று பிரியாமல் சேர்ந்திருக்கின்றன. இம்மூன்று தர்மங்களுள் ஒன்று மாத்திரம் சொல்லப்பட்டு மற்றவை இரண்டும் சொல்லப் படாமலிருந்தும், அந்த தர்மம் மற்றயிரண்டு தர்மங்களை விட்டு ஒருகாலும் பிரியாமல் சேர்ந்தே இருப்பதால் அவைகளுக்கு ஸூசகமாக ஆகின்றது. ஆழ்வார் மயர்வற மதிநல மருளினன் (ஸம்சயம் விபர்யயம் முதலான அஜ்ஞானம் நசிக்கும்படி, ஸ்வாபாவிகஜ்ஞான ப்ரேமங்களை தன்னருளாலே தந்தருளினவன்) என்றருளிச் செய்கையாலே எம்பெருமான் க்ருபையைச் செய்பவன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

க்ருபையை செய்பவனாயிருக்கை என்ற தர்மம், பக்திக்கு விஷயமாயிருக்கை, காரணப் பொருளாயிருக்கை என்ற தர்மங்களோடு ஒருபொருளில் சேர்ந்தேயிருப்பதால், எம்பெருமானைப் பற்றிக் கிடக்கிற அந்த தர்மங்களுக்கு (பக்திக்கு விஷயமாயிருக்கை, காரணப் பொருளா யிருக்கை) ஸூசகமாகின்றது. ஆதலால் ‘‘காரணந்து த்யேய:’’ என்ற ச்ருத்யர்த்தத்தை ‘‘மயர்வற மதிநல மருளினன்’’(திருவாய்.1-1-1) என்ற ஆழ்வார் திவ்ய ஸ்ரீஸூக்தி உட்கொண்டுள்ளது என்பது தெளிவாக்கப் படுகிறது. மேலும், ‘‘மயர்வற மதிநல மருளினன்’’ என்ற இடத்தில் அஜ்ஞாநம் நசிக்கும்படி ஜ்ஞாந ப்ரேமங்களை தன்னருளினாலே தந்தருளினவன் என்றருளிச் செய்கையால், மோக்ஷ காரணத்வம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

‘‘அவித்3யா நிவ்ருத்தி ரேவ ஹி மோக்ஷ:’’ என்று அஜ்ஞான நாசமே மோக்ஷமென்று சொல்லப் படுகிறது. அந்த மோக்ஷம், ‘‘ஜக3து3த்பவஸ்தி2தி ப்ரணாசஸம்ஸார விமோசநாத3ய:’’ என்று ஜகத்தின் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் ப்ரஹ்ம கார்யமாயிருப்பது போல, ஸம்ஸார விமோசநத்தையும் கார்யமாக ஆளவந்தார் அருளிச் செய்திருக்கையாலே ப்ரஹ்ம கார்யமாகச் சொல்லப்படுகிறது. ஆதலாலும், ‘‘காரணந்து த்4யேய:’’ என்ற ச்ருத்யர்த்தம் இங்கே சொல்லப்படுகின்றது என்பது தெளிவு. ‘‘கடல் ஞாலம் செய்தேனும் யானேயென்னும் கடல் ஞாலமாவேனும் யானே யென்னும்’’ (திருவாய். 5-6-1) என்ற பாசுரத்தில், ஆழ்வார் ‘‘அஹம் மநுரபவம் ஸூர்யச்ச’’ என்றும் ‘‘தத்3பாவ பாவமாபந்ந:ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ’’ என்றும், ‘‘மத்தஸ் ஸர்வமஹம்ஸர்வம்’’ என்றும் சொல்லு கிறபடியே பாவநாப்ரகர்ஷத்தாலே தன்னை அவனாக பாவித்து ஜகத் ஸ்ருஷ்டி முதலியவைகளைச் செய்தவன் நானேயென்று எம்பெருமான் பாசுரத்தாலே சொல்லுவதால், ‘‘யதோவா இமாநிபூ4தாநி ஜாயந்தே’’ என்ற ச்ருதியில் சொல்லப்பட்ட காரணப்பொருள் ப்ரஹ்ம மென்றே இங்கு தெளிவாகச் சொல்லப்படுகிறது.

‘‘மனனகம்’’ (திருவாய்.1-1-2) என்ற பாசுரத்தில் ‘‘பொறியுணர் வளவிலன்’’- இந்த்ரியங்களால் உண்டாகும் அறிவுக்கு விஷயமான அசேதனத்தின் படியல்லன். ‘‘மனனுணர்வளவிலன்’’- மாநஸ ஜ்ஞாநத்துக்கு விஷயமான சேதனன்படி யல்லன். ‘‘உணர்முழுநலம்’’- முழு உணர்வும் முழு நலமுமான ஜ்ஞாநாநந்த நிரூபணீயன் என்று அருளிச் செய்திருப்பதால், ‘‘தத் ஐக்ஷத’’, ‘‘ஆநந்த3மய:’’ என்று ச்ருதியில் ஏற்படுகிற சேதன அசேதன விலக்ஷணன் என்பது தெளிவு.

‘‘ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் மற்றும் யாது மில்லா அன்று நான்முகன் தன்னொடு தேவருல கோடுயிர் படைத்தான்’’ (திருவாய்.4-10-1) என்ற திவ்ய ஸூக்தியில் ‘‘தம: ஏகீ ப4வதி’’ என்கிறபடியே (ஸ்வரூபத்திலே ஒன்றும்படி லயிப்பதான தேவ ஜாதியும், அவர்கள் வாஸஸ்தாநமான லோகமும், மநுஷ்யன் முதலான ப்ராணி வர்க்கமும், ஸமஷ்டி ரூபமஹதாதி ஸகல பதார்த்தங்களும், நாமரூப விபாக ரஹிதங்களாய்க் கொண்டு, ஸகல பதார்த்தங் களும் ஸம்ஹ்ருதமான அன்று இவற்றினுடைய ஸ்ருஷ்டி யோக்யதாநுஸந்தாநத்தாலே தயமானமனாவாய்க் கொண்டு ஸமஷ்டி புருஷனான ப்ரஹ்மாவோடே கூட தேவதா வர்க்கம், லோகம், ப்ராணி ஜாதங்கள் இவற்றை ஸ்ருஷ்டித்தவன்), என்றருளிச் செய்திருப்பதால் இங்கு ‘‘ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்3ரஹ்மா நேசாந: நேமே த்3யாவாப்ருதி2வீ’’ என்ற ச்ருதி சொற்றொடரின் பொருளைத் தெளிவாகக் காணலாம்.

‘‘தகும் சீர்த்தன் தனி முதலினுள்ளே மிகுந்தேவு மெப்பொருளும் படைக்கத் தகுங்கோலத் தாமரைக் கண்ணனெம்மான் மிகுஞ்சோதி மேலறிவார் யவரே’’ (திருவாய்.2-2-5) என்ற பாசுரத்தில் ‘‘அழகிய தாமரை போன்ற கண்களை உடைய என் ஸ்வாமியானவனைக் காட்டிலும் பரஞ்ஜ்யோ திஸ்ஸு, இதுக்கு மேலொரு தத்வம் உண்டென்று வைதிகரில் அறிவார் யார்’’ என்றருளிச் செய்திருப்பதால் ‘‘தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீக மேவமக்ஷிணீ’’ என்ற ச்ருத்யர்த்தத்தைப் பார்க்கலாம்.

இப்படி ‘‘ஜகத்துக்குக் காரணப் பொருளாய், புண்டரீகாக்ஷனாய், புருஷோத்தமனாய் இருக்கும் ஸ்ரீமானான நாராயணனே மேலான உண்மைப் பொருள்’’ என்னும் விஷயம் உபய வேதாந்தங்களைக் கொண்டு யதாமதி காட்டப்பட்டது. இனி எம்பெருமானே ஹிதம் என்னும் விஷயம் காட்டப்படும். ச்வேதாச்வதரோபநிஷத்தில்

‘‘யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம் யோவை வேதா3ம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை I தம் ஹ தே3வம் ஆத்மபுத்3தி4 ப்ரஸாத3ம் முமுக்ஷுர்வைரணமஹம் ப்ரபத்3யே II’’

என்ற ச்ருதியில் ‘‘எவன் தன் நாபி கமலத்தில் சதுர்முக ப்ரஹ்மாவை உண்டாக்கி ஜகத்தை ஸ்ருஷ்டி செய்வதற்கு வேதங்களை உபதேசித்தானோ எவனு டைய க்ருபையால் எம்பெருமானே உபாயம் என்ற புத்திக்கு ப்ரகாசம் உண்டாகிறதோ அந்த ஸர்வேச்வரனை முமுக்ஷுவாகிய நான் உபாயமாகப் பற்றுகிறேன்’’ என்று சொல்லியிருப்பதால் எம்பெருமானே ஹிதமென்பது உபநிஷத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதே அர்த்தத்தை ஆழ்வார் ‘‘என்னுணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவும் அவனதின்னருளே’’ (8-8-3) என்ற இடத்தில் அருளிச் செய்திருப்பதால், எம்பெருமானே பரமஹிதம் என்னும் விஷயம் உபய வேதாந்தங்களிலும் ஏகரீதியாகப் பார்க்கலாம்.

இனி பரம புருஷார்த்தமான கைங்கர்யத்தை உபய வேதாந்தங்கள் சொல்லுகின்றன என்ற விஷயம் நிரூபிக்கப் படும். ‘‘ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா’’ என்ற ச்ருதியில் ‘‘பரமபதத்தில் எம்பெருமான் க்ருபைக்கு பாத்ரபூதனான சேதனன் ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன் அவன் கல்யாண குணங்களை அநுபவிக்கிறான்’’ என்று பகவத் குணாநுபவம் புருஷார்த் தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒப்பற்ற கல்யாண குணங்களை அநுபவிக்கும்போது இவனுக்கு அந்த குணமுள்ள வஸ்துவினிடத்தில் பரம ப்ரீதி உண்டாகிறது. அந்த ப்ரீதியினால் ஏவப்பட்டவனாய் பரிசர்யையைச் செய்கிறான். இந்த பரிசர்யையே கைங்கர்ய மெனச் சொல்லப் படுகிறது.

கைங்கர்யமாவது, பகவன் முகோல்லா ஸத்தை உண்டு பண்ணுகிற வ்யாபார விசேஷம். எம்பெருமானை அடைதல், அவனை அநுபவித்தல், அவன் குணங்களை அநுபவித்தல் இவைகளைப் பலமாகச் சொல்லுகிற ச்ருதிகளுக்கு, கைங்கர்ய பர்யந்தமான புருஷார்த் தத்தைச் சொல்வதில் நோக்காகையால், ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் கைங்கர்யமே புருஷார்த் தமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

‘‘உகந்து பணி செய்துனபாதம் பெற்றேன்’’ (திருவாய்.10-8-10) - ‘‘ப்ரீதியினால் தூண்டப் பட்டவனாய்க் கொண்டு வாசிகமான அடிமை செய்து பரமப்ராப்ய பூதனான உன் திருவடிகளைப் பெற்றேன்’’ என்றும், ‘‘ஈதேயின்னம் வேண்டுவதெந்தாய்’’ (திருவாய்.10-8-10) - (’’இவ்வடிமையே இவ்வாத்ம உள்ளதனையம் அபேக்ஷிதம். எனக்கு நிருபாதிக பந்துவானவனே’’) என்றும் ஆழ்வார் அருளிச் செய்கை யாலே, த்ரமிடோ பநிஷத்திலும் கைங்கர்யம் புருஷார்த்தமாகச் சொல்லப் பட்டிருப்பதென்பதை அறியலாம்.

ஆக, உபய வேதாந்தங்களும் இப்படி தத்வ ஹித புருஷார்த்தங்களை வெளிப்படுத்துகின்றன என்பது ஓரள விற்கு நிரூபிக்கப்பட்டது.

ஸாமவேதத்தின் ஸாரம் என்று போற்றப்படுகிறதும், அவாவிலந்தாதி என்று போற்றப்பட்டு, குருகூர் சடகோபனின் ‘‘முடிந்த அவா’’ என்று சொல்லப்படும்படி உத்தம ஆயிரம் பாசுரங்களின் ஸாரத்தைச் சொல்லுவது, ஒரு முடவனால் ஏழுகடல்களையும் தாண்டப்படுவதைப் போலவும், ஒரு நளினமான ஹம்ஸத்தினால் மந்தர மலையைத் தாங்குவது போலவும் வொக்கும்!

ஆனால் ஆழ்வாருடைய எண்ணம் அவ்விதமல்ல! ‘‘அவாவிலந்தாதி யிப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே,’’ ‘‘பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே,’’ என்கிறபடி. நாமெல்லாம் வாழ்ந்து போக வேண்டும் என்று நினைத்த மஹா கருணையே, இதையே எம்பெருமானும் திருவுள்ளமிட்டான். ஆகவே ஆழ்வார், ‘‘பண்டைநாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு, நின்கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழிவந்தாட் செய்யும்,தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து,உன் தாமரைக் கண்களால் நோக்காய்,’’(திருவாய்மொழி.9-----2-1) என்று பகர்ந்தார். அப்பேர்பட்ட ஆழ்வாரையும் பங்கயத் தாளோடு கூடிய எம்பெருமானையும் எவ்விதம் போற்றமலிருக்கக் கூடும்? ஆகையினால் மதுரகவி ஆழ்வார் ‘‘அருள்கொண்டு ஆயிரமின்றமிழ்ப் பாடினான், அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’’ என்றார். கீதாசார்யனை விட, ஆழ்வாருடைய அருள் உயர்ந்ததே!

‘‘ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய், உனக்கு ஓர் கைம்மாறு நான் ஒன்றிலேன், எனது ஆவியும் உனதே, தெய்வ நாயகனே’’(திருவாய்மொழி.5-7-10), உன் திருவடிகளை உபாயமாகவும் பலனாகவும் அளிக்கிற உறுதியை எனக்கு இயற்கையான தன்மையாகும்படி கொடுத் தருளினாய்! இந்த ஞானத்தோடு, ‘‘இசைவித் தென்னையுன் தாளிணைக் கீழ் இருத்துமம்மானே, அசைவில் அமரர் தலைவர் தலைவா, ஆதிப் பெருமூர்த்தி’’ (திருவாய் மொழி.5-8-9), இவ்வாத்மா உனக்கு அடிமை என்று என்னை அங்கீகரிக்கச் செய்து, உன் திருவடித் தாமரைகளை அடைவதையே எனக்கு இன்பம் பயப்பதாயும் அவைகளை விட்டுப் பிரிவதையே துக்கமாகவும் ஆக்கின எம்பெருமானே; ‘‘என் உணர்வினுள்ளே யிருத்தினன் அதுவும் அவனது இன்னருளே,’’ என்று ஆழ்வார் எம்பெருமானுடைய கருணையையே புகழ்ந்தார்; அந்த கருணையைவிட ஆழ்வாருடைய கருணையே இன்னும் பெரியதானது, கனமானது என்று மதுரகவியாழ்வார் பறைசாற்றினார்.

ஆகவே நம்மாழ்வார் ஒரு மஹா ஆசார்யராக விளங்கினார். சரீர ஆத்மா ஸம்பந்தம் போல, ஆழ்வாருக்கும் அவரைப் பற்றிய நம்போன்ற பக்தியில் மிகவும் குறைந்த ஸம்சாரிகளுக்கும் ஏற்பட்ட ஸம்பந்தம், பகவானுக்கும் ஆழ்வாருக்கும் நித்யமாக ஏற்பட்ட ஸம்பந்தமே, எனக் கொள்ளலாம்! சேதனா சேதனங்களைத் தரிக்கிறபடியால் ‘‘நாராயணன்’’ என்று பகவான் அறியப்படுகிறான்.

அதே போல சேதனம் என்கிறது நம்மாழ்வாரையும், அசேதனம், பரத்வாதிகளால் நாராயணனைச் சொல்வது போல, ஆழ்வாரால் கடாக்ஷிக்கப் பட்ட நம்போன்ற ஸம்சாரிகளையும் சொல்லுவதென்று பூர்வாசாரியர்கள் நிர்வஹிப்பார்கள். ஆகவே ஆனந்தம் சேதன அசேதனங்களுக்கும் உண்டு என்பார்கள். ‘‘அறிவாரு யிரானாய்’’- (திருவாய்மொழி 6-9-8) என்கிறபடி ஆழ்வாரை ஈஸ்வரனுக்குத் திருமேனியாகவும், அப்பேர்பட்ட சரீர ஆத்மா ஸம்பந்தம் போல, ஆழ்வாருக்கும் நம்போன்றவர் களுக்கும் ஏற்பட்ட ஸம்பந்தமே எனக்கொள்ளலாம்.

ஆதலால் வைஷ்ணவர்கள் நம்மாழ்வாரை ஈச்வர னுக்குத் திருவடிகளாக அனுஸந்தித்து, ஆழ்வாரையே (மஹா ஆசார்யராக) உபாயமாகவரித்து, எம்பெருமானை அடைந்து, ஆழ்வாருக்கு மற்றைய ஆழ்வார்கள் உறுப்பு களாயிருப்பவர்கள் என்று பெரியோர் சொல்லுவர்; பூதத் தாழ்வாரையேத் தலையாகவும், பொய்கை பேயாழ்வார் களைக் கண்களாகவும், பெரியாழ் வாரைத் திருமுகமாகவும், திருமழிசைப் பிரானைக் கண்ட மாகவும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரைத் திருமார்பாகவும், திருமங்கை மன்னனைத் திருநாபியாகவும், மதுர கவிகளையும், எம்பெருமானாரையும் திருவடிகளாகவும் பெரியோர் அருளிச் செய்வர்.

அ) தமிழ்மறையும், ஸ்ரீபாஷ்யமும்:--

நிகமாந்த மஹாதேசிகர் ‘‘தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிந்தவராகத்’’ திருவாய் மொழியின் பெருமை களை உணர்த்தினார். தெளியாத மறை நிலங்கள் யாவை, அவைகளை ஆழ்வார் எவ்விதம் நமக்கு அறிவுறுத்தினார் என்பதை ஸ்ரீபாஷ்யம் கொண்டு அறிய முயலுவோம்.

1. திருவாய் மொழியை நாம் வீதிகளில் ஸேவிப்ப தில்லை. ஸந்நிதிக்குள்ளோ, வீடுகளிலோ உட்கார்ந்து கொண்டே ஸேவிக்கும் ஏற்றம் இரண்டுக்கும் உண்டு என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.

2. ஆழ்வாரின் திருவாய் மொழி ‘‘பக்தாம்ருதம்’’ நித்யஸூரிகளுக்கும், முக்தர்களுக்கும் போக்யமானது. அதைப் போல, ஸ்ரீபாஷ்யமும் ஸம்சாரி சேதனர்களுக்கும், நித்ய சூரிகளுக்கும், முக்தர்களுக்கும் இன்பம் பயப்பதாய் அமைந்துள்ளது.

3. ஸ்ரீபாஷ்யம் ஸம்சாரத்தில் கட்டுண்டிருக்கிற சேதனர்களை, பிரக்ருதி ஸம்பந்தத்திலிருந்து முற்றவும் அறுத்துவிடுகிறது; அதுபோல, திருவாய்மொழியை பொருளோடு பயில்பவர்களுக்கு ஸம்சார பந்தம் அறுந்து விடுகிறது. இவையிரண்டும் பகவானுடைய பெருமைகளை வெளிப்படுத்துகின்றன.

4. ஸ்ரீவைஷ்ணவ நெறிகளின்படி எம்பெருமான் தொடக்கமாக ஒராண் வழியாக வரும் ஸம்ப்ரதாயத்துக்கு ஆழ்வாரை ப்ரபன்னஜந கூடஸ்தர், குலபதி என்றும், ராமானுஜரால் நன்றாக வளர்க்கப்பட்ட ஸம்பிரதாயம் என்றும் சொல்லுவார்கள். இப்படி 1102 பாட்டுகள் கொண்ட திருவாய் மொழி ச்ரியப்பதியான எம்பெருமான் தன்னை அடைவதற்குத் தானே காரணம் என்கிற முக்கியமான கருத்தை வெளியிடுகிறது. பகவானுடைய மிகவுயர்ந்த கல்யாண குணங்களை பிரபந்தம் முழுவதிலும் காணலாம்.

ஆழ்வாரின் தத்வ ஹித புருஷார்த்தங்கள் ,பரப்ரஹ்ம ஸ்வரூபங்கள், அவைகளை அடைவதற்கு உபாயம், அந்த பரப்ரஹ்மத்தை அனுபவிப்ப தனால் ஏற்படும் பரஸ்பர எம்பெருமானுக்கும், ஆழ்வாருக்கும் இடையே விளையும் ஆனந்தம் ஆகியவற்றை கொண்டவை.

ஸ்ரீபாஷ்யத்தில் ஸூத்திரங்கள் பல அதிகரணங் களாகவும் (156), 16 பாதங்களாகவும், 4 அத்தியாயங் களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளானவை, (1) பகவானே சேதன அசேதனங்களின் ஸ்ருஷ்டி கர்த்தா, (2) இவைகளைச் சரீரமாக உடையவன், (3) தனக்கு வேறு ஆதாரமில்லாதவன், (4) எல்லையில்லாத பெருமைகளை உடையவன், (5) இதற்கு விரோதமாகச் சொல்லும்படி பிரமாணங்கள் இல்லாதவன், (6) தன்னை ஆச்ரயம் செய்தவர்களுக்கு தான் ஆப்தன்- ஸஹகாரி, (7) ஆகாசம் ஜீவாத்மா இவைகளை அதனதற்குத் தக்கபடி குண விருத்திகளை ஸ்ருஷ்டி செய்பவன், (8) அவ்விதமே இந்திரி யங்களை ஸ்ருஷ்டி செய்பவன், (9) ஸம்சாரத்தை நடத்து கிறவன், (10) தான் ஒருவித தோஷ மற்றவனானபடியால், போக்யமானவன்;

(11) அநேக வித பக்தியோகங்களுக்கு விஷயமாக இருப்பவன், (12) பக்தர்களினால் அவரவர்களுக்குத் தகுதியான வர்ணாச்ரம தர்மங்களினால் ப்ரீதியுடையவனாகச் செய்யப்படக்கூடியவன், (13) ஸர்வ பாபங்களைப் போக்கடிப்பவன், (14) ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனின் பயணத்தைச் (கதியை) செய்து வைப்பவன், (15) பலவிதங்களான ஸத்காரங்கள் செய்யப்படும் அர்ச்சராதி மார்க்கத்தினால் மோக்ஷத்திற்கு அழைத்துக் கொண்டு போகுமவன், (16) தன்னுடன் ஸாம்யத்தைக் கொடுப்பவன் என்கிற விஷயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தேசிகரின் அதிகரணஸாராவளியில் இவ்வாறு தெரிவிக்கப் படுகிறது.

ஸ்ரஷ்டா தே3ஹீ ஸ்வநிஷ்டே நிரவதி4மஹிமா (அ)பாஸ்தபா3த4: ஶ்ரிதாப்த: ஸ்வாத்மாதேரிந்த்3ரியாதே3 ருசிதஜநநக்ருத் ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ | நிர்தோ3ஷத் வாதி3ரப்4யோ ப3ஹுப4ஜநபத3ம் ஸ்வார்ஹ கர்மப்ரஸாத்3ய: பாபச்சி2த்3 ப்3ரஹ்மநாடீ3க3திக்ருத3திவஹந் ஸாம்யத3ஶ்சாத்ர வேத்3ய: || (அதிகரண ஸாராவளி -19).

ஆழ்வாரும் சாரீரகமீமாம்ஸையில் கூறப்பட்டுள்ளபடி இறுதியிலுள்ள ‘‘கோலமலர்ப் பாவைக்கன்பாகிய’’ (10-10-7) என்கிற பாசுரம் தொடங்கி ‘‘பிறந்தார் உயர்ந்தே’’ (திருவாய் மொழி.10-10-11) என்கிற கடைசிப் பாட்டின் முடிவு வரையிலும், முதல் இரண்டு திருவாய் மொழிகளிலும் (உயர்வற, மனனக) தத்வாதி நிரூபணம் செய்தார். ‘‘பத்துடை அடியவர்’’ (1-3) முதல் ‘‘வேய்மரு தோளிணை’’ (10-3) வரை ஆழ்வார் ஆசார்ய ஸ்தானத்தை கீதாசார்யனைப் போல் அடைகிறார்.

‘‘உயர்வற’’ என்கிற முதல்பாட்டில் ஆழ்வார் ஸித்த பரங்களான அர்த்த போதகத்தை விமர்சிக்கிறார். ஸர்வஜ்ஞாதி கல்யாண குணோத்தமங்களுடன், எம்பெருமானுடைய பரத்வயேற்றங்களையும், அவன் செய்திருக்கும் பரம உபகாரங்களான ஞானம், புருஷார்த்தம் ஆகியவற்றை அளிக்கிறபடியால், ஸமந்வயாதிகரணார்த்த க்ரமம் நிரூபிக்கப் பட்டது. ஸ்ரஷ்டா, ஜகத்காரணேச்வரன், சேதனா சேதனங் களிலிருந்து வேறுபட்டவன் என்பவை (ஈக்ஷ்யத்யதிகரணம், ஆகாசாதி கரணம், ப்ரணாதிகரணம், ஜ்யோதிரதிகரணம் என்பவைகளில் சொல்லப்பட்டவை) ‘‘ பொறி உணர்வு அவையிலன்’’ (திருவாய்.1-1-2) எனப்பட்டது. ஆனந்தமயாதி கரணம் முதலியவைகளில் சொல்லப்பட்ட சேதனங்களை விட வேறுபட்டவன் என்பது ‘‘மனனுணர்வளவிலன்’’ (1-1-2) என்னப்பட்டது.

ஸ்ரீபாஷ்யத்தில் 2ஆம் பாதத்தில் கூறப்பட்ட பகவான் எல்லா சேதன அசேதன பொருள்களுக்கும் சரீரி என்பது ‘‘இலனது உடையனிது என நினைவரியவன்......புலனலன் ஒழிவிலன் பரந்த’’ (1-1-3) நிரூபிக்கப்பட்டது.

‘‘ஸ்வநிஷ்டா’’ என்கிற மூன்றாம் பாதத்தில் சொல்லப் பட்டதும், ‘‘நிரவதி4மஹிமா’’ என்கிற நான்காம் பாதத்திலும் சொல்லப்பட்டதை ‘‘அந்நலனுடைய ஒருவனை’’ (1-1-3) என்பதில் காணலாம். ஆகவே ஜகத்காரணத்வம், சரீராத்ம பாவம் இவைகள் முதற்பத்தில் 4,5,6,7 ஆம் பாசுரங்களில் காணலாம்.

பகவானுடைய திவ்ய ஆத்ம குணங்களும் ஜகதைச் வர்யங்களும் முதற் பத்துப் பாட்டுகளிலும், சொல்லப் பட்டிருக்கின்றன. ஸாமாநாதிகரண்யமானது ‘‘ஜகதீச்வரயோ: சரீராத்ம நிபந்தனம்’’ என்று சொல்லுகிறது யென்றும், நடுவில் அகிலபுவன நிர்மாணத்ராணஸம் ஹரணாதி லீலா விநோதனாய். ஸர்வஜகத் ஆத்மாவாய், ஸர்வஜகச் சரீரனாய், ஸ்வத ஏவ அகர்மவச்யனாகையால், ஸ்வசரீரபூத சேதனா சேதனாத்மக ஸமஸ்வ வஸ்துகத ஸூக துக்க விகாராதி ஸர்வதோஷை: அஸம்ஸ்பருஷ்டனாயிருக்கும் பரமபுருஷன்,’’ என்று வ்யாக்யானம் செய்திருப்பதினால் இந்த பத்துப் பாசுரங்களே ஆதாரம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

‘‘அபாஸ்தபா3தா4’’ என்கிற இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ‘‘சுடர்மிகு சுருதியுள்’’ (திருவாய். 1-1-1) என்று காட்டப்பட்டது. இதில் ஸாங்க்யஸ்ம்ருதி, யோக சாஸ்த்திரம் முதலியவைகளினாலும் யுக்திகளினாலும் பாதிக்கப்படாதாகையினால், அவைகளும் நிரஸனம் செய்யப்பட்டன என்று காட்டப்பட்டது. மேல் ‘‘உளன் எனில்’’ (திருவாய்.1-1-9) என்பதில் சூன்யவாதியின் வாதம் நிரஸனம் செய்யப்பட்டது. (அபாஸ்தபாதத்வத்தையே விவரிப்பதாகும்).

‘‘ஶ்ரிதாப்த:’’ என்று சுருங்கச் சொல்லப்பட்ட 2ம் அத்தியாயத்தின் 2ஆம் பாதத்தின் க்ரமம் ‘‘சுரரறிவருநிலை’’ (திருவாய்.1-1-8), ‘‘உளன் எனில் உளன்’’ என்கிற (1-1-9), பாசுரங்களில் காணப்படும். ‘‘ஸ்வாத்மாதேரிந்த்3ரியாதே3ரு சிதஜநநக்ருத்’’ என்கிற 3, 4-வது பாதங்களின் க்ரமம் ஆகாசாதி களின் ஸ்ருஷ்டியைக் குறிப்பிட்டு, அதற்கு ப்ரஹ்மாதிகள் காரணமாக இருக்க முடியாது என்பதைக் கூறும் ‘‘சுரரறி வருநிலை’’ (திருவாய்.1-1-8) என்கிற பாசுரத்திலும், ‘‘சுடர்மிகு’’ (1-1-7) என்கிற பாசுரத்திலும் காணலாம்.

ஆறாயிரப்படியில், ‘‘அபௌருஷேயமாகையாலே நிர்தோஷமாய் அபாதிதப்ராமாண்ய ரூபதேஜ:’’ ப்ரசுரமா யிருந்த சுருதிகளில் ‘உளன்’ என்கிறார். ஆதலால் லோகாயத, மாயாவாத, பாஸ்கரீய, யாதவப்ரகாசாதி வேதத்திற்கு மாறுபட்ட சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின என்று வ்யாக்யாநம். ஆக இப்படி முதல் திருவாய்மொழி பத்துப் பாட்டுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கும் முறையும், சாரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்யாயங்களில் கூறப் பட்டுள்ள கருத்துக்களும் ஒன்றே என்று அறியவும்.

‘‘ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ’’என்று நிரூபிக்கப்பட்ட 3ஆம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ‘‘ வீடுமின் முற்றவும்’’ (1-2-1) என்பதில் காணலாம். இதர விஷயங்களின் சேர்க்கையை விட்டு, பகவானை பற்ற வேண்டும், பகவானுடைய ‘‘ஹேயப்ரத்யநீகத்வ கல்யாணை கதாநத்வத்தை’’ அறிய வேண்டும் என்பதை முதல் பாட்டிலும், ஜீவாத்மா நிலையானவன், சரீரங்கள் அழியும் தன்மையுடையவை என்பதை 1-2-2 ஆம் பாசுரத்திலும், அஹங்கார மமகாரங்களை விட வேண்டியதை 1-2-3ஆம் பாசுரத்திலும் ஆழ்வார் அருளியிருக்கிறார்.

‘‘நிர்தோ3ஷத்வாதி3ரப்4ய:’’ என்னப்பட்ட 2ஆம் பாதத்தின் க்ரமத்தை ‘‘இல்லதுமுள்ளதும்... எல்லையில் அந்நலம்’’ என்கிற 1-2-4 ஆம் பாசுரத்திலும்; கைவல்யானு பவமாகிற இடையூறு 1-2-5ஆம் பாசுரத்திலும், சொல்லப் பட்டிருக்கின்றன.

3ஆம் அத்யாயம் 2ஆம் பாதத்தில் முக்தாதிகரணம் வரையிலான க்ரமம் நிரூபிக்கப்பட்டதா யிருக்கிறது. உபய லிங்காதிகரணம் முதல் மேலுள்ள அதிகரணங்களின் க்ரமம் மேல்பாட்டில் (1-2-5) குறிக்கப்பட்டிருக்கிறது. பகவானுடைய ஸர்வ ஸமத்வத்தையும், ஸர்வ ஸுஹ்ருத்வத்தையும் ‘‘பற்றிலன்’’ (1-2-6 லிருந்து 1-2-8) ஆகிய மூன்று பாசுரங்களில் உபதேசிக்கப்பட்டது. கடைசியில் பரதேவதை யான நாராயணனே ஆச்ரணீய தேவதை என்பதை ‘‘வண்புகழ் நாரணன்’’ (1-2-10) என்கிற பாசுரத்தில் சொல்லப்பட்டது.

பலத்தை (பேற்றினை) விரிவாகச் சொல்லுமிடம் 4ஆம் அத்யாயத்திலும், 3ஆம் அத்யாயத்தில் 2ஆம் பாதத்தின் இறுதியிலும் காணப்படுகிறது. இப்படியே 2ஆம் திருவாய்மொழியின் பொருள், 3ஆம் அத்யாயத்தின் 2ஆம் பாதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3ஆம் பாதத்தின் க்ரமம் குறிப்பிடப்பட்டு நிறுத்தப்பட்டது.

மூன்றாம் (1-3 பதிகத்தில்) திருவாய்மொழியில் ஆழ்வார் பகவானுடைய ஸௌலப்ய குணங்களைச் சொல்லுகிறார். இதற்கு மேல், பலவித பக்தி அனுபவங்களை சொல்லுகிறார். கடைசியில் பத்தாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியாகிற ‘‘சார்வேதவநெறி’’ பதிகத்தில் பேற்றினை மீண்டும் சொல்லி, பக்தி யோகத்தின் ப்ரகாரத்தை ‘‘கண்ணன் கழலிணை’’ (10-5) பதிகத்தில் நிர்ணயிக்கிறார். தனது பக்தி அனுபவங்களை சொல்லுங்கால், இப்படி சுலபனானவனோடு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே தமக்கு ஆசை பிறந்து அது கைகூடாதமையினால், ‘‘அஞ்சிறைய மடநாராய்’’, 1-1-4 ஆம் பதிகத்தில் தூது விடுபவராகக் காணப்படுகிறார்.

பக்தி யோகத்தின் அங்கங்களாகிற புஷ்பாதி ஸமர்ப்பணம், நாம ஸங்கீர்த்தனம், நமஸ்காரம் போன்றவை களை, ‘‘கண்ணன் கழலினை’’யில் காணலாம். இவ்விதம் (10-5-4, 10-5-5)பதிகங்களில் மூன்றாம் அத்யாயத்தின் 3 மற்றும் 4ஆம் பாதங்களின் கருத்து காட்டப்பட்டதாகிறது.

4ஆம் அத்யாயத்தில் சொல்லப்பட்ட பொருள், ‘‘தீதொன்றுமடையா’’ (திருவாய். 10-5-7), ‘‘அமராவினை களே’’ (திருவாய்.10-5-9) ‘‘வினைவல் இருள் என்னும் முனைகள் வெருவிப்போம்’’ (திருவாய்.10-5-10) முதலிய வைகளில் காட்டப்பட்டிருக்கிறது.

‘‘ ப்3ரஹ்மநாடீ3க3திக்ருத்’’ என்று சொல்லப்பட்ட நான்காம் அத்யாயத்தில் இரண்டாவதுபாதத்தின் க்ரமம், ‘‘வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றேன்’’ 10-6-5 பாசுரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

பகவானுக்குத் தன் ஆச்ரிதர்களிடமுள்ள பேரன்பானது ‘‘செஞ்சொற்கவிகாள்’’, 10-7 பதிகத்தில் சொல்லப்பட்டி ருக்கிறது. இதனால் பகவான் சரணாகதிக்கு முன்பு செய்த கர்மங்களை நாசம் செய்கிறான் என்பதும் தெளியலாயிற்று. ஆகவே, இனி, நிர்யாணத்திற்கு (ஜீவனின் கதிக்கு) காலவிளம்பமில்லை என்பது ‘‘ உடலுமுயிரும் மங்க வொட்டே’’ (10-7-9) என்று சொல்லப்பட்டது.

‘‘திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’’ (10-8-1) என்பதினால் ப்ரபன்னன் விஷயத்தில் எம்பெருமான் தானே அந்திம யாத்திரையின் அனுபவத்தை உண்டாக்கு கிறான் என்பது சிறப்பாகக் காட்டப்பட்டது.

‘‘அதிவஹத்’’ என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாம் பாதத்தில் சொல்லப்பட்ட அர்ச்சராதிகதி ‘‘சூழ் விசும்பு’’ (10-9) பதிகத்தில் நிரூபிக்கப்பட்டது.

‘‘ஸாம்யத3:’’ என்று சொல்லப்பட்ட நான்காம் பாத க்ரமம் ‘‘அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை’’ (10-9-11) என்பதிலும்; ‘‘உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ’’ (10-10-7) என்பது ‘‘அபுநராவ்ருத்தியைக்’’ காட்டுவது என்பதையும் நாம் அறிவோம்.

5. திருவாய்மொழி வேத உப ப்ருஹ்மணம் மாத்திர மன்று; வேதங்களுக்கெல்லாம் இணையாயிருக்கும் என்னும் அர்த்தத்தை இப்பிரபந்தம் தானே வெளிப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். அனைத்து வேதங்களுக்கும் ஒப்பானது என்றே சொல்லலாம். நான்கு வேதங்களும் பகவானுடைய ஸ்வரூபாதிகளை விவரிப்பதில் ஒவ்வொரு முறையை பின்பற்றியிருக்கின்றன.

ரிக் வேதத்தில் ஸ்தோத்ர ரூபம்; பலனோ தேவதைகள்; (அக்னி, இந்திரன் போன்றவர்கள்) திருவாய் மொழி நாராயண ஸ்தோத்ரம்; ரிக் வேதத்தில் புகழப் பட்டவர்கள் அக்னி, வருணன் தேவதைகளானாலும், அவர்களை நடத்தி அந்தர்யாமியாக விருக்கும் நாராயண னையே குறிக்கும். ‘‘புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்’’ (திருவாய்.2-8-3) என்பதை நோக்கவும்.

ஆ) வேதங்களும் திருவாய்மொழியும் :-

யஜுர் வேதம் - ‘‘அவன் துயரறு சுடரடி தொழுதெழு’’ (திருவாய்.1-1-1) எம்பெருமானைப் புகழ்ந்து பாடு, புஷ்பங்களால் ஆராதனை செய், ஆகிய யாக கர்மாக்களைச் சொல்லுவதால் திருவாய்மொழியை யஜுர் வேதத்தின் ஸாரமாகவும் சொல்லலாம்.

ஸாமம் ‘உ’ (உயர்வற) என்பதில் ஆரம்பித்தது ‘த’ (உயர்ந்தே) என்பதில் முடிகிறபடியால் ‘‘உத்’’ (சாந்தோக் யத்தில் (1-1-1, 10-10-11) காணப்படும்) பகவானைக் குறிக்கும் நாமமாகக் கொள்ளப்படுகிறது. ஆயிரம் பாட்டுக்கள் கொண்டது திருவாய்மொழி. நாதமுனிகள் ராகம் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளல் என்பது எல்லோரும் அறிந்த செய்தியாகும். ப்ரஹ்மத்தை அடைவதற்கு உபாயமாக விதிக்கப்பட்ட பல வித்யைகள் ஏற்பட்ட போதிலும், அவைகளில் மிக முக்கியமான ‘‘ந்யாஸ வித்யையை’’, ‘‘உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’’ (திருவாய்.6-10-10) என்பதில் ஆழ்வார் தெளிவாகக் காட்டியிருக்கிறார். ‘‘வீடுமின் முற்றவும்’’ (1-2 பதிகம்) என்பதில் பக்தி யோகத்தை உபதேசிக் கிறார். யஜுர் வேத உபநிஷத்தாகிய தைத்திரீ யத்தில் ந்யாஸவித்யை பரக்க முழக்கமிடப் பட்டிருக்கிறது.

அதர்வ வேதம் ‘‘ அதர்வா ரஸைச்ச பாதி’’ என்பதில் சொல்லப்படும் ரஸங்களினால் (கன்னலும், அமுதும் சேர்ந்தாற் போல) அதர்வ வேதம் போலிருக்கும். அதர்வத்தில் உபாய உபேயங்கள் விசேஷித்துக் கூறப்பட்டிருக்கின்றன. திருவாய்மொழி ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும் ஒவ்வொரு பலனை அளிப்பதால், நூறு பலன்களை, அனுஸந்திப்பவர்கள் அடைவதாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

திருவாய்மொழியில் முதல் பாட்டில் விஷயாதி நிரூபணம் முதலிய 10 அர்த்தங்கள் கூறப்படுகின்றன. அவைகள், (1) விஷய பிரயோஜன ஸம்பந்தாதிகளை நிரூபித்தல் (யாரைப் பற்றிய விஷயம் இந்நூல், அவருக்கும், நூலாசிரியருக்கும் உள்ள தொடர்பு, நூலால் எழும் பயன் ஆகியவை கூறல்.), (2) மங்களாசரணம் செய்தல் (மங்க3ளம் கூறல்), (3) சாஸ்திரார்த்தானு க்ரமம் (நூலைத் தொடங்குதல்), (4) பரப்ரஹ்ம சப்தார்த்த ஸங்க்ரஹம் (ப்ரஹ்மம் என்ற சொல்லின் பொருளை சுருங்கக் கூறல்), (5) ஸேவ்ய ஸம்சோதனம் (வணங்கத்தக்கவன் விஷயத்தில் ஆராய்ச்சி), (6) அர்த்த பஞ்சக நிரூபணம் (ஐந்து அரும்பொருள்களைக் கூறல்), (7) ப்ரணவார்த்த நிரூபணம் (ப்ரணவப்பொருளைக் கூறல்), (8) பரபக்ஷ ப்ரதிக்ஷேபம் (எதிர்வாதம் செய்பவரின் கொள்கையைப் புறந்தள்ளி வினா தொடுத்தல்), (9) பராரம்ப நிவாரணம் (எதிர்வாதம் செய்பவரின் கொள்கையைத் தடுத்தழித்தல்), (10) ஸ்வாரம்ப ஸமர்த்தனம் (ஆரம்பித்த நூலை முடித்தல்) என்பவை.

த்3வயம் - எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்வது உபாயம், உபேயம். உபாய தசை, உபேய தசை ஆகிய இரண்டிலும் மிதுனமே தஞ்சம் என்று காட்டப்பட்டது. ‘‘வேரிமாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்குமே’’ (4-5-11) என்பதில் த்3வயம் அனுஸந்திக்கப்படுகிறது. (ஸமஸ்த துக்கங்களை (வினை) பிராட்டி போக்குகிறாள் என்று சொல்லலாயிற்று). திருவாய்மொழியில் த்வயத்தின் பொருள் அக்ரமமாகச் சொல்லப்படுகிறது. அதாவது முதல் மூன்று பத்துக்களில் கைங்கர்ய ப்ரார்த்தனையும், அதற்கு மேல் மூன்று பத்துக்களில் சரணாகதியும் சொல்லப்படுகிறது என்பது பூர்வர்களின் நிர்வாஹம். ஏழாம் பத்து தொடங்கி பத்தாம் பத்து ஈறாக முன் சொல்லப்பட்ட ஆறு பத்துக்களில் அனுஸந்திக்கப் பட்ட த்வயத்தின் பொருள் விவரிக்கப்படுகிறது.

பகவான் ஸேவ்யத்வம், போக்யத்வம், சுபதனு விபவத்வம், ஸர்வபோக்யத்வம், ச்ரேய: புருஷார்த்தத்திற்கும், ஆச்ரிதவாத்ஸல்யம், அனிஷ்ட நிவ்ருத்தி, ஆச்ரித பாரதந்திரியம், நிரூபாதிக ஸுஹ்ருத்வம், ஸத்பத ஸஹகாரி, ஸ்ரீதர:, தன்னைப் பெறுவதற்கு ஸ்வயம் தானே காரணம் (ஸாதனம்) என்று இவைகளே முதல் பாட்டிலேயே பத்து காரணங்களால் அடையத்தக்கவர்.

இப்படி எம்பெருமானோடு ஏற்பட்ட ஸம்ச்லேஷத் தினால் மனத்தில் ஏற்பட்ட இன்பத்திற்கு ஒரு படியாலும் அழிவில்லை. அஜ்ஞானங்களை அகற்றி, கல்யாணகுணங் களைக் காட்டி அயர்வறும் அமரர்களோடு ஸமச்லேஷிக் குமாப் போலே, என்னோடு, ஸமச்லேஷித்து அருளியவனை எங்ஙனே விடும்படி? என்கிறார். ஒரு படியினாலும் அழிவில்லை. இதே கருத்து சாந்தோக்ய உபநிஷத்திலும் ‘‘நசபுநராவர்த்தே’’ என்று சொல்லப்பட்டது. என் அஜ்ஞானம் அடியாகவும், பாஹ்யஹீனமாகவும், விஷயாந்தர ஸங்கமம் அடியாகவும், பகவத் ஸ்வாதந்திரியம் அடியாகவும் விளையக்கூடும் புனராவ்ருத்தியை, ‘‘என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே’’ (திருவாய்.1-7-3) என்பதினால் அறுத்தேனே, இது ஒரு படியாலும் அழியவில்லை என்பதை ஆறாயிரப்படியும் இருபத்து நாலாயிரப்படியும் விவரித் துள்ளன. ஆழ்வாரும் ‘‘இசைவினை என் சொல்லியான் விடுவேனோ’’ (திருவாய்1-7-4) என்றார்.

நச உச்சி2ந்நகர்மப3ந்த4ஸ்ய அஸங்குசித ஜ்ஞானஸ்ய பரப்ரஹ்மாநுப4வைகஸ்வபா4வஸ்ய ததே3கப்ரியஸ்ய அநவதிகா4ஶயாநந்த3ம் ப்3ரஹ்மாநு ப4வத: அந்யாபேக்ஷாத த3ர்தா2ரம்பா4த்3ய ஸம்ப4வாத் புநராவ்ருத்திஶங்கா I ந ச பரமபுருஷ .....

அகி2லபு4வநஜந்மஸ்தே2மப4ங்காதி3லீலே
விநத விவித4பூ4தவ்ராத ரக்ஷைகதீ3க்ஷே I
ஶ்ருதிஶிரஸிவிதீ3ப்தே ப்3ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
ப4வது மம பரஸ்மிந் ஶேமுஷீ ப4க்திரூபா II

இந்த ஸ்ரீபாஷ்ய மங்கள ஶ்லோகத்திற்கு மூலம்:-

‘துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய்
இன்பமில் வெந்நரகாகி இனியநல்வான் சுவர்க்கங்களுமாய்
மன் பல்லுயிர்களுமாகிப் பலபலமாய மயக்குக்களால்
இன்புறுமிவ்விளையாட்டைடுயானைப்பெற்று ஏதுமல்லலிலனே. (திருவாய்மொழி.3-10-7)
இதில், ஆறாயிரப்படி,
‘‘நிகில ஜகதுதய விபவ லயாதிலீலனாய்’’ என்றும்

‘‘இன்புறும் இவ்விளையாட்டுடையான்’’என்றதையே எம்பெருமானார் ‘அகி2லபு4வநஜந்மஸ்தே2மப4ங்காதி3 லீலே‘ என்று அருளிச் செய்திருப்பது காண்க.

‘‘உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்து, உளன் சுடர்மிகு சுருதியுள்’’ (திருவாய்.1-1-7) என்பதையே, ‘ஶ்ருதிஶிரஸிவிதீ3ப்தே ப்3ரஹ்மணி ஸ்ரீநிவாஸே’ என்று அருளிச்செய்தார்.

இப்படி அர்ச்சராதி மார்க்கத்தினால் முக்தி அடைந்த வன் மறுபடியும் இந்த ஸம்சாரத்திற்குத் திரும்பி வருவ தில்லை. பகவான் ஸ்வதந்த்ரன், அவன் திரும்பி அனுப்பி விட்டால் என்ன செய்வது என்கிற ஆக்ஷேபத்திற்கு, ஸ்ரீபாஷ்யத்தின் இறுதி ஸூத்ரம் ‘‘பகவான் திருப்பி அனுப்பமாட்டான்’’ என்று சொல்லியும், வேதங்களே ப்ரமாணம் என்றும், எப்படி எப்பெருமான் உளன் என்று வேதங்களிலிருந்து அறியப்படுகிறதோ, அவ்விதமே அவன் திரும்பி அனுப்பமாட்டான் என்பதையே வேதங்கள் கூறுகின்றன என்றார்.

இதற்கு ஆழ்வாரின் ‘‘மயர்வற......யான் விடுவேனோ’’ (திருவாய்.1-7-4) என்கிற பாசுரத்தின் மூலம், திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார், பகவானை உள்ளபடியே கண்களால் கண்டு அனுபவித்து தாம் அனுபவித்தபடியை வெளிடுகிற திருவாய்மொழியும், உத்தமமான ப்ரமாணமென்று திருவுள்ளம்பற்றி, எம்பெருமானார் ‘‘நச’’ என்று ஆரம்பித்து, இப்படி திருப்பி அனுப்பாமைக்குக் காரணத்தை தமது ஸ்ரீபாஷ்யத்தில் கீழ் உதாகரிக்கப்பட்டதான திருவாய்மொழிப்பாட்டை அப்படியே ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

ப்ரஹ்ம ஸூத்ரகாரரான பகவான் வேதவ்யாஸாதிகள், ராஜாஜ்ஞையைப் போல, வேதங்கள் கூறா நிற்கும் என்கிறார்கள். அதனால் ஆழ்வார் புனராவ்ருத்தியில்லை, என்பதை ஸ்தாபிக்க ‘‘என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே’’ என்று அருளினார். எம்பெருமானார் கீதாச்லோகத்தை உதா ஹரித்து ஸ்ரீபாஷ்யகத்யாதிகளிலும் பலப்ரகரணங்களில் ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளைப் பின்பற்றியே நிரூபித் தருளியிருக்கிறார்.

எம்பெருமானை ஆராதிப்பதைக் காட்டிலும், ச்ருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்களை ஆராதிப்பதைக் காட்டிலும், ஸ்ரீபாஷ்யக்ரந்தத்தை இல்லங்களில் மிகுந்த ஆதரத்தோடு படிப்பதாலேயே விரும்பத்தக்கதான இம்மை, மறுமை வாழ்விற்கு அது வழி வகுக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. மற்ற பாஷ்யத்தை விட அதற்கு ஸ்ரீ பாஷ்யம் என்கிற திருநாமம் ஸரஸ்வதி அநுக்ரஹத்தால் ஏற்பட்டது என்று பூர்வாசார்யர்கள் பணிப்பர்.

ஸ்ரீநிகமாந்த மஹா தேசிகன் அருளிய ஹஸ்திகிரி மாஹாத்ம்யத்தில் ப்ரஹ்மஸூத்ர ஸ்ரீபாஷ்யத்தின் நான்கு அத்யாயங்களையும் பாசுரமாக அருளியதை எல்லோரும் அறிவர். உலகில் பண்டைக் காலத்தினின்றே பல மதங்கள் பெருகி வருகின்றன. அவையெல்லாம் ஜீவராசிகளின் உய்வுக்கு வழி தேடுகின்றவைகளேயாம்.

சார்வாகமதமென்பது ஒன்றுண்டு. சாருவாகம் என்கிற சொல் திரிந்து சார்வாகம் என வாயிற்றென்பர். அழகான பேச்சு என்பது பொருள். எல்லோரும் எளிதில் இசையும் பேச்சாகும் அது. அப்படியிருப்பதாலே இது உலகில் பிரயாசையின்றி பரவும். அதனால் அதற்கு லோகாயதம் என்றும் ஒரு பெயருண்டு. இது ஒருவர் உபதேசம் செய்து வர வேண்டியதுமன்று. தானாகவே ஒவ்வொரு ஜீவனும் தெரிந்து கொள்வதேயாகும். இந்த மதத்தில் தேஹமே ஆத்மா, இளமையிற் பெறும் பேறே பரமானந்தம்.

அந்தந்த இந்திரியத்திற்கு உரிய உணவிட்டு உடலுள்ள வரையில் இளமை முதுமைக்குத் தக்கவாறு இன்பம் பெற்றிருப்பதற்கு மேம்பட்ட தொன்றில்லை என்பது இம்மதத்தின் முடிவு. இது பிறவியினின்றே ஏற்பட்ட கொள்கையாம். இதனை நன்கு ஆராய்ந்தால் தன்னலமே பெரிதாகி பிறர் வாழ்க்கையைத் தனக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமளவுக்கு மட்டும் இசைந்து, அதற்குரிய வேளை வரும் போது மோஹம், பகை, பாவம் என்றவற்றில் முனைந்து உலகவாழ்க்கையையே ஒருவாறு கெடுத்து அவனவன் மனநிறைவு பெறுவதாகும்.

உண்மைக்கு மாறாகவும் உலகின் அழிவுக்குமான இம்மதப் போக்கை அறவே ஒழித்து, உடலுக்கு மேல் உயிர் ஒன்று உளதென்று உணர்த்தி அதன் நிலையானதென்று நன்கு தெளிந்து அதன் க்ஷேமத்தை ஆராய்கின்றன மற்ற மதங்கள். பௌத்த ஜைனமதங்களும் அவற்றிற்கும் முன்னாகவே வேதங்களை அடியொற்றி யுக்தி வாதத்தைப் பெரிதாகக் கொண்டு புறப்பட்ட தர்க்கம், ஸாங்க்யம், யோகம் என்றாற் போன்ற வைதிக மதங்களும் வேதத்திற்கு முரண்பாடான யுக்திகளில் நம்பிக்கையற்று வேதத்திற்குப் பொருள் கூறுவதற்கு வேண்டுமளவில் யுக்தியை இசைந்து சுத்த வைதிகமாகவே தோன்றிய மதங்களுக்மெல்லாம் உடல், உள்ளம், உயிர் (ப்ராணன்) என்றாற் போன்ற உணர்ச்சியற்ற அசேதன வஸ்துக்களுக்கு மேலாக ஜீவாத்மாவை நிலை நாட்டுகின்றவையாகும்.
தங்கள் கொள்கைகளை இவ்வாறு நிலை நாட்டு கின்றவர்கள் அவற்றிற்கு ஆதாரங்களான ப்ரமாணங் களைக் கொண்டுதான் அவற்றை நிலைநாட்ட வேண்டும். அந்தப் ப்ரமாணங்களைப் பலர் பலவிதமாகப் பிரிக்கின்றார்கள். ஆயினும் எல்லாம் மூன்று ப்ரமாணங்களிலே அடங்கும். அவையாவன ப்ரத்யக்ஷம், அநுமானம், சொல் என்பவை.

உடலைக் காட்டிலும் உயிர் வேறு: அதாவது ஜீவன் வேறு என்பதற்கு ப்ரத்யக்ஷம் ப்ரமாணமாகலாம். ஆத்மா வேறு என்பதை ப்ரத்யக்ஷம் காட்டும். அதன்மேல் யுக்தியுமுண்டு. உலகில் எல்லா ஜீவர்களும் ஒரே விதமாயிருப்பதில்லை. ஒருவன் பணக்காரன், ஒருவன் ஏழை, சிலர் படித்தவர், சிலர் மூடர் என்றவாறு பல மாறுபட்ட வகைகளே காணப் படுகின்றன. இந்த மாறுபாட்டுக்கு என்ன காரண மென்பதைப்பற்றி எவ்வளவோ ஆராய்ந்து முடிவாக எல்லா மதத்தினரும் கொண்ட கொள்கை என்ன வென்றால் அந்தந்த ஜீவனுக்கு முற்பிறவியிலே நன்மை, தீமைகளின் செயல்களுக்கிணங்க இம்மாறுபாடுகள் என்பதே.

இக்கொள்கை வைதிக மதங்களில் மட்டுமல்ல பௌத்த, ஜைனர்களும் இதனையே கொண்டார்கள். இதனின்று ஜீவாத்மாக்கள் அனாதி காலமாகத் தங்களின் செயல்களுக்குத்தக்க உடல்களைப் பெற்று இன்ப, துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்ன வேண்டி யிருப்பதால் உடல் வேறு ஆத்மா வேறு என்று யுக்தியாலும் தெளியலாம் என்றதாயிற்று. இவ்வளவு தெரிந்தாலும் அந்த ஆத்மாவின் உருவம் யாது சிறிய அளவிலிருக்குமோ, எங்கும் பரவினதொன்றாகுமோ, அறிவென்பதைக் காட்டிலும் வேறுபட்டதா, அறிவேயா, அதற்கு இயற்கையில் சில குணங்கள் உண்டா, இல்லையா, இந்த ஆத்மாக்களுக்கும் தங்களுக்கும் மேம்பட்ட ஒருவனுக்குக் கீழ்ப்பட்டவையா, அல்லது ஒருகால் தன்னிச்சையாக செயல்படக்கூடியதா என்றவாறு பல விஷயங்கள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியதாகும்.

இவ்விஷயங்களிலே ப்ரத்யக்ஷப்ரமாணம் போலே யுக்திகளும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று முடிவுகட்டி சொல்லே ப்ரமாணமென்று ஆன்றோர் அறுதியிட்டனர். இத்தகைய சொற்கள் பௌத்த ஜைனர்களிடமுமிருக்கின்றன. ஆனால் அச்சொற்கள் எப்போது கிளர்ந்தவை. அவற்றைச் சொன்னவர்கள் யார் அதற்கு முன் இருந்தவை யாவை, அச்சொற்களுக்கு இச்சொற்கள் முரணானவையா இல்லையா முரண்படும் சொல்கிறார்களாகில் ஏன் முந்தய சொற்களை விட்டார்கள் நேரில் கண்டு தெளிந்தார்களா தெளிவதற்கு அவர்கள் கொண்ட கருவிகளென்ன யோகமா, தவமா அதற்கு எது மூலம் என்றெல்லாம் விசாரிக்கத் தொடங்கினால் பக்ஷபாதமில்லாமல் பார்த்தால் பௌத்த ஜைனமதங்கள் பிரயாசையின்றி புறக்கணிக்கப்படுமென்பது பெரியோர் களின் பணிப்பு.

ஏனெனில் பெரியோர்கள் ப்ரமாணங்களாகக் கொண்ட சொற்கள் வேதங்களேயாகும். அந்த வேதங்கள் பௌத்த ஜைன காலங்களுக்கு முன்னமே அனாதி காலமாகவே ஆதரிக்கப் பட்டவை. இப்பொழுது தான் வேதம் அனாதி என்ற கொள்கையை ஏன் இசையலாகாது? அனாதி யென்று இசைய மனம் இடம் அளிக்காமற்போனாலும் பௌத்த ஜைனாதிகளின் சொற்களுக்கு வெகுகாலம் முன்னமே தோன்றியவை என்பதை மறுக்க முடியாதே. வேதங்கள் எல்லா விஷயங்களையும் வெகு விரிவாக அறிவிக்கின்றனவே. அப்படியிருக்க அந்த வேதங்களின் போக்கு என்ன என்பதை நன்கு ஆராய முயலாமல் அவற்றைப் புறக்கணித்து இவற்றைக் கொள்வது கூடுமா என்பதை நன்கு ஆராய வேண்டும். ஆகையால் வேதநூல்களே நமக்கு ப்ரமாணமான (சான்றாதாரங்களாக) சொல்லாகும்.

நமக்கு வேதாதந்தவிசாரம் செய்யப் போதுமான அறிவும் திறமையும் கிடையாது என்பதை ஏற்கெனவே தெரிந்து நமக்காக எல்லாம் செய்து உதவின மஹரிஷிகள் பலருண்டு. அவர்களில் சிலர் தத்துவங்களைத் தெளிவ தற்கும் அனுகூலமாகும் படி இதிஹாஸ புராணங்களை இயற்றினர். முழுவேதம் பயின்று வரப் போதுமான சக்தியில்லாத இக்கலிகாலத்திற்கிணங்க வேதங்களைப் பல பாகங்களாகப் பிரித்துச் சில கிளைகள் சிலருக்கு என்று பிரிவிட்டு அவற்றைக்காத்து அவற்றின் பொருள்கள் தெளியப் பல புராணங்களை இயற்றி அவ்வளவோடு நிற்காமல் தத்துவ விஷயத்தில் ஆராய்ச்சி செய்யும் முறையைக் கற்பிக்கவும் ஒருவாறு அதில் தெளிவு பெறவும் வழி செய்ய வேண்டுமென்று கருதி வியாஸரென்ற மஹரிஷியானவர் தாம் முடிவாகக் கொண்ட ஆத்மதத்துவத்தை வேதாந்த விசாரம் செய்து நமக்கு நன்கு தெளிவிக்க ப்ரஹ்மஸூத்ரமும் பண்ணியிருக்கிறார்.

இதுவே த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்றாற் போன்ற பல வேதாந்த மதங்களுக்கும் மூலதாரமாகும். இதற்கு சாரீரகமென்றும் பெயர். சரீரம் என்ற சொல்லால் ஜீவாத்மாவைக் கூறி, அதனை விட வேதத்தால் நிலை நாட்டப்படும் ப்ரஹ்மம் என்று வியாஸர் பல ஸூத்ரங்களிலே தெளிவாகச் சொல்லுகிறாரே அப்படியிருக்க சாரீரகமென்று பெயர் தகுமா என்ன வேண்டா. ஆனந்தமயனான பரமாத்மாவை வேதம் சாரீரன் என்கிறது. ஏனெனில் அண்டங்களெல்லாம் அவனுக்கு சரீரமாதலின் சாரீரக மென்றார்.

இந்த ப்ரஹ்ம ஸூத்ரத்தில் வேதாந்தமென்கிற உபநிஷத்துக்களிலிருந்து பல சொற்றொடர்களை எடுத்து அவற்றின் பொருள் என்ன என்று ஆராயப்பட்டிருக்கிறது. ஸூத்ரங்களில் சொல்லமைப்புக்களையும் பழைய உரை களையும் பார்க்ககும் போது சாந்தோக்யம், ப்ருஹதாரண்யகம் என்கிற உபநிஷத்துக்களிரண்டையும் இவர் பெரும்பான்மை யாக கையாண்டிருப்பதும், தைத்திரீயம், கடம், முண்டகம், கௌஷிதகி, ஐதரேயம், அக்னிரஹஸ்யம், ஈசம் போன்ற மற்ற உபநிஷத்து சொற்றொடர்களையும் ஆராய்ந்திருப்பதும் விளங்கும்.

இந்த ப்ரஹ்மஸூத்ரத்தில் எடுக்கப்படாத உபநிஷத் துக்கள் பலவிருக்கின்றன. அவற்றில் பல தொன்றுதொட்டுப் பெரியோர்கள் ப்ரமாணமாக நூல்களில் கொள்ளப் பட்டவையுமாம். அவ்வாறு காட்டப்படாத உபநிஷத்துக் களில் எல்லோரும் பண்டைய காலத்திலிருந்து கையாண்ட உபநிஷத்துக்களுக்கு முரணாக எவையேனும் இருப்பின் அவற்றை நாம் இசைவது முறையற்றதாகாது. இந்த ப்ரஹ்ம ஸூத்ரத்தின் சொற்களையுற்று நோக்கினால் எந்த மதம் வியாஸ மஹர்ஷி மனத்திலுள்ளதாகுமென்று அந்தந்த மதத்தினர் தெளியவைக்க முயற்சி செய்கின்றனர். இவருடைய ஸூத்திரத்தைப் புறக்கணித்து ஒருவர் மதஸ்தாபனம் செய்ய முன் வந்தால் அவரை யாரும் ஆதரிக்கமாட்டாரென்பது தெளிவு.

பாஷ்யங்களில் எது ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு மிகவும் பொருந்தியிருக்குமென்பதை அவரவர் தங்களுடைய சக்திக்குத் தக்கப்படி பரிசீலனம் செய்து கொள்வர். நமக்கு அது இங்கு விஷயமன்று. விசிஷ்டாத்வைத மதத்தை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கும் ஸ்ரீபாஷ்யமென்கிற ப்ரஹ்ம ஸூத்ரவுரையின் ஸாரமே விஷயம். இந்த பாஷ்யமானது அத்வைத பாஷ்யத்திற்குப் பின்னும், த்வைத பாஷ்யத்திற்கு முன்னுமாகத் தோன்றியதால் த்வைத மதத்தை இது கண்டனம் செய்யாதென்று சிலர் நினைப்பர். அது தவறாகும்.

சங்கராசார்யார் தாமியற்றிய ஸூத்ரபாஷ்யத்திலும், உபநிஷத்திலும், கீதாபாஷ்யத்திலும் பலருடைய உரைகளை தூஷித்துத் தம் மதத்தை ஸ்தாபிக்க முயன்றிருக்கிறார். சிற்சில இடங்களில் வியாஸருடைய ஸூத்ரங்களுக்கு முன்னோர் மொழிந்தற்கிணங்கப் பொருள் கொள்வதே பொருத்தமாகத் தோன்றினாலும் ஸூத்ரங்களுக்கு அவ்வாறு பொருள் கொள்ளதாகாதென்று கூறித் தம் மதத்திற்கு தக்கவாறு பிரயாசப்பட்டு ஸூத்ரார்த்தங்களை மாற்றுகிறார். சில விடத்திலே பூர்வ பக்ஷ ஸித்தாந்த முறையை மாற்றிக் கொண்டு உரை செய்திருக்கிறார். இதெல்லாம் ‘அத2’ என்ற முதற்பதத்தின் பொருளை மாற்றியதைப்போல இந்த்ர ப்ராணாதிகரணம், ஆனந்தமயாதிகரணம், கார்யாதிகரணம் போன்ற பல இடங்களில் சங்கரபாஷ்யத்தை படிப்பவருக்குத் தெளிவாகும்.

பல மஹரிஷிகளோடு சேர்ந்து ஆராய்ந்து அவர்களின் அபிப்ராயத்தையும் பலவிடங்களிலே ப்ரஹ்ம ஸூத்ரத்திலே தெரிவித்துப் பிறகு தம்முடைய கொள்கையைப் பணிக்கும் பாதராயணரென்ற வியாஸ பகவானின் கருத்தை போதாயனர் போன்ற மஹரிஷிகளே நன்றாக காண்பித்திருக்க, அதற்கு மாறாக நாம் ஒரு மதம் தொடங்கக் காரணம் ஒன்றுமில்லை. அத்தகைய மதம் ஆன்றோர்கள் அறுதியிட்டபடியே பிற் காலம் ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் வெளியாயிற்று.

ஸ்ரீமத் நாதமுனிகள் என்ற மஹாயோகி வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லமைமிக்கவர். ‘நியாயதத்த்வம்’ என்ற நூலை இயற்றி புதிய அத்வைத வாதிகளின் விளக்கங்களுக்கு உரிய மறுப்புக்களை சாஸ்த்திரங்களின் அடிப்படையில் தெரிவித்து விசிஷ்டா த்வைதத்தை நிலை நாட்டினார். அவருடைய திருப்பேர னாரான யாமுனமுனிகள் அதனைத் தெளிவதற்குப் பாங்காம் படி ஸித்தித்ரயமென்ற மூன்று க்ரந்தங்களையெழுதி, அனுஷ்டானத்தில் பாஞ்சராத்திற் சொன்ன ஆராதன முறைகளை ஆதரிப்பதற்காக ‘ஆகமப்ரமாண்யம்’ என்ற நூலையும் எழுதி, வெகு அழகாகவும் சுருக்கமாகவும் அமைந்த ‘கீதார்த்தஸங்க்ரஹம்’ என்ற சிறிய நூலினால் பகவத்கீதைக்குப் பொருள்கூறும் வகையில் உபநிஷத் துக்களின் கருத்தை எடுத்துக்காட்டி, பிறவித்துயர் நீங்க ப்ரபத்தியென்னும் பெரியோர்கள் கைக்கொண்ட உபாயத் தைப் பரப்ப ‘ஸ்தோத்ரரத்னம்’ என்ற நூலை ‘சதுச்ச்லோகி’ யுடன் செய்தருளினார். இப்படி மீண்டும் பரவலுறும் இத்தொல்வழியில் த்வைத, அத்வைத வாக்யங்கள் எல்லாம் எப்படி முரண்படாதபடி பொருந்துகின்றன என்பதை நன்கு தெளிவிப்பதே தமது இலக்கு என்றவாறு கருதி ஸ்ரீபாஷ்யகாரர் வேதார்த்தஸங்க்ரஹத்தில் சுருக்கமாவும், ஸ்ரீபாஷ்யாதிகளில் விரிவாகவும் இதனை விளக்கியுள்ளார்.

மோக்ஷத்தில் ஜீவன் ப்ரஹ்மமேயாகிறானென்றால் ப்ரஹ்மத்திற்கு ஸமமாகிறான் என்பதே பொருளாகும். இதனை ‘பரமம் ஸாம்யம்’ என்று வேதத்திலும், ‘மம ஸாதர்ம்யம்’ என்று கீதையிலும் சொல்லியிருப்பது கண்கூடு. இதனை விசிஷ்டாத் வைதிகள் ப்ரகார ஐக்யம் என்பார்கள்.

ஸ்ரீபாஷ்யமென்பது ப்ரஹ்மஸூத்ரத்தின் உரை யென்று முன்னமே குறிப்பிட்டோம். ப்ரஹ்மஸூத்ரம் சாரீரகமீமாம்ஸை யெனப்படும். இது வ்யாஸர் இயற்றிய தர்சன க்ரந்தமாகும். இவரே மஹாபாரதமும் மற்றும் புராணங் களையும் இயற்றியவர். சில ஆங்கில விமர்சகர்கள் வியாஸர் வேறு இவர் வேறு என்று நினைக்கிறார்கள். அது தவறு. வியாஸரென்பது பட்டப்பெயர்.

கலியுகம் பிறப்பதற்கு முன் வேதங்களைப் பலவாகப் பிரித்து விட்டதால் வியாஸர் என்னப்படுவார். இச்செயல் ஒவ்வொரு கலியின் முன்னமும் ஒவ்வொரு ரிஷியினால் செய்யப்படும். இதற்கு முன்னான கலியிலே பராசரர் வியாஸராயிருந்தார். எவரெவர் வியாஸராயிருந்தனர் என்பதை ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலான பல புராணங்களிலே காணலாம். ப்ரம்மஸூத்ரதில் தம் பெயரைக் குறிக்கும் போது, ‘பாதராயண’, என்றே இவர் குறிக்கிறார். ஏனெனில் இதே இவருக்குப் பெயர். க்ருஷ்ணத்வைபாயனர் என்றும் இவரை வழங்குவது உண்டு. பல வியாஸர்கள் உண்டானபடியாலே அப்பெயரை வழங்காமல் இதனையே குறிப்பதாகும். பாதராயணர், க்ருஷ்ணத்வைபாயனர், வியாஸரென்ற பெயர்களால் சொல்லப்படுகின்றவர் ஒருவரேயென்பதை ஸ்கந்த புராணத்தில் காணலாம். இது ஸ்ரீபாஷ்யத்தின் உரையான ச்ருதப்ரகாசிகையில் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது.

இந்த முழுமீமாம்ஸாசாஸ்த்திரத்தில் மொத்தம் அத்யாயங்கள் இருபது (20). 16 அத்யாயங்கள் பூர்வ மீமாம்ஸையாகும். ஆக நம் சாரீரக சாஸ்த்ரத்திற்கு நான்கே அத்யாயங்கள். ஒவ்வோர் அத்யாயத்திற்கும் நான்கு பாதங் களென்ற உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பாதத்திற்கும் பல அதிகரணங்கள் என்கிற பாகங்கள். ஒவ்வொரு விஷயத்தை விசாரிக்கும் பாகத்திற்கு அதிகரணமென்று பெயர். விசாரிக்கிற வாக்கியங்களெல்லாம் ஸூத்ரங்களே. ஒவ்வோர் அதிகரணத் திற்கும் விஷயத்திற்கேற்றவாறு ஸூத்ரம் இருக்கும். சிலவிடத்தில் ஒரே ஸூத்ரம், 2-அல்லது 3 என்றவாறு பலவகையாயிருக்கும். இந்த ஸூத்ரத்தினின்று இந்த ஸூத்ரம் வரையில் ஓர் அதிகரணம் என்று ஸூத்ரகாரர் குறிக்கவில்லை.

ஆகையால் அத்வைதம் போன்ற மதங்களிலே அவரவர் விருப்பப்படி அதிகரணங்களைப் பிரித்து உரைக்கிறார்கள். சிற்சில இடங்களில் ஸூத்ரங்களில் பாடபேதமுண்டு. விசிஷ்டாத்வைதிகள் கொண்ட பாடபேதம் பாஸ்கராத்வைதி முதலானோர் க்ரந்தங்களில் காணப்படுகிறது. தங்களுக்கு ஸூத்ரபாட ஸம்ப்ரதாயம் இப்படியென்று அவரவர்கள் சொல்லுகிறார்கள்.

இங்கே விசாரிக்கப்படுவன வேதாந்த வாக்யங்கள். வேதாந்தத்தில் ஒரு சில கட்டங்களை யெடுத்துக் கொண்டு அந்த பாகத்தில் முக்கியமாக சொல்லப்படுவதென்ன என்று விசாரிக்கிறார். எங்கு விசாரத்திற்கு இடமிருந்ததோ, அதைத்தான் விசாரித்திருக்கிறார். வாதத்தில் வேறொருவர் வேறு பொருளைக் கூறலாமென்று எங்கே தோற்றுமோ, அங்கே அந்தப் பொருள் கொள்ளாமலிருக்க வேண்டியதை பரிந்துரைக்க அதிகரணங் கள் ஏற்பட்டன. எனவே ஒவ்வொரு அதிகரணத்திலும் இதற்கு வேதாந்தமென்கிற உபநிஷத் திலுள்ள சொற்றொடர்கள் விஷயம், இதில் பொருள் விஷயமாக இவ்வாறு ஐயப்பாடு, இங்கே பூர்வபக்ஷி சொல்லுகிறதிவ்வாறு, இதனை மறுத்துச் செய்ய வேண்டிய ஸித்தாந்தம் இது, இந்த விசாரத்திற்கு இது என்று ஐந்து விஷயங்கள் உண்டு. காக்கைக்கு பல் உண்டா? எத்தனை யென்றது போன்ற பயனற்ற விசாரம் செய்யார்.

அதிகரணமென்று நீதிமன்றத்திற்கும் பெயர். அங்கே வாதிப்ரதிவாதிகளுடைய பக்ஷங்களிரண்டையும் அததற்கு ஏற்ற யுக்திகளைக் கொண்டு வாதம் செய்து பொருத்தமற்ற யுக்திகளைக் கழித்து ஏற்றுக்கொள்ளத்தக்க யுக்திகளைக் கொண்டு ஒரு பக்ஷத்தை ஸ்தாபிப்பது நீதிபதியின் செயல். அவ்வாறு வ்யாஸர் இங்கும் இரு பக்ஷங்களுக்கு இடமிருப் பதை ஆராய்ந்து ஒரு தீர்ப்பு ஒவ்வோர் அதிகரணத்திலும் செய்கிறார்.

இங்கே ஒவ்வோர் உபநிஷத்தையும் தனித்தனியே ஒரு முறையில் ஆராய்கிறார் என்பதில்லை. ஒரே உபநிஷத்தில் சிலவாக்யங்கள் ஓரிடத்தில் ஆராயப்படும். பிறகு எங்கோ வேறிடத்தில் அதே உபநிஷத்திலிருக்கும் வேறு பகுதி ஆராயப்படும். வாக்கியங்களின் அடைவை விட்டு விஷயங்களின் அடைவு கையாளப்படுகிறது.

தத்துவ, ஹித, புருஷார்த்தங்களை உபநிஷத்துக்களி னின்று தெளிவிப்பது ப்ரஹ்மஸூத்ரம். தத்துவத்தை முதலில் இரண்டு அத்தியாயங்கள். ஹிதத்தைச் சொல்வது. முன்றாம் அத்தியாயம், புருஷார்த்தம் சொல்லுவது, நான்காம் அத்தியாயமாகும். ப்ரஹ்மமென்ற தத்துவத்தைச் சொல்ல வந்த முதலிரண்டு அத்தியாயங்களில். முதலத்தியாயத்திற்கு ஸமந்வயாத்யாயம் என்று பெயர். வேதாந்த வாக்யங்கள் பலவற்றையெடுத்து இவை ப்ரஹ்மத்தைச் சொல்லவில்லை. ஜீவனையோ அசேதனத்தையோ சொல்வனவே என்று வரும் ஆக்ஷேபங்களையெல்லாம் விலக்கி ப்ரஹ்ம விஷயத்திலே அவ்வாக்யங்களை இணைக்கிறது இந்த அத்தியாயம். இதில் எடுக்கப்பட்ட வாக்யங்கள் பெரும்பாலும் காரண வாக்யங் களேயாம். அதாவது உலகுக்கு காரணமாகத் தத்துவத்தை ஓதுகின்ற வாக்யங்களே.

இரண்டாவது அத்தியாயமானது இப்படி விளக்கப்பட்ட ப்ரஹ்ம தத்துவத்தையும் ஒருவாறு மறுக்கவாம் முயற்சியை முறியடிக்கிறது. ஈச்வரனொருவனை யிசையாதார் பலர் உண்டே ஸாங்க்யமதம் போன்ற பிற மதத்தைத் தழுவி யிருப்பர் தங்கள் மூலபுருஷவாக்யங்களைச் கொண்டும் யுக்திகளைக் கொண்டும் மறுக்க முயன்ற போது அவற்றை மாய்த்து, பிறகு பிற மதங்களே யுக்திக்குப் பொருந்தாதவை யென்று அவற்றையும் மறுத்து, தம் கொள்கையை வியாஸர் உறுதிசெய்கிறார். அதன் மேல் ப்ரஹ்மம் ஸர்வகாரணமென்று தாம் காட்டிய வேதவாக்யங்களுக்கு வேதவாக்யங்களைக் கொண்டே முரண்பாடு காட்ட முன் வருகின்றவர்களுக்கும் மறுமொழியளிக்கிறார். இப்படி 2 அத்தியாயங்களால் ப்ரஹ்மதத்துவம் நிலைநாட்டப்படுகிறது.

மூன்றாம் அத்யாயத்தின் சுருக்கம்:

சாரீரக சாஸ்திரத்தின் முதல் இரண்டு அத்தியாயங் களாலே பரப்ரஹ்மத்தின் தன்மை நிரூபிக்கப்பட்டது. பின் இரண்டு அத்தியாயங்களுள், முதலாவதான மூன்றாம் அத்தியாயத்தினால், அந்த ப்ரஹ்மத்தை அடைவ தற்கான வழிபாடாகிய உபாயமும், இரண்டாவதான நான்காம் அத்தியாயத்தினால் அந்த ப்ரஹ்மத்தை அடைதலாகிற பலமும் (பயனும்) விவரிக்கப்படுகின்றன.
அவற்றில் வழிபாட்டை உபாயமாகக்கொண்ட இந்த மூன்றாம் அத்தியாயத்தின் முதல் இரண்டு பாதங்களிலும் முறையே, அடையத்தக்கதான ப்ரஹ்மத் தைக் காட்டிலும் வேறுபட்ட ஸம்ஸாரி ஜீவனிடத்தில் உள்ள குற்றங்களும், அடையத்தக்கதான ப்ரஹ்மத்தின் குணங்களும், அந்த ப்ரஹ்மத்தை அடைவதற்கான உபாயத்தில் ஜீவன் ஈடுபடுவதற்காகச் சொல்லப் படுகின்றன. புண்ய கர்மங்களின் பலனைப் பெறுவதற் காக, இவ்வுலகிலிருந்து மற்றைய உலகங்களுக்குச் செல்லும் ஜீவனின் குற்றத்தின் குவியல்கள், அப்பலன் களில் பற்றற்ற தன்மை ஏற்படுவதற்காக, மூன்றாம் அத்தியாயத்தில் முதலாவதான இப்பாதத்தில் சொல்லப் படுகின்றது. அதனாலேயே இதற்கு ‘வைராக்யபாதம்’ என்ற பெயர் வழங்குகிறது.

நான்காம் அத்யாயத்தின் சுருக்கம்:

முந்தினதான மூன்றாம் அத்தியாயத்தில் மோக்ஷ ஸாதனமான ப்ரஹ்மவித்யை அதை ஸாதித்துத்தரும் அங்கங் களோடு விசாரிக்கப்பட்டது. இந்த அத்தியாயத்தில் அந்த வித்யாஸ்வரூபத்தைத் தெளிவுற ஆராய்ந்து வித்யையின் பலத்தைப்பற்றி விசாரிக்கப்படுகிறது. இதில் ‘ஆவ்ருத்தி பாத3ம்’ எனப்படும் முதல் பாதத்தில் ‘ப்ரஹ்ம வித்யையானது பலம் கிடைக்கும் வரையில் ஆவ்ருத்தி செய்யப்பட வேண்டும்’ முதலான பல விஷயங்கள் பதினொரு அதிகரணங்களில் ஆராய்ந்து நிர்ணயிக்கப்படுகின்றன.

‘உத்க்ராந்தி பாத3ம்’ எனப்படும் இரண்டாவது பாதத் தில் முக்தியடையும் உபாஸகன் சரீரத்திலிருந்து கிளம்பும் முறை ஆராயப்படுகிறது. ‘க3திபாத3ம்’ எனப்படும் மூன்றாவது பாதத்தில், மூர்த்தந்ய நாடியாலே சரீரத்தை விட்டுக் கிளம்பிய உபாஸகன் ஆதிவாஹிகர்களால் பரமபதத்திற்கு அழைத்துச் செல்லப்படுகையாகிற வித்யாபலம் நிரூபிக்கப் படுகிறது. ‘முக்தி பாத3ம்’ எனப்படும் நாலாவது பாதத்தில் பரப்ரஹ்மத்தை அடைந்த பிறகு முக்தன் பெறும் ஐஶ்வர்ய மாகிற பலன் நிரூபிக்கப்படுகிறது. *

16

ஸ்ரீமத் பகவத்கீதை

காண்டீபனான அர்ஜுனனைக் காரணமாக வைத்துக் கொண்டு, உலகோரிடம் கொண்ட கருணையினால், பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வழங்கிய உபதேசமே புகழ்பெற்ற ‘‘ஸ்ரீமத் பகவத்கீதை’’. ‘‘உபநிஷத்துக்கள் என்ற பசுக் களிடமிருந்து, கோபாலன் என்கிற ஆயன் கறந்த இனிமையான பாலே, இந்த கீதை. ‘‘இதைக் கறக்க, கன்றாக இருந்து உதவியவன் அர்ஜுனன். கீதை என்னும் இனிமையான பாலைப் பருகுபவர்கள் ஞானிகள்’’ என்று புகழப்படுகிறது கீதை.

ஸர்வோபநிஷதோ3 கா3வ:
தோ3க்3தா4 கோ3பாலநந்த3ந: |
பார்த்தோ2 வத்ஸ: ஸுதீ4ர் போ4க்தா
து3க்3த4ம் கீ3தாம்ருதம் மஹத் ||

(எல்லா உபநிஷத்துக்களுமே பசுக்களாகும். அவற்றைக் கறப்பவன் ஆய்ப்பிள்ளையான கண்ணன். அர்ஜுனன் கன்றாயிருப்பவன். ஞானியே அப்பாலைப் பருகுமவன். மிகச் சிறந்த கீதையாகிற அமுதமே பாலாகும்.).

பெருமை மிக்க மஹாபாரதம் என்னும் கரும்பு, சக்கையாகப் போகும்படி அதன் இனிமை மிக்க கருப்பஞ்சாறாக உள்ளது ஸ்ரீமத் பகவத்கீதை.

ஸ்ரீமத் பகவத்கீதை, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கும் அர்ஜுனனுக்கும் நடைபெறும் உரையாடல் பாணியில் உள்ளது. மஹாபாரத யுத்த நிகழ்ச்சிகளை ஓர் திவ்யமான பார்வை மூலம் கண்டு, அதை அந்தகனான திருதராஷ்ட் ரனுக்கு விளக்கியவர் சஞ்சயன். திருதராஷ்ட்ரனுக்கும் சஞ்சயனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல், மஹாபாரதத்தில் பல இடங்களில் காணப்படுகிறது.

பதினெட்டு அத்யாயங்களைக் கொண்ட ஸ்ரீமத் பகவத்கீதையில் 700 ச்லோகங்கள் உள்ளன. ஆறு ஆறு அத்யாயங்களாக, மூன்று ஷட்கங்கள் என்று பிரித்துக் கூறுவதும் உண்டு. இந்த பதினெட்டு அத்யாயங்களின் பெயர்களும் அவற்றின் பொருளும் கீழ்க்காணுமாறு:-

முதல் அத்யாயம்:- அர்ஜுன விஷாத யோகம், அர்ஜுனனின் மனச்சோர்வு (46 ச்லோகங்கள்)

இரண்டாம் அத்யாயம்:- ஸாங்க்யயோகம்:- ஆத்மாவின் அமரத்வம்/ அழியாத தன்மை (72 ச்லோகங்கள்)

மூன்றாம் அத்யாயம்:- கர்ம யோகம்:- மனிதனின் கடமைகள் (43 ச்லோகங்கள்)

நான்காம் அத்யாயம்:- ஞான(விபாக)யோகம் (42 ச்லோகங்கள்)

ஐந்தாம் அத்யாயம்:- (கர்ம) ஸந்யாஸ யோகம். (29 ச்லோகங்கள்)

ஆறாம் அத்யாயம்:- அத்4யாத்மயோகம் (47 ச்லோகங்கள்)

எழாம் அத்யாயம்:- விஜ்ஞானயோகம்-- (30 ச்லோகங்கள்)

எட்டாம் அத்யாயம்:- அப்யாஸயோகம் (28 ச்லோகங்கள்)

ஒன்பதாம் அத்யாயம்:- ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் (34 ச்லோகங்கள்)

பத்தாம் அத்யாயம்:- விபூ4தியோகம் (42 ச்லோகங்கள்)

பதினோறாம் அத்யாயம்:-விசுவரூபதர்சனம் (55 ச்லோகங்கள்)

பன்னிரண்டாம் அத்யாயம்:- பக்தியோகம் (20 ச்லோகங்கள்)

பதிமூன்றாம் அத்யாயம்:- க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாகயோகம். (34 ச்லோகங்கள்)

பதினான்காம் அத்யாயம்:- குணத்ரய விபாகயோகம் (27 ச்லோகங்கள்)

பதினைந்தாம் அத்யாயம்:- புருஷோத்தமயோகம் (20 ச்லோகங்கள்)

பதினாறாம் அத்யாயம்:- தெய்வாசுரஸம்பத் விபாக யோகம் (24 ச்லோகங்கள்)

பதினேழாம் அத்யாயம்:- சிரத்தாத்ரய விபாகயோகம் (28 ச்லோகங்கள்)

பதினெட்டாம் அத்யாயம்:- மோக்ஷோபதேச யோகம் (78 ச்லோகங்கள்).

  பிறப்பு, இறப்பு என்று மாறி மாறி வரும் இந்த சம்சாரச் சுழலிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்கள், மோக்ஷ சாதனங்கள் எனப்படுகின்றன. கீதையில் விளக்கப்பட்டி ருக்கும் முக்கியமான மோக்ஷ சாதனங்கள் நான்கு. அவை, கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் மற்றும் ப்ரபத்தி அல்லது சரணாகதி. இவற்றைத்தவிர, புருஷோத்தம வித்யை, அவதார ரஹஸ்யங்கள் போன்ற மோக்ஷ சாதனங்கள் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளன.

1. கர்மயோகம்:- தன்னுடைய கடமைகளை அவற்றின் பலனில் பற்றற்று செய்வது, ஒருவரை சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்கும். பற்றுடன் கர்மத்தை ஆற்றுவது, மீண்டும் மீண்டும் பந்தத்தை ஏற்படுத்தும். பற்றற்று கர்மத்தைச் செய்யச்செய்ய கர்மத்தின் பளு குறைகிறது. கர்மயோகத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக பேசப்படுபவர், ஜனகமஹாராஜர்.

2. ஞானயோகம்:- பந்தத்தை ஏற்படுத்தும் கர்மத்தில் ஈடுபடாமல், எல்லாவித பந்தத்தில் இருந்து விலகி, தனிமையான இடத்தில் இருந்து புலன்களைக் கட்டுப்படுத்தி, ஒருமனதாக ப்ரஹ்மத்தை த்யானித்து, அதை அடைவதே ஞானயோகம் காட்டும் வழி. இதற்கு உதாரணமாக கூறப்படுபவர் ஜடபரதர்.

3. பக்தியோகம்:- இடைவிடாமல் எண்ணெய் ஒழுக்குபோல் (தைலதாரை) இறைவனை சிந்தித்துக் கொண்டிருப்பது பக்தியோகம். காணுமிடமெல்லாம் இறைவனைக் கண்டு, அவன் சிந்தனையில் ஈடுபட்டு மற்ற விஷயங்களில் பற்றற்று இருப்பது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பக்த ப்ரஹலாதன். அம்பரீஷன் போன்றவர்கள் பக்தி யோகத்தால் முக்தி பெற்றவர்களே.

4. ப்ரபத்தி அல்லது சரணாகதி:- கண்ணன் முக்தி மார்க்கங்கள் எல்லாவற்றையும் விளக்கி எடுத்துரைத்த பின்பும் அர்ஜுனனின் குழப்பம் நீங்கவில்லை. இதில் எதைப்பின் பற்றுவது என்று தடுமாறி நிற்க, அச்சமயம் கண்ணன். ‘‘அர்ஜுனா! கலங்க வேண்டாம். எல்லா மோக்ஷ தர்மங்களையும் கைவிட்டுவிட்டு என்னையே சரணாகப் பற்றுவாயாக. நான் உன்னுடைய எல்லா பாவங்களையும் போக்கி முக்தியடைவிக்கிறேன்’’ என்று சத்யம் செய்தான். பகவத் கீதையின் உயிராகக் கொள்ளப்படுவது இந்த ச்லோகம் தான். 18ஆவது அத்யாயம், 66ஆவது ச்லோகம். இது சரமச்லோகம் எனப்படுகிறது. முக்திக்கு இறுதியான வழியாக பகவானின் வாக்கை வெளியிடுவதால், இது சரமச்லோகம் என்ற பெருமையைப் பெறுகிறது.

ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச: ||

அ) சரம ச்லோகத்தின் சுருக்கமான பொருள்:-

‘ஒரு துன்பத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற முன்வருப வர்களுக்கு இரண்டு குணங்கள் மிகவும் அவசியம். அவை, நாம் நெருங்கி நம் துன்பத்தை சொல்லக்கூடிய அளவிற்கு எளிமையுடன் இருப்பது மற்றும் நம் துன்பம், தீர்ப்பதற்கு எத்தனை கடினமானதாக இருந்தாலும், அதைத் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்திருப்பது. சாதாரணமாக நாம் உலகில் மேற் கொள்ளும் இடர்களை தீர்ப்பவர்களுக்கே இந்த இரண்டு பண்புகள் இருந்தே ஆகவேண்டும்.

  இவ்வாறிருக்க ஒர் ஜீவாத்மா எதிர்கொள்ளும் மிகப் பெரிய துன்பமான சம்சார சுழலிருந்து அவனை விடுவிக்க வல்லவன் மிகப்பெரியவனாகவும், மிக சுலபனாகவும், சர்வ வல்லமை படைத்தவனாகவும் இருக்க வேண்டும். இப்படிப் பட்டவன் தான் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன். இவன் ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்து, ‘‘நான் உங்களை சம்சார சுழலிருந்து காப்பாற்றுகிறேன்’’ என்று அர்ஜுனனைக் காரணமாக வைத்துக் கொண்டு, ஜீவாத்மாக்களாகிய நம் அனைவருக்கும் உறுதியளிக்கிறான்.

இதில், ‘‘ஸர்வ த4ர்மாந் பரித்யஜ்ய’’ என்பதால் ‘‘நீ, மோக்ஷ சாதனங்களாக இருக்கக்கூடிய அனைத்து தர்மங் களையும் அறவே விட்டு விடு, விட்டு விட்டோம் என்கிற அச்சத்தையும் விட்டுவிடு’’ என்கிறான்.

‘‘மாமேகம் ஶரணம் வ்ரஜ’’ என்பதால், ‘என் ஒருவனையே புகலிடமாகக் கொண்டிரு’’ என்கிறான்.

‘‘மாம்’’ என்பதால், பற்றுவதற்கு மிகவும் எளியவனாக, கண்ணனாக, பார்த்தனுக்குத் தேரோட்டியாக, தூசு படிந்த திருகுழல்களுடன், கையில் குதிரை ஓட்டும் உழவு கோலை வைத்திருக்கும் தன்னை - தன் ‘சௌலப்யத்தை’ காட்டித்தருகிறான்.

அடுத்த வரியில், ‘‘அஹம்’’ என்பதால், தன் பரத்வத்தை, தன் மேலான தன்மையை, பரமாத்மாவாக இருப்பதை, எல்லா பாபங்களையும் களையக்கூடிய சமர்த்தனாக இருப்பதை, எல்லோருக்கும் ஸ்வாமியாக இருக்கும் பண்பைக் காட்டித் தருகிறான். ‘‘அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி’’ என்பதால், ‘‘இப்படிப் பட்ட அறப்பெரியவனான நான் உன் பாபங்கள் அனைத்தையும் வேருடன் போக்கி, முக்தியை அளிக்கக் கடவேன்’’ என்கிறான்.

‘‘மா ஶுச:’’ என்பதால், ‘இனி நீ எந்த வகையிலும் வருந்த வேண்டாம்; கவலையற்று இரு’’ என்று உறுதியளிக்கிறான்,

மஹாபாரதத்தின் சாரம் கீதை என்றால், அதன் சாரமாக இருப்பது இந்த சரம ச்லோகம். இந்த சரம ச்லோகத்தில் சுவையாக இருப்பது. ‘‘மா ஶுச:’’ எனப்படும் இந்த ஒரு சொல்லேயாகும்.

‘‘வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ?’’ (திருவாய்மொழி 7-5-9) என்று அருளிச் செய்கிறார், ஸ்வாமி நம்மாழ்வார். இப்பாசுரத்தில் ‘‘வார்த்தை’ என்று மாயவனின் திருவாக்காக, ‘‘மா ஶுச:’’ என்பதைக் குறிப்பிடுகிறார். ‘‘அவனை ‘‘சோகிக்காதே’’ என்று கூறி அதற்கு வழியும் விதித்தபிறகு, வேறு ஒருவரை அண்டி ஆதரவு கேட்பதற்கு என்ன அவசியம்?’’ என்கிறார், ஆழ்வார்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் கடைசி ச்லோகம் 18-78. இது சஞ்சயன் வார்த்தையாக உள்ளது.

யத்ர யோகே3ஶ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ2 த4நுர்த4ர: |
தத்ர ஸ்ரீர்விஜயோ பூ4திர்த்4ருவா நீதிர்மதிர்மம ||

  ‘எவ்விடத்தில் யோகீச்வரனான க்ருஷ்ணனும், வில்லேந்தியவனான பார்த்தனும் சேர்ந்து உள்ளார்களோ, அவ்விடத்திலே, செல்வம், வெற்றி, நிலைத்த நீதி, ஆகிய இவையெல்லாம் சேர்ந்து இருக்கும் என்பது என் திடமான முடிவு’ என்கிறார் சஞ்சயன்.

சஞ்சயனின் இந்த பேச்சோடு நிறைவுபெறுகிறது ஸ்ரீமத்பகவத்கீதை.

ஆ) ஸ்ரீமத் பகவத்கீதையும், திருவாய்மொழியும்

  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா திருவாய்மலர்ந்தருளிய ஸ்ரீமத் பகவத்கீதை ‘‘கீதோபநிஷத்’’ என்று ஓர் உபநிஷத்தாகவே கொள்ளப்படுகிறது. ராமாநுஜர், ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கு தாம் ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்கையில், பல இடங்களில், ஸூத்ரங்களின் ஆழ்பொருளை விளக்குவதற்கு, ஸ்ரீமத் பகவத்கீதை ச்லோகங்களைக் கையாண்டிருக்கிறார். பாஷ்யகாரர் ஸூத்ர வாக்கியங்களுக்கு பொருள் எடுத்துரைக்கையில் திருவாய்மொழி பாசுரங்களின் பொருளை திருவுள்ளத்தில் கொண்டு விளக்கினார் என்பது ஆசார்ய ஹ்ருதயம் 65ஆவது ஸூத்ரத்தால் அறிகிறோம்.

‘‘பாஷ்யகாரர் இதுகொண்டு சூத்ரவாக்யங்கள் ஒருங்க விடுவர்’’.

இவ்வாறு ராமாநுஜர், ஸ்ரீபாஷ்யத்தை அருளிச் செய்கையில், ப்ரமாணங்களாகக் கொண்ட, ஸ்ரீமத் பகவத்கீதை மற்றும் திருவாய்மொழி ஆகியவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமையைக் காணலாம்.

‘‘நீர் பால் நெய்யமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமா போலே பரப4க்த்யாதி3மய ஜ்ஞாநாம்ருதாப்3தி4 நிமிகிற வாய்கரைமிடைந்து மொழிபட்டு அவாவிலந்தாதியென்று பேர்பெற்றது’’ - (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 188).

ஆசார்ய ஹ்ருதயம் 188ஆவது ஸூத்திரத்தில், திருவாய்மொழி அவதரித்த முறை அருளிச் செய்யப்படுகிறது.

ஓர் ஏரியில் நீர் நிரம்பினால், அது உடைப்பெடுத்து, நீர் வெள்ளமாகப் பெருகி, வெளியே ப்ரவாகமாக ஓடுவது இயற்கை. இப்படி நிரம்பிய ஓர் ஏரியாக வர்ணிக்கப்படுகிறார், நம்மாழ்வார். அவர், நீரால் நிரம்பிய ஏரி அல்ல; மாறாக மனதில் ஞானம், பரபக்தி, பரஜ்ஞானம், மற்றும் பரமபக்தி ஆகியவை நிரம்பிய ஓர் ஏரி! இவற்றை உள்ளவாறே கூறாமல், அழகான உவமைகளுடன் விளக்கப்படுகிறது.

ஞானம் நீராகவும், பரபக்தி பாலாகவும், பரஞானம் நெய்யாகவும், பரமபக்தி அமுதமாகவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளன. நீர், பால், நெய், அமுதம் ஆகியவற்றால் நிரம்பிய ஓர் ஏரி உடைப்பெடுத்து வெள்ளம் பெருகுமா போலே, ஆழ்வாருக்கு எம்பெருமான், ‘‘மயர்வற மதிநலம் அருளினன்’’ என்று, ஞானத்தை வழங்க, அதன் காரணமாக பக்தி உண்டாகி, அது பரபக்தியாகக் கனிந்து, பரபக்தியானது பரஞானமாகி, பரஞானமானது பரமபக்தியாய் முதிர்ந்து, நிறைந்தது ஆழ்வார் மனதில். இது உள் தங்காமல், பெருக்கெடுத்து, ‘திருவாய்மொழி’ என்னும் திவ்யப் பிரபந்தமாய் ஆழ்வார் திருவாக்கில் வெளிப்பட்டது என்று வர்ணிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட திருவாய்மொழி பகவத்கீதைக்கு ஸமமாகவும் விளங்குகிறது என்பதை ஆசார்ய ஹ்ருதய நூற்பாக்கள் கொண்டு இனி விளக்கம் கொள்வோம்.

‘‘மனம்செய் எல்லையில் ஞானவின்பத்தை நின் மலமாக வைத்தவர் ஞானப்பிரானை ஞானத்து வைம்மி னென்றவிது-தத்வ விவேக நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ ஸௌலப்4ய ஸாம்யாஹங்காரேந்த்3ரியதோ3ஷ ப2ல மந: ப்ராதா4ந்ய கரணநியமந ஸுக்ருதிபே4த3 தே3வா ஸுரவிபா4க3 விபூ4தியோக3 விஶ்வரூப த3ர்ஶந ஸாங்க3ப4க்தி ப்ரபத்தி த்3வை வித்4யாதி3களாலே அன்றோதிய கீ3தாஸம மென்னும்’’ - (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 189)

1. தத்வ விவேகம்:- ஜீவர்களுக்கும் பரமாத்மா விற்கும் இடையிலுள்ள பேதம், ஜீவர்களுக்குள்ளே ஒருவர்க் கொருவர் இடையே உள்ள பேதம், சரீரத்தைக் காட்டிலும் ஜீவாத்மா வேறுபட்டிருக்கும் தன்மை, இவற்றைப் பகுத் தறியும் அறிவே தத்வ விவேகம், எனப்படுகிறது.

கீதையில் தத்வ விவேகம்:- ‘நத்வேவாஹம்’ (2-12) மற்றும் ‘‘தே3ஹிநோ(அ)ஸ்மிந்யதா2’’ (2-13) ஆகிய ச்லோகங் களால் விளக்கப்படுகிறது.

திருவாய்மொழியில் தத்வ விவேகம்:- ‘‘அடியேன் உள்ளான்’’ (திருவாய்.8-8-2) என்னும் பாசுரத்தில், ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையே உள்ள வேறுபாடும், ‘‘சென்று சென்று பரம்பரமாய்’’ (திருவாய். 8-8-5) என்னும் பாசுரத்தில், ஜீவாத்மாவிற்கும் அது வசிக்கும் இடமாகிய உடலுக்கும் இடையே உள்ள வேறுபாடு விளக்கப்படுகிறது.

2. நித்யத்வம், அநித்யத்வம்:- போர் செய்ய மறுத்த பார்த்தனுக்கு, எது நிலையானது, எது நிலையற்றது என்பதை கண்ணன் விளக்கினான்.

கீதை:- ‘‘அந்தவந்த இமே தே3ஹா’’ (ப.கீ.2-18) என்பதில், உடலின் அழியும் தன்மையையும், ‘‘ந ஜாயதே ம்ரியதே வா’’ (ப.கீ.2-20) என்னும் ச்லோகத்தில், ஆத்மாவின் பிறப்பற்ற, அழிவற்ற, நித்யமான தன்மையையும், விளக்குகிறான், பரமாத்மா.

திருவாய்மொழி:- ‘‘மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் (திருவாய்.1-2-2) என்பதில், உடம்பின் அழியக்கூடிய தன்மையையும், ‘‘உள்ளதும் இல்லதும்’’ (திருவாய்.1-2-8) என்பதில், ஜீவனின் நிலையான தன்மையும் உடலின் நிலையற்ற தன்மையும் விளக்கப் பட்டன.

3. நியந்த்ருத்வம்:- இந்த அண்டத்திலுள்ள எல்லா உயிருள்ள பொருள், மற்றும் உயிரல் பொருள்களை ஊடுருவி உள்நின்று, எல்லாவற்றையும், எக்காலத்திலும் கட்டுப்படுத்தி, நியமனம் செய்பவன், பரமாத்மா.

கீதை:- ‘‘ஸர்வஸ்ய சாஹம்’’ (ப.கீ.15-15) தான் எல்லாப்பொருள்களின் உள்ளிருப்பதையும். ‘‘ஈஶ்வர: ஸர்வ பூதா4நாம்’’ (ப.கீ.18-61) என்னும் ச்லோகத்தில், தன்னால் உண்டாக்கப்பட்ட மூலப்ரக்ருதியால், ஆக்கப்பட்டிருக்கும் உடலில் உள்ள எல்லா உயிர்களையும் நியமித்து இயக்கும் சர்வேஶ்வரனாக தான் இருப்பதைக் கூறுகிறான்.

திருவாய்மொழி:- ‘‘உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன்’’ (திருவாய்.1-1-7) என்பதால், பகவான் எல்லா இடத்திலும் ஊடுருவியிருப்பதையும், ‘‘நின்றனர், இருந்தனர், கிடந்தனர், திரிந்தனர்’’ (திருவாய்.1-1-10) என்னும் பாசுரத்தால், ஜீவர்களின் இயக்கத்தையும் இயக்கமற்ற நிலையையும் கட்டுப்படுத்தி நியமிப்பவன் பரமாத்மாவே என்பதை அருளிச் செய்கிறார் ஆழ்வார்.

4. சௌலப்யம்:- எம்பெருமானுடைய கல்யாண குணங் களில் ஒன்று, நெருங்குவதற்கு சுலபனாக இருக்கும் சௌலப்யம் என்னும் குணம்.

கீதை:- தன் பக்தர்களுக்கு, தான் அடைவதற்கு எளியனாக இருப்பதை, ‘‘தஸ்யாஹம் ஸுலப4:’’ (ப.கீ.8-14) என்னும் ச்லோகத்திலும், ‘‘பரித்ராணாய ஸாதூ4நாம்’’ (ப.கீ. 4-8) என்னும் ச்லோகத்தில், தான் துஷ்டர்களை அழிக்க அவதாரம் செய்தபோதிலும், சாதுக்களைக் காப்பதும், அவர்கள் பார்வைக்கு இலக்காவதே முக்கியமான நோக்கம் என்பதைக் கூறுகிறான்.

திருவாய்மொழி:- நம்மாழ்வார், இந்த சௌலப்யத்தை, ‘‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’’ (திருவாய். 1-3-1) என்றும், ‘‘எளிவரும் இயல்வினன் நிலவரம்பில பல பிறப்பாய்’’ (திருவாய். 1-3-2) என்றும் அருளிச் செய்துள்ளார்.

5. ஸாம்யம்:- தான் எல்லா உயிர்களிடத்திலும் சமமான அன்பு கொண்டிருப்பதையும், தனக்கு நண்பர், பகைவன் என்பவர்கள் இல்லை என்பதையும், ‘‘ஸமோ(அ)ஹம் ஸர்வ பூ4தேஷு’’(ப.கீ.9-29) என்னும் ச்லோகத்தில் காட்டித் தருகிறான்.

திருவாய்மொழி:- இதே கருத்தை ஆழ்வார், தம்முடைய ‘‘பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்’’ (திருவாய்.1-2-6) என்னும் பாசுரத்தில் காட்டித்தருகிறார்.

6. அஹங்கார தோஷம்:- ப்ரக்ருதியின் குணங்களான, ரஜஸ், தமஸ் மற்றும் ஸத்வ குணங்களால் உந்தப்பட்டு செய்யும் காரியங்களை ஜீவனானவன், அஹங்காரத்தால், ‘தான் செய்வதாக’ நினைக்கிறான்.

கீதை:- ‘‘அஹங்காரவிமூடா4த்மா கர்தா(அ)ஹமிதி மந்யதே’’ (ப.கீ. 3-27) என்கிறான் கண்ணன்.

திருவாய்மொழி:- இப்படி, ‘‘நான் செய்கிறேன்’’ என்னும் அஹங்காரமே ஸம்சார பந்தத்திற்கும், மீண்டும் பிறப்பதற்கும் காரணம் என்பதைக் கூறி, ‘‘நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து’’ (திருவாய்.1-2-3) என்று பற்றை வேரருக்கச் சொல்கிறார் ஆழ்வார்.

7. இந்த்ரிய பலம்:- இந்திரியங்களை வெல்ல வேண்டும் என்று எண்ணும் ஒருவனை கலங்கச் செய்வன, வலிமையுடன் இழுத்துச் செல்லும் இந்த்ரியங்கள். இதை கண்ணனும், ஆழ்வாரும் முறையே இவ்வாறு வர்ணிக்கிறார்கள்:-

கீதை:- ‘‘இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:’’ (ப.கீ.2-60)

திருவாய்மொழி:- ‘‘விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன்’’ (திருவாய்.7-1-6). இப்படி தறிகெட்டுத் திரியும் புலன்களால், அலைபாயும் மனதை, முயற்சியால், பயிற்சியால் அடக்குவதையும் இருவரும் உபதேசித்தார்கள்.

கீதை:- ‘‘அப்4யாஸேந து கௌந்தேய வைராக்3யேண ச க்ருஹ்யதே’’ (ப.கீ.6-35)

திருவாய்மொழி:- ‘‘மனத்தை வலித்து’’ (திருவாய்.5-1-4) என்று மனதைக் கட்டுப்பத்துதலை வலியுறுத்துகிறார், ஆழ்வார்.

8. கரண நியமனம்:- பல விஷயங்களை அநுபவிக்க முயலும் இந்த்ரியங்களை கட்டுப்படுத்தி, அதனால் அலை பாயும் மனதைத் தன்னிடம் நிலைநிறுத்துவதன் மூலம், புத்தி ஒரே நிலையில் நிற்கிறது என்று உபதேசிக்கிறான் கண்ணன்.

கீதை:- ‘‘தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:’’ (ப.கீ.2-61) என்று மனத்தைக் கட்டுப்படுத்தி, தன்னை த்யானிக்கச் சொல்கிறான் கண்ணன்.

திருவாய்மொழி:- ‘‘உள்ளம் உரை செயல் உள்ள இம்மூன்றை யும் உள்ளிக் கெடுத்து’’ (திருவாய்.1-2-8) என்று கரணங் களை அடக்குவதைப் பேசுகிறார் ஆழ்வார்.

9. ஸுக்ருதிபேதம்:- தன்னை வணங்கும் நால்வராகிய, ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிஜ்ஞாசு, ஞானி ஆகியோர் குறித்துப் பேசி, நல்வினையை உடைய இந்த நான்கு வகைப் பட்டவர்களிடையே உள்ள பேதத்தைக் குறித்துப் பேசுகிறான் கண்ணன்.

கீதை:- ‘‘சதுர்விதா4 ப4ஜந்தே மாம்’’ (ப.கீ.7-16) என்னும் கீதை ச்லோகம்.

திருவாய்மொழி:- ‘‘பெருநாடுகாண’’ (திருவாய்.4-1-1) என்பதால், ஆர்த்தனையும், ‘‘இறுகல் இறப்பென்றும்’’ (திருவாய்.4-1-10) என்பதால் கைவல்யார்த்தியையும், ‘‘குணங்கொள் நிறை புகழ் மன்னர்’’ (திருவாய்.4-1-8) என்பதால் அர்த்தார்த்தியையும், ‘‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மின்’’ (திருவாய்.4-1-1) என்பதால் பகவானாலே விரும்பும் ஞானியையும் அருளிச் செய்கிறார், ஆழ்வார்.

10. தேவ அஸுர விபாகம்:- தெய்வம் மற்றும் அஸுரப் பிறவிகளை வேறுபடுத்திக்காட்டி, தெய்வப்பிறவி தன்னை அடைய வழிவகுக்கும் என்றும், அசுரப்பிறவி, கீழான கதியை அடைவிக்கும் என்றும் இந்த இருவகைப் பிறவிகளுக் கிடையே உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறான் கண்ணன்.

கீதை:- ‘‘தை3வீ ஸம்பத்3விமோக்ஷாய’’ என்னும் கீதா ச்லோகம். (ப.கீ.16-5)

திருவாய்மொழி:- ‘‘அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்’’ (திருவாய்.5-2-5) என்றும், ‘‘நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர்’’ (திருவாய்.10-7-5) என்றும் இந்த வேறுபாட்டைக் காட்டித் தருகிறார் ஆழ்வார்.

11. விபூதியோகம்:- இந்த அண்டம் முழுவதும் தன் செல்வம், என்பதை தன் விச்வரூபத்தின் வழியாக அர்ஜுனனுக்குக் காட்டித் தருகிறான் கண்ணன்.

கீதை:- ‘‘ஹந்த தே கத2யிஷ்யாமி விபூ4தீராத்மநஶ்ஶுபா4’’ (ப.கீ.10-19), ‘‘ஆதி3த்யாநாமஹம் விஷ்ணுர்’’ (ப.கீ. 10-21)

திருவாய்மொழி:- ‘‘புகழும் நல்லொருவன் என்கோ’’ (திருவாய்.3-4-1) ‘‘நல்குரவும் செல்வும்’’ (திருவாய்.6-3-1) மற்றும் ‘‘மாயா வாமனனே’’ (திருவாய்.7-8-1) என்னும் திருவாய்மொழி பாசுரங்களில் எம்பெருமானுடைய விபூதி யோகத்தைச் சொல்கிறார் ஆழ்வார்.

12. விச்வரூபதரிசனம்:- அண்டமே உருவான எம்பெருமான் திருமேனியில், இந்த அண்டத்தில் உள்ள எல்லா உயிருள்ள, உயிரற்ற பொருள்களை தான் தரிசித்ததை அர்ஜுனன் கூறுகிறான்.

கீதை:- ‘‘பஶ்யாமி தே3வாம்ஸ்தவ’’ என்னும் ச்லோகம் (ப.கீ.11-15)

திருவாய்மொழி:- ‘‘நீராய்நிலனாய், தீயாய், காலாய் நெடுவானாய், சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய்’’ (திருவாய்.6-9-1) என்னும் பாசுரத்தில் விச்வரூபதரிசனத்தைச் சொல்லுகிறார்.

13. ஸாங்க பக்தி:- அங்கத்தோடு கூடிய பக்தியை கீதையில் உபதேசிக்கிறான் கண்ணன்.

கீதை:- ‘‘மந்மநா ப4வ மத்3ப4க்தோ மத்3யாஜீ’’ (ப.கீ.9-34) என்னும் ச்லோகம்

திருவாய்மொழி:- வணக்குடைத் தவநெறி வழி நின்று, ‘‘புற நெறி களைகட்டு உணக்குமின் பசை அற’’ (திருவாய்.1-3-5) என்றும், ‘‘மேவித்தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை நாவில்கொண்டு அச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே’’ (திருவாய்.5-2-9) என்றும், ‘‘மாலை நண்ணித் தொழுதெழுமினோவினைகெட* காலைமாலை கமல மலரிட்டுநீர்’’ (திருவாய்.9-10-1) என்றும், அங்கத்தோடு கூடிய பக்தியைச் சொல்கிறார் ஆழ்வார்.

14. ப்ரபத்தி த்வைவித்யம்:- ‘ப்ரபத்தி இரண்டு வகைப் படும். அவை: பக்திக்கு அங்கமாக செய்யப்படும் அங்க ப்ரபத்தி, மற்றும் ஸ்வதந்த்ர ப்ரபத்தி. இவை கீதையில் கண்ணனால் சொல்லப்பட்டுள்ளது.

கீதை:- ‘‘தமேவ ஶரணம் க3ச்ச2’’ (ப.கீ.18-62)இல் அங்கப்ரபத்தியையும், ‘‘ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ’’ (ப.கீ. 18-66)இல் எல்லா மோக்ஷ தர்மங் களையும் கைவிட்டுவிட்டு அவனையே சரணடையச் சொல்லும் ஸ்வதந்த்ர ப்ரபத்தியும் சொல்லப்பட்டது.

திருவாய்மொழி:- ‘‘அவனுடைய உணர்வு கொண்டு உணர்ந்தே’’ (திருவாய்.1-3-5) என்பதில், அங்க ப்ரபத்தியை யும், ‘‘மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்’’ (திருவாய். 9-1-7) மற்றும், ‘‘சரணமாகும் தன் தாள் அடைந்தார்க் கெல்லாம்’’ (திருவாய்.9-10-5) பாசுரங்களில் ஸ்வதந்த்ர ப்ரபத்தியையும் காட்டித்தருகிறார் ஆழ்வார்

15. அவதார ரஹஸ்ய வைபவம்:- தன்னுடைய அவதார ரஹஸ்யங்களை உள்ளபடி உணர்ந்த ஒருவன், மீண்டும் பிறப்பதில்லை. என்னையே அடைகிறான் என்கிறான் கண்ணன்.

கீதை:- ‘‘ஜந்ம கர்ம ச மே தி3வ்யம்’’ (ப.கீ.4-9) என்று தொடங்கும் ச்லோகம்.

திருவாய்மொழி:- ‘‘இவை பத்தும் வல்லார், அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’’ (திருவாய்.1-3-11) என்று இதே உண்மையை அருளிச் செய்கிறார் ஆழ்வார்.

16. ஆராதனைக்கு எளியவன்:- கண்ணன், தன் பக்தன் அன்போடு ஸமர்ப்பிக்கும் இலையோ, காயோ, பூவோ, தண்ணீரோ, எதுவானாலும் ஏற்றுக் கொள்வதாக திருவாய் மலர்ந்தருளுகிறான்.

கீதை:- ‘‘பத்ரம் புஷ்பம் ப2லம் தோயம்’’ என்னும் (ப.கீ.9-26)ஆவது ச்லோகம்.

திருவாய்மொழி:- ‘‘பிரிவகையின்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகைபூவே’’ (திருவாய்.1-6-1) என்று எம்பெருமான் ஆராதனைக்கு எளியவன் என்பதை அருளிச் செய்கிறார்.

‘‘மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்தவர்’’ (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 189) என்பதால், ஆழ்வார், பிறர்க்கு உபதேசம் செய்வதற்கு வேண்டிய தகுதிகள் நிறைந்தவர் என்பது காட்டித் தரப்பட்டது. மேலும், ஞானானந்தமயனான இறைவனை தமது திருவுள்ளத் தால் மிகத்தெளிவாக அநுபவித்து, நேரே அறிந்தவர் ஆழ்வார், என்பதும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அர்ஜுனனுக்கு உபதேசித்த ஸ்ரீகண்ணபிரானை ஒத்தவர் ஆழ்வார் என்பது காட்டித்தரப்பட்டது. எனவே, கீதையும், திருவாய்மொழியும் ஒத்திருப்பது இயல்பானதே.

  இனி, பல காரணங்களால், கீதையைக்காட்டிலும் திருவாய்மொழிக்குண்டான ஏற்றம் காட்டித்தரப்படுகிறது.

1. கீதை தத்வ உபதேசம்:- ‘‘அது தத்த்வோபதே3ஶம்; இது தத்த்வ தர்ஶி வசநம்’’ (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 190)

‘பரம்பொருள் யார் என்பதை ஸ்ரீமந் நாராயணன் தானே கிருஷ்ணனாக உபதேசித்தது கீதையில். திருவாய் மொழி என்பது, எம்பெருமானால் குறிப்பிட்ட நம்பத்தகுந்த ஞானிகளின் தலைவரான நம்மாழ்வார் அருளிச் செய்த வசனம்.

‘‘எல்லா உலகங்களுக்கும் நானே காரணம்; என்னைக் காட்டிலும் பரம்பொருள் வேறில்லை; என்னையே சரணமாகப் பற்று’’ என்று, பகவான் தானே தன் மேன்மையை அருளிச் செய்தது கீதை. இது சிற்றறிவினர் அறிவிற்கு எட்டாதது.

ஆழ்வார், ஸுத்தஸத்வ ஞானத்தை உடையவர். இவர் ‘‘கறுத்த மனம் ஒன்றும் வேண்டா; கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை’’ (திருவாய்.5-2-7) என்கிறபடி பல பாசுரங்களில், நடுநிலையில் நின்று அவன் வைபவத்தைப் பேசியதால், அது சிற்றறிவு படைத்தவர்களாலும் ஆதரிக்கத் தக்கதாக இருக்கும்.

2. பகவத் கீதை மற்றும் திருவாய்மொழி ஆகிய இரண்டும் மோக்ஷத்திற்கு வழிகாட்டும் சாஸ்த்திரங்களே. ஆனாலும், அவை அவதரித்த காரணத்தால், திருவாய்மொழி ஏற்றம் மிகுந்தது என்பது, 191ஆவது ஸூத்ரத்தில் காட்டித் தரப்படுகிறது.

‘‘அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந் திரட்டி படச் சொன்னது; இது நாடாகத் தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான் சொன்னது’’ (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 191)

கீதை, ஐவராகிய பாண்டவர்களை வெற்றி பெறச் செய்யவும், ‘‘பதிற்றைந்து இரட்டியை’’ (நூறு கௌரவர்கள் -10X5X2=100) வீழ்த்துவதற்கும் காரணமாக அமைந்தது.

திருவாய்மொழி, ‘‘ஐயைந்து’’ முடிப்பதற்காகவும் ஸர்வ சேஷியான நாராயணன் பக்கலில் தோற்பதற்காகவும் ஏற்பட்டது. ‘‘ஐயைந்து’’ என்பது, ‘‘பொங்கைம்புலனும் பொறியைந்தும்’’ (திருவாய்.10-7-10) என்னும் பாசுரத்தில் காண்கின்றபடி, இருபத்து நான்கு தத்துவங்களைக் குறிக்கும், இவற்றிடம் இருபத்தி ஐந்தாவது தத்துவமான ஆன்மா விற்குள்ள பற்றினைப் போக்குவதே திருவாய்மொழியின் நோக்கு.

3. ‘‘அங்கு நம்பிசரணென்று தொடங்கி முடிவில் அப்ரியமென்றது; இங்கு பரமேயென்றிழிந்து பொலிகவென்று உகந்தது’’ - (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 192).

கீதை மகிழ்ச்சியுடன் தொடங்கி, வருத்தத்தில் முடிவ டைகிறது. திருவாய்மொழி வருத்தத்தில் தொடங்கி, மகிழ்ச்சியில் முடிவடைகிறது. இதை விளக்கும் ஸூத்திர எண்:- 192

‘‘நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று, தாழ்ந்த தனஞ்சயற்காகி’’ (பெரியாழ்வார் திருமொழி- 1-9-4) என்று, ‘‘கண்ணா! என்னை நியமிக்க வேண்டும்’’ என்ற அர்ஜுனனின் வேண்டுகோளைக் கேட்ட மகிழ்ச்சியுடன், கீதோபதேசத்தைத் தொடங்கினான் கண்ணன். கீதை சொல்லி முடித்த பின்பு, அர்ஜுனன், அதை நினைவில் கொள்ளாததால் வெறுப்படைந்தான் கண்ணன்.

திருவாய்மொழியை ஆரம்பிக்கையில், பகவான் திறத்தில் விருப்பம் இல்லாதவரைக் கண்டு: ‘‘ஏ! பாவம்! பரமே! ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்’’ (திருவாய்.2-2-2) என்று வெறுப்போடு அருளிச் செய்கிறார் நம்மாழ்வார். ஆனால், அவர் உபதேசத்தைக் கேட்டு, உலகம் முழுவதும் திருந்துகையாலே மகிழ்வோடு, ‘‘பொலிக! பொலிக!! பொலிக!!!’’ (திருவாய்.5-2-1) என்று மங்களா ஸாசனம் செய்கிறார்.

எனவே, கீதை உபதேசம், முழுமையான பயனைப் பெறவில்லை. திருவாய்மொழி உபதேசம், முழுமையான பலனைப் பெற்றது.

4. ‘‘அதில் ஸித்3த4த4ர்மவிதி4யே; இதில் வித்4யநுஷ்டா2 நங்கள்’’ (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 193)

‘‘சரணாகதியைச் செய்வாய்’’ என்று, விதியை மட்டும் சொல்கிறது கீதை. எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து விதியையும் அனுஷ்டானத்தையும், இரண்டையும் சொல்வது திருவாய்மொழி. இது 193ஆவது ஸூத்திரத்தில் விளக்கப்படுகிறது.

கீதையில், பகவான், ‘‘மாமேகம் ஶரணம் வ்ரஜ’’ (ப.கீ.18-66) என்று ‘‘மோக்ஷமடைவதற்கு என்னைச் சரணமாகப் பற்றுவாய்’’ என்று விதியை மட்டும் கூறுகிறான்.

திருவாய்மொழி, ‘‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ’’ (திருவாய்.4-1-1) என்று விதியையும், ‘‘புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’’ (திருவாய்.6-10-10) என்று அனுஷ்டானத் தையும், (மேற்கொள்ளும் முறையையும்) காட்டித்தருகிறது.

5. ‘‘பகவன் ஞானவிதி பணிவகையென்று இவரங்கீ3 காரத் தாலே அதுக்கு உத்கர்ஷம்’’ (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 194)

கீதைக்கு ஏற்றம் ஏற்பட்டதே, நம்மாழ்வாருடைய அங்கீகாரத்தைக் கொண்டுதான் என்பது, 194ஆவது ஸூத்திரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

எம்பெருமான், புத்தமுநியாக நின்று பௌத்த சாஸ்திரத்தைச் சொன்னான். கபிலமுநியாய் நின்று சாங்கிய சாஸ்த்திரத்தைச் சொன்னான், இவற்றை பகவானே சொன்ன போதிலும், வைதிகர்களால் இவை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. இதனால், இவை ப்ரமாணங்களான கௌரவத்தைப் பெறவில்லை.

ஆனால், பரம வைதிகரான ஆழ்வார், ‘‘அந்தமில் ஆதியம்பகவன் வணக்குடைத் தவநெறி வழிநின்று’’ (திருவாய்.1-3-5) என்றும், ‘‘ஞான விதி பிழையாமே’’ (திருவாய்.5-2-9) என்றும், ‘‘பண்டே பரமன் பணித்த பணிவகையே கண்டேன் கமலமலர் பாதம்’’ (திருவாய். 10-4-9) என்றும் பகவத் கீதையை ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டதால், அது ஏற்றத்தைப் பெற்றது.

எனவே, கீதைக்கு ஏற்றம் இவர் அங்கீகாரத்தால் ஏற்பட்டது. இவர் திருவாக்கிலிருந்து புறப்பட்ட திருவாய் மொழிக்கு அதுவும் தேவையில்லை என்பதே ஓர் ஏற்றமாக அருளிச் செய்யப்படுகிறது. *

17

வைணவமும் தமிழும்

கோவலன் தன் மனைவி கண்ணகியை மதுரை மாநகரிலே இடைச்சேரியிலுள்ள ஒரு மனையில் விட்டு, அவளுடைய சிலம்புகளில் ஒன்றை விற்கப்போய்க் கொலையுண்டான் என்பது பலரும் அறிந்த கதை. அப்போது அந்தச் சேரியிலே பலவிதமான துர்நிமித்தங்கள் தோன்றின வாம். உடனே அந்த துர்நிமித்தங்கள் மூலம் எவ்வித இடையூறுகளும் ஏற்படக்கூடாது என்று, இடைச்சியர் தங்கள் குலதெய்வமான கிருஷ்ண பகவானுடைய பால சரித நாடகங்களில் ஒன்றான குரவைக் கூத்தைக் கண்ணகி காண ஆடினார்கள். வட்ட வடிவமாகக் கைகோர்த்துக் கொண்டு ஆடும்போதே, அந்த ஜகன்மோகன கோபாலனுடைய தெய்வீக நிலையையும், வியத்தற்குரிய எளிமையையும்,

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்,
ஈங்குநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ, தோழீ!

(ஆன் - பசுக்கூட்டம். ஆம்பல் - ஒரு பழைய தமிழ்ப் பண். தீங்குழல் - இனிய புல்லாங்குழலோசை. கேளாமோ - கேட்போம்.)

என்று இவ்விதமாகப் பாடத் தொடங்குகிறார்கள்.

‘பசுக்கூட்டமுள்ள இந்த இடத்திற்கு வருவானே; வந்தால், தோழீ! அந்தப் புல்லாங்குழலில் அனைவரையும் ஈர்த்திடும் ராகத்தைக் கேட்போம்’ என்று பாடிப் புகழ்ந்த பின், அனைத்து வல்லமை படைத்த அந்தப் புருஷோத்தமனுடைய குழந்தைப் பருவத்தை உள்ளத்திலே நிறுத்திக் கொண்டு,

வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கிக்,
கடல்வண்ணன்! பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே:
கலக்கியகை, யசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை!
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே!

(வரை - மலை. நாண் - கடைகயிறு. கட்டுண்கை - கட்டுண்ட கை. மருட்கைத்தே - வியப்பைத் தருவதாயும், மயக்கம் தருவதாயும் இருக்கிறதே.) என்றும்,

‘அறுபொருள் இவன்’ என்றே அமரர்கணம் தொழுதேத்த,
உறுபசிஒன்(று) இன்றியே உலகடைய உண்டனையே:
உண்டவாய், களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்!
வண்துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே!

(அறுபொருள் - தீர்ந்த பொருள்; பரம்பொருள். அமரர் கணம் - தேவர் கூட்டம். உறு - மிக்க. அடைய - அடங்கலும். வண்துழாய் - வளப்பமான துளசி.)

என்றும் அந்தத் தெய்வக் குழந்தையின் திருவிளையாட்டிலே ஈடுபடுகிறார்கள்.

மூன்றுலகமும் இருள் தீர்ந்து வாழும்படி நடந்த திருவடி களால், அதே குழந்தை பின்னாளில் தன்னை நம்பிய பஞ்ச பாண்டவர்களுக்குத் தூது நடந்ததாம். அப்படிப்பட்ட சீலத்தை,

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல
இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே;
நடந்தஅடி, பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி!
மடங்கலாய்! மாறட்டாய்! மாயமோ? மருட்கைத்தே!

(மடங்கலாய் - (நர) சிங்கமாய் அவதரித்தவனே. மாறு - பகை. அட்டாய் - அழித்தவனே.)

என்று போற்றுகிறார்கள்.

இந்தத் திருவடிகள்தாம் ராமாவதாரத்திலே காடுகளை மிதித்துச் சிவந்து போயினவாம் தீயோர்களை அழிப்பதற்காகத் தோன்றிய, இந்த வீர மூர்த்தியைக் குறித்தும் ஆய்ச்சியர்கள்,

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து,
சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே!

(முறை நிரம்பா வகை - குறைபடும்படி. சேப்ப - சிவக்க. சோ - அசுரர் நகரம். கட்டு - காவல்.) என்று பாடுகிறார்கள்.

மறுபடியும் தங்களுக்கு உகப்பான கிருஷ்ணாவ தாரத்திற்கே வந்து,

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை, நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்(து)ஆ ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை, ஏத்தாத நாவென்ன நாவே!
நாராயணாஎன்னா நாவென்ன நாவே!

(தாழும் - தங்கிய. ஆரணம் - வேதம்.)

என்று குதூகலமாக ஆடிப் பாடிக் குரவைக் கூத்தை முடிக்கிறார்கள்.

ஆழ்வார் பாடல்களைப்போல் இந்தப் பாடல்களும் எவ்வளவு அழகானவைகளாகவும், உருக்கமாவும் இருக் கின்றன! கோவலன் - கண்ணகி கதையான சிலப்பதிகாரம் பிறந்த காலத்திலே, விஷ்ணு பக்தி - குறிப்பிடும்படியாக கிருஷ்ண பக்தி - தமிழ் மக்களுக்கிடையே பரவியிருந்த தென்று தெரிய வருகிறது. அந்தக் காலத்திற்கும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே, தமிழ் முனிவரான அகஸ்தியருடைய சீடரென்று கருதப்படும் தொல்காப்பியர், தமிழர்கள் விஷ்ணுவை வழிபட்டு வந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். இதனால் தமிழ் நாட்டில் வழங்கி வந்த சமயம் ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள் என்ற கொள்கையைப் பற்றி யிருந்தது.

சங்க காலத்திலிருந்த புலவர்களிலும் கீரந்தையார் முதலிய சிலர் வைஷ்ணவர்களாயிருந்தார்கள். வைஷ்ணவக் கொள்கைகளில் சில, இவர்கள் பாடல்களிலும் காணப் படுகின்றன.

கிருஷ்ண பக்தி அல்லது விஷ்ணு பக்தியில் சிறந்த வர்களைப் பாகவதர் என்றும், வைஷ்ணவ சமயத்தைப் பாகவத தர்மமென்றும் சொல்வதுண்டு. சங்க காலத்தில் தமிழ் நாடெங்கும் முக்கோல் பகவர் என்ற துறவிகள் நாடெங்கும் கால்நடையாகவே சென்று மக்களை நல்வழிபடுத்தி வந்தனர் என்பதை பண்டைய தமிழ் நூல்களிலிருந்து அறிகிறோம். இவர்கள் தமிழ் மக்களால் போற்றப்பட்டு வந்தனர். இத்தகைய துறவிகளும் அடியார்களும் பல்வேறு புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தமிழ் நாட்டில் வைஷ்ணவ சமயத்தையும் சிறந்த நோக்கங்களையும் சமய லட்சியங் களையும் பரப்பி வந்தார்கள்.

இப்படிப்பட்ட விஷ்ணுபக்தர்கள் வழிபட்ட அதிபுரா தன ஸ்தலங்கள் திருவரங்கம், திருப்பதி, திருமாலிருஞ் சோலை முதலியன. காஞ்சிபுரத்திலும் ஒரு பழைய விஷ்ணு ஸ்தலம் உண்டு. இவையெல்லாம் வைஷ்ணவத்தின் வளர்ப்புப் பண்ணைகளாயிருந்தன. இந்த ஸ்தலங்களில் பாகவதர்களான துறவிகளும், பிறரும் கூடுவதுண்டு. முக்கியமான விஷ்ணு ஸ்தலங்களை,

தேனோங்கு சோலைத் திருவேங் கடமென்றும்,
வானோங்கு சோலை மலையென்றும், - தானோங்கு
தென்னரங்க மென்றும் திருவத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர்?

(திருவேங்கடம் - திருப்பதிமலை. சோலைமலை - திருமாலிருஞ்சோலை என்ற அழகர் மலை. அத்தியூர் - காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ள இடம்.)

என்ற பாட்டில், ஒரு புலவர் குறிப்பிடுகிறார். ‘தேனோங்கு சோலை’யைத் திருவேங்கடத்தின் சிறப்பாகவும், ‘வானோங்கு’ மலையைச் சோலைமலையின் சிறப்பாகவும் சொல்லுகிறவர், திருவரங்கத்தைத் ‘தானோங்கு தென் அரங்கம்’ என்று சிறப்பித்துப் பேசுவது கவனிக்கத் தகுந்தது. ‘திருவரங்கம்’ என்ற தனிச் சிறப்பே போதும்; அதற்கு வேறு சிறப்பும் வேண்டுமோ? - என்பது குறிப்பு.

இப்படிப்பட்ட தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த திருவரங்கத்தையும், ‘தேனோங்கு சோலை’த் திருப்பதியை யும் அந்த நாளிலேயே பேர்பெற்ற, - பலரும் தொழுத - விஷ்ணு ஸ்தலங்களாகக் காட்டுகிறது சிலப்பதிகாரம்.

நீல மேகம், நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந்(து) அகலாது படிந்தது போல,
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்-
பாயற் பள்ளிப் பலர்தொழு(து) ஏத்த,
விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும்

(பால் - பக்கம். திறல் - திறமை. பாயல் - படுக்கை. திரை - அலை. வியன் - பெருமை. துருத்தி - ஆற்றினிடையே உள்ள சிறு திட்டு. திரு - லட்சுமி).

என்று ஸ்ரீரங்கநாதனுடைய சயனத் திருக்கோலம் எவ்வளவு உணர்ச்சியோடு, எவ்வளவு அழகாகச் சித்திரிக்கப் படுகிறது! ‘பொன் மலை மீது படிந்து கிடக்கும் நீலமேகம் போல, ஆயிரம் பணாமகுடங்களோடு கூடிய பாம்பணைப் பள்ளிமீது, அலை கொழிக்கும் காவிரியாற்றுக்கிடையே யோக நித்திரை செய்கிறான்!’ என்று இளங்கோவடிகள் பாடுகிறார் என்றால், அவர் அந்தக் காலத்திலுள்ள பாகவதர்களுடைய பக்திக் கண்ணைக் கொண்டே அவர்களுடைய ‘பூலோக வைகுண்ட’ த்தைப் பார்த்திருக்க வேண்டுமல்லவா?

இந்தச் செய்யுட் பகுதியை, சேரலர்கோன் என்று கொண்டப்படும் குலசேகராழ்வார் என்ற பெரியார் பாடிய பின்வரும் பாட்டோடு ஒப்பிட்டுப் பாருங்கள்:

இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணிபணமா யிரங்கள் ஆர்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்
அணிவிளக்கும் உயர்வெள்ளை அணையை மேவித்
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்(டு), என்
கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?

(இரிய - அஞ்சிஓட. துத்தி - பாம்பின் படப்பொறி. பணம் - பாம்பின் படம். ஆர்ந்த - பொருந்திய. அரவம் - பாம்பு. அனந்தன் - ஆதிசேஷன். பொன்னி - காவிரி.)

காவிரியாறு போலப் பெருகி வரும் இப்படிப்பட்ட பக்திப் பிரவாகத்தின் உற்பத்தி ஸ்தானம், சிலப்பதிகார காலத்திற்கும் முன்னே வெகு தூரத்தில் இருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

இனி, திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக ஆழ்வார் களால் மதிக்கப்படும் திருப்பதி மலைமீதுள்ள நின்ற திருக் கோலத்தையும் இளங்கோவடிகள் வாயிலாக நோக்குவோம்.

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலயத்(து) உச்சி மீமிசை,
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்(கு) ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக்கொடி உடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகைஅணங்(கு) ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு,
பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

(வீங்கு - மிக்க. மீமிசை - மீதே. ஞாயிறு - சூரியன். திங்கள் - சந்திரன். மருங்கு - பக்கம். இடைநிலைத் தானம் - இடைப்பட்ட இடம். அணங்கு - வருத்துகிற. ஆழி - சக்கரம். தகை - அழகு. நலம் - அழகு. பொலம் - பொன். பொலம்பூ ஆடை - பீதாம்பரம்.)

என்ற அடிகளைப் படித்ததும், ‘இளங்கோவடிகள் தாம் பாடினாரா? ஆழ்வார்களே பாடினார்களா?’ என்ற ஐயப்பாடு எழுகிறது. ஸ்ரீரங்கத்தில் சயனித்திருக்கும் நீலமேகமே, திருப்பதியில் மின்னற்கொடியை ஆடையாகத் தரித்து வில்லும் சங்கு சக்கரங்களும் ஏந்தி, நின்ற வண்ணமாயிருக்கி றதாம். விஷ்ணு பக்தர்களின் மனோபாவம் இந்தச் செய்யுட் பகுதியில் எவ்வளவு நன்றாகப் பிரதிபலிக்கிறது!

திருமாலிருஞ்சோலை யென்ற அழகர் மலையைக் குறித்த குறிப்பும் சிலப்பதிகாரத்தில் வருகிறது. அந்த மலையைத் ‘திருமால் குன்றம்’ என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அழகர் மலையைக் குறித்துப் பரிபாடலும் குறிப்பிடுகிறது. இத்தகைய சான்றுகளிலிருந்து, சிலப்பதிகார காலத்திற்கு முன்னமே திருமாலுக்கு உரிய திருத்தலங்கள் பெருமைபெற்றனவாய் பேசப்படுகின்றன.

தமிழ் நாட்டிலே விஷ்ணுபக்தி இன்று நேற்று உண்டானதன்று. ஆழ்வார் காலத்திற்கு முன்னமே வைஷ்ணவம் உண்டு என்பதற்குத் தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் காணப்படுகின்றன. தமிழ் நாட்டின் பண்டைக் காலத்தைப் பக்தியின் அருணோதயகாலம் என்றும், ஆழ்வார்கள் தோன்றிய இடைக் காலத்தைப் பக்தி-மதத்தின் சூரியோதய காலம் என்றும் சொல்லலாம்.

18

நம்பிள்ளை ஈட்டில் காணப்படும் ஸ்ரீபாஷ்யத்திற்கும் திருவாய்மொழிக்கும் இடையிலான கருத்தொற்றுமை

அ) உபநிடதச்சாயை:-ப

நம்மாழ்வார் அருமறையின் பொருளையே அழகிய தமிழில் வெளிப்படுத்தினார் என்பது நம்பிள்ளையின் தலையாய கோட்பாடு. இக்கோட்பாட்டை அடியொற்றி உரை வகுத்த இடங்கள் உள. ஆங்கு வடமொழி மறைத் தொடர் களின் சாயலைத் திருவாய்மொழியிற் கண்டு தெளிவு படுத்துவர்.

ஓராயிரமாய் (9-3) என்ற பதிகத்துள் ‘நாராயணன்’ என்ற சொற்பொருளின் விளக்கமாய் ஒரு பாசுரம் அமைகிறது.

‘அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டுமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்றெல்லாமும் அறிந்தனமே’.

(திருவாய்மொழி. 9-3-2).

இப்பாசுரத்தின் மூன்றாம் அடிக்குப் பொருள் கூற அரிதே யாகும். அதற்குக் கருத்து. பிரமன், சிவன், இந்திரன் ஆகிய மூவரின் தோற்றரவு நிலைபேறு இயக்கங்கள் யாவும் அவனாகிய நாராயணன் இட்ட வழக்கு என்பதாம். அம் மூவர்களின் பெயர்கள் இல்லாதிருக்கச் செய்தேயும் உபநிடத வாக்கியம் கொண்டு அப்பெயர்களைக் காண்கிறார். அவனும் அவனும் அவனும் என்று சுட்டுப்பெயர்களாகவே இங்கு எடுத்திருப்பது உபநிடதச் சாயை என்பது நம்பிள்ளையின் கருத்தாகும். நாராயணாநுவாகத்தில் ‘‘ஸ:ப்ரஹ்மா ஸ: சிவ: ஸ: இந்த்ர:’’ என்று வருகிறது. (நாராயண அநுவாகம். 6:11). அதில் மும்முறை வரும் ஸ: என்கிற பதத்தையே ஆழ்வார் வெளியிட்டு வேதம் தமிழ் செய்கிறார் என்பதை வலியுறுத்து கிறார் ஆசிரியர்.

ஆ) உபநிடதத் தொடர்:

சொற்பொருளை விளக்குமிடத்துத் கருதித் தொடர்களைக் காட்டுவது நம்பிள்ளையின் அரிய நெறியாகும். ‘சுரர் அறிவரு நிலைவிண்’ (திருவாய்மொழி. 1-1-8) என்ற தொடரில் விண் - மூலப்ரக்ருதி என்றே பொருள் கொள்வர்; ஆகாயம் என்ற நேர்பொருளைக் கொண்டிலர்.

‘‘கார்க்கி வித்யையிலே ஆகாச ஶப்தத்தாலே (சொல்லாலே) மூலப்ரக்ருதியைச் சொல்லுகையாலே இவரும் ஆகாச ஶப்தத்தாலே மூலப்ரக்ருதியை அருளிச் செய்கிறார்.’’ 57. 1-1-8(ஈடு).

என்பது உரைக் குறிப்பு. ப்ருஹதாரண்ய உபநிடதத்தில் ‘அஸ்மிந்கலு ஆகாச ஓதச்ச ப்ரோதச்ச’ (ப்ருஹ. உப. ஆனந்தவல்லி. 6-3). என்ற சொற்றொடரில் ஆகாச என்ற சொல் ‘மூலப்ரக்ருதி’ என்ற பொருளில் வருகிறது. அதனைத் தழுவியே தமிழ் மறையான திருவாய்மொழியிலும் அமைகிறது என்பது நம்பிள்ளையின் கருத்து.

இ) உயிர்மறை மொழி:

வேத தாத்பர்யங்களை உள்ளத்தே கொண்டு ஆழ்வார் அருளிய சொற்பிரயோகங்களையும் அவை வருமிடத்து நினைவாகக் காட்டுவது நம்பிள்ளையின் உரையியல்பாகும். ‘‘திட விசும்பு எரிவளி நீர்நிலம் இவை மிசைப், படர்பொருள் முழுவதும் ஆய்’ (திருவாய்மொழி 1-1-7). என்ற தொடர்க்கு ‘‘ஐம்பெரும் பூதங்களையும் அடியாகக் கொண்டு மேலே பரந்து விரிந்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி’’ என்று பொருள் கூறினர். ஈண்டு ‘ஆய்’ என்ற எச்சத்தை ‘ஆக்கி’ என்ற பிறவினையாகத் திரித்துக் கொண்டார். ஆழ்வார்தாமே ‘ஆக்கி’ என்று பிறவினைப் பொருளாக ஓதியிருக்க அடுக்குமே! ‘ஆய்’ என்பானேன், என்னில் ‘‘பஹுஸ்யாம்’’ (தைத்.உப. ஆனந்தவல்லி 6-3) (பலபொருள்களாக விரிகின்றேன்) என்கிற தன் மலர்ச்சியே ஆகையாலே’’ என்று ஆழ்வார் தொடர்க்கு அடிப்படையான மறைமொழியைக் காட்டுவர். ‘‘வைதிக நிர்தேசம் இருக்கிறபடி’’ 1-1-1(ஈடு) என்றும் சுட்டிக் காட்டுகிறார். இதனால், விசிஷ்டாத்வைத நெறிக்கு உயிரான மறைமொழியை ஆழ்வார் தம் திருவுள்ளத்திற்கொண்டு பாடினார் என்று நூல் கற்பார்க்குப் நம்பிள்ளை உணர்த்த விரும்புகிறார்.

ஈ) உபநிடத நிலைக்களன்:-

வேத நடைகளைப் பின்பற்றியும் உரை எழுதுவதில் திறன் மிக்கவர் நம்பிள்ளை ‘பேருமோர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான்’ (திருவாய்மொழி 1-3-4) என்ற பாசுரத்தொடருக்கு ‘‘ஓர் ஆயிரம் பேரும் பிற(வும்) பல உடைய எம்பெருமான்’’ என்பதாகக் கூட்டி ‘எண்ணற்ற திருநாமங்களையும், திருமேனிகளையும் உடையவன்’ என்று பொருள் விரித்தார் இங்கு ‘பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுவதற்குக் காரணம் கூறுகிறார். சாந்தோக்யத்தில் ‘நாமரூபேவ்யாகரவாணி’ (பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணுகிறேன்) - (சாந். 6-3), என்று பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின் தாமும் அவ்வாறே ‘பிற’ என்பதற்குத் திருமேனி என்று கொண்டதாகக் காட்டுகிறார். விளங்காப் பல பொருள் ஒரு சொல்லிற்குச் சார்பினால் பொருள் பணிக்கலாம் என்பது நன்னூலிற்கண்டது. (நன்னூல் ஸூத்ரம் - 390). அந்தச் சார்புக்கு நிலைக்களனை உபநிஷத்திலிருந்து காட்டுகிறார் நம்பிள்ளை.

உ) வேத மொழிபெயர்ப்பு:

வேதச் சொற்றொடர்களின் மொழிபெயர்ப்பாக வரும் இடங்களையும் ஆங்காங்கே எடுத்துக்காட்டி உரையிடுவர் ஆசிரியர். ‘கண்ணாவான் என்றும் மண்ணோர் விண் ணோர்க்கு’ (திருவாய்மொழி 1-8-3) என்ற தொடரில் கண் என்பதற்குக் ‘காப்பாற்றுபவன்’ என்ற ஒரு பொருளைக் கூறியும் அவர் அமைந்திலர். அத்தொடர் வேதச் சொற்றொடரின் மொழியாக்கமாகக் கிடப்பதை உணர்ந்து அதனையே சிறப்புடைப் பொருளாகக் காட்டுவர். ‘சக்ஷுர் தேவாநாமுதமர்த்யாநாம்’ (விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்). (யஜுர்வேதம் 4-6:8) என்ற மறைமொழியை எடுத்துக்காட்டி ‘ச்ருதி’யின் பொருளுக்கு அருளிச் செய்கிறார்’ என்று முடிக்கிறார். ‘வேம்கடங்கள் மெய்ம்மேல் வினை முற்றவும்’ (3-3-6). என்கிற பாசுரத் தொடருக்குப் பல வேதச் சொற்றொடர்களைக் காட்டிப் பொருள் பணிக்கிறார். அம்முறையை ‘வேதாந்தத்திற் சொல்லுகிற கட்டளை’ என்று குறியீடு செய்து வழங்குவர். 3-3-6ஈடு; 9-9-0 ஈட்டிலும் இக்குறியீட்டை வழங்குவர்.

ஊ) மீமாம்ஸை நெறி:

மீமாம்ஸையிற் கண்ட விதிகளைப் பின்பற்றியும் பொருள் சொல்லுவதில் வல்லவர் நம்பிள்ளை. முதல் திருவாய்மொழி ஆறாம் பாடலில் ‘நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர், நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்’ (திருவாய்மொழி 1-1-6) என்று வருகிறது, இப்பாட்டின் கருத்தாவது, நிற்பவர்கள் இருப்பவர்கள் கிடப்பவர்கள் திரிபவர்கள் ஆக இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்வோரும் நில்லாதவர்கள் இராதவர்கள் கிடவாதவர்கள் திரியாதவர்கள் ஆக இப்படிப்பட்ட முயற்சிகளை விட்டவர் களும் இறைவனிட்ட வழக்கே என்பதாம். இங்கே முயல் வோரையும் முயற்சி விட்டோரையும் சொல்லியிருந்தாலும் அவர்கள் இங்குக் கருதப்படவில்லை. கீழே நாலாம் பாட்டிலேயே, நாம் அவன் இவன் என்று தொடங்கி பண்பிகளான எல்லாரையும் சேரப்பிடித்து அவர்கள் யாவரும் இறைவனிட்ட வழக்கே என்பது சொல்லி முடிக்கப்பெற்றது. ஆதலால் கூறியது கூறல் என்ற குற்றம் வாராதபடி ‘நின்றனர்’ என்ற பாசுரத்திற்குப் பொருள் வகுக்கும் கடப்பாடு உரையாசிரியார்க்கு ஏற்படுகிறது. அதனை வேதச் சொற்றொடர்களைக் கொண்டு நிறைவேற்றுகிறார்.

வேதத்தில் யாகம் செய்பவன் சோமபானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. சோமபானமாவது சோமலதை (ஆட்லாங்கொடி)யின் சாற்றினைப் பருகுவதாம், அந்தக் கொடியை எப்படிப் பெறுவது என்று ஆராய்ச்சி பிறக்கிறது. காடுகளில் தேடிப் பிடிப்பதா, விலை கொடுத்து வாங்குவதா? என்று விசாரம் வருகையில் ‘கோ அர்க்கமேவ ஸோமம் கரோதி’ (யஜுர்வேதம். 6-1:45) என்கிற சொற்றொடரானது பசுவைக் கொடுத்து சோமலதையை வாங்க வேண்டும் என்கிறது. அந்த வேதத்திலேயே ‘அருணயா பிங்காக்ஷ்யா ஸோமம் க்ரீணாதி’ (மேலது) என்றும் ஓதிற்று. சோமலதையின் விலையான பசு சிவப்பு நிறம் உன்னதாயும் பிங்கவர்ணமான கண்ணுடையதாயும் இருக்க வேண்டும் என்று சொல்லிற்று.

ஆக, சிவந்த பசுவைக் கொண்டு சோம லதையை வாங்க வேண்டும் என்று சொல்லியிருந்தாலும், பசுவைக் கொண்டு வாங்க வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டிருப்பதால் கூறப்படாததே விதிக்கப்படவேண்டும் என்ற கொள்கையால் சிவப்பு நிறம் மட்டுமே விதிக்கப் படுவதாக் கொள்ளப்படுகிறது. இதே முறையைக் காட்டி ‘நின்றனர் இருந்தனர் கிடந்தனர்’ என்பவற்றிற்கு நிற்றல் இருத்தல் கிடத்தல் நில்லாமை இராமை கிடவாமை முதலிய தொழிற் பண்புகளையே பொருளாக பணித்தார் நம்பிள்ளை. நின்றனர் முதலியன பண்பிகளைக் காட்டும். நிற்றல் முதலியன பண்புகளைச் சுட்டும். ஆக, சேதனர்களின் முயல்வும் முயற்றின்மையுமாகிய பண்புகளனைத்தும் இறைவனிட்ட வழக்காக அமையும் என்று அரியபொருள் உரைத்தார் ஆசிரியர். இதனை ‘விசேஷண அம்சத்திலே நோக்கு’ என்பர். (திருவாய்மொழி 8-8-4). இங்கே, ‘லோஹி, தோஷ்ணீஷாருத்விஜ: ப்ரசரந்தி’ என்ற மற்றொரு வேதச் சொற்றொடரும் ஈட்டில் காட்டப்படுகிறது.

அபிசார வேள்வியில் வேட்போராகிய ‘ரித்விக்குகள்’ தலைப்பாகையுடன் உலவ வேண்டும் என்று முன்னர் ஓரிடத்தில் விதித்துப் பிறகு வேறொரிடத்தில் சிவப்பு நிறமுள்ள தலைப்பாகையுடன் உலவக் கடவர்கள் என்றும் விதிக்கப்படுகிறது. பின்னதில் ‘சிவப்பு’ மட்டுமே விதிக்குப் பொருளாக மீமாம்ஸாகாரர்களால் கொள்ளப்படுகிறது. இவ்விரண்டு எடுத்துக்காட்டுகளைக் கொண்டும் வேதக் கட்டளையில் பொருள் காணும் நெறியைத் தமிழுலகிற்கு வழங்கியவர் நம்பிள்ளை.

செந்தமிழ்நாடு, கன்று எறிந்த தோளான்றன் கனைகழலே காண்பதற்கு நன்கு அறிந்த நாவலஞ்சூழ் நாடாதலின், இந்நாட்டினைச் ‘சித்திக்கு ஒரு விதையாகிய தென்னாடு’ என்பர். கன்று எறிந்த தோளான் கனைகழலைக் காண்பதற்குக் கருவிகளாக இருப்பன். ஆழ்வார்கள் அருளிச்செய்த திருவாய்மொழி முதலிய திவ்யப் பிரபந்தங்களும், அவைபோன்ற பிற நூல்களும் ஆகும். அவற்றுள், திருவாய்மொழியினைத் ‘தமிழ்மறை’ என்பர் சான்றோர். திருவாய்மொழியின் சிறப்பு ஒப்புயர்வற்றது. திருவாய்மொழி தோன்றியதனாலே தமிழ்மொழி ஈடும் எடுப்பும் இல்லாத சிறப்பினையடைந்தது என்று கூறின், அது மிகையாகாது. ‘தமிழ் நூல்களில் தோன்றுகிற ஐயந்திரிபுகளை வடமொழி நூல்களைக் கொண்டு தெளிக, என்று கூறினார் திருவாவடுதுறையாதீனத்துச் சுவாமிநாத தேசிகர்.

‘வடமொழி வேத வேதாந்தங்களில் தோன்றுகிற ஐயந்திரிபுகளைத் திருவாய்மொழியினைக் கொண்டு தெளிகின்றோம்’, என்று அருளிச்செய்தனர் வேதாந்த தேசிகர் முதலிய பெரியோர். இதனால், தமிழிற்கு மிகுந்த சிறப்பு ஏற்பட்டது தெளிவாகும்.

திருவாய்மொழி இறைவனால் மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்டதாதலின், இதன் உட்பொருள்களை அறிந்து கூறல் எத்தகைய புலமை நிரம்பினோர்க்கும் இயல்வது அன்று; கருவிலே திருவுடைய பெரியோர்கட்கே இயல்வதாகும். இதன்உரை மணிப்பிரவாள நடையில் அமைந்ததாகும். (மணிப்பிரவாளமாவது, இருமொழிச் சொற்கள் விரவி கற்போர்க்கு இன்பம் பயக்குமாறு அமைந்ததொரு நடை. ஈண்டு இருமொழியாவன, வடமொழியும் தென்மொழியுமாம். முத்தும் பவழமுந் கோத்தாற்போன்று வடமொழி தென்மொழிச் சொற்கள் விரவிய நடையை மணிப்பிரவாளம் என்பர்.

‘இடையே வடவெழுத் தெய்தில் வரவியல் ஈண்டெதுகை
நடையேது மில்லா மணிப்பிர வாளநற் றெய்வச்சொல்லின்
இடையே முடியும் பதமுடைத்தாம்’

என்பது வீரசோழியம். அலங்காரம் - 2.

இதற்கு உரை வகுத்த பெரியோர்கள், தென் சொற்கடந்து வடசொற்கடற்கு எல்லை சேர்ந்தவர்கள்; இறைவனுடைய திருவருளுக்குப் பூரண பாத்திரமானவர்கள்; ஞானம் அநுட்டானமிவை நன்றாகவேயுடையவர்கள். ‘அந்தமிழின்பப் பாவினை அவ்வடமொழியை’ என்கிறபடியே, இறைவன் இரு மொழிகளின் வடிவமாகவுமிருத்தலின், அவனைப்பற்றிக் கூறுகின்ற இத்தமிழ் மறைக்கு உரை எழுதிய பெரியோரும் இருமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதலாயினர்.

திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி, ஒன்பதனா யிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்னும் ஐந்து உரைகள் உள்ளன. இவ்வுரைகள் ஒன்றற்கொன்று விரிவுரையாக எழுந்தனவாகும். இவற்றுள், ஈடு முப்பத்தாறாயிரப்படியே பின்னர் எழுந்ததும் விரிந்ததுமான உரையாகும். இவ்வுரை, ‘சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் நடை நோக்கும் துறையின் நோக்கோடு எந்நோக்கும் நோக்க இலக்கியமாய் அமைந்தது; கற்போர் மனத்தைக் கவருந் தன்மையது; புத்தியும் பத்தியும் தோற்றுவிப்பது.

இவ்வுலக வாழ்வை ஆய்ந்தால் இதில் பொருந்தி வாழும் விருப்பம் பெறுவதற்கில்லை. இன்பமே பெற்றாலும் இது மிகவும் அற்பம். நிலையற்றது. பெரும்பாலும் துன்பத்தோடே கலந்தது. துன்பமே கலவாப் பேரின்பம் அனுபவிப்பதற்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணனாகிய பரம்பொருளை அடைந்து அவனது திருவடிகளில் கைங்கர்யம் செய்ய வேண்டும். இத்தகைய பரமானந்தம் பெறுவது கர்மஞான பக்திகளாலே, செய்ய வேண்டிய கர்மாக்களை விவரிப்பது வேதத்தின் பூர்வ பாகம் - கர்ம காண்டம் என்பது; நாம் அடைய விரும்பும் பகவானைப் பற்றி அறிவிப்பது உத்தரகாண்டம் - உபநிஷத் பாகம்.

உபநிஷத் பாகத்திலுள்ள சங்கைகளைத் தீர்த்து நன்னெறியை விளக்குவதற்காக ஸ்ரீவ்யாஸ பகவான் சாஸ்த்ரம் ஒன்று அருளியிருக்கிறார். இது ப்ரஹ்ம ஸூத்ரம்; சேதன அசேதனங்களைத் தனக்குச் சரீரமாக உடைய பகவானைப் பற்றியது. இவன் சரீரி. இவனைப் பற்றிய சாஸ்த்ரம் தர்க்க முறைப்படி அமைந்துள்ளது; ஆதலால் இது சாரீரக மீமாம்ஸை எனப்பெறும். (சாரீரகம் - சரியான பகவானைப் பற்றியது). ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஸூத்ரங்களின் பொருள் எளிதில் மனத்தில் ஏற்பதற்கில்லை.

பரம ஞானிகளான ஆசார்யர்கள் இவற்றிற்கு பாஷ்யம் வரைந்துள்ளனர். அத்வைத மதத்திற்கான ஒரு பாஷ்யம், த்வைத மதத்திற்கான ஒரு பாஷ்யம் - இவை இரண்டும் சிறப்புடையன. இவற்றிலும் மிகச் சிறந்து விளங்குவது - விசிஷ்டாத் வைத மதத்திற்கு உயிர் நாடியாக விளங்குவது ஸ்ரீராமாநுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம்; இந்த ஸ்ரீபாஷ்யம் ஸரஸ்வதி தேவியால் புகழப் பெற்றது. இவள் ஸ்ரீராமாநுஜருக்கு அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர் என்பது. பெறற்கரிய ஆய்வுத் திறனாலே உபநிஷத் வாக்யங்கள் பல ஆராயப்பட்டு முரண்பாடுகள் விளக்கம் பெற்று சாஸ்த்ர முறை சிறிதேனும் பிழையாமல் இந்த பாஷ்யம் எழுதப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் பகவானுக்குச் சரீரம் என்று ஸ்ரீராமாநுஜர் வெளியிட்டிருக்கிறார். ‘‘சேதன அசேதனங்கள் யாவும் இவனுக்கு உடைமைப் பொருள். இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. இவன் ப்ரகாரி; விசேஷ்யம் - விசேஷணத்தால் அறியப்படுவோன். இவன் சேஷீ, ஜீவர்கள் இவனுக்கு சேஷபூதர்; இவன் நியந்தா, இவர்கள் இவனால் நியமிக்கப் பெறுவோர்; இவன்நம்மை உடையவன் நாராயணன். நமக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பு இயல்பானது; இத்தொடர்பு எக்காரணத்தாலும் குலையாது’’ என்று இவர் வெளியிட்டிருக்கிறார்.

‘‘இத்தொடர்பாலே இவன் நமக்கு எல்லா உறவு மானவன். நம்மிடம் கருணை மிக்கவன்; நம்மைக் காப்பதே தனது பேறாக நினைப்பவன்’’ என்பது ஸ்ரீராமாநுஜரது மதத்தின் சாரம். இது ‘‘எம்பெருமானார் தரிசனம்’’ என்று பாராட்டப் பெற்றுள்ளது.

இந்த ப்ரஹ்ம ஸூத்ரம் நான்கு அத்யாயங்கள் கொண்டது. ஒவ்வோர் அத்யாயத்திற்கும் பாதம் நான்கு. ஒவ்வொரு பாதத்திலும் விஷயங்கள் அதிகரணங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. ஒவ்வோர் அதிகரணத்திலும் ஸூத்ரங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் உள்ளன. அதிகரணங்கள் 156, ஸூத்ரங்கள் 545. முதல் இரண்டு அத்யாயங்கள் பகவானைப் பற்றியவை; மற்றை இரண்டும் ஜீவர்களைப் பற்றியவை. முதல் இரண்டில் பகவான் உலகுக்குக் காரணம், கல்யாண குணங்கள் பல வாய்ந்தவன் என்பன விளக்கம் பெற்றுள்ளன. மூன்றாவது அத்யாயத்தில் ஜீவன் பகவானை அடையும் வகை விவரிக்கப் பெற்றுள்ளது. நாலாவது அத்யாயத்தில் இவன் பெறும் பரமானந்தம் விளக்கம் பெற்றுள்ளது.

ஸூத்ரங்களின் பாஷ்யம் தர்க்க ரீதியில் அமைந் துள்ளது; அதாவது ஒன்றைப்பற்றி ஆராயும்போது, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட உபநிஷத் சொற்றொடர்களை ஆராய்ந்து இவை ஏற்பதற்கில்லாமையை விளக்கி, சரியான கருத்துக்களை ஏற்ற சான்றுடன் நிலைநிறுத்துவது. இதன் சுவையை ஸ்ரீபாஷ்யம் முழுதும் பயின்றால்தான் அனுபவிக் கலாம். இந்நூலில் வரும் கருத்துக்களின் சுருக்கம் யாவரும் எளிதில் சிறிதளவாவது ஏற்க வேண்டும் என்ற நோக்குடன் எளிய தமிழ் நடையில் மிகவும் முக்கியமான கருத்துக்களே இந்நூலில் வருவன.

இந்த நான்கு அத்யாயங்களின் சுருக்கம்; (1) பகவானைப் பற்றி அறிந்து கொள்ள வேதவாக்கியங்களே ப்ரமாணம் - சான்றாவன; (2) பகவானே உலகுக்குக் காரணம் என்பதற்கு மாறான கருத்துக்கள் ஏற்பதற்கில; (3) பகவானை ஆராதிப்பவன் பக்தியினாலே மோக்ஷம் பெறக் கூடும்; (4) இந்த பக்தியின் பலன் மோக்ஷத்தின் பேரானந்த அனுபவம்.

அத்யாயங்களின் ஸாரம்

முதல் அத்யாயம்

பாதம் 1: சேதன அசேதனங்களைக் காட்டிலும் பகவான் மாறு பட்டவன். இவன் உலகுக்குக் காரணம். தனிப்பட்ட சிறப்புகள் வாய்ந்தவன்.

பாதம் 2: இவன் உலகைக் காரியமாக உடையவன்.

பாதம் 3: இவனே யாவர்க்கும் யாவற்றிற்கும் ஆத்மா.

பாதம் 4: இவனால் படைக்கப்படாதன, இவனுக்குச் சரீர மல்லாதன இல.

இரண்டாம் அத்யாயம்

பாதம் 1: கபில ஸ்ம்ருதி போன்றவை ஆதரிக்கத் தக்கனவல்ல.

பாதம் 2: பிற மதங்களின் குறைபாடுகள்.

பாதம் 3: சேதன அசேதனங்கள் யாவும் பகவானின் காரியம். பகவானால் நியமிக்கப்படுவன.

பாதம் 4: இந்த்ரியங்கள் முதலியவற்றின் செயல்பற்றியது.

மூன்றாம் அத்யாயம்

பாதம் 1: ஜீவர்களின் தோஷங்கள்.

பாதம் 2: பகவானின் குணங்கள்.

பாதம் 3: குணங்களை உபாஸநம் செய்யும் வகை.

பாதம் 4: உபாஸனத்திற்கான கர்மாவைப் பற்றியது.

நான்காம் அத்யாயம்

பாதம் 1: உபாஸந அநுஷ்டானம்.

பாதம் 2: அர்ச்சிராதி மார்க்கம் - தொடக்கம்.

பாதம் 3: அர்ச்சிராதி மார்க்கம்.

பாதம் 4: மோக்ஷ பலம். *

19

ஆழ்வார்கள் திருவாக்கில் தமிழ்மொழியின் பெருமை

மாவினைவாய்பிளந்துகந்தமாலை வேலை வண்ணனைஎன்கண்ணனை*வன்குன்றமேந்தி
ஆவினைஅன்றுய்யக்கொண்டஆயரேற்றை
அமரர்கள்தந்தலைவனைஅந்தமிழினின்பப்
பாவினை * அவ்வடமொழியைப் பற்றற்றார்கள்
பயிலரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *
கோவினைநாவுறவழுத்திஎன்தன்கைகள்
கொய்ம்மலர்தூய்என்றுகொலோகூப்பும்நாளே?4
(பெருமாள் திருமொழி 1-4)

அந்தமிழினின்பப்பாவினை - இருளிரியச் சுடர்மணி களிமைக்கும் நெற்றிபோலே இனியவனை. (பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்).

கூந்தல்மலர்மங்கைக்கும்மண்மடந்தைக்கும்
குலவாயர்கொழுந்துக்கும்கேள்வன்தன்னை*
வாய்ந்தவழுதிவளநாடன் மன்னு
குருகூர்ச்சடகோபன்குற்றேவல்செய்து*
ஆய்ந்ததமிழ்மாலைஆயிரத்துள்
இவையும்ஓர்பத்தும்வல்லார்* உலகில்
ஏந்துபெருஞ்செல்வத்தராய்த் திருமா
லடியார்களைப்பூசிக்கநோற்றார்களே. (திருவாய்மொழி 5-6-11)

ஆய்ந்ததமிழ்மாலைஆயிரத்துள் இவையும் ஓர்பத்தும் வல்லார் - ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இப்பத்தைக் கற்க வல்லவர்கள்.

செங்கணாளிஇட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய *
எங்களீசனெம்பிரானை இருந்தமிழ்நூற்புலவன் *
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறைதார்க்கலியன் *
செங்கையாளன்செஞ்சொல்மாலை வல்லவர்தீதிலரே.
(பெரிய திருமொழி 1-7-10)

  இருந்தமிழ்நூற்புலவன் - ஒருவரால் கரைகாண ஒண்ணாதபடியிருக்கிற தமிழ் சாஸ்த்ரோக்தமான படியைக் கரைகண்ட ஜ்ஞாநாதிக்யத்தையுடையவர்.

யானேதவஞ்செய்தேன் ஏழ்பிறப்பும்எப்பொழுதும்*

யானேதவமுடையேன் எம்பெருமான்!*-யானே
இருந்ததமிழ்நன்மாலை இணையடிக்கேசொன்னேன்*
பெருந்தமிழன்நல்லேன்பெரிது.

  (இரண்டாம் திருவந்தாதி -74)

  இருந்ததமிழ்நன்மாலை ...... பெருந்தமிழன் - விலக்ஷணமான தமிழாகிற மாலையைச் சேர்ந்த திருவடிகளிலே சொன்னேன். பெருந்தமிழன் - பெரிய தமிழன்.

என்னெஞ்சத்துள்ளிருந்து இங்குஇருந்தமிழ்நூலிவைமொழிந்து*
வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்தவாட்டாற்றான்*
மன்னஞ்சப்பாரதத்துப் பாண்டவர்க்காப்படை தொட்டான்*
நல்நெஞ்சே! நம்பெருமான் நமக்குஅருள்தான்செய்வானே.
(திருவாய்மொழி 10-6-4)

இங்கு - அங்கு இல்லாத செல்வத்தையும் இங்கே உண்டாக்கினான். இருந்தமிழ் - அந்தப் பரமபதத்துக்கும் அடங்காதபடி ஆயிற்று இவற்றின் பெருமை. ‘கேட்டு ஆரார்’ என்னக் கடவது அன்றோ? நூல் - பின்புள்ளார்க்கும் இது கொண்டு இலக்கணம் கட்டலாம்படி ஆயிற்று இவை இருப்பது. இவர் ஆற்றாமையாலே சொல்லச்செய்தேயும், அது எல்லா இலக்கணங்களோடும் கூடும்படி சொல்லுவித் தானாயிற்று.

என்றும் எனக்கு இனியானை என்மணிவண்ணணை*
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய*
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன் சொல்*
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே.
(பெரியாழ்வார் திருமொழி 3-2-10)

இன்தமிழ் மாலைகள் - போக்யமான தமிழ்ச்சொல் மாலைகள்.

கருப்புவில்மலர்க்கணைக்காமவேளைக்
கழலிணை பணிந்து அங்குஓர்கரியலற
மருப்பினையொசித்துப்புள்வாய்பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடென்று
பொருப்பன்னமாடம்பொலிந்துதோன்றும் புதுவையர்கோன்விட்டுசித்தன்கோதை

விருப்புடையின் தமிழ்மாலைவல்லார் விண்ணவர்கோனடி நண்ணுவரே.
(நாச்சியார் திருமொழி 1-10)

இன்தமிழ்மாலை - இனிய தமிழ்ப்பாமாலைகள்.

அல்லிமாமலர்மங்கைநாதன் அரங்கன்மெய்யடியார்கள்தம்
எல்லையிலடிமைத்திறத்தினில் என்றும்மேவுமனத்தனாம்

கொல்லிகாவலன்கூடல்நாயகன் கோழிக்கோன்குலசேகரன்*
சொல்லினின்தமிழ்மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்களாவரே.

(பெருமாள் திருமொழி 2-10)

சொல்லினின் தமிழ்மாலை - இனிதான சொற்களை யுடைய தமிழ்த்தொடை.

அல்லிமலர்த்திருமங்கைகேள்வன்தன்னை நயந்துஇளவாய்ச்சிமார்கள்
எல்லிப்பொழுதினில்ஏமத்தூடி எள்கியுரைத்தஉரையதனை

கொல்லிநகர்க்கிறைகூடற்கோமான் குலசேகரன்இன்னிசையில்மேவி*
சொல்லியஇன்தமிழ்மாலைபத்தும் சொல்லவல்லார்க்குஇல்லைதுன்பந்தானே.
(பெருமாள் திருமொழி 6-10)

சொல்லியஇன்தமிழ்மாலை பத்தும் - இனிய தமிழால் ஆகிய மாலை போன்ற இப்பத்துப்பாட்டையும்.

தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
திறல்விளங்குமாருதியோடுஅமர்ந்தான்தன்னை
எல்லையில்சீர்த்தயரதன்தன் மகனாய்த்தோன்றிற்று
அதுமுதுலாத் தன்னுலகம்புக்கதீறா

கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்
கோழியர்கோன்குடைக்குலசேகரன்சொற்செய்த*
நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே.
(பெருமாள்திருமொழி 10-11)

நல்லியலின்தமிழ்மாலைபத்தும் - அழகிய இயலை உடைய தமிழ்மாலை பத்தும்.

அருள்கொண்டாடும் அடியவர்இன்புற
அருளினான் அவ்வருமறையின்பொருள்

அருள்கொண்டு ஆயிரம்இன்தமிழ்பாடினான்*
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே.
(கண்ணிநுண்சிறுத்தாம்பு - 8)

அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் - நம்மாழ்வார் தம்முடைய புத்தியாலே அர்த்தங்களை அருளிச் செய்யாமல் ‘‘மயர்வற மதிநலம் அருளினன்’’ (திருவாய் மொழி 1-1-1) என்கிறபடியே எம்பெருமானுடைய க்ருபையாலே கிடைத்த அறிவைக் கொண்டு அவனாலே தூண்டப் பட்டவராய்க் கொண்டாயிற்று, ஆயிரம் பாட்டுக்கள் கொண்ட திருவாய்மொழியை அருளிச் செய்தது. ‘‘என்னாகியே தப்புதலின்றித் தனைக் கவி தான் சொல்லி’’ (திருவாய். 7-9-4) என்கிறபடியே, திருவாய்மொழியைப் பயிலும் மற்றவர்களைப் போலே கவிபாடுகிற ஆழ்வார் தாமும் வியப்புறும்படி எம்பெருமான் அவரைக் கொண்டு எக்குற்றமும் இல்லாமல் கவிபாடுவித்துக் கொண்டான்.

மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கடமலைகோயில்மேவிய*
அன்னமாய்நிகழ்ந்த அமரர்பெருமானை*
கன்னிமாமதிள்மங்கையர்கலிகன்றி இன்தமிழாலுரைத்த* இம்
மன்னுபாடல்வல்லார்க்கு இடமாகும்வானுலகே.
(பெரியதிருமொழி 2-1-10)

இன்தமிழாலுரைத்த - செவிக்கு இனிதான தமிழாலே அருளிச் செய்ததாய்.

அன்னமன்னுபைம்பூம்பொழில்சூழந்த அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானை
கன்னிமன்னுதிண்தோள்கலிகன்றி ஆலிநாடன் மங்கைக்குலவேந்தன்

சொன்னவின்தமிழ்நன்மணிக்கோவை தூயமாலைஇவைபத்தும்வல்லார்
மன்னிமன்னவராய்உலகாண்டு மானவெண்குடைக்கீழ்மகிழ்வாரே.
(பெரியதிருமொழி 7-7-10)

சொன்ன விந்தமிழ் - சொன்ன இனிய தமிழான இந்த நல்லரத்ன மாலையை லக்ஷணங்களில் குறைவற்றிருக்கிற இப்பத்தையும் அப்ப்யஸிக்க வல்லவர்கள்.

செருநீரவேல்வலவன் கலிகன்றிமங்கையர்கோன்*
கருநீர்முகில்வண்ணன் கண்ணபுரத்தானை*
இருநீரின்தமிழ் இன்னிசைமாலைகள்கொண்டுதொண்டீர்!*
வருநீர்வையம்உய்ய இவைபாடியாடுமினே.
(பெரியதிருமொழி 8-9-10)

விஷயவைலக்ஷண்யத்தை யொழியவே மிக்க நீர்மையை உடைத்தாயிருக்கிற இன்தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு........

ஆலுமாவலவன்கலிகன்றி மங்கையர்தலைவன்* அணிபொழில்
சேல்கள்பாய்கழனித் திருக்கோட்டியூரானை*
நீலமாமுகில்வண்ணனை நெடுமாலைஇன்தமிழால் நினைந்த*இந்
நாலுமாறும்வல்லார்க்கு இடமாகும்வானுலகே.
(பெரியதிருமொழி 9-10-10)

ஸர்வேச்வரனை இனிய தமிழைக் கொண்டு ஸம்ஸாரதாபம் தீரும்படியாக நினைத்த .........

என்றைக்கும்என்னை உய்யக்கொண்டுபோகிய*
அன்றைக்கன்றென்னைத் தன்னாக்கிஎன்னால்தன்னை*
இன்தமிழ்பாடியஈசனை ஆதியாய்
நின்றஎன்சோதியை* என்சொல்லிநிற்பனோ?
(திருவாய்மொழி 7-9-1)

இது தன்னிலோடுகிற அர்த்தமும் பரிமாற்றமுங் கிடக்கச்செய்தே , சொல்லின் இனிமைதானே ஆகர்ஷகமா யிருக்கும்படி........ (ஈடு. 7-9-1)

கண்டுகொண்டுஎன்னைக் காரிமாறப்பிரான்*
பண்டைவல்வினை பாற்றியருளினான்*
எண்திசையும் அறியஇயம்புகேன்*
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.
(கண்ணிநுண்சிறுத்தாம்பு-7)

ஒள்ளியதமிழ். பெரிய ஆழத்தில் உள்ளுக்கிடந்த பதார்த்தங்களெல்லாம் தரையிலே காணுமாபோலே அதிக்ருதாதிகாரமாய் அவகாஹிக்கவொண்ணாதே, ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே’’ (தை.ஆந.) என்னும் விஷயத்தை ஸர்வாதிகாரமாக்குகையாலே ஒண்தமிழென்றது. (நஞ்சீயர்.வ்யா).

தேனமர்பூம்பொழில் தில்லைச்சித்திரகூடம் அமர்ந்த*
வானவர்தங்கள் பிரானை மங்கையர்கோன் மருவார்*
ஊனமர்வேல்கலிகன்றி ஒண்தமிழ்ஒன்பதோடொன்றும்*
தானிவைகற்றுவல்லார்மேல் சாராதீவினைதானே.
(பெரியதிருமொழி 3-3-10)

ஆழ்வார் அருளிச்செய்த அழகியதமிழான இப்பத்தும் ......

கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனென்று காதலால்கலிகன்றிஉரைசெய்த*
வண்ணவொண்தமிழொன்பதோடொன்றிவை வல்லராய்உரைப்பார், மதியம்தவழ்*
விண்ணில்விண்ணவராய்மகிழ்வெய்துவர் மெய்ம்மைசொல்லின்வெண்சங்க
மொன்றேந்திய கண்ண!* நின்தனக்கும்குறிப்பாகில் கற்கலாம்கவியின்பொருள்தானே.
(பெரியதிருமொழி 7-10-10)

இசையையுடைத்தாய் அழகியதாயிருக்கிற இவை பத்தையும்......

தழுவிநின்றகாதல்தன்னால் தாமரைக்கண்ணன்தன்னை *
குழுவுமாடத்தென்குருகூர் மாறன்சடகோபன்* சொல்
வழுவிலாதவொண்தமிழ்கள் ஆயிரத்துள்இப்பத்தும்*
தழுவப்பாடியாடவல்லார் வைகுந்தமேறுவரே.
(திருவாய்மொழி 4-7-11)

பகவத் குணங்களிள் ஒன்றும் குறையாதபடியிமாய் ஸுபோதமுமாயிருக்கை (நன்கறியத்தக்கதாயிருக்கை) ....... (இருபத்துநாலாயிரப்படி)

கார்வண்ணன்கண்ணபிரான் கமலத்தடங்கண்ணன்தன்னை*
ஏர்வளவொண்கழனிக் குருகூர்ச்சடகோபன்சொன்ன*
சீர்வண்ணவொண்தமிழ்கள் இவையாயிரத்துள்இப்பத்தும்*
ஆர்வண்ணத்தால்உரைப்பார் அடிக்கீழ்புகுவார்பொலிந்தே.
(திருவாய்மொழி 5-1-11)

சீரிதான ப்ரகாரத்தையுடைத்தான அழகிய தமிழென்னு தல், கவிக்கு அங்கமான சீரையும் வண்ணத்தையுமுடைய அழகிய தமிழென்னுதல்.

ஆம்வண்ணம்இன்னதொன்றென்று அறிவதரியஅரியை*
ஆம்வண்ணத்தால் குருகூர்ச்சடகோபன் அறிந்துரைத்த*
ஆம்வண்ணவொண்தமிழ்கள் இவையாயிரத்துள் இப்பத்தும்*
ஆம்வண்ணத்தாலுரைப்பார் அமைந்தார்தமக் கென்றைக்குமே.
(திருவாய்மொழி 7-8-11)

அவனுக்கு தகுதியாம்படியிருக்கிற அழகிய தமிழென்னுதல், தகுதியாயிருந்துள்ள சந்தஸ்ஸுக்களை உடைத்தாய் ஸர்வாதிகாரமாகிற நன்மையையுடைத்தான தமிழென்னுதல், ஒசையாய் நல்ல த்வநியையுடைத்தான செந்தமிழென்னுதல் .....

ஆதுமில்லைமற்றவனில் என்றதுவேதுணிந்து*
தாதுசேர்தோள்கண்ணனைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன*
தீதிலாதவொண்தமிழ்கள் இவையாயிரத்துள்இப்பத்தும்*
ஓதவல்லபிராக்கள் நம்மையாளுடையார்கள்பண்டே.
(திருவாய்மொழி 9-1-11)

உள்ளுண்டான அர்த்தத்தையடைய வெளியிட்டுக் கொடுக்கவற்றாயிருக்கை. நிர்தோஷமாய், பஹுகுண மானவை என்றுமாம் ......

காவிப் பெருநீர்வண்ணன் கண்ணன்
மேவித்திகழும் கூடலூர்மேல்

கோவைத்தமிழால் கலியன்சொன்ன*
பாவைப்பாடப் பாவம்போமே.
(பெரிய திருமொழி 5-2-10)

லக்ஷணக்ரமத்தைடைத்தான தமிழ் மொழியினாலே...

அன்பேதகளியா ஆர்வமேநெய்யாக
இன்புருகுசிந்தையிடுதிரியா
- நன்புருகி
ஞானச்சுடர்விளக்கேற்றினேன், நாரணற்கு *
ஞானத்தமிழ்புரிந்தநான்.
(இரண்டாம் திருவந்தாதி -1)

அறிவையளிக்கும் தமிழ்நூலை ........

வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனைக்*
திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி *
அங்கப்பறைகொண்டவாற்றை* அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன*
சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே*
இங்குஇப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள்*
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால்*
எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய்.
(திருப்பாவை- 30)

‘குழாங்களாய்’ என்னுமாபோலே திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் ப்ரபந்தம். பஞ்சலக்ஷங்குடியிற் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த ப்ரபந்தமிறே. பிராட்டி ஆண்டாளானாற்போலே, உபநிஷத்து தமிழானபடி.

செங்கமலத்துஅயனனையமறையோர் காழிச்
சீராம விண்ணகர்என்செங்கண்மாலை*
அங்கமலத்தடவயல்சூழ்ஆலிநாடன்
அருள்மாரிஅரட்டமுக்கிஅடையார்சீயம்*
கொங்குமலர்க்குழலியர்வேள்மங்கைவேந்தன்
கொற்றவேல்பரகாலன்கலியன்சொன்ன*
சங்கமுகத்தமிழ்மாலைபத்தும்வல்லார்
தடங்கடல்சூழுலகுக்குத்தலைவர்தாமே.
(பெரியதிருமொழி 3-4-10)

ப்ரதிபக்ஷத்துக்கு ம்ருத்யுவான ஆழ்வாரருளிச்செய்த; தமிழுக்குக் கடவார் திரளவிருந்தால் இத்தையே எப்போதுமொக்க கொண்டாடவேண்டும்படியிருக்கிற இத்தொடையல் பத்தும் வல்லார்....

ஏரார்ந்தகருநெடுமாலிராமனாய் வனம்புக்கஅதனுக்குஆற்றா
தாரார்ந்ததடவரைத்தோள்தயரதன்தான்புலம்பிய அம்புலம்பல்தன்னை

கூராந்தவேல்வலவன்கோழியர்கோன் குடைக்குலசேகரன்சொற்செய்த*
சீரார்ந்ததமிழ்மாலைஇவைவல்லார் தீநெறிக்கண்செல்லார்தாமே.
(பெருமாள்திருமொழி 9-11)

‘பாட்2யே கே3ய ச மது4ரம்’ (படிக்கும் போதும் பாடும் போதும் இனியதாயிருப்பதும். ஸ்ரீரா.பா. 4-8) என்ற இவை பூர்ணமான தமிழ்த்தொடை வல்லவர்கள்....

கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து*
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை*
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல்*
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே.
(பெரியாழ்வார் திருமொழி 2-4-10)

சீர்மலிகையாவது - சப்த லக்ஷணங்களில் குறை வற்றிருக்கையாலே அழகுமிக்கிருக்கை. அன்றிக்கே பகவத் குணங்களால் நிறைந்திருக்கை என்னுதல். செந்தமிழ்- ஆர்ஜவயுக்தமான தமிழ்- அதாவது சொல்லினுடைய ப்ரஸந்நதையாலே உள்ளில் கிடக்கிற அர்த்தம் தானே ப்ரகாசிக்கும்படி இருக்கை.

பார்மன்னுதொல்புகழ் பல்லவர்கோன்
பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
கார்மன்னுநீள்வயல் மங்கையர்தம்
தலைவன்கலிகன்றி குன்றாதுஉரைத்த

சீர்மன்னுசெந்தமிழ்மாலைவல்லார்
திருமாமகள்தன் அருளால்*உலகில்
தேர்மன்னராய்ஒலிமாகடல்சூழ் செழுநீருலகாண்டு திகழ்வர்களே.
(பெரியதிருமொழி 2-9-10)

பகவத் குணங்கள் பொருந்தியிருக்கிற அழகிய தமிழ் தொடை. பகவத் குணங்கள் நெருங்கத்தொகுத்த செவ்விய தமிழ்த் தொடை.

நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்

செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்*
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே.
(பெரியாழ்வார் திருமொழி 3-9-11)

செவ்வையையுடைய தமிழ் பாஷையாலே ஆர்ஜவ ரூபமான திராவிட பாஷையாலே.

சந்தொடுகாரகிலும்சுமந்து தடங்கள்பொருது*
வந்திழியும்சிலம்பாறுடை மாலிருஞ்சோலைநின்ற
சுந்தரனை * சுரும்பார்குழல்கோதை தொகுத்துரைத்த *
செந்தமிழ்பத்தும்வல்லார் திருமாலடிசேர்வர்களே.
(நாச்சியார் திருமொழி 9-10)

செவ்விய தமிழ். ஆண்டாளுடைய காதல் பெருக்கு, வழிந்து இப்பாமாலையாய் புறப்பட்டதாகையாலே, இது செவ்விய தமிழாயிருக்கிறது.

வெந்திறல்வீரரில்வீரரொப்பார் வேதமுரைத்துஇமையோர் வணங்கும்
செந்தமிழ்பாடுவார்தாம்வணங்கும் தேவரிவர்கொல்? தெரிக்கமாட்டேன்

வந்துகுறளுருவாய்நிமிர்ந்து மாவலிவேள்வியில்மண்ணளந்த*
அந்தணர்போன்றுஇவரால்கொல்? என்ன அட்டபுயகரத்தேனென்றாரே.
(பெரியதிருமொழி 2-8-2)

எம்பெருமான் உகக்கும்படி பாடியதால் செந்தமிழ் எனப்பட்டது.

சிந்தையாலும்சொல்லாலும்செய்கையினாலும் தேவபிரானையே*
தந்தைதாயென்றடைந்த வண்குருகூரவர்சடகோபன்*
முந்தையாயிரத்துள்இவை தொலைவில்லிமங்கலத்தைச்சொன்ன*
செந்தமிழ்பத்தும்வல்லார் அடிமைசெய்வார்திருமாலுக்கே.
(திருவாய்மொழி 6-5-11)

அர்த்த ப்ரகாசத்தில் ஆர்ஜவத்தையுடைய தமிழான பத்து.

இந்திரற்கும்பிரமற்கும்முதல்வன்தன்னை
இருநிலம்கால்தீநீர்விண்பூதமைந்தாய்
செந்திறத்ததமிழோசைவடசொல்லாகித்
திசைநான்குமாய்த்திங்கள் ஞாயிறாகி

அந்தரத்தில்தேவர்க்கும்அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டுஅந்திவைத்த
மந்திரத்தை * மந்திரத்தால்மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம்மடநெஞ்சமே!
(திருநெடுந்தாண்டகம் - 4)

கூறுபாடும் ப்ரகாரமும் ஸ்வார்த்தத்தைச் செவ்வியதாக ப்ரகாசிப்பிக்கையாலே கூறான த்ராமிட சப்தம் உபப்ரஹ்மணா பேக்ஷையற்றிருக்கை. வேதங்களுக்கு உபப்ருஹ்மணா பேக்ஷை உண்டிறே.

இண்டைகொண்டுதொண்டரேத்த எவ்வுள்கிடந்தானை*
வண்டுபாடும்பைம்புறவின் மங்கையர்கோன்கலியன்*
கொண்டசீரால்தண்தமிழ்செய்மாலை ஈரைந்தும்வல்லார்*
அண்டமாள்வதுஆணை அன்றேல்ஆள்வர் அமருலகே.
(பெரியதிருமொழி 2-2-10)

ஈரமான தமிழ் பாஷை.

மூவராகியஒருவனைமூவுலகுண்டுஉமிழ்ந்துஅளந்தானை*
தேவர்தானவர்சென்றுசென்றிறைஞ்சத் தண்திருவயிந்திரபுரத்து*
மேவுசோதியை வேல்வலவன் கலிகன்றிவிரித்துரைத்த*
பாவுதண்தமிழ்பத்திவைபாடிடப் பாவங்கள்பயிலாவே.
(பெரியதிருமொழி 3-1-10)

பரந்த அழகிய தமிழ் பாஷை.

மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு*
ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம்*
தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன*
தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே.
(பெரியாழ்வார் திருமொழி 3-8-10)

பகவத் விஷயமானதாலே பரிசுத்தமான தமிழ். ஸம்ஸ்க்ருத சப்தம் போலே இருண்டு, பொருள் தெரியாதபடி இருக்கையற்றிக்கே பெண்ணுக்கும் பேதைக்கும் அறியலாம் படி ஸ்வார்த்த ப்ரகாசமாயிருக்கும் தூய்மையுடையதான த்ராவிடபாஷை.

ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன்கோதைசொல்*
தூயதமிழ்மாலை ஈரைந்தும்வல்லவர்*
வாயும்நன்மக்களைப்பெற்று மகிழ்வரே.
(நாச்சியார் திருமொழி6-11)

மானசஸாக்ஷாத்காரமாகிற கனவில் கண்டு அநுபவித்து, அவ்வநுபவம் வழிந்து புறப்பட்டதாயிருக்கும், தூய்மையை உடைய தமிழ் மாலை.

மல்லைமாநகர்க்கிறையவன்தன்னை
வான்செலுத்திவந்தீங்கணைமாயத்து
எல்லையில்பிள்ளைசெய்வனகாணாத்
தெய்வத்தேவகிபுலம்பியபுலம்பல்

கொல்லிகாவலன்மாலடிமுடிமேல்
கோலமாம்குலசேகரன்சொன்ன*
நல்லிசைத்தமிழ்மாலைவல்லார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே.
(பெருமாள்திருமொழி 7-11)

இனிமையான இசையையுடைய தமிழ் பாட்டு. அழகிய இசையோடே கூடின தமிழ்த்தொடை.

விற்றுவக்கோட்டம்மா! நீவேண்டாயேயாயிடினும்*
மற்றாரும்பற்றிலேனென்று அவனைத்தாள்நயந்த*
கொற்றவேல்தானைக் குலசேகரன்சொன்ன*
நற்றமிழ்பத்தும்வல்லார் நண்ணார்நரகமே.
(பெருமாள் திருமொழி 5-10)

பொருள் பெருமையுடன் கூடிய தமிழ். கடல்போல் ஆழமாக இருக்கச் செய்தேயும் உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமாப் போலே அர்த்தம் மிகுந்து இருப்பது.

கதவுமனமென்றும் காணலாமென்றும்*
குதையும்வினையாவிதீர்ந்தேன்* - விதையாக
நல்தமிழைவித்தி என்னுள்ளத்தைநீவிளைத்தாய்*
கற்றமொழியாகிக்கலந்து.
(நான்முகன் திருவந்தாதி - 81)

சிறந்த தமிழ் மொழி. இலக்கிய இலக்கணங்களில் ஒரு பழுது சொல்ல ஒண்ணாத அழகிய தமிழ் மொழியை என் நெஞ்சிலே விதையாக விதைத்து....

வண்ணம் மணிமாட நல்நாவாயுள்ளானை*
திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன்*
பண்ணார்தமிழ் ஆயிரத்துஇப்பத்தும்வல்லார்*
மண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே.
(திருவாய்மொழி 9-8-11)

பண் நிறைந்த தமிழ், பண் மிகுந்த தமிழ்.

மாலே! மாயப்பெருமானே! மாமாயனே! என்றென்று*
மாலேயேறிமாலருளால் மன்னுகுருகூர்ச்சடகோபன்*
பாலேய்தமிழர்இசைகாரர் பத்தர்பரவும்ஆயிரத்தின்
பாலேபட்ட* இவைபத்தும்வல்லார்க்கு இல்லைபரிவதே.
(திருவாய்மொழி 1-5-11)

பால் போலே இனிய தமிழ்-மதுரகவி, நாதமுனி போல்வார். ‘முதலாழ்வார்கள்’ என்பது ஆளவந்தார் திருவுள்ளம்....

மாவளருமென்னோக்கி மாதராள்மாயவனைக்கண்டாளென்று*
காவளரும்கடிபொழில்சூழ் கண்ணபுரத்தம்மானைக்கலியன்சொன்ன*
பாவளரும்தமிழ்மாலை பன்னியநூல்இவையைந்துமைந்தும்வல்லார்*
பூவளரும்கற்பகம்சேர்பொன்னுலகில் மன்னவராய்ப்புகழ்தக்கோரே.
(பெரியதிருமொழி 8-1-10)

சந்தஸ்ஸுக்கள் வளராநின்ற, சாஸ்த்ரமாகிற நூலால் விஸ்தரிக்கப்பட்ட தமிழ்மாலாரூபமான....

வலிவணக்குவரைநெடுந்தோள் விராதைக்கொன்று
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி*
கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்
கரனோடுதூடணன்தனுயிரைவாங்கி*
சிலைவணக்கிமான்மறியஎய்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்*
தலைவணக்கிக்கைகூப்பிஏத்தவல்லார்
திரிதலால் தவமுடைத் துத்தரணிதானே.
(பெருமாள் திருமொழி 10-5)

எளிதான தமிழ் பாஷை. அகஸ்தியர் உண்டாக்கிய எளிதான தமிழ் பாஷை.

செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடத்துஉறைசெல்வனை*
மங்கையர்தலைவன்கலிகன்றி வண்தமிழ்ச்செஞ்சொல்மாலைகள்*
சங்கையின்றித்தரித்துஉரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே*
வங்கமா கடல்வையம்காவலராகி வானுலகாள்வரே.
(பெரியதிருமொழி 1-8-10)

ஆழ்ந்தபொருளுடைய தமிழ்ப் பாடல்கள்.

வானவர்தங்கள்கோனும் மலர்மிசையயனும் நாளும்* தேமலர்தூவியேத்தும்சேவடிச்செங்கண்மாலை* மானவேல்கலியன்சொன்ன வண்தமிழ்மாலைநாலைந்து* ஊனமதின்றிவல்லார் ஒளிவிசும்பாள்வர்தாமே.

	 (திருக்குறுந்தாண்டகம் - 20)

ஆழ்ந்தபொருளுடைய தமிழ்ப் பாடல்கள்.

மன்னுமறைநான்குமானானை* - புல்லாணித்
தென்னன்தமிழை வடமொழியை* நாங்கூரில்
(பெரியதிருமடல் - கண்ணி 131)

அகத்தியரின் தமிழ்.

உண்டும்உமிழ்ந்தும்கடந்தும்இடந்தும் கிடந்தும்நின்றும்*
கொண்டகோலத்தொடுவீற்றிருந்தும் மணங்கூடியும்* கண்டவாற்றால் தனதேயுலகெனநின்றான் தன்னை*
வண்தமிழ்நூற்கநோற்றேன் அடியார்க்குஇன்பமாரியே.
(திருவாய்மொழி 4-5-10)

ஸ்பஷ்டமாய் இருக்கை. பழையதாகச் செய்தவை, இவர் பேச்சாலே இன்று செய்ததுபோல் ஸ்பஷ்டமாயிருக்கை’

காமர்தாதைகருதலர்சிங்கம் காணவினியகருங்குழல்குட்டன்*
வாமனன்என்மரதகவண்ணம் மாதவன்மதுசூதனன்தன்னை*
சேமநன்கமரும்புதுவையர்கோன் விட்டுசித்தன்வியன்தமிழ்பத்தும்*
நாமமென்றுநவின்றுரைப்பார்கள் நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே.
(பெரியாழ்வார் திருமொழி 5-1-10)

ஆச்சர்யமான தமிழ் பாஷை. விஸ்மயநீயமான தமிழ். ‘‘வியந்தமிழ்’ என்கையாலே அமரர்க்குமறிவியந்து என்னுமா போலே வியந்த தமிழ் என்னவுமாம்.

ஸ்ரீபாஷ்யத்திற்கும் திருவாய்மொழிக்கும் இடையே அமைந்துள்ள கருத்தொற்றுமை (ஐககண்ட்யம்)

𐀢 Āzhvār Emperumānār Jeeyar Thiruvadigale Śaranam 𐀢